ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி பக்கம்..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 29, 2021
பார்வையிட்டோர்: 2,467 
 
 

முப்பதுவயது அணு ஆராய்ச்சியாளன் ஆகாஷ் தன் வீட்டின் முன் தெளிவாக அமர்ந்திருந்தான்.

“எதுக்கு என்னை உடனே வரச்சொன்னே..?”கேட்டு அவன் அருகில் வந்தான் ஆருயிர் நண்பன் அறிவொளி.

“உட்கார் சொல்றேன். !”

அமர்ந்தான்.

“நான் இன்னைக்கு கைலாயம் நோக்கிப் பயணப்படறேன்.. அதைச் சொல்லத்தான் உன்னை அழைச்சேன்.”- எவ்வித அலட்டலும் இல்லாமல் அமைதியைச் சொன்னான் ஆகாஷ்.

“என்னடா சொல்றே..??!!”இவனுக்கு அதிர்ச்சி ஆச்சரியம். துணுக்குற்றான்

“உண்மையைத்தான் சொல்றேன். சிவனைத் தேடிப் போறேன். !”

“நிஜமாவா..?” அறிவொளியால் நம்பமுடியவில்லை. நண்பனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“ஆமாம் !”

‘சாமியே கிடையாதவன்.! சரியான பகுத்தறிவாளன்.!! திடீரென்று என்ன சிவன் பக்கம் திருப்பம், சாமி மீது நாட்டம்…? !! ‘- அறிவொளிக்குள் குழப்பம் .

கலவரமாக நண்பனைப் பார்த்தான்.

“சிவனை நான் கடவுளாய்த் தேடிப் போகலை. ஒரு வேற்று கிரகவாசியாய்த் தேடிப் போறேன். !”

“புரியலை..? !”

“கடவுள் இருக்காரா..? இல்லையா என்பதற்கு எனக்கு சரியான விடை கிடைச்சாச்சு. அவர்கள் வேற்று கிரகவாசிகள் என்பது தெளிவாகிடுச்சு. !”

‘பகுத்தறிவு அதிகமாகி பைத்தியம் முத்திடுச்சா..?! ‘- அறிவொளிக்குள் சந்தேகம் தலை தூக்க நண்பனை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

“நேத்து ‘யூ டியூப் ‘ல ஒரு வீடியோ பார்த்தேன். அதுல சிவன் ஒரு வேற்றுக்கிரகவாசின்னு ஒருத்தர் ஆதாரத்தோடு அடிச்சிச் சொல்றாரு..!”

“அப்படியா…?!!…”

“ஆமாம். அகத்தியர், தொல்காப்பியர், விசுவாமித்திரர்ன்னு ஒரு அஞ்சு மாமுனிவர்கள் பனி படர்ந்த இமயமலையில் நடந்து செல்லும்போது…சாம்பல் மேனி, இடுப்பில் கோவணம், நெற்றியில் கண்.. உள்ள ஒரு உருவம் கண்களை மூடி தியானத்தில் இருந்ததைப் பார்த்ததும் , ‘மனித உருவில் வித்தியாசமாய்த் தெரியுதே.! ‘ன்னு மிரண்டு அருகில் போய்..”நீ யாரு..?”கேட்க… அவர் திடீர்ன்னு மறைஞ்சிருக்கார். அப்போதான் இவர்களுக்கு… இவர் வேற்றுக்கிரகவாசி என்கிற எண்ணம் தோன்றி இருக்கு. இதைத்தான்… பிற்காலம் பக்தி கோலத்தில் அந்த முக்கண்ணனை சிவனாய் மாத்தி இருக்குன்னு சொல்றாரு.”நிறுத்தினான்.

”கூகுளில் நம்ப முடியாத விசயங்கள் நிறைய இருக்கு நண்பா !”அறிவொளி நண்பனிடம் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.

“அப்படியா…?! ….. இது நாள்வரை கடவுள் இருக்காரா இல்லையா என்கிறதுக்கு முடிவு தெரிஞ்சிருக்கா..?”ஆகாஷ் அவனைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லே..!”

“வானவெளியில் கண்களுக்குத் தெரியாமல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கிரகங்கள் இருக்கா இல்லையா..?”

“இருக்கு !”

“அந்த கிரகங்கள் ஒன்றில் நம் பூமியைப் போல் மனிதர்கள், உயிரினங்கள் வாழலாம் இல்லையா…?”

“அது……”அறிவொளி இழுத்தான்.

“ஏன் தயங்கறே..? நம் கண்களுக்குத் தெரியல. கண்டுபிடிக்க முடியலை என்கிறதுக்காக எதையும் இல்லேன்னு மறுக்கிறது அறிவீனம்.”

இவன் பேசாமலிருந்தான்.

”5000 , 6000 கோடி வருடங்கள் பழமையானது பூமி. இது சூரியனின் உடைந்து விழுந்த வெப்பத் துண்டு. கால மாற்றம், பரிணாம வளர்ச்சியில்… உயிரினம், மனிதன் தோன்றிதாய் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இல்லையா..?”

“ஆமாம் !”

“சூரியனின் வெடிப்புத்துண்டுதான் பூமின்னா மற்ற எட்டு கிரகங்களும் என்ன..? அவைகள் இயற்கையாய் இருந்தால் இந்த பூமி சொருகல் நிகழ்வு எப்படி நடந்திருக்கும்..?

இல்லை ! எல்லாமே சூரிய வெடிப்பா..? மொத்த ஒன்பது கிரகங்களும் சூரிய வெடிப்பு சிறு, பெரு துண்டுகள் என்றால்….அண்டவெளியின் மற்ற கோடான கோடி மற்ற கிரகங்கள் என்ன..?

இவ்வளவு பெரிய வெடிப்புச் சிதறல்கள் என்றால் சூரியனின் கதி..? இப்போதைய நிலை..?”

அறிவொளி… இந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை சொல்லத்தெரியாமல் விழித்தான்.

“குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு அறிவொளி .”

“சொல்லு..?”

“சிம்பன்சி ஒரு வேற்றுக்கிரகவாசி !”

“ஆகாஷ் ! என்ன வரலாற்றையே மாத்தறே…?”இவன் திடுக்கிட்டான்.

“அலறாமல் பொறுமையாய்க் கேளு. வரலாற்றில் எத்தனை நிஜம், பொய் இருக்குன்னு யாருக்குத் தெரியும்…? சரி. விடு.

விலங்கினங்கள் மொழி நமக்குத் தெரியுமா…? தெரியாது.!

வேற்றுக்கிரகவாசிகள் மொழிகள் தெரியுமா..? தெரியாது.!

சிம்பன்சிகளான வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து ஏன் இனவிருத்திகள் செய்திருக்கக் கூடாது…? !

நாளைக்குச் செவ்வாய்க்கிரகத்துக்குப் போய் வாழப்போற மனிதனின் நிலையும் இதுதானே..!

செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதன் எதோ ஒரு விலங்கு அப்படித்தானே..? !

சிம்பன்சி, குரங்குகள்… எல்லாம் ஓரினம்.!

யானை, காண்டாமிருகங்கள்….. ஓரினம்.!

முதலை, உடும்பு, பல்லிகள்….. ஓரினம் !

நாய், நரி, ஓநாய்கள்…. ஓரினம் !

புலி, சிறுத்தை, பூனைகள்.. ஓரினம் !

மான், ஆடுகள்… ஓரினம் !

எருது, பசு, எருமைகள்… ஓரினம் !

வல்லூறு, கழுகு, பருந்துகள்… ஓரினம்…!

காக்கை, குயில், குருவிகள்.. ஓரினம்…!

– இப்படி எல்லாவற்றிக்குமே இணக்கமான வழித்தோன்றகள், பிரிவுகள் இருக்கும் போது….

மனிதனுக்குப் பின் என்ன இருக்கு..?

பூமியில் மனிதன் இங்கே சுயம்புவாய் தோன்றி வாழ்ந்திருக்கிறான்.!!

கடவுள்கள் வேற்றுக்கிரகவாசிகளாய் உள்ளே நுழைந்த்திருக்கிறார்கள். ! இதுதான் உண்மை.

மனிதனுக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு தலை.

கடவுள்களுக்கு… ??!

நெற்றிக் கண், சாம்பல் மேனி… சிவன்.

யானை முகம், தொந்தி வயிறு…. சிவனின் மூத்தப் பிள்ளை பிள்ளையார்.

ஆறுமுகங்கள் , பன்னிரண்டு கைகள். சிவனின் இளைய மகன் முருகன்.

மாட்டுத்தலை, மனித உடல்…. நந்தி.

நான்கு தலைகள். நான்கு கைகள் . – பிரம்மன்.

பத்து தலைகள், இருபது கைகள்…. ராவணன்.

சரஸ்வதி, கலைமகள்…எல்லாருக்கும் நான்கு கைகள்.

காளி…. கோர உருவம் …. இப்படிமனிதர்கள் வணங்கும் கடவுள்கள் எல்லாமே வித்தியாசமான உருவ அமைப்புகள் , தோற்றங்கள்.

இப்படிப்பட்டவர்கள் வேற்றுக்கிரகவாசிகளாய்த்தானே இருக்க முடியும்…?

இவர்களால்தான் நினைத்தால் வரமுடியும், போக முடியும், மறைய முடியும்..!

மேலும் மனிதர்கள் பார்த்த, வார்த்த வெளிக்கிரகவாசிகளுக்கு…. மொட்டைத் தலை, கொஞ்சம் மூக்கு, கொஞ்சம் வாய், கொப்பரைக் கண்கள் என்று இருக்கும்போது…. வித்தியாச உருவங்கள் கொண்ட கடவுள்களும் வேற்றுக்கிரகவாசிகள்தான்.

இந்த பூமியில் யாளிகள் வாழ்ந்திருக்கு, மரங்கள் கற்களாய் மாறி இருக்கு என்றால்…கடவுள்களும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதை நம்பித்தானாக வேண்டும்.

மனிதர்கள் வாழும் இந்த பூமியில்…. வேற்றுக்கிரகவாசிகள் விதவிதமான தோற்றங்களில் தோன்றி மறைந்திருக்கிறார்கள். மனிதன் அவர்களை கற்களில் செதுக்கி, பாறைகளில் வடிவமைத்து, ஏடுகளில் காவிங்களாகவும் படைத்திருக்கிறான் என்பதே உண்மை. இதுதான் கடவுள்களின் வரலாறு.

கடவுள்களின் உருவ அமைப்புகள் மனிதனின் கற்பனா சக்திகள் என்பது தவறு.

இந்த உண்மையைத் தேடித்தான் நான் சிவன் இருக்கும் இருந்த கைலாயம் நோக்கி போகிறேன். அவர் அங்கே இருந்ததற்கான அடையாளம், மரபணுக்கள் இருந்தால் தேடி எடுத்து வருவேன் .

இதை ஏன் உன்னிடம் சொல்லிப் போகிறேனென்றால்… நான் வெற்றியாய்த் திரும்பினாலும், திரும்பாவிட்டாலும்…. நான் எதற்காகச் சென்றேன் என்பதற்கான அத்தாட்சி , அடையாளம் நீ. அந்த சாட்சிக்காகவே உன்னிடம் அனைத்தும் சொல்லிவிட்டுச் செல்கிறேன்.”

– என்று சொல்லி முடித்த ஆகாஷ்.. அருகிலிருந்த தன் கைபேசியை எடுத்து அதிலிருந்த மெமரி கார்டை எடுத்து அறிவொளியிடம் கொடுத்து…

“நாம பேசின அனைத்தும் இதில் அப்படியே ஒளி, ஒலிகளாய் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கு. நான் வெற்றியாளனாய்த் திரும்பாவிட்டால்… இது காணாமல் போன ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி பக்கம் என்று பதிவேற்றிவிடு.! வர்றேன், வணக்கம் !”சொல்லி எழுந்து விடுவிடுவென்று நடந்து வீட்டினுள் சென்று மறைந்தான் ஆகாஷ்.

அறிவொளி அப்படியே ஆணி அடித்த சிலையாய் அமர்ந்திருந்தான்!!

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு கடவுள் மறுப்பாளனின் கடைசி பக்கம்..!

  1. அருமையான கதை. நல்ல சுவாரசியமான ப‌திவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *