ஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,164 
 
 

அந்த விடுதியின் சமையலறையில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் மேஜை மீது கிடந்தன. சமையல் செய்தபடியே படிப்பார்களோ என்று நினைக்கவோ அல்லது வேறு எங்கும் வைக்க இடமில்லாமல் சமையலறையில் வைத்துள்ளார்களோ என எண்ணவோ முடியவில்லை. காரணம் சமையல் செய்கிற அந்தநடுத்தர வயது கடந்த இரண்டு பெண்மணிகளை இந்த விடுதிக்கு வந்து சேர்ந்த மூன்று நாட்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களது பேச்சிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் அவர்களுக்கு படிக்கும் பழக்கமே கிடையாது என்பது தெளிவாக புரிந்தது. பின்னர் எதற்கு இங்கு புத்தகங்களை வைத்துள்ளார்கள் என அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டது.

அன்று ஞாயிற்று கிழமை காலை.

உறக்கத்தை யாரும் பத்து மணி கடந்தும் விடுவிப்பதாய் இல்லை. படுக்கையிலேயே புரண்டு கொண்டிருப்பது ஒருஅலாதி சுகம் தான். வழக்கம்போலில்லாமல் ஞாயிறுகளில் மட்டும் குளியல் மதியத்திற்கு மேல்தான் என்பதுஅந்தவிடுதியிலுள்ளவர்களுக்கு எழுதப்படாத சட்டம். அதற்கு நானும்விதிவிலக்காக விரும்பவில்லை. கூட்டத்தோடுசேர்ந்து வாழ்வதும் அல்லது பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுத்துண்டு நமக்கு என்பதும் இயல்பிலேயேகற்பிக்க பட்ட ஒரு விஷயமாயிற்றே. நானும் பல்துலக்கி விட்டு சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன்.

மேஜைமேலிருந்த அந்த புத்தகங்கள் விரிக்கப்பட்டும் சற்று உப்பியும் காணப்பட்டது. அரசியல் பத்திரிகை,பெண்கள் பத்திரிகை, ஆங்கிலப் பத்திரிகை, குழந்தைகள் இதழ், விவசாய இதழ் என ஐந்து பத்திரிகைகள் வரிசையாக விரிக்கப்பட்டு உப்பியிருந்தன. அருகில் சென்று கவனித்த போது சமையல் செய்யும் பெண் ‘ஆளுக்குஅஞ்சு தான்’ என்று சொல்லி விட்டு என் தட்டை வாங்கிக் கொண்டாள். நடப்பதை வேடிக்கை பார்க்க வாய்ப்பொன்று கிட்டியதில் உள்ளூர எனக்கு சந்தோஷமே.

அங்கிருந்த பத்திரிகைகளில் சப்பாத்தி மாவு தேய்க்கப்பட்டு நான்கைந்து பக்கங்களுக்கொன்றாக வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இருபது பேருக்கு சமைக்க வேண்டியிருப்பதால் மொத்தமாக தேய்த்து வைத்து அது எதிலும் ஒட்டிக்கொண்டு சிரமம் தராமல் இருப்பதற்காக இப்படி பத்திரிக்கைகளை பயன்படுத்தும் பெண்களின்திறன் வியந்துதான் ஆக வேண்டுமோ! ஆனால் எனக்கு அது ஏனோ அருவருப்பாக இருந்தது. ஏனெனில் ஒரேபத்திரிக்கையை திரும்பதிரும்ப பயன்படுத்துவதாலும் உருட்டி தேய்க்கபட்டிருந்த மாவில் எறும்புகள் ஊறி பூனைநடை போட்டுக் கொண்டு இருந்ததாலும் அறவே பிடிக்கவில்லை.

இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஆங்கிலப் பத்திரிக்கையின் உள்ளாடை விளம்பரம் வெளியாகியிருந்த பக்கத்தில் வைக்கப்பட்ட சப்பாத்தி மாவினை எடுத்து காய்ந்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தில் போட்டாள் அந்த நடுத்தர வயது சமையல்காரி. அந்த பத்திரிக்கையின் பக்கங்கள் ஈரப்பதத்தை உறிஞ்சி நைந்து போயிருந்தது.

அடுத்து பெண்கள் பத்திரிக்கையின் “‘அன்று சிறிய பூக்கடைக்கு தொழிலாளி.. இன்று பெரிய பொக்கேஷாப்பின் முதலாளி” என்று தலைப்பிடப்பட்டிருந்த ஆக்கத்திலிருந்து ஒன்றும், விவசாய பத்திரிக்கையின் “‘பி.டி.கத்தரிக்காய்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்” என்று எழுதியிருந்த பக்கத்திலிருந்து ஒன்றும், குழந்தை பத்திரிக்கையின் “அட்டை படத்தில் கார் செய்வது எப்படி?” என வெளியாகியிருந்த பக்கத்திலிருந்து ஒன்றும், கடைசியாக அரசியல் பத்திரிக்கையின் “செம்மொழி மாநாடு குறித்த அறிக்கை” ஒன்றின் பக்கத்திலிருந்தும் ஒவ்வொன்றாக தேய்க்கப்பட்ட மாவினை எடுத்து அடுப்பில் எண்ணெயிலிட்டு பூரியாக்கி தந்தாள்.

என் அறைக்கு வந்து சாப்பிடத் துவங்கினேன். முதல் பூரியை வாயில் வைத்தபோது ஒரு உள்ளாடையை சாப்பிடுவது போலிருக்கவே அதை இடது பக்கம் தூக்கி எறிந்தேன். ஒரு கை அதை எடுத்துக் கொண்டு ஓடியது.

இரண்டாவது பூரியை சுவைக்கிற போது பூக்களை சாப்பிடுவதை போலிருக்கவே அதையும் வலது பக்கம் வீசி எறிந்தேன். மணமக்களின் தலையில் போய் விழுந்தது. மூன்றாவது பூரியை சாப்பிடும் போது விஷம் தோய்ந்த காய்கறிகளின் மணம் வரவே அதையும் விட்டெறிந்தேன். அது நம்மாழ்வார் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தின் மையத்தில் போய் விழுந்தது.

நான்காவது பூரியை உட்கொண்ட போது காரின் சக்கரங்கள் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டது போல் உணரவே சன்னலுக்கு வெளியே தூக்கிஎறிந்தேன். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அந்த காரை ஓட்டிக் கொண்டு ஓடினான்.

ஐந்தாம் பூரிக்கு கை சென்ற போது வேண்டாமென நடுங்கியது. இருந்த போதும் பசி வயிற்றைக் கிள்ள சாப்பிட ஆரம்பித்தேன். வாயருகே கொண்டு சென்ற போது குருதி வாடை அடித்தது. தொடர்ந்து அலறல் சத்தமும் கேட்கவே துயரத்தில் கையிலிருந்த பூரி நழுவியது. பூரியிலிருந்து இறங்கி ஓடிக் கொண்டிருந்தது நம்மால் புறக்கணிக்கப்பட்டு வாழ்விழந்த ஒரு இனம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *