ஐந்து கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 1,046 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

கோர்ட் கூடியது. 

முதலில் ஒரு பாங்கி மோசடி வழக்கு. ஒரு பணக் காரன் லட்சக் கணக்கில் பணத்தைக் கையாடி விட்டான். ஜாமீனில் விடப்பட்ட அவன் கோர்ட் வாசலில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திறங்கினான். வழக்கு நடந்தது: குற்றம் ருஜுவாயிற்று. 

நீதிபதி குற்றவாளியின் குடும்ப அந்தஸ்து, வருஷ வருமானம் எல்லாம் விசாரித்தார். பிறகு, “ஒரு வருஷம் சிறை, ‘ஏ’ வகுப்பு’ எனத் தீர்ப்பளித்தார். 

அடுத்து ஒரு வழக்கு. ரிமாண்டிலிருந்த கைதி விலங் கோடு ஆஜர் படுத்தப்பட்டான். அவன் மீது திருட்டுக் குற்றம். 

“ஏன் திருடினாய்?” 

“பிழைப்பில்லை. பசித்தது. திருடினேன்.’ 

“நீதிபதி அவனை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு தீர்ப்புச் சொன்னார்: “இரண்டு வருஷக் கடுங்காவல்; ‘சி” வகுப்பு!” 

2 

ஊரில் அரிசி இல்லை! 

மக்கள் பட்டினியால் வாடினர். ரேஷன் கடைகள் சாத்தப்பட்டன. ஏன் இந்தப் பஞ்சம்?…… 

ஊரில் அரிசி இருந்தது! 

கள்ள மார்க்கெட், ரூபாய்க்கு அரைப்படி; முக்கால் படி. இந்த அரிசி ஏது?… 

சென்ற வருஷம் மகசூல் குறையவில்லை; நல்ல மேனி. என்றாலும் உழுதவன் வீட்டில் உணவில்லை; பண்ணையார் வீட்டில் மகளுக்கு நாலு நாள் கல்யாணம். 

ஏன்? எப்படி?… 

அப்படியானால், அரிசி எங்கே? – இது வாடும் மக்களின் கேள்வி; பொது நலச் சங்கங்களின் கேள்வி. அரிசி இருக்கும் இடத்தை மக்கள் அறிந்துவிட்டால்? 

பண்ணையார் பார்த்தார். ‘தெய்வ குற்றம். மழை வில்லை. வெள்ளாமை இல்லை. அம்மனுக்குப் படைப்பு போடவேண்டும்; கொடை நடத்த வேண்டும்” என்றார். 

கொடை நடந்தது; கொடும்பாவி கட்டி இழுத்தார் கள். இந்தப் பஞ்சத்திலும் வீட்டுக்கு உழக்கு அரிசியும், ஒரு பணமும் செலவு. “மாரியம்மா, கண்ணைத்திற” என்றார்கள் மக்கள். 

அந்த ஊர் திராவிடத் தலைவர் ஒருவர் இந்தக் கூத்தைப் பார்த்தார். “சாமியாவது? சாத்தானாவது? எல்லாம் பொய். முதலில் சாமியைக் கொல்லுங்கள்” என்றார். 

பண்ணையாரையும் அரிசியையும் ஜனங்கள் மறந்து விட்டார்கள். ஊரில், கடவுள் உண்டா இல்லையா என்ற வாக்குவாதம் பலப்பட்டுவிட்டது. 

ரேஷன் கடை முன் க்யூ வரிசை. 

புழுத்த அரிசியை வாங்கப் போராட்டம்; அதுவும் பற்றாக் குறை. மீதி நாள் பாடு அப்படி அப்படித்தான். கள்ள மார்க்கெட் இருக்கவே இருக்கிறது என்ற நம்பிக்கை. 

ஒரு கூடைக்காரி வருகிறாள், கூடையில் அருமையான சீரகச் சம்பா அரிசி. விலை, பட்டணம் படி ரூபாய் நாலணா. 

வெள்ளை மார்க்கட்டில் கறுப்பு அரிசி. 

கள்ள மார்க்கட்டில் வெள்ளை அரிசி. 

ஜனங்கள் கூடைக்காரியிடம் பேரம் பேசுகிறார்கள் . ஒரு ரேஷன் இன்ஸ்பெக்டர் வருகிறார். கூடைக்காரியைக் “கையும் மெய்யுமாக’ப் பிடித்து விட்டார். 

“வா, ஆபீசுக்கு. உனக்கு இந்த அரிசி ஏது?” “சாமி, எனக்கு அரை கால் கிடைக்கதை, மண்ணடிச்சிப் புடாதே. வேணுமின்னா உனக்கும் அரை கால்…” 

“வா என்றால்?”

அவர் அவள் கையைப் பிடித்து இழுத்தார். “இவள் இப்படியெல்லாம் விற்கப் போய்த்தானே உங்களுக்கு நல்ல அரிசி கிடைக்கவில்லை!” என்று ஜனங்களைப் பார்த்துப் பேசினார், இன்ஸ்பெக்டர். 

கூட்டத்திலிருந்து ஒரு முரட்டுக் குரல் பேசிற்று: 

“அட சர்த்தான் போய்யா. இந்த அரிசி மட்டும் மரத்திலா காய்க்குது? இது எங்கேருந்து வருதுன்னு உன்னாலே கண்டு பிடிக்கத் திறனில்லே. அதைப் பிடுங்க மட்டும் வந்துட்டியே! நீயா எங்களுக்குப் படியளக்கிறே? இவ தான் எங்க அன்னபூரணி! விடய்யா அவளை!” 

கூட்டம் கூச்சலிடுகிறது. கூட்டத்தின் எதிர்ப்பைக் கண்டு இன்ஸ்பெக்டர் அவளை விட்டு விட்டு தப்பித்துச் செல்கிறார். 

கல்யாணமான பெண். 

அவள் கணவன் இரண்டாம் தாரம் கொள்ளப் போவ தாக அறிந்தாள். இருதாரம் கொள்வது தப்பு என்று கணவன்மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாள். 

வழக்கு தள்ளுபடியாயிற்று. கணவன் மீது குற்றமும் இல்லை ; ருஜுவும் இல்லை. இருதாரம் கொண்டால் ஒழிய, புருஷனை ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள் கோர்ட்டார். 

கணவன் மறுதாரம் கல்யாணம் பண்ணிக்கொண்டான். இப்போது கோர்ட் அவன்மீது வழக்குத் தொடுத்தது. குற்றம் ருஜுவாயிற்று. கணவனுக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. சிறைவாசம்; அபராதம். 

கணவன் அபராதத்தையும் கட்டி, சிறைக்குப் போனான். புது மனைவியும் முதல் மனைவியும் வெளியே இருந்தனர். 

யுத்த காலம்; 1944 அல்லது 45. 

மவுண்ட் ரோடுரவுண்டாணா; எல்பின்ஸ்டன் கொட்ட கைக்கு எதிரில், நடை மேடையில் 

நீக்ரோ சிப்பாய் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். 

தசரா அல்லது முஹரம் பண்டிகை. கரிவேஷம் போட். டுக்கொண்டு ஒருவன் தப்பட்டை மேள சகிதம் ஆடிப்பாடி வந்தான். நீக்ரோ சிப்பாயைக் கண்டான். அவன் எதிரே சென்று குதித்துக் குதித்து ஆடினான். 

நீக்ரோவனுக்குக் கோபம் பொங்கிற்று; கரிவேஷக்கார னைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். 

கலவரமாகி விட்டது. 

நடை மேடையில் கன்னங்கறுத்த ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண் அமெரிக்க ‘டாமி’யோடு கைகோத்து உலாச் சென்றாள். இருவரும் அந்தக் காட்சியைப் பார்த்தனர். 

அவள் தன் இரவல் நாயகனை ஏதோ அர்த்த புஷ்டி யோடு பார்த்தாள்; புன்னகை புரிந்தாள். 

– 1950 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *