ஞானமணிப் பதிப்பகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 731 
 
 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரிப்பன் பில்டிங்ஸ் கடிகாரத்தையும், உத்தரவாத காலத் தையுங் கடந்து வைராக்கியத்துடன் உழைத்து வரும் தமது கைக் கடிகாரத்தையும் ஒத்துப் பார்த்துக் கொண்ட குரு சாமி, ட்ராமை விட்டிறங்கி, கையில் புகைந்து கொண் டிருந்த சிகரெட்டைச் சாவதானமாகப் புகைத்தெறிந்து விட்டு, ஞானமணிப் பதிப்பகத்தின் இரும்புக் கிராதிக் கேட்டைக் கடந்து உள்ளே சென்றார். 

ஆபீஸ் மணி பதினொன்று காட்டியது; அன்று குரு சாமி அரை மணி நேரம் லேட் 

ஆபீசுக்குள் சென்றதும் நேரே ஆஜர் சிட்டையில் கையெழுத்திடச் சென்றார்; தமக்கு முன்பாகவே பதிப் பாசிரியர் தாத்தாச்சாரியார் அதில் கையெழுத்திட்டிருப் பதையும் குருசாமி கண்டார்; கண்டவுடன் வழக்கம் போல் பக்கத்திலிருந்த புரூப் ரீடர் சிங்காரவேலுவிடம் கேட்டார். 

“என்ன வே, கிழவர் அப்பவே வந்திட்டாரா?” 

“அவருதான் எட்டரை மணிக்கே வந்திட்டாரே. வெளியிலே போயிருக்கார்; காபி ஸ்டால் பக்கம் போயி ருந்தாலும் போயிருப்பார்” என்று பதிலளித்தார் சிங்கார வேலு. 

அம்மாவும் வந்திருந்தாஹளோ?” 

“ஆமா. ரெண்டு பேருந்தான். காலங் காத்தாலியே வந்திட்டாங்க. வீட்டுலே சௌகரியக் குறைச்சலோ என்னமோ?… இத்தினி நாழி இருந்திட்டு இப்பத்தான் வெளியே போனாங்க.”

“சர்த்தான். அம்மா பக்கத்திலே இல்லேன்னாத்தான் ஐயாவுக்குப் பேனாவிலே மை இறங்காதே. கிழடு! வயசு இத்தனை ஆகியும் சபலம் விட்டுதா, பாருங்க!” 

“அது அவருக்கில்லே சார், தெரியணும்.” 

“என்னத்தைத் தெரியறது? எடிட்டர் ரூமா, காரியமாக் காணோம். பக்கத்திலெ ஒரு வங்கிழடை வச்சிக்கிட்டு, அவரு இந்த அநியாயம் பண்ணினா, நமக்கு எப்படி சார் வேலை ஓடும்? இனி அந்த ரூமிலே புண்ணியாவசனம் பண்ணினாத்தான் நமக்கும் நாலு எழுத்து உருப்படியா எழுத வரும்.” 

சிங்காரவேலு சிரித்தார்: ‘ஏன்? நீங்களும் எவளை யாவது கூட்டிக்கிட்டு வாரது தானே!” 

“அது ஒண்ணுதான் பாக்கி” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வில்ஸ் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார் குருசாமி. சிகரெட் தீய்ந்து முடிந்ததும் தமது யதாஸ் தானத்தை நாடிச் சென்றார். 

ஆசிரியரின் அறை மிகவும் குறுகிய அறை. அறைக்குள்ளே சூரிய ஒளி தப்பித் தவறிக் கூட வருவதற்கு நியாயமில் லாததால், எப்போதும் அங்கு மின்சார விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். தலைக்குமேலே இரண்டு கட்டைச் சுதியில் ராகம் பாடியவாறே சுற்றிக்கொண்டிருக்கும் மின் சார விசிறி, காற்றை வீசாவிட்டாலும், அறையின் சவ அமைதியைக் கெடுத்து, சகித்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். மேஜைமீது டெலிபோன்; பக்கத்திலே புத்தகங்கள் அடுக்கிய பீரோ ; மூலையிலே தண்ணீர்க் கூஜா, பழம் பத்திரிகைக் குப்பை; குப்பைக் கூடை இது சுற்றுச் சூழ்நிலை. 

குருசாமி தமது இடத்தில் அமர்ந்தார். மேலே விசிறி கழன்றது. மேஜைமீது ஈரங் காயாத ‘காலி புரூபுகள்’ காய்ந்து கொண்டிருந்தன. அன்றையத் தபாலில் வந்த கடிதங்கள் மேஜையின் மீது இருந்தன. 

புரூப் காயும் வரையிலும் குருசாமி கடிதங்களில் கவனம் செலுத்தினார். காதலியிடமிருந்து வரும் கடிதங் களைவிட, இளம் எழுத்தாளர்கள் தங்களை சரோயன்களாக வும், ஜாய்ஸ்களாகவும், மாப்பஸான்களாகவும் பாவித் துக்கொண்டு, தங்கள் சிருஷ்டிகளின் அருமை பெருமை களைத் தாங்களாகவே அளந்து கொட்டும் கடிதங்கள் ரசமா னதாயும் ஹாஸ்யமானதாயும் இருக்குமாதலால், குரு சாமிக்கு அவற்றைப் படிப்பதில் ஒரு தனி ஆனந்தம். அந்த ஆனந்தம் அவருக்குத் தமது கதைகளைப் படிக்கும்போது கூட ஏற்படுவதில்லை. 

ஆகவே ஆர அமர படித்து முடித்து விட்டுக் காய்ந்து போன ‘காலி’களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். 

அப்போது போர்மேன் கிருஷ்ணசாமி உள்ளே வந்தார். ‘சார், பன்னிரண்டாவது பாரம் ஸ்ட்ரைக் ஆர்டர் கொடுக்கணும். மிஷின் காத்துக்கிட்டிருக்கு. இந்தப் புரூபுகளையும் பார்த்துக் குடுத்துட்டா மதியமே பாரம் செட்டப் பண்ணிக்கலாம்” என்றார். 

“ஸ்ட்ரைக் ஆர்டர் கிழவர் வந்து குடுப்பாரு. இத்தெ இன்னும் அரைமணி நேரத்திலே தந்திருதேன். வந்து வாங்கிக்கிடும்” என்று பதில் கூறிவிட்டு, புரூபுக்குள் கண்ணை ஓட்டினார் குருசாமி. 

அதற்குள், “ராசா, என்ன வேலை நடக்கு?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். 

அறைக்குள் சுயேச்சை எழுத்தாளர் சொக்கலிங்கம் வந்துகொண்டிருந்தார்; குருசாமி புரூபை மேஜைமீது வைத்துவிட்டு அவரை வரவேற்றார். 

சுயேச்சை எழுத்தாளர் சொக்கலிங்கம் தமிழ் நாட்டில் தமக்கென்று ஒரு இலக்கிய ஸ்தானத்தைச் சம்பாதித்துக் கொண்டு, அதையே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வருபவர். தமிழ் நாட்டு இலக்கிய தர்ம கர்த் தாக்கள் ‘அள்ளிக் கொடுக்கும்’ அன்பளிப்பிலேயே வைராக் கியத்தோடு வாழ்ந்து வந்ததன் பலனாக, கூடு விட்டுப் போன உடம்பும், குழிவிழுந்த கண்களும், நரையோடிய தலைமயிருமா யிருப்பார் சொக்கலிங்கம்; அதற்கேற்றாற் போல் திடீர் திடீரென வெடிக்கும் அவரது திரிபுரச் சிரிப் பும் சேர்ந்து விட்டால், அவருடைய பேய்க் கதைகளை நாஸ்நிகவாதிகள் கூட நம்பும்படி நேரும். சுயேச்சை எழுத்தாளர் சொக்கலிங்கமும் குருசாமியும் நண்பர்கள். 

“என்ன அண்ணா. ஏது இந்தப் பக்கமா?” 

“சும்மாத்தான்; சரி, என்ன புரூப் பாத்துக்கிட்டிருக்கே?” 

“அவன்தான் அந்த அண்ணாமலைப் பயல் புத்தகந் தான்……. சரி. உங்க பண்பாடெல்லாம் கைவசம் இருக்கா? இல்லே, வாங்கிட்டு வரச்சொல்லணுமா?” 

‘பண்பாடு’ என்பது அவர்களின் பரிபாஷை. 

“எல்லாம் இருக்கு. சீவல் மட்டும் கொஞ்சம் வாங்கிக் கிட்டு வரணும்.” 

மணி அடித்ததும் பையன் வந்தான்; போய் சொக்கலிங்கத்துக்குப் பிடித்த ரோஜாப்பூச் சீவல் வாங்கி வந்தான். சீவல் வந்ததும், சொக்கலிங்கம் நாற்காலியில் சம்மணம் கூட்டியிருந்துகொண்டு, கும்பகோணம் வெற் றிலையை முனை கிள்ளி, பதமாகச் சுண்ணம் தடவிப் போட் டார்; சிசரமாக ஒரு குத்துத் தூள் புகையிலையையும் வாய்க்குள் செலுத்திக் கொண்டார். 

“என்ன ராசா, கிழவர் இன்னம் வரலியா?” 

“வந்துட்டாரு. காப்பி சாப்பிடப் போயிருக்கார்”. 

“ஜூலியட் கூடவா?” 

“ஆமா. 

“சரி, அண்ணாமலைப் பயல் என்ன உளறி இருக்கான்?” 

“உளர்றது என்ன? மறுமலர்ச்சிக் காரங்களை யெல் லாம் ஒரு மூச்சுக்குத் திட்டியிருக்கான்.”

“உங்க கிழவருக்குப் பிடிச்ச விஷயமாச்சே, அது.”

“அதையெல்லாம்விட பெரிய விஷயம். நம்ம தாத்தாச் சாரியாரையும் விட்டு வைக்கலே. நாசூக்காய் வேட்டு வச்சிருக்கான்.” 

“ஊஹும்! அப்படியா? அவருக்குத் தெரியுமா தெரியாதா?” 

“அவரு எந்தப் புஸ்தகத்தையாவது அச்சுக்கக் குடுக் கிறதுக்கு முன்னாலே படிச்சிப் பாத்தால்லே தெரியறதுக்கு?” 

“ராசா, நான் சொல்றபடி செய். பாரம் ஸ்ட்ரைக் ஆகிறவரையிலும் விஷயத்தைக் கமுக்கமா வச்சிக்க. கொஞ்சம் மூளையோட வேலை செஞ்சம்னா, அண்ணாமலைப் பயலை மட்டுமல்ல-கிழவரையும் ஒரு கை பாத்துப்பிடலாம். ரெண்டு பெருச்சாளிகளும் ஒரே சாக்குக்குள்ளே தானா வந்து விழறதைத் தடுக்கப்பிடாது. அது தரும் விரோதம், தெரிஞ்சிதா?” 

”அதுக்கென்ன? செஞ்சிருவம்’ என்று பதில் அளித் தார் குருசாமி: சரி, காப்பி சாப்பிடுவமா?” 

“அப்பா, இங்கெயா காப்பி சாப்பிடறது? இங்கே காப்பி கழனித் தண்ணி மாதிரியில்லெ இருக்கும். வா, காப்பி ஸ்டாலுக்குப் போவோம்.” 

குருசாமிக்கு காப்பி என்றால் போதும்; ஆகவே புரூபை யும் சுற்றி மடக்கி எடுத்துக்கொண்டு சொக்கலிங்கத்துடன் கிளம்பினார். ஆபீஸ்நடை இறங்கியதும் எதிரே தாத்தாச் சாரியாரும் சாலாட்சியும் வந்தார்கள். 

“யாரு? சோனாவா? எங்கே போறேள்?” 

இப்படி காப்பி ஸ்டால் வரை போறேன். அது தான் குருசாமியையும் நான் சோடி சேத்துக்கிட்டேன்.”

தாத்தாச்சாரியாரால் அந்தச் சொல்லின் ‘பொடி’யை உணர முடியவில்லை. 

“சரி, போயிட்டு வாருங்க” என்றார். 

மெசர்ஸ் ஞானமணி லிமிடெட் கம்பெனியார் ஞான மணிப் பதிப்பகத்தைத் தொடங்கி வைத்தது, தமிழ் இலக் கியப் பிரசுர உலகில் தாங்கள் ஒரு ‘பாட்லி ஹெட்’ டாகவோ, ‘ஹாடர் அண் ஸ்டாட்ட’னாகவோ விளங்கி, தமிழ் இலக்கியந்தை உத்தாரணம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடோ, அல்லது தமிழ் நாட்டில் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து ‘இலக்கிய சேவை’ செய்துவரும் சிருஷ்டிகர்த்தாக்களுக்குத் தாங்கள் ஒரு வெண்ணெய்நல் லூர் வள்ளலாக விளங்க வேண்டும் என்ற காரணத் தோடோ அல்ல; தங்கள் அச்சகத்து மூலையில் வேலை யற்றுக் கிடக்கும் மெஷினுக்கு ஒரு வேலை கொடுக்கவும், பெருவாரியான உற்பத்திப் பெருக்கத்தில் கழிவு விழும் பொருள்களிலிருந்து உபரிச் சரக்கு உண்டாக்குவதுபோல், தங்கள் பத்திரிகாலயத்துக்குச் செலவழிந்தது போக, மீத முள்ள துண்டுப் பத்திரிகைக் காகிதங்களை மூலைபிலே வெறுங் குப்பையாகக் கிடக்கவிடாமல் தமிழரின் தலையில் அச்சடித்த “குப்பையாக்கிக் கொட்டவும், அப்படிக் கொட்டுவதன் மூலம் தமது பாங்குக் கணக்கில் ஒன்றிரண்டு சைபர்கள் கூடுதலாகச் சேர்க்கவும் செய்த வியாபார தந்திரமே தவிர வேறல்ல. ஆகவேதான் தமது பத்திரிகாலயத்தின் மூலை யில் குப்பை கூளங்கள் போட்டு வைப்பதற்காக ஒதுக்கி வைத்திருந்த அறையைச் சுத்தி செய்து. அதை ஞானமணிப் பதிப்பகத்தின் காரியாலயமாக மாற்றிவிட்டார்கள். 

ஞானமணிக் கம்பெனி டைரக்டர்களுக்குத் தமிழில் எந்தவிதப் பரிச்சயமோ அபிமானமோ இல்லாவிட்டாலும், பொருள் வருவாயையும் புகழையும் முன்னிட்டு, தேசபக்தி ‘காந்தீயம்’ போன்ற சர்வஜன ரஞ்சக லேபிள் களோடு பத்திரிகைத் தொழிலில் இறங்கினர். மேலும், கம்பெனி மானேஜிங் டைரக்டர் ஒரு தற்குறிப் பேர்வழி. ஆகவே, கம்பெனி டைரக்டர்களுக்கு ஸ்டாக் எக்ஸ்சேஞ் சில் பங்கு பிடிப்பதிலிருந்து, கிண்டி குதிரைப் பந்தயத்தில் எந்தக் குதிரையின் வாலில் பணத்தைக் கட்டுவது என்பது வரை ஆலோசகராயிருந்து வந்த ஸ்ரீமான் பஞ்சநகத்தின் ஆட்சியே கம் பெனியில் செல்லுபடி ஆயிற்று. பஞ்சநதம் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம் பெறும் மானேஜரே யாயினும், மஹிராவணனின் உயிர்த் தலத்தைத் தன்னுள் கொண்டிருந்த கிளியைப்போல், கம்பெனியின் பீஜ சுேந்திர மாக வாழ்ந்து வந்தார். ஆகவே, அவருடைய அதிக வழிப் பற்றையோ, சுரண்டலையோ கம்பெனியார் அழிய நேர்ந் தாலும், தமது சொந்த நலனை உத்தேசித்து, வாங்குங் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின் தூங்கும் களிறோ துயருறா’ என்ற சொல்லுக்கு இலக்கியமாய், தம்மையாக்கிக் கொண்டிருந்தார்கள். எனினும் ஞானமணிப் பதிப்பகம் மட்டும் என்ன காரணத்தாலோ மானேஜிங் டைரக்டரின் சொந்த மேற்பார்வையிலேயே நடந்து வந்தது. ஷெ பதிப் பகம் தமது சுரண்டலுக்கும் பராமரிப்புக்கும் விலகிப் போனதானது, பஞ்சநதத்துக்குத் தமது சுய மரியாதையை யும் கவுரவத்தையும் பறி கொடுத்தது போலிருந்தது. ஆகவே ஞானமணிப் பதிப்பகம் எந்த வகையிலும் லாபம் தராத கிளை என்பதை மானேஜ்மெண்டாருக்கு நிரூபித்துக் காட்டி, அதைக் கவிழ்ப்பதற்காகப் பல சூழ்ச்சிகள் பண்ணி னார். ஏஜெண்டுகளைத் தமது கைக்குள் போட்டுக்கொண்டு, புத்தக விற்பனையை மந்தப் படுத்தவும், புத்தகங்களை அவர்கள் திருப்பி அனுப்பவும் வேண்டிய வேலைகள் செய் தார்; அதற்காகும் நஷ்ட ஈட்டையும் தாமே ஏஜெண்டு களுக்குக் கொடுத்து உதவினார். ஆனால், இந்தக் காரியங் களால் எல்லாம் ஞானமணிப் பதிப்பகம் ஒரு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. ஆகவே, ஞானமணிப் பதிப் பகத்தின்மீது சர்வ ஜன வெறுப்பையும் திரட்டுவதற்கு. அவர் ஒரு குயுக்தி செய்தார். அந்தக் குயுக்தியின் விளைவே தமது நண்பர் அண்ணாமலை எழுதிய ‘தமிழ் இலக்கிய விமரிசனம் என்ற நூல் மேற்படிப் பதிப்பகத்தில் அச்சடிக் கப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம். 

இந்த அழகில் ஸ்ரீமதி சாலாட்சியம்மையாருக்குக் கம்பெனியாரிடமிருந்த செல்வாக்கின் காரணமாக, அம்மை யவர்களின் சிபாரிசின் பேரில், ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் பதிப்பகத்தின் ஆசிரியப் பதவியை மாதம் முன்னூறு ரூபாய் சம்பளத்தில் ஏற்றுக்கொண்டார். தாத்தாச்சாரி யார் இளமைக் காலத்தில் ஆவி உலக ஆராய்ச்சியிலும் பிரம ஞான சங்கத்திலும் ஈடுபட்டிருந்தார்; பின்னால் பிர்ம ஞான சங்கம் அடையாறு ஜூகைத் துப்பட்டாக்களுக்கே கட்டுப்படியாகும் என்பதை உணர்ந்து, தொழில் முறையை உத்தேசித்து நூல் போட்டுப் பார்க்கவும் ஹரிகதை பண்ண வும் உபயோகப்பட்டு வந்த கம்ப ராமாயணத்தை, சாறு பிழிந்து சக்கையாக்கித் தமிழ் மக்களுக்கு அமுது படைக்க வந்தார்; ‘கம்பனி’ லே பல பாடல்கள் மனப்பாடமாய் இருந்ததாலும், பிழைக்கும் வழியை உத்தேசித்துப் பிறருடைய கருத்துக்களை மான வெட்கமின்றிக் கூசாமல் தம தாக்கிக் கொள்ளும் துணிச்சலும் வலி மையும் பெற்றிருந்த இலக்கிய உலகில் அவர் பெயரும் அச்செழுத்துக்களில் அடிபடலாயிற்று. மேலும், இன்றைய நவநாகரிக உலகின் பெரிய மனுஷ தத்துவமான காசம், க்ஷயம். விரைவாதம், நீரிழிவு முதலிய பெருமை மிக்க வியாதி களில் ஒன்றுக்கு ஆளானவராதலாலும், அவருக்குப் பொருள் வருவாயிலும் புகழ் வருவாயிலும் ஏற்றங் கண்டு வந்தது. 

எனினும், சந்தர்ப்ப பேதங்கள் காரணமாக, தாத்தாச் சாரியார் தமது பழைய இலக்கிய கோஷ்டியிலிருந்து விலக் கப்பட்டும் சுவனிப்பற்றும் கிடந்தார். இன்றைய தமிழ் நாட்டில் தனி மனிதக் கொள்கை எடுபடாது என்பதனால், எல்லோரும் தமக்கென்று நாலு சிஷ்யப்பிள்ளைகளைச் சேர்த் துக்கொள்ளவோ, அல்லது பிறர் கொள்கைக்குத் தம்மைச் சிஷ்யனாகவோ செய்வதையும் தாத்தாச்சாரியார் உணர்ந்தே இருந்தார். ஆகவே செத்துவரும் பழம் பரம்பரையைத் தமது தலைமையில் புதுப்பிக்க எண்ணுவதை விட, வளர்ந்து வரும் மறுமலர்ச்சிப் பரம்பரையில் தமக்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று தவித்துக்கொண்டிருந்தார். எனவே ஒரு காலத்தில் மறுமலர்ச்சியைக் கேலி செய்து, ‘ஹிஹிஹி’ என்று சொல்லிவந்த தாத்தாச்சாரியார் இன்று அதே மறுமலர்ச்சியைப் புகழ்ந்து புகழ்ந்து கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். மறுமலர்ச்சியாளர்களோ இந்தப் பழம் பெருச்சாளியின் மாய்மாலத்தைக் கண்டுகொண்டு, அவரைச் சமயம் பார்த்துக் குழியில் இறக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். 

ஆகவே, பஸரட் இட்டிலி, வசன கவிதை, வெஜிடபிள் பிரியாணி, தேசிய முஸ்லிம் என்பன போன்ற இரண்டுங் கெட்டான் வாழ்வில், தாத்தாச்சாரியார் இரவும் பகலும் கூடுகின்ற இரணிய நேரம் போல, எதிலும் கூட்டு இல்லாது வாழ்ந்து வந்தார். அதனால், ஆங்கிலேயரும் ஒப்புக்கொள் ளாத. இந்தியர்களும் வரவேற்காத ஆங்கிலோ இந்தியர் களைப் போல் ஸ்ரீமான் தாத்தாச்சாரியாருடைய சிருஷ்டி களும் திரிசங்கு நிலையிலேயே திரிந்து வந்தன. எனினும், வாலிவத நியாயத்திலிருந்து வைட்டமின் ‘இ’ வரை அநே கத்தைக் கரைகண்டவர் மாதிரி, அவர் ஞானமணிப் பதிப் பகத்தின் மூலம் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் பதிப்பித்து வந்தார். 

ஸ்ரீமான் தாத்தாச்சாரியாருக்குப் பக்கத்திலே ஒரு பெண் பிறவி இருந்தால்தான் ஒன்றிரண்டு எழுத்துக்களா வது எழுத ஓடும். அப்படி அவர் பக்கத்திலே இருக்கும் ஐம்பது வயசுப் பேரிளம் பெண், அவரது வாயில் சுருள் மடித்துக் கொடுக்காவிட்டாலும், சொகுசுக் கதை பேசி, ஸ்பரிச சுகமாவது காட்டவேண்டும். அந்த ஸ்பரிச சுகத் திலே தாத்தாச்சாரியார் மெய்ம்மறந்துபோய் எந்த பாரத் துக்கு ஸ்ட்ரைக் ஆர்டர் கொடுக்கிறோம் என்பதையே உணராமல், கையெழுத்தைப் போட்டு விடுவார். இந்த பலவீனத்தைக் கண்டறிந்தவர் ஸ்ரீமான் பஞ்சநதம் மட்டு மல்ல; தாத்தாச்சாரியாருக்கு உதவியாசிரியராக வேலை பார்த்து வந்த குருசாமியும் கூடத்தான். 

குருசாமி மறுமலர்ச்சிப் பரம்பரையில் வந்த கடைக் குட்டி வாரிசு, இளமையும் அனுபவமின்மையும் அவரை இலக்கிய உலகில் பயமிழந்து நசிகேதப் பிறவியாக்கி விட் டிருந்தன. எனினும் வயிற்றுப் பிழைப்பு, வாழ்க்கை லட் சியம் என்ற இருவேறு முரண்பட்ட தத்துவங்களையும் பிரத்தியட்ச உலகில் ஒருமிக்க நிறைவேற்ற இயலாது என்பதைத் தெரிந்துகொள்ளாத முறையில், ஞானமணிப் பதிப்பகத்தில் மாசம் அறுபது ரூபாய்ச் சம்பளத்தில் உதவி ஆசிரியராக அமர்ந்து வேலை செய்தார் குருசாமி. இன் றைக்குள்ள சென்னை வாழ்க்கையில் அறுபது ரூபாயை வைத்துக்கொண்டு காற்றைத்தான் புசித்து வாழலாம் என்றாலும் காப்பியையும் வில்ஸ் சிகரெட்டையுமே நம்பி அவர் உயிர் வாழ்ந்து வந்தார். எனினும், தாது கெடாத அவருடைய உடல் நலம் ஒரு வேளை புசிக்கும் இந்த யோகீச வாழ்வால் உலைந்து போய் விடவில்லை; அவ்வப் போது ஒன் ரண்டு பத்திரிகைகளுக்கு எழுதி, அதிலிருந்து வரும் அஞ்சு பத்து’ ரூபாய்கள், துண்டு விழும் அவருடைய கடன் பட்ஜெட்டை அடைக்க உதவும் சங்கநிதி பதுமநிதி களாக விளங்கும். 

பத்திரிகாசிரியத் தொழில் என்பது தேவேந்திரன் சபை யிலே பிரஹஸ்பதி வீற்றிருப்பது போலிருக்கும் என்று நம்பாத அளவுக்கு குருசாமி ஞானஸ்தராயிருந்தாலும், அறுபது ரூபாய்ச் சம்பளமும் பத்திரிகை ஆபீஸ் ஊழல் களும் அவர் மனத்தாழத்தில் கிடந்த நேர்மையுணர்ச்சியைப் பலப்படுத்தி வந்தன. ஆகவே இளம்பிள்ளைத் துணிச்ச லோடு, தமக்குப் பிடிக்காத காரியத்தை எதிர்த்துப் போராடவும் அவருக்குத் தைரியம் பிறந்திருந்தது. மேலும், தமது தலைமை ஆசிரியர் தாத்தாச்சாரியாருடைய மட்ட மான இலக்கிய அறிவும், அதற்கு எதிர்மறையாக அவர் பெறும் ஊதியமும் குருசாமியைக் கிளறிவிட்டன. ஆகவே ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் போன்ற இலக்கியப் புல்லுருவி களையும் களைந்தெறிய வேண்டும் என்று அவர் கருதிய தோடு, ஷேக்ஸ்பியரின் சோக நாடக தத்துவங்களைப் பற்றி பிராட்லி எழுதியதைத் திருப்பித் திருப்பிப் படித்ததனாலோ என்னவோ, தாத்தாச்சாரியாரைக் கவிழ்ப்பதற்கு அவரு டைய பிரஸ்தாப பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வும் நினைத்தார் குருசாமி. 

இதற்செல்லாம் பாதை வகுத்துக் கொடுத்த மாதிரி, ஸ்ரீமான் அண்ணாமலைப் பிள்ளையின் ‘தமிழ் இலக்கிய விமரி சனம்’ ஸ்ரீமான் பஞ்சநதத்தின் சிபாரிசின்பேரில் ஞான மணிப் பதிப்பகத்துக்குள் வந்துசேர்ந்தது. அண்ணாமலைப் பிள்ளையும், தாத்தாச்சாரியும் ஆரம்ப காலத்தில் மூனிச் சில் உடன்படிக்கை செய்து கொண்ட சேம்பர்லேன்-ஹிட்லர் மாதிரி இருந்து வந்தார்கள்; எனினும், பின்னால் காலப் போக்கில், யுத்தப் பிரகடனம் செய்த சர்ச்சில்-ஹிட்லராக மாறிவிட்டனர். எனினும், இருவரது நோக்கமும் மறு மலர்ச்சியைக் கண்டிப்பதுதான்; ஆனால், பிள்ளையவர்களின் ‘இலக்கிய விமரிசனம்’ மறுமலர்ச்சியாளர்களை நையாண்டி செய்வதோடு மட்டுமல்லாமல், ஸ்ரீமான் தாத்தாச்சாரி யார் தலையிலேயும் கை வைக்கப் பார்த்தது. இம்மாதிரி யெல்லாம் ஏதாவது நேரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துவைத்தவர் மாதிரி,பஞ்சநதம் அந்த நூலை அவசர அவசரமாக அச்சேற்றும்படி தாத்தாச்சாரியாரிடம் சொல்லி வந்தார். தாத்தாச்சாரியாரும் வழக்கம்போலவே, அந்த நூலின் மூலப்பிரதியை வாசிக்காமலே, ‘எல்லாம் புரூபில் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனத் தெம்போடு, அதை அச்சுக்குக் கொடுத்து விட்டார். 

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் குருசாமி தமது நண்பர் சுயேச்சை’ சொக்கலிங்கம் சொல்லிக் கொடுத்த மாதிரி, தாத்தாச்சாரியாரை வச மாய் மடக்கி வேட்டுவைக்கத் திட்டமிட்டார். 

தென்காசி 

அன்புள்ள நண்பர் பஞ்சநதத்துக்கு, 

நமஸ்காரம். 

‘தமிழ் இலக்கிய விமரிசனத்தின்’ முதல் பத்து பாரங் களும் வந்து சேர்ந்தன. மகிழ்ச்சி. புத்தகம் வெளி வரட் டும். அப்புறம் பாருங்கள். தமிழ் நாட்டையே அது ஒரு கலக்குக் கலக்கிவிடும். இந்த மாதிரி யெல்லாம் துணிந்து இறங்கினால்தான் இந்தப் பயல்களுக்கும் புத்தி வரும். 

இதை யெல்லாம் விட ரசமான விஷயம். உங்கள் பதிப்பாசிரியர் தாத்தாச்சாரியாருக்கும் நான் உள்ளே திரி வைத்திருக்கிறேன். கிழட்டுப் பிணத்துக்கு அதைத் தெரிந்து கொள்ள அத்தனை ஞானம் ஏது? 

அன்புள்ள
அண்ணாமலை. 

அன்று ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் ஸ்ரீமதி சாலாட்சிக்கு ‘குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில்மேல்’ என்ற ஆண்டாள் பாசுரத்துக்கு பாஷ்யமுரைத்துக் கொண் டிருக்கும் சமயம் பார்த்து, குருசாமி பதின்மூன்றாம் பாரத் துக்கு ஸ்ட்ரைக் ஆர்டர் வாங்கி அச்சுக்குக் கொடுத்து விட்டார். 

பதின்மூன்றாம் பாரம் – தாத்தாச்சாரிக்கு அண்ணாமலை திரி வைத்திருக்கும் பகுதி-இரண்டாயிரம் பிரதிகள் மெஷினில் ஏறி இறங்கி விட்டன. அச்சடித்த பாரம் மேஜைமீது இருந்தது. 

குருசாமி அந்த பாரத்தைத் தம்முள் படித்து, லேசாகச் சிரித்துக்கொண்டார். 

“என்ன குருசாமி? என்ன பார்க்கிறேள்?” என்று மூக் குக்கண்ணாடி மூக்கக்கே கண்ணாடியாய் இலங்க, தலையைக் கவிழ்த்துக் கொண்டு கேட்டார் தாத்தாச்சாரியார். 

“எல்லாம் அண்ணாமலை புஸ்தகம்தான், சார்.மறுமலர்ச் சிக்காரர்களையெல்லாம் வேணுமின்னே கண்ணுவச்சித்திட் டியிருக்கார், சார்.’ 

“வாஸ்தவந்தானே. இன்னிக்குள்ள மறுமலர்ச்சியாளர்கள்லெ எத்தனை பேர் முறையா தமிழ் படிச்சிருக்கா? இலக்கண இலக்கியமோ அவாள் வச்சது வரிசையா யிருந்தா?” 

“அப்படி ஒரே அடியா ‘டாம்’ பண்ணிற முடியாது நம்ம சோனாவை அப்படிச் சொல்ல முடியுமா? அதே மாதிரி எத்தினியோ பேர். இன்னைக்குள்ள பத்திரிகை வளர்ச்சிக்கே காரணம், மறுமலர்ச்சிக்காரங்கள்தான், சார்” என்று தமது பரம்பரையின் பவிசை அளந்து கொட்டினார் குருசாமி. 

“ஒண்ணு ரெண்டு பேர் இருக்கத்தான் செய்யறா. ஆனா, அவாள்ளாம் தங்களை விட்டா, வேறே ஆளே தலைதூக்க முழு. யாதுன்னு எண்ணம். பாருங்கோ, நான் பழைய கோஷ்டி யைச் சேர்ந்தவன்தான். ஆனா அதை விட்டு விலகி, புதுப் பரம்பரைக்கு வந்தாலும் அவாள் அதை உணர்றதும் இல்லே; ஒப்புக் கொள்றதும் இல்லெ” என்று சமயம் பார்த்துத் தமது தவிப்பைப் புலப்படுத்திக் கொண்டார் தாத்தாச் சாரியார்.

இந்தக் கேள்விக்கு முகஸ்துதியாகவேனும் பதில் கூறித் தமது நேர்மையைப் பங்கப்படுத்த வேண்டாதவராக, குருசாமி தலையை ஆட்டிக் கொண்டே, புருபில் கண்ணைத் திருப்பினார். 

தாத்தாச்சாரியார் ஒரு நிமிஷம் கண்ணாடிக்கு மேலாகப் பார்த்து விட்டு, சாலாட்சிபிடம் திரும்பினார். திரும்பி, ‘கைத்தலம் அடித்தலம் வைத்தலுமே’ என்ற கலிங்கத்துப்பரணி கடை திறப்புப் பாடலுக்கு விசேடார்த்தங்கள் கண்டு கூறிக் கொண்டிருந்தார். 

திடீரென, குருசாமி ஆசிரியர் பக்கம் திரும்பி, “சார், இந்தப் ‘பாசேஜை’ப் படிச்சிப் பாருங்க. உங்களையும் அண்ணாமலையார் விட்டு வைக்கலெ போலிருக்கே” என்று சிரித்துக் கொண்டே, கையிலிருந்த பாரத்தை ஆசிரியரிடம் நீட்டினார். 

”என்னது?” என்று கேட்டுவிட்டு, அந்த பாரத்தை வாங்கிப் படித்தார் ஆசிரியர். 

”ஆமா, குருசாமி. வாஸ்தவந்தான். என்னையுந்தான் கிண்டல் பண்ணியிருக்கார்” என்று கண்டறியாதன கண்டு விட்டதுபோல் அசடு வழியச் சொன்னார். பஞ்சடைந்த கிழட்டுக் கண்களில் ஏக்கமும் ஏமாற்றமும் தெறித்தன. சாலாட்சியின் மடிமேல் கிடந்த கரம் பாரத்துக்குத் திரும் பியது. 

“என்ன குருசாமி, இந்த பாரம் ஸ்ட்ரைக் ஆயிடுத்தா?” 

“நேத்து நீங்கதானே ஸ்ட்ரைக் ஆர்டர் கொடுத்தீங்க. பாரம் ஸ்ட்ரைக் ஆகி முடிஞ்சிட்டுது.” 

ஆசிரியர் யோசித்தார். 

“என்ன குருசாமி, இத்தனை பாரத்தையும் ‘டெஸ்ட்ராய் பண்ணிட்டா என்ன?”

“அது முடியாது சார். ஏற்கனவே பஞ்சநதத்துக்கும் நமக்கும் கீர்பூருன்னு இருக்கு. இரண்டாயிரம் பாரங்களை மூலையிலெ போடறதுன்னா மானேஜ்மெண்டுக்குப் பதில் சொல்லி ஆகணும். மேலும், அண்ணாமலையாருக்கும் அந்த, அடிச்ச பாரம் போயிருக்கு” 

தாத்தாச்சாரியாருக்கு, தம் தலையிலே தாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போலிருந்தது. விழித்தார். 

“அப்ப என்ன பண்றது?” என்று அங்கலாய்த்தார். 

“இப்ப என்ன பண்ண முடியும்? மானுஸ்கிரிப்டை அச்சுக்குக் கொடுக்கிறப்பவே கவனிச்சிருக்கனும். ம்.. நீங்கள் தான் என்ன பண்ணுவிங்க. அவசரத்திலே குடுத் தாச்சி. உங்க கண்ணுலையே அகப்படலேன்னா, எனக்கு அவ்வளவு லேசிலெ அகப்படுமா?” என்று நக்கல் பண்ணினார் குருசாமி. 

“சரி. இப்ப நாம் இதுக்கு என்ன பண்ண முடியும்?” “பரவாயில்லை, சார். நீங்க மட்டும் காரசாரமா ஒரு முன்னுரை எழுதிப் பிடுங்க. மறுமலர்ச்சிக்காரங்களை இப் படியும் திட்டுராங்க என்பதைக் காட்டுற மாதிரி, ரொம்ப வன்மையா கண்டித்து ஒரு முன்னுரை எழுதிட்டா, உங்க எண்ணமும் நிறைவேறினாப்லெ இருக்கும்; அண்ணாமலை மூஞ்சியிலேயும் கரியைப் பூசினாப்லெ இருக்கும்” என்று மந் திராலோசனை கூறினார் குருசாமி. 

“சரி, நாளையே எழுதிப்பிடுவம்” என்று கூறிக் கொண் உடார் ஆசிரியர். 

சுயேச்சை எழுத்தாளர் சொக்கலிங்கம் சொல்லிய மாதிரி, இரண்டு பெருச்சாளிகளும் ஒரே இடத்தில் மாட்டிக் கொள்ளப் போகின்றன என்ற உற்சாகத்தில் தன்னுள் நகைத்துக் கொண்டார் குருசாமி. மேலும், புற்றுக்குள் ஊரான் கையை விட்டுப் பார்ப்பதுபோல், அண்ணாமலையைக் கொல்ல தாத்தாச்சாரியாரை யே கைக் கருவியாக உபயோ கிக்க முடிந்த சௌகரிய சந்தர்ப்பமானது, அவருக்கு வெள் ளையரசாங்கத்தின் ராஜதந்திரத்தை நினைவூட்டியது. 

டெலிபோன் மணி அடித்தது. 

“ஹலோ– “

“…ம்… யாரு? டைரக்டரா கேட்டாரு —

“ஆமா, தாத்தாச்சாரியார்தான் பேசறேன்– 

“அண்ணாமலை புஸ்தகமா? அநேகமா முடியிற தரு வாயிலெதான் இருக்கு….ம்.. அவரு கடிதம் எழுதியிருக்காரா?- 

“பொங்கலுக்குள்ளயா? அதுக்கென்ன, முடிச்சிறலாம். ஒரு போர்வர்ட்’ எழுதணும். அதை முடிச்சிட்டா, வேலை முடிஞ்ச மாதிரிதான்- 

“சரி, பாரங்கள் அவருக்குப் போயிக்கிட்டிருக்கு-

“ஹலோ – 

“ஹலோ”. 

ரிஸீவரைக் கீழே வைத்தார் ஆசிரியர். 

6 

முன்னுரையை எப்படியோ எழுதி முடித்தார் தாத்தாச்சாரியார். 

அண்ணாமலையாரைக் கடிந்து கொள்வதற்கு தாத்தாச்சாரி யாருக்கு நிறைய விஷயங்கள் இருந்த போதிலும், தம் மையும் சேர்த்து அவர் திட்டிய காரணத்தால் சொல்லில் நிதானமும் நடு நிலைமையும் தவறி, கழைக் கூத்தாட்டம் போட்டிருந்தார். குருசாமி அந்த முன்னுரையைப் பற்றி வானளாவப் புகழ்ந்துவிட்டு உடனடியாய் அச்சுக்குக். கொடுத்துவிட்டார். புத்தகம் உருவாகி பைண்டு செய் யப்பட்டு, மேஜைமீது வந்து இருந்தது. 

பசை ஈரம் காயாத அந் நூலைத் திருப்பி அது விளை விக்கப் போகும் குருக்ஷேத்திர பயங்கரத்தை குருசாமி ஒருகணம் சிந்தித்துப் பார்த்தார். 

தாத்தாச்சாரியாரும் தமது முன்னுரையைத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டிருந்தார். 

இந்த வேளையில், சுயேச்சை எழுத்தாளர் சொக்க லிங்கம் தமது ஜிப்பாக் கைகளைத் திரைத்துச் சுருட்டிய வாறே கையில் வெற்றிலைப் பெட்டி சகிதம் உள்ளே வந்தார். 

தமது மெலிந்த கரங்களை ஒன்று சேர்த்து நமஸ்கரித்து விட்டு, “என்ன சார், என்ன வேலை நடக்கு?” என்று கேட்டுக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தார். 

தாத்தாச்சாரியார் ‘வில்லு வைக்க புது ஆள் கிடைத்து விட்ட தைரியத்தில், தமது முன்னுரையைப் படிப்பதற்காக, பீடிகை போட்டார். 

“நம்ப அண்ணாமலை புஸ்தகம் எழுதியிருக்கிற அழகைப் பார்த்தேளோ?” 

“ஆமா ஆமா, ராசா கூடச் சொன்னான். பயலை நசுக்கினாத்தான் சரியா வருவான்” என்று அழுத்தத்தோடு வக்காலத்து வாங்கினார் சோனா. 

“சரி, வாசிக்கிறேன், சேளுங்க” என்று கூறிவிட்டு, தமது முன்னுரையை வாசித்துக் காட்டினார். இடை யிடையே குருசாமியும் சொக்கலிங்கமும் சிரித்துக் கொண் டதற்கு அர்த்தம், தாத்தாச்சாரியார் தாமாக முதுகைக் குனிந்து கொடுக்கும் இடங்களில் ‘வாடா மகனே!’ என்று மனசுக்குள் வஞ்சம் கூறிக் கொள்வதின் விளைவேயாகும். 

தாத்தாச்சாரியார் வாசித்து முடித்தார்: “என்ன சோனா? இது போறாது?” 

“பேஷா, பய செத்துப் போகமாட்டான் செத்து!” 

“இனிமே நம்மெ ஒண்ணும் குத்தம் சொல்ல முடியாது, பாருங்க” என்றார் தாத்தாச்சாரியார். 

“அது சரிதான். ஆனா, நீங்க நான் சொல்றபடி செய் வேறெ யாரு? யணும். எஸ். பி. யைத் திட்டிருக்கான். ரா. ஸ்ரீ. யைத் திட்டிருக்கான். நீங்க இவங்களை யெல்லாம் தேடிப்போயி, விஷயத்தை நேரிலே எடுத்துச் சொல்லி, அண்ணாமலை மேலே எதிர்ப்பைக் கிளப்பி விடணும்.நீங்களா முந்திக் கிட்டியன்னா, உங்க பாடு ஜயந்தான். எஸ். பி., ரா. ஸ்ரீ. இவங்களை யெல்லாம் கண்டு, அண்ணாமலை தம்மை இழிவு படுத்தியதுக்காக, ‘டிபமேஷன்’ ‘கிளெய்ம்’ பண்ணச் சொல்லுங்க.”‘ 

“சரி. நல்ல யோசனைதான். இன்னிக்கே பண்ணிடுறேன்” என்று தெரியாத்தனமாய்ச் சொன்னார் தாத்தாச் சாரியார். 

“அது மட்டும் போறாது. புத்தகத்தை உடனடியா ரிலீஸ் பண்ணிடணும். ஒரு காப்பி கூட, ஆபீசுக்குள்ளே இருக்கக் கூடாது. எல்லாப் பத்திரிகைகளுக்கும் மதிப்புரைப் பிரதி போயாகணும். மதிப்புரைக்கும், சேல்சுக்கும் பிரதி கள் போனப்புறந்தான் அண்ணாமலைக்கே புத்தகம் போயிச் சேரணும். இல்லென்னா மானேஜ்மெண்டார் தயவினாலே புத்தகமே வெளியே போகாமல் நின்னிரும்” என்று மேலும் யோசனை கூறினார், குருசாமி. 

தாத்தாச்சாரியாருக்கு இருவர் யோசனையும் சரியாகவே பட்டது. அப்படியே செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தார். அவருடைய கண்மறைவில் நடந்து வரும் சதியை அவரால் உணரக் கூடவில்லை. 

இப்படி மூவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் சாலாட்சி யம்மாள் உள்ளே வந்தாள். சோனாவின் முன் னிலையில் தாத்தாச்சாரியார் தமது ‘ஜூலியட்’ டுடன் இருக்க மாட்டாராதலால், “என்ன சோனா? இருங்க. இப்ப வந்திடுறேன்” என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார். 

தாத்தாச்சாரியார் போன பின்பு குருசாமியும், சொக்கலிங்கமும் தமது சதியைத் தொடங்கினார்கள். 

“ராசா எப்படி, பாத்தியா? கிழடுக்குக் கொஞ்சங் கூட தலையிலே கிடையாது” என்று தலையைக் கொட்டிக் காட்டினார் சோனா. 

குருசாமி சிரித்தார். 

“இதோ பாரு. நம்ம வேலை இனிமேத்தான் இருக்கு. பத்திரிகைக் காரர்களுக்கோ இந்தப் புஸ்தகம் எப்பண்டா வெளியே வரும்னு இருக்கு. வெளியே வந்தவுடனேயே வயித்தெரிச்சல் தீர, இதை நச்சிப் பிடுவான் நச்சி!” 

”ஆமா, இந்தத் தடவை ரெவ்யூவுக்கு அனுப்பாத பத்திரிகைக்குக் கூட, நாங்க அனுப்பப் போறோம். கூட நாலு உதை விழட்டுமே!” 

“வாஸ்தவந்தான். ஆனா எவனும் கிழவரையும் விட்டு வைக்க மாட்டான். மறுமலர்ச்சிக்காரனுக்கு இதைப் போல வேறெ சந்தர்ப்பம் கிடையாது. சக்கரவ்யூகத்துக் குள்ளே அகப்பட்ட அபிமன்பு கதைதான். ஆனா, இதுக்கு மேலே நாம் ஒரு காரியம் செய்யணும். இன்னிக்குச் சாயங் காலமே எஸ்.பி, ரா.ஸ்ரீ. இவர்களை யெல்லாம் கண்டு, தாத்தாச்சாரியாரையும் சேத்து மாட்டும்படியாத் தூண்டி விட்டுட்டம்னா, நம்ம காரியம் முடிஞ்சிரும். அப்புறம் மருந்து தானா வேலை செய்ய ஆரம்பிச்சிரும்” என்று தமது சதியின் நியாய தீர்க்கங்களை விளக்கினார் சொக்க லிங்கம். 

குருசாமி தலையை ஆட்டி விட்டு, மானேஜரைக் கூப் பிட்டார். கூப்பிட்டு, அன்று மாலையே புத்தகம் வெளி யிடப்பட வேண்டுமென்றும், ஏஜெண்டுகளுக்கும். பத்தி ரிகைகளுக்கும் உடனே புத்தகங்கள் போயாக வேண்டும் என்றும், காரியார்த்தமாக, அண்ணாமலைக்கு இரண்டு நாள் சுணங்கியே புத்தகம் போய்ச் சேரவேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். 

பிறகு சொக்கலிங்கமும், குருசாமியும் காப்பி ஸ்டாலுக்குச் சென்றனர். 

7 

“அண்ணாமலையின் ‘தமிழ் இலக்கிய விமரிசனம்’ ஒரு சல்லித்தனமான முயற்சி.” -கு. ர. 

“இந்த நூலுக்கு மதிப்புரையே தேவையில்லை; வெறும் குப்பை”. – உண்மை விளம்பி. 

“அண்ணாமலையார் மட்டுமல்ல: ஸ்ரீ தாத்தாச்சாரி யாரும் சேர்ந்து திருட்டுக் களவாணித்தனம் செய்ததின் விளைவாகவே இந்நூல் வெளிவந்திருக்கிறது.” – ஜெயமணி 

அண்ணாமலை யுன்னை 
அடுப்பில் முறிச்சி எச்சிக் 
கொன்னாலும் எம்மனசின் 
கோபங்கள் தீராது 
-ஒரு கவி 

ஞானாணி – சென்னை. 
முன்னுரையை நீக்கவும். வருந்துகிறேன். 
-அண்ணாமலை. (தந்தி) 

ஞானமணிப் பதிப்பகம் – சென்னை. 

தாங்கள் வெளியிட்டுள்ள ‘இலக்கிய விமரிசனம் புத்தகத்தில் என்னை இழிவு படுத்திக் கூறுவதற்கு, ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது? – எஸ். பி. 

தாத்தாச்சாரியார், 
ஞானமணி சென்னை. 

ஐயா, 

என்னுடைய கட்சிக்காரர் ரா. ஸ்ரீ.. நீர் ‘தமிழ் இலக்கிய விமரிசனம்’ என்ற நூலை வெளியிட்டதன் மூலம், தமக்* மான நஷ்டம் ஏற்படுவதாகப் புகார் செய்கிறார். ஆகவே, உம்மீது ஏன் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதென்பதற்குத் தகுந்த காரணம் காட்டவும். 

ராஜையா 
(அட்வகேட்) 

அண்ணாமலை, 
தென்காசி. 

நமஸ்காரம். இத்துடன் எங்களுக்கு வந்துள்ள வக்கீல் நோட்டீஸ் முதலியவற்றை அனுப்பி யிருக்கிறோம். உங்களுடைய பதிலை உடனே எதிர்பார்க்கிறோம். 

தங்கள் தந்தி வந்தது. புத்தகங்கள் விற்று விட்டன. எதுவும் செய்ய முடியாது. 

இப்படிக்கு 
சங்கரன். 
(ஞானமணி நிர்வாகிக்காக) 

8 

பஞ்சநதம் ரிசீவரை எடுத்தார். 

“ஹலோ – 

“பஞ்சநதந்தான் பேசறேன். டைரக்டர் இருக்காரா?- 

“நான் பேசணுமின்னு சொல்லு- 

“ஆமா, நான்தான் பேசறேன். பாத்தியளா, அந்தப் புஸ்தகத்துக்கு எப்படி ‘ரிஸெப்ஷன்’ இருக்குன்னு?- 

“இந்த மாதிரி ஏதாச்சும் நடக்குமின்னு எனக்குத் தெரியும் சார். தாத்தாச்சாரியார் சாலாட்சிக்கு வேண்டி யவராயிருந்தாலும் – 

“கூட ஒரு சின்னவன், குருசாமி இருக்கானே, அவன் ஒரு வெடிசுட்டி- 

“என்ன பண்றதாவது? இத்தனைக்கும் பெறவும் அதைக் ‘கண்டினியூ’ பண்றதுன்னா – 

“ம்…சரி. ஆடிட்டரை வரச் சொல்லிருதேன். நாளைக்கே கணக்குப் பாத்துப்பிடுவம் – 

“ம். சரி” 

பஞ்சநதம் ரிசீவரைக் கீழே வைத்தார். 

முடிவில்: 

ஸ்ரீமான் தாத்தாச்சாரியார் கம்ப ராமாயணமும் ஸ்ரீமதி சாலாட்சியுமே துணையாக, யாரும் ஏற்றுக் கொள் ளாத தனிமனிதனாக ஞானமணிப் பதிப்பகத்தை விட்டு வெளியேறினார். 

ஸ்ரீமான் அண்ணாமலை தலை நிமிர முடியாமல் தமிழ் விமர்சகப்புலிகள் ஓங்கியறைந்து விட்டதாலோ என்னவோ, தாம் கூற வந்ததைக் கூறிவிட்டோம் என்ற திருப்தியோடு இலக்கியத்துக்கும் தமக்கும் இனித் தொடர்பே வேண் டாம் என்ற சுவானுபூதியோடு ஒரு குருகுலத்தில் ஐக்கியமாகி விட்டார். 

உதவியாசிரியர் குருசாமி தாம் நினைத்த காரியத்தைத் திருப்திகரமாகச் செய்து, இலக்கிய உலகின் இரண்டு புல்லுருவிகளை வேட்டு வைத்து விட்டோம் என்ற மனத் திண்மை கொண்டிருந்தாலும், தருமத்தை நிலை நாட்ட வந்த இளைஞன் ஹாம்லெத் வாழ்க்கைச் சூதில் தன்னையும் பணயமாக்கிக் கொண்டது போல், ஞானமணிப் பதிப்பகத் திலிருந்து சீட்டுக் கொடுக்கப்பட்டார். 

ஞானமணிப் பதிப்பக ஆசிரியர் அறையில் மீண்டும் கழிவுக் காகிதங்களும் குப்பைக் கூளங்களும் நூலாம்படையும் அடைய ஆரம்பித்தன. 

– 1947 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *