கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 625 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றும் என்றும்போல் தான் விடிந்தது. 

இல்லை. நான் தூங்கிவிட்டேன். விழித்தபோது சாளரத்து நிழல் எதிர்ச்சுவர்மேல் கிரணத்தூலங்களில் அணுத்தூள்கள் புகைந்து பிசைந்து கொண்டிருந்தன. ஏனோ விடியிருளில் கண்ணயர்ந்துவிட்டேன். 

ஒரு வயது தாண்டியபின், தூக்கம் விழிப்பு தனியென்று வேளை உண்டோ? நேரத்தில் தூக்கம் கிட்டினவரை லாபம். இரவு மிச்சப்பொழுதெல்லாம் படுக்கையில் புரண்டவண்ணம் குருட்டு யோசனைக்குப் பலிதான். 

-அம்மா என்னை உண்டாயிருக்கையில் அவள் உச்சி மண்டையில் பல்லி விழுந்திருந்தால். நான் ஒரு மில் முதலாளியாயிருப்பனேல்லோ? 

-இன்று தமிழ்நாடு குலுக்கல் சீட்டு முதல் பரிசு எனக்கு விழுந்தால் (இன்னும் சீட்டுக்கூட வாங்கவில்லை), விழுந்ததும் முதல் காரியம் உத்தியோகத்துக்கு முழுக்குப் போடணும். காலையில் Boss அறைக்குள் நானே போய் (தபாலிலேயே அனுப்பிவிட்டால் அந்தச் சிரமம் கூட ஏன் என்று தோன்றவில்லை; அப்பவும் அவன் மூஞ்சியில் முழித்துத்தான் ஆகணுமோ? அதுதான் பேனாவம்சத்தின் சாபம்) Mr So and So-உங்கள் பேர் மறந்து போச்சு. இந்தாங்கோ கால் கடிதாசு-” என்று மேஜை மீது வீசி விட்டு, எதிரே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு.. 

இதுபோல் பகற்கனவில் நான் பிறவி நிபுணன். எழுத்தாளனில்லையா? ஏழெட்டுத் தொகுதிகள் என் எழுத்து அச்சாகியும் பார்த்துவிட்டேன், சொல்ல வந்தது என்னவெனில் தூக்கம் போனாலும் யோசனைகளுக்குக் குறைவில்லை. அண்டாவைத் தூக்கிச் செம்பில் போட்டால் என்ன? 

கிழக்கு மேற்கு ஆகாதா? பார்க்கப் போனால், எல்லாம் பேர்கள் தானே! ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று கணக்கு ? ஒன்று ஊசிக்காது பெரிதா யிருக்கணும். அல்லது ஒட்டகம் சின்னதாயிருக்கணும் அவ்வளவுதானே! 

கதைக்குதவாது. ஆனால் இதுபோன்று கவலைகள் யாரையும் ஒருசமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் உறுத்தும் உறுத்தியிருக்கும் என்பது உறுதி. 

மாடியிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். 

எனக்கே சற்று வியப்புத்தான். இவ்வளவு நேரம் தாண்டிய விழிப்பு எனக்குப் பழக்கமில்லை. ஞாயிற்றுக் கிழமை கொண்டாடுகிற ஆசாமி நான் இல்லை. அன்று வீட்டில், யாரும் எழுவதிலிருந்து, காப்பி, குளியல், சமையல், சாப்பாடு எல்லாமே நேரம் தள்ளிப்போகும். அன்று எந்தக் காரியத்திலும் சோம்பல் வழியும். அன்று பையன்களுடன் அவளும் சேர்ந்துகொண்டு விடுவாள். “ஆமாம் எங்களுக்கு வயசாச்சு. தூக்கம் கெட்டால் நான் பொறுப்பா! ஓடாய் உழைச்சு இத்தனை நாளைக்கு என்னத்தைக்கண்டேன் ? மனுஷான்னா ஒருநாள் கண் அசராதா என்ன! ஆபீஸ் இல்லை. அதற்காக வீட்டில் ஆபீஸ் நடத்தணுமா என்ன!” 

நான் வாய்திறவாமலே முன்கூட்டியே சவால். 

பல்விளக்கி, முகம் கழுவி சமையலறையில் ‘நுழைகை. யில் காப்பி கலந்தாகிவிட்டது. பையன்கள் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அடுக்கில் ஒரு மட்டாய் கலந்து அவரவர்க்குக் கரண்டியில் அளந்து விட்டுக் கொண்டிருந்தாள். 

மோஹினி. 

என்னைப்பார்த்ததும் எல்லோர் முகத்திலும் ஒரு வியப்பு.ராகுவா, கேதுவா, இந்த தேவ பந்தியில் இவன் எங்கு முளைத்தான் என்கிற மாதிரி. 

“இந்தாங்கோ உங்களுக்கும்…”
 
மாட்டுக்குக் கழுநீர் வைப்பது போன்ற இந்தக்கலவை எனக்கு அறவே ஆகாது. தினமும் கலைந்த தூக்கமாத லால், தினமும் பால் வாங்குவது நான்தான். 

நானே காப்பி போட்டு இறக்கி. என் காப்பியை நானே கலந்துகொள்வேன். 

சர்க்கரை மட்டு. 

பொன்னிறம். 

ஆவி பறக்க – 

மேல் துண்டால் தம்ளரை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு…”நெருப்புக்கோழியா? ஏற்கெனவே அல்ஸர் கொண்டாடறேள் இப்படிக் குடித்தால் வயிறு என்னத் துக்கு ஆறது? 

பரிவு தானமா? கேலியா? ஆத்திரமா? 

பேசாமல், என் காப்பியை எடுத்துக் கொண்டு ஒதுக்க மாகச் சுவரோரம் குந்திட்டு உட்கார்ந்து கொண்டேன். வாழைக்குலை, காலை 

ஜன்னலுக்கு வெளியே வாழைக்குலை காலை வெயிலில் பளிச்- 

குலை நுனியில் பூண்போல் பூ இன்னும் மடல் அவிழ வில்லை. 

அட, இதுவரை எப்படி என் கண்ணில் படவில்லை.

ஆமா – பட்டதால் என்ன லாபம்? நட்டது நான் தான். வளர்த்தது நாங்கள் தான். ஆனால். 

(ஏன் ஸார், வீடு யாருது? இடம் யாருது? கன்னை நான் வைக்கச் சொன்னேனா, பூச்சிப் பொட்டுக்கு இடம் கொடுத்துண்டு? எங்கள் நரேஷ் உங்கள் வீட்டில்தான் குடியிருக்கான். பச்சைக்கும் தண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சைப்பாம்பு புடுங்கித்துன்னா யாருக்கு யார் ‘ஜவாப்’ சொல்றது வோய்?) 

வீட்டுக்காராள் நியாயமே தனி. அதுதான் இந்நாளில் எடுபடும் நியாயமும்கூட. நாங்கள் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் தானே? எதிர்பாராமல் விருந்தாளி 

வந்துவிட்டால் ஒரு இவை நறுக்கப்போமா? 

“ஓய்,நீர் இப்படி இலையை நறுக்கினால் குலை போடுவது எப்பவோய்? உங்கள் சுவரோரம் முளைச்ச துன்னு நீர் என்ன எதிர்பார்க்கிறீர்?” 

சொல்லெறிகளைத்தான் என்னால் எதிர்பார்க்க முடியும். 

இரவோடு இரவாய் எவனாவது குலையை அறுத்துப் போனாலும் போகலாம். ஆனால் நாங்கள் ஆசைக்கும் ஒரு இலையை அடைய முடியாது. 

ஆசை, ஹும் – படவேண்டாம் என்று யார் சொன்னது? படேன், நிறையப்படேன், அதில் கூடவா தரித்திரம்? 

நாங்கள் வெச்சது எங்களுக்கு உபயோகமில்லை என்கிற ஆத்திரத்தில் அடிமரத்தில் கத்தியைப் போடத் தான் தோன்றினாலும் மனம் வருகிறதா? அல்ல, கருகிப் போகட்டுமேன்னு காயப்போட மனம்தான் கல்லாகிறதா? 

ஆனால் தான், பிழைக்க, அது இனி எங்களை நம்பி யில்லை. அது தலையெடுத்தாச்சு குலை தள்ளியாச்சு. அது இனி வாழையடி வாழையாகப் பெருகிக் கொண்டே போகும். 

போதும் போதாத்துக்குக் கிராமத்திலிருந்து சின்னான் வந்து சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

‘இது தனி ஜாதி,சாமி. நீங்களே பார்க்கப் போறீங்க. ஏறக்குறைய தென்னைமரம் ஒசரம், தடுமனுக்கு வளரும். குலையில் காய் ஒன்னு கை முழம் அடங்காது. 

தாவர விஷயங்களில், சின்னான் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. அவன் சொல்லுக்கே அவை பயப்படும் என்று ஒரு வழக்கு. அவ்வளவு அனுபவம்; அவ்வளவு. பலிதம். 

உதவாத பிள்ளைமேல் ஆசையும் ஜாஸ்தி. 

சென்னையின் நெருக்கடி வாசத்தில், ஒரு நடுத்தரக் குடும்ப வசதியில் (அது என்ன வசதியோ? ஒவ்வொன்றாய் இழந்து கொண்டே, எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதாய் நினைப்பு ) வீட்டுள், கண்ணுக்குக் குளிர்ச்சியாய், இலைப்பச்சையின் தரிசனம் கிடைப்பதே பேறு இல்லையா? இதுவே சிரமத்துக்குப் பரிசு என்று ஏன் சமாதானம் ஆசுக் கூடாதா? ஆறுதலுக்குத்தான் வழியில், நாட்டில், உற்ற பழமொழி களுக்குத்தான் குறைவா? 

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்.

கிட்டதாயின் வெட்டன மற. 

மனம் உண்டானால் இடம் உண்டு. 

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

திருடன் ராஜ முழி முழிக்கற மாதிரி. 

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 

யானைக்கு ஒரு காலம், பூனைக்கொரு காலம். 

-மூக்கு விளிம்பில் பட்டுப் ‘பொத்தென்று’ ஏதோ கீழேவிழுந்தது. 

ஹிந்து ஞாயிறு அனுபந்தம். 

ஒ; ஸாரி! 

ஓ! ஞாயிறு அன்று மரியாதைக்கும் ‘அம்பேல்’ தானா? 

மூக்கைத் தடவிய வண்ணம் சுற்றும் முற்றும் பார்க்கிறேன். 

மூத்த பையன் முகத்தில் அசடு வழிந்தது. 

ஆனால் எனக்கு ஏன் இம்மிகூட கோபம் இல்லை? எனக்கே ஆச்சர்யம். எனக்கு பேர் என்னவோ ‘ஸுர்ர்ர்! -வாணம் கட்டி விட்டு, குடும்பம் அப்பப்போ என்னை நசுக்கி, குடும்பம் தன்னிஷ்டத்துக்கு என்னைப்பதப் படுத்தி விட்டதா? 

பேப்பரைப் பிரிக்கிறேன். அப்போத்தான் சில தினங்க ளுக்கு முன் மறைந்த கான் அப்துல்லாகானைப்பற்றி அவ ருடைய சிஷ்யை எழுதிய கட்டுரை எடுத்தவுடன் கண்ணில் ஆழ்ந்து படுகிறது. முதல் வரிகளிலேயே கட்டுரையில் போனேன். கான்ஸாஹிப்பின் ஸான்னியத்யம் வரிக்கு வரி பரிமளிக்கத் தொடங்கிவிட்டது. எவ்வளவோ வசதிகள், களரவங்கள் விரல் சொடுக்கில் காத்திருந்தும், மனுஷன் தன்னிச்சையில் வரித்துக்கொண்ட எளியவீடு, எளிய வாழ்க்கை, ஆரோக்யமும் சுத்தமும் நிறைந்த அவருடைய பழக்க வழக்க பாவனைகளில் அவர் காட்டிய ஆர்வம் மட்டுமல்ல, சிஷ்யர்களிடமும் கடைபிடித்த கண்டிப்பு- படிக்கப்படிக்க இன்பம், சுருக்க முடிந்துவிட்டதே கட்டுரைதான் சின்னதா, அல்லது ருசி காட்டி என் பசிதான் பெரிதாகி விட்டதா? 

கட்டுரையினூடே எனக்கு ஒன்னு புலனானது. அவ அப்பியாசம். அப்பியாச மூலமாக போதனை. ருடைய ஒழுக்கம்; அக, புற சுத்தத்தின் தோற்றுவாயாக ஸங்கீதம்.

அடுத்துத் தோன்றுகிறது. பேச்சு மூச்சுமாய், நம் தங்களை அர்ப்பணித்துக் மூதறிஞர்கள், மஹான்கள் கொண்ட லக்ஷியம் – தெய்வமோ, நேசமோ கலையோ- எதுவாயிருப்பினும் அதற்கு முதற்படி, அல்லது அதில் அவர்களைக் கொண்டு போய்விட்ட முதல் வழி,உடல், உடை, மன சுத்திதான். 

குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில்; இந்தக் கல்லில்தான், வேட்டிக்கு ஜிப்பாக் கோட்டுக்கு ராஜாஜி சோப்புப்போட்டு முக்கி அலசினார், என்று பார்த்தவர் சுட்டிக்காட்ட கேட்கவே மகிழ்ச்சி- அந்தக்கல்லைத் தரி சிக்கவே ஒரு இன்ப அச்சத்தில் மனம் தோய்கிறது; தன் காரியத்தைத்தானே பார்த்துக் கொள்வதில் இருக்கும் ஒரு சுதந்திரம், சிரத்தை-அதுவே ஒரு உயர்ந்த பக்குவ நிலைதான். 

ராஜாஜி,காந்தி, ராமகிருஷ்ணர், அரவிந்தோ, நேரு பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அனை வருமே, சுத்தமானவர்கள். 

“ஆமாம், இவர்களின் கீர்த்தி காரணமாக இவர்கள் சுத்தத்தைப் புகழ்கிறீர்கள்!”

புகழ் அடைந்தபின் அவர்கள் சொல்லெல்லாம் வேத வாக்கு தான். செயல் எல்லாம் வெண்கலம் தான் என்று என் பிள்ளைகள் தர்க்கம் புரிவார்கள். 

ஆனால், இவர்களின் சுத்தமான பழக்க வழக்கங் களான முதல் லக்ஷியத்தின் விளைவாக மற்ற பெருமைகள் தாமே வந்தடைந்தன என்று நான் சொல்வேன். 

உடல், உள்ளத்தின் கோயில். 

உடல் சுத்தம் வழி மனத்தூய்மை. 

மனத்தூய்மை காட்டும் முறையில் அவரவர் லக்ஷியத்தை, அழகைப் பேணி, 

ஆத்மதரிசனம். 

“You are talking through your hat; we can’t understand you!” ரொம்பசரி. உங்களுக்குப் புரியாது. உங்களுக்குப் புரிந்துகொள்ள இஷ்ட மில்லை. இந்தத் தலைமுறைக்குச் சரித்திரத்தின் பார்வை தன் மேல் படவேண்டும் என்கிற. ஆசையே இல்லையே!) 

இந்தத் தர்க்க ரீதியின் அடிப்படையில் அனைவருமே சௌந்தர்ய உபாஸகர்கள். தன் புற, அக, ஆத்ம, அந்தக் கரணத் தூய்மையின் வெளியீட்டாகக் கான்ஸாஹிப் சங்கீதத்தை அனுஷ்டித்- 

“அப்பா! நரசிம்ம மாமா வந்திருக்கார்!” காயத்ரீ அறை கூவினாள். 

சிந்தனை வெடுக்கென கலைந்து, சூழ நோக்கினேன்.

ஜன்னலுக்கு வெளியே ஆடும் வாழையிலையின் பச்சை மேல் சூரியன் விழுந்து இலை அப்படியே தங்கத் தகடாய் மாறுகையில் – இதுதான் பசும் பொன்னோ?

என்னுள்ளும் பொன்னொளி புகுந்தது. 

தரையில் இருகைகளையும் ஊன்றி மெதுவாய் எழுந் தேன். இத்தனைக்கும் நான் உடல் பருமனில்லை. ஆனால் ஏதோ அழுத்திற்று, அசதியுமில்லை; வயசு? அல்லது, என்னில் இடம் கண்டுகொண்டே ஒளிக்கதிரின் பசும் பொற்கனமோ? 

திடீரெனச் சமையலறையில் இரைச்சலும் பேச்சும் அடங்கிப்போச்சு. என்ன ஆச்சு? என்னைச் சூழப்பார்க்கிறேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகக் கவனிக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் ஆச்சரியம். என்னையு மறியாமல் ஏதோ அசம்பாவிதமாயிருக்கிறேனோ? 

பிறகுதான் உணர்கிறேன். மண்டையில் ஏதோ குலுகுலுப்பு. என் தலைமேல் ஏதோ உட்கார்ந்து கொண்டிருந்தது. நான் வாசற்படி தாண்டும்வரை தலை மேலேயே இருந்து, இடது தோளுக்குத்தாவிற்று, அங்கிருந்து என் முகத்துள் உற்றுப்பார்த்து விட்டு. 

“ட்வீக்! ட்வீக்!” – பறந்தோடிவிட்டது. 

என் தலைச்சடையைக் கூடு என்று கொண்டு விட்டது போலும்! 

நான் முன்கட்டுக்குச் செல்கையில், கண்ணன் என்  காது பட, “நமக்கு இனி பன்னிரண்டு மணிவரைக் கவலையில்லை. “டேய் சேகர், விவித் பாரதி, Full Volume திருப்புடா!” 

நரசிம்மன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறார். செகரேட்டேரியட்டில் வேலை. மூன்று மாதங்களுக்குமுன் மார்க்க பந்து மூலம் பரிச்சயமானார். சினிமா – நான் அந்தக் காலத்தில் பார்த்த படங்கள், கேட்ட குரல்கள் (தேவதாஸ் பரூவா, ஸெய்கல், கண்ணன் பாலா) பாட்டுகள் (மானமெல்லாம்போன பின்னர் வாழ்வதுதான் ஒருவாழ்வா’) அதில் ஆரம்பித்து, ஸங்கீதம், இலக்கியம், வேதாந்தம் பேசிக் கொண்டேயிருப்போம். நேரம் போவதே தெரியாது. நான் பேசிக் கொண்டேயிருப்பேன். அவர் கேட்டுக் கொண்டேயிருப்பர் நேரமாச்சு என்று தானாகச் சொல்லமாட்டார். நேரமாகிவிட்டதே என்று வற்புறுத்தினாலும் தங்கமாட்டார். 

“-வாசலிலேயே காத்திண்டிருப்பா; சாப்பிட மாட்டா.”

“ரெண்டுபேரும் வயசானவா. நான் ஒரே பிள்ளை, பெற்றதுக்குக் குறைவில்லை. ஆனால் தக்கவில்லை. போயே ஆகணும்.” 
 
காப்பிகூட அருந்தமாட்டார். 

“இன்று ஏகாதசி. நான் மாத்வன் பாருங்கோ” 

அல்லது, 

“கொஞ்சம் ஹெவியாயிருக்கு, மன்னிச்சுடுங்கோ” 

இதுபோல் ஏதோ. 

அது மரியாதையா? கூச்சமா? கொள்கையா? 

ஏதோ ஒரு சாக்கு. 

எங்கள் – முதல் சந்திப்பில், நான் கன்யாகுமரியை முதன்முதலாகத் தரிசித்தபோது என்னில் நேர்ந்த மன எழுச்சிகளை நான் விவரிக்கக் கேட்டு, அவர் அடுத்தடுத்து வரத் தலைப்பட்டு, எங்கள் பழக்கம் முதிர்ந்தது. 

கண்ணன் : (“அறுவை !”) 

ஆனால் கண்ணனுக்காக நாங்கள் தளர்ந்துவிட முடி யுமா என்ன? 

ஒரு சமயம் சேர்ந்தாப்போல் பத்து நாட்கள் ஆளைக் காணோம். 

எனக்குக் கொஞ்சம் கையொடிந்த மாதிரிதான் இருந் தது. என் சங்கடம் பையன்களுக்குக் குஷி அவர்களுக்குள் தோளுக்குத்தோள் இடித்துக் கொள்வதும், ரகஸ்யமாய்க் கொக்கரித்துக் கொள்வதும்… 

காய்த்ரீ கீச்சுக்குரலில், “எப்போ வருவாரோ எந்தன் கலிதீர”. 

ஆத்திரத்தில் அவளை ஒரு அறைகூட வைத்துவிட் டேன். பிறகுதான் தெரியவந்தது கேலியில்லை ; பள்ளிக் கூடப் பாட்டாம். ஒப்பிக்கணுமாம். கேட்கணுமா? அவளை மன்னிப்புக் கேட்காத குறை. சாக்லேட், அவித்த வேர்க்கடலை, சேப்பங் கிழங்கு ரோஸ்ட், மாட்டினி… மூன்று நாள் லஞ்சவிழா. 

பிறகு திடீரென ஓரிரவு- 

படுக்கை கூட விரித்தாகி விட்டது. வாசற்கதவு தட் டல். திறந்தால், நரசிம்மன் நின்று கொண்டிருந்தான், கையில் பலகைபோல் எதையோ தாங்கிக் கொண்டு. 

“ஸார் ஒரு நிமிஷம். மாமியையும் வந்து நிற்கச் சொல்லுங்கோ. கன்யாகுமரியிலிருந்து நேரே இங்கேதான் வரேன் -” என்று, அவர் கையிலிருந்த படத்தை அவள் கையில் கொடுத்துவிட்டு, சாஷ்டாங்கமாக இருவரையும் நமஸ்கரித்து விட்டு உடனே போய்விட்டார். 

“நல்ல பையன்” என்றாள், படத்தை எட்டப் பிடித்துக் கொண்டு (வெள்ளெழுத்து ஆனால் ஒப்புக் கொள்ளமாட்டாள்), ஏற இறங்க அதைக் கணித்தபடி. படத்திலிருந்து கன்யாகுமரி சிரிக்கிறாள். 

படத்துக்குப் போட்டே கொண்டுவந்துவிட்ட கண்ணாடியும் frame உம் அல்லவா வேலை செய்கிறது! 

இல்லையேல் சுருட்டி எங்கேனும் பெட்டியடியில் காலண்டராகவே கிடக்கும்; என்றேனும் ஒரு நாள் பையன்கள் பெட்டியை ஒழிக்கும்போது, இதைத் தூக்கி யெறிந்துவிட்டு அந்த இடத்தில் ஒரு சினிமாஸ்டார் படத்தைப் பத்திரப்படுத்தும்வரை. 

“பையர் என்று சொல்லு, அவருக்கு நடக்கிறது முப்பத்தி அஞ்சு” 

“அட, நம்பவே முடியவில்லையே, இருபத்தி அஞ்சுக்கு. மேல் மதிக்கத் தோணல்லே. கலியாணம் ஆயிடுத்தா? குழந்தை ஏதாவது…”

அவ்வளவுதான். எசமானியம்மா எங்கோ track மாறி யாச்சு. அவளை ஸிக்னலில் போட்டால், தினம் நாலு விபத்துக்குக் குறைவில்லை. 

தினத்தைவிட நரசிம்மன் இன்று இன்னும் நேர்த்தி யாகத் தோன்றுகிறார். சோபாவினின்று எழுந்து அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்கையில், பேப்பர்லாந் தருள் விளக்கேற்றினாற்போல் முகம் வெளிச்சமாகிறது. அவரைக் கையமர்த்தி நானும் அருகில் அமருகிறேன். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி ஒருவரில் ஒருவர் திளைத்திருக்கிறோம். நெஞ்சோடு நெஞ்சு கிளத்தல் என் பது இதுதானா? இதயக் கலசத்தில் அமுதம் விளிம்பு வரை துளும்பி நிற்கிறது. 

ஆனால் இன்று எல்லாமே நேர்த்தியாகத்தானிருக் கின்றன. அறையுள் அடிக்கும் சூரியன்கூட இன்று ஆகாச கங்கையில் குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறான். வெளிச் சம் அவ்வளவு துல்லியம். அறைச்சுவர்கள், மெத்தை வைத்துத் தைத்தாற்போல, பட்டுபட்டாய், மிருதுவாய் 3-Dயில் பிதுங்குகின்றன. காலடியில் தரையில் மொஸெய்க் கோலம் கூச்சத்தில் அழகோடு பின்னி, உயிரோடு நெளிகின்றது. கண்ணை இதுகாறும் மறைத்த சதையோ, செதிளோ தானே உரித்து உதிர்ந்தாற்போல, பார்வையில் தனித்துலக்கம் உணர்கிறேன். 

“ஏன் ஒரு மாதிரியாயிருக்கேள்?”…நரசிம்மனின் குரல் பரிவில் விளக்குத் திரிபோல் சொடசொடக்கியது. 

“அப்படியா? எனக்குத் தெரியல்லியே”- என் உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன். “என்றைக்கும் போல் கிழவனாய்த்தான் இருக்கேன்.?” 

“எனக்குச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ?” சட்டென மனதைத் திடம் பண்ணிக் கொண்டவறாய்: “உங்களை இன்று ஒரு கேள்வி கேட்கப்போகிறேன்,” 

மின்விசிறி ஆவேசம் கண்டமாதிரி விசை கூடுகிறது.

“என்ன, விடுகதையா?” 

“உங்களுக்கு எப்படியோ? ஆனால் எனக்கு வேடிக்கையாக இல்லை”- அவர் குரல் தடிக்கவில்லை. அதில் ஏதோ சோகம்தான் துளித்தது. 

“என்னை வருடங்களாக உறுத்திக்கொண்டிருக்கும் கேள்வி. நான் மதிக்கும் அறிஞர்கள், மூதோர்கள், பிரமு கர்கள் எல்லோரையும் கேட்டுவிட்டேன். ஆனால் எனக்குச் சமாதானம் இல்லை. பாதிப்பேர் ஏதோ சொல்லி மழுப்பிவிடுகிறார்கள். பலர், சம்பந்தமில்லாமல், தங்கள் பண்டிதத்தைக் காட்டிக்கொள்கிறார்கள் அல்லது. இதென்ன கேள்வி என்று கேலி. நானும் ஒப்புக் கொள்கிறேன். சில விஷயங்கள் அவசியமோ அல்லவோ, நம் முழுச்சிந்தனையையும் அடைத்துக்கொண்டு, ஒரு கேள்வி மறு கேள்விகளை ஒவ்வொன்றாய் விழுங்க, ஒரே கேள்வியாகத் திரண்டு உருண்டு அதனின்று மீட்சியே இல்லாத அவஸ்தையில் உழல்கிறேன்.” 

குருவி ஒன்று ஜன்னல் சட்டத்தின்மேல் குந்திட்டு, வாழ்வின் களிப்புக்குக் கட்டியம் கூறுகிறது. 

‘ட்வீக்’ட்வீக்’- மக்குமாந்தர்களா! கேள்விகளைக் கேட்டுப் போட்டி போட்டுக் கொண்டிருங்கள். கேள்வி யில்லாமல் சந்தோஷமாயிருக்க வழி கேட்டவர்கள்! 

என்னைச் சவளி செய்ததா? வேறா? 

கேள்விகள் கேள்விகளைத்தான் விருத்தி செய்கின்றன. பாம்புக்குட்டிகள் மாதிரி. ஒன்றை அடித்த இடத்திலேயே ஒன்பது கிளைக்கும். விளைவு ஒன்பது பயம். இன்னும் எத்தனையோ? 

பதிலும் பாம்புதான். ஆனால் தாய்ப்பாம்பு. எல்லாக் குட்டி.களையும் தன்னில் அடக்கிய தாய்ப்பாம்புக் கடி தான் விடுதலைக்கடி. சாவுக்கடி அல்ல. உள்ளத்தின் கதவைத் திறக்கும் சாவுக்கடி. ஆனால் அந்தக் கடிவேளை எப்போ வருமோ? 

இதென்ன பேத்தல்? இன்று எனக்கு ஏன் இப்படி யெல்லாம் தோன்றுகிறது? 

உருவம், அருவம், உருவகம் எல்லாம் புதுமாதிரிக் கலவையில் கோலம் பின்னிக் குழைகின்றது! 

“ஸார் இந்த உலகம், புவனமே கடவுளின் சிருஷ்டி. கடவுள், ஜீவசக்தி, ப்ரம்மம், பெயர் எதுவானாலும் சரி- ப்ரும்மம் ஏன் சிருஷ்டி பண்ணிக்கொண்டேயிருக் கிறது? சிருஷ்டியின் அவசியம்தான் என்ன? அது சுய நினைப்பில்லாமல் பொறுப்பற்றுச் செயல்படுகிறது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் சிருஷ்டியில் – நடப்பு, அழிவு உள்படத்தான்- ஒரு லக்ஷணம், நியதி, கோர்வை எல்லாமே தெரிகின்றன. முரண்பாடு என்று நமக்குத் தோன்றுவதுகூட ஏதோ ஒரு முறை, கோட் பாடுக்குக் கட்டுப்பட்டுத்தானிருக்கின்றன. சிருஷ்டியினின்று அதன் ரசங்களை மனிதன் எவ்வளவோ பிடுங்கப் பிடுங்க இன்னும் பெருகிக் கொண்டேதான் போகின்றன. ஆனால் ஓயாமல் நடந்துக் கொண்டிருக்கும் இந்தச் சிருஷ்டித் தொழிலுக்கு ஒரு நிப்பாட்டம், தடுத்தல் நிறுத்தல் கிடையாதா?  ப்ரும்மத்துக்குச் சும்மாவே இருக்க முடியாதா?” 

எனக்குக் கால்கட்டை விரலிலிருந்து ரத்தம், நரம்பு களில் பாய்போல் சுருட்டிக்கொண்டு மேல் ஏறி வருவது தெரிகிறது. செவிகளில் ஆவி பறக்கிறது. கண்ணை இருட்டுகிறது. 

நரசிம்மனின் அவஸ்தை புதிதா? புத்தன், ராமன், மார்க்கண்டேயன், ஏன் இவர்களுக்கும் தொன்றுதொட்ட காலத்திலிருந்து வெவ்வேறு விதங்களில் மனிதனை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் இந்தக் கேள்வி இந்த ரூபத்தில் நரசிம்மனுக்கு வந்திருக்கிறது. அது ஒருவரையும் விடுவ தில்லை. சிருஷ்டி மனிதனுக்குத் தந்திருக்கும் புத்தி எனும் ஆயுதம். அவனையறுத்து அவன் பிறனை அறுத்து கூர், கூர், கூராகிக் கொண்டே போகும் தேய்வின் வதையிது. 

நரசிம்மன் வியாதிக்கு மருந்து தேடவில்லை, உடலிருப்பதால்தானே வியாதிக்கு இடம், உடலேயில்லாம்லிருக்க வழி கேட்கிறார். பிரளய நிலை. 

“இந்த நிலையிலிருந்து விமோசனமே கிடையாதா?” 

விமோசனம், விடுதலை – ஹும் உண்மையில் எவ்வளவு வியர்த்தமான வார்த்தைகள்! நெஞ்சில் நிரவ லுக்கு என்ன பகட்டான போர்வை! 

கண்டவர் விண்டிலர் 

விண்டவர் கண்டிலர் 

கண்டவர் விள்ள இயலாதவரை, காணாதவருக்குக் கண்டவரும் காணாதவரும் ஒன்றே. 

”சொல்லுங்களேன்!” நரசிம்மனின் முகம் சிவந்து விட்டது. 

”ஏதேனும் சொல்லுங்களேன்! இல்லை, எனக்குப் பதிலே கிடைக்காதா?” 

அவர் முகமும் குரலும் எங்கோ தூரத்தில் கேட்கிறது.

என்குரலே என்னுடையதாயில்லை. நானே எதிரொலி யாகி விட்டேன். எதனுடைய எதிரொலி? 

“ப்ரம்மசிருஷ்டி இந்தப் புவனம், ப்ரும்மத்துக்குக் கண்ணாடி. பிரும்மக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறது.” 

என்னிடமிருந்து இந்த வாக்குப் புறப்பட்டதுதான் தாமதம், வானத்தில் சிம்மம் உறுமிற்று. எங்கோ மழை பெய்கிறது. 

அல்லது ப்ரும்மகோபம். 

குத்து விளக்கில் திரியை உள்ளுக்கிழுத்தாற்போல்

தெருவில் போய்க் கொண்டிருந்தவனை எதிர்பாராத சமயத்தில் 

ஒரு வளைக்கரம் திடீரெனக் கைப்பற்றி உள்ளுக் கிழுத்துக் கொண்டு 

வாசற் கதவைப் படீரெனச் சாத்திக் கொண்டாற் போல் 

நான் உள்ளுக்கு வாங்கிப் போனேன். 

அறையின் சுவர்கள் என்னைச் சுற்று சுற்று சுற்றின. சுற்றிச் சுழன்று உருகிப் பூமியோடு பிழம்பாகி, பூமி வானுடன் இழைந்து எங்கும் கண்ணாடி தோற்றப் பளிச்சில் பளிங்கு வியாபித்தது. 

பூமியின் கோள வளைவின்மேல் ஒரு உருவம் படிப் படியாக எழும்புகிறது.முகம் தெரியவில்லை. முதுகு என் பக்கம். நடன நடையில் அசைந்துகொண்டு-வானுக்கும் பூமிக்கும் மதிலாய் நின்ற பளிங்கில் இதோ முகம் தெரிந்து விடும். 

“அப்பா! அப்பா!!” 

என்னை யாரோ தோளைக் குலுக்கிக் கத்தி, விழித்துக் கொண்டேன். 

எல்லோரும் என்னைச் சுற்றி நின்றுக்கொண்டிருந் தனர். நான் சோபாவில் கிடந்தேன். கண்ணன் என் தலையின்கீழ் தலையணையைச் சரி பண்ணிக்கொண்டி ருந்தான். 

“என்ன ஆச்சு? – எனக்கு உடம்பெல்லாம் துணியைப் பிழிந்த மாதிரியிருந்தது. 

“என்ன ஸார், ஒரேயடியாய் எல்லோரையும் காப்ரா பண்ணிட்டேள்?”- நரசிம்மனிடமிருந்து பயம் நெடி வீசிற்று. 

“என்ன ஆச்சு?’ 

“என்ன ஆச்சு? திடீர்னு என்ன சார், பேசிண்டே யிருந்தேன், வாயடைச்சுப் போச்சு? கட்டை போட்டமாதிரி, உடம்பில் ஆட்டம், அசைவு, துவளல் ஒண்ணு மேயில்லை, திறந்த கண் திறந்தபடி. இமைக்கவேயில்லை. கண்ணில் focus இல்லை. மாலைமாலையாய் பெருகிறது. பார்வையில்லை. வெறிச்சினு ஒரே பாலைவனம். Empty. வேறு எனக்குச் சொல்லத் தெரியல்லே. கண்ணைப் பார்த்துதான் பயந்துட்டேன். கண்ணை இமைக்க முகத்தில் லேசாய் ஊதினேன்.பூ உதிர்ந்த மாதிரி அப்படியே சாய்ந்து விழுந்துட்டேள். எப்படி அவ்வளவு லேசாய்ப் போனேள்? அப்புறம் தான் கண்ணனைக் கூப்பிட்டேன்-” 

“அப்படியா ?” 

ஆனால் எல்லாம் பழைய சுவர்ள்கதான். தென்னன் டைச் சுவரில் அதே பழைய வெடிப்புத்தான். மின்னல் போல் கொடி பிரிந்து ஓடிற்று. கூரையில் ஒட்டடை அலைந்தது. 

க்றீச்.

ஒன்றும் புரியாமல் எல்லோரும் திகிலில் எதிர் அவறி னோம். மின் விசிறியில் அடிபட்டு ஒரு பெரும் சப்தம் பொத்தென்று என் மடியில் விழுந்தது. 

நொடியில் குருவியின் விழிகளில் கண்ணாடி தேங்கி விட்டது. வாய்மொட்டு லேசாய்த் திறந்துகொண்டது. 

“என்ன இது நரசிம்மன்?”- என் குரல் நடுங்கிற்று. எனக்கு அழுகை வந்துவிட்டது. புன்னகை புரிந்தார். என்னிடம் கிடந்த புஷ்பத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டார். அவர் கண்கள் நிறைந்தன. 

“இதுதான் நீங்கள் சற்றுமுன் காட்டிய பரபஞ்சக் கண்ணடி”.

– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *