‘வசதியான வீடு. இன்டர்நெட்ன்னு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கு. ஆனா தொலை பேசி மட்டும் எதிரி எண் தெரியற அளவுக்கு வசதி கெடையாது. இவ்வளவிற்கும் அது பெரிய காசும் கெடையாது. ஏன் இப்படி ?……‘ – வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் கொண்டிருந்த ரமேசுக்கு உள்ளுக்குள் உறுத்தல் கேள்வி.
‘ஒரு வேளை பயல் விவகாரமான ஆள். பொம்பளை விசயத்துல கொஞ்சம் வீக். தொலைபேசியில எண் தெரியற வசதி இருந்தா வீட்டுல உள்ளவங்க கண்டு பிடிச்சு வீண் விவகாரம் வம்புன்னு விட்டுட்டானா ?‘…
‘பொண்டாட்டி படிச்சவ வேலைக்காரி. புள்ளைங்க ரெண்டும் கல்லூரி படிக்கிறாங்க. ஆக… எல்லாரும் விபரம் புரிஞ்சவங்க. எப்படி விட்டு வைச்சாங்க.?‘
‘ஒரு வேளை பசங்க தங்களுக்கு பெண் நண்பர்கள், காதலிகள் தொலைபேசி பேசினா காட்டிக் குடுத்துடும்ன்னு நெனைச்சி பேசாம இருக்காங்களா ? இல்லே இவனுங்களே அது வேணாம்ன்னு தடுத்திருப்பாங்களா ?‘….
‘வீட்டுல உள்ள நாலு பேரும் ஆளுக்கொரு கைபேசி வைச்சிருக்காங்க. அப்படி இருக்கும் போது இந்த விசயம் சாதாரணம். ரகசியங்களையெல்லாம் அவுங்க அவுங்க கைபேசியிலேயே வைச்சுக்கலாம். அப்படி இருக்கும் போது வீட்டுல எண் காட்டிக்குடுக்கிற தொலைபேசி இருக்கிறது தப்பில்லே. பின்னே எங்கே சறுக்கல் ?‘
‘தப்பித் தவறி இந்த தொலைபேசியில தொடர்பு கொண்டா வம்புன்னு யாரும் அதைப்பத்தி நெனைக்காம இருக்காங்களா ? அப்படித்தான்!!‘ – முடிவிற்கு வந்தவனை, ‘‘என்ன ரமேஷ் ! பேசிக்கிட்டு இருந்தே. திடீர்ன்னு மௌனம் யோசனையாகிட்டே ?‘‘ ரிஷி.குரல் கலைத்தது.
‘‘ஒன்னுமில்லே ஒரு சின்ன சந்தேகம் ?‘‘
‘‘சொல்லு ?‘‘
‘‘உன் கிட்ட ஏன் நம்பர் தெரியற தொலைபேசி இல்லே.‘‘
‘‘……………………….‘‘
நண்பன் மௌனம் ஆள் கள்ளத்தனத்தை உணர்த்தியது ரமேசுக்கு நெருங்கி அமர்ந்து தான் நினைத்ததையெல்லாம் சொன்னான்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட ரிஷி ‘‘நீ சொன்னதெல்லாம் ஓரளவுக்குச் சரி. ஆனா அதுவே முழு காரணமில்லே. எண் தெரியிற தொலை பேசி இருந்தா யார் அடிக்கிறாங்கிறது தெரியும். வேண்டியப்பட்டவங்கன்னா எடுப்போம். வேண்டாதவப்பட்டவங்க, எதிரி, பிடிக்காவதவங்க எண்ணுன்னா தொட மாட்டோம். எனக்கு இது…. என்னவோ…. கஷ்டம்ன்னா ஓடி ஒளியற கோழைத்தனமா மனசுக்குப்படுது.. அது கூடாது, எதுவா இருந்தாலும் சமாளிக்கனும் அதுதான் வீரம், ஆரோக்கியம். அது மனுசனுக்கு முக்கியம்ன்னு என் மனசுக்குப் பட்டுது. அதான் பொண்டாட்டி, புள்ளைங்க கிட்டே யெல்லாம் விசயத்தைச் சொல்லி அவுங்க சம்மதத்தோட இந்த தொலை பேசி யை வைச்சிருக்கேன்‘‘ சொன்னார்.
ரமேசுக்கு அது சரியாகப்பட்டது,