எல்லோரும் நல்லவர்களே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 6,853 
 

என்ன சார் அநியாயம் இது, நீங்க எல்லாம் பாத்துட்டுத்தானே இருக்கறீங்க, ஏதுக்கு இப்படி பண்ணறேன்னு கேட்கமாட்டீங்களா?

நாம என்ன பண்ண முடியும் பத்பனாபன்.

இல்லே சார் இதை நான் விடறதாயில்லை, கார்ப்பரேசன் ஆபிசுக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணத்தான் போறேன்.

உங்களுக்கு இங்கத்த நடை முறை தெரிய மாட்டேங்குது பத்பநாபன், இங்க எல்லோரும் ஒரே மாதிரிதான், சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நாமும் மாறிக்கணும்.

சார் தயவு செய்து என்னைய அப்படி நினைச்சுக்காதீங்க, நான் இந்த மாதிரி அநியாயமெல்லாம் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன்.

சரி உங்க இஷ்டம், இப்ப எங்க கூட வாக்கிங்க் வர்றீங்களா? இல்லையா?

வர்றேன், எங்களுடன் வந்துகொண்டே இருந்தாலும் என்ன அநியாயம் இது என்று இதை பற்றி முணுமுணுத்து கொண்டேதான் வந்தார்.

அந்த நகரில் வசிக்கும் நாங்கள்,தினமும காலையில் நான்கைந்து பேராக வாக்கிங்க செல்வோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெருவிலிருந்து வந்து ஊருக்கு நடுவில் இருக்கும்

பிள்ளையார் கோவிலில் கூடுவோம். அதன் பின்னர் நடக்க ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் விடாமல் நடப்போம். அதன் பின் மீண்டும் பிள்ளையார் கோவில் வந்து அவரவர் வீடுகளுக்கு பிரிந்து செல்வோம். இது ஐந்து வருடங்களாக நித்தமும் நடக்கும் சங்கதி. எங்கள் நடக்கும்

கூட்டணிக்கு புதிது புதிதாக வீடு கட்டி குடிவரும் புதிய உறுப்பினர்களும் சேர்ந்து கொள்வர்.

பின் தினமும் நடக்க சோம்பல் பட்டு கழண்டு கொண்டவர்களும் உண்டு. எப்படியோ தினமும் நான்கைந்து பேர்கள் கூடிவிடுவதால் எங்கள் நடை பயிற்சி தினமும தடையில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி புதிதாக வந்தவர்தான் பத்பனாபன். ஏதோ ஒரு பெரிய கம்பெனியில் பாம்பேயில் பணி செய்து ஓய்வு பெற்று சொந்த ஊரில் இருக்கலாம் என்று வந்தவர், கிராமத்தில் இருப்பதை விட அதனருகில் உள்ள நகரத்தில் வசிப்பது நல்லது என்று எங்கள் நகரில் வீடு கட்டி குடி வந்திருக்கிறார். வந்து இரண்டு மூன்று மாதங்களில் எங்கள் நடை பயிற்சி குழுவில் ஐக்கியமாகி விட்டார்.

அவருடன் அன்று ஒரு தெரு வழியாக செல்லும்போது ஒரு இடத்தில் வீடு கட்டிக்கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு தண்ணீர் இணைப்பு தர குழி எடுத்து தண்ணீர் இணைப்பு குழாய் பதித்துக்கொண்டிருந்தார்கள். அதில் கார்ப்பரேசன் குறிப்பிடுகிற குழாய் அளவுதான் பதித்து வீடுகளுக்கு இணைப்பு தர வேண்டும். ஆனால் இவர்கள் அந்த அளவை விட அதிகமான அளவை கொண்ட குழாயை பதித்துகொண்டிருந்தார்கள். இதை பார்த்த்தும் என்னுடன் வந்தவர் பாருங்கள் கார்ப்பரேசன் அளவை மீறி இந்த வீட்டுக்கார்ர் குழாய் பதித்துக்கொண்டிருக்கிறார், என்று சொன்னார். நாங்கள் அதை சீரியசாக எடுத்து கொள்ளவில்லை, காரணம் ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறுகளை செய்திருக்கிறோம் என்ற மன நிலையில் இருந்ததால் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தோம். அப்பொழுதுதான் எங்களுடன் சேர்ந்திருந்த பத்பனாபன் இந்த அநியாயத்தை கேட்காமல் விடுவதில்லை என்று ஆரம்பித்தார்.

அவர் மும்பையில் “பிளாட்” வாழ்க்கை வந்திருக்கிறார் போலிருக்கிறது. பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் வாழும் வாழ்க்கை அவருடையது. இப்பொழுது எங்கள் குழுவில் சேர்ந்தவுடன் அவருக்கு ஏதோ ஒரு பட்டாளியன் படையுடன் சேர்ந்திருப்பது போல மகிழ்ச்சி. அதனால் திடீரென்று இப்படி ஏதாவது புரட்சி செய்யப்போவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்.இதை நாங்களும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒரு வாரம் ஓடியிருந்தது, எங்கள் நடைக்குழு அந்த தெரு வழியாக செல்லும்போது அந்த வீடு கட்டும் இடத்தில் மீண்டும் குழி எடுத்து பதித்திருந்த குழாய்கள் எடுக்கப்பட்டு சிறிய அளவு குழாய்கள் பதிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது.

எங்களுடன் வந்த நபர் “என்ன சார் மறுபடியும் குழாயை மாத்தறீங்க போலிருக்கு” என்று கேட்கவும் அந்த வீடு கட்டுபவர் “யாரோ மொட்டை பெட்டிசன் போட்டுட்டாங்க சார், அவங்க வந்து சோதனை பண்ணி எனக்கு ஏகப்பட்ட செலவு சார்” குரலில் வருத்தம் தெரிந்தது.

அங்கயும் இங்கேயும் கடன் வாங்கி வீடு கட்டறோம் சார், இந்த மாதிரி சின்ன சின்ன வேலைக்கு ஆசைப்பட்டு வீணா செலவு இழுத்துடுது. சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

எங்கள் நடைபயிற்சிக்குழு அவருக்காக வருத்தப்பட்டுக்கொண்டே நடந்தோம். பத்பனாபன் மட்டும் மெல்ல சிரிப்புடன் மெல்லிய குரலில் நான் அன்னைக்கு சொன்னேனில்லை, என்று விசமத்துடன் புன்னகைக்கவும், நாங்கள் கவலையுடன் அவரை பார்த்து அப்ப அது உங்க வேலையா? அவரும் புன்னகையுடன் ஆம் என்பது போல தலையசைத்தார்..எங்களுக்கு அவர் மீது இருந்த மரியாதை அப்பொழுதே குறைந்து விட்டது.

நான்கைந்து மாதங்கள் ஓடியிருக்கும், இப்பொழுது பாதிக்கப்பட்ட அந்த வீட்டுக்காரரும் எங்கள் நடை பயிற்சி குழுவில் இடம்பிடித்து எங்களுடன் தினமும் நடந்து வருகிறார், வேடிக்கை என்னவென்றால் அவருடன் அதிக நட்புடன் பழகுவது பத்பனாபன்தான்..

ஒரு நாள் கவலையுடன் நடந்து வந்து கொண்டிருந்த பத்பனாபனிடன் பாதிக்கப்பட்ட வீட்டுக்கார்ர் என்ன சார் கவலையா வந்துட்டிருக்கீங்க? ஒண்ணும் இல்லை சார் வீட்டுல தண்ணீர் குழாய் அடைச்சுகிச்சு, மெயின் குழாயிலிருந்து வர்ற கனெக்சனிலதான் அடைப்பு இருக்கும்போல இருக்கு, அதை எடுக்கணும்னா கார்ப்பரேசனுக்கு போயி தகவல் சொல்லியும்..பெருமூச்சுடன் சொல்ல இவர் சார் கவலைப்படாதீங்க, கார்ப்பரேன் காண்ட்ராக்டர் நம்ம பிரண்டுதான் இப்பவே போன் பண்றேன் அவர் வந்துடுவாரு, நீங்க குழி எடுக்கறதுல இருந்து மத்த எல்லா செலவையும் செஞ்சு கொடுத்திடுங்க, அவங்க பக்காவா ரெடி பண்ணிடுவாங்க, சொல்லிக்கொண்டே போக இவர் அப்படியே செஞ்சுடறேன் பயபக்தியுடன் கேட்டு கொண்டிருந்தார்.

எல்லோரும் நல்லவர்களாக இருக்கத்தான் நினைக்கிறோம், வாய்ப்பு கிடைக்கும் வரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *