கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 683 
 
 

தா..த்தா.த்தா..குரல் கொடுத்தான் ஹூக்கோ..மே..மே..மே..ஆட்டுக்குட்டி சத்தம் மட்டும் கொடுத்தது. மீண்டும் குரல் கொடுத்தான் த்தா..த்தாஆ, ஹூக்கோவின் அழைப்புக்கு, மீண்டும் பதில் குரல் மட்டும் கொடுத்தது மே..மே..மே.

சரியான குறும்பு சத்தமிட்டு சொன்னவன் அந்த புதரை விலக்கி பார்க்க ஒரு கொடியில் காலை மாட்டி விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தது. மாட்டிகிட்டியா? சொன்னா கேட்டாத்தானே, ஒரு இடத்துல நின்னா பரவாயில்லை. கொடியை விலக்கி அந்த குட்டியை தூக்கி தன் தோளோடு அணைத்துக் கொண்டவன், அந்த மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கை பார்க்க அந்த உயர்ந்து நின்ற இரு மலைகளுக்கிடையில் குறுகிய இடை தொடரில் தண்ணீர் தேங்கி நிற்க அதனை தடுத்து நிறுத்திக்கொண்டு கம்பீரமாய் வளைந்து நின்றது அந்த சிறு அணை..

போய் பார்க்கலாமா? குட்டியை அணைத்தவாறு யோசித்த ஹூக்கோ அந்தப்புறம் அணையின் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த இராணுவ உடையணிந்த வீரர்களை பார்த்து தயங்கினான்.

அம்மா சொன்னது ஞாபகம் வந்தது, ஒரு காலத்தில் அந்த இடத்தில் எல்லாம் நம்ம சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாம் விவாசயம் பண்ணி கிட்டிருந்தோம். அணைய கட்டி தண்ணியை தேக்குனதால அதுவெல்லாம் போயிடுச்சு, அது மட்டுமில்லை, அந்த புறம் மிலிட்டரிக்காரனை நிறுத்தி வச்சு, இப்ப இங்கிருக்கறவங்களை அந்த பக்கம் உள்ளேயே விடறதில்லை. நீ மறந்து கூட அந்த பக்கம் விளையாட்டுக்கு போயிடாதே,

ஏன் அம்மா? அங்க நம்ம மாமா, தாத்தா வீடெல்லாம் இருக்கே? அங்க என்னோட நண்பர்கள் எல்லாம் இருக்காங்களே, அவங்களோட எல்லாம் சண்டை போட்டுட்டியா?

இல்லே ஹூக்கோ, இப்ப அவங்க நம்மளை விட்டு பிரிஞ்சிட்டாங்க,

அதுதான் கேட்டேன், அவங்க ஏன் பிரியணும், நம்ம கூட சண்டை போட்டுட்டாங்களா?

மகனே அவங்க வேற கவர்ண்மெண்ட்டு கூட சேர்ந்துட்டாங்க, இனிமேல் அங்க போகணும்னா அந்த கவர்ண்மெண்ட் அதிகாரிங்க கிட்டே அனுமதி வாங்கணும்

அந்த ஐந்து வயது பையனுக்கு அதற்கு மேல் அம்மாவிடம் சந்தேகம் கேட்க தோன்றவில்லை, அவனுக்கு இந்த கவர்ண்மெண்ட் என்ற வார்த்தையும் புரியவில்லை.

ஹூக்கோவின் அப்பாவிற்கு இங்கு கொஞ்சம் தோட்டம் உண்டு, அதில் பழ மரங்கள் பயிரிட்டு கொண்டிருக்கிறார். வசிப்பதும் இந்த ஊரில்தான். ஹூக்கோவின் அப்பாவுக்கு அண்ணன் தம்பிகள் எல்லாரும் அந்த பகுதியில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு தோட்டம் உண்டு.

திடீரென்று ஒரு நாள் நாடு இரண்டாக பிரிந்து விட்டதாக அறிவிப்பு வந்தது. அவர்களுக்கு ஒரு கால நிர்ணயம் செய்த அறிவிப்பு வந்தது. இந்த பக்கம் இருப்பவர்கள், அங்கு போகலாம், அந்த பக்கம் இருப்பவர்கள் இங்கு வரலாம், ஆனால் இத்தனை நாட்களுக்குள் இடப்பெயர்ச்சி செய்து விட வேண்டும். அது முடிந்த பின்னால் யாரும் எங்கும் செல்ல முடியாது. எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த நாட்டு பிரஜையாகி விடுவார்கள். இப்படி அறிவிப்பு வந்தவுடன் அவரவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சொல்ல முடியாது.

இதில் மதங்கள் வேறு, அதுவரை ஒன்றாய் ஒருவர் வீட்டில் ஒருவராய் படுத்து தூங்கியவர்கள் திடீரென நான் வேறு, நீ வேறு என்று பிரிந்து முறைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஹூக்கோ அருகில் வசித்த மற்ற மதத்தை சேர்ந்தவர்களுடைய குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்கள் அங்கு வசிக்க இவர்கள் இங்கு வசிக்க, என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருந்தார்கள். இதில் இந்த மதத்துக்காரன் இங்கு வசிக்க கூடாது என்று இரு பக்கத்திலும் இருந்து நெருக்கடி பயமுறுத்தல்கள் வர தொடங்கி விட்டன.

இங்கு வசித்த எல்லா மதத்துக்காரர்களும், தங்களுக்கு பாதுகாப்பாய் ஒரு குழுவை அமைத்து, மற்றவர்களை உள்ளே வர விடாமல் பாதுகாத்து கொண்டதால் அப்பொழுது மனிதர்களுக்குள் ஏற்பட்ட சண்டையினால் நடந்த பெரும உயிரழப்பு இங்கு நடை பெறவில்லை. ஆனாலும்…!

அப்பொழுது ஹூக்கோவை போல குழந்தையாய் இருந்த எல்லா மத்த்தை சேர்ந்த குழந்தைகளும் தங்களுடைய தாத்தா பாட்டி, மாமா, சொந்தங்கள் அனைவரையும் விட்டு விலக வேண்டியதாயிற்று.

ஹூக்கோவிற்கு அவன் சிறு வயதாய் இருந்த பொழுது நடைபெற்ற ஞாபகங்கள் வர பதினெட்டு வயதான என்னை இப்பொழுது தாத்தா பார்த்தால் என்ன நினைப்பார்? ஒரு கனம் சிந்தித்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். ஒரு நாள் போய் அவர்களை பார்க்க வேண்டும். பெரு மூச்சுடன் மலைச்சரிவில் ஆட்டு குட்டிகளை அழைத்து கொண்டு இறங்கினான்.

ஹூக்கோவின் நண்பன் அகமதுவிடம் ஒரு நாள் நம்ம தாத்தா பாட்டி ஊருக்கு போய் பார்க்கலாமா? அகமது பயத்துடன் தலையாட்டினான், வேணாம், மிலிட்டரிக்காரன் சுட்டுடுவான், கண்களை விரித்து சொன்ன அகமதுவிடம் போடா நான் போய் பாக்கத்தான் போறேன், அப்ப எங்க தாத்தாவையும் பாத்துட்டு வா, சொன்ன அகமதுவின் கண்களில் தவிப்பு. இவன் மட்டும் போய் பார்த்து விட்டு வந்து விடுவானோ. அவன் அம்மாவும் அவனிடம் எச்சரித்திருந்தாள். அந்த பக்கம் போயிட்டா சுட்டு போடுவாங்க.

சிறு வயதில் சொன்ன வார்த்தைகள் அவர்கள் மனதில் பதிந்து விட இப்பொழுதும் அவர்கள் அதை நினைத்து பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஹூக்கோவின் மனசு பட படவென அடித்துக்கொள்கிறது. அணையின் அருகில் நின்று கொண்டிருந்தான். அணையின் வாயிலில் ஒரு காவல்காரன் நின்று கொண்டிருக்க, அவனை எப்படி ஏமாற்றி அணைமீது செல்வது?

அணையின் காவல்காரன், உள்ளே நிதானமாய் சாப்பிட்டு கொண்டிருப்பது தெரிந்தது. ஐந்து நிமிடம் கழித்து கை கழுவ அவனது அறையின் பின் புறமாக செல்ல சட்டென தடுப்பை தாண்டி உள்ளே நுழைந்து விட்டவன், சட்டென மனதிற்குள் கணக்கிட்டான், நூறு மீட்டர் தூரம் இருக்குமா இந்த அணை? அதை தாண்டி அந்தப்புறம் சென்று விட்டால் காடுகள்தான், அதற்குள் சென்று ஒளிந்து கொண்டு அப்படியே சிறிது தூரம் சென்றால் விட்டால் மலை சரிவுகள் ஆரம்பிக்கும் அங்கிருந்து தோட்டங்கள் ஆரம்பித்து விடும். சிறு வயதில் தான் அம்மா, அப்பாவுடன் சென்றிருந்த பாதையை ஞாபகம் வைத்துக்கொண்டு சிட்டாய் ஓட ஆரம்பித்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது, அடக்கடவுளே அணையின் மறுபுறம் இராணுவ வீரர்கள் நின்று கொண்டிருப்பார்களே? அதை எப்படி மறந்து போனோம்.

இப்பொழுது என்ன செய்வது? அந்த பக்கம் போனால் இராணுவ வீர்ர்கள், இந்த பக்கம் மறுபடி வந்தால் “அணையின் காவல்காரன்” அப்படியே பயந்து நடுங்கி அணையின் தண்ணீர் திறந்து விடும் கதவின் சுவரோரமாய் மறைந்து பயத்தில் வேர்த்து விறு விறுத்து உட்கார்ந்து கொண்டான்.

நல்ல வேளை அணை வளைவு வடிவில் இருந்ததால், இவனது உருவம் அந்த பக்கத்து இராணுவ வீர்ர்களுக்கு தென்படவில்லை. இருந்தாலும் எத்தனை நேரம் இப்படி இருக்க முடியும்? அவர்கள் பார்த்து விட்டால் சுட ஆரம்பித்து விடுவார்கள். நினைத்தவன் நடுங்கி வேர்த்து வழிய கண்களில் கண்ணீர் வழிய மறைந்து உட்கார்ந்தான்.

தட்..தட்..தட்..ஹூ சத்தம் இவன் காதுகளில் இடியாய் விழ இவன் அப்படியே மடங்கி அந்த மறைப்பு சுவரின் அடியில் படுத்தபடி ஒண்டினான்.

அவனருகில் அந்த கால் நின்றது. சுற்றி அந்தப்புறம், இந்தப்புறம் செல்வதும் இவன் கண்களுக்கு தெரிந்தது. இவனது இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கு கேட்டு விடுமோ என்று பயந்தான்.

ஹிந்தியில் ஏதோ பாடிக்கொண்டே அந்த கால்கள் அங்கும் இங்கும் நடக்க இவன் அந்த இடுக்கு சுவரடியில் சுருண்டு படுத்துக்கொண்டு அந்த கால்களை பார்த்து கொண்டிருந்தான்.

பாட்டுக்கிடையே அவனது குரல் வசனமாய் கேட்க இவன் காதுகளில் விழுந்தது. தம்பி அப்படியே எழுந்து என் பின்னால் நில்..இராணுவ வீரர்கள் அந்த பக்கம் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள் சீக்கிரம்…இவனுக்கு நன்றாக கேட்டது அவன் சொன்னது,

என்ன செய்வது? யோசித்தான், அவன் இப்பொழுது இன்னும் உரக்க பாடினான், சீக்கிரம், சீக்கிரம்.

ஹூக்கா சட்டென எழுந்தான், அப்படியே அவன் பின்னால் ஒண்டிக்கொள்ளவும் நடந்து வந்த இரண்டு இராணுவ வீர்ர்களின் பார்வை இவர்கள் மேல் விழவும் சரியாக இருந்தது.

அங்கிருந்தே இராணுவ வீரன் இவனிடம் கேட்டான், ‘யார் ஹமத் அவன்?’, ‘என்னோட அக்கா பையன், டேமை சுத்தி பார்க்க கூட்டிட்டு வந்திருக்கேன்’, ‘பார்த்துட்டியா பையா? இதுதான் தண்ணீர் திறக்கும் கேட், இதை நாங்கள் இப்படித்தான் திறப்போம்’. ஹூக்கோவுக்கு சொல்லி கொடுப்பது போல் சொன்னான்.

இராணுவ வீரன், ‘போதும், அவனை கூட்டிட்டு போ, இந்த மாதிரி யாரையும் கூட்டிட்டு வரக்கூடாது, புரியுதா?’ கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

ஹூக்கோ அவர் பின்னால் ஆட்டுக்குட்டியை போல் நடந்து சென்றான். அணையின் எல்லையில் இருந்த பாதுகாவல் அறைக்கு கூட்டி வந்தவர், சீக்கிரம் போயிடு, உன்னைய உள்ளே நுழையறப்பவே பார்த்துட்டேன், உன்னை கூப்பிட்டு சொன்னா அந்த மிலிட்டரிகாரங்களுக்கு சந்தேகம் வரும், அங்கிருந்தே உன்னை சுட்டாலும் சுட்டுடுவாங்க, அதனாலதான் மெதுவா பின்னால வந்தேன். அதனால உன்னை காப்பாத்த முடிஞ்சுது. இல்லையின்னா உன்னை கூட்டிட்டு போய்…அப்பப்பா. பயங்கரம். நல்ல வேளை இன்னைக்கு நான் மட்டும்தான் இங்க டூட்டி பார்க்கறேன். இன்னொருத்தர் வரலை, அவர் வந்திருந்தார்னா உன்னை அவங்க கிட்டே கொண்டு போய் கொடுத்திருப்பாரு.

ஹூக்கா நன்றியுடன் அவரை பார்க்க உங்க அப்பா, அம்மா எல்லாம் செளக்கியமா? அங்க இருக்கற எல்லாரும் நல்லாயிருக்காங்களா? அன்புடன் கேட்டார். இவன் வியப்புடன் பார்க்க என்ன பார்க்கறே? நான் உன் உறவுக்காரந்தான், ஆனா பக்கத்து நாட்டுக்காரன். சொன்னவர் திரும்ப அவரது அறைக்குள் சென்று விட்டார்.

ஹூக்கோ அந்த இடத்தை விட்டு அம்மாவை பார்க்க ஓட்டமாய் ஓடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *