கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,149 
 
 

எழுதியவர்: ஆஷாபூர்ணா தேவி

எல்லாரும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டார்கள்.

கடைசியில் சதிநாத் தாமே இரண்டாம் மாடிக்கு ஏறி வந்து கடுமையான குரலில் சொன்னார், “சவி! அநாகரீகத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, எல்லை இருக்கணும்! ஆனா விருந்தாளிகள் கூடியிருக்கிற இந்தக் கல்யாண வீட்டிலே நீ செஞ்ச அநாகரீகத் துக்கு எல்லையில்லே! இவ்வளவு உறவுக்காரங்களுக்கு முன்னாலே என் கௌரவத்தை மண்ணாக்கினே, நீயும் கேலிக்கு ஆளாகிக் கிட்டே! இப்பவாவது தயவ செஞ்சு வா!”

வீட்டுக்கு இரண்டாம் மாடி கட்ட அனுமதி கிடைக்க வில்லை. இருந்தாலும் இரண்டாம் மாடியில் சவிக்காகச் சீமை ஓடு வேய்ந்த ஓர் அறை கட்டப்பட்டிருந்தது. அறைக்குள் அப்போது விளக்கு எரியவில்லை. கீழே பந்தலில் எரிந்து கொண்டிருந்த எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சம் மட்டும் ஓரளவு அந்த அறை வாசலில் பிரதிபலித்தது.

ஒருக்களித்திருந்த அறைக்கதவில் கைவைத்து நின்று கொண் டிருந்தாள் சவி. அந்தக் கைவிரல்களும் அவளது கன்னத்தின் ஒரு பக்கமும்தான் கண்ணிற்குத் தெரிந்தன. இதன் மூலம் அவர்களுடைய முகபாவத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

ஆகையால் அவள் முன்போலவே விறைப்பாக இருக்கிறாளா அல்லது இளகி வருகிறாளா என்பதும் புரியவில்லை.

சதிநாத் வந்து கூப்பிட்டபிறகும் அவள் பிடிவாதமா யிருந்தால் அவளும் அவளுடைய கணவன் மாதிரி பெத்தியந்தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சவியிடம் மாறுதல் எதுவம் தெரியவில்லை. சவி ஒரு விசித்திரமான, வறண்ட குரலில் சொன்னாள், “அண்ணா, நீ எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு ஏறிவந்தே? நான் தான் சொல்லிட்டேனே..”

“ஆமா தெரியும்..” கசப்பும் கோபமும் கலந்த குரலில் சொன்னார் சதிநாத். “வீட்டிலே இருக்கறவங்க எல்லாரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உன்னை சமாதானப்படுத்த வந்தாங்க, நீ ‘கீழே எறங்க மாட்டேன், சாப்பிட மாட்டேன்’னு சொல்லி எல்லாரையும் வெரட்டிட்டேன்னு தெரியும் எனக்கு. உன் அண்ணி வந்து கைகூப்பிக் கும்பிடும் நீ அசைஞ்சு குடுக்கலே..”

சவியின் முகத்தை இப்போதும் பார்க்க முடியவில்லை. அவள் அந்த அறையை விட்டுச் சற்று வெளியே வந்தால் அவளுடைய முகத்தைப் பார்க்கலாம். ஆனால் வெளியே வர வில்லையே அவள்! யாரோ அறை வாசலில் ஒரு கோடு போட்டு அதை அவள் தாண்டக்கூடாதென்று ஆணையிட் டிருந்தாற்போல் அவள் அறைக்குள்ளேயே நின்றிருந்தாள்.

ஆனால் கதவை ஒரேயடியாகச் சாத்திவிட்டுப் படுக்கையில் போய் விழவும் வழியில்லை அவளுக்கு. சாயங்காலத்திலிருந்து ஒருவர் மாற்றி ஒருவர் அவளை அழைக்க வந்து கொண்டே யிருக்கிறார்கள்.

“சவி! ஐநூறு பேர் வந்திருக்காங்க கீழே.. எவ்வளவு பேர் ‘சவி எங்கே? சவி எங்கே’ன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க! வாயேன் ஒரு தடவை…! சவி! உன் அண்ணாவுக்க எவ்வளவு அழகான மாப்பிள்ளை கிடைச்சிருக்கான், வந்து பாரேன்…! அத்தை! கன்யாதானம் நடக்கற எடத்திலே நீ ஏதோ செய்யாமே வந்துட்டியாமே, அப்பா கோவிச்சுக்கறார், சீக்கிரம் வாயேன்…!”

ஆனால் சவி அசையவில்லை, அவளுடைய கோபம் குறைய வில்லை. “எனக்குத் தலை வலிக்குது” என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறாள் அவள்.

இவ்வளவு நாள் இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் சவிதான் கவனித்து வந்திருக்கிறாள். அன்று பகலில் சமையலறை, உக்கிராணம், சாப்பாட்டுக் கூடம், பூஜையறை என்று சக்கரம் மாதிரி சுழன்றிருக்கிறாள் … மாலை நேரத்தில் தற்செயலாக அந்த நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு சவி கோபத்தில் தன் அறையில் போய்ப் படுத்துக்கொண்டுவிட்டாள் என்பதை யாரும் கவனிக்கவில்லை. கன்யாதானத்தின்போதுதான் அவளைத் தேடத் தொடங் கினார்கள்.

“சவி எங்கே.? எங்கே சவி?”

முடிச்சுப் போடறதுக்கு வேண்டிய மஞ்சள் சோழியைச் சவி எங்கே வச்சிருக்கா…? மணப்பெண்ணோட பட்டுப் புடவை எங்கே?”

இந்தப் பருளெல்லாம் பக்கத்திலேதானிருந்தது, கிடைச் சுட்டது. இருந்தாலும் அதையெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டுத் தேவைப்படறபோது கொடுக்க ஆளில்லாட்டி அசௌகரியந்தானே! மஞ்சள் சோழி, பட்டுப்புடவை மட்டுமில்லே, சடங்குக்குத் தேவையான ஒவ்வொரு சாமானும் சவியோட பொறுப்பிலே தானிருந்தது! கலியாணப் பொண்ணோட அம்மா எந்தப் பக்கந் தான் சமாளிப்பா? விருந்தாளிகளைக் கவனிக்க வேண்டாமா அவ?

இதெல்லாம் தெரிஞ்சும் ரொம்ப முக்கியமான நேரத்திலே ஒளிஞ்சுக்கிட்டாளே இந்த சவி! சீ.. சீ.! அதட்டப்பட்ட புருசனை சாதானப்படுத்தப் போயிருக்கா, வேறென்ன! அதுக்கு இதுதானா நேரம்? பைத்தியக்கார மனுசன், மறுபடி ஒண்ணு கெடக்க ஒண்ண செஞ்சுடுவான். தூக்க மருந்து கொடுத்து அவனைத் தூங்க வச்சுட்டுக் கீழே வர வேண்டியதுதானே! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மணையிலே ஒக்காந்தப்பறம் விருந்துச் சாப்பாட்டை மேலே எடுத்துக்கிட்டுப் போய்ப் புருசனை எழுப்பி அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொஞ்சட்டுமே! அப்படிச் செய்யாம இதென்ன ..! இந்த ஆகாத்தியத்தைப் பொறுத்துக்க முடியாது!

வீடு நிறைய ஜனங்க. அவங்களுக்கு முன்னாலே நீ கோவிச்சுக் கிட்டு ஆம்படையானோடே ஒன் ரூமிலே போய் உக்காந்துகிட்டு, ‘அவரும் சாப்பிட மாட்டார், நானும் சாப்பிட மாட்டேன்’னு சொல்லிக்கிட்டிருக்கியே! சீ..சீ..! இவ்வளவு லட்சணமா மாப்பிள்ளை வந்திருக்கான், அண்ணாவோட பலநாள் ஆசை நிறைவேறியிருக்கு, கல்யாணச் சடங்கு ஒண்ணையும் வந்து பார்க்கலியே நீ! சாப்பிடறதிலே கூடப் பிடிவாதம் பிடிக்கிறியே! இந்த கல்யாணக் கொண்டாட்டம், பிரமாதமான சமையல், பலவகைக் கறி, இனிப்பு இது ஒண்ணையும் நீங்க ரெண்டுபேரும் தொடக்கூட மாட்டீங்களா? பட்டினி கிடப்பீங்களா? இதனாலே உன் மருமகளுக்குக் கெடுதல்ங்கறதைப் பார்க்க மாட்டியா? அண்ணா-அண்ணியைத் தலைகுனிய வப்பியா? நீசத்தனத்துக்கு ஒரு எல்லையில்லையா? அண்ணா, ஒன் அண்ணா, ஒன்னைவிட இருவது வயது பெரியவன். ஒனக்கு அப்பா மாதிரின்னுதான் சொல்லணும். அப்பா மாதிரிதான் ஒன்னை வளர்த்தான், கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். அதுக்கப்பறம் மாசம் முப்பது நாளும் வருசத்திலே பன்னெண்டு மாசமும் ஒன்னையும் ஒன் பைத்தியக்காரப் புருசனையும் வச்சுக் காப்பாத்தறான், ஒங்களுக்காகத் தனி அறை கட்டிக் கொடுத்திருக்கான்.. அந்த அண்ணா ஒம் புருசனை ஒரு அதட்டு அதட்டிட்டா, ஒரு தள்ளு தள்ளிட்டா அதுக்காக இப்படியா பண்ணுவே நீ? நன்றியே இல்லையா ஒன் ஒடம்புலே?

இவ்வளவு பெரிய நன்றிகெட்ட செய்கையைச் செய்துவிட்ட சவியைப் பார்க்க அவளுடைய அறைக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது. தேர்த் திருவிழாக் கூட்டம்.

சிலர் சவியிடம் அனுதாபம் காட்டுகிறார்கள் – ஒளிவு மறைவாகத்தான்!

காரணம், விருந்தாளியாக வந்துவிட்டு விருந்துக்கு அழைத்த வருக்கு எதிராகப் பேசுவதென்றால் ஒளிவ மறைவாகத்தானே முடியும். “பாவம், சவி!” என்று குசுகுசுக்க முடியும்.. “தங்கை புருசன் பைத்தியம், பாவம், அதனால்தான் அவன் அந்த மாதிரி நடந்துகிட்டான். நீ கெட்டிக்காரன், விஷயம் தெரிஞ்சவன், ஒன் பொண்ணுக்குக் கலியாணம் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நல்ல நேரத்திலே ஒன் தங்கை புருசனை இப்படித் தள்ளிவிட்டியே! ஒன் தங்கை வேற வழியில்லாம ஒன்னை அண்டியிருக் காங்கறதினாலேதானே நீ இப்படி செஞ்சுட்டே! தங்கை பணக் காரியாயிருந்தா இந்த மாதிரி நடந்துக்கிட்டிருப்பியா?”

வேடிக்கை என்னவென்றால், மேலே நின்றுகொண்டு சவிக்கு அதரவாகக் குசுகுசுத்தவர்கள் கீழே இறங்கி வந்ததும் சவியைக் கண்டித்துப் பேசினார்கள்.

ஏன் பேச மாட்டார்கள்?

அவர்கள் என்ன கிறிஸ்துவா, சைதன்யரா? அவர்களுக்கு கோபம் வராதா? அவர்களுடைய சவி அனுதாபத்தை நன்றியோடு ஏற்றுக்கொண்டு கண்ணீர் விடவில்லையென்றால், “நீங்க ஒண்ணும் பேசாதீங்க, எனக்கு ஒண்ணும் பிடிக்கலை, நீங்க கீழே போயிடுங்க!” என்று முகத்திலறைந்தாற்போல பேசிவிட்டால் அவர்களுக்கு அவள் மேல் எரிச்சல் வராதா?

சைதன்யருக்கும் கிறிஸ்துவுக்கும் கூட எரிச்சலேற்பட்டுவிடும்!

இதெல்லாம் மாலையில் நடந்த நிகழ்ச்சி. இரவு வெகு நேரமாகிவிட்டது. விருந்தாளிகள் சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் மட்டுந்தான் சாப்பிட வேண்டும். சதிநாத் தம் மாப்பிள்ளையின் அழகிலும் குணத்திலும் மயங்கிப் போய்விட்டார். தம் சாமர்த்தியத்தைப் பற்றி அபார பெருமை அவருக்கு. சட்டென்று ஏதோ நினைவு வந்தது அவருக்கு. “சதீஷ் சாப்பிட்டானா?” என்று கேட்டார்.

அன்று மாலையில் கல்யாணக் கூட்டத்துக்கு நடுவில் சதீஷ் ஒரு அழுக்குத் துணியில் லுச்சியையும், இனிப்புகளையும் குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்ததைப் பார்த்து எரிச்ச லடைந்து அவர் சதீஷைக் கழுத்தைப் பிடித்து சபையிலிருந்து வெளியேற்றியது இப்போது நினைவு வந்தது.

தாம் செய்தது சரியில்லைதான் என்பதை உள்ளூர உணர்ந்தார் அவர். இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே!

அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டார் வந்து சபையில் அமர்ந்திருந்தார்கள். கன்யாதானம் செய்ய வேண்டியிருந்ததால் அவர் உபவாசமிருந்தார்; அலுப்பும் கவலையும் அவரை சஞ்சலப் படுத்திக் கொண்டிருந்தன; இந்தச் சமயத்தில் சதீஷின் இந்த அசிங்கமான நடத்தையைப் பொறுத்துக் கொள்வது எளிதா?

அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவரால் விரட்டிவிடப்பட்டதை இவ்வளவு பெரிய அவமானமாக அந்தப் பைத்தியக்காரன் எடுத்துக் கொள்வான் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.. அவன் மறுபடியும் சமையல் காரர்களிடம் போய் உட்கார்ந்து கொள்வான் என்றுதான் அவர் நினைத்திருந்தார். சவி அங்கே இல்லாததைக் கவனித்த பிறகுதான் அவருக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. சவி இல்லாததால் அசௌகரியப்பட்டது அவர் மட்டுமல்ல. அவள் இல்லாததால் கல்யாண நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குழப்பம். எங்கே பார்த்தாலும் “சவி..! சவி எங்கே?” என்று கூப்பாடு.

அப்புறம் அவருடைய பெரிய மைத்துனிதான் அவரிடம் விஷயத்தைச் சொன்னாள், “எனக்கொண்ணும் தெரியாதுப்பா! நீ ஒன் தங்க புருசனை ஏதோ சொல்லிட்டியாம், கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினியாம்.. அதனாலே ஒன் தங்கை கோவிச் சுக்கிட்டுப் புருசனோட தன் ரூமிலேபோய் ஒக்காந்துக் கிட்டிருக்கா. அப்பறம் கீழே எறங்கி வரவேயில்ல. ஒன் தங்கை புருசன் பட்சணம் பண்றவங்ககிட்டேயிருந்து ஒரு பொட்டலம் பட்சணம் வாங்கிட்டு வந்திருந்தாராம். அதெல்லாம் முத்தத்தில படியிலே இறைஞ்சி கிடக்கு. கோவத்திலே தூக்கியெறிஞ்சிட்டார் போலிருக்கு..! அவர்தான் பைத்தியம், ஒன் தங்கச்சி பைத்தியம் இல்லியே?”

இதைக் கேட்டபோது சதிநாத் அடைந்த கோபத்துக்கு அளவில்லை. ஆனால் அப்போது அவர் கன்யாதானம் செய்ய மனையில் உட்கார வேண்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.

இப்போது அவர் சந்தோஷமாயிருந்தார். ஆகையால் “சதீஷ் சாப்பிட்டானா?” என்று கேட்கும் மனநிலை பிறந்திருந்தது.

மாலையிலிருந்து இதுவரை குறைந்தது ஐம்பதுபேர் சவியிடம் போய் அவளைக் கீழே இறங்கி வந்து மற்றவர்களுடன் உட்காரும் படி, கல்யாணத்தைப் பார்க்கும்படி, பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கு அவள் அசைந்து கொடுக்கவில்லை. கீழேயே இறங்கி வரவில்லை.

இந்தச் செய்தியைத் தம் மனைவி சொல்லக் கேட்டபிறகும் அவர் சுமுகமாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாமா?

அவர் வேகமாக எழுந்து சவியின் அறைக்குப் போனார். “நான் கைகூப்பிக் கேட்டுக்கறேன், எங்களோட சாப்பிடவா!” என்று அவளிடம் சொன்னார்.

சவியின் குரலில் சிறிது நடுக்கமா?

அல்லது அது சதிநாத்தின் பிரமைதானா?

பிரமையாகத்தானிருக்கும். ஏனென்றால் சவியின் குரல் தெளிவாகத்தானிருந்தது. “இப்படியெல்லாம் ஏன் சொல்றே அண்ணா? என்னாலே சாப்பிட முடியாது. ஒரே தலைவலி எனக்கு?

சதீஷ் பட்சணம் சாப்பிட உட்கார்ந்த காட்சி இப்போது சதிநாத்துக்கு நினைவு வந்தது. தாம் சதீஷைத் திட்டியதும் ஞாபகம் வந்தது.

பைத்தியமாயிருந்தாலும் அவன் சவியின் கணவனல்லவா!

அவர் இதமான குரலில், “ஒன்னாலே சாப்பிட முடி யாட்டியும் ஒரு தடவை வந்து ஒக்காரேன்..! நான் சதீஷோட சாப்பாட்டை மேலே அனுப்பச் சொல்கிறேன். அவனக்குச் சாப்பாடு போட்டுட்டுக் கீழே வா!” என்று சொன்னார்.

சவி அதே வறண்ட குரலில், “அவர் சாப்பிடமாட்டார், அண்ணா!” என்றாள்.

மறுபடி பொறுமையிழந்தார் சதிநாத். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

“நன்றி கெட்டவங்க இப்படித்தான் இருப்பாங்க..!” என்று திட்டிக்கொண்டே அவர் கீழே இறங்கி வந்தார்.

அதே சமயத்தில் மேலே ஏறிவந்தான் அமல். அவன் தான் சாப்பாடு பரிமாறும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான். ஒரு பெண்ணின் அசட்டப் பிடிவாதத்தால், கடைசிப் பந்தி தாமதப் படுகிறது. மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது.

அமல் இவர்களுடைய உறவினன் அல்ல. அந்தத் தெருவாசி, அவ்வளவுதான். அவன் இவ்வளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அப்படியும் ஏற்றுக் கொண்டிருந்தான். அது அவன் சுபாவம். ஆனால் ராத்திரி இன்னும் நேரமானால் அவன் வீட்டில் திட்டமாட்டார்களா? அவன் மாடிப்படியில் சதிநாத்தோடு மோதிக்கொள்ள இருந்தான்.

சதிநாத் அவனைப் பார்த்துக் கேலியாகக் கேட்டார், “நீ ஒருத்தன் பாக்கி இருந்தியாக்கும்!” பிறகு கீழே இறங்கிப் போய் விட்டார்.

அமல் அதே தெருவில் வசிப்பவன். அவர்களோடு வெகு காலமாகப் பழகுபவன். ஆகையால் அவன் சவியைச் சமாதானம் செய்யப் போவதில் அவருக்கு வியப்பு ஏற்படவில்லை. ஆனால் அதனால் பலனேற்படுமென்றும் அவர் நம்பவில்லை.

அமலுக்கும் நம்பிக்கையில்லைதான். நடந்த நிகழ்ச்சி, பேசப் பட்ட பேச்சுக்கள் எல்லாமே அவனுக்குத் தெரியும்.

இருந்தாலும் அவனுக்குத் தன்னம்பிக்கை இருந்தது. மேலும் சவியை ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற ஆவல் – இவ்வளவு பிடிவாதம் செய்யும்போது சவி எப்படித் தோற்றமளிக்கிறாள் என்று பார்க்க விரும்பினான் அவன். சவி அப்போதுதான் அறைக்கதவை மூடிக் கொண்டிருந்தாள். இப்போதாவது கொஞ்சம் படுத்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத் திருக்கலாம்.

அமலைக் கண்டதும் அப்படியே நின்றாள். கதவு பாதி மூடியபடியே இருந்தது.

சட்டென்று ஒரு நெருப்புக் குச்சி கிழித்து அவளுடைய முகத்தைப் பார்க்கலாமா என்று தோன்றியது அமலுக்கு. ஆனால் அவன் நெருப்புக் குச்சி கிழிக்கவில்லை. “வௌக்கை ஏத்தேன்!” என்று சொன்னான்.

“என்னத்துக்கு?”

“அவசியமில்லேதான்.. இருந்தாலும் இருட்டிலே ஒன்னைப் பார்த்தா பூதம் மாதிரி, ஆவி மாதிரி இருக்கு அதனாலேதான்..”

சவி அவனை எதிர்த்துப் பேசவில்லை, சற்றும் சஞ்சலப் படவில்லை. சிறு வயது நினைவுகளுக்கு மதிப்பளித்து அவனுடைய வேடிக்கைப் பேச்சுக்குச் சிரிக்கவுமில்லை. அவள் அந்த நிழலிருட்டில் சித்திரம்போல் அசையாமல் நின்றாள்.

சவி பாதி மூடியிருந்த கதவின்மேல் சாய்ந்து கொண்டிருந்த தால் அமலால் அறைக்குள்ளே பார்க்க முடியவில்லை. “சதீஷ் பாபு தூங்கறாரா?” என்று கேட்டான். சவி காரணமின்றி மெல்லச் சிரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. “ஆமா” என்று அவள் சொன்னாள்.

“சதிநாத் அண்ணா அவரை ‘ஏதோ’ செஞ்சுட்டார்னு கேள்விப்படடேன்… என்ன இருந்தாலும் நீ அதுக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டாம்! ஒன் பிடிவாதத்தைப் பார்த்து எனக்கு வெக்கமாயிருக்கு…”

சவி சிரித்தே விட்டாள் இப்போது.

உண்மையிலேயே சவியைப் பார்த்தால் ஒரு பூதம் மாதிரி, ஒரு ஆவி மாதிரித் தானிருக்கிறது. அவளுடைய சிரிப்பு இயற்கையான மனிதச் சிரிப்பு அல்ல, ஆவியின் சிரிப்பு. “நான் வெக்கங்கெட்டுப் போனதுக்கு நீ ஏன் வெக்கப்படறே?”

இப்போது நெருப்புக் குச்சி கிழித்துச் சவியின் முகத்தைப் பார்க்கத்தான் வேண்டுமென்று தோன்றியது அமலுக்கு. வெட்கத்தைத் துறந்ததோடு கொடூரமான சவியின் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்!

ஆனால் இருட்டில் அவளது முகத்தைப் பார்க்க முடிய வில்லை. சவியின் அண்ணன் ஏமாந்துபோய் அவளை ஒர பைத்தியக்காரனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டார். இருந்தாலும் சவி ஒருநாளும் தன் அண்ணனைக் கறை கூறிய தில்லை. சவியின் மைத்துனர் அவளையும் அவள் கணவனையும் அவளுடைய அண்ணனிடம் விரட்டியனுப்பியதற்காக மைத்துன ரையும் திட்டியதில்லை அவள்.

சவி சதீஷின் பயங்கொள்ளித்தனத்துக்காக அவனை ஏச வில்லை. அவள் இதுகாறும் இயல்பாகவே தன் காரியங்களைச் செய்து வந்தாள். கமரிப் பெண்ணாயிருந்தபோது இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று உழைத்தாற்போல் இப்போதும் உழைத்த வருகிறாள். இப்போது அவளுக்கு ஒரு அதிகப்படியான பொறுப்பு – தன் பைத்தியக்காரக் கணவனைக் கவனித்துக் கொள்வது.

இவ்வளவு பொறுப்பையும் ஒரு விளையாட்டுப்போல் அனாயாசமாகச் சுமந்து வந்திருக்கிறாள் சவி. அமலுக்குத் தெரியாதா? அவன்தான் இங்கு அடிக்கடி வருபவனாயிற்றே!

சதீஷை வெகுநேரம் காணாவிட்டால் சவி கவலைப் படுவாள்! அதுகூட வேடிக்கையாகத்தான். யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து, “ரொம்ப நேரமா என் பொக்கிஷத்தைப் பார்க்கவேயில்லையே1 திடீர்னு சன்னியாசம் வாங்கிக்கிட்டுப் போயிட்டாரான்னு பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டுப் போவாள்.. “மணி என்ன ஆச்சு? அடே, இவ்வளவு நேரமாச்சா? என் நாதர் தானே சமையலறைக்குப் போய்ப் பாத்திரத்தை உருட்டறாரான்னு போய்ப் பார்க்கறேன்” என்பாள்.. திடீர்னு மூஞ்சியை ‘உர்’ருனு வச்சுக்கிட்டுப் போயிட்டார் என் பிராணநாதர்! நாம சந்தோஷமாப் பேசிக்கிட்டு இருக்கறது அவருக்குப் பிடிக்கலே.. நான் போய் அவரை சமாதானப்படுத்தறேன். இல்லாட்டி மகாகோபம் வந்துடும் அவருக்கு” என்று சொல்வாள்.

பைத்தியக்காரக் கணவனின் நடத்தையை யாராவது கேலி செய்தாலோ அல்லது குறை கூறினாலோ சவி கோபித்துக் கொண்டதில்லை. அவளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, “சொல்லுங்க! நீங்களும் சொல்லுங்க! என் வேலை கொஞ்சம் குறையட்டும். மாப்பிள்ளையாச்சேன்னு மரியாதை கொடுக்காம ரெண்ட அடி கொடுத்தால் பிரயோசனமாயிருக்கும்” என்று சிரித்தவாறு சொன்னாள்.

ஆனால் இன்று அவர் உண்மையிலேயே அவமானப் படுத்தப்பட்டபோது அவள் முற்றிலும் மாறிப்போய் இவ்வளவு கோபித்துக் கொள்கிறாளே!

அப்படியானால் சதிநாத்தின் மனைவி சொல்வதுதான் உண்மையாயிருக்குமோ…! பொறாமையாத்தான் சவி ஒரு அற்ப விஷயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாளோ? அண்ணா பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணமாகிவிட்டது, அழகான மாப்பிள்ளை கிடைத்தவிட்டான் என்று சவிக்கு வயிறு எரிகிறதோ?

சவியைப்பற்றி இப்படி நினைக்கக் கூடாதுதான். ஆனால் அவள் தானே தன் நடத்தையால் இப்படி மற்றவர்களை நினைக்கச் செய்கிறாள்! அவளது அசட்டுத்தனமான நடத்தை அப்படித்தானே நினைக்கச் செய்கிறது!

பொறாமைதான்..! இல்லாவிட்டால் என்றுதான் அவள் தன் கணவனிடம் இவ்வளவு பக்தியைக் காட்டியிருக்கிறாள்? அவளுடைய அண்ணியே எவ்வளவு தடவை, “புருஷன் பைத்தியமாயிருக்கிறானேன்னு கொஞ்சங்கூடக் கவலையில்லே சவிக்கு கல் நெஞ்சக்காரி!” என்று சொல்லி வியந்திருக்கிறாள்.

ஆகையால் சவியின் கல்நெஞ்சும் பொறாமையால்தான் பாளம் பாளமாக உடைந்து போயிருக்க வேண்டும்!

அமல் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. “சவி என்ன இருந்தாலும் நீ ரொம்பக் கல் நெஞ்சுக்காரி!” என்று மட்டும் சொன்னான்.

“இன்னிக்குத்தான் தெரிஞ்சுதா?” சவி கேட்டாள், “ஏன் நீயும் வந்துட்டே? சாப்பிடக் கூப்பிடவா?”

அமல் வருத்தத்துடன் சவியை நன்றாகப் பார்க்க முயற் சித்தான். பிறகு சொன்னான், “இல்லே, ஒன்னைக் கூப்பிடற துணிச்சல் எனக்கு இல்லே. அண்ணாவைத் தண்டிக்கறதுக்காக சதீஷ் பாபுவைச் சாப்பிடவிடாமே நிறுத்தி வச்சிருக்கியேன்னு நினைச்சேன். சதீஷ் பாபு பாவம், அவரைப்போய் அடக்கி வைக்கிறே…’அமல் நீ எனக்குச் சாப்பாடு பரிமாறணும். இவங்க என்னை நல்லாக் கவனிச்சுக்க மாட்டாங்க!’ன்னு என்கிட்டே ரொம்ப ஆசையாச் சொல்லியிருந்தார்…”

சொல்லிவிட்டுச் சற்றுச் சிரித்துக்கொண்டான் அமல், காரணம், சதீஷ்பாபு அவனுடன் பேசும்போது ‘இவங்க’ என்று சொல்லவில்லை, ‘இந்த ராஸ்கல்கள்’ என்று குறிப்பிட்டான்.

இவ்வளவு நேரம் பட்டினி கிடந்ததால் சவியின் தொண்டை உலர்ந்துபோய் விட்தூ? அல்லது அவள் தன் அசட்டுத்தனத் துக்காக வருத்தப்படுகிறாளா..? அவளுடைய குரல் இனிமையா யிருக்குமே, என் இப்படி ஆகிவிட்டது!

அந்த வறண்ட குரலிலேயே சொன்னாள் சவி, “அவர்தான் நீ பரிமார்ற வரைக்கும் பொறுக்கலியே, தானே கொண்டுவந்து வச்சிக்கிட்டு…”

“அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். சவி…நீ சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாட்டாலும் சரி, ஆனா அவரை மட்டும் எழுப்பிவிடு. நான் அவருக்கு சாப்பாடுபோட்டு என் வார்த்தையைக் காப்பாத் திக்கறேன்.”

சவி அமலுடன் தான் கழித்த சிறு பிராயத்தின் நினைவு களுக்கும் மரியாதை கொடுக்கவில்லை. “அவர் சாப்பிட மாட்டார்!” என்று உறுதியான குரலில் சொன்னாள்.

“சவி, நீ அளவுக்கு மிஞ்சி அநாகரீகமா நடந்துக்கறே- எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கணும்..! இன்னிக்குக் கோவிச்சுக்கிட்டு அவரைப் பட்டினி போடறே, நாளைக்குச் சாப்பாடு போடத்தானே வேணும்? அப்போ..?”

இந்த தடவை உரக்கவே சிரித்து விட்டாள் சவி. “அமல், அவர் நாளைக்கும் சாப்பிடமாட்டார், நாளன்னிக்கும் சாப்பிட மாட்டார். ஒருநாளும் சாப்பிட மாட்டார்!” என்றாள்.

சவி சாதாரணக் கோபத்தில் பேசிய இந்தப் பேச்சில் அமலுக்கு ஏனிந்த பயம்? சவியின் சிரிப்பைக் கேட்டு அவள் ஒரு பூதந்தான் என்று நினைத்து விட்டானோ?

அவன் “சவி” என்று வேதனையோடு கத்தினான். சவி பதில் சொல்ல வில்லை, அசையவும் இல்லை.

சவியின் இந்த நிலையைக் கண்டு அவன் தான் வெகு காலமாக மறந்துவிட்டிருந்த ஒரு பழையா அசட்டுத் தனத்தைச் செய்து விட்டான். அவன் அவளை நெருங்கி அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “சவி, விளக்கு ஏத்து!” என்று சொன்னான்.

சவி மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு “என்ன பண்ணப் போறே?” என்று கேட்டாள்.

“நான் அவரைப் பார்க்கணும்!”

“பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே”

“நீதான் எப்போதும் சரின்னு நினைச்சுக்காதே சவி! கதவை விட்டு நகர்ந்துக்க! நான் பார்க்கறேன்.”

ஆனால் சவி நகரவில்லை. “நெசமாகவே பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே” என்று சொல்லிவிட்டாள்.”

அமலும் ஓர் ஆவியாகிவிட்டானா? அவனைப் பார்த்தால் பூதம் மாதிரி இருக்கிறதே!

அவன் இவ்வளவு நேரமாகக் கீழே திரும்பி வராதது கண்டு மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவில்லையே அவன்! அவர்களிருவருடைய பழைய வரலாற்றை மற்றவர்கள் மறந்திருப்பார்களா?

கீழேயும் ஓர் உலகம் இருக்கிறது என்ற விஷயம் வெகு நேரங்கழித்துத்தான் நினைவு வந்தது அமலுக்கு. அவன் திரும்ப வேண்டும்.

“சவி, நீ என்ன கல்லா?”

“இருக்கலாம்”

“சவி, நான் கீழேபோய் அவங்ககிட்ட என்ன சொல்லுவேன்?”

“ஒண்ணும் சொல்ல வேண்டாம், அமல்! ஒன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மண வறைக்குப் போயிருக்காங்க. அவங்களோட இந்த இரவை நாசமாக்கிடாதே!”

“சவி, ஒன்னாலே எப்படி இவ்வளவு கொடூரமா இருக்க முடியுது?”

“முடியத்தான் வேணும், அமல்! எல்லைக்கோட்டை நான் மறக்க முடியுமா? அவங்களோட இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில நான் என்னோட..”

“ராத்திரி பூரா இப்படியே இருக்கப் போறியா?”

“இல்லே, படுத்துக்கப் போறேன். ரொம்பத் தூக்கம் வருது.. கீழே விழுந்துடுவேன் போலேயிருக்கு..”

சவி சற்றும் நாகரீகமின்றி அமலுக்கு முன்னாலேயே கதவைச் சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டக் கொண்டாள்.

ஆம், கதவை மூடிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை சவியால். சதிநாத் கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. “எல்லாத் துக்கும் ஓர் அளவு உண்டு, இருக்கணும்!”

இன்னும் சில மணி நேரம் இந்தக் குளிர்ச்சியான இருட்டில் அமிழ்ந்திருக்க முடிந்தால் அவள் தான் இழந்து போன பலத்தை மீண்டும் பெற முடியும். மறுநாள் காலையில் எழுந்திருந்து கீழே போய் இயற்கையான குரலில் சொல்ல மடியும் – “நேத்திக்குக் கல்யாண அமர்க்களத்திலே ஒங்களைத் தொந்தரவ பண்ணலே, ஆனா இனியும் சொல்லாமே இருக்க முடியாது..! மேலே வந்து பாருங்க..! இனிமே என்னென்ன சடங்குகள் செய்யணுமோ அவையெல்லாம் நீங்கதானே செய்யணும்..!”

ஆஷா பூர்ணா தேவி (1904)
மனித உள்ளத்தின் இரகசியங்களை வெளிக் கொணர்வதில் அரிய திறனுள்ளவர். மனித வாழ்க்கையிடம் எல்லையற்ற பரிவு கொண்டவர். எளிய, சாதாரண வாழ்க்கையில் திரைமறைவில் உறைந்துள்ள நுண்ணிய விசித்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அசாதாரணத் திறமை இவருக்கு உண்டு. வங்க சமூகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் திறம்படச் சித்தரித்துள்ளார். லீலா பரிசு, ரவீந்திரர் நினைவுப் பரிசு (1966) சரத் நினைவுப் பரிசு (1985) பெற்றவர். இவருடைய பல நூல்கள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.

– காஞ்ச் பூத்தி ஹீரே, 1967.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *