என் கடைசிக் கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,846 
 
 

என் அன்புள்ள காதம்பரி வாசகர்களுக்கு,

நலம்தானே ? கடந்த மூன்று வருடங்களாக நம் காதம்பரியில் அவ்வப்போது தரமான சிறுகதைகளை எழுதிவரும் திரு சபாபதி நடராஜனை, அவரது கதைகளின் வாயிலாக நாம் அறிவோம். அவர் எழுதிய புனிதம், மனிதத் தேனீ, தேடல் ஆகிய கதைகள் நம் காதம்பரியில் முத்திரைக் கதைகளாக வெளி வந்தன.

தற்போது அவர் நமக்கு ‘என் கடைசிக் கதை’ என்கிற தலைப்பில் ஒரு கதையை அனுப்பி, இதுதான் தனது கடைசிக் கதை எனவும், தாம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் எழுதியுள்ளார். கதையைப் படித்த நான் உடனே நமது ஆசிரியர் குழுவினைக் கூட்டி, கதையைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தேன். அவரது கதையை பிரசுரிப்பது என முடிவு செய்தோம். திரு சபாபதி நடராஜன் ஒரு நல்ல படைப்பாளி. அவர் சீக்கிரம் நலம் பெற நாம் பிரார்த்தனை செய்வோம்.

இனி அவரது கதையைப் படியுங்கள்.

அன்புடன்,
கே.ராம ரத்தினம்,
பொறுப்பாசிரியர்.

என் பெயர் சபாபதி நடராஜன். வயது 54. பெங்களூரில் ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் சீனியர் வைஸ்-பிரசிடெண்ட்.ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. காரணம் எனது அதீத கெட்ட பழக்கங்கள். இருபது வயதில் மதுவும், சிகரெட்டும் அறிமுகமாயின. ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட சகவாசங்களாலும், எதுவும் எளிதாகக் கிடைக்கும் பெங்களூர் வாசத்தாலும் – இங்குதான் ஒரே கடையில் மனைவி காய்கறியும், கணவன் மது பானங்களையும் வாங்க முடியும் – ஐ.டி கம்பெனிகளின் சுதந்திரமான, எதுவும் தவறில்லை என்கிற மனப் போக்கினாலும் அடிக்கடி குடித்தேன். பாக்கெட் பாக்கெட்டாக புகைத்தேன்.

முப்பது வயதில் திருமணம். என் மனைவி காயத்ரி என்னை அடிக்கடி கண்டித்தபோதும், நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்தான். தினமும் வீட்டிற்கு இரவில் லேட்டாக வருவேன். போர்டிகோவில் எனது காரை நிறுத்திவிட்டு உள்ளே வரும்போது. காயத்ரி என் அருகில் வந்து வாசனை பிடிப்பாள். முகம் சுளித்து கேள்விமேல் கேட்டு என்னிடம் சண்டை போடுவாள். என் ஒரே செல்ல மகன் முரளி என்னை
விரோதமாகப் பார்ப்பான். இதுவே தினசரி வாடிக்கையானது.

வாரத்தில் நான்கு நாட்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கம்பெனியில் மது பார்ட்டி இருக்கும். ஒரு நாள் ட்¡£ட் ஏதாவது அமையும். சனி, ஞாயிறுகளில் என் படுக்கையறையில் ஒளித்து வைத்திருக்கும் அயல் நாட்டு மது பானங்களில் மூழ்கிவிடுவேன். அலுவலக பார்ட்டியில் நன்றாக குடிப்போம், புகைப்போம். இதில் பெண்களும் அடக்கம். குடி போதையில் விவஸ்தையே இல்லாமல் அசிங்கமாக ஜோக் அடித்து பெரிதாக சிரித்துக்கொள்வோம்.

வருடங்கள் ஓடின…

பல பதவி உயர்வுகள் பெற்று, தற்போது ஒரு பொறுப்பான பதவிக்கு வந்த பிறகும் எனது கெட்ட பழக்கங்களை நான் குறைத்துக் கொள்ளவில்லை.இரண்டு மாதங்களுக்கு முந்தைய ஒரு வெள்ளிக் கிழமை. அன்றுதான் அலுவலகத்தில் எனக்கு கடைசி நாள் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. அன்று மாலை வார இறுதி சந்தோஷத்தில், ஒரு பத்து பேர் சேர்ந்து அருகிலுள்ள பப் சென்று பிக்சர் பிக்சராக குடித்தோம். புகை மண்டலத்தில் மிதந்தோம். பன்னிரண்டு மணிக்கு வெளியே வந்து பார்த்தால், கனத்த மழை. குடி போதையில் அனைவரும் மழையில் நனைந்தபடி அருகிலுள்ள பான் கடைக்குச் சென்று மிட்டா, ஜரிதா பான் போட்டோம்.

அன்று நான் வீட்டிற்கு வரும்போது மணி ஒன்று. கதவைத் திறந்த காயத்ரி, நான் குடித்திருப்பதையும், தொப்பலாக நனைந்திருப்பதையும் பார்த்து பெரிதாக என்னிடம் சண்டை போட்டாள். முரளி, தற்போது மெடிக்கல் இரண்டாம் ஆண்டு, தூக்கத்திலிருந்து எழுந்து, “அப்பா, இது உங்களுக்கே நன்றாக இருக்கா ?” என்று கோபப் பட்டான். என் காதில் எதுவும் ஏறவில்லை. முதல் மாடியில் உள்ள என் படுக்கையறைக்குச் சென்று கதவைச் சாத்தினேன்.

மறு நாள் சனிக்கிழமை காலை பத்து மணிக்கு எழுந்தபோது, என் தலை மிகவும் கனமாக இருந்தது. கண்கள் எரிச்சலாக இருந்தன. ஈர உடையுடன் படுக்கையில் தூங்கியதால் உடம்பெல்லாம் வலித்தது. வேறு உடைக்கு மாறியபின் மறுபடியும் தூங்கினேன். மதிய உணவின் போது காயத்ரியும், முரளியும் என்னிடம் எதுவும் பேசவில்லை. மூன்று மணிக்கு ஜுரம் அடித்தது. அடிக்கடி என் இடது தோள் பட்டையில் மின்சாரம் பாய்வதைப் போல் வலித்தது. உடம்பு வியர்த்தது.

காயத்ரியும், முரளியும் பதட்டமானார்கள். என்னை காரில் ஏற்றிக்கொண்டு விக்ரம் ஹாஸ்பிடலுக்கு சென்றனர். அங்கு எனக்கு நிமோனியா காய்ச்சல் என்று அட்மிட் செய்து விட்டார்கள். ஞாயிறு முழுவதும் அப்சர்வேஷனில் இருந்தேன். மறு நாள் ஈஸிஜி மற்றும் ரத்த பரிசோதனை செய்தார்கள்.

அடுத்த சில தினங்களில் எனக்கு ஆஞ்சியோ செய்தனர். நான் சற்று நிம்மதியடைந்தேன். ஏனெனில் ஆஞ்சியோவுக்குப் பிறகு, ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டோ அல்லது பை-பாஸ் சர்ஜரியோ செய்ய நேரிடும். இனி எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டு விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டேன். ஆனால் டாக்டர் மஞ்சுநாத் என் மனைவியிடம், எனக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பதாகவும், குடிப் பழக்கத்தினால் லிவர் சிரோசிஸ் ஏற்பட்டிருப்பதாகவும், புகையினால் நுரையீரல் மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதாகவும். தவிர என் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பை-பாஸ் சர்ஜரி செய்ய முடியாது எனவும் சொன்னபோது எனக்கு உலகமே இருண்டது. ‘பேஸ் மேக்கர்’ வைக்கக்கூட எனக்கு தகுதியில்லை என்றபோது நான் அதிர்ந்து போனேன். மாடிப்படி ஏறக்கூடாது, ரொம்பதூரம் நடக்கக் கூடாது, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்றபோது துடித்துப் போனேன்.

மறு நாள் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். எனினும் சிறிது நம்பிக்கையோடு போர்டிஸ், நராயண ஹிருதாலயா ஹாஸ்பிடல்களுக்குச் சென்றேன். அவர்களும் டாக்டர் மஞ்சுநாத் சொன்னதையே வழிமொழிந்ததோடு மட்டுமல்லாமல், நான் நிறைய பேசக் கூடாது என்றும் சேர்த்துக் கொண்டார்கள்.

கிழிந்த நாராய் வீட்டிற்கு விரக்தியுடன் வந்தேன். காயத்ரி என்னைக் கட்டிக் கொண்டு பெரிதாக அழுதாள். முரளி கலங்கி நின்றான்.

மாடியில் இருந்த என் பெட்ரூம் தரை தளத்திற்கு மாற்றப் பட்டது. சிறிது நடந்தாலும் மூச்சு வாங்கியது. டாய்லெட் செல்வதற்கு கூட, யாராவது என்னை கைத்தாங்கலாக மெதுவாக கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது. பத்து நாட்களில் மிகவும் மெலிந்து போனேன்.கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது கண்கள் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டி, உதடுகள் உலர்ந்து காணப்பட்டன. என்னையே எனக்குப் பிடிக்கவில்லை. வளப்பமாக இருந்த நான் வதங்கிப் போனேன்.

இரவுகளில் தூக்கம் வராது புரண்டேன். கிராண்ட் பாதர் கடிகாரம் அடித்த போது, அது பன்னிரண்டரையா, ஒன்றா அல்லது ஒன்றரையா என யோசித்தேன். பெரும்பாலான நேரங்களில் மூச்சு விட சிரமமாயிருந்தது. படுத்தால் மூச்சு விட முடியாது என்பதால், உட்கார்ந்தே தூங்க நேரிட்டது.

அடுத்த ஒரு மாதத்தில் எனக்கு மொபைல் அழைப்புகள் குறைந்தன. அலுவலகத்தில் மாற்றங்கள் எனக்கு தெரியாமலே நிகழ்ந்தன. என் இடத்தை திம்மையா சார்ஜ் எடுத்துக் கொண்டதாக கேள்விப் பட்டேன்.

உலகம் எப்போதும் போல் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் தான் தனித்து விடப் பட்டேன். என் பொருட்டு என் மனைவி காயத்ரிதான் மெனக்கிடுகிறாள். என்னுடைய நாட்கள் எண்ணப் படுகின்றன. அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிதிலும் அரிது என ஒளவையார் அன்றே சொன்னார். அப்பேற்பட்ட கிடைப்பதற்கு அரிதான பிறவியை நானே பாழ் படுத்திக் கொண்டேன். இது அறியாமை அல்ல. தெரிந்தே செய்த முட்டாள் தனம்.

இந்த உலகத்தின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து ஒரு டாக்டர், மீண்டும் எனக்கு புத்துயிர் கொடுத்து என்னை மீட்டால் – நான் காயத்ரியுடனும், முரளிடனும் அமைதியாக வாழ்வேன். ஒரு நல்ல கணவனாகவும், தந்தையாகவும் மாறுவேன். அவர்களுடன் என் பெரும்பான்மையான நேரங்களை செலவிடுவேன். முரளிக்கு திருமணம் செய்து வைத்து என் பேரன் பேத்திகளை கொஞ்சுவேன்.

ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால்தான் இது சாத்தியம். இனி முடியுமா? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய ஆசைப் படுகிறேன்.

காயத்ரியை நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. களையான அவளது முகத்தில் எப்போதும் பெரிய குங்குமமும், அதற்கு மேல் ஒரு தீற்றலான வீபூதியும் இருக்கும். இன்னும் சிறிது நாட்களில் நான் இறந்த பிறகு அவள் விதவையாகி விடுவாள். என் மகன் தன் தந்தையை இழந்து விடுவான்.

மாதம் எட்டு இலக்க சம்பளம், வங்கி நிறைய பணம், கிரானைட்டினால் கட்டப் பட்ட பெரிய வீடு, போர்டிகோவில் மூன்று பெரிய கார்கள், பெரிய கம்பெனிகளின் ஷேர்கள் எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம் ? ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்கு துப்பில்லை.

வாசகர்களே, என்னுடைய அசிங்கமான வாழ்க்கை உங்களுக்கு ஒரு பாடம். குடி, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை அண்ட விடாதீர்கள். இருப்பவர்கள் அதை உடனே விட்டொழியுங்கள். மது என்ற அரக்கனும், சிகரெட் என்ற பேயும் கடந்த முப்பது வருடங்களாக என்னுடன் குடித்தனம் நடத்தி, தற்போது என் உயிரையும் காவு கேட்கிறது. நம் உடம்பு மெல்லிய திசுக்களாலும், ரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் ஆனது. அதை கெட்ட பழக்கங்களினால் நிந்தனை செய்து சீரழித்து விடாதீர்கள்.

மரணம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. நிரந்தரமான உண்மை. எனினும் அதை நாமே முட்டாள்தனமாக நம் காசையும் நேரத்தையும் செலவழித்து சீக்கிரமே வரவழைத்துக் கொள்வது எவ்வளவு பெரிய கொடுமை?

உங்கள் அனைவரின் கால்களையும் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து குடி, சிகரெட்டை விட்டொழியுங்கள்.

வேதனையுடன் விடை பெறுகிறேன். எல்லாம் பகவத் சங்கல்பம். வணக்கம்.
சபாபதி நடராஜன்

இரண்டு மாதங்கள் கழித்து, காதம்பரி இதழில் :

என் அன்பான காதம்பரி வாசகர்களுக்கு,

‘என் கடைசிக் கதை’ எழுதிய திரு சபாபதி நடராஜன் தற்போது நம்மிடையே இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்குச் சென்ற நமது பெங்களூர் நிருபர் அவரது மரணத்தை நம்மிடம் சொன்னபோது, வேதனைதான் மிஞ்சியது.

ஒரு நல்ல படைப்பாளி தன்னுடைய கெட்ட பழக்கங்களினால் அகால மரணமடைந்தார். இது மிகவும் சோகமானது. குடி, சிகரெட் பழக்கமுள்ளவர்களுக்கு அவரது மரணம் ஒரு எச்சரிக்கை. எத்தனையோ இது போன்ற மரணங்கள் நம் நாட்டில் அன்றாடம் நிகழ்கின்றன. அது நமக்குத் தெரிய வருவதில்லை. ஆனால் திரு சபாபதி நடராஜன் தன் எழுத்தின் மூலம் அதை பதிவு செய்ததை நாம் காதம்பரியில் படிக்க நேர்ந்தது.

காதம்பரி வாசகர்களாகிய நம் அனைவருக்கும் சமூகக் கடமையும், அக்கறையும் இருக்கிறது. நம்மைச் சுற்றி எவரேனும் மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ பார்த்தால், அவர்களை நாம் திருத்த முடியுமேயானால், அதுவே மரித்துப்போன திரு சபாபதி நடராஜனுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

செய்வீர்களா ?

சோகமுடன்,
கே.ராம ரத்தினம்
பொறுப்பாசிரியர்

– மார்ச் 2016 இதழில் பிரசுரமான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *