இயக்குநரைப் பார்த்துக் கேட்டார் இசையமைப்பாளர் ராம், ‘’ஏன் சார், கண்டிப்பா ஒரு ரீமிக்ஸ் பாட்டு வேணுமா..?’’
‘’ஆமா..இப்ப ட்ரெண்ட் அதுதானே..? புரொடியூசரும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டாரே’’
‘சரி…போட்டாப் போச்சு’’ என்று வேண்டா வெறுப்பாக அந்தப் பாட்டை ரீ மிக்ஸ் செய்யத் துவங்கினான்.
‘’பழைய பாட்டும் இடையிடையே வர்ற மாதிரி பண்ணிடுங்க ராம்’’
‘’ஓ.கே’ என்று ரிக்கார்டிங்கில் இறங்கிய ராமுக்கு அந்தப் பாட்டு முடிய இரவு மணி ஒன்பதானது. பாட்டைக் கேட்ட டைரக்டரும், பிரமாதம் எனப் பாராட்டினார்.
ம்…புதுசா ஒரு பாட்டு போடுறதை விட்டுட்டு, பழைய பாட்டைப் போட்டு… மனம் சலித்தபடியே வீடு வந்து சேர்ந்த ராமை, அவன் மனைவி, ‘முதல்ல கை கழுவி விட்டு சாப்பிடுங்க’ என்றாள்.
‘என்ன டிபன் சரோஜா?’’
‘’காலையில் மீந்து போன இட்லியைப் பிச்சு உப்புமா பண்ணியிருக்கேன். இன்னைக்கு என்ன பாட்டு ரெக்காரடிங்?’’
‘’நீ பண்ணின அதே ரீமிக்ஸ்தான்’’ சிரித்தபடியே சாப்பிடத் துவங்கினான் ராம்.
– கா.பசும்பொன் இளங்கோ (2-1-2008)