என்ன அத்தாட்சி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 773 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தத் தட்டிக்குப் பின்னால் நின்றிருந்த உருவத்தைப் பார்த்தது முதல் ராமுவுக்கு மனது சமாதானமற்றுப் போயிற்று.

‘அந்தச் சனியனைப் பற்றி ஏன் நினைத்துச் சாகிறாய் ? அது ஒரு கழிசடை, எங்கோ கிராமத்திலிருந்து ஒரு நாடகக் காரனுடன் இங்கே ஓடிவந்தவன். சில மாதங்களுக்குள் அவன் இவளை இங்கே சந்தியில் நிறுத்திவிட்டுப் போய் விட்டான். திரும்பி ஊருக்குப் போகமுடியாமல் வேறு வழியின்றி இந்த மாதிரி ஆரம்பித்துவிட்டாள். பிராமணப் பெண்ணாம் யாரோ கூடச் சொன்னார்கள்’ என்று அவன் நண்பன் சொன்னதிலிருந்து அவன் கலக்கம் அதிகம்தான் ஆயிற்று.

தினமும் ராமுவும் மணியும் அந்தத் தெரு வழியாகத் தான் மாலையில் அரசலாற்றங்கரைக்குப் போவார்கள். போகும் போதெல்லாம் ராமு அந்த வீட்டை உற்று கவனிக்காமல் இருக்கமாட்டான்.

வீடு மேற்கு பார்த்தது. சிறிய பழைய வீடு. சுவர்களில் பூசியிருந்த காரைச் சுண்ணாம்பு பூராவும் உதிர்ந்துபோய் உப்பரித்த செங்கல்கள் தென்பட்டன. அந்தச் சுவரில் மங்கல நீலச் சாயம் சேர்ந்த சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு திண்ணைகளுக்கும் நடுவில் படியேறினதும் ஒரு பச்சை வர்ண மூங்கில் தட்டி கட்டியிருந்தது.

தட்டிக்குப் பின்னால்தான் அவள் நாள் தவறாமல் சாயந்திரங்களில் நின்றிருப்பாள். அவளுடைய கால் மட்டும் கீழே தெரியும். அந்தப் பாதங்களைப் பார்த்தாலே ராமுவுக்கு ஒரு கிளர்ச்சி உண்டாகிவிடும்.

நல்ல யானைத் தந்தம்போன்ற வர்ணங்கொண்ட பாதங்களின் கீழிருந்து அடிப்பக்கத்து ரோஜா நிறம் தலைகாட்டி நிற்கும். பாதங் களைச் சுற்றி நலங்கிட்டது போலவே இருக்கும். கால்களில் பாதரசங்கள் இருந்தன.

அன்று மாலை அவன் தட்டியோரமாக, உள்ளே பார்த்துக்கொண்டே போன பொழுது அந்த உருவம் சற்று பின்வாங்கி பெருமூச்சுவிட்டது போல அவனுக்குத் தோன்றிற்று. அந்தப் பின் வாங்கலும் பெருமூச்சும் அவனுக்கு எரித்துபோன ஒரு குப்பவிலிருந்து கிளம்பும் ஜ்வாலையும் புகையும் போலப்பட்டன. பாழடைத்துபோன அவளுடைய வாழ்க்கை யில் இன்னும் தங்கியிருந்த வெட்கமும் துக்கமுமோ அவை!

அன்று அவனுக்கு அதற்குமேல் ஒன்றுமே ஓடவில்லை. அரசலாற்று மணலில்போய் இருவரும் துண்டை விரித்துப் படுத்துக்கொண்டார்கள். வெய்யில் விழுந்துவிட்டது. ‘லயன்சுரையின் மேல் வீட்டுக்குத் திரும்பிப்போய்க் கொண்டிருந்த குடியானவர்களும் மாடுகளும் ராமுவின் கண்களுக்கு எங்கோ அடிவானத்தின் பக்கமாகப்போய்க் கொண்டிருக்கும் நிழலுருவங்கள் போலத் தென்பட்டனர். ரயில் பாலத்தின்மேல் முடிவற்றதோ என்று நினைக்கும் படியாகப் போய்க் கொண்டிருந்த ‘குட்ஸ்’ வண்டியை கவனமின்றி பார்த்த வண்ணம் ஆழ்த்த ஆலோசனையில் ஈடுபட்டான் ராமு.

‘கிளம்பு, போவோம், உன்னுடன் இனிமேல் வெளியில் வருவதைக் காட்டிலும்…’ என்று முனகிக்கொண்டு மணி எழுத்தபொழுதுதான் ராமுவுக்குத் தன் நினைவு வந்தது.

‘மணி, நீ முன்னால் வீட்டுக்குப்போ! தான் சற்று கழித்து வருகிறேன்’ என்றான்.

‘எதற்காக? அவளுடன் பேசவா? என்ன பைத்தியமா உனக்கு? யாரோ ஊரில் கெட்டலைந்தால் உனக்கென்ன வந்தது. இவ்வளவு யோசனை? உலகத்தை நீ தான் தாங்குகிறாயா? சரிதாண்டா, கிளம்பு நாழியாச்சு’.

‘நீ போ என்றால் போயேன், மணி. என்னுடன் எதிலும் அனுதாபப் பட முடியாவிட்டாலும் என்னைத் தனியாகக் கூடவா விடமுடியாது உன்னால்?’

‘உன்னை தனியாக விட்டால் ஏதாவது செய்து வைப்பாய். அது விபரீதமாக வந்து முடியும்’.

‘நான் குழந்தையல்ல. நீ போ’.

***

ராமு படியேறின நிமிஷமே அவள் உள்ளே போய் விட்டாள்.

அவன் தடுமாற்றத்துடன் உள்னே நுழைந்தான். கூடத்தில் ‘பவர் லைட்’ விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவரோரத்தில் ஒரு கிழிந்த பாய் கிடந்தது. அடுத்திருந்த அறைவாசலில் நின்று கொண்டிருந்தாள்.

ஒல்லியாக ஒடிந்து விழுபவள்போல் இருந்தாள். முகம் உலர்ந்து போயிருந்தது. அதில் ஒரு சமயம் அழகு தாண்டவமாடினதின் சின்னம் மட்டும் இருந்தது. கள்னத்தின் எலும்புகள் எடுத்துப்போய் இருந்தன. கண்கள் குழிவிழுந்துபோய் ஒளியற்று இருந்தன. வெளுத்துப்போயிருந்த உதடுகளில் வெற்றிலைக்காவி பொருத்தமின்றி தென்பட்டது.

ஆனால் அவள் முகத்தில் ஏதோ ஒரு சக்தி இருந்தது. அவள் முகத்தைப் பார்த்த நிமிஷம் முதல் அவன் அவளிடம் அதற்குமுன் கொண்டிருந்த வெறுப்பு எங்கோ போய் விட்டது. மரியாதையுடன் அவளைக் கவனித்தான்.

நகைகள் ஒன்றுமே அவள்மேல் அதிகம் இல்லை.வெள்ளைத் தோடு இருந்தது காதில். கையில் ஒரு ஜதை வளையல் இருந்தது. கழுத்தில் ஒன்றுமில்லை. சாயம்போன பெங்களூர் தலைப்புப் பச்சைப் புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.

‘அம்மா, நான் ஒரு கேள்வி கேட்கவாமா?’ என்று ராமு கேட்டான், முதலில் என்ன பேசுவது என்று தெரியாமல்.

‘என்ன கேள்வி? எதற்காக?’ என்று திடீரென்று பொங்கிய கோபத் துடன் கேட்டாள் அவள்.

‘நீங்கள் பிராமணப் பெண்…?’

‘யாராயிருந்தால் உங்களுக்கென்ன?’

‘அம்மா. நீங்கள் கோபப்படக்கூடாது. உங்களைக் கண்டிக்க நான் இங்கே வரவில்லை’.

‘என்னை நீங்கள் கேள்வி கேட்கத்தான் உங்களுக்கு என்ள அதிகாரம்?’

‘ஒரு அதிகாரமும் கிடையாது. நான் ஒரு நண்பனாக உங்களுக்கு…’

‘நண்பரா…?’ என்று அவள் ஏளனம் செய்தாள். முகத்தில் அவளுடைய வயதிற்கு மீறின ஒரு அறிவும் அனுபவமும் தென்பட்டன.

‘இல்லை, ஏளனம் செய்ய வேண்டாம்’.

‘எவ்வளவோ நண்பர்களைக் கண்டாகிவிட்டது. என் பாழாய் போன உயிரில்’ என்று சொல்லிவிட்டு ஏக்கப் பார்வையுடன் எங்கோ பார்த்தாள்.

‘அம்மா, சற்று உட்காருங்கள். என்னை நம்புங்கள்’ என்று ராமு சொன்னான். அவனுடைய குரவிலிருந்த குழைவைக் கேட்டதும் அவளுடைய ஏளனம் மறைந்தது.

‘நம்புவதற்கென்ன ஆட்சேபணை? நம்பியேதானே இந்த கதிக்கு வந்தேன்!’ என்று தன் அந்தரங்கத்தை வெளியிடுவதுபோலச் சொன்னாள்.

‘இந்த கதிக்கு வரவேண்டிய அவசியமென்ன? கேட்கலாமா நான்? என்று ராமு மரியாதையாகக் கேட்டான்.

‘மிகவும் கொடியதான அவசியம்தான்-உயிரில் இருக்கும் பற்றுதான்’.

‘வேறு விதமாக ஜீவன் நடத்த….’

‘வேண்டாம், மன்னியுங்கள். உங்களுக்கு அதையெல்லாம் கேட்க அதிகாரம் இல்லை! என் வாழ்க்கை பாழடைய ஆரம்பித்த பொழுது யார் என்னைக் கேட்டார்கள்? இன்று எதற்காக வந்து கேட்கிறீர்கள். போங்கள், ஒன்றும் கேட்க வேண்டாம்’.

உணர்ச்சிப் பெருக்கில் சிரமம் அடைந்தவன் போல வாசற்படியின் மேல் சாய்ந்துகொண்டு உட்கார்ந்தாள்.

‘அம்மா! அன்று உங்களை யாரும் ஏனென்று கேட்காததாலா நீங்கள் இப்படி வாழத் துணிந்தீர்கள்?’

அவள் சட்டென்று தலையெடுத்து அவனை உற்று நோக்கினாள்.

‘ஆமாம் என்றுதான் வைத்துக்கொள்ளுங்கனேன்!’

‘ஒரு சிலர் அசிரத்தையால் கோபம் கொண்டு நீங்கள் ஒரு சமூகத்திற்கே இழுக்கு ஏற்படுத்துவது சரியா?’

‘சமூகமா! அது என்ன வென்று எனக்குத் தெரியாது. எங்கள் ஊர்தான் எனக்குத் தெரியும். எங்கள் ஊர் என்னை ஏன் என்று கேட்கவில்லை’.

‘அதற்காக’

‘அதற்காக-அதற்காக – ஒன்றும் இல்லை. அதெல்லாம் எதற்கு உங்களுக்கு?’

‘நான் என்னால் கூடிய உதவியை…’

‘உதவியா? என்ன உதவி செய்யப்போகிறீர்கள்! என்ன உதவி செய்ய முடியும் இப்பொழுது உங்களால்?’

‘இந்த வாழ்விலிருந்து உங்களை விடுவிக்க என்னால் ஆனதைச் செய்கிறேன்’.

‘எதற்காக?’ என்று கேட்டுக்கொண்டே அவள் அவன் முகத்தை உற்று கவனித்தாள்.

‘உங்கள் கஷ்டத்தைப் பார்க்க எனக்குச் சகிக்க வில்லை’ என்று அவன் தடுமாற்றத்துடன் சொன்னான்.

‘நீங்கள் சொல்வது பொய்! என் கஷ்டத்தைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லை. நீங்கள் சற்றுமுன் சொன்னீர்களே-சமூகம். அதன் சார்பாக நீங்கள் என் வாழ்க்கையைக் கண்டு வெட்கப்படுகிறீர்கள். பட்டவர்த்தனமாய் சொல்லட்டுமா? ஒரு பிராமணப் பெண் விபசாரம் செய்வது உங்களுக்கு அவமானமாக இருக்கிறது. அப்படித்தானே?’

‘ஆமாம். இருக்கட்டுமே! அது பிசகா!’

‘பிசகோ, சரியோ எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. என் கஷ்டத்தைக் கண்டு அனுதாபப்படவில்லை நீங்கள். அதுதான் எனக்குத் தெரியும்’.

‘அதெப்படித் தெரியும்?’

‘எப்படித் தெரியுமா? அதற்கு உங்கள் அனுதாபத்திற்கு அத்தாட்சி இல்லை’.

‘என்ன அத்தாட்சி வேண்டும்?’ என்று ராமு கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘என்ன அத்தாட்சி தேவை உங்களுக்கு?’ என்று சாவதானமாகக் கேட்டான் மறுபடியும்.

‘அத்தாட்சியா! அதை நான் சொல்லி என்ன பயன்? அதை தான் எங்கே எதிர்பார்க்க முடியும்! ஆகையால் அது உங்களிடம் இல்லாததைக் கண்டு நான் ஆச்சரியப் படவில்லை…ஆனால் ….ஆனால்… நீங்கள் இவ்வளவு தூரம் சிரத்தையெடுத்துக் கொண்டதற்கு, என்னைப் பற்றி இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டதற்கு, நான் என்ன செய்யக்கூடும் ?… ஒன்று மில்லை’ என்று சொன்ன பொழுது அவள் குரல் கம்மிவிட்டது.

‘அம்மா, அதெல்லாம் ஒன்றும் சொல்லாதீர்கள். என்ன அத்தாட்சி வேண்டும் சொல்லுங்கள்!’ என்று ராமு மறுபடியும் கேட்டான்.

‘அது கிடக்கிறது, என் நண்பனாக நீங்கள் இங்கே வந்ததாகச் சொன்னீர்கள். அதை நான் இப்பொழுது நம்புகிறேன். நண்பா… முதல் முதலாக இன்றுதான் உயிரில் ஒரு ஆறுதலைக் காண்கிறேன். உங்கள் வார்த்தைகள்… முதல் முதலாக… இங்கே நுழைத்தவர்களில் நீங்கள் தான் என்னை அவமானப்படுத்தாமல், என்னைக் கேவலப்படுத்தாமல்…’ அதற்குமேல் அவளால் பேசமுடியவில்லை. மௌனமாக சிலை போல உட்கார்ந்திருந்தாள் அவன்முன்.

‘அம்மா, அத்தாட்சி கேட்டீர்களே என்ன அத்தாட்சி வேண்டும் சொல்லுங்கள்’.

‘அது கிடக்கிறது. என் வார்த்தையை மறந்து விடுங்கள். எதையோ நடக்காததை உளறிவிட்டேன். உங்கள் மனது தெரிகிறது எனக்கு. அதற்குமேல் ஒன்றும் வேண்டாம். உதவுவதாகச் சொன்னீர்கள், உதவி விட்டீர்கள். போதும். மேலும் ஒன்றும் எதிர்பார்க்கக்கூடாது’.

‘இல்லை. நான் அதை அறிந்துதுான் ஆகவேண்டும்’ என்று ராமு பிடிவாதம் செய்தான்.

‘அறிந்துதான் ஆகவேண்டுமா? வேண்டாம். கேட்டுக் கொள்கிறேன். அதைக்கேட்டால் இங்கிருந்து கோபத்துடன் எழுந்திருந்து போய் விடுவீர்கள். இந்த உதவியும் எனக்கு அற்றுப்போய்விடும்’.

‘ஒன்றும் ஆகாது சொல்’ என்று ராமு உணர்ச்சி வேகத்தில் கத்தினான். அவளும் அவனுக்குச் சரியான உணர்ச்சிப் பெருக்கில் உயர்ந்து நின்றாள்.

‘அத்தாட்சி கேட்கட்டுமா?… நீங்கள் என் கஷ்டத்தை உண்மையாகக் கொண்டு உருகினால் அதைத் தீர்க்க வழி இருக்கிறது’

‘என்ன, அதைச் சொல்’.

‘என்னைக் கலியாணம் செய்துகொள்ளுங்கள், அதற்கு உங்களுக்குத் தைரியம் உண்டா, கேட்கிறேன். சொல்லுங்கள்!’

ராமு அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டான் சில நிமிஷங்கள்.

அவளை உற்று நோக்கினான். அவ்வளவுநேரம் ஏளனமாகவும் அரைமனதுடனும் பேசினவள் முகம் ஜ்வலிப்பு கொண்டிருத்தது.

‘உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்’ என்று உறுதியான குரலில் சொன்னான் ராமு கடைசியாக.

அவள் முகத்தில் திகிலும் துக்கமும் தென்பட்டன.

‘ஆ.இன்னும் உலகத்தில்… நான் எண்ணினது பிசகா? உயிர் வாழ்வதிலும் உபயோகமிருக்கிறதா? என்ன காரியம் செய்தேன்!’ என்று மனதில் தோன்றியதை அர்த்தமின்றி உரக்கச் சொல்லிக்கொண்டு கீழே சாய்ந்தாள் அவள்.

ராமு பதட்டத்துடன் அவளைத் தூக்கப் போனான்.

‘வேண்டாம்! என்னைத் தொடாதீர்கள். அது நடக்க முடியாது. உங்களைக் கொடுமையாகச் சோதித்தேன். மன்னியுங்கள்’.

‘ஏன் முடியாது? எனக்குக் கலியாணம் ஆகவில்லை’.

‘அதல்ல!’

‘நீயும் யௌவனத்தின்…’

‘ஐயோ வேண்டாம், கூடாது. நடக்கமுடியாது’.

“என்ன இப்படிப் பேசுகிறாய்? நான்தான் உன்னுடன் சமூகத்தை எதிர்க்க…’

‘அதல்ல, அதல்ல!’

‘பின்?’

‘நான் வாய்திறந்து சொல்ல முடியாது”.

ராமு திடீரென்று அவள் முகத்தை அருகில் கூர்ந்து கவனித்தான். அவள் முகம் கருத்தது. திகில் அதில் தென்பட்டது.

‘பாதகமில்லை, எழுந்திரு!’ என்றான் தீர்மானமாக.

‘உண்மையாகவா?”

‘வா, வெளியே போகலாம்’.

– பாரததேவி 06.08.1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *