குமரன் தன் 35 வது பிறந்த நாள் கொண்டாடும் அதே நாளில், அவனால் நிறுவப்பட்ட குழந்தை தொழிலாளர் நலன் காக்கும் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டின் நினைவு நாளையும் கொண்டாட திட்டமிட்டிருந்தான். அந்நிறுவனத்தின் பணியானது குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் நலன், படிப்பு, பணி மற்றும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதுஆகும். அவன் விருப்படியே இவ்விரு விழாவும் ஒன்றாக நன்றாக நிறைவுற்றது. அன்று இரவு அவன் மனதில் வெகுநாட்களாக புதைந்திருந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தான்.
“தம்பி குமரா” என்று ஒருவர் தன் வீட்டின் வாயிலில் நின்று அவனை அழைத்து ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனை காட்டி “இனி இவன் நம்ம பேக்கரிக்கு தண்ணீர் கொண்டு வர்ற பையன் கொஞ்சம் தண்ணீர் பாத்து கொடுங்க! இவனுக்கு பேச முடியாது, அதோட காதும் கேட்காது. கொஞ்சம் பாத்துக்கப்பா குமரா! என்று கூறிவிட்டு சென்றார். அன்றிலிருந்தே தன் பணியை தொடர்ந்தான். ஆனால் தினமும் குமரன் வீட்டிலிருந்து தண்ணீர் எடுக்கும் பொழுது தண்ணிரை ஊற்றிக் கொண்டே செல்வான். குமரன் பல முறை சொல்லியும் அதை அவன் பொருட்படுத்தாமல் சென்றான் அச்சிறுவன். இப்படியே நாட்கள் நகர்ந்தது.
ஒரு நாள் காலையும் தண்ணீர் எடுப்பதற்கு குமரனின் வீட்டிற்கு சென்று வீடு முழுவதும் தண்ணீரை கொட்டிச் சென்றான். அதோடு தண்ணீர் குழாயையும் திறந்த நிலையில் விட்டு விட்டு சென்றான். அதனால் தண்ணீர் வீணாகி அவ்விடமே குளம் போலாகியிருந்ததைக் கண்டு குமரன், அச்சிறுவன் மீது கோபம் கொண்டான். அச்சிறுவனை அழைத்து கன்னத்தில் பளார்!! என அறைந்தான். அதை எதிர்பாராத அவனை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான். ஆனால் குமரனுக்கோ அவனை அறைந்த கணம் முதல் மனதை நெருடிக் கொண்டிருந்தது அவனின் அன்றைய செயல். ஒரு வாய் பேசமுடியாத காது கேளாத சிறுவனை அடித்துவிட்டோமே! என எண்ணி வருந்தினான். நான் என் கோபத்தினை அவனிடம் காண்பித்து விட்டேன். ஆனால் வாய் பேச முடியாத காது கேளாத அச்சிறுவன் என்ன செய்த்திருப்பான்? தன் வருத்தத்தினை யாரிடம் கூற முடியும்? அல்லது அறைந்ததன் காரணம் தான் தெரிந்திருக்குமா? என்று வருந்தியதுடன் அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என மனதை சமாதானம் செய்து உறங்கினான். பொழுதும் விடிந்தது.
விழித்த உடனே குளித்து கிளம்பி உணவு கூட உண்ணாமல் அச்சிறுவனைக் காண வேகமாக சென்றான். அப்பேக்கரியின் முன் திரளாக மக்கள் கூடிந்தனர். கூட்டத்தை விளக்கி சென்று பார்த்தபோது பேக்கரியில் தீ விபத்து. அருகிலுள்ளவர்களிடம் விசாரித்த போது காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார்கள். உடனே அவசரமாக அங்கு சென்று பார்த்தான். அக்கடையில் வேலை செய்தவர்களை கண்டான். அனைவரும் தனித்தனி படுக்கையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அச்சிறுவனை மட்டிம் காணவில்லை. அவன் நலமுடனிருகிறான் என்று எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்டு அவ்வறையை விட்டு வெளியே வந்தான். வெளிக்கதவின் ஓரமாக ஒருவரின் முகம் மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காற்றில் முகத்திரை விலகியது. அதை கண்டவுடன் குமரனுக்கு நெஞ்சம் பிளந்தது. அது வேறு யாருமில்லை பச்சிளம் முகம் மாறாத அச்சிறுவன். அவனை அக்கோலத்தில் அதுவும் கேட்பாரற்று கிடந்த அவனின் உடலைக் கண்டு கலங்கினான் குமரன்.
தன்னை விட 5 வயது குறைந்த சிறுவன் தன்னைப் போன்று அதே உணர்வுகளும், ஆசைகளும் கொண்ட அவனின் நிலையை எண்ணி வருந்தினான். கடைசி தருணத்தில் கூட அசசிறுவனிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை என்னும் வருத்தம் கடந்த 20 ஆண்டுகளாக அவன் மனதில் ஆழமாய் அரித்துக் கொண்டிருக்கிறது. அச்சிறுவனின் மரணத்தின் மூலம் குமரனின் மனதில் 15 வயதில் விழுந்த விதையானது, குமரனின் 25வது வயதில் முளைத்து 35வது வயதில் மரமாகி பல குழந்தை தொழிலாளர்களுக்கு நிழல் தந்து இளைப்பாரச் செய்து கொண்டிருக்கிறது. குமரனின் மனதை தூண்டிய அவன் இன்று அவனை போன்ற பல குழந்தை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி கொண்டிருக்கிறான். அவனிடம் மன்னிப்பு கேட்க முடியவில்லை என்ற தாக்கம் குமரனின் மனதில் இன்னும் இருந்தாலும், பல குழந்தை தொழிலாளர்களைக் காக்கும் மகிழ்ச்சியில் அவன் மனதை தேற்றிக் கொண்டான். நாமும் குமரனுடன் கைகோர்ப்போம்.
– தமிழ் இலெமொரியா மாத இதழ் – மும்பை பதிப்பு (டிசம்பர் 2014)