எனது மனிதர்கள் – 1

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,367 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்ன முடிவை எடுப்பது என்று தெரியாத நிலையில் நாங்களிருந்தோம். தளம் முழுவதும் நூல்கள். வழமையாக நாங்கள் நகர முன்பே அவற்றை நகர்த்திவிடுவோம். கொக்குவிலிலிருந்து சாவகச்சேரி, அங்கிருந்து கிளிநொச்சி, பின்னர் துணுக்காய், இப்போது ஒட்டிசுட்டான் என்று பத்திரமாய் நாம் நகர்த்தி வந்த சீதனம் அவைதான். சீதனத்துக்கு இப்போது ஆபத்து வந்துவிட்டது.

வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படையினரை நெடுங்கேணிப் பகுதியில் இடைமறித்துப் புலியணிகள் போரிட்டுக்கொண்டிருந்தன. ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்த எல்லாத் தளங்களும் பாதுகாப்பான தூரத்துக்கு நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தன. மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டிருந்தார்கள். ஊர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எங்களுடைய தளத்தைச் சேர்ந்த எல்லாரும் எமக்கு தெரிந்த வழிகளிலெல்லாம் முயன்றுகொண்டிருந்தோம். மூன்று நாட்களாகியும் முடியவில்லை .

எங்களது பிரிவுக்கு வர முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசியல் பணி செய்து, காலங் காலமாக அந்தப் பகுதியிலேயே இருந்த நிலையான நிர்வாக அலகு ஒன்றுடன் பழகியவர் ஒருவர் எங்களோடிருந்தார். அங்கு போய்க் கேட்டுப் பார்க்கலாம் என அவர் சொன்னார்.

அது ஒரு பாரிய நிர்வாக அலகு. அவர்களது பொருட்கள் காடு முழுவதும் நிறைந்து கிடந்தன. அவர்களிடமிருந்த அனைத்து ஊர்திகளையும் பயன்படுத்தினால்கூட, பதினைந்து நாட்களாவது எடுக்கும் அவர்களின் பொருட்களை மட்டும் நகர்த்தி முடிக்க. தொடர்ச்சியாக அவர்களது ஊர்திகள் ஓடிக்கொண்டிருப்பதும் எமக்குத் தெரியும். என்னவென்று போய்க் கேட்பது?

யோசனையாக இருந்தது. ஆனால் வேறு வழியே இல்லை. புறப்பட்டோம். யார்? முன்னாள் முல்லை மாவட்ட அரசியல் போராளியும் நானும். பொறுப்பாளரை எனக்குப் பழக்கமில்லை. வீதியில் கண்ட அறிமுகம் மட்டுமே. எனவே நமது “முன்னாள்” அவரோடு கதைப்பதென்றும் தேவையேற்படும் நேரங்களில் நான் அவரை பார்த்து சிரிப்பதென்றும் முடிவு செய்தோம். சரி. காடு, கரம்பைகளுக்குள்ளால் உந்துருளியை செலுத்திக்கொண்டு போய்ச் சேர்ந்து விட்டோம். வாயிற் காப்போரிடம் பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்றோம். பொறுப்பாளர் இல்லை என்ற பதில் வந்தது. விழுந்தது இடி.

“எப்போது வருவார்?” “அவர் வரமாட்டார் பிள்ளை. பொருட்கள் இறக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் அவர் நிற்கிறார். இங்கு இனி வரமாட்டார். எங்கு, எப்போது நிற்பார் என்பதையும் சரியாகச் சொல்ல முடியாது”

ம். சரியா கதை? காலையில் யார் முகத்தில் விழித்தோம் என்று யோசிக்கத் தொடங்கினோம்.

“அப்படியானால் இங்கு யார் நிற்கிறார்கள்?” என்றார்

“முன்னாள்.”

“அடுத்தவர் நிற்கிறார் பிள்ளை ”

ஆகா, ஆகா! காலையில் நாங்கள் யார் முகத்தில் விழித்தோமோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் விழிக்க முன்பே நரி வந்து எங்கள் முகத்தில் விழித்துவிட்டுப் போயிருக்க வேண்டும். அடியடா சக்கை. அடுத்தவர் நிற்கிறாரா! அவ்வளவும் போதுமே.

“அவரை ஒருமுறை வரச் சொல்வீர்களா?” மிகவும் பவ்வியமாகக் கேட்டு வைத்தோம். அவர் எழும்பி உள்ளே போனார்.

அடுத்தவரை நாங்கள் மிக நன்றாக அறிவோம். முற்றத்து ஒற்றைப்பனை போன்ற அவரது நெடிதுயர்ந்த தோற்றம்தான் எங்களை அவரிடம் ஈர்த்திருக்க வேண்டும். புன்னகை தேங்கிக் கிடக்கும் முகம். விழிகளில் எப்போதும் நேசம் தெரியும். என்னவென்று சொல்லமுடியாத விருப்பம் எங்கள் எல்லோருக்கும் அவரிடம். முன்பு எங்களுடையதும் அவருடைய சில வேலைகளும் நடைபெறும் இடம் ஒரே இடமாக இருந்ததால், அடிக்கடி சந்தித்திருக்கிறோம். ஒரு வார்த்தை பேசியதில்லை . காணவில்லையென்றால் கண்களால் தேடியிருக்கின்றோம். கண்ட பின்பும் கதைத்ததில்லை. வீதியில் காணும்போது சிரிப்போமா என்று யோசிப்பதற்குள் கடந்து விடுவதால் சிரித்ததில்லை. சிரிப்பதா, விடுவதா என்ற முடிவை இடம்பெயர்ந்து வன்னி வந்த பின்னர்கூட எடுக்கவில்லை,

இந்த அழகில் ஊர்தியை அவரிடமே கேட்பது என்று தீர்மானமே எடுத்துவிட்டோம். இதற்கு முன்னைய பிறவிகளிலும் பழகியவர் என்பது போன்ற உணர்வு எங்களுக்குள் இருந்ததால், முதன் முதலாக அவருக்கும் எங்களுக்குமிடையே நிகழவுள்ள உரையாடலிலேயே உதவி கேட்பதற்கு நாங்கள் தயங்கவில்லை. கேட்டவுடன் செய்வார் என்ற நூறு வீத நம்பிக்கை எங்களுக்கு.

அவர் வந்தார். புன்னகைத்தார். என்ன விடயம் என்றார். நாற்காலிகளில் இருந்த நாம் எப்போது எழும்பி நின்றோம் என்பது இன்று வரை நினைவிலில்லை. விடயத்தை சொன்னோம். எல்லா ஊர்திகளும் தொடர்ச்சியாக பொருட்களை ஏற்றிக்கொண்டிருப்பதாலும், அவசரமாக நகர்த்தி முடிக்கவேண்டி இருப்பதாலும் எங்களுக்கு உடனடியாக உதவ முடியாக நிலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டார். நான் ‘முன்னாளைப் பார்த்தேன். முகம் தொங்கிப்போய்க் கிடந்தது. அதற்கும் கீழே என் முகம் தொங்கியது. மண்டைக்கண்ணால் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம். ஆளைப்பற்றி நாம் நினைத்திருந்ததெல்லாம் பிழையோ?

உழவு இயந்திரம் ஒன்றின் ஒலி எங்களை பூமிக்கு அழைத்து வந்தது. பொருட்களை இறக்கிவிட்டு வெற்றுப் பெட்டியோடு வந்த உழவு இயந்திரத்தைப் பார்த்த அவர், “இதை உங்களுக்கு தரட்டுமா?” என்றார். எங்களுக்கு வந்தது கெட்ட கோபம். உழவு இயந்திரத்தின் பெட்டிக்கு பக்க மூடிகள் இல்லை. துருவுபலகைக் கட்டைபோல தட்டையாக இருக்கும் பெட்டியில் பொத்தகங்களை மடையன்கூடக் கட்டிப்போக மாட்டான். எங்களை ஏற்றிப்போகட்டாம். நாங்கள் செய்யும் வேலை அவருக்குத் தெரியும். எதை நாம் ஏற்றிப்போவோம் என்றும் தெரியும். எல்லாம் தெரிந்தும் இவர் என்ன கதைத்துக்கொண்டிருக்கிறார்? மூக்கு நுனிவரை வந்த கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“நாங்கள் விறகு ஏத்திறதுக்கு உங்களிட்ட வாகனம் கேக்கேல்ல” என்றேன் சட்டென்று.

அப்போதும் அவர் முகத்தில் புன்னகை தேங்கி நின்றது. விழிகளில் அதே நேசப் பார்வை. இது நேசமுமில்லை. ஒரு நசலுமில்லை. இந்த ஆளின் பிறப்பு வாசியே இப்படித்தானாக்கும்.

“அப்பிடியென்டா உங்களுக்கு என்ன வேணும்” “லொறிதான் வேணும்” எல்லாம் நாம் ஏற்கனவே தந்து வைத்திருக்கின்றோம் என்ற தோரணையில் போனது எங்கள் பதில்,

“சரி பாப்பம். இண்டைக்கு சாமானோடை போன லொறி இரவுதான் திரும்பி வரும். அதைக் காலையில உங்களிட்ட அனுப்பி விடுறன்” என்றார்.

“ம்” என்றோம். “அப்ப நான் போகட்டோ ?” என்றார். “ம்” என்றோம். அவர் போய்விட்டார். நாமும் புறப்பட்டோம்.

கோபம் அதி உச்சத்தில் இருந்ததால் வார்த்தைகள் கொஞ்ச நேரம் வரவில்லை. வந்த வார்த்தைகள் பின்னர் நிற்கவுமில்லை.

“ரெண்டாவதே இப்படியெண்டால், தற்செயலாக நாங்கள் வந்த நேரம் முதலாவது நிண்டிருந்தா என்ன நடந்திருக்கும்”

தளத்தில் நின்ற ஏனையவர்களால் நாங்கள் சொன்னதை நம்ப முடியவில்லை .

“சீ. அந்தாள் அப்படிச் செய்யாது. நீங்கள் ஏதோ பிழையா….” என்று ஏதோ நீண்ட வசனம் கதைக்க வெளிக்கிட்ட ஒருத்தி நான் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள்.

எனக்கும்தான் நம்ப முடியவில்லை. ஆளில்தான் பிழையோ? ஆளை நாம் பார்த்த பார்வையில் பிழையோ? ஒருவரின் பார்வை வேண்டுமென்றால் பிழைக்கலாம். ஒட்டுமொத்தப் பார்வையும் பிழைத்துப் போனதோ? அவர் பற்றிய கடும் விவாதங்களுடன் பாய்களை விரித்தோம். உறங்கிப்போனோம்.

11.30 க்கு நான் காவல் கடமைக்கு போனேன். நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த எனக்கு நெடுங்கேணிப் பகுதியில் வெடிக்கும் எறிகணையின் ஒலி அமுங்கிப்போய்க் கேட்டது. தூரத்தே மரங்களுக்கு மேலால் ஒளிக்கோடு தெரிய, யோசனையோடு பார்த்தேன். சிறிது நேரத்தின் பின் அது ஒரு ஊர்தியின் ஒளி என்பது விளங்கியது. கவலையாக இருந்தது. சண்டை தொடங்கினால், களத்தில் நிற்பவர்களுக்கும் ஓய்வில்லை. ஊர்தி சடுதியில் எங்களுடைய ஒழுங்கைக்குள் திரும்பியது. யாரது? இந்த நேரத்தில்? இன்னும் கொஞ்சம் நெருங்கிவர, அது ஒரு பார ஊர்தி என்பது புலப்பட, எல்லாம் விளங்கி விட்டது.

“லொறி வந்திட்டுது. எழும்புங்கோ. லொறி வந்திட்டுது எழும்புங்கோ” நேரம் 12.40 எல்லாரும் எழும்பி ஓடி வாசலுக்கு வந்து பார ஊர்தியைப் பின்புறமாக உள்ளே எடுப்பதற்கு உதவி செய்யப் போனார்கள்.

“முட்டுது முன்னுக்கு எடுங்கோ. கொஞ்சம் திரும்புங்கோ. சரி எடுங்கோ . ஆ சரி. ஆ சரி. வரலாம் வரலாம்….” என்ற கதம்ப ஒலிகளின் நடுவே உள் நுழைந்த பார ஊர்தி தன் இயந்திரத்தை நிறுத்தியது. ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கியவரை விளக்கு வெளிச்சத்தில் பார்த்த எங்களுக்குப் பேச்சும் வரவில்லை, மூச்சும் வரவில்லை. “வாங்கோ” என்று சொல்ல வாய் வரவில்லை. எல்லாரும் சங்கடத்தோடு ஆளைப் பார்த்தோம்.

இப்போதும் அவர் முகத்தில் புன்னகை தேங்கிக் கிடந்திருக்கும். விழிகளில் நேசம் நிறையவே இருந்திருக்கும். எங்களுக்குத்தான் இருளில் கண் தெரியவில்லை .

கீழே நின்று நாம் தூக்கிக் கொடுக்க, மேலே நின்று வாங்கி அடுக்கி, நாம் சொன்ன இடத்துக்கு எம்மைக் கூட்டிப் போய் பொருட்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டுப் புறப்பட்டபோது பயணத் தூரத்தைக் கணிப்பிட்டு. மனதில் குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டு எரிபொருளை மெல்ல அருகே எடுத்து வைத்துவிட்டுத் தயக்கத்தோடு அவரைப் பார்த்தோம். வேண்டாமென ஒரு தலையசைவில் மறுத்து, மறுபடியும் ஒட்டிசுட்டானில் எம்மை விட்டபோது எட்டு மணியாகி விட்டிருந்தது.

மனிதத்தின் அளவை மதிப்பிடமுடியாமல் மலைத்துப்போய் நாம் நிற்க, பார்வைத் தூரத்திலிருந்து பார ஊர்தி மறைந்தது. இதற்கு முன்னரும், இதன் பின்னரும் ஒரு வார்த்தையேனும் பேசாத எங்கள் மதிப்புக்குரிய மனிதனே, போய்வா. பிறவிகள் கடந்தும் சந்திப்போம்.

– 2002 ஜூலை, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *