நான் படித்த பெண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்க கனடா கிளையில் இருந்து வருடாந்த இராப்போசன விருந்திற்கு வரும்படி அதன் தலைவி என்னையும் அழைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பித்துக் கொள்வேன்.
இந்தமுறை அப்படித் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் எனது சினேகிதி சியாமளாவும் லண்டனில் இருந்து வந்து இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளப் போவதாக எனக்குக் கிடைத்த செய்தியேதான். அதனால்தான் கட்டாயமாக போகவேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன்.
சியாமளா! அவள் என்னுடைய நல்ல சினேகிதி. பல வருடங்களுக்கு பின் அவளைப் பார்க்க போகிறோன் என்பதில் என் மனம் மிகவும் சந்தேஷமாக இருந்தது. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே நிழலாட பழைய நாட்களை எண்ணி பார்த்தேன்.
பாடசாலை நாட்களில் நானும் சியாமளாவும் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசுகள் பல பெற்று இருக்கிறோம். ஆனாலும் அவள்தான் எப்பொழுதும் விளையாட்டில் முதலாய் வருவாள்.
படிப்பில் மட்டும் நான் முதல். பாடசாலை முடிந்த பின்பு விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்தபின் சியாமளா வீட்டை போய் கதைத்து விட்டுதான் நான் வீட்டிற்கு வருவேன். அம்மாவிற்கு நான் சியாமளாவுடன் பழகுவது பிடிக்காது.
‘சும்மா சியாமளாவுடன் சேர்ந்து விளையாடிறது பிற்காலத்தில உனக்கு சாப்பாடாபோடப் போகுது’ என்று அம்மாவிடம் நல்ல பேச்சு வாங்குவேன்.
படிஇ படி என்று திட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் அம்மாவிற்குத் தெரியாது. படிப்பு ஒன்றுதான் அம்மாவிற்கு முக்கியம். ஆனாலும் நான் அம்மாவிற்கு ஏதாவது காரணம் சொல்லி போட்டு சியாமளா வீட்ட தொடர்ந்தும் போய்வந்து கொண்டுதான் இருந்தேன்.
பல்கலைக்கழக விடுமுறையில் வந்துஇருந்த போது ஒருநாள் அம்மாவிடம் சாக்குசொல்லிப்போட்டு சியாமளா வீட்ட போனேன். அப்போது சியாமளா தனக்கு திருமணம் நிச்சயித்து இருப்பதாகவும் தனது வருங்காலக் கணவர் இவர்தான் என்று ஒரு படத்தையும் காட்டினாள்.
பார்த்த முகம். மனதிலே பதிந்த முகமாயும் இருந்தது.
‘சியாமளா இது சங்கர் தானே?’ என்று கேட்டேன்.
‘ஓம்’ என்று தலையாட்டினாள். ஓட்டப் போட்டியில் முதலாவதாக வந்தது போன்ற சாதனை அவள் முகத்தில் தெரிந்தது.
சங்கர் சிறந்த விளையாட்டு வீரன். ஓட்டம், தடைஓட்டம், உயரப்பாய்தல், தடிஊன்றி உயரப்பாய்தல் இவற்றில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றவன். இதைவிட நல்ல துடுப்பாட்ட வீரனும்கூட. இதனால் பல பெண்களின் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். நானும் சியாமளாவும் சங்கரும் சில போட்டிகளில் ஒன்றாகப் பங்கு பற்றி இருக்கிறோம்.
எனக்கும் சங்கரில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அம்மாவின் பயத்தில சங்கரைப் பார்த்து ஒரு புன்னகை உதிர்ப்பதைத் தவிர ஒரு வார்த்தை கதைத்தது இல்லை. ஆனாலும் மனசை அடிக்கடி சலனப் படுத்திக் கொண்டேயிருந்தான். கொழும்பிலே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக வேலை கிடைத்ததும் அங்கே போய்விட்டான். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்ற தெரிவு செய்யப்பட்டவன். ‘சியாமளா அதிஷ்டக்காரி’ பெருமூச்சு விட்டேன்.
அம்மா எனக்கும் கலியாணம் பேசினா. மருமகன் ஒரு டாக்டராக இருக்கவேண்டும், படித்த பிரபல்யமான குடும்பமாக இருக்கவேண்டும் என்பது எல்லாம் அவளின் விருப்பம். அம்மாவையும் பிழை சொல்ல முடியாது. அம்மா திருமணம் செய்தபின் அப்பாவிற்காகவே வாழ்ந்தவ. அப்பா இறந்த பின்பு என்னை ஒரு பட்டதாரியாக ஆக்கவேண்டும் என்ற கனவோடு எனக்காக வாழ்ந்தவா. அந்தக் கனவையும் எப்படியோ நிறைவேற்றி விட்டா.
சியாமளாவைப் போல என்னால் எனது வாழ்கை துணைவரை சுதந்திரமாய் தேர்ந்தெடுக்க முடியவில்லை. எனது ஆசைகள், கனவுகள் எல்லாம் நெஞ்சுக்குள் புதைந்து போக, அம்மாவின் விருப்பப்படியே கனடாவில் இருந்து வந்த டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் பார்த்தீபனுக்கும் எனக்கும் திருமண எழுத்து முடிந்தது. காதல் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தால் அம்மாவின் ஆசை மட்டும் நிறைவேறியது.
எனது திருமணத்திற்கு சியாமளாவை கட்டாயம் சங்கரையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தி இருந்தேன். சியாமளா எனது திருமணத்திற்கு வந்திருந்தாள், சங்கரை சக்கரம் பூட்டிய கதிரையில் வைத்து தள்ளியபடி. நான் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்று விட்டேன்.
“இது சங்கரா?”
என்னால் நம்பமுடியாமல் இருந்தது. என்ன நடந்தது என்று கேட்கக்கூட எனக்கு வாய் வரவில்லை.
“நான் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுக்கும்போது எப்போதோ இராணுவம் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் தெரியாமல் மிதித்து விட்டேன். உடம்பெல்லாம் ரத்தம் சீறிப் பாய்ந்தது. பதட்டத்தோடு குனிந்து பார்த்தேன். எனது கால் ஒன்றை இழந்து விட்டேன் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. இராணுவம் தற்காலிகமாக அங்கே முகாமிட்டு இருந்ததாக பின்புதான் தெரியவந்தது.
காலை இழந்ததற்காக காதலையும் இழந்து விடுவேனோ என்று மனம் உடைந்து எனக்குள் கவலைப்பட்டு தற்கொலை செய்யும் அளவிற்குக்கூடப் போய்விட்டேன். சியாமாதான் என்னைத் தடுத்து நிறுத்தினாள். கால் முக்கியமில்லை, காதல் தான் முக்கியம் என்று பிடிவாதமாய் நிரூபித்துக் காட்டி விட்டாள்” என்றான் சங்கர்.
விபத்திலே கண்ணையே இழந்த தனது காதலனை வேண்டாம் என்று கைவிட்டு ஓடாது துணிந்து நின்று திருமணம் செய்து சிறப்பாக வாழும் ஒரு பெண்ணைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அந்தக் காலம் எல்லாம் இன்று மலையேறிப்போய் விட்டது என்று எண்ணியிருந்த எனக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
சியாமளாவை நிமிர்ந்து பார்த்தேன். எந்தப் பாதிப்பும் தெரியாத அதே கலகலப்பான சிரித்த முகம். விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியும் வெற்றியும் சகஜம் என்ற தாரக மந்திரத்தில் ஊறிப்போனதால் இதையும் அவளால் அப்படி எடுத்துக் கொள்ள முடிந்ததோ என்னவோ!
“காதலுக்கு அர்த்தம்” கற்பித்த என் சினேகிதியின் கைகளைப் பற்றிக் கொண்டு பெருமையுடன் அவளைப் பார்த்தேன். “எனக்கொரு சினேகிதி, சினேகிதி அந்தமாதிரி..!” என்னையறியாமலே அந்தப் பாடலை வாய்விட்டுப் பாட வேண்டும் போல இருந்தது.
கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.