எத்தனை பேரோ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,685 
 
 

நீங்கள் ‘கஸ்தூரி பவ’னத்துக்குச் சென்றிருந்தால் அங்கே பெரியசாமியையும் சின்னச்சாமியையும் பார்த்திருக்கலாம். இரவிலும் பகலிலுமாக இருவரும் அந்தப் பங்களாவைக் காவல் காத்து வருபவர்கள். ஒருவாரம் பெரியசாமி பகலில் காவல் காத்தால், இன்னொரு வாரம் சின்னச்சாமி இரவில் காவல் காப்பான். இப்படியே இருவரும் அந்தக் கஸ்தூரி பவனத்தை மாறி மாறிக் காவல் காத்து வந்தார்கள்.

பகலில் காவல் காப்பவன் காலை ஆறு மணிக்கே பங்களாவுக்கு வந்துவிட வேண்டும். அதற்குப் பிறகு இரவு எட்டு மணிக்குத்தான் அவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இரவில் காவல் காப்பதற்காக எட்டு மணிக்கு வருபவன் காலை ஆறு மணிக்குத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். மத்தியில் அவர்கள் இருவரும் அந்தப் பங்களாவின் வாயிலை விட்டு அப்படி இப்படி நகரக்கூடாது, நின்றது நின்றபடி நிற்கவேண்டும். ஒருமாதம் இரண்டு மாதங்கள் அல்ல; ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல; எத்தனையோ நாட்களாக, எத்தனையோ மாதங்களாக, எத்தனையோ வருடங்களாக நின்று வருகிறார்கள்.

அந்தப் பங்களாவில் வேலை பார்க்க வந்தபோது பெரியசாமிக்கு வயது இருபத்திரண்டு; சின்னசாமிக்கு வயது இருபது. இன்று அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபதாவது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் கஸ்தூரி பவனத்தின் வாயிலில் அவர்கள் இன்றுவரை உட்காரவில்லை!

அரிதினும் அரிதான மானிடப் பிறவி எடுத்த அவர்கள் இருவரும், பகலில் வேலை செய்யும்போது இரவில் தூங்குவார்கள்; இரவில் வேலை செய்யும் போது பகலில்துங்குவார்கள். இதைத் தவிர அவர்கள் வேறொன்றும் அறியாதவர்கள். அறிவதற்கு வேண்டிய அவகாசமும் அவர்களுக்குக் கிடையாது

காலைக் கதிரவனின் பொன்னிறக் கிரணங்களிலோ, மாலைக் கதிரவனின் செந்நிறக் கிரணங்களிலோ அவர்கள் தங்கள் கருத்தைச் செலுத்துவதில்லை; வெண்ணிலவின் தண்ணொளியிலும் அவர்கள் தங்கள் மனதைப் பறிகொடுப்பதில்லை; முடிவில்லாத வானத்தில் தவழ்ந்து விளையாடும் மேகக் கூட்டங்களைக் கண்டோ, சுடர்விட்டு ஒளிரும் நட்சத்திரக் குழுவைக் கண்டோ அவர்கள் மகிழ்வதில்லை; வானளாவிய மரங்களும் மலைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவருவதில்லை; அதிகாலையில் கேட்கும் பட்சி ஜாலங்களின் உதயகீதமும், அர்த்தராத்திரியில் கேட்கும் ஆந்தையின் அலறலும், ஓயாத ஒழியாத கடல் அலைகளின் பேரிரைச்சலுங்கூட அவர்கள் காதில் விழுவதில்லை!

“ஹிட்லர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?” “மூன்றாவது உலக மகா யுத்தம் எப்பொழுது வரும்?” “உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு மந்திரிமார்கள் இன்னும் எத்தனை அறிக்கைகள் விட வேண்டும். எத்தனை பிரசங்கங்கள் செய்யவேண்டும்?” “நகரசுத்தித் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்வதற்கும், அதிகாரிகள் அவர்களுடைய குடிசைகளைப் பிய்த்து எறிவதற்கும் என்ன சம்பந்தம்?” “விதவா விவாகம் வேண்டுமென்று புருஷர்கள் என்னதான் கரடியாய்க் கத்தினாலும் பெண்கள் ஏன் மெளனம் சாதிக்கிறார்கள்?” – இம்மாதிரி பிரச்சனைகளுக்கும், பெரியசாமி – சின்னசாமிக்கும் ரொம்ப ரொம்ப தூரம்!

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ‘கஸ்தூரி பவனத்தைக் காவல் காக்கத்தானா இவர்கள் பிறந்தார்கள்?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதுகூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை!

இன்னும் சொல்லப் போனால் “நாம் ஏன் பிறந்தோம், எதற்காக உயிர் வாழ்கிறோம்?” என்று கூட அவர்கள் சிந்திப்பதில்லை. அதற்கு வேண்டிய நேரந்தான்.அவர்களுக்கு இல்லையோ, அல்லது மனந்தான் இல்லையோ யார் கண்டார்கள்?

* * *

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும் அவருடைய கடாட்சத்தை சிலர் தான் பெற முடிகிறதல்லவா? அப்படிப் பெற்றவர்களில் வைரவன் செட்டியாரும் ஒருவர். கஸ்தூரி பவனம் அவருடைய சொந்தப் பங்களாதான். இகவாழ்க்கையிலுள்ள சுகங்கள்.அத்தனையையும் அனுபவித்து அனுபவித்து அவர்அலுத்துப் போனவர். ஆனால் அதற்குப் பரலோகம் சென்று விடவும் அவர் விரும்பவில்லை. இத்தனைக்கும் இகலோகத்தைவிடப் பரலோகம் எத்தனையோ விதங்களில் சிறந்தது என்பதை அவர் அறிந்துதான் இருந்தார். தாம் அறிந்த அந்த உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டும் வந்தார். ஆனால் அவர்மட்டும் அந்த வழியைப் பின்பற்ற ஏனோ தயங்கினார். இல்லையென்றால் வைர வியாபாரியான அவருக்குப் பரலோகம் செல்ல வழியா தெரியாமலிருக்கும்?

எந்தவிதமான ஆசையும் இல்லாமலிருந்த அவருடைய உள்ளத்தில் சில நாட்களாக ஒரே ஒரு ஆசை மட்டும் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது. அந்த ஆசை வேறொன்றுமில்லை. தானும் ஒரு மந்திரியாக வேண்டுமென்ற ஆசைதான் இந்த ஆசைக்குக் காரணம், ஏழைகளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்பத்தில் தமக்குள்ள ஆர்வந்தான் என்று அவர் சொல்லிக் கொண்டார். இதைத் தவிர அவருடைய ஆசைக்கு வேறொரு காரணமும் இல்லையா என்று சில ‘சந்தேகப் பிராணி’கள் ஆராய ஆரம்பித்தார்கள். இத்தகைய தேசத் துரோகிகளைப் பார்க்கும் போதெல்லாம் செட்டியாருக்கு ஆத்திரம் பொங்கி வந்ததில் ஆச்சரியமென்ன?

இத்தனைக்கும் வைரவன் செட்டியார் அவசரக்காரர் அல்ல; எந்தக் காரியத்தையும் ஆற அமர யோசித்துச் செய்பவர். பெரியசாமியையும் சின்னச்சாமியையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் விஷயத்தில் கூட அவர் எத்தனையோ நாட்கள் யோசித்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் பதினைந்து ரூபாய் சம்பளம் என்று தீர்மானம் செய்வதற்கு முன் அவர் ஒரு சின்னக் கணக்கும் போட்டுப்பார்த்தார். அதாவது, அவர்களுக்குப் பதிலாகப் பேஷா ராஜபாளையத்து நாய் ஒன்றை வாங்கி வளர்த்தால் என்ன செலவாகும் என்று எண்ணிப் பார்த்தார். அவ்வாறு எண்ணிப் பார்த்ததில் அந்த நாய்க்கு மாதம் முப்பது ரூபாய்க்கு குறையாமல் செலவாகும் என்று தெரிந்தது; அதுமட்டுமில்லை; இவர்களுக்கும் நாய்க்கும் எவ்வளவோ வித்தியாசமும் இருக்குமல்லவா?

நாய்க்கு என்ன தெரியும்? எஜமானைக் கண்டால் வாலை ஆட்டவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும் தெரியும். எஜமான் காரில் ஏறும்போதும் இறங்கும்போதும் கதவைத் திறந்துவிட அதற்குத் தெரியுமா? ஹாரன் சத்தத்தைக் கேட்டதும் அறில அடித்துக் கொண்டு ஓடி வந்து, பங்களாவின் கேட்டைத்திறந்து விட அதற்குத் தெரியுமா? ‘ஏய்!’ என்று கூப்பிட்ட மாத்திரத்தில் ஓடோடியும் வந்து, ‘ஏன்சாமி’ என்று மரியாதை செலுத்த அதற்குத் தெரியுமா? இன்னும் இரவில்துங்கினாயோ, உன்னை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்’ என்றும், ‘நின்ற இடத்திலேயே நிற்காமற் போனாயோ விரட்டி விடுவேன்’ என்றும் நாயைப் பயமுறுத்த முடியுமா? – இப்படிப் பல செளகரியங்களையும் உத்தேசித்துத் தான் அவர் பெரியசாமியையும் சின்னசாமியையும் தமது பங்களாவைக் காவல் காக்க வைத்துக் கொண்டார். ‘ஏதோ, எசமான் புண்ணியத்திலே கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிக்கிறோமே!’ என்று திருப்தியுடன் அவர்களும் அந்த வேலையைச் செய்து வந்தனர். வேறு என்ன திருப்தி அவர்களுக்கு வேண்டிக் கிடக்கிறது!

* * *

அன்று பெரியசாமிக்குப் பகல் வேலை. அதற்காக வழக்கம்போல் அவன் கையில் கட்டுச்சாதத்துடன் காலை ஆறுமணிக்கே கஸ்தூரி பவனத்திற்கு வந்துவிட்டான். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை கால் கடுக்க நின்ற பிறகு, அவனுக்கு வயிற்றைப் பசித்தது. ஒரு மரத்தடிக்குச் சென்று கட்டுச் சாதத்தை அவிழ்த்துச்சாப்பிட ஆரம்பித்தான். அதற்குள் அந்தப் பாழாய்ப்போன ‘ஹாரன்’ சத்தம் அவனுக்குக் காதில் விழுந்தது. அவ்வளவுதான்; கட்டுச் சாதத்தைக் கீழே விரித்தது விரித்தபடி வைத்துவிட்டு அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்; பங்களாவின் கேட்டைத் திறந்து விட்டான்; கார் உள்ளே நுழைந்ததும் அப்புறம் எஜமான் கீழே இறங்குவதற்காகக் கதவைத் திறந்துவிட வேண்டாமா? அதற்காக அவன் காரைப் பின் தொடர்ந்து ஒட்டமும் நடையுமாகச் சென்றான்.

இந்தச் சமயத்தில் பெரியசாமியின் சாப்பாட்டுக் கவலையைத் தீர்த்து வைக்க ஒரு காகம் முன்வந்தது. மனிதனைப் போல் கிடைத்ததைத் தானே தின்றுவிடவேண்டும் என்ற ஆசைகாகத்துக்குக் கிடையாதல்லவா? ஆகவே, அது சேரவாரும் ஜெகத்தீரே என்று தன் அண்டை அயலிலிருந்த காகங்களை எல்லாம் கூவி யழைத்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அவன் திரும்பி வருவதற்குள் மரத்தடியிலிருந்த கட்டுச்சாதம் அத்தனையும் காலி!

வெறும் இலையைக் கண்ட பெரியசாமிக்கு எப்ப்டியிருந்ததோ என்னமோ, அவன் தன் வயிற்றில் ஓங்கி ஓர் அடி அடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டான்

நேரம் ஆக ஆக, அவனுக்குப் பசி அதிகரித்தது. மணி எப்பொழுது எட்டடிக்கப் போகிறது என்று அவன் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்து வந்தான். பொழுது சாய்ந்து தெரு விளக்குகள் ஏற்றப் பட்டதும் அவனுக்குக் கொஞ்சம் தெம்பு உண்டாயிற்று. ‘சின்னச்சாமி இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வந்து விடுவான்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“அவன் வந்தால் வருகிறான் வராவிட்டால் போகிறான்!” என்று அவன் தன்பாட்டுக்கு வீட்டுக்குப் போய்விடவும் முடியாது; சின்னச்சாமி வந்து தன் இரவு வேலையை ஒப்புக்கொண்டபிறகுதான் போகவேண்டும் இல்லையென்றால் வேலை போய்விடுமே!

களைப்பு மிகுதியால் பெரியசாமிக்குக் கொட்டாவி மேல் கொட்டாவியாக வந்தது. அவன் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். மணி எட்டும் அடித்தது; ஒன்பதும் அடித்தது; பத்தும் அடித்தது. பதினொன்றும் அடித்தது. சின்னச்சாமியைக் காணவே காணோம் ‘சரி, அவன் செத்துத் தொலைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த ஜன்மத்தில் இப்படி லீவு எடுத்துக் கொள்ள எப்படித் துணிந்திருக்க முடியும் என்று பெரியசாமி தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

இந்தத் தீர்மானத்திற்கு வந்ததும் அத்தனை நேரமும் அவனிடம் குடி கொண்டிருந்த பரபரப்பு அவனை விட்டு அகன்று விட்டது. மறுநாள் காலை ஆறு மணியை எதிர் பார்த்தபடி அவன் நிம்மதியாக நின்றுவிட்டான்!

* * *

அன்றிரவு மணி ஒன்று அல்லது இரண்டு இருக்கும். என்றுமில்லாத அசதியாக அன்று என்னமோ அவனுடைய கால்கள் அவனுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டன; வேறு வழியின்றி உட்கார்ந்துவிட்டான். அவ்வளவுதான்; அவன் கண்கள் அவனுடைய அனுமதியில்லாமலே சிறிது அயர்ந்து விட்டன.

அடுத்த நிமிஷம் அவன் தலையில் யாரோ ஓங்கி ஓர் அடி அடித்து, அவனை எழுந்து நிற்கச் செய்தது போலிருந்தது. எசமான்தான் தற்செயலாக வந்து, தான் செய்த அநியாயத்தைப் பார்த்துவிட்டாரோ என்று பயந்து ‘இல்லை, எசமான்….’ என்று நடுங்கும் குரலில் சொல்லிக் கொண்டே அவன் எழுந்து நின்றான்.

“பயப்படாதே அண்ணே எசமான் இல்லை திருடன் என்றான்!” அவனுக்கு எதிரே நின்ற ஒருவன்.

இதைக் கேட்டதும் பெரியசாமிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. “இவன் என்ன புதுத் திருடனாயிருக்கிறானே திருட வருபவன் எங்கேயாவது தூங்குகிற காவற்காரனை எழுப்புவதுண்டா?” என்று எண்ணி அவன் குழம்பினான்.

“என்ன அண்ணே என்ன யோசிக்கிறே?” என்றான் திருடன்.

“இல்லை, நீ நிசமாவே திருடன்தானான்னு யோசிக்கிறேன்!” என்றான் பெரியசாமி.

“திருடன்தான் அண்ணே அதில் என்ன சந்தேகம்? இந்தத் தள்ளாத வயசிலே உறங்கி விழுந்துக் கிட்டே காவல் காக்கும் உன்னைக் கண்டதும், எனக்கு ‘ஐயோ பாவம்’ன்னு இருந்திச்சு, உங்கிட்டே சொல்லாமப் போவானேன்னு, சொல்லிவிட்டுப் போலாம்னு எழுப்பினேன் – சரி நான் உள்ளேபோய் வரட்டுமா?” என்றான் திருடன்.

இதைக் கேட்டதும் பெரியசாமிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் சற்று நிமிர்ந்து நின்று “என்ன துணிச்சல்டா, உனக்கு? என்னையே கேட்டுக் கிட்டா உள்ளே நுழையப் பார்க்கிறே?” என்று தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.

“டேய், சும்மா நிறுத்து உனக்கோ வயசாயிடிச்சு இன்னும் நீ ஏன் இந்த வேலையைக் கட்டிக்கிட்டு அழறே? பேசாம இருந்து நான் சொல்றதைக் கேளு – இன்னும் கொஞ்சநேரம் பொறுத்துக்கோ! அப்புறம் உனக்கு என்ன வேணுமோ, என்னைக் கேளு; நான் கொடுக்கிறேன், அதை வச்சிக்கிட்டுச் சாகிற காலத்திலாச்சும் நீ கொஞ்சம் சந்தோஷமாயிருக்கப் பாரு! – என்ன, எனக்கு உத்தரவுதானே?”

“நல்லாயிருக்குடா, நீ சொல்ற ஞாயம்! இத்தனை நாளா என் உசிரைக் காப்பாத்தி வந்த எசமானுக்கா என்னைத் துரோகம் செய்யச் சொல்றே?”

“என்னா, அண்ணே நீ கொஞ்சங்கூட விசயம் தெரியாமப் பேசறியே. எசமான் இத்தனை நாளா உன் உசிரை எதுக்காவக் காப்பாத்திக்கிட்டு வந்தாரு? – அவரு வீட்டை நாயாட்டம் காவல் காக்கத்தானே? நாலு பேரைப் போல நீயும் சந்தோஷமாவாழறத்துக்கு இல்லையே!”

“டேய், இந்த உபதேசமெல்லாம் எனக்கு வேணாம் ஒருநாளும் நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்க மாட்டேன். நீ டிரியாதையா இந்த இடத்தைவிட்டுப் போறியா? – இல்லை, கூச்சல் போடட்டுமா?

“நானும் உன்னை மரியாதையாய்த்தான் கேட்டுக்கிறேன் – பேசாம நீ என்னை உள்ளே விட்றியா? – இல்லே உன் மென்னியைப் பிடித்துத் திருகிடட்டுமா?” என்று தன் கைகளைப் பெரியசாமியின் கழுத்துக்கு அருகே கொண்டு போனான் திருடன்.

“திருகுவேடா, திருகுவே! என்னை என்ன கிழவன்னு நினைச்சுக்கிட்டியா மரியாதையாய்ப் போடா, வெளியே!” என்று கத்திக்கொண்டே, அவன் கழுத்தில் கம்பை வைத்து நெட்டித் தள்ளினான் பெரியசாமி.

அவ்வளவுதான்; “வாழத் தெரியாத மனுஷனுக்கு வைகுண்டந்தான் சரி!” என்று சொல்லிக் கொண்டே திருடன் அவன் மென்னியைப் பிடித்து விட்டான்.

அடுத்த நிமிஷம் “எசமான் எசமான் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான் சாகத் தெரியாத பெரியசாமி.

அவனுடைய அலறலைக் கேட்டுச் செட்டியார் ‘ரிவால்வர்’ சகிதம் எழுந்து ஓடி வருவதற்குள் திருடன் ஓடி விட்டான். அதுமட்டுமில்லை. பெரியசாமியின் உயிரும் அவன் உடலைவிட்டு ஓடி விட்டது.

“இதென்ன சங்கடம்! போயும் போயும் இவன் இங்கே விழுந்தா செத்துத் தொலைய வேண்டும்? இவன் உழைத்த உழைப்புக்கு “எங்களுக்கு ஏதாவது கொடு” என்று இவனுடைய பெண்டாட்டி பிள்ளைகளெல்லாம் வந்து என் கழுத்தை அறுக்குமே?” என்று எண்ணிக் கண்ணீர் வடித்தார் எதிர்கால மந்திரியான வைரவன் செட்டியார்.

அடுத்த கணம் அவருடைய கவனம் சின்னச்சாமியின் மீது சென்றது. ‘அவன் ஏன் இன்றிரவு வேலைக்கு வரவில்லை? அவனும் இவனைப்போல் செத்துத் தொலைந்தானோ? சனியன்கள் இரண்டு கிழங்களும் ஒரேயடியாய் ஒழிந்து தொலைந்தால் நம்மைப் பிடித்த பீடை விட்ட மாதிரி – ஆனால் வேறு யாராவது வந்தால் இவர்களைவிட அதிகச் சம்பளம் கேட்பார்களோ, என்னமோ – அதற்காகத்தானே இந்தக் கிழங்களே இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று இத்தனை நாளும் சும்மா இருந்தேன் என்று அவர் தமக்குள் அலுத்துக் கொண்டார். பிறகு, திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் விடுவிடுவென்று ஓடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு “டெலிபோன் செய்தார். ‘வைர வியாபாரி வைரவன் செட்டியார்’ என்று தெரிந்ததும் அவர்களும் உடனே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அடுத்த நிமிஷம் பெரியசாமியின் பிரேதம் வழக்கம்போல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, எல்லாம் வல்ல பரம் பொருளான பணத்தின் அருளினாலே, இயற்கை மரணம்’ என்று தீர்ப்புக் கூறப்பட்டது . எவனா யிருக்கட்டும், செத்துப்போன பிறகு விசேஷ கவனம் செலுத்தும் நம் சர்க்காரின் கருணையை எவ்வளவு தூரம் பாராட்டினாலும் போதாது போங்கள்!

* * *

மறுநாள்காலை ஆறு மணிக்கு, “எசமான் என்ன சொல்வாரோ, என்னமோ என்று நடுங்கிக்கொண்டே சின்னச்சாமி வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் செட்டியாருக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “ஏண்டா, நாயே! நேற்றிரவு ஏன் வரவில்லை?” என்று எரிந்து விழுந்தார்.

“என் பெண்டாட்டியைத் தேள் கொட்டிவிட்டதுங்க!” என்று ஆரம்பித்தான் சின்னச்சாமி.

“சரி, உன் பெண்டாட்டியைத் தேள் கொட்டிவிட்டதோ இல்லையோ, பின்னே நீ ஏன் இன்று வேலைக்கு வந்தாய்? போய் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டிரு, போ இங்கே நிற்காதே!”

“எசமான்….!”

“போடா! நேற்று அவன் திருடனைக் கண்டதுமே கீழே விழுந்து பிராணனை விட்டுவிட்டான்; நீ இருட்டைக் கண்டாலே பிராணனை விட்டு விடுவாயோ, என்னமோ – போய்த் தொலை!”

சின்னச்சாமிக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த தோட்டக்காரனை ரகசியமாக விசாரித்து விஷயத்தைத் தெரிந்து கொண்டான். “நல்ல வேளை நேற்று நாம் வராமற் போனது நல்லதாய்ப் போச்சு!” என்று அவன் தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டான்!

அதற்குள் செட்டியாரின் ஆத்திரமும் ஒருவாறு அடங்கியது. அவர் குரலும் உச்சஸ்தாயியிலிருந்து கீழ்ஸ்தாயிக்கு இறங்கியது. “ஏண்டா, சின்னச்சாமி அந்தப் பெரியசாமிக்குப் பெண்டாட்டி பிள்ளையெல்லாம் இருக்கா என்ன?” என்று விசாரித்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க; அவன் ஒண்டிக்கட்டைங்க! அது தெரியாமத்தான் நீங்க இத்தனை நாளும் எனக்கும் அவனுக்கும்

“ஒரே சம்பளம் கொடுத்துக்கிட்டு வந்தீங்க!” என்று சொல்லிவிட்டு அவன் மெள்ளத் தலையை சொறிந்தான்.

சம்பள உயர்வு கேட்பதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு எங்கே கிடைத்திருக்கப் போகிறது?

ஆனால், அவன் எடுத்துக் காட்டிய வித்தியாசத்தைச் செட்டியார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் அதையார் கேட்டார்? “செத்துப் போன பெரியசாமிக்குப் பெண்டாட்டி, பிள்ளை இருக்கிறதா, இல்லையா?” என்று தானே கேட்டார்? – “இல்லை” என்று தெரிந்ததும், “கவலை விட்டது, கடவுள் நம்முடைய பங்கில் இல்லாமலிருப்பாரா!” என்று தமக்குள் எண்ணி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

அடுத்த நிமிஷம் அவருடைய முகம் மலர்ந்தது. “ஏலே, சின்னச்சாமி நாளைக்கு நம்ம பெரியசாமிக்குப் பதிலா வேறே ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு வருகிறாயா?” என்று கேட்டார் உற்சாகத்துடன்.

இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கும் உற்சாகம் பிறந்தது. “அதுக்கென்னங்க, நம்ம ஊரிலே ஆளுக்கா பஞ்சம்? வேண்டிய ஆளை நான் இழுத்துக்கிட்டு வரேனுங்க!” என்றான்.

“சரி, போய் ‘கேட்’டண்டை நில்லு!” என்று சொல்லிவிட்டுச் செட்டியார் உள்ளே போய்விட்டார்.

சின்னச்சாமி பிழைத்தான்

பெரியசாமியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை; செட்டியாருக்காகவே பிறந்தவன்போல் பிறந்து, செட்டியாருக்காகவே வளர்ந்தவன் போல் வளர்ந்து, செட்டியாருக்காகவே வாழ்ந்தவன் போல் வாழ்ந்து, செட்டியாருக்காகவே மடிந்தவன்போல் மடிந்த அவன்தன்னலமற்ற சேவையின் பெருமையைப் பற்றி யாரும் பேசவில்லை. அப்படிப் பேசுவதற்கு அவன் மட்டுமா இந்த உலகத்தில் அந்த நிலையில் வாழ்ந்து அபூர்வமாகச் செத்துப் போனான் அவனைப்போல் இன்னும் எத்தனை பேரோ?

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *