சோறும் சுதந்திரமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,687 
 

மனிதனின் ஆசைக் கனவில் உதித்த அதிசய உலகிலே பசி, பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை யற்ற ஆனந்த மயமான வானுலகிலே – சுயசிரம ஜீவிகள் இருவர் ஒரு நாள் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் நீக்ரோ; இன்னொருவன் இந்தியன்.

நீக்ரோவின் தோற்றத்தைப் பார்த்ததும் ‘நீ எந்த தேசத்தைச் சேர்ந்தவன், ஐயா?’ என்று இந்தியனுக்குக் கேட்கத் தோன்றிற்று; கேட்டான்.

நீக்ரோ அதிசயத்துடன் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘நல்லவேளை எடுத்ததும் “நீ கறுப்பனா? என்று கேட்கமாமல் எந்த தேசத்தை சேர்ந்தவன்?” என்று கேட்டாயே அந்த அளிவில் மகிழ்ச்சி என்றான்.

“ஏன், என்ன?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் இந்தியன்.

“அதை ஏன் கேட்கிறாய், அப்பனே அமெரிக்காவில் என்னைப் போன்றவர்களைக் கண்டதும் “நீ கறுப்பனா?” என்றுதான் முதலில் கேட்பார்கள் – ஏன் தெரியுமா? என் தோல் கறுப்பாம்; அவன் தோல் வெளுப்பாம்!” என்றான் நீக்ரோ.

“ஓகோ!” நீ அமெரிக்காவைச் சேர்ந்தவனா? – அப்படியானால் சரிதான். எங்கள் தேசத்தில் சனாதனிகள் ஜாதித் திமிர் பிடித்து அலைவது போல் உங்கள் தேசத்தில் வெள்ளையர்கள் நிறத் திமிர் பிடித்து அலைகிறார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் இந்தியன்.

“எனக்குத் தேசம் என்று ஒன்று கேடா – என்னை ஆப்பிரிக்கா தேசத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வார்கள்; ஆனால் நான் இருந்ததெல்லாம் அமெரிக்காவில் தான்!” என்றான் நீக்ரோ.

“நீ இங்கே வந்து எத்தனை நாட்களாகி யிருக்கும்?”

“நாட்களா எத்தனையோ வருஷங்களாகிவிட்டன!”

“ஆமாம், பூலோகத்தில் நீ என்ன வேலை செய்து கொண்டிருந்தாய்?”

வேலையைப் பற்றிக் கேட்டதும் நீக்ரோ ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். பிறகு, “இன்ன வேலை என்று சொல்வதற்கில்லை அப்பனே எல்லா வேலையும் செய்து கொண்டிருந்தேன்!” என்றான் துக்கம் தோய்ந்த குரலில். “எல்லா வேலையும் என்றால்… ?”

“இது என்ன கேள்வி? அடிமைக்கு ஒரு வேலை என்று உண்டா, என்ன!”

அடிமை!

இந்த வார்த்தையைக் கேட்டதும் இந்தியனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன அமெரிக்காவில் கூடவா அடிமைகள் இருக்கிறார்கள்?” என்றான் அவன் வியப்புடன்.

அவனுடைய வியப்புக்குக் காரணம் இல்லாது போகவில்லை. அமெரிக்கா ஒரு ‘குபேர நாடு ‘ என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால், அம்மாதிரி குபேர நாடுகளில் தான் ‘அடிமைகள் அதிகமாயிருப்பார்கள் என்னும் உண்மையை மட்டும் அவன் அறிந்திருக்கவில்லை!

இந்தியனின் அறியாமையைக் கண்டு நீக்ரோ சிரித்து விட்டு, ‘நீ எந்த தேசத்தைச் சேர்ந்தவன்?’ என்று திருப்பிக் கேட்டான்.

“இந்தியாவைச் சேர்ந்தவன்”

“உனக்கு அங்கே என்ன வேலை…?”

நீக்ரோ இவ்வாறு கேட்டதும் இந்தியனுக்குத் தர்மசங்கடமாய் போய்விட்டது. “நானும் உன்னைப் போல்தான்…” என்று அவன் மென்று விழுங்கிக் கொண்டே ஆரம்பித்தான்.

“என்னைப் போல்தான் என்றால்… ?”

“அதுதான், அடிமையைப் போல!” என்றான் இந்தியன்.

“என்ன! இந்தியாவில் கூடவா அடிமைகள் இருக்கிறார்கள்?” என்றான் நீக்ரோ ஆச்சரியத்துடன்.

ஏனெனில் இந்தியா ‘புண்ணிய பூமி’ என்றும், அங்கே ‘பாவி’களே கிடையாதென்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படிப்பட்ட இடத்திலும் ‘அடிமைகள்’ இருக்கிறார்கள் என்ற விஷயம் அவனுக்கு முற்றிலும் புதிதாக இருந்தது!

நீக்ரோவின் அறியாமையைக் கண்டதும் இந்தியனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அவன் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே “அடிமைகள் இல்லாத இடமே அந்த அழகான உலகத்தில் கிடையாது போலிருக்கிறது!” என்றான்.

“ஆமாம், அப்பனே ஆமாம், உலகம் பூராவும் அடிமைகள் இருக்கத்தான் இருப்பார்கள். அரசியல்வாதிகள் அவர்களுடைய அடிமைத்தனத்தின்மேல் அவ்வப்பொழுது சுதந்திரம், ஜனநாயகம் என்பது போன்ற அழகான வர்ணங்களைப் பூசி, ஜாலவித்தை செய்து காட்டிக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்துக் கைதட்டி ஆரவாரம் செய்வதற்கும் சிலர் தயாராயிருப்பார்கள். ஆனால் எங்களைப் போன்ற அடிமைகள் – ஈன ஜன்மங்கள் மட்டும் எங்குமே, எப்பொழுதுமே இருந்திருக்க முடியாது!” என்றான் நீக்ரோ.

அவனுடைய குரலில் ஆத்திரத்தோடு அழுகையும் கலந்திருந்தது. பாவம், தனக்கும் கீழான அடிமை ஒருவன் இந்த உலகத்திலே இருப்பான் என்று அவன் அப்போது எதிர்பார்க்கவில்லை.

இந்தியன் ஒருமுறை லேசாகக் கனைத்துத் தன் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு “உங்களுடைய அடிமைத்தனத்தில் மட்டும் அப்படி என்ன விசேஷம் ஐயா?” என்று மீண்டும் பேச்சைஆரம்பித்து வைத்தான்.

“விசேஷமா ஒரு காலத்தில் பணம் படைத்த பாதகர்கள் ஆடுமாடுகள் போல எங்களைச்சந்தையில் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள் ஐயா, வாங்கிக் கொண்டிருந்தார்கள்!” என்று நீக்ரோ பொங்கி வந்த கோபத்தில் கத்தினான்.

அவனைத் தேற்ற இந்தியன் அலட்சியமாக “பூ! இவ்வளவுதானா?” எங்கள் தேசத்திலே எங்களையெல்லாம் விலை கொடுக்காமலே வாங்குகிறார்கள் என்றான்.

நீக்ரோவின் தலையில் இடிவிழுவது போலிருந்தது. ‘என்ன’ என்று அவன் வியப்பின் மிகுதியால் வாயைப் பிளந்தான்.

“ஆமாம், பெரிய பெரிய பண்ணையார்களிடம் நாங்கள் பரம்பரை பரம்பரையாகவே அடிமைகளாயிருப்போம். எங்கள் தாத்தா அடிமையா? – என் அப்பாவும் அடிமை; அப்பா அடிமையா? – நானும் அடிமை; நான் அடிமையா? – என் மகனும் அடிமை; மகன் அடிமையா? – என் பேரனும் அடிமை – இந்த ரீதியில் எங்களுடைய வாழ்நாட்கள் கழிந்து கொண்டிருக்கும். ஆனால் ‘அடிமை என்ற வார்த்தைக்கு எங்கள் நாட்டில் பலவித அர்த்தங்களுண்டு; அவற்றைக் கண்டு நாங்கள் சிரிப்பதுண்டு. எது எப்படி யிருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு அங்கே விலையும் கிடையாது, கிலையும் கிடையாது!” என்றான் இந்தியன்.

இந்த இடத்தில் நீக்ரோவுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, “ஆமாம், உங்களைத் தேடிக் கொண்டு அவர்கள் வருவார்களா, அவர்களைத் தேடிக்கொண்டு நீங்கள் போவீர்களா?’ என்று அவன் கேட்டான்.

‘அழகுதான்! எங்களைத் தேடிக்கொண்டு அவர்கள் ஏன் வருகிறார்கள்? நாங்கள்தான் அவர்களைத் தேடிச் செல்வோம்’ என்றான் இந்தியன்.

‘நல்லவேளை நாங்கள் அவர்களைத் தேடிக் கொண்டு செல்வதில்லை; அவர்கள் தான் எங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள்’ என்றான் நீக்ரோ.

இந்தியன் “பரவாயில்லையே” என்று சொல்லி நீக்ரோவின் முதுகில் ஒரு ‘ஷொட்டு’க் கொடுத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான்.

“பரவாயில்லையாவது எங்களுக்குக் கிடைத்த அடியும் உதையும் உங்களுக்கெல்லாம் கிடைத்திருக்குமா? என்ன” என்று சொல்லிவிட்டு, நீக்ரோ தழும்புகள் நிறைந்த தன் முதுகை இந்தியனுக்குத் திருப்பிக் காட்டினான்.

“வெட்கக் கேடுதான்! அடியும் உதையும் எங்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருக்குமா? – ஏதாவது ஒரு சிறு தவறு செய்தால் போதும்; மரத்தோடு மரமாக எங்களைச் சேர்த்துக் கட்டி வெளு, வெளு என்று வெளுத்து விடுவார்கள். உனக்கு ஒரு கதை தெரியுமா? – எங்கள் வம்சத்தில் நந்தன் என்று ஒருவன் இருந்தானாம். அவன் ஒரு பைத்தியம் – அதாவது பகவான் மீது பைத்தியம். அந்தப் பைத்தியத்தின் காரணமாக அவன் பண்ணையார் இட்ட வேலையைச் சரியாகச் செய்ய மாட்டானாம். அதனால் அடிக்கடி அவன் அவரிடம் அடிபட நேர்ந்ததாம். அப்படி அடிபட நேரும்போதெல்லாம் அந்த அப்பாவி என்ன சொல்வானாம் தெரியுமா? – ஐயோ! என்னை அடிப்பதால் உங்கள் கை வலிக்குமே ஆண்டே என்று சொல்லிக் கதறுவானாம்! – அந்தக் காலத்து நந்தனார் அப்படியென்றால் இந்தக் காலத்து நந்தனார்கள் எப்படி என்கிறாய்? – சும்மா அடியுங்க, சாமி நல்லா அடியுங்க! உங்க உப்பைத்தின்றேன். உங்கதுணியைக் கட்றேன் – நீங்க அடிக்காம வேறே யாரு சாமி, அடிக்கிறது?’ என்று சொல்லித் தங்கள் முதுகை முதலாளிகளுக்குத் திருப்பித் திருப்பிச் காட்டுகிறார்கள்! – எப்படியிருக்கிறது, கதை?”

“கதை நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் இதுகூட எனக்கு தேவலை என்று படுகிறது; ஏனெனில், இதை விட மோசமாக சோதனைகளுக்கெல்லாம் ஒரு காலத்தில் நாங்கள் ஆளாகியிருகிறோம்…”

“அப்படி என்ன சோதனைகள், ஐயா?”

“சில சமயம் எங்கள் எஜமானர்களுக்கு ஏதாவது பொழுது போக்கு வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள், தெரியுமா? சிங்கம், புலி முதலிய பயங்கரக் காட்டு மிருகங்களோடு எங்களைச் சண்டையிட வைத்து வேடிக்கை பார்ப்பார்கள் – அதுவும் எப்படி? சண்டைக்கு விடுவதற்கு முன்னால் கூண்டிலிருக்கும் சிங்கத்துக்கோ, புலிக்கோ இரண்டு மூன்று நாட்கள் தீனி எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருப்பார்கள்….”

“ஏன் அப்பொழுது தான் நீங்கள் அதனுடன் சண்டையிட்டு ஜயிக்க முடியும் என்றா…?”

“ஜயிக்கவாவது, கியிக்கவாவது பசி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமா யிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரத்தில் அது எங்களை தீர்த்து விடும் என்றுதான்!”

“நிஜமாகவா?”

“ஆமாம், அப்பனே! நாங்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை யென்றால் எஜமானர்களே எங்களை தீர்த்து விடுவார்கள் சொல்லப் போனால் நாங்களும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை; ‘எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் அந்த மனித அரக்கர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு நல்லது’ என்று எண்ணி, இந்த ஜன்மத்தை உயிரோடு மறந்து விடுவோம்”

இந்தக்கதையைக் கேட்டதும் இந்தியன் ஒரு பெருமூச்சு விட்டு, “இதே மாதிரி எங்களுடைய முதலாளிகளும் எங்களைச் சண்டையிட வைப்பதுண்டு; ஆனால் மிருகங்களோடு அல்ல; மனிதர்களோடு….!” என்று சொல்லித் தன் கதையை ஆரம்பித்தான்.

“என்ன! உங்கள் தேசத்தில் மனிதர்களோடு மனிதர்களா சண்டையிடுவீர்கள்?” என்று நீக்ரோ வியப்புடன் கேட்டான்.

“ஆமாம், வேலையில்லாதவர்களோடு வேலையிருப்பவர்களைச் சண்டையிட வைத்து, எங்கள் முதலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள். அதுதான் அவர்கள் பொழுது போக்கு”

“அது எப்படி?”

“லாபத்தில் நஷ்டம் வரும் என்று தோன்றும் போதெல்லாம் அவர்கள் எங்களுடைய கூலியைக் குறைக்கப் பார்ப்பார்கள்; அல்லது எங்களில் சிலரை வேலையிலிருந்து நீக்கப் பார்ப்பார்கள். இந்த அக்கிரமத்தை எதிர்த்து நாங்கள் வேலை நிறுத்தம் செய்வோம். அந்தச்

சமயத்தில் வேலையில்லாதவர்களை முதலாளிகள் எங்களுக்குப் போட்டியாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். அவர்களும் ‘சும்மா இருப்பதற்குப் பதிலாக கிடைத்தவரை கிடைக்கட்டுமே’ என்று வேலை செய்ய வருவார்கள். நாங்கள் அந்தக் கருங்காலிகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? – எங்களுக்கும் பசி, அவர்களுக்கும் பசி! – பசியோடு பசி மோத வேண்டியதுதானே? – சண்டை பிரமாதமாக நடக்கும்; முதலாளியின் பாடு குஷிதான்!”

‘என்ன சொன்னாய்? பசியா’ என்று நீக்ரோ அதுவரை கேள்விப்படாத ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டவன் போல் துள்ளியெழுந்து நின்று கேட்டான்.

“ஆமாம், பசிதான்!” என்றான் இந்தியன்.

“அதைப்பற்றி நீ கவலைப்பட்டதுண்டா, என்ன?”

“நல்ல கேள்வி கேட்கிறாய், ஐயா! அந்தப் பாழும் பசியைப் பற்றித் தான் என்னைப் போன்றவர்களுக்கு அல்லும் பகலும் அங்கே கவலை!” என்றான் இந்தியன்.

“நிஜமாகவா சொல்கிறாய்?”

“பின்னே பொய்யா சொல்கிறேன்?”

“எனக்கென்னமோ இது வேடிக்கையாகத்தான் இருக்கிறது: பூலோகத்திலிருந்து எத்தனையோ விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட்டிருக்கிறேன், ஆனால் பசியைப்பற்றி நான் மட்டும் கவலைப்பட்டதே கிடையாது. ஏனெனில், சாகும் வரை என்னுடைய எஜமான் எனக்குச் சோறு போட்டு விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்றான் நீக்ரோ பெருமையுடன்.

“தேவலையே! அப்படியானால் நீ பழைய அடிமை என்று சொல்லு” என்றான் இந்தியன்.

“நமக்குள்ளேயே வித்தியாசமா! நீ மட்டும் என்ன அடிமை?” என்று நீக்ரோசிரித்துக் கொண்டே கேட்டான்.

“புது அடிமை! ஏனெனில், உனக்கு இருந்த அந்தச் சோற்று நம்பிக்கை எனக்கு இல்லையல்லவா?” என்றான் இந்தியன்.

நீக்ரோ ஒரு கணம் யோசித்துவிட்டு, “அப்படியானால் நீ சொல்வதை நான் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் அப்பனே!” என்றான்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *