கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 1,618 
 

(1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னணிக் காவலரண்களை மேலும் முன்னுக்கு நகர்த்தும் வேலை அன்று மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. சும்மாவே அவர்களுக்குச் சற்றுப் பெரிய தொண்டை. வழமையைவிட அன்று கூச்சலும் கும்மாளமும் இன்னும் அதிகமாக இருந்தது. ஓடிப்போய் அருகிருந்த வடலிகளில் பிஞ்சுப் பனையோலைகளை வெட்டுவதும், மிதித்து பாடம் போடாமலேயே அதை வேலியில் கட்டுவதுமாக (ஓலைகளை நாம் பாடம் போடும்வரையில் இராணுவம் சும்மா இருக்குமா, என்ன?) வேலி மளமளவென்று உயர்ந்து கொண்டிருந்தது. வேலியில் இன்னதுதான் வைத்துக் கட்டுவது என்றெல்லாம் இல்லை. கையில் எதுவெல்லாம் அகப்படுகிறதோ அதுவெல்லாம் அவர்களின் கைவண்ணத்தில் வேலியில் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஓயாத அலைகள் 02 இன்போது படையினர் வீசியெறிந்துவிட்டு ஓடிய மழைப் பாதுகாப்பு உடைகள். ஏற்கனவே கட்டப்பட்ட வேலியில் எறிகணை விழுந்ததால் நெளிந்து, பின் எங்கள் காந்தள் மென்விரல்களால் தட்டிக்கொட்டி நிமிர்த்தப்பட்ட தகரங்கள், எல்லாவற்றையும் வைத்து தந்திக் கம்பிகள், சாறத்திலிருந்து கிழிக்கப்பட்ட துணிகள், இராணுவத்தினரின் பிய்ந்து போன பாதணிகளிலிருந்து எடுக்கப்பட்ட நூல்கள் என்பவற்றால் வரிந்து கட்டியவாறு அந்த சுறுசுறுப்பான சிட்டுக் குருவிகளின் அணி வேலியை நீட்டிக்கொண்டேயிருந்தது.

“ஏய் சத்தம் கூடுது. அவன் ஷெல் குத்தப்போறான்”

என்று யாராவது ஒருத்தி சுய உணர்வு வந்து அதட்டும் போது குறையும். பின்னர் மெல்ல மெல்ல ஏறும். பிறகு யாரேனும் அதட்ட, குறையும். அனுபவமுள்ள ஒருத்தி அவர்களின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டிப்பாள். அவளை அங்கே நிற்கும் சின்னன் ஒன்று கிண்டல் செய்யும்.

“ஏன் பழஞ்சீலை கிழியிறமாதிரிப் புறுபுறுக்கிறாய்” அதற்கு அவள் கண்டிப்பாள்.

“பேய்க்கதை கதையாதை. ஒரு ஷெல் தலையில விழுந்தா, தெரியும்” அதற்குள் ஒருத்தி கையிலிருந்த எல்லாவற்றையும் தொப்பென்று போட்டுவிட்டு அருகிலே பதுங்குகுழி வெட்டிக்கொண்டிருப்பவர்கள் குவித்த மண் கும்பிமேல் மெத்தையிலே படுப்பதுபோல் படுத்துக் கால்களை ஆட்டியவாறு,

“சரி சரி, வேலை செய்து களைச்சுப்போனோம். அந்த றோல்சையும் தக்காளி சோசையும் கொண்டு வாங்கோ. சாப்பிட்டு வேலை செய்வம்” என்று சீரியசான குரலில் சொல்ல, பக்கத்திலிருந்தவள் கொடுத்தாள் ஒரு அடி.

“ஏன்ரி இல்லாததுகளை நினைவுபடுத்தி வாயை பழுதாக்கிறாய்” என்று அவள் எரிச்சலாக ஏச, மண்வெட்டியுடன் பதுங்குகுழியுள் நின்று பக்கச் சுவர்களை செதுக்கிக்கொண்டிருந்தவள் மண்வெட்டியைப் போட்டுவிட்டு மேலே ஏறினாள்.

“பொறுங்கோ. நான் இவளை முதல்ல இந்த பங்கருக்குள்ளே போட்டு மூடி விட்டுத்தான் அடுத்த வேலை”

என்றவாறு கும்பியில் படுத்திருந்தவளை உருட்டிவிட, அவள் வெகு லாவகமாக உடலை வளைத்துச் சரிந்து, கீழே விழாமல் பதுங்குகுழியில் நேராகக் குதித்து, வெட்டப்பட்ட படிகளால் மேலேறி வந்து அவளுக்கு நையாண்டி காட்ட, அவளை இவள் துரத்த, அவள் ஓட, எல்லோரும் வேலையை விட்டுவிட்டு இவர்களைப் பார்த்துக் கைகளைத் தட்டிக் கூக்குரலிட.

களமுனை வாழ்வில் வருகின்ற இந்த நிமிடங்கள் பொன்னானவை. வெளியில் யாருக்குமே இந்த உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். இப்படியெல்லாம் இராணுவ முன்னணிக் காவலரண் வரிசைக்கு அருகிருந்து குதித்து கும்மாளமடித்துவிட்டு, ஒரு நாள் எங்களில் ஒருவரை தாயகமண் தனது மடியில் கிடத்தி கல்லறை எழுப்பும் போது எங்களில் ஏற்படும் உணர்ச்சிகள். அதையும் புரிந்துகொள்வது கடினம். கூடவேயிருந்த ஒருத்தியின் இழப்பு எம்மை வலுக்கொள்ள வைக்குமே தவிர, கிலிகொள்ள வைக்காது. அறிவு தெரிந்த நாளிலிருந்தே கூடிவாழ்ந்த உறவுகளைக்கூட பிரியமுடிந்தவர்களால், இழந்துபோன தோழியரின் நினைவு சுமந்த காவலரண் வேலிகளை, களமுனைத் தோழிகளை மட்டும் பிரிய முடிவதில்லை.

ஒருத்தி ஓட, மற்றவள் துரத்த, அடுத்தவர்கள் கூக்குரலிட, எழுந்த ஓசையை அவர்களுள் ஒருத்தியின் குரல் கட்டுப்படுத்தியது.

“சத்தம் போடாதையுங்கோ. நிலம் வெடிக்கப்போகுது. வீட்டில் இருந்தா இப்படியெல்லாம் குதியன் குத்தியிருப்பியளோ? சத்தம் போடாமல் ஒரு மூலையில் இருந்திருப்பியள்” இதற்கு அங்கு நின்ற கிலுக்கிட்டான் ஒன்று சட்டெனப் பதிலளித்தது.

” அதுதானே வீட்டில் இல்லாமல் இஞ்ச வந்து நிக்கிறம்” மீண்டும் ஒரு முறை எல்லோரும் கொல்லென்று சிரிக்க, அதற்குள் துரத்தப்பட்ட இருவரும் சமாதானமாகி கைகளைக் கோர்த்தவாறு வர,

“சரி இனி வேலையை தொடங்குவம்” என்று எழும்பிய குரலை, சாப்பாடு எடுக்கப்போய் வந்து கொண்டிருந்தவர்களுள் ஒருத்தியின் கூக்குரல் அமுக்கியது.

“வால் குடுத்துக் கத்தி வாங்கினேன் டும்டும்டும், கத்தி குடுத்து துவக்கு வாங்கினேன் டும் டும் டும், துவக்குக் குடுத்து ஸ்பெஷல் வாங்கி டும்டும்டும்”

என்று ஏதோ தனக்குத் தெரிந்த மாதிரியெல்லாம் நடனமாடி, வாயில் வந்தவற்றையெல்லாம் பாடியவாறு வந்தவளின் கையில் ஒரு ஷொப்பிங் பை. அதற்குள் அன்று அவர்களுக்கென்று (நீணட நாட்களின் பின்) ஏதோ சிற்றுண்டி வந்திருக்கிறதென்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சும்மா ஒன்றுமில்லாததற்கே கூத்தாடுகின்ற இவர்கள் தமக்கு விருப்பமான ஒன்று வந்தால்… |

“என்ரை வாயாலை றோல்சைப்பற்றி நான் கதைச்ச நேரம் நல்ல நேரம்” என்று மார் தட்டினாள் ஒருத்தி.

“தான் கூவித்தான் சூரியன் உதிக்கிறது எண்டு எப்பவோ ஒரு சேவல் சொன்ன ஞாபகம் வருகுது” என்று கேலி பேசினாள் இன்னொரு குறும்புக்காரி.

*மெடிக்ஸை வரச் சொல்லுங்கோ. அவசரமாக் கட்டுப்போடவேணும். ரத்தம் வீணாகப் போகுது” என்று அவசரப்பட்டாள் றோல்ஸ்காரி.

“ஏன்? என்ன பிரச்சனை?” என்று எல்லோரும் அந்தரப்பட, இவள் வலு ஆறுதலாகப் பதிலளித்தாள்.

“அவள் பாவம். வாலைக் குடுத்ததெல்லோ எங்களுக்குச் சாப்பிட என்னவோ வாங்கியிருக்கிறாள். மீண்டும் ஒரு முறை எல்லோரும் சிரித்துவிட்டு. சாப்பாட்டு பையை ஆவலாகப் பார்க்க,

“கொண்டு வா நான் பிரிக்கிறன். குரங்கு அப்பம் பிரிச்சமாதிரி” என்று சொன்னவாறு பையுள்ளிருந்த வடையொன்றை எடுத்து வாயில் போட்டுவிட்டுத் திருப்தியாகத் தலையை ஆட்டியவாறு,

“ரேஸ்ற், இந்த வடைக்காக தலையாலதான் நடக்க வேணுமெண்டாலும் பரவாயில்லை, நடக்கலாம்” என்றவாறு எல்லோருக்கும் பங்கிடத் தொடங்க ஒருத்தி குறுக்கிட்டாள்.

“ஒரு வடைக்காக தலையால நடக்கலாம் எண்டு சொல்லுறாய் அப்ப நீ நல்ல சாப்பாடு கிடைக்குமென்டா அதுக்காக எதையும் செய்வியோ?”

“இல்லை ”

அவள் பதில் சட்டென வந்தது. என்ன சொல்லப்போகின்றாள் இவள் என்று எல்லோருமே ஆவலாகத் திரும்பினர்.

“தன்ரை பிள்ளையள் பிழை விடாதுகள். சும்மா வாயடிக்குதுகளே தவிர வேலையிலே சரியான கெட்டிக்காரிகள். இதுகளை நம்பி எந்த வேலையையும் குடுக்கலாம் எண்டு அண்ணை எங்களில் நம்பிக்கை வைச்சிருக்கிறாரெல்லோ. அந்த நம்பிக்கைக்கு மாறாக நடக்காமல் வேற ஏதாவது செய்வன். நான் ஒருத்தி விடுற பிழை, எல்லாப் பிள்ளையளிலையும் அவர் வச்சிருக்கிற மதிப்பைக் கெடுக்கிறதை நான் விரும்பேல்லை.”

– வெளிச்சம் 1999 ஆனி ஆவணி, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *