ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம்.
தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது.
இசக்கி இந்த நேரம் வந்ததால், சிவஞானம் புரிந்து கொண்டான்.
இசக்கியின் சைக்கிள் நெருங்கியது; சைக்கிளின் பின், தென்னை ஓலை இருந்தது.
“”யாருடே?” என்றான் சிவஞானம்.
“”நம்ம காபி கிளப் பாட்டையா…” என்றான்.
“”பிரமநாயகம் பிள்ளையாலே?” என்றான் சிவஞானம்.
“”பொறகு என்ன… இங்க, பத்துப் பன்னிரண்டு காபி கிளப் இருக்கிற மாதிரி கேக்கேரு.”
“”எப்ப டே?”
“”காலேல நாலு மணி இருக்கும்… சீவம் போனா அப்படிப் போகணும். எந்திரிச்சு குளிச்சிட்டு, அடுப்பைப் பத்த வச்சிருக்காக. இட்லிக் கொப்பரைலே மாவை ஊத்திவச்சிட்டு, “ஆவுடை’ன்னு ஆச்சியக் கூப்பிட்டிருக்காக. ஆச்சி “என்னா…’ன்னு வந்திருக்கா; ஆளில்ல. இதுல்லாவே சாவு,” இசக்கி கூறிய மரண விமர்சனம் இது.
“”பத்துப் பதினொரு மணி ஆயிரும்லா?”
“”ஆமா…” என்ற இசக்கி, அப்படியே சைக்கிளை மிதிச்சான்.
சிவஞானம் அப்படியே சைக்கிளை பூட்டி வச்சிட்டு, வீட்டுக்காரிகிட்ட, “”ஏளா… நான் போயிட்டு வந்திருதேன். இட்லிய ஊத்தி வை. வந்து சாப்பிட்டுட்டு ஆத்துக்கு போகணும்…”
“”நா வர வேண்டாமா?”
“”தூக்குறதுக்கு முன்னாலே வாயேன்.”
பிரமநாயகம் பிள்ளைக்கு சொந்த ஊர் திருநெல்வேலியே தான். ஆவிடை அம்மாளுக்கு ஒட்டநத்தம். பிள்ளைவாளுக்கு பதினெட்டு வயசு. அவர் மனைவி ஆவிடைக்கு; கல்யாணம் ஆகும் போது, பதினஞ்சு வயசு.
ரெண்டு ஆம்பிளைப் பையங்க, அடிச்சு அழ பொம்பளப் புள்ள இல்லையேன்னு, ஆவிடையின் குறை, ஏழு வருஷம் கழிச்சுத் தீந்தது. அவ குல தெய்வம் கொடுத்த பிள்ளைன்னு, பாப்பாத்தி அம்மன் பேரு வச்சா.
சொந்தக்காரங்க யார் வந்தாலும், காபி கிளப்புக்குத்தான் போவாங்க. ஏன்னா, விருந்தோம்பலில் பிரமநாயகம் பிள்ளை குணம், கொஞ்சம் கூட ஆவிடை ஆச்சிகிட்ட கிடையாது.
“சாப்பிடுத நேரம் பாத்தே, சொந்தக்காரங்க வாராங்க…’ன்னு சந்தேகம் எப்போதும் அவளுக்கு.
பிள்ளைவாள் வீட்டுப் பெண்களிலே, பாம்படம் அணிகிற வகையில் கடைசி, ஆவிடை ஆச்சிதான்.
நல்ல வேளை… பிள்ளைவாளின் ரெண்டு மகன்களும், உள்ளூர் பள்ளிக்கூடத்திலேயே பத்தாவது படித்துவிட்டு, காபி கிளப்பை கவனித்துக் கொண்டதால் கவலை இல்லை. ரெண்டு பேரும், பொறியியல் படித்து விட்டு, அமெரிக்காவிற்கு போயிருந்தால், பிள்ளைவாளுக்குக் கொள்ளி வைக்க, ரெண்டாம் சொக்காரன் வீட்டுப் பிள்ளைகள்தான் கை கொடுக்க வேண்டும்.
ஒரு மொட்டைக்கு எப்படியும், ஒரு கோட்டை (நெல்வயல் விதைப்பாடாவது) அழ வேண்டும்.
மகள் பாப்பாத்தியை, கிளாக்குளத்தில் கட்டிக் கொடுத்திருந்ததனால், அவள் முதல் பஸ்சிலேயே வந்து விட்டாள். அம்மன் அருளினாலும், ஆவிடை ஆச்சியின் தவத்தில் பிறந்ததா<லும், அடிச்சு அழுததில், உறவுகள் எல்லாம் துடித்து விட்டன.
பிரமநாயகம் பிள்ளையின் ஒண்ணு விட்ட அண்ணன் பாடகலிங்கம் பிள்ளை, பத்தமடையில் இருந்து வந்த போது, இசக்கி ஓலையை முடிந்து கொண்டிருந்தான்.
கம்பு ஊன்றாமல், அந்த வயதிலும் செக்கச் செவேலென்று வருகிற பிள்ளைவாளை பாத்து, “”தம்பிய அனுப்பிச்சிட்டு, மெதுவா வாரேளே…” என்றான் இசக்கி.
பதிலேதும் பேசாமல், வீட்டிற்குள் நுழைந்த பாடகலிங்கம் பிள்ளையை பார்த்தவுடன், இறந்தவரின் மகன்கள் இருவரும், பெருங்குரலெடுத்து அழுது கொண்டே ஓடிவந்து, கட்டிப்பிடித்துக் கதறினர்.
“”ஏய்… அவாளப் போட்டு எதுக்குடே இந்த அமுக்கு அமுக்குதீய… ஓங்க அப்பாவே, சனிக்கிழமைல மண்டையப் போட்டிருக்காக… சனிப் பொணம் தனியாப் போகாதுன்னு சொலவடை வேற இருக்கு… அவாளை விடுங்க,” என்றான் இசக்கி.
பாடகலிங்கம் பிள்ளைக்கு பகீரென்றது.
“பேதில போவான் என்ன வார்த்தை சொல்லுதான்…’ என்று நினைத்துக் கொண்டார்.
அந்த நேரம், சிவஞானம் உள்ளே வந்தான். வந்தவுடன், மூத்த மகனிடம் போய், “”என்னடே அப்பா போயாச்சு போல…” என்றான். அதற்கு மேல் அவனுக்கு பேசத் தெரியாது.
மூத்த மகனின் பள்ளித் தோழன் அவன்.
சிவஞானத்தை பார்த்தவுடன், பாப்பாத்தி கதறினாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் ஆறியவள், “”என்னண்ணே… மதினி ஊர்லதான் இருக்காளா; இல்லை தென்காசிக்குப் போயிருக்காளா?”
பாதி நாள் அம்மா வீட்டிலேயே தன் மனைவி இருப்பாள் என்பதை, சாவு வீட்டில் கூட வைத்துக் கேட்கிற, பாப்பாத்தியின் குசும்பு, அவ அம்மா ஆவிடை ஆச்சியிடமிருந்து வந்தது என்பது, சிவஞானத்துக்கு தெரியுமென்பதால், கோபப்படவில்லை.
“”இல்லம்மா… இப்ப வந்திருவா,” என்றான் சிவஞானம்.
வெளியே வந்த சிவஞானம், இசக்கிக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று, அவனருகில் போய், “”ஏதாவது செய்யணுமாடே?” என்று கேட்டான்.
“”எங்க கூட உக்காந்திரி,” என்றான் இசக்கி.
பள்ளி வாத்தியார், வரும்போதே வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்…
“”ஏல எசக்கி… எல்லாத்துக்கும் ஓலை முடியதியே… ஒனக்கு யாருலே முடிவா?” என்றார்.
“”அந்த சான்செல்லாம் ஒங்களுக்குக் கிடையாது… ஒங்களுக்கெல்லாம் முடிஞ்சிட்டுத்தான் வரணும்ன்னு, சாமி எனக்கு <உத்தரவு கொடுத்திருக்கா,” என்றான் இசக்கி.
ஓலை வேல முடிஞ்சுது.
ஒரு கோழியக் கொண்டு அங்கே போட்டான், சைக்கிள் கடை கோனார் மகன்.
“”அண்ணாச்சி… எதுக்கு நீங்க வெள்ளாங்குடிச் சாவுலே, கோழியைக் கொண்டு போடுதீய?”
“”எய்யா… அது ஒண்ணுமில்லடா… தாத்தா சனிக்கிழமை மண்டையப் போட்டதனால, அவாள் தனியாப் போவ மாட்டா. இங்கன, அவாளுக்கு மூத்த ஐட்டமே நாலஞ்சு கெடக்கு. அவாள் போன ஒடனே, தபாலப் போட்டு, இவங்களக் கூப்பிட்டிரக் கூடாதுன்னு தாண்டே கோழி வாங்கியிருக்கு.”
“”அத என்னண்ணாச்சி பண்ணுவீக?”
“”தாத்தாவத் தூக்கும் போது, பாடையில கட்டிருவோம். கருப்பந்துறைக்குப் போனதும், அவாளை, எருவில வச்சு தீயைப் போட்டுட்டு, இதயும் கொன்னுருவோம்.”
“”அப்படியா அண்ணாச்சி…”
“”சொக்கன் வந்திட்டானா?” என்று, வீட்டுக்குள்ளிருந்தே பெரியவர் ஒருவர் கேட்டார். “”அவன் அப்பதயே வந்திட்டான்…” என்றான் இசக்கிப் பயல்.
“”சங்கைப் பெருக்கச் சொல்லுலே…”
“”ஏய் சொக்கா… சங்கைப் பெருக்கு…” என்றான். “சங்கை பெருக்கு’ என்றால், ஊது என்று அர்த்தம்.
அப்பவும் இசக்கி பயல் சும்மா இல்லை…
“”ஏய்… அடைக்காம ஊது… பெரிய பாட்டையாக்கள், ரெண்டு மூணு பேரு இருக்காங்க,” என்றான்.
சங்கு பெருக்கும் போது, அடைப்பு வந்தா, ஒரு சாவு விழும்ங்கறதும் நம்பிக்கை.
பாடகலிங்கம் பிள்ளை, பச்சியா பிள்ளை, பரமசிவம் பிள்ளை மூவருமே அதிர்ந்து போயினர். சங்கு அடைப்பின் பயன், தாங்களாகி விடக் கூடாதென்று.
நீர் மாலைக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான் இசக்கி. ஒரு வெள்ளிக்குடம், ஒரு செப்புக்குடம், பித்தளைக் குடங்கள் ஐந்தாறு, ஒரு கெண்டி, மாவிலை, சந்தனம், குங்குமம், ஊதுபத்தி, மாலைகள் என, அவன் அனுபவப் பாடத்தில் எல்லாவற்றையும், சரியாகச் செய்து, அனைவரையும் அழைத்தான்.
மகன்கள், பேரன்கள் மற்றும் சம்பந்தக்காரர்கள், அண்ணன் முறைக்காரர்கள் என்று, ஆளுக்கொரு குடத்தைத் தூக்கிக் கொண்டனர்.
பூசைக்கான தட்டை, பூசாரி எடுத்துக் கொண்டார். அம்மன் கோவில் மணி, சாவு வீட்டிற்கு வந்து விட்டது.
இசக்கிதான் மணியை அடித்தான்.
பூசாரியின் வாய்க் கொழுப்பு, அவரைச் சும்மா இருக்க விடவில்லை.
“”ஏல… எத்தனை வீட்டில, மணி அடிச்சிருப்பே?” என்றார்.
“”யோ தாத்தா… நீரு உச்சிமாளிக்கு மட்டும் தான் அடிக்க முடியும். ஆனா, ஒமக்கும் மணி அடிக்கிற வேலய, ஆத்தா ஏங்கிட்டல்லாவே கொடுத்திருக்கா,” என்றான்.
மனசுக்குள்ளேயே பயந்து கொண்டிருந்த பெரியவர் பச்சியா பிள்ளை, “”யோவ்… அந்தப்பயகிட்ட ஏம்ய்யா பேச்சைக் கொடுக்கீரு?” என்றார்.
பாடகலிங்கம் பிள்ளை மட்டும், பாடை கிட்டக் கிடக்குறக் கோழியப் பாத்துக்கிட்டே, தெப்பக்குளத்துக்கு பொறப்பட்டார். அவரும் ஒரு குடத்தைத் தூக்கின ஒடனே, “”என்னத்துக்கு, நீங்க வயசு காலத்தில் தூக்குதீய?” என்றான் இசக்கி.
பொங்கிட்டார் பிள்ளைவாள்.
“”யாருக்குலே வயசாயிட்டு… ரெண்டு பேரும் ஓடிப் பாப்போமாலே… சிறுக்கிபுள்ள… வந்ததிலேருந்த பாத்துக்கிட்டிருக்கேன்… வாய மூடுதியாலே,” என்று, உயிர் குறித்த பயம், ஒரே சப்தமாக வந்தது பிள்ளைவாளிடமிருந்து.
“”சரி… சரி… விடுங்க. சின்னப்பய வெளயாட்டுக்கு என்னத்தயாவது சொன்னா… நீங்க போயி…”
மணியோசையும், சங்கோசையுமா, நீர்மாலை ஊர்வலம் தெப்பக்குளக் கரையை வந்தடைந்தது.
“”ஏல… எய்யா… பாத்து எறங்கணும்ல… படித்துறை பாசியாயிருக்கு,” பெரியவன் மகன் கிட்டயும், சின்னப் பயகிட்டயும் சொல்வது போல், “”பெரிய ஆட்களுக்குந்தான் சொல்லுதேன்,” என்றான் இசக்கி. பாடகலிங்கம் பிள்ளையின் கோபம் அவனை பாதித்திருந்தது.
பெரியவன் மூணு முங்கு, சின்னவன் மூணு முங்கு போட்டனர். ரெண்டு பேரையும், இசக்கி பிடித்துக் கொண்டு குளிப்பாட்டினான்.
பாடகலிங்கம் பிள்ளை, இசக்கியிடம் விட்ட சவாலின் விளைவாக, குளத்துப் படிக்கட்டில் இறங்கினார். படீரென்று பாசி வழுக்க, குளத்திற்குள் முழுகினார்.
“நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்று, எண்பது வயது வரை பாடிய திமிரை, யமன் மனதிலேயே வைத்திருந்து வஞ்சம் தீர்க்கிறான்…’ என்று, மனது பதைபதைக்க மூழ்கி எழுந்தார். “சனிப்பொணம் தனியாகப் போகாது’ என்ற சொலவடை பயத்தில், மீண்டும் மூழ்கி எழுந்தார். “கோழி <<உயிருக்குள் இருக்கிற நம் உயிரை, இப்போதே யமன் எடுத்துக் கொள்வானோ…’ என்று மூழ்கி எழும்போது, இசக்கி பயல் அவரைத் தூக்கினான்.
இப்ப அவன் பங்குக்கு, “”என்ன எழவு மயித்துக்கு… படியிலே எறங்குனீரு… திரும்ப இன்னொரு ஓல வெட்டவும், முடையவும் எவனுக்குத் தெம்பிருக்கு?” என்றான்.
எல்லாரும் சிரித்தனர்; பாடகலிங்கம் பிள்ளை கேவலப்பட்டுப் போனார்.
நீர் மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, இறந்துபோன கிளப் உரிமையாளர் நண்பரின் கார், கீழத்தெருவில் திரும்பியது. பிரமநாயகம் பிள்ளையின் உண்மையான நண்பர் அவர் தான். நீர்மாலைக்குப் பின்னாலேயே, அவரது காரும் ஊர்ந்து வந்தது.
குடங்கள் இறக்கப்பட்டன. பெரியவன் கையிலிருந்த கெண்டி, முன்னாலே வைக்கப்பட்டது.
பிரமநாயகம்பிள்ளைக்கு அபிஷேகம் நடந்தது. மகள் பாப்பாத்தி அம்மாளைப் பத்திரமாக, உடும்புப் பிடியாய் பிடித்து, தண்ணி ஊத்த வைத்த அதே பிடியில், பக்கத்திலேயே வைத்துக் கொண்டாள், ஒரு கிழவி.
எல்லாரும் வரிசைப்படி ஊத்தி, கடைசியாக பெரியவன், கெண்டியிலிருந்த நீரை ஊற்றி முடித்தான்.
தெரு முக்கிலே போயி, திருநீறு எடுத்து வர, பிள்ளைகளும், பேரன்களும் சென்றனர். திருநீறு எடுத்து வந்தனர். பிள்ளைவாள் சடலத்துக்கு, திருநீறு முறைப்படி பூசப்பட்டது. பேரன்கள் நெய் பந்தம் பிடித்தனர்.
ஆவிடை ஆச்சியை, நாலைந்து பெண்கள் அழைத்து வந்தனர். பிரமநாயகம் பிள்ளை சடலத்தின் பக்கத்தில், ஆவிடை ஆச்சியை படுக்க வைத்தனர். முதலில் ஆவிடை ஆச்சியின் சித்தி மகன், பிறந்த வீட்டுக்கோடியை (புதுத் துணியை) போட்டான்.
அதன் பின், போட்டவர்கள் எல்லாம், கலர் சீலையைத்தான் போட்டனர். கடைசியாக, மூத்த மகனை, கோடி போட அழைத்த போதுதான், அவன் உடைந்து போனான். எல்லாருக்கும் வாரி வழங்கும் தந்தையைக் கட்டுப்படுத்தி, கணக்கு வழக்குகளில் கடினமாக இருந்து, இன்றைக்கு நா<லு வீடும், பத்து கோட்டை விதைப்பாடும் சேர்த்து வைத்திருக்கிற தாய்க்கு, கோடியாக வெள்ளைத்துணி போடும்போது, குடும்பமே குலுங்கிப் போனது.
தாத்தா காலை மடக்கிக் கட்டும்போது, “”எதுக்கு, காலைக் கட்டுதீங்க?” என்று, சின்னப்பேரன் கேட்டான்.
“”எந்திரிச்சு, கிந்திரிச்சு, போயிரக் கூடாதுல்லாவே,” என்றான் இசக்கி.
தாத்தாவை, பாடைக்குத் தூக்கிச் சென்றனர். பாடையில் கோழி கட்டப்படுவதை, கரிசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர், பாடகலிங்கம் பிள்ளை, பச்சியா பிள்ளை, பரமசிவம் பிள்ளை மூவரும்.
பாடகலிங்கம் பிள்ளை மனதில், நாம் வணங்கி வந்த முருகனின் கோழிக் கொடிதான், தன்னைக் காக்க வந்திருப்பதாக நம்பிக்கை.
பச்சியா பிள்ளைக்கோ, பாளையங்கோட்டையில் நல்ல சிவப்பு கலரில், தனக்கு பாத்த பெண்ணின் வீட்டுப் பின்புறத்தில், பக்கத்து நாடார் வீட்டுக்கோழி மேய்ந்ததை தவறாகப் புரிந்து, “வெள்ளாங்குடியில் கோழி மேயுது…’ என்று அந்தப் பெண்ணை வேண்டாம் என்று, கழுகுமலைச் சண்டாளியை, தன் வாழ்க்கைத் துணையாக்கிய, தந்தை – தாயின் நினைவு வந்தது.
பரமசிவம் பிள்ளைக்கோ, வண்டிப்பேட்டை கடையில், நண்பர்களோடு கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், “எங்க பொறந்திட்டு, எங்கல வந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கே…’ என்று, தெரு வழியா செருப்பாலயே அடித்துக் கூட்டிட்டு வந்த, அப்பாவின் நினைவு வந்தது.
தாத்தா புறப்பட்டு விட்டார்.
வீட்டிற்குள்ளேயோ, வாசலில் இருந்து ஆவிடை ஆச்சியை, <உள்ளே கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்ட மற்ற கிழவிகள் பட்ட துன்பம் சொல்ல முடியாது.
ஆவிடை ஆச்சியின் மேலே கிடந்த இரண்டு வெள்ளைச் சேலையையும், மற்ற கலர் சேலைகளையும் எடுத்து விட்டு, அவளை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல முடியவில்லை. காரணம், பாட்டி அத்தனைச் சீலைகளையும், கெட்டியாகப் பிடித்திருந்தாள்.
நாலு பேராச் சேர்ந்து, ஆவிடை ஆச்சியை, சீலைகளோடு தூக்கித்தான் உள்ளே கொண்டு போட்டனர்.
“அவ புத்தியப் பாத்தியா?’ என்று, தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர்.
ஆச்சி, சின்ன மருமகளப் பக்கத்தில் அழைத்து,
“”ரெண்டு வெள்ளைச் சீலை போக, முப்பத்திரண்டு கலர் சீலையையும் எண்ணி, எடுத்து வை,” என்று சொன்ன போதுதான், “அவ புத்தி மாறல்லடி…’ என்று பெண்கள் பேசிக் கொண்டனர்.
பிரமநாயகம் பிள்ளையின் பயணம், ஆற்றுச் சாலையில் போய்க் கொண்டிருந்தது.
பால்ய நண்பரோ, “”என்னை விட்டுட்டுப் போக, அவனுக்கு எப்படிய்யா மனசு வந்தது?” என்று புலம்பிக் கொண்டே வந்தார்.
இரு சக்கர வாகனக்காரர்கள், சைக்கிள்காரர்கள் அனைவரும், திருப்பணி முக்கு திரும்பியவுடன், கருப்பந்துறைக்கு முன்னாலேயே போய்ச் சேர்ந்து, தாத்தாவை வரவேற்கக் காத்திருந்தனர்.
கருப்பந்துறைக்கு, பிரமநாயகம் பிள்ளைத் தாத்தா, சடலமாக வந்து சேர்ந்தார். அடுக்கி வைத்திருந்த விறகு எருவின் அருகில், தாத்தா இறக்கி வைக்கப்பட்டார்.
சடங்குகள் ஆரம்பமாயின.
பூசாரி ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருந்தார்.
வாய்க்கரிசி போடும் கட்டம் வரும்போது, எல்லாரையும் வாய்க்கரிசி போட இசக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.
பாடகலிங்கம் பிள்ளை, பச்சியாப்பிள்ளை, பரமசிவம் பிள்ளையை அழைக்கும் போது, அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
“”வாங்க… நாளைக்கு, நாங்க <உங்களுக்குப் போடணும்ல்லா,” என்றான்.
யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் கண்ணெல்லாம், கோழியின் மேலேயே இருந்தது.
எல்லாரும் போட்டு முடித்தவுடன்,
“”ஏலே இசக்கி… நீ போடலயா? நீயும் மூணாஞ் சொக்காரன் தானே… போடுலே…” என்றார் பூசாரி.
இசக்கி வாய்க்கரிசியை எடுத்துப் போட்ட போது, அதிலே இரண்டு, மூன்று அரிசிகள், பிரமநாயகம் பிள்ளை மூக்கிற்குள் போயிற்று.
ஒரு பெரிய தும்மலோடு, பிரமநாயகம் பிள்ளை எழுந்து உ<ட்கார்ந்து விட்டார்.
இசக்கி, முதலில் பதறினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டான்.
“”எத்தனை நாள் எனக்குச் சோறு போட்டிருப்பியோ… இல்லேன்னா, நான் எப்பவோ செத்துப் போயிருப்பேம்ல்லா தாத்தா…”
இசக்கி அழுததைப் பார்த்து, அனைவரும் கலங்கி விட்டனர்.
கால் கட்டை அவிழ்த்தான்.
“”இதுவரை, நான் போட்ட கட்டிலே, இதைத்தான் நான் அவுக்கேம்…” என்றான்.
“”வாய்க்கரிசி போட்டு, ஆவிடையக்காவ வாழ்வரசியாக்கிட்டானே எசக்கி பயல்…” என்றார் பூசாரி.
பாடகலிங்கம் பிள்ளை, பச்சியா பிள்ளை, பரமசிவம் பிள்ளையோடு, கோழியும் பிழைத்தது. ஆவிடை ஆச்சிக்கு, முப்பத்திரண்டு சீலைகள் மிச்சம். வெள்ளைச் சீலை ரெண்டும் சரஸ்வதி அம்மனுக்கு!
– நெல்லைக்கண்ணன் (ஏப்ரல் 2012)