கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,570 
 

இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா.

மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய் ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடு செல்ல.

“சார். நல்லா இருக்கியளா?”

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

“டேய் ராசையா எப்டி இருக்க?” வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில் தட்டியபடியே, “என்னடே இங்க? துபாய்க்கு எதாவது போறியா?”

“என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்.”

“அமெரிக்காவுக்கா? ரெம்ப சந்தோஷம்டே. வேலைக்காபோறான்?

“ஆமா.”

“ஒங்கப்பன் எப்டி இருக்கான்?”

“அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்.”

“அப்டியா? ஊருக்கு வந்து வருசக்கணக்காவுது. பரவாயில்லியேடே என்ன நியாபகம் வச்சிருக்கியே. தண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?”

“ஆமா. தம்பி அங்க வரிசைல நிக்கான்.”

“அப்ப போ தம்பி. பாப்போம்.”

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டு. பைக்கின் சப்தம் கேட்டு திரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.

“யார் சார் அது?” சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“சார். இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்.”

“நாசுவன்னா?”

“முடிவெட்றவர். நாவிதர்.”

“ஓ. இங்க என்ன பண்றான்?”

“இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம். வழியனுப்ப வந்திருக்கான். நம்ம பையன்கூட படிச்ச பய.”

“பரவாயில்லியே.”

“காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே. இப்ப எல்லா மாறிப்போச்சு”

“ம்ம்ம்”

“இந்தா போறானே ராசையா. இவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்.”

“இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்.”

“என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவ. நம்ம புள்ளைக கஷ்ட்டப்படுதுங்க.”

“காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார். இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி ஐ.ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்ல சேத்தீங்க. இந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னு சொல்லலாம்லியா. அதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும் முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?”

“சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்.”

“இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார். அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான் ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்ல. இவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?”

“……….”

“நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க.” பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டு, தறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே, தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையா நுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

– ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *