கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் பத்தாவது நடைமேடையில் புறப்பட ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது. கோவையில் ஒரு திருமணம்: திருமணங்களுக்கு மனைவியும் நானும் தம்பதிசமேதராகத்தான் செல்வோம். இம்முறை அவளால் வரவியலாததால் நான் மட்டும். வண்டி புறப்படும் நேரத்திற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே இருக்கைக்கு சென்று அமர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். கடைசி நிமிடத்தில் அரக்க பரக்க ஓடிவந்து வண்டியைப் பிடிக்கும் வயது இது அல்லவே! என்னைப்போலவே இன்னும் சில மூத்த குடிமக்கள், தங்கள் சுமைகளை மேலே ஏற்றிவிட்டு வசதியாக அமர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் புகைவண்டிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. “குறைவான சுமை: நிறைவான வசதி: பயணத்தை இனிதாக்குக!” வாழ்க்கைப் பயணத்திற்கும் இவ்வாசகம் பொருந்தும் தானே! மனச்சுமை குறைவாக இருக்குமேயானால், வாழ்க்கைப் பயணம் இனிமையானதாகத்தானே இருக்கும். ஆனால் தற்காலத்தில் தண்ணீர் முதற் கொண்டு, அதிகமான சுமைகளைத் தூக்கிக்கொண்டுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
வண்டி கிளம்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. இவ்வளவு இருக்கைகள் காலியாக உள்ளனவே என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, ஐம்பது பேர்போல திபுதிபுவென்று இரண்டுபக்க வாயிலுமாக ஏறி தங்கள் பைகளை மேலேபோட்டுவிட்டு அமர்ந்துகொண்டார்கள். எல்லோரும் நடுத்தர, அதனைத்தாண்டிய வயதுடையவர்கள். அவர்கள் அணிந்திருந்த டீஷர்ட் வண்ணம், அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினையைக்கொண்டு, அவர்கள் வேலை பார்க்கும் துறையையும், அதில் அவர்கள்சார்ந்த தொழிற் சங்கத்தையும் யூகிக்கமுடிந்தது. எல்லோரும் சலசலவென்று பேசிக்கொண்டே யிருந்தார்கள். அடுத்தநாள் கோவையில் நடக்கவிருக்கும் தொழிற்சங்க மாநாட்டிற்காக செல்கிறார்கள் என்பது தெரிந்தது. வண்டி கிளம்பி வேகமெடுக்க ஆரம்பித்தது.
பயணத்தின் குதூகலம் குழந்தைகளிடம் மட்டுமே மிகுதியாகக் காணப்படும். பக்கத்துப்பெட்டியில் நிறைய குழந்தைகளின் உற்சாகக்குரல் கேட்டது. பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும், பார்த்து பெற்றோர்களை கேள்விமேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்துக்கொண்டிருப்பதே சுவாரசியமான அனுபவம். பொறுமையாகவும், அவர்களுக்குப்புரியும்படியான நடையில் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் பெற்றோர்கள் வரவர குறைந்து கொண்டே வருகின்றனர். வேறெங்கேயும், வேறெப்போதும் படிக்கமுடியாததைப் போல சிலர் புத்தகத்தைப்படித்துக்கொண்டிருப்பார்கள்: சிலர் மடிக்கணினியே கதியென்று ஆழ்ந்துவிடுவார்கள்: சிலர் கைபேசியை நோண்டிக்கொண்டி ருப்பார்கள். எனக்கென்னவோ வேடிக்கை பார்க்கவே பிடிக்கும். அலுப்பாக இருந்தால் கண்களைமூடிக்கொண்டு தூங்கப்பிடிக்கும்.
எனக்கு காலை சிற்றுண்டிக்கான நேரம் வந்தது. கொண்டு வந்திருந்த ரொட்டித்துண்டுகளை சாப்பிட்டேன். டிப் டீ கொண்டுவந்தவனிடம் டீ வாங்கி அருந்தினேன். சற்றுநேரம் கழித்து போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரைகளை விழுங்கினேன். குப்பைகளை அகற்றும் ஒரு இளைஞன் – இளைஞன் இல்லை: சிறுவன். பத்தொன்பது வயதிருக்கலாம். – ஒவ்வொரு இருக்கையாகப்பார்த்து சிரத்தையுடன் அகற்றி சாக்குப்பையில் போட்டுக் கொண்டான். இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் இதுபோன்ற வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிர்வாகத்தின் இலச்சினையும் அவன் பெயரும் சீருடை போன்ற அவன் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்தது. அவன் பெயர் தியாகு. தனக்கு இடப்பட்ட வேலையில் மும்முரமாகவும், கவனமாகவும் இருந்தான்.
மாநாட்டிற்குப்போகும் அனைவருக்கும் நகரின் பிரபலமான சிற்றுண்டி நிறுவனத்திலிருந்து விதவிதமான உணவுவகைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஜூனியராகத்தோன்றிய ஒருவர் எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தார். அவரின் பணிவையும், பவ்யத்தையும் பார்க்கும் போது, இன்னும் வேலை நிரந்தரம் ஆகாதவர் போன்று தோன்றியது. பேப்பர் தட்டில் சாப்பிட்ட மீதத்தை எடுத்துப்போகும்படி குப்பைகளை எடுத்துக்கொண்டிருந்த தியாகுவை அடிக்கடி கூப்பிட்டார்கள். சிலர் ‘தம்பி’ என்றும், சிலர் ‘ஏய்! குப்பை!’ என்றும், சிலர் ‘ஏய்! கிளீனர்!’ என்றும் அழைத்தார்கள். மாநாட்டில் விவாதம் செய்ய வேண்டியவற்றைப்பற்றி விலாவாரியாக சத்தம்போட்டு பேசிக்கொண்டே வந்தார்கள். பேச்சு பெரும்பாலும் அவர்களுடைய ஊதிய உயர்வுக்கானது. இம்முறை நிர்வாகம் இவர்கள் கோரிக்கையை ஏற்கா விட்டால் காலவரையறையற்ற வேலை நிறுத்தம் அவசியம் என்று சங்கத்தின் மேலிடத்தில் வலியுறுத்த முடிவானது.
வண்டி சரியான நேரத்தில் சென்றுகொண்டிருந்தது. நான் சற்று கண்ணயர்ந்திருந்த நேரத்தில், பகோடா மணம் மூக்கைத்துளைத்தது. முந்திரி பகோடா போலும். மாநாட்டிற்குப்பயணிப்போர் தங்கள் இடைவிடாத பேச்சிற்கிடையே மொறுமொறுவென்று பக்கோடாவைத்தின்று தீர்த்தார்கள். தியாகுவைக்கூப்பிட்டு தட்டுகளை அகற்றச்சொன்னார்கள். அவனும் அலுத்துக்கொள்ளாமல் புன்னகையுடன் அவர்கள் இட்டபணியைச்செய்தான். எனக்கென்னவோ, அவர்கள் சாப்பிடும்போது, ஒரு தட்டு பகோடாவை அவனுக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. வண்டி கோவையை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் என்னுடைய பையைத் திறந்து பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். குறைவான சுமையை பயணத்தில் விரும்புவதால், ஒன்றும் எடுத்துவரவில்லை. சரி, பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டேன். வண்டி ஸ்டேஷன் உள்ளே நுழைந்தது. தியாகு என் பக்கம் வந்தபோது, அவனிடம் கொடுத்தேன். அவனோ சிரித்துக்கொண்டே பிடிவாதமாக வாங்க மறுத்தான். பின்னர் சொன்னான். “ஐயா! தங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் எங்கள் நிறுவனத்தில் நான் செய்யும் வேலைக்குப் போதிய ஊதியம் கொடுக்கிறார்கள். லஞ்சமாகவோ, தானமாகவோ பெறுவது இழுக்கு என்று என் பெற்றோர் சிறுவயதிலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். நேர்மையான உழைப்பிற்கு நிச்சயம் சரியான ஊதியத்தை ஆண்டவன் அளிப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது. தாங்கள் காட்டும் அன்பு மிக்க மகிழ்ச்சியைக்கொடுக்கிறது. மீண்டும் நன்றி ஐயா!” என்று சொல்லிவிட்டு அவன் பணியைத்தொடர்ந்தான் மனம் சற்றுநேரம் பிரமிப்புக்குள்ளாகி வேகமாக ஊசலாடியது. ஒருபுறம் நான் கொடுத்ததை வாங்காமல் சென்றுவிட்டானேயென்று சற்று அவமானமாகக்கூட இருந்தது. ஆனால் அதை யும் மீறி மறுபுறம், அவன் பேச்சும், நம்பிக்கையும், இளைய சமுதாயத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக்கோடிட்டுக்காட்டியது, மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுத்தது.