கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 23,462 
 
 

“எலேய்..துரை!என்ன பழம்டா வச்சிருக்கே?கன்னல் இல்லாம கொஞ்சம் கொண்டாடா..”பழவண்டிக்காரனை ஏவியவர்,குதப்பிய வெற்றிலை எச்சிலை ஓரமாய் உமிழ்ந்தபடியே அடுத்த அதட்டல் உத்தரவை தேநீர் கடைக்காரனுக்கு போட்டார் ஏட்டு ராகவன்..”ஏய்..யாருய்யா அது..கடைப்பையன்கிட்ட ஒரு கிளாஸ் பச்சத்தண்ணீய கொடுத்தனுப்பு”.

சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த புல்லட்டில் சாய்ந்தபடியே கடைப்பையன் கொடுத்த தண்ணீரால் வாய் கொப்பளித்த நேரத்தில் ,பரட்டைத்தலையை சொறிந்தபடியே வந்து நின்ற பழவண்டிகாரன் “சார்..கொஞ்சமா கொய்யாதான் எடுத்தேன்..எல்லாம் வித்துடுச்சி..கன்னல்தான் கொஞ்சம் பசங்களுக்காக எடுத்துவச்சிருக்கேன்…’என்றவனிடம் ..’சரி..சரி..பர்ஸை எடு..எவ்வளவு தேறும்.?”என்றபடி அவனது சட்டைப்பைக்குள் கைவிட்டார்.

மெல்ல பின் வாங்கி கையோடு சேர்த்துபிடித்தபடி..”சார்..பழ ஏஜெண்டு கண்ணனுக்கு முந்நூறு ரூபாயும்..வண்டி வாடகை முப்பது ரூபாயும் போக மீதி அறுபது ரூவாதான் இருக்கு சார்..எனக்கு பட்டைக்கு இருபதுபோக மீதி மிஞ்சுற நாற்பதையாவது வீட்டுக்கு கொடுக்கனும்..சார்..இல்லேன்னா..நாலு வயிறு காந்தும்..சார்”கெஞ்சலாக சொன்னான் பழவண்டிக்காரன்.

“ஏய் ..எல்லாம் தெரியும்டா..எங்களுக்கும்…பழக்கடையில கிலோ பதினஞ்சு ரூவாய்க்கு வித்தா ..நீங்க அதையே கூறுகட்டி இருவத்தஞ்சு ரூவாய்க்கு வித்துடுறீங்க..எவ்வளவு லாபம் பார்க்கறீங்கன்னு தெரியும்…போ,..போயி ஐய்யங்கார் ஸ்வீட்ஸ் ல கால்கிலோ மிக்சரும்..நூறுகிராம் பாதாம் அல்வாவும் வாங்கிகிட்டு வாடா”என்றார் ஏட்டு ராகவன்.

தலை சொறிந்தபடியே யோசித்து நின்றவனை “ஏலேய்..காதுல விழல.?அப்புறம் நாளைக்கு டிராபிக்கா இருக்குற நேரத்துல ஆர்.ஐ ஐயா வரும்போது ‘தான பிரபு’வா மாறிடுவேன்..நிதானமா யோசிடா..”என்றார்.

நின்று யோசித்த துரை..’ம்..இன்னிக்கு..விதிப்பலன் இப்படி தான் போல..இன்னிக்காவது நாற்பது ரூவாயை முழுசா கொடுத்து பொண்டாட்டி வாயால அருமைப்புருசன் அவார்டு வாங்கலாம்னு பார்த்தா …விடாது போலயிருக்கே..இந்த நரி..சொன்னதை செய்யாம விடாதே..என்னமோ போக்குவரத்தே இந்த நடைபாதையில பொழப்பு நடத்தறவங்களால தான் கெடுறதா காச்மூச் னு கத்தி தள்ளுவண்டிகளை தலை குப்புற கவிழ்ப்பதும் ,மாட்டைவிட கேவலமா லத்தியால அடிச்சு விரட்டி ருத்ர தாண்டவம் ஆடறதும்…ம்..அஞ்சு..பத்து பிழைப்புக்கே இப்படி அல்லாட வேண்டியதா இருக்கு..இதுல ஏரியா ரவுடிங்கன்னு சொல்லிகிட்டு ஒரு கூட்டம் அலையுது..என்னைக்காவது ஒருநாள் போலீஸ்காரங்க வண்டியில இருக்குற பழங்களை அபகரிச்சி போற,வர்ற பொதுஜனங்களுக்கு வாரி வழங்கிட்டு வெறும்வண்டிகளை ஸ்டேஷனுக்கு தள்ளிகிட்டு போறதும் நடக்கத்தான் செய்யுது..யாரை குத்தம் சொல்லி என்ன செய்யுறது”தனக்குத்தானே பேசியபடியே கனத்த மனதோடு ஸ்வீட் கடையை நோக்கி நடந்தான்.

இதற்கிடையே ஏட்டு ராகவனின் கூரிய பார்வை தூரத்தில் பூ விற்றுக்கொண்டிருந்த பூக்காரி மீது பாய்ந்தது.”முல்லைச்சரம்..கனகாம்பரம் முழம் ரெண்டு ரூவாதான்..வாங்க..வாங்கிகிட்டு போங்க.!”என்று கூவி விற்றுக்கொண்டிருந்தவளை நெருங்கியவர் “சாரதா.!..மூணுமுழம் முல்லையும்..ரெண்டு முழம் கனகாம்பரமும்…கொஞ்சம் மரிக்கொழுந்து வச்சு சுற்றிக்கொடு.!”என்றார்.

“துட்டு எடு சார் தர்றேன்..!..ஆறு மணிக்கு வந்ததுலேருந்து பத்து ரூவா சில்லறை தான் ஏவாரம் ஆகியிருக்கு”என்றாள்.

“என்னது..?எங்கிட்டயே காசு கேட்கறியே..ஏன் நாளையிலிருந்து இங்க வியாபாரம் பண்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டியா.?”என்றபடி கடைப்பல் தெரிய கடகடவென சிரித்தார் ஏட்டு.

“இன்னா..சார் சிரிப்பு சிரிக்குற.?..நாளைக்கு என்னை வியாபாரம் பார்க்க விடாம புல்லட்ல நின்னவாக்குல கூடையை எட்டி உதைப்பே..பூவை எல்லாம் கீழ சிதறவிடுவே..அதுதானே உன்னால முடியும்..வேறென்ன செய்வ..?”

“உன் கஷ்ட நஷ்டத்துல பங்கெடுத்துக்கற…உன்னில் பாதியா இருக்குற உம்பொஞ்சாதிக்கு..ஒரு முழம்பூ கூட உன் வியர்வை சிந்துன காசுல வாங்கிட்டு போக துப்பில்லை.!என்னவோ எகத்தாளமா சிரிக்கறீயே.?!”

“தன் பொண்டாட்டியை ஆசையா கொஞ்சக்கூட அடுத்தவன் காசுல அல்வாவும்,பூவும் வாங்கிக்கொடுக்கனும்னு எதிர்பார்க்கறதைவிட அஞ்சுக்கும் பத்துக்கும் இப்படி அச்சடி கடைபோட்டு பிழைக்கறது ஒண்ணும் கேவலமில்ல..தெரிஞ்சுக்கோ…சார்.!”என்றாள் சாரதா.

“இந்தாங்க..சார்!..நீங்க கேட்ட மிக்சரும்,அல்வாவும் “என்று பையை நீட்டிய பழவண்டிக்காரனிடம்,அன்றைக்கு வாங்கிவைத்திருந்த சம்பளக்கவரிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டை கொடுத்து..”இதுல நீவாங்கின மிக்சர்_அல்வாவுக்கு நாற்பதுரூவாயை எடுத்துக்க..மீதி பத்து ரூவாயை பூக்காரி சாரதாகிட்ட நான் கொடுத்தேன்னு கொடுத்துடு..”என்றபடியே வண்டியை கிளப்பினார்.

பூக்கூடையில் மறைவாய் வைத்திருந்த செல்போனை எடுத்த சாரதா..எண்களை ஒற்றி..”அம்மா..நீங்க சொன்ன மாதிரியே அந்த ஏட்டை கலாய்ச்சுட்டேன்மா..!.மனுஷன் பூவுக்கு காசை கொடுத்துட்டு ஓட்டம் புடிச்சிட்டார்மா..!”என்றாள்.

“வெரிகுட்..சாரதா.!..அப்படிதான் பெண்கள் எல்லா விஷயத்திலும் துணிவோட இருக்கனும்..நம்ம கடமையிலயும் கரெக்டா இருக்கனும்..நம்ம உரிமைகளையம் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது..!இனிமேல் அந்த போலீஸ்காரரால எதுவும் பிரச்சினை வந்தா என்கிட்ட பேசு.!”என்றபடி செல்லை அணைத்துவிட்டு,தன் கணவனின் உழைப்பில் விளைந்த பூவை சூடிக்கொள்ள ஆவலோடு காத்திருந்தாள் ஏட்டு ராகவனின் மனைவியும்,மகளிர் குழு தலைவியுமான ரேணுகா.

– தினத்தந்தி_குடும்பமலர்:28_10_2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *