உபமன்யு கற்ற பாடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 2,468 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெகு காலத்திற்கு முன்பு அயோத்தியில் தெளம்யர் என்று ஒரு குரு இருந்தார். அவரது குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களில் ஒருவன் உபமன்யு. உபமன்யு வும் மற்ற மாணவர்களும் தங்கள் குருவுடன் கிராமத்தின் எல்லையிலிருந்த ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தனர்.

குருகுலத்தின் கட்டுப்பாடுகள் கடுமையானவை. அவற்றுள் முக்கியமானது படிந்து நடப்பது. ஆசிரியர் என்ன சொன்னாலும் மறு பேச்சின்றிக் கேட்டாகவேண்டும். குரு குலத்தின் மற்றொரு பழக்கம் என்ன தெரியுமா? கிராமத்தார் மாணவர்களுக்கு உணவு அளிப்பார்கள்; மாணவர்கள் கொண்டுவரும் உணவை மாணவர்களும் ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆசிரமத்தில் எல்லாருக்கும் தேவையான பழமரங்கள் இருந்தன ; பாலுக்கும் மோருக்கும் பசுக்கள் இருந்தன. மாண வர்கள் அங்கே கற்றுக்கொண்டவை தர்மசாஸ்திரமும் போர் வித்தையும். பிற்காலத்தில் திருமணம், அந்திமக்கிரியை, யாகம் போன்ற சடங்குகளைச் செய்வதற்கு விரும்பியவர்கள் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றார்கள்.

ஆசிரமத்தின் குரு , வெறும் பாடம் சொல்லிக்கொடுப்பவ ராக மட்டும் இருக்கவில்லை. எல்லா மாணவர்களுக்கும் தந்தை யும் தாயுமாக இருந்து கவனித்துக்கொண்டார். எல்லாருமே வயதில் சிறியவர்கள். பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளை அவரது பொறுப்பில் விட்டிருந்தனர். மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டியது போல அவர்கள் ஆரோக் கியமாக வளரும்படியும் அவரே பார்த்துக்கொண்டார். அவர் களிடம் நல்ல பழக்கம் படியும்படி பார்த்துக்கொண்டார். மனத்தில் நல்ல எண்ணங்களே நிலவும்படி பழக்கப்படுத் தினார். நல்ல குணசாலிகளாக விளங்கச் செய்தார். எல்லா ரும் கட்டுப்பாடு நிரம்பியிருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

மாணவர் எவருக்கேனும் நோய் நொடி வந்தால் பரிவுடன் கவனித்து வருவார். யாரேனும் தவறு செய்தால் தண்டனையும் அளிப்பார். அவன் அரசகுமாரனானாலும் சரி. பெற்றோர் அனைவருமே குருவிடம் மரியாதை காட்டினார்கள்.

ஒரு நாள் குரு தெளம்யர் உபமன்யுவை அழைத்தார். “உப்மன்பு, பெரிய யாகம் நடத்தும் அரசனுடன் நீ சில நாள் இருக்கவேண்டும். இது என் ஆசை. அரசனுக்குத் தேவை யான உதவிகளைச் செய்துவா. அப்படியே, யாகம் நடத்தவும்

வேதியர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்றார். உபமன்யு உற்சாகத்துடன் புறப்பட்டு, அரச னின் அந்தரங்க உதவியாளன் ஆனான். கல கலப்பாகப் பழகி , கடினமாக உழைக்கும் உப மன்யுவை எல்லாருக்கும் பிடித்திருந்தது.

போன வேலை முடிந்து உபமன்யு குருகுலம் திரும்பியதும் தெளம்யர் அவனை விசாரித்தார்.

உபமன்யு , இத்தனை நாளாக நீ தினம் உபவாசம் இருந்தாயா?”

“இல்லையே!” என்றான் உபமன்யு, வியப்புடன்.

“அதுதான் பார்த்தாலே தெரிகிறதே. உடம்பு பெருத்திருக்கிறதே. அரண்மனையில் சுவையான சாப்பாட்டை வயிறு முட்டத் தின்றாய் போலிருக்கிறது!”

“இல்லை, குருதேவா” என்றான் உபமன்யு. “வழக்கம் போல நான் கிராம மக்கள் அளிக்கும் உணவைத்தானே உண்டுவந்தேன். இதற்காக தினம் மூன்று மைல் தூரம் அரண்மனையிலிருந்து நடந்து வந்தேனே”.

“அப்படியா? நீ அந்த உணவுடன் குருகுலத்துக்கு வந்து நான் பார்க்கவில்லையே” என்றார் தெளம்யர்.

அப்போதுதான் உபமன்யுவுக்குத் தன் தவறு புரிந்தது. கிராமத்தில் அவன் பெற்ற உணவை அவன் குருவிடம் சமர்ப்பித்திருக்கவேண்டும். கையால் தலையில் அடித்துக் கொண்டு, ஆசிரம விதியை மீறியதற்காக குருவிடம் மன்னிப்பு வேண்டினான்.

அன்று அவன் கிராமத்திற்குச் சென்றபோது, கிடைத்த உணவு அனைத்தையும் கொண்டுவந்து குருவிடம் சமர்ப்பித்தான். உபமன்யுவின் மன உறுதியைச் சோதிக்க எண்ணி வர்குரு. எனவே, உணவு முழுவதையும் தாமே எடுத்துக் கொண்டு, தலை அசைத்து, அவனை அனுப்பிவிட்டார் . உப மன்யு நாள் முழுவதும் காத்திருந்தான். யாரும் அவனுக்கு உணவளிக்கவில்லை. பசியுடன் படுக்கச் சென்றான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தெளம்யர் இவனை அழைத்தார். உபமன்யு பசியால் வாடி, கண் இடுங்கி இருப்பான் என்று நினைத்தார். ஆனால் எப்போதும் போல் உபமன்யு உற்சாகத்துடனும், பொலிவுடனும் வருவதைக் கண்ட ஆசிரியர் வியந்தார்.

தெளம்யருக்கு ஒன்றும் புரியவில்லை. “உபமன்யு , இரண்டு நாளாக நீ கொண்டு வரும் ஆகாரத்தை எல்லாம் நானே எடுத்துக் கொண்டு விடுகிறேன். உனக்கு ஒன்றும் மிச்சம் வைப்பதில்லை. நீ பசியால் மயங்கிக் கிடப்பாய் என்று நினைத்தால், நீ சோர்வில்லாமல் இருக்கிறாயே. எப்படி?” என்று விசாரித்தார்.

“குருவே, நான் தினம் இரண்டாவது முறை கிராமத்தாரிடம் போய் எனக்கு வேண்டிய ஆகாரம் பெறுகிறேன்” என்றான் சீடன்.

அதிருப்தியுடன் குரு முகம் சுளித்தார்.

“என்ன? எத்தனை முறை சொல்லியிருக்கிறேன், மறந்து விட்டாயா? ஊராரிடமிருந்து ஒரு நாளைக்கு ஒரு முறைதானே உணவு பெறலாம்? ஊம்!”

“ஆமாம்” என்றான் உபமன்யு, ஈனக்குரலில். “ஆனால் பசியில் இந்தக் கட்டளையை நான் மறந்துவிட்டேன்”.

“ஊராருக்குத் திரும்பத் திரும்ப நம்மை ஆதரிப்பது தானா வேலை? நம்மைப்போல் வேறு எத்தனையே பேர்களை அவர்கள் கவனிக்க வேண்டும். அப்படி இருக்க, கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடையாமல் நீ பேராசையுடன் அவர்களை மீண்டும் ஆகாரம் கேட்டாயா, அழகுதான் ! நீ தவறு செய்துவிட்டாய். போ! ஆசிரமத்து மாடுகளை மேய்த்து வா. அப்போது நான் சொன்னதைப் பற்றியும் சிந்தித்தபடி இரு” என்றார் குருதேவர்.

உபமன்யுவுக்குத் தண்டனை தொடர்ந்தது. அவன் வழக் கம் போல ஊராரிடம் வசூலித்த உணவை தினமும் ஆசிரியரி டம் கொடுத்தான். அப்புறம் அது அவன் கண்ணில் படாது. மூன்று நாள் ஆயிற்று. தெளம்யர் காத்திருந்தார். சீடனே உணவு தேடி வருவான் என்று காத்திருந்தார். ஆனால் அவன் வரவில்லை. வராததோடு மட்டுமல்ல, இன்னும் உற்சாகமாகத் தன் வேலைகளில் ஈடுபட்டது போலக் காணப்பட் டான். ஆசிரியர் மறுபடியும் அந்த மாணவனை அழைத்து விசாரித்தார்.

“என்னப்பா , எப்படி இருக்கிறாய்? காட்டுக்குப் பசுக்களை ஓட்டிச் சென்றாயே, சிரமமாக இருந்ததா?” என்று கேட்டார்.

“இல்லையே குருதேவா” என்றான் உபமன்யு , உற்சாகமாக.

“இல்லை, மூன்று நாளாக ஆகாரம் இல்லாமல் இருக்கிறாயே என்பதற்காகக் கேட்டேன். பசியால் கால் தடுமாறுகிறதா? தலை சுற்றுகிறதா?”

“இல்லையே. எனக்குப் பசிக்கவே இல்லையே” என்றான் சீடன்.

“என்ன? பசிக்கவில்லையா? பசியை வெல்லும் வித்தை உனக்குத் தெரிந்துவிட்டதா?” என்று வியப்புடன் கேட்டார் குருதேவர்.

உபமன்யு பயத்தால் நடுங்கிவிட்டான். தான் மறுபடி ஒரு தவறு செய்துவிட்டதை உணர்ந்தான். தயக்கத்தோடு, “குருதேவா, மேயப்போன பசுக்களின் பாலை நான் தினமும் குடித்துவந்தேன்” என்றான்.

இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். சிறுவன் பரிதாபமாக விழித்தான். குருவுக்கோ வருத்தம் ஒருபுறம், கோபம் ஒரு புறம்.

கடைசியில் சாந்தமாகச் சொன்னார்: “உபமன்யு, நீ பொய்யே பேச மாட்டாய் என்பதை நான் அறிவேன். நீ ஒழுங்காகவும் படிப்பில் கவனமாயும் இருக்கிறாய். நீயும் உற் சாகமாக இருக்கிறாய். மற்றவருக்கும் உற்சாகம் ஊட்டுகிறாய். ஆனால், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. இப்போதே அதை நீக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் அதனால் கஷ்டப்படுவாய். நீ உன் வயிறே கதியாக இருக்கிறாய். இதனால் நீ குருகுலத்துக் கட்டளைகளை மறந்து மீறுகிறாய். பசியுடன் இருக்கும் போது நீ நடந்துகொள்வது உன் கையில் இல்லை. நான் பல முறை உன்னிடம் சொல்லியிருப்பது போல், எவன் தன் மன வலிமையால் உடல் ஆசைகளை அடக்கமுடியாமல் தவிக்கிறானோ, அவன் எந்த இழி நிலைக்கும் இறங்கி விடுவான்; அவன் வேடிக்கை பார்க்கப் போவதற்காக ஒரு பொய் சொல் வான். பசி என்பதற்காகத் திருடி விடுவான். நல்ல உடை வேண்டும் என்பதற்காக ஏமாற்றி விடுவான். இதெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் உன் தந்தை உன்னை என்னி டம் அனுப்பியிருக்கிறார், இல்லையா உபமன்யு?”

குருதேவர் வருத்தந்தோய்ந்த குரலில் இவ்வாறு மெல்லக் கூறவே உபமன்யு வெட்கமடைந்தான். அவனைத் திட்டி னாலோ அடித்திருந்தாலோ கூட அவ்வளவு ரோசம் வந்திருக்காது. மறுபடி இவ்வாறு தன் மீது குற்றம் காண முடியாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

குருவை நேருக்கு நேர் பார்க்கவே கூசினான். தலை குனிந்த வாறே, “தாங்கள் ஆணையிடும் வரை நான் ஒரு கவளம் கூடச் சாப்பிடமாட்டேன்” என்றான்.

உபமன்யு அன்றும் மறுநாளும் ஒன்றுமே சாப்பிடவில்லை. மூன்றாவது நாள், பசுக்களை மேய்ந்து கொண்டிருந்தபோது, தாங்கமுடியாத பசியாக இருந்ததால், ஒரு செடியின் தழை களைப் பறித்துத் தின்றான். அதுவோ ஒரு மருந்துப் பச்சிலை. செடியில் இருந்த ஒரு நெடி அவனைத் தாக்கி, அவன் கண் பார்வையை பாதித்தது. உபமன்யுவின் கண்கெட்டு விட்டது. சரியாகப் பார்க்கமுடியவில்லை. அவன் பயந்துபோனான். தட்டுத் தடுமாறி, மாலை இருட்டுவதற்குள் குருகுலம் திரும்ப வேண்டும் என்று முயன்றான். ஆனால் வழி தெரியவில்லை. பாதை தவறிவிட்டது. ஆழமான ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தான். இருட்டில், தனிமையில், பயத்துடன் அழுது கொண்டிருந்தான். காடெங்கும் கரிய இருள் சூழ்ந்தது.

இரவு வந்ததும் உபமன்யு வராததைக் கவனித்த குரு மற்ற மாணவர்களை விசாரித்தார்.

“அவன் வழக்கம்போல் மாடு மேய்க்கப் போனான். மாடு கள் திரும்பியும் அவன் திரும்பவில்லை” என்றான் ஒருவன்.

“ஐயே, இருட்டி விட்டதே இன்னும் அவனைக் காணோமே” என்று கவலையுடன் குருவே அவனைத் தேடிப் புறப்பட்டார்.

மாணவரும் குருதேவரும், அவன் வழக்கமாகப் போகும் பாகைகளில் போய்த் தேடிப் பார்த்தனர். பிறகு, காட்டுப் பாதைகளில் சென்று, உரக்க , “உபமன்யு , எங்கே இருக்கிறாய்? என் குரல் கேட்கிறதா?” என்று கூவினார் குரு.

பள்ளத்தில் விழுந்த அதிர்ச்சியில் உபமன்யு லேசான மயக்கமடைந்திருந்தான். குருவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு, தன் நினைவு வரப்பெற்றான். “குருவே! நான் இங்கே இருக்கிறேன். பள்ளத்தில் விழுந்துவிட்டேன்” என்று பதில் குரல் கொடுத்தான்.

எல்லாரும் ஓடிப் போய் அவனைக் கண்டுபிடித்தார்கள் உபமன்யுவின் உடை கிழிந்திருந்தது. உடலெங்கும் முள் குத்தியிருந்தது. கன்னத்தில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

“இந்தப் பள்ளத்தில் ஏன் உட்கார்ந்திருக்கிறாய்?” என்று குருதேவர் கேட்டார்.

தன் வேதனையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு உபமன்யு கூறினான்: “ஐயா, நான் வேண்டுமென்றே இங்கே வந்து உட்காரவில்லை. நான் இங்கே தவறி விழுந்து விட்டேன். நான் ஒரு செடியின் இலையைத் தின்றேன். உடனே என் கண்களில் நீர் கொட்டியது. பிறகு கண் மங்கியது. அப்புறம் குருடாகிவிட்டேன்” என்று கூறி “பசுக்கள் பத்திரமாகத் திரும்பினவா?” என்று விசாரித்தான்.

“பசுக்கள் பத்திரமாகத் திரும்பி விட்டன” என்று உபமன்யுவின் தோழர்கள் பதிலளித்தார்கள். “நீ தின்ற செடி எப்படி இருந்தது, விவரித்துச் சொல்” என்று குருதேவர் கேட்டார். பிறகு, “நீ இங்கேயே இரு. பார்வை வேண்டு மென்று கடவுளை வேண்டிக்கொள். தீவிரமாகத் தவம் செய்தால் கடவுள் உனக்குப் பார்வையை அளிப்பார். அல்லது இந்தக் குறையைத் தாங்கிக்கொள்ளும் தைரியத்தை அளிப்பார். அப்புறம் நீ ஆசிரமத்துக்குத் திரும்பு” என்றார்.

உபயன்யுவுக்கு, இதுவும் ஒரு சோதனை என்பது புரிந்தது. ரோசம் மிக்க அவன் அழுவானா? அல்லது மண்டியிட்டு ‘இரக்கம் காட்டுங்கள்’ என்று கெஞ்சுவானா? குருதேவர் சொன்னதைக் குனிந்த தலை நிமிராமல் கேட்டான். கை கட்டி, பத்மாசனம் போட்டு தவம் செய்ய அமர்ந்தான். பிற மாண வர்களுடன் குருதேவர் ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார்.

காட்டிலே ஒரே இருட்டு. எத்தனையோ விசித்திரமான, பயங்கர ஒலிகள். ஆனால் உபமன்யு சற்றும் பயப்படவில்லை. “இந்தத் தண்டனையை தைரியத்துடன் தாங்கிக்கொள் வேன்” என்ற உறுதியுடன் கடவுளை நோக்கித் தவம் செய் தான். முதலில், “இறைவா. என்னைக் காப்பாற்று. கண் பார்வையைத் திரும்பக் கொடு. அன்புவடிவானவனே, முட்டாள் தனமான என் செயல்களை மன்னிப்பாய். இன்று நான் கற்ற பாடத்தை மறக்கவே மாட்டேன்” என்று கதறினான்.

வெகு விரைவில் உபமன்யு தியானத்தில் ஆழ்ந்து விட் டான். சிறிது நேரத்தில் அவன் அருகே அசுவினிதேவர்கள் என்னும் இரட்டையர் சோதி வடிவில் தோன்றியது போலி ருந்தது. அவர்கள் தான் வானுலக மருத்துவர் என்று குரு சொல்லியிருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

எங்களை அழைத்தாயா உபமன்யு ! உனக்கு என்ன வேண்டும்?” என்று அசுவினி தேவர்கள் கேட்டனர்.

எனக்குப் பார்வை திரும்ப வேண்டும் என்று வேண்டி னான் உபமன்யு. அசுவினி தேவர்கள் புன்னகையுடன் அவ னிடம் அற்புதக் குளிகையைக் கொடுத்தனர். உபமன்யு அதை வாங்கி, வாயில் போட எடுத்தான். உடனே தன் சபதம் நினைவுக்கு வந்தது. தின்ன நினைத்த குளிகையைக் கையிலே மூடிக்கொண்டான். “தேவர்களே, நீங்கள் அளித்த இந்தக் குளிகையை நன்றியோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று அடக்கமாகச் சொன்னான்.

“அது சரி. அதை விழுங்குவதற்கென்ன? என்ன தயக்கம்?” என்று கேட்டனர் தேவர்கள்.

“ஏனா? என் ஆசிரியர் அனுமதி இல்லாமல் ஒன்றுமே தின்னமாட்டேன்” என்று பதிலளித்தான் சிறுவன்.

“மருந்து சாப்பிடக் கூடவா அனுமதி வேண்டும்” என்ற னர் அஸ்வினி தேவர்கள், அவனைக் கூர்ந்து பார்த்து.

“மருந்தானால் கூட குருதேவர் சொன்னால் தான் சாப்பிடுவேன்” என்றான் உபமன்யு உறுதியுடன்.

அவன் இப்படிச் சொன்னதும் அசுவினி தேவர் என்னும் இரட்டையர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். புன்னகையுடன் கைகளை உயர்த்தி உபமன்யுவை ஆசீர் வதித்து, மீண்டும் வானில் எழும்பி நட்சத்திரங்களாயினர்.

பொழுது புலர்ந்தது. மரங்களில் பறவைகள் கீச்சிட்ட ஒலி கேட்டு உபமன்யு விழித்தான். என்ன விந்தை, அவனுக்குப் பார்வை திரும்ப வந்துவிட்டது! அப்பப்பா. மீண்டும் பார்க்க முடிந்ததே என்ற மகிழ்ச்சியில், சுற்று முற்றும் ஒவ்வொரு பொருளையும் கண்குளிர நோக்கினான். நீல வானத்தில் வெள்ளை மேகத்திலே ஒரு புது அழகைக் கண்டான். மலர் களிலே ஓர் இனிமையை உணர்ந்தான். மரத்தின் கிளைகள் ஊடே வீசும் சூரிய ஒளியில், சிறு செடி மொட்டு மலர்வதை ரசித்தான். ‘அட்டா ஒரே மரத்திலே எத்தனை வகைப் பச்சை வண்ணங்கள்! என்பதை உணர்ந்து வியந்தான். இயற்கை யின் இந்த அழகுகளை யெல்லாம் – இத்தனை நாள் கண்ணிருந் தும் காணாத அழகுகளை – மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது.

நேரமாகிறது, குருகுலத்திற்குத் திரும்பவேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்தான். தன் கைப்பிடிக்குள் ஏதோ இருப் பதை உணர்ந்தான். “ஒகோ , அசுவினி தேவர் தந்த அற் புதக் குளிகை ‘ என்பது நினைவுவந்தது.

கையைப் பிரித்தால், அந்த அற்புதக் குளிகை எங்கேயா வது விழுந்துவிடுமோ என்ற கவலையுடன், மூடிய கையுடனே குருகுலத்தை நோக்கி ஓடினான். அவனுக்குப் பசிக்கவே இல்லை. சோர்வே இல்லை. பயமும் இல்லை. மனத்திலே ஒரு மகிழ்ச்சி, உடலிலே ஒரு சுறுசுறுப்பு. நேரே குருதேவரிடம் சென்றான்.

“குருதேவா. நான் வந்துவிட்டேன். அசுவினி தேவர் கள் எனக்குப் பார்வை அளித்துவிட்டார்கள். அவர்கள் நான் தின்பதற்கு ஏதோ கொடுத்தார்கள்” என்று சொல்லி ஆசிரி யரை நிமிர்த்து பார்த்தான்.

“ஆனால் நான் தின்னவில்லை.” என்று கூறி, தன் கையைப் பிரித்தான். கையிலே இருந்தது என்ன தெரியுமா? ஒரு பிடி மண். காட்டு மண்.

உபமன்யுவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன, எல்லாம் கனவா?” என்று ஆசிரியரைக் கேட்டான்.

“கனவா? உன்னைப் பொருத்தவரை அது கனவே அல்ல. உண்மைதான். பார்வை மீண்டும் கிடைத்தது போல உண் மைதான்” என்றார் குருதேவர். பிறகு கனிவுடன் , “பார்வை திரும்பியது போல், பசியும் வந்ததா? வா. நேற்றிரவு இங்கே யாரும் ஒன்றும் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. வா. பழைய சோறும் தயிரும் தின்னலாம் வா” என்றார்.

– எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள், முதற் பதிப்பு 1977, சாந்தா ரங்காச்சாரி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *