கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 574 
 
 

அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24

அத்தியாயம்-17

இப்போது, மின்னல் கீறுகள் மண்டையைக் கூறு போடுகின்றன. தப்பு வழியில் வளரும் சந்ததி, தப்பு வழியிலேயே பூவும் பிஞ்சும் உதிர்க்குமா?

ஆனால், பழியோரிடம், பாவமோரிடம் என்றல்லவோ விடிந்திருக்கிறது? அவன் அன்று வந்து கூப்பிட்டான்; கெஞ்சினான்.

அன்று மட்டுமில்லை. இதற்கு முன்பும் ரஞ்சிதம் அனுப்பி வந்திருக்கிறான். ரஞ்சிதத்துக்கும் அவள் மீது அன்றிலிருந்தே கோபம்தான்.

“கெளவி இருத்து வச்சிக் கழுத்தறுத்திட்டதே ?” என்றாளாம் ரஞ்சிதத்தின் பாட்டி.

தான் செய்தது தவறோ என்ற உறுத்தல் அவள் அடி மனதில் மணலாய் வேதனை தந்து கொண்டிருக்கிறது…

காந்தி வழியில் கதருடுத்தி, மதுவிலக்குப் பிரசாரம் செய்து சிறை சென்ற பெண்மணிகள், பிறகு சமூக சேவை என்று ஆதரவற்ற, ஆநாதை விடுதி என்றுதான் தங்கள் சேவைகளைத் தொடர்ந்தார்கள்.

அப்படிப்பட்ட நிறுவனம் ஒன்று வெற்றிவிழா கொண்டாடியபோது அம்மா இல்லை; அய்யா இருந்தார். டில்லியில் இருந்து அப்போதைய பிரதமர் இந்திரா அம்மையார் வந்து பேசினார். இவருக்கு அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் ஒருவர் மொழி பெயர்த்தார். “வெள்ளிவிழா கொண்டாடும், இந்த நிறுவனத்தின் மூலமாக சேவை செய்யும் பெண்கள் சிறந்த சமூக சேவகர்கள் தாம். சந்தேகமில்லை. ஆனால் இது சிறப்பாகப் பொன்விழாக் கொண்டாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஏன் என்றால், ஒரு முன்னேற்ற சமுதாயத்தில் ஆதரவற்ற பெண்கள், கர்ப்பிணிகள், அநாதைகள் என்ற கரும்புள்ளிகள் இருக்கலாகாது…” என்று சொன்னாராம்.

அநாதைப் பெண்கள், கர்ப்பிணிகள்… அநாதைகள்…

அநாதைகள் எப்படி வருகிறார்கள்?

மரகதம் ஒரு பிள்ளையைப் பெற்று, அதை அநாதையாகக் குப்பைத் தொட்டியிலோ எங்கோ விடக்கூடாது என்று தான் அவள் ஆதரவு கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாள். ஒரு சமயம் ஒரு பெரிய வக்கீல் வீட்டில் வேலைக்கிருந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். வக்கீலா, அவர் மகனா என்று அந்தப் பெண் சொல்லவில்லை. பயத்தில் உறைந்து போனாள். அம்மாதான் அவளை அந்த இல்லத்தில் கொண்டு சேர்ப்பித்தார். ‘உங்க குருகுலத்திலேயே வைத்துக் கொள்ளலாமே, சரோம்மா’ என்று அவர் கேட்டாராம்… அம்மா அய்யாவிடம் வந்து சொன்னார். “இங்கு தப்பு நடக்கக் கூடாது தாயம்மா, நீ உன் பிள்ளையைத் தாலியைக் கொடுத்து குழந்தைக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது ரொம்ப சரி…” என்றார்.

ஆனால் தவறாக ஒரு பிள்ளைக்குத் தாயான பிறகு, மரகதம், எந்தப் பாட்டைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்த வந்தாளோ, அந்தப் பாட்டின் பக்கமே திரும்பி வைராக்கியமாக இருந்திருக்கலாம். இல்லையேல்…?

சீ! ஆண் திருந்தாமல், பெண் எங்கிருந்து வைராக்கியம் காப்பாள்? இவள் இப்போது, துப்பிய எச்சிலை எடுத்து விழுங்குவாளா? ஒர் ஏழைத்தாய்க்கு நியாயம்.

குருகுலத்தில் அடிபதித்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. பராங்குசம் இவளைப் புல்லுக்கும் மதிக்கமாட்டான். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழலாம்.

அவர்களுடைய முறையீட்டை வாங்கிக் கொண்டு மகன் வீடு செல்ல முடிவு செய்கிறாள்.

பிற்பகலில் ரங்கன், மாமரத்துக்கும் தென்னமரத்துக்கும் எரு வைப்பவர் என்று ஒருவனைக் கூட்டிக் கொண்டு வருகிறான். வாசலில் ஆட்டோவில் ஒரு பாலிதீன் சாக்கில் இருந்து வெளிர் நீலப் பொடியைக் கொண்டு வருகிறார்கள். மரத்தைச் சுற்றிக் கொத்தித் துரவுகிறார்கள்.

இவளுக்குச் சும்மா இருக்க முடியவில்லை.

“ஏம்பா, மாமரம் முச்சூடும் பூச்சி. புழுபுழுவா இருக்கு. கடிச்ச எடம் நெருப்புப் பட்டாப்பில கொப்புளிக்குது…”

“அதெல்லாம் போயிடும் பாட்டிம்மா? இது, பூச்சி கொல்லி, உரம் எல்லாம் சேத்த காம்பிளெக்ஸ் உரம்…”

ரங்கன், உடனே, “குருகுலத்திலேந்து டாக்டர் அம்மா தான் அனுப்பி வச்சிருக்காங்க!” என்று தீர்க்கிறான்.

இவளுக்குப் பேச வாயில்லை. என்றாலும், “ரங்கா, உங்கிட்ட ஒரு சமாசாரம் சொல்லனும், அவரை அனுப்பிட்டு வா” என்று தயங்கி நிற்கிறாள்.

“என்ன விசயம்…?” கேட்கும் தோரணையே அவளை ஒதுக்கித் தள்ளப் போதுமானதாக இருக்கிறது.

ராமலிங்கம் வந்ததையும் அந்தப் பெண் பிள்ளை கதறியதையும் சொல்கிறாள்.

“மனசு அடிச்சுக்கிது. அவுங்க இப்ப இருக்கிற எடம் எனக்குத் தெரியாது. அசோக் நகரோ, அண்ணா நகரோ சொன்னாங்க. உனக்குத்தான் அந்தப் பக்கமும் பழக்கம். இட்டுட்டுப் போறியா?”

“இதென்னம்மா, நாயம் ! வூடுதேடி வந்தவங்கள வெறட்டி அடிச்சிங்க. இப்ப என்னியும் சேத்து அடிப்பாங்க! தவுரவும் இப்ப அவுங்க கட்சி இவங்ககட்சிக்கு ஆதரவு கூட இல்ல. உங்களுக்கு அட்ரசு வாணா மண்ணாங்கட்டியக் கேட்டு வாங்கிட்டுவரேன். போயிட்டு வாங்க!” என்று கடித்துத் துப்பிவிட்டுப் போகிறான்.

‘மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு’ பொங்கிவரும் சந்தோசச் சிரிப்புடன் தலைத்துணியை உதறிக் கொண்டு மாலை ஆறரை மணிக்கு வருகிறான்.

“அம்மா, கூப்புடீங்களாமே! காரியகாரரு வந்து சொன்னாரு நா, ஜகஜோதி பெளன்டேசன்லதா கிற, உம்புள்ள, புரவலரய்யாவப் பாக்கணும்னு சொன்னாரு…’ கடலைஉடைத்தாற் போல் இருக்கம் உடைபடுகிறது. “வ்லாசம் கேட்டாரு. வ்லாசம் என்ன, நான் கூட்டிப் போறேன். எதுக்கும் அவுரப் பாக்கணும். தா, பூங்காவார்டு பக்கம், தொந்தரவாகீது. ஒரு மீட்டிங் எதுனாலும் வய்க்கணும். நம்ம சின்னவரக் கூட்டிட்டு வரணும். கொஞ்சம் காசு செலவு பண்ணனும் இலக்சன் வருதுன்னு சொல்றாங்க…” தேடிச் சென்று அருவருப்பை மிதித்து விட்டாற் போல் கூச்சம் ஏற்படுகிறது.

“கச்சி விவகாரமெல்லாம் வாணாம்பா, குழந்தவேலு. சும்மாத்தான் மருமக, பேரப்புள்ளங்கல்லாம் பாக்கணும்னு கேட்டே என் மக, அமெரிக்காலேந்து வந்திருக்காளாம்…”

“ஆமாம்மா, சந்திரி டாக்டர்தானே? அவங்க மககூட பெரி டாக்டர் படிச்சிட்டு, எம்மக இருக்கிற ஆஸ்பத்திரியிலதா வந்திருக்குதாம். சந்திரி அம்மாக்குத்தா, அமெரிக்கால கார் ஆக்ஸிடென்டாகி, ஒரு கை பலமில்லாம போயி டிச்சாம்…”

இவளுக்குத் தெரியாத பல செய்திகளை வைக்கிறான்.

“அப்ப நாளக்காலம, நா டூட்டி முடிச்சி, குளிச்சி முழுவிட்டு வாரன். வாடகக்காரெடுத்திட்டு வரட்டுமா?”

“அய்யய்ய, அதெல்லாம் வாணாம்பா! நீ எப்படிப் போவ…?”

“நாம் போவ…’ என்று வானைப் பாத்துப் பொக்கைப் பல் தெரிய ஒரு சிரிப்பு மலருகிறது.

“பஸ்சிலியா போவ. அதலு நானும் வார..?”

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.

வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அநுமானிக்க முடியவில்லை.

காலையில் எழுந்து நெடுந்தொலைவு பயணம் செய்யப் போகும் உணர்வுடன் தயாராகிறாள்.

“அநாவசியமா ஒரு பெண் பாவத்தை. இல்லை ஏழைத் தாயின் சாபம் வேண்டாம். அந்த விபத்தை நானே கண்ணால் பார்த்தேன். அந்தப் பையன் மீதுள்ள வழக்கை இல்லாமலாக்கி விடுங்கள்.”

குழந்தைவேலு, அவளை மின் வண்டியில் ஏற்றிக் கூட்டிச் செல்கிறான். சைதாப்பேட்டையில் இறங்கி, ஒர் ஆட்டோவைப் பிடித்து அவளை ஏற்றிச் செல்கிறான். அவள் போகும் இடங்கள் எதுவுமே அவளுக்குப் பரிசயமாகத் தெரியவில்லை. பெரிய கட்டிடங்கள். அடுக்கு மாடிகள். பெரிய சாலையிலிருந்து திரும்பி, வழியில் முன்பே போலீசு… காவல் அறையில் துப்பாக்கியுடன் காவலர்கள். யார்யாரோ வெள்ளையும் சள்ளையுமாக. ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விடுகிறார்கள். சிறிய ஷெட்போல் ஒரு இடத்தில் கரைவேட்டிப் பையன் இவர்களை நோக்கி விசாரிக்கிறான்… “யாரோன்னு நெனச்சுக்காத தம்பி. அம்மா…” அவனைச் சற்றே விலகி அழைத்துச் சென்று காதில் கிசுகிசுக்கிறான்.

பெரிய கோட்டைக் கதவுகளை அவன் திறந்து அவர்களை மட்டும் விடுகிறான். உள்ளே எவ்வளவு பெரிய இடம்?

முன் வாயிலில் உள்ளேயும் காவல்.

அலுவலக அறை. குழந்தைவேலு உள்ளே சென்று தகவலைச் சொல்கிறான். அப்போதுதான் அவளுக்கு வெறுங்கையாய் வருகிறோமே என்று உறுத்துகிறது. மரகதத்துக்கு முதலில் இரண்டு பிள்ளைகள். அடுத்து இரண்டும் பெண்கள். எல்லாருக்கும் அநேகமாகக் கல்யாணமாகிவிட்டது. திருமணம் என்றால், முன்பு வந்து அவர்கள் அழைப்பு வைத்தார்கள். அப்போது அய்யா இருந்தார்கள். மஞ்சு கல்யாணத்துக்குச் சென்றாள். மிகப் பெரிய ஆடம்பரத்துடன் நடந்தது. அங்கே அவளுக்குத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ அறிமுகம் செய்து கொள்ளவோ கூட இடமில்லை. ரஞ்சிதம் மட்டுமே, ‘வாங்கத்தே’ என்று ஒரு வாய்ப் பேச்சு உபசரணை செய்தாள்.

பேரப்பெண்ணுக்கென்று ஒரு வெள்ளிக் குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் வாங்கிக் கொண்டு சென்றிருந்தாள். அதை மணவிடையில் ஏறிக் கொடுக்கவும் அவளுக்குச் சங்கடமாக இருந்தது. மரகதத்தின் கையில் கொடுத்து, “நான் கொடுத்தாகக் குடுத்திடம்மா ? நல்லாருக்கியா?” என்று கேட்டுக் கொண்டாள். “அத்தே, சாப்பிட்டுட்டுப் போங்க…? த, நவீ, பாட்டிய சாப்பாட்டுக் கூடத் துக்குக் கூட்டிட்டுப் போம்மா ?” அந்தப் பெண் யாரென்று தெரியவில்லை. சிவப்பாக வயிரமும் பட்டுமாக, பெரிய இடத்துப் பெண் போல் இருந்தாள்.

அவளைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்றாள். பெரிய கூடத்தில் பந்தியில் முதல் நாற்காலியில் உட்கார வைத்தாள். தனிப்பட்ட முறையில் கவனிக்கச் செய்தாள். சாப்பாடு முடிந்த பின், வாயிலில் தாம்பூலப்பை வழங்கி வெளியில் அனுப்பி வைத்தாள். தெரு நிறைந்த கார்கள். போலீசுக்காரன் நின்றிருந்தான். அந்தச் சூழலில் நகை நட்டின்றி, காலில் செருப்பு மின்றி, ஒரு வெள்ளைச் சீலையுடன் இவள் வெளியேறுவதைப் பார்த்து போலீசுக் காரன், ‘யம்மா?…’ என்றான். இவள் எண் சாணும் ஒரு சாணாகக் குன்றிப் போனாள். “என்னப்பா…’

“பையக் காட்டு ?…”

அவளுக்குச் சரீரென்று தேள் கொட்டிற்று.

“இந்தாப்பா, தாம்பூலப் பையி. வாணாம், நீயே வச்சிக்க?”

கண் கலங்கிவிட்டன. “உனக்கு வேணும்டி, தாயம்மா, வேணும்? அவர்கள் ஆடம்பரத்துக்கு, ஊருக்கு மெய்ப்புக்கு வந்து அழைப்பு வைப்பார்கள். உனக்கு இங்கே கால் வைக்க என்ன தகுதி?” அதற்குப் பிறகு அவள் இன்றுதான் கால் வைக்கிறாள்.

பெரிய கூடம், ரத்தினக் கம்பளம். சோபாக்கள். எதிரே அண்ணா, பெரியார், காந்தி படங்கள். பசுமையான பூத்தொட்டிகள். கூடத்தில் யாருமே இல்லை. தொலைபேசி, அவள் மகன் அண்ணாவுடன் இருக்கும் புகைப்படம்…

குழந்தைவேலு ஏன் உள்ளே வரவில்லை?

இவள் அந்தக் கூடத்துக்குப் பின்புறம் செல்லும் வாயிலில் உள்ள மணித்திரையைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், குழந்தைவேலுவிடம் பேசிய அலுவலகக்காரன் வருகிறான். இளைஞன். வேட்டி சட்டையுடன் சாமானி யனாக இருக்கிறான்.

“அம்மா, ஏன் நிக்கிறீங்க? உள்ளாற போங்க?…”

‘இருக்கட்டும்பா, இந்த வீட்டையா, அவுரு… இருக்கிறாரா?.”

“புரவலர் அய்யா, ஊரில இல்லீங்க. காலமதான் மதுரைக்குப் போனாங்க. நீங்க அம்மாளப் பாக்கலாமே? போங்க…”

“இல்லப்பா, அவங்க, மரகதம்மா இருக்காங்களா? அவங்களத்தா பாக்கணும்…”

அவன் தொலைபேசியை எடுத்து உள்ளே செய்தி தெரிவிக்கிறான். சற்று நேரத்தில் மஞ்சு… மஞ்சு வருகிறாள். ஒடிசலாக வடிவாக இருக்கும் பெண். முடியைக் குட்டையாக வெட்டிக் கொண்டு, பருமனாக, லேசுவைத்த நைட்டியில் வருகிறாள்.

“ஒ, நீங்க… அப்பாம்மாதான ?” அருகில் சென்று அவள் கன்னத்தைத் தடவுகிறாள். கண் விழிகள் சோர்ந்திருக்கின்றன. செவிகளில் வளையங்கள். வேறு ஒரு நகை இல்லை. அவள் கையைக் கன்னங்களிலிருந்து விலக்குகிறாள்.

“ஏம்மா, மஞ்சு… நல்லாருக்கியா?”

“ம், இப்ப யாரப் பாக்க வந்தீங்க? அப்பா ஊரில இல்ல. அம்மா நர்ஸிங்ஹோமுல இருக்காங்க…”

இதற்குள் மரகதமே அங்கு வந்து விடுகிறாள்.

மரகதம்… மினுமினுப்புச் சேலையும் கை கொள்ளா வளையல்களுமாக அவளைப் பார்த்து, “எங்க இம்புட்டுத் துரம்?” என்று குத்துகிறாள்.

“மரகதம், நல்லாயிருக்கியாம்மா?…”

“ஏதோ ஒம் புண்ணியத்துல நல்லாருக்கோம்.” அவள் அருகில் சென்று மரகதத்தின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“மரகதம், அநாவசியமா, ஒரு பொண்பாவத்த ஏழைத் தாயின் சாபத்துக்கு ஆளாக வேணாம். நீங்கல்லாம் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும். அந்த விபத்தை நானே கண்ணால பாத்தேன். நான் வாரப்ப, அந்த ரோடிலதா நடந்தது. ஏழை பாழை, பிரியாணிக்கு ஆசப்பட்டுக் கூட்டத் துக்குப் போயிருக்கா. அந்தப் பையன்தான் பொண்ணு கையப்புடிச்சி இழுத்து சக்கரத்துக்கு அடில வுட்டான்னு, கொலை வழக்குப் போட்டிருக்காம். நாகமணிதா…”

“ஏ, கெளவி!” என்று அவள் குரல் அரிவாள் வெட்டாகப் பாய்கிறது.

“நீ கண்ணால பாத்தியா ? ஏ இப்பிடிப் பொய் சொல்லுற? உனக்கு அதுதான் தொழிலு! பெத்த மகனுக்கு எதிராக் கட்சி கட்டுற சன்மம்! ஆடு நனையிதேன்னு ஒநாய் அழுதிச்சாம்! எதிர்க்கட்சிங்க, வேணுமின்னே கத்தியக்கையில வச்சிட்டுத் திரியுதுங்க. நாகு அண்ணக்கு ஊருலியே இல்ல. எதிராளிக கிட்டப் பணத்த வாங்கிட்டு, ஒண்ணுமே அறியாத புள்ளய வம்புல மாட்டி உட்டிருக்கா, அந்தப் பரதேசிக் கும்பல். இது சூதுவாது அறியாத புள்ள. போஸ்டர், பானர்னு இவங்கிட்டப் பணம் வாங்கிட்டு, அடுத்தவனுக்குச் சாதகமாக பிரசாரம் பண்ணுனா. நீ இப்ப அந்தப் பயலு களுக்கு வக்காலத்து வாங்கிட்டு வரியா? எந்த மூஞ்சிய வச்சிட்டு இங்க வந்த?…”

இவளுக்கு இந்த அடிகள் பழக்கமில்லாதவை. ஈனச் சாதியில் பிறந்தாலும், அன்பின் அரவணைப்பும் பரிவின் குரல்களுமே அவளுக்கு நியாயங்களைப் பதிய வைத்திருக்கின்றன. அநியாயங்களுக்கு அவள் தலை வணங்கிய தில்லை. ஆனால், ஒதுங்கியே பழக்கமானவள். நேராக நின்று இழிவம்புகளைத் தாங்குகிறாள்.

“இதபாரு மரகதம், என்ன நீ என்ன வேணாய் பேசிட்டுப்போ! அதனால எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா, நீ ஒரு பொம்புள. நாலு மக்களப் பெத்தவ. இன்னிக்குக் கண்ணியமான ஒரு இடத்துல நீ இருக்கேன்னா, இது எப்பிடி வந்ததுன்னு ஒரு நிமிசம் நெனச்சிப்பாரு. நம்ம புள்ளங்களுக்கு நாமதான் நல்ல வழி காட்டணும். மறுபடி சொல்ற ரோட்டுல அன்னாடம் வண்டி கவுந்து மோதி சாவு நேருது. அதெல்லாம் விதின்னு தான் போறாங்க ஆனா…”

“இதபாரு கெளவி! ஆனா ஆவன்னா கேக்க நா வரல. மரியாதையா எடத்தக் காலி பண்ணு! போ!” என்று வெட்டுகிறாள், வெரட்டுகிறாள்.

அன்று கல்யாண மண்டப வாயிலில் போலீசுக்காரன், அவள் தாம்பூலப்பையைத் திறந்து காட்டச் சொன்னானே, அப்போது நெஞ்சில் தைத்த ஊசி அவளுக்கு வேதனையே அளிக்கவில்லை. இந்த வேதனையை விழுங்கிக் கொள்ள இயலவில்லை. சந்திரி வந்திருப்பதாகக் குழந்தை வேலு சொன்னதெல்லாம் அந்த வேதனை எரிச்சலில் நினைவுக்கு வரவில்லை.

அவள் வெளியேறியதைக் கவனித்து விட்டு குழந்தைவேலு வாயில் அறையிலிருந்து ஓடிவருகிறான்…

“அதுக்குள்ள வந்திட்டீங்க…?”

அவள் பதிலேதும் கூறாமல் விடுவிடென்று நடக்கிறாள். குழந்தைவேலு, கிடுகிடென்று உள்ளே ஓடி, “வரேன்… வரேன் தலவரய்யா கிட்ட மறக்காம ஒரு பேச்சுப் போடுங்க. சின்னவருதா ஏற்பாடு செய்வாரு… வரன்… வணக்கம் அய்யா. வணக்கம்.” ஒவ்வொரு போலீசு, வாசல்படிக்காவல் எல்லோருக்கும், சலாம், வணக்கம் சொல்லிவிட்டு அவன் வருகிறான். விடுவிடென்று அந்தத் தெரு திரும்பிப் பெரிய சாலைக்கு வருகிறார்கள்.

“பெரி…ம்மா, ஆட்டோ கூப்புடட்டுமா?”

“அட வேணாம்பா, இத ஒரெட்டு, பஸ்சில ஏறினாப் போயி எறங்கலாம்.”

குழந்தைவேலுக்குப் பேசவே அவள் இடம் வைக்கவில்லை.

அத்தியாயம்-18

இந்த வருசம் மழைக்காலம் என்று பெய்யவேயில்லை. அவர்கள் கிணறு, கைவிட்டு வாளியில் எடுக்குமளவுக்கு நீர் ஏறும். உள்வரையோடு நிற்கிறது, நீர். மார்கழிக்குளிர் என்று குளிரும் இல்லை. பக்கத்தில் காடாய்க்கிடந்த இடங்களைத் துப்புரவு செய்ய ரங்கனுடன் இரண்டு ஆட்கள் வருகின்றனர். நாரத்தை வேம்பு, கொவ்வைக் கொடிகள், நொச்சி, ஆடாதொடை, கீழாநெல்லி என்று மருந்து தேடுபவர்கள் இங்கே வருவார்கள்.

எல்லாம் இப்போது குவியல்களாகக் கழிக்கப்படுகின்றன. ‘பாம்பு…!’

தப்பி ஓட முயன்ற உயிர்களைத் தடியால் அடித்துக் கொல்கிறார்கள். ஒரு பன்றி அங்கே குட்டிக் குடும்பம் வைத்திருக்கிறது போலும்? அவைகளும் குடுகுடென்று எதிரே அரையும் குறையுமாக நிற்கும் சுவர்களுக்கிடையே ஒடுகின்றன. அந்த அறை சுவர் கட்டுமானங்களை ஒட்டி, பழைய கீற்று, சாக்கு, சிமந்துப்பலகை என்று மறைப்பு களுடன் ஒரு இடம் பெயர்ந்த கும்பல் குடியேறி இருக்கிறது.

“நாங்கள் எல்லாருமே, கிராமங்களை விட்டு, வியாபாரம் படிப்புன்னு, இடம் பெயர்ந்தவங்கதான்” என்று அய்யா சொன்ன குரல் ஒலிக்கிறது. ஆனால் இப்படிப் பிழைக்க வழியில்லாமலா வந்தார்கள்? இப்படிக் குஞ்சும் குழந்தையுமாகவா வந்தார்கள்?

சைக்கிளில், சுருக்கு வளையக்கம்பி, கயிற்றுடன் இரண்டு பேர் அங்கே போகிறார்கள்.

சற்றைக்கெல்லாம் பன்றியின் மூர்க்கமான பிளிறல் அந்தப் பக்கம் மெங்கும் எதிரொலிக்கிறது.

தாயம்மாளுக்கு வயிற்றை சங்கடம் செய்கிறது.

“கிறிஸ்துமஸ் வருதில்ல?..” என்று சொல்லிக் கொண்டு ரங்கசாமி பீடிக்காரலை உமிழ்கிறான்.

“கிழக்கால பெரிய ஜபக்கூடம் கட்டுறாங்க.”

“புதிசில்ல. அது கூரைக் கொட்டாயா இருந்திச்சி; அத்தப் பெரிசா கட்டுறாங்க. வெளிநாட்டுலேந்து பணம் கொட்டுதையா…” இவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு கார்கள் வந்து நிற்கின்றன. முதலில் வந்து நிற்கும் காரின் கதவைத் திறந்து கெண்டு ஒரு பெண் இறங்குகிறாள். நல்ல வெளுப்பாக, உயரமாக, கிராப்தலையும், நீண்ட தொங்கட்டானும், மூக்குக்கண்ணாடியுமாக இருக்கிறாள். சல்வார் கமிஸ், பாதம் துக்கிய செருப்பு… பின்னால் பருமனாக… ஓ, சந்திரி… கரையில்லாத இளநீலப் பட்டுச் சேலை, கரேலென்று சாயம் போட்டமுடி. அச்சாக அப்பனே போல், ஒரு பையன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். இவன் ரஞ்சிதத்தின் பையனா? ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க… வாங்கம்மா, வாங்க…! முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல?” என்று மாடிக்கு ஏறிச் செல்கிறான்.

இவள் மூச்சடைக்க நிற்கையில், மின்னும் காசாய பட்டு ஜிப்பாவுடன், அதே பட்டு வேட்டியும், வெளியில் துலங்கும் உருத்திராட்ச தங்க மணிகளும் மார்பில் புரள, பிடரியில் விழும் எள்ளும் அரிசியுமான முடி தாடியுடன் அவன்… பராங்குசம் இறங்குகிறான். நல்ல கருப்பில், சேலை உடுத்திய பருமனான ஒரு பெண், சிவந்த கழுத்தில் மெல்லிய சங்கிலியில் கோத்த சிலுவை, வயிரத் தோடுகள், புதையப்புதைய வெள்ளை மஸ்லின் ரவிக்கை…

“அம்மா எப்படி இருக்கிற? ரெண்டு மாசம் முன்ன நீ வந்திருந்தியாம், உடனே போயிட்டியாம். மஞ்சு சொல்லிச்சி. எனக்கும் உன்னை ஒரு நடை வந்து பார்க்கணும்னதா, மகளிரணிப் பொறுப்பு வந்த பிறகு நிக்க நேரமில்ல. எப்படியோ பொழுது ஒடிப் போயிடுது. எனக்கும்” சந்திரி முடிக்கு முன் “போதும்” என்று சொல்வது போல் கையைக் காட்டுகிறாள்.

அவள் மகன் வீட்டு பந்தம் நினைக்கவே கசப்புப் பந்தாகத்திரளுகிறது. இவள் அங்கு சென்று வந்தபின் மகன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததாகச் செய்தி வந்தது. குழந்தைவேலுவே வந்து சொன்னான். இவள் அசையவில்லை.

“அம்மா, எப்படி இருக்கிறீங்க..?”

பராங்குசமா, அம்மா என்று கேட்டு, கை குவிக்கிறான்? இது கனவா நினைவா? ஒருகால் தேர்தலுக்கு நிற்கிறானா? “தாயி, மாடிய வந்து பெருக்கிட்டுப்போ! துடப்பம் எடுத்திட்டு வா? இங்க ஏன் நிக்கிற, போ!’ என்று பேசிய பராங்குசமா? காசாயத்தின் மர்மம் என்ன ? அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆசாடபூதி வேசம் கட்டுவார்கள் அப்படியா?…

இவள் திகைத்து நிற்கையில் அந்த அரும்பு மீசை இவள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறது. அந்த லோலக்கு சுந்தரியும் அதைச் செய்கிறது.

“என்னம்மா, திகச்சிப் போயிட்டீங்க? இவ என் மக அர்ஷிதா. யு.எஸ்.ல மெடிசின் முடிச்சிட்டு வந்திருக்கா. இவன் தமிழ்ச் செல்வன், ரஞ்சிதத்தின் இரண்டாவது பையன். என்ஜினிரிங் முடிச்சிட்டு, நம்ம கம்பெனிலியே இருக்கிறான். கூடப்படிச்ச சுதாவயே கட்டிக்கிட்டான்…”

“ஏம்மா வாசல் லியே பேசுறிங்க ? உள்ள வாங்க. எல்லாம் உள்ளே வாங்க… அம்மா, வாங்க!” மேலிருந்து விரிசமக்காளம் தட்டிப் போடப்பட்டிருக்கிறது.

“உக்காருங்க. முன்னமே ஒரு ஃபோன் போட்டு…” என்று ரங்கன் சொல்லும் போதே, இன்னொரு மஸ்லின் ஜுப்பா, உருத்திராட்சம் வருகிறது. பள்ளிக் கூடத்துப் பத்மதாசன்.

“அடாடா… வாங்க, வாங்க ஸார், வணக்கம்…”

“நமஸ்காரம். சாமிஜிய நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவுக்குக் கூப்பிடணும்னு அப்பாயின்ட்மெண்ட் நேரம் கேக்க நேத்துக்கூட ஃபோன் போட்டேன்…”

“…நா இப்பல்லாம் குருகுலம் சென்டரில இருக்கிற தில்ல – சாமிஜி ஆசிரமத்திலதான் என்ன இருக்கும்படி உத்தரவு. இன்னைக்குக்கூட அவங்க அனுமதியில்தான் வந்திருக்கிறேன். எல்லாம் இவங்கதான் நிர்வாகம். டாக்டர் எமிலி, லட்ச லட்சமா புரளும் டாக்டர் தொழில வுட்டுட்டு, இங்க கல்விச் சேவைக்காக வந்து வாழ்க்கையையே கொடுத்திருக்காங்க. இதும் சாமிஜியின் ஆணைதான்.”

அந்தப் பூசணி முகம் கை குவிக்கிறது.

இதற்குள் ஓராள் ஆப்பிள் ஆரஞ்சு மலை வாழை அடங்கிய தட்டு, பெப்சி, கோலா, பான வகைகள் எல்லாம் கொண்டு வந்து வைக்கிறான்.

அவள் சுவரில் இருக்கும் அந்தப் படங்களை நிமிர்ந்து பார்த்த வண்ணம் சுவரோடு சாய்ந்து நிற்கிறாள். கண்களில் நீர் மல்குகிறது. ராஜலட்சுமி சொன்ன செய்திகள் முட்டுகின்றன.

இந்தப் பத்மதாசன்… ஜயந்தி டீச்சர் சொன்ன செய்திகள், சங்கரி… சங்கரி, அடேய் பொறுக்கிகளா, இந்தப் புனிதமான இடத்தை மாசு படுத்தவந்திருக்கீறீர்களா? எந்திருங்கடா? என்று கத்த வேண்டுபோல் இருக்கிறது. ஆனால், அவள் யார்? இந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் யார்? எங்கே! ராதாம்மாவின் பையன், விக்ரம், சுருண்ட முடியுடன் துருதுருவென்று இருக்கும். ராம்துன் பாடினால், அழகாகத் தாளம் போடும்…

ஏக் தோ… ஏக் தோ…

காந்தியடிகளின் ஒரே பிரார்த்தனைக் கூட்டம்தான் அவள் பார்த்தாள். அப்போது, பையன் பிறக்கவில்லை. ராதாம்மா பாவாடை சட்டை போட்டுக் கொண்ட வயசு. காந்திஜி இந்தி பிரசார சபைக்கு வந்திருந்தார். அதுதான் அவர் கடைசியாகச் சென்னைக்கு வந்த நேரம். அம்மா அய்யா எல்லோரும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முன்பு போய்விட்டார்கள். சந்திரி, பஞ்சமி, ராதாம்மா, எல்லோரையும் சுசீலா தேவி, மீனாட்சி என்று குருகுலத்தில் சேர்ந்த குழந்தைகளுடன் முன்பே கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். குருகுலத்தில் அந்தக் காலத்தில் டயர் போட்ட பெரிய ரெட்டை மாட்டு வண்டி ஒன்று உண்டு. அதை அவள் புருசன்தான் ஒட்டுவான். ஆனால் அன்று அந்த வண்டியைச் சுப்பய்யா ஒட்டிக் கொண்டு போனதாக நினைவு. இவளும் இவள் புருசனும் சாயங்காலமாகச் சென்றார்கள்.

என்ன கூட்டம் ?

ஒரே தலைகள். சேவாதள தொண்டர்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இளமஞ்சள் கதர்ச் சேலையும் ரவிக்கையும் அணிந்த பெண் தொண்டர்கள். அம்மாவும் இந்தக் கூட்டத்தில் தான் இருப்பாா்… என்று நினைத்துக் கொண்டு தெரிந்த முகத்தைத் துழாவினாள். ஆங்காங்கு மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலெல்லாம் மக்கள்… நடுவே உயரமாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது, ஏணி போன்ற படிகளில் காந்தி ஏறியது தெரிந்தது. மேடையில் பெண்கள், ஆண்கள் இருந்தார்கள். மாயமந்திரம் போல் இருக்கிறது.

ஏக் தோ… ஏக் தோ… என்று அவர் சொன்ன மந்திரக் குரலில் கூட்டம் அப்படியே கட்டுப்பட்டுத் தாளம் போட்டது. அந்த சுருதி, தாளம், எல்லாம் தாறுமாறாகி விட்டன. அவளுக்குக் கண்ணீர் வடிந்து கன்னங்களை நனைக்கிறது. சூழலை மறந்து அவள் நின்ற நிலையில் யார் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை.

“அப்பா… நான்… வரேன். ரிபப்ளிக்டே செலிப்ரேஷனுக்கு எப்படியானும் சாமிஜியக் கூட்டிட்டு வரணும்…”

“நிச்சியமா. நான் தகவல் சொல்றேன். நீங்க வந்து பாருங்க…” அவர் சென்ற பிறகு, பராங்குசம் தாடியை உருவிக் கொள்கிறான். பிறகு எமிலியிடம் எதோ பேசுகிறான். லட்ச லட்சமாகப் புரளும் மருத்துவத் தொழில் ஏதாக இருக்கும்? இந்தப் பொறுக்கிகளின் அநியாயங்களைக் கரைக்கும் மருத்துவத் தொழிலாகத்தான் இருக்கும். இப்போது, பொட்டைப் பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே பெண் குழந்தைகளைத் தாய்மார் அழித்துக் கொள்ளும் முன்னேற்றம் வந்திருக்கிறது. ‘ஏண்டி, உனக்குப் புருசன், பிள்ளை இல்லாது போனாலும், பெண் என்ற ஈவு இரக்கம், நியாய அநியாய மனசும் இல்லையா? ராஜலட்சுமி பெண்ணுக்கு இடம் இல்லைன்னு சொல்லவா இந்த அய்யா இப்படி ஒரு நிறுவனத்தை உண்டாக்கினார்?… இந்த இடம், அந்த மாதிரி ஒரு குருகுலத்துக்கு உதவனும் என்றிருந்தாலும் ராதாம்மாவின் அந்தப் பையன், விக்ரம்… தம்பி, குழந்தே, நீ எங்கப்பா இருக்கிற? பன்னிகளையும் பாம்புகளையும் விடக் கீழான சன்மங்கள் பெருகவா அய்யா இந்த மண்ணைத் தத்தம் செய்திட்டுப் போனாங்க?…’

கண்ணிரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அம்மா. அம்மா…?…”

சந்திரிதான் எழுந்து நின்று அவள் கையைப் பற்றுகிறாள்.

“ஏனிப்ப அழுவுற? நீ எதுக்கு அழணும்? உம்மகன் செத்துப் புழச்சிருக்கு. அவ மனசுக்குள்ள, அம்மா கிட்டேந்து ஒரு இதமான பேச்சு வரலன்னு தாபந்தான் அதிகமாயிருக்கு. நீ யாரோ ஒரு பொறுக்கிப் பயலுக்காக, வீடு தேடி வந்து, அவங்கள அவமானம் செய்திட்டுப் போனத ரஞ்சிதத்தால கூடத் தாங்க முடியல. ஆசுபத்திரிக்கு ஒரு எட்டு வந்து பாத்திருக்கலாமில்ல? நா அங்கதா இருந்தே…”

“சந்திம்மா, அதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்லுறீங்க? அது உங்க குடும்ப விசயம்… அதெல்லாம் இப்ப வாணாம். ”

“… தாயம்மா, இப்ப நான் நேரா விசயத்துக்கு வரேன்…” என்று பராங்குசம் அவளைப் பார்த்து உட்காருகிறான். தாடியைத் தடவிக் கொண்டு, மேலே பார்க்கிறான்.

“அய்யா. தியாகி எஸ்.கே.ஆர். என் கனவுல வந்தாங்க. புழுதில தேய வேண்டிய என்னை, சேவையில் புடம் போட்டு இன்னிக்குக் கல்விக்குன்னு ஒரு வாழ்நாள் தொண்டுக்கு அர்ப்பணிக்க ஆளாக்கியவரு, அந்த வள்ளல். உனக்கு நா ஏன் காசாயம் போட்டுக்கணும்னு தோணியிருக்கணும். அது நியாயமானது தான். ‘தம்பி, நான் தோற்றுவித்த குருகுலக் குடிலை நீ பெரிய கல்வி சாம்ராச்சியமா வளர்த்திட்டே. மக்கள் குலத்துக்கு நீ இன்னும் சேவை செய்யணும். ‘ஆன்மிகம்’ இல்லாத வாழ்க்கை இல்ல. நீ முழுசா அதில் ஈடுபடனும்…’ன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்னும் புரியல. சாமிஜிகிட்ட ஒடினேன். நம்ப அய்யா படம் அங்கேயும் ஆசிரமத்துல இருக்கு இப்ப அவங்கதான் சொன்னாங்க நீ… காவி உடுத்தணும்னு உத்தரவாயிருக்குன்னு… இந்த பாரத தேசம் மகான்கள் உருவான தேசம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காந்திஜி, நம் தியாகி, எல்லோரும் வழிகாட்டி இருக்காங்க. அந்த வழியில் நீ இன்னும் சேவை செய்யணும்னாங்க. இப்ப, நகரத்தில் மூலைக்கு மூலை ஆஸ்பத்திரி இருந்தாலும், நோய்க்கூட்டம் பெருத்துப் போச்சு. இப்ப இந்த இடம் முழுதுமாக, எல்லா வசதிகளையும் அடக்கிய நவீன சிகிச்சைகள் செய்யுமளவுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்னு இருக்கிறோம்…” அவன் நிறுத்துகிறான்.

சந்திரி தொடருகிறாள். “ஆமாம்மா. இப்ப தம்பி, ‘ஹார்ட்ஃபெய்லியர்’ன்னான பிறகு பிழைச்சு நடமாடுறான்னா, அது நவீன மருத்துவம்தான். அமெரிக்காவுல இருக்கிற மாதிரியே அத்தனை வசதிகளுடன், அங்கேயே பயிற்சி பெற்ற டாக்டர்கள், அதுக்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் வரவழைச்சி உருவாக்கும் திட்டத்தில இறங்கி இருக்கிறாங்க. என்னிக்கிருந்தாலும், உங்களுக்கும் வயசாவுது எண்பதுக்குமேலே ஆயிட்டுது. எதுக்கு இங்கே கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியே இருக்கணும்?… சொல்லுங்க?”

தாடி உருவல், அவளுக்கு மிக அருவருப்பாக இருக்கிறது. “நீங்க உங்க மகன் வீட்டுக்குப் போக இஷ்டப் படலன்னா வேணாம். பேசாம, குருகுலம் ‘கார்னரில்’ உங்களுக்குன்ன ஒரு ரூம் வசதியா, இப்படியே காந்திபடம், அய்யா படம் மாட்டி, வச்சிக் குடுத்துடறோம். உங்களுக்கு என்ன வசதி வேணுன்னாலும் அப்படி…”

அவளுள் ஒரு பிரளயமே நடக்கிறது.

‘தாயம்மா, சத்தியம் மயிரிழை போல் இருந்தாலும் அதன் வலிமை பெரிது. விடாதே. அந்தக் கல்விச்சாலை போல்தான் இந்த ஆஸ்பத்திரியும் இயங்கும். எந்த ஏழைக்கும் இங்கே இடம் இருக்காது. ஜயந்தியின் பழைய வீட்டில், அந்த கிறிஸ்தவ டாக்டர், தொள தொளவென்று வெள்ளைச் சராய் போட்டுக் கொண்டு வரும் பஞ்சைப் பராரிகளுக்கு வைத்தியம் செய்கிறாரே, அதற்கு மாற்றில்லை இது. இது முதலைகளுக்கு…’

“என்னம்மா? யோசிக்கிற ? இப்ப உலகமுச்சூடும், ரொம்ப வேகமா வளர்ச்சியும் மாறுதலும் வந்திருக்கு. 2005க்குள், சர்க்கரை நோயும் மூட்டு வாதமும் மிக வேகமா வளரும்னு சொல்றாங்க வசதி, சவுரியங்கள் இப்படியும் பாதிப்பை உண்டாக்குது. நான் இப்ப எத்தினி கிராமங்களுக்குப் போறேன்? நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. பொம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப.? சில்க்சாம்பு, கிளின் சாம் புன்னு விதவிதமா பாக்கெட் வாங்கித் தலை கசக்குறாங்க. டி.வி. இல்லாத குடிசை இல்ல. அதுனால, வளர்ச்சியோட, பாதிப்புகளையும் நாம நிணச்சிப் பார்க்க வேண்டி இருக்கு…”

இப்போது, குழந்தைவேலு கூடத்து வாயிலில் தென்படுகிறான். சந்திரியைப் பார்த்து, கூழையாகவே கும்பிடு போடுகிறான்.

“வணக்கம் டாக்டரம்மா!…”

ஒரே மலர்ச்சி உருவம். “வாய்யா, மண்ணாங்கட்டி! எப்டீயிருக்கே?”

“வணக்கம் சேர்மன் ஐயா !”

பராங்குசத்துக்கு ‘சேர்மன்’ பதவியா?

இவன் வருகை இறுக்கத்தைத் தளர்த்துகிறது.

“யோவ், வீனஸ் ஆஸ்பத்திரியைவிட மிகப் பெரிசு இங்க ஒரு ஆஸ்பத்திரி வரப்போகுது.”

அவன் முழுதாக மலர்ந்து, “சந்தோசம் அய்யா, வரட்டும்” என்று ஆமோதிக்கிறான்.

இளைய தலைமுறைகள் இரண்டும் அதற்குள் பின்புறம் சென்று சுற்றிவிட்டு வருகிறார்கள்.

“வணக்கம், சந்திரிம்மா மகளா?…” அதற்கு ஒரு சிரிப்பு, கைகுவிப்பு.

“அச்சா புரவலரய்யா மாருதியே கிறாரு… வணக்கமையா, இளைய புரவலர்…” என்று மீண்டும் சிரிப்பு.

அரசியல் கட்சி என்பது இப்படி ஒரு பலாப்பழமாக ஈக்களைக் குந்தவைக்குமோ?

“என்ன, ப்பா! பாத்தியா?…”

“பின்னாடி ஒரு ரோ பழைய வீடுங்க இருக்கு… அதையும் சேத்துக்கிட்டா, இந்த இடம் ஒரு ஃபைவ் ஸ்டோரி பில்டிங்கா, பேஸ்மென்ட் – காலேஜ், பெரிய ஓபன் ஸ்பேஸ், எல்லாம் செய்துக்கலாம். அந்தப் பக்கம் எதோ சர்ச் கட்டுறாங்க போல…”

“அதெல்லாம் தொல்லையில்ல. நாம ஒரு பிள்ளையார் கோயில் மாஸ்க் – எல்லாமே பக்கத்துல ஏற்பாடு பண்ணிடலாம – ஏன்னா, நோய்ன்னு வரவங்க எல்லாருமே கடவுள் நம்பிக்கையத்தான் வச்சு வருவாங்க. நாமும் ‘கடவுள்’ அருளைத்தான் வைக்கிறோம். எம்மதமும் சம்மதம்…”

சந்திரியும் இளையவர்களும் ரங்கன் உடைத்துத் தரும் பானத்தைக் குடிக்கிறார்கள்.

“…. உம், வரட்டுமா?” என்று உறுத்துப் பார்ப்பது போல் பராங்குசம் கேட்டுவிட்டுப் போகிறான்.

“அம்மா, நீ ஒண்ணும் யோசனை பண்ணாதே. நீரடிச்சி நீர் விலகாது. இப்பவே நீ வந்தாகூட கூட்டிட்டுப் போயிடுவ. அப்பிடி நினைச்சிட்டுத்தா வந்தே.”

“சரி சரி, நீ போயிட்டுவா!” எல்லோரும் போகிறார்கள்.

அத்தியாயம்-19

முதலை… முதலைதான் அவளை விழுங்கக் கவ்வி விட்டது. யானையை முதலை கவ்விய போது, யானை ஆதி மூலமே என்று துதிக்கையை உயரத் துரக்கிப் பிளிறியதாம். துதிக்கையா, தும்பிக்கையா?… இவளுக்கு எந்தத் துதிக்கையும் தும்பிக்கையும் தெரியவில்லை…

குறைந்தபட்சம் மன வேதனையைச் சொல்லிக் கொள்ளக் கூட யாரும் இல்லை. அந்தத் தலைமுறையே பட்டுப் போய்விட்டதா? புதிய தளிரே வராதா?…

கடைசி காலத்தில், அய்யா, மன உளைச்சலோடு உடலும் பாதிக்கப்பட்டிருந்தார். நோயென்று எதுவும் இல்லாமலே படுக்கையோடு இருக்க வேண்டிய அளவுக்கு நலிந்து போனார். ஆதிநாட்களில் அக் குடும்பத்தில் சமையல்காரராக இருந்த சிங்காரம் அம்மா இறந்தபின் வந்திருந்தான். என்றாலும், அவனுக்கும் வயதாகி கண் பார்வை மங்கி இருந்தது. “தாயம்மா, நா அடுப்பு வேலய பாத்துக்கிறேன், கஞ்சியோ, இட்டிலியோ எதுன்னாலும் செய்துதாரேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க” என்று சொல்லி விட்டான்.

குளிக்க நீர் எடுத்து வைத்து, துண்டு, வேட்டி வைத்துப் பணி செய்வது, அவரைக் கை பிடித்துக் குளியலறைக்குக் கூட்டிச் செல்வதாயிற்று. குச்சியை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி, எதிரே விரிந்த தோப்புத்திடலில் அவர் காலையில் நடந்தால் இவள் உடன் செல்வாள். இந்த நடமாட்டமும் குறைந்து, இறுதியில் வீட்டோடு முடங்கி, படுக்கையிலும் தள்ளிவிட்டது. அப்போது காமத் டாக்டர் இருந்தார். பர்மாலட்சுமியின் தம்பி நிரஞ்சன், இவர்கள் எல்லோரும் வருவார்கள். பிடிவாதமாக மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். பர்மாலட்சுமி, தீங்குரலில் பாடுவாள். ‘மந்திரமாவது நீறு; வானவர்தாமுள நீறு’ என்று அவள் பாடும் போது கண்களில் எல்லாருக்குமே நீர் கசியும்.

அவர்கள் வந்து சென்றதும், “தாயம்மா…” என்று கூப்பிடுவார். குரல் தழுதழுக்க, என்னைத் துரக்கி விடுறியா? என்பார். முதுகில் திருநீற்றைத் தடவுவாள். படுக்கை யோரத்தில் வேப்பிலைதான் வைத்திருப்பாள். அவர் எழுந்து இயற்கைக் கடன் கழிக்கும் பாண்டத்தில் அமரும்போது அவள் உதவ வேண்டி இருக்கும். ஏறக்குறைய ஒரு மாத காலம் அதுவும் தெரியாமலே இயலாமலே இருந்தார். கைக் குழந்தையைப் பேணுவது போல் அவள் தொண்டாற்றிய போது, “தாயம்மா, நீ என் தாய், தெய்வம்” என்று விம்முவார். அவளோ, “அப்படி எல்லாம் சொல்லாதீங்கய்யா, என்னைப் பெத்த அப்பனுக்கு நான் செய்யும் கடன் இது. இது செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும்” என்பாள்.

“தாயம்மா, அய்யாவக் கவனிச்சிக்கோம்மா?” என்று அம்மா சொன்ன சொல் ஒலிக்கும்…

‘பராங்குசத்தை சத்தியத்துரண் என்று கபடில்லாமல் நம்பினர்களே… அதனால்தான் அவன் கனவில் வந்தீங்களா, அய்யா? எனக்கு ஒருநாள் கூடக் கனவில் வரவில்லையே? அவன் கனவில் வந்து, ஆஸ்பத்திரி, விருந்தினர் விடுதி, அமெரிக்கா போல வசதின்னு, அமெரிக்காவை இங்கு கொண்டு வரச் சொன்னிங்களா?… புரியவில்லையே?’

அத்தியாயம்-20

மார்கழிக்குளிர் என்பார்கள். எதிரே அரைகுறைக் கட்டிடம் ஒன்றில் ஐயப்ப பூசைக்கு பெரிய பந்தல், தீபாலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் தெருவில், பள்ளிக்கூட முக்கிலிருந்து வாழைத் தண்டு விளக்குகள்; முருகன், கணபதியின் தீபக்கோலங்கள் விளங்கும் தோரண வாயில்கள். கருப்பு வேட்டிகள், அச்சிட்ட தாள்கள், ரசீது புத்தகங்கள், உண்டியல்கள், சந்தன குங்குமக் கீற்றுகள், உருத்திராட்சமாலைகளின் பவனிகள் சூழலையே எப்போதும் இல்லாத வகையில் இந்த ஒதுக்குப் புறத்தைக் கலகலக்கச் செய்கிறது.

ஒலி பெருக்கியை இவர்கள் வீட்டுப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். தேனினும் இனிய குரலில் வரும் பக்திப் பாடலும் இவளுக்கு நாராசமாக ஒலிக்கிறது. காலையில் வாழை மரங்களைக் கொண்டு வந்து வெட்டி, ‘ஐயப்பன் எழுந்தருளத்திருக்கோயில்’ அமைத்த பிறகு, அந்தக் கழிவுகளை இவர்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் குவியலாகப் போடுகிறார்கள். அங்கேயே எங்கோ அடுப்பு மூட்டியோ காஸ் கொண்டு வந்தோ காலைப் பலகாரம் செய்து சாப்பிட்டபின் அந்த எச்சில் இலைகளும் கழித்த வாழைக் குவியல்களில் விழுகின்றன. பின் பக்கமும், கிழக்கேயும் உருவாகும் குடியிருப்புகளுக்குச் செல்லும் வழித்தடம் அது. இன்னமும் அதிகார பூர்வமான வழித்தடமாகவில்லை.

எப்போதும் போல் ரங்கன், பின்புறம் மாட்டுக்கு வைக்கோல் உதறிப் போட்டுவிட்டுப் பின் கதவைப் பூட்டிக் கொண்டு சாவியை மாட்டுகிறான். பிறகு போகிறான். இப்போதெல்லாம் அவன் எதுவும் பேசுவதில்லை.

பாட்டொலியும் பஜனையின் சரணக் கூவலும் மண்டை கனக்கச் செய்கின்றன. அய்யா காலத்திலும் இது போன்ற பூசை உண்டு. மணிக் கூண்டுக்குப் பக்கத்தில் ஐயப்ப பக்த சமாஜம் கட்டுவதற்காக ஓமியோபதி டாக்டர், சிவராமன் அன்பளிப்பு வாங்கிச் சென்றதும் கூட நினைவி ருக்கிறது. அவரே இங்கும்கூட வெள்ளிக்கிழமை பஜனைக்கு வருவார்… இப்போது அவர் குடும்பமே இங்கு இல்லை. காவி, கருப்பு, பக்தி, வாழ்வு, எல்லாமே, இலக்கு எது என்று தெரியாமலாகிவிட்டன…

ராதாம்மா சீக்காகப்படுத்திருந்த நாட்களில், அம்மாவும் அய்யாவும் இங்கே சேர்ந்தாற்போல் ஒரு மாதம் கூடத் தங்கியதில்லை. மாற்றி மாற்றி இரத்தம் கொடுக்கும் நோயாக இருந்தது. அவர்கள் ஒரு சமயம் அவசரமாக விமானத்தில் பம்பாய் கிளம்பும் நேரத்தில், பராங்குசம் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். முடியை முழுசாக வெட்டிக் கொண்டு காதில் ஒரு சிறு சிவப்பு நட்சத்திரம் மின்ன, மெலிதான ஒரு நூல் சேலை உடுத்திக் கொண்டிருந்தாள். நெற்றியில் சிறு குங்குமப் பொட்டு. “என்னைத் தெரிகிறதா மாமா ?…’ என்று இருவர் கால்களையும் தொட்டுக் கும்பிட்டாள்.

“ஏய், அநு இல்ல? எப்ப வந்தே?” தன் நீ முடிய வெட்டிட்டாலும் சாடை மாறிடுமா?… கிரண் எப்படி இருக்கிறான்? குழந்தை… நிசா இல்ல? குழந்தையக் கொண்டு வரலியா?”

“ராதா பத்திக் கேள்விப்பட்டேன், கஷ்டமா இருக்கு மாமா, கிரன் பார்டர்ல இருக்கார். எனக்கு போரடிச்சிப் போச்சு. குழந்தையோட தான் வந்திருக்கேன். உங்க குருகுலத்துல எனக்கு இப்ப அவசியமா வேலை வேணும். தரீங்களா?…

“என்னம்மா இப்படிக் கேட்டுட்டு? உனக்கில்லாத வேலையா?”

“அப்பா எப்படி இருக்காங்க?…”

“இருக்காங்க. சின்னண்ணா, அக்கா யாரோடும் ஒத்து வரல. அம்மா எல்லாத்துக்கும் ஈடு குடுத்திட்டிருந்தா. இவரால யாரோடும் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது… சரி, மாமா, குழந்தைய அங்கேயே ஹோம்ல விட்டுட்டு வந்தேன்…”

“நீயும் அங்கேயே தங்கிக்கிறியா?…”

“ஆமாம். எனக்கு அந்தச் சூழல் புடிச்சிருக்கு…”

பேசிக் கொண்டே அவர்கள் காரிலேயே ஏறிக் கொண்டு போனாள்.

அந்தத் தடவை மகளை வாரிக் கொடுத்து விட்டுத்தான் அவர்கள் வந்தார்கள். சோலையில் பாய்ந்த மின்னல், இளநீர் குலுங்கும் மரத்தைக் கருக்கிவிட்டாற் போல் துயரம் படிந்தகாலம். துயரம் விசாரிக்க வருபவர்கள் மாற்றிமாற்றி சோகக் குழியைக் கிளர்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசியல் சூழலும் ஏதோ கிரகணம் பிடித்தாற்போலிருந்தது. இந்திரா காந்தி ஆண்ட நாட்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் அவர்கள் மிகவும் மனம் நொந்து சோர்ந்தனர்.

அன்று காலை… ஆனி, ஆடி என்று நினைவு. விடியும் நேரத்தில் முன் வாசல் தெளித்துப் பெருக்கிக் கொண்டி ருந்தாள். சோகம் சுமக்கும் வீடாதலால் கோலம் போடுவதில்லை. அப்போது, மொட்டைத் தலையில் சிறுகுடுமியும், காவித்துணி ஜிப்பாவும் வேட்டியும், தோளில் மாட்டிய பையுமாக ஒருவர் வந்து நின்றார்.

“மாதாஜி, பாக்கி பாய் இருக்கிறாரா?” என்று கேட்டார். அவர் தமிழ் இந்திக்காரர் பேசுவதுபோல் இருந்தது.

அவள் தலை அசைத்தாள். ஆனால் அவர் இவள் எதுவும் பேசுவாள் என்பதை எதிர்பாராதவர் போல், விடு விடென்று உள்ளே நுழைந்து விட்டார். அவள் கொஞ்சம் வெலவெலத்துப் போனாள். நாட்டு நடப்பு, அப்போதைய அரசியல் பின்னணி எதிலும் இவள் சிந்தை செல்லவில்லை. வீட்டின் ஒளியே மாய்ந்திருந்தது. வரமிருந்து பெற்ற மகள் கண்களை மூடி வீட்டை மீளாத் துயிலில் ஆழ்த்திவிட்ட தாகவே இப்போதும் தோன்றுகிறது.

இந்த சாமியாரின் பின் அவளும் உள்ளே விரைந்தேகினாள். அம்மா அப்போது தான் எழுந்து பின் பக்கம் கிணற்றடியில் பல்துலக்கிவிட்டு அடுப்படிக்கு வந்து கொண்டிருந்தார். அய்யாவுக்குக் கொத்துமல்லி– சுக்குக் காபிக்கு நீர் வைக்கையில் இவள் சேதியைச் சொல்ல சமையல் கட்டின் பின் புறமாக வந்தாள். ‘பால் கறந்திட்டு வரியா தாயம்மா?’

இவள் எதுவும் பேசாமல் கொட்டிலுக்குப் போனாள். கைகழுவிவிட்டு, மடிகழுவ நீரும், செம்புமாகப் பால் கறக்கப் போனாள். பாலைக் கறந்து கொண்டு வருகையில், அந்தச் சாமியார், கிணற்றடியில் நீரிழுத்து, பல்பொடியில் பல்துலக்குவதைப் பார்த்தாள். இப்போது மாடுகள் நின்ற அந்தப் பெரிய கொட்டில் இல்லை. கிணற்று முற்றத்தில் முன்பிருந்த துளசி மடம் மட்டும் இருக்கிறது.

குளிப்பறையில் பெரிய தண்ணீர் தொட்டி உண்டு. அதன் பக்கச் சுவரில், கிணற்றில் நீரிழுத்து, உள்ளே தொட்டி நிரப்பும்படி விடுவதற்கு ஒரு கோமுகம் போன்ற ‘வாய்’ உண்டு. குளிப்பறையில் சென்று தண்ணிர் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நடையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். அப்போது அவர் கிணற்றில் இருந்து நீரிறைத்து அங்கேயே நீராடலானார்.

“அம்மா, ரூமில் தொட்டில தண்ணிர் இருக்கே?” என்று மெதுவாகச் சமையலறையில் வந்து தெரிவித்தாள்.

அம்மா பேசவில்லை.

அவருக்கு அறுபது வயசுக்கு குறையாது. நல்ல உயரம். குளித்து முடித்து துண்டை உடுத்த கோலத்தில் தம் சட்டை, வேட்டி எல்லாம் சோப்புப் போட்டுத் துவைத்து ஒரமான கொடியில் உலத்தினார். பிறகு, நின்ற கோலத்தில், கண்களை மூடி தியானம் செய்தார். இவள் குளிப்பறை வாயிலிலேயே நின்றாள். முற்றத்துக்கு வராமல் பிறகு தண்ணிரை எடுத்து இரு கைகளாலும் சூரியனை நோக்கிக் காட்டி விழச் செய்தார்…

அம்மா உள்ளே காபி வடிகட்டிக் கொண்டிருந்தார். அய்யாவும் நடை வழியாகப் பின்புறம் சென்ற போது, இவள் கேட்டாள்.

“எதுக்கம்மா அப்படித் தண்ணியை மேலே காட்டி, விடுறாங்க?”

“சூரியனுக்கு அர்க்கியம் விடுவதாகச் சொல்வாங்க. வடக்கே பெண்கள்கூட இதைச் செய்வாங்க. தாயம்மா… சந்நியாசிகள் நெருப்பு மூட்ட மாட்டார்கள். ஏன்னா, அவங்களே நெருப்புன்னு அர்த்தம். அதுக்குத்தான் காவி உடுத்துறாங்க. எல்லா ஆசைகள், பந்தங்கள் பொசுங்கிய நெருப்பு…”

அவள் எதுவும் சொல்லவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. கூடத்தில் வந்து வானொலிச் செய்தியைக் கேட்டார் அவர். அம்மா, பின்பக்கம், அய்யாவிடம், “யாருன்னு தெரியல, இங்க வந்திருக்காரே ?” என்று மெதுவாகக் கேட்டார்.

அய்யா, “இப்ப என்ன ? பயமாயிருக்கா? என்ன பயம்? நடப்பது நடக்கட்டும், நாம் ஒரு சதியும் பண்ணல…” என்றார். பூடகமாகவே இருந்தது.

“யாருன்னு உங்களுக்கே தெரியலியா?” எந்த பதிலும் வரவில்லை.

“தாயம்மா, அவர் என்ன சாப்பிடுவார்னு தெரியல. கோதுமை வாங்கி வச்சிருக்கு. தட்டிப்புடைச்சிட்டு மிசினில கொண்டு போய் அரைச்சிட்டு வா!’ என்றார் அம்மா.

“கேப்பை மா இருக்கில்ல? அதையே ரொட்டியோ, தோசையோ செய்யலாமே?” என்றார் அய்யா.

அப்போதெல்லாம், இப்போது போல் அரசியல் அன்றாட மனிதர் வாழ்க்கையில் மலினப்பட்டு இரைந்து கிடக்கவில்லை என்று தோன்றுகிறது. அவள் கோதுமை அரைத்து வந்தாள். சாமியாரும் அய்யாவும் இந்தியில் பேசிக் கொண்டார்கள். அம்மா ரொட்டி சப்ஜி செய்தார். சோறும் வடித்தார். நடையில் மெத்தைப்படி வளைவில் உள்ள அறை மிகப் பெரியது என்று சொல்லலாம். அங்கே ஒரு பெஞ்சு, அலமாரியில் புத்தகங்கள், கீழே உட்கார்ந்து எழுத படிக்க சாய்வு மேசை எல்லாம் உண்டு. சாமியார் பத்தரை மணிக்கே, ரொட்டியும் சப்ஜியும் சாப்பிட்டு விட்டு அந்த அறைக்குத் தூங்கப்போய்விட்டார்.

மாடிக்குச் செல்ல வெளிப்புறத்தில் ஒரு படி உண்டு. இப்போது அது இல்லை. அய்யா காலமாகு முன்பே, அது பத்திரமில்லை என்பது போல் தகர்த்து, வாசலைப் பூசிவிட்டார்கள்.

சாமியார், தூங்கினார், தூங்கினார், அப்பிடி உள்ளே தாழ்போடவில்லை. அய்யாதான் பார்த்து விட்டுத் தூங்குவதை அறிந்து ஒசையின்றி வந்து கூடத்துப் பாயில் அமர்ந்தார்.

அந்த நேரத்தில் அநு பரபரப்பாக வந்தாள். அவள் வேலை ஒப்புக் கொண்டபின், இவர்கள் துயரப்பட்டிருந்த காலத்தில்தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அடிக்கடி வந்தாள். மகள் போன சோகத்துக்கு, இவள் வந்து பழகியது ஆறுதலாக இருந்தது. குழந்தை நிசா நல்ல அழகு. சுருண்ட முடி. கருவண்டுக் கண்கள். எல்லோரிடமும் மழலை சிந்திப் பழகும். இவள் விரலைப் பற்றிக் கொண்டு “போலாமா?” என்று கேட்கும்.

“நான் கடைக்குப் போறேன், நீ வரியாடா கண்ணு?” என்பாள்.

“தாயம்மா, அவ கடையில் வந்து கண்டதையும் வாங்கிக் குடுன்னு கேப்ப… எங்கும் போவாணாம். உக்காரு. பாட்டிக்கு காக்கா வட கத சொல்லு” என்று அநு பேச்சை மாற்றுவாள்.

ஆனால் அப்போது குழந்தை வரவில்லை… அவள் மட்டுமே வந்திருந்தாள்.

“அப்பா?…” என்றாள்.

“வாம்மா?…”

அவர் அருகில் பாயில் உட்கார்ந்தாள்.

“வெரி ஸாரி அப்பா, எனக்கு வழி தெரியல. அங்கே வந்திட்டார்.” கூடத்துத் தூணில் சாய்ந்தவாறு நின்ற அம்மாவுக்கு அப்போதுதான் புரிந்தது போலும்!

“அநு… உன் சித்தப்பாவா?”

“ஆமாம். சத்தம் போடாதீங்கம்மா. இவர் போலீசுக்குப் பயந்து வந்திருக்கிறார். காலேஜில படிக்கிறபோதே ஆர்.எஸ்.எஸ்.ல சேர்ந்திட்டாரு. எங்க பாட்டி, நினைச்சா கண்ணீர் விடுவா. அப்பவே சந்நியாசம் வாங்கிட்டாங்க. ருஷிகேசத்தில இருந்தார். இப்ப கிளம்பிட்டாரு…”

“ஏம்மா, உன் கல்யாணத்துல வந்திருந்தாரே? டில்லில… ராதா கூட வந்திருந்தா. எல்லாரும் காவி – சந்நியாசின்னா விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க…” என்று அய்யா நினைவூட்டினார்.

“அம்மா பேரில தனி விசுவாசம். மாதாஜி, மாதாஜிம் பாரு… பெரியப்பா, அத்தை அவங்க வீட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க.’

“உங்கம்மாக்கு அந்தக் காலத்து தேசிய ரத்தம்…”

“இப்ப ஒண்ணும் பேச வாணாம்” என்பது போல் அய்யா சாடை காட்டினார்.

“அப்பா, நீங்க மொள்ள எதானும் சொல்லி அனுப்பிச்சிடுங்க. நீங்க என்னதான் அரசியல்லேந்து விலகிட்டாலும், அரசியல்கட்சி, தேசியம்னு ஊறினவர். அடிமரம். பழசு புதுசுன்னு முகத்துல போட்டுக்கலன்னாலும், இந்த நேரத்தில் என்ன நடக்கும், நடக்கிறதுன்னு தெரியாது. உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது அப்பா!”

அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சொல்லிவிட்டு அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நா வரேம்மா..!” எழுந்து நின்ற அம்மாவைத் தழுவிக் கொண்டாள். தாயம்மாளின் கையைப் பற்றி “வரட்டுமா தாயம்மா” என்று விடை பெற நின்றாள்.

“எதும் சாப்பிடாம போறீங்களே அநும்மா ?”

“ரிக்ஷா நிக்குது வாசல்ல, குழந்தைய விட்டுட்டு ஓடி வந்தேன்… நீங்க நல்லா இருக்கணும்… எதும் வரக்கூடாது.”

விடுவிடென்று அவள் வாசலில் சென்று ரிக்‌ஷாவில் அமர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் பிடித்து வைத்த சிலை போல் அமர்ந்திருந்தார்கள். துயரம் கவ்வியபோது, அச்சம் தெரியவில்லை. இப்போது, இனம்புரியாத கருமை சூழ்ந்தாற்போல் இருக்கிறது.

எத்தனை முறைகள் சிறைக்குப் போயிருக்கிறார்கள்? போலீசே வந்து முன்னெச்சரிக்கை செய்தும் தடைமீறி அச்சமில்லை அச்சமில்லை என்று சிறை சென்றார்கள்.

இப்போது… நேரு மகள் ஆட்சியில்… அவளுக்குப் புரியவுமில்லை; புரியாமலும் இல்லை. காந்தியைச் சுட்ட கட்சி. ஆனால் அப்போதெல்லாம், இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதென்ன கெடுபிடி?… இவளுடைய பையன் வீட்டிலும் கூடச் சோதனைகள், அதிரடி நடவடிக்கைகள், சிறை என்று பராபரியாகக் கேள்விப் பட்டிருந்தாள். வானொலி இருபது அம்சத்திட்டப் பாடல்களும் கிளிப் பிள்ளைச் செய்திகளுமாக அவிழ்க்கின்றன. பட்டென்று மூடுகிறாள். அவள் மகன் வீட்டில் சோதனை, காவல், சிறை என்ற செய்தியில்கூட அவளுக்குச் சங்கடம் அழுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் உப்பைத் தின்பவர்கள், தண்ணிர் குடிக்கிறார்கள் என்று பதிவாகி இருக்கிறது. காலையில் நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் விட்டு… பிராமணர்… பிராமணர்களை அடி உதை என்று கட்சி கட்டிய நாட்களில்கூட, அதற்குச் செயல் வடிவம் வரவில்லை. அந்தப் பகுத்தறிவுப் பெரியாரும், எதிர்துருவமான ராஜாஜியும் இதயம் தொட்ட நண்பர்களாகத்தானே இருந்தார்கள்?… இந்த சந்நியாசி என்ன செய்துவிட முடியும்?

அவர் மாலை ஆறுமணிக்குத்தான் உறங்கி எழுந்து வந்தார். கிணற்றடிக்குச் சென்று தூய்மை செய்து கொண்டு கூடத்துக்கு வந்தார்.

“யார் வந்திருந்தார்…?” என்று அய்யாவிடம் கேட்டார். அங்கே அது தவறவிட்டிருந்த வெள்ளைக் கைக் குட்டை கிடந்தது.

“நல்லாத் துரங்கிட்டீங்க போலிருக்கு ?”

“ஆமாம். ஒரு வாரமாத் தூங்காத, ஒய்வெடுக்க முடியாத நடை, அலைச்சல். உங்கள் மகள் தவறிவிட்டதைக் கேள்விப்பட்டேன்… அநுதான் சொன்னா. பாத்துட்டுப் போகலான்னு வந்தேன். கன்யாகுமரி போறேன்” என்றார்.

அம்மாவும் அய்யாவும் பேசவில்லை.

இவள் சமையலறை வாசற்படியில் நின்றாள். அம்மா விளக்கேற்றினார். கீதை தியான சுலோகம் சொன்னார். கண்களை மூடி மவுனப் பிரார்த்தனை செய்தார்கள்.

இரவு கஞ்சி அருந்தும் போது,

“அநு வந்திருந்தாளோ?” என்று கேட்டார். இவர்கள் ஏதும் விடையளிக்கு முன் அவரே, “நான், நீங்கள் அங்கே இருப்பீர்கள் என்று போனேன். பிறகுதான் தெரிந்தது. இங்கே வந்தேன். ரெண்டு நாள்… தங்கலாமா?”

“தாராளமா… உங்களை அது கல்யாணத்தில் பார்த்தது.”

“ஆமாம்… அப்ப பங்களாதேஷ். அது ரொம்ப விவேகமாகச் செய்தா… இப்ப இது விவேகம் இல்ல. பயம்… எல்லாம் பயம், ஆசை, அதீதமான ஆசை, பயம்…”

யாரைச் சொன்னார், எதற்குச் சொன்னார் என்று அவளுக்குப் புரியவில்லை…

“பாவம் அநு. இந்த வயசில் குழந்தையை வச்சிட்டுத் தனியாக…”

“அதென்னமோ, ராதா போனபிறகு, இப்ப இவ வந்து அம்மா, அப்பான்னு பழகுவது மனசுக்கு ஆறுதலாக இருக்கு.”

“அந்தப் பையன் நல்லவன். ஏர்ஃபோர்ஸ் எல்லை, நெருக்கடின்னு வாழ்க்கை. இளவயசுப்பிடிவாதம், வீம்பு. ரெண்டுபேருக்கும் பொருந்தல. அவன் அம்மா அப்பா ரெண்டு பேரும், ருஷிகேசத்திலதான் இருக்கா. இவ டிவேர்ஸ் அது இதுன்னு குழந்தையத் தூக்கிட்டு நாக்பூர் வந்திட்டா. எனக்கு இப்ப அவகிட்ட இதெல்லாம் பேச சந்தர்ப்பம் இல்ல. இங்க இருக்கட்டும். பத்திரம்தான்…”

யாருமே பேசவில்லை…

அந்த நெருக்கடி காலத்தின் ஒரு முகத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறாள்.

இரவு முழுவதும் துணுக்குத் துணுக்காக நினைவுகள், மயக்கமா, கனவா என்று புலராத காட்சிகள்.

ராதாம்மா பம்பாயில் ஸ்டேஷசனில் வாங்கிக் கொடுத்ததாகக் குழந்தை விக்ரம் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வந்திருக்கிறான். அந்தக் குழாயில் பொருந்திய கண்ணாடியில் கண்ணை வைத்துத் திருப்பிக் கொண்டே இருந்தால், அழகழகாக, புதிசு புதிசாக கோல மாதிரிகள் வருகின்றன. வண்ண வண்ணக் கோலங்கள்.

“பாட்டி, பயாஸ்கோப் பாக்குறீங்களா ?…” அவள் கண்களில் பொருத்தி, குழந்தையே திரும்புகிறான்.

தொடர்ச்சியாகத் தெரியவில்லை. பையனில்லை. அவளே வைத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறாள். குரு குலக்குடிலில், அது இருக்கிறது. அவள் பிள்ளை… படிப்பவன், “அக்கா, சோறு வை!” என்று வருகிறான்… பஞ்சமி தான் தையல் இலை போட்டு, பொங்கல் போன்ற சோற்றை வைக்கிறாள். அவன் எழுந்து காலால் இடறுகிறான்.

“இது என்ன சோறு? ஒரு முட்டை கிட்டை பொரிச்சு வய்க்கிறதில்ல? மனசுக்குள்ள பாப்பாரசாதின்னு நினப்போ? ஆதிக்க சாதி – திராவிடக் குடிமக்களை மிதித்துக் கொக்கரிக்கும் சாதி…” என்று அந்தக் குழாயைத் துாக்கி எறிகிறான். அது உடைந்து சிறுசிறுவெனும் கண்ணாடித் துண்டுகளாகச் சிதறுகிறது.

“அய்யோ…” என்று கண்விழிக்கிறாள்.

சட்டென்று எழுந்து உட்காருகிறாள்.

கனவா… கனவு…? பஞ்சமி இல்லை. ராதாம்மா இல்லை, குடில்வாழ்வு எதுவுமில்லை. அந்தக் குழாய் கண்ணாடி, குழந்தை வைத்து விளையாடியது உண்மை. அது கீழே விழுந்து உடையவில்லை. விக்ரமே காகிதங்களை உரித்து, கண்ணாடியை வெளிப்படுத்திவிட்டான். பிறகு பொருத்த முடியவில்லை. வெறும் கண்ணாடித் துண்டுகள்.

குழந்தை விளையாட்டுத் தனமாக அந்தப் பொருளை வீணாக்கிவிட்டு மறுபடியும் பொருத்த முடியாமல் அழுதான்.

“வேறு வாங்கிக் கொடுக்கிறேன்…” என்று சமாதானம் சொன்னார்கள்.

குழந்தை விளைவு தெரியாமல் விளையாடியது.

நல்லதொரு கோலம் காட்டிய பொருள் அழிந்தது.

குழந்தை அந்த ஒட்டுக்காகிதங்களை விளையாட்டாகப் பிரித்தது. இப்போது இவர்களும் அதே போன்ற விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களா? இந்திரா அம்மை அஞ்சிக் கரித்துக் கொட்டி சிறையில் தள்ளியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் என்னென்னமோ நடக்கிறது. கண்ணாடித் துண்டுகள் சிதறி விழுந்தாற் போல், அத்தனை வண்ணங்களும் இந்த தேச மக்களை, வாழ்க்கையை பொய், கபடு, சூது, வன்முறை இரத்தக்கறை என்றாக்கிவிட்டு அழிந்துவிட்டன.

அவள் இப்போது என்ன செய்ய வேண்டும்? குருகுலத்தில் அவர்கள் காட்டும் மூலையில் குடிபெயர வேண்டுமா? சந்திரி கூப்பிட்டதை ஏற்று, நீரடித்து நீர் விலகாது என்பதை நிரூபிக்க வேண்டுமா?…

ஒன்றும் புரியவில்லை. அந்தக் காலத்தில் தேசாந்தரம் போவது என்பார்கள். எல்லாவற்றையும் துறந்து காசிக்கு நடந்தே போனார்களாம்! கேதர்நாதம், பத்ரிநாதம் என்று போவார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பார்கள். ஏன்? இந்த அய்யப்பர்கள் கறுப்பைக் கட்டிக் கொண்டு தொண்டை கிழிய காது செவிடு படச் சரணம் கூவுகிறார்கள். கோயிலுக்குப் புறப்படுமுன் வாய்க் கரிசி போடுகிறார்கள்… காரணம் அவ்வளவு அபாயங்களையும் கடந்து போகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள்…

காலையில் இவள் வாசல் தெளிக்கும் போது, மாலை போட்ட பக்தர்கள் சுமையுடன் கிளம்பிவிட்டார்கள். கண்எரிச்சல் தீர இவள் நீராடுகிறாள். அடுப்பு மூட்டவோ சமைத்துச் சாப்பிடவோ மனமில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். ரங்கனிடம் பூட்டுக்கு வேறு சாவி உண்டு.

அவள் எங்கே போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், பெரிய சாலையில் நடந்து, போகிறாள்.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *