கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 550 
 
 

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

அத்தியாயம்-13

அந்த வீட்டில் அவள் வந்தபிறகுதான் அம்மா, அவர் களுடன் கள்ளுக்கடை மறியலுக்குப் போனார். காங்கிரஸ் பெரியவர்கள் யாரேனும் வந்து சிவன் கோயில் முன் கூட்டம் நடக்கும். தவறாமல் அம்மாவுடன் இவள் போய் விடுவாள். கமலியின் தாய் தந்தையருக்கு, இவள் தங்கள் மகளை இப்படித் தவறான பாதைக்கு இட்டுச் செல்வது பிடிக்கவில்லை. கமலியின் அப்பா, அந்தக் கோடையில் புறப்பட்டு வந்தார். “சம்பு, நீ இப்படி நடப்பது கொஞ்சமும் சரியில்ல. அப்பா கிடக்கிறார். உன் புருசனுக்கு வந்தவளா நடந்துக்க வேண்டாமா? அவன் என்ன ஆனாலும் உனக்குத் தாலி கட்டின புருசன். அவனை நீ மதிக்கணும். என்னமோ உன் வீட்டு மாட்டுக்காரன விட மோசமா நடத்தற?”

அம்மா சமையலறையில்தான் இருந்தார். அவள் அங்கே இருப்பது தெரியாமல் அவர் தணிந்த குரலில் கண்டித்தார்.

“ராமு, இந்த விஷயத்தில் நீ தலையிட வேண்டியது அநாவசியம். இது நான் பிறந்த வீடு. என் தாய் வீடு. இங்கு நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன். இங்கே குழந்தை இருக்கா. இவளை வச்சிண்டு இதுக்குமேல் பேச விரும்பல. உன் பெண்ணை நீ தாராளமா கூட்டிண்டு போ?”

“…யாரு… இதுதான் அந்தப் பறச்சனியனா?” ஒட்டிக் கொண்டிருந்த அவளை, அடிக்கக் கை ஓங்கினார். அப்போது அம்மா அந்த ஓங்கிய கையைப் பற்றிக் கொண்டார்.

“இத பார் ராமு. உம் பொண்ண நீ கூட்டிண்டுபோ. வேற விவகாரம் பண்ணாதே. வீணா வார்த்தையைக் கொட்டாதே!”

“என்னடி பயமுறுத்தற? உன்ன இந்த நிமுசமே வெளியேத்தி ஜயில்ல களிதிங்க வைக்க முடியும் என்னால! என்ன நினைச்சிண்டிருக்கே! நாளக்கி, இந்தப் பறக்கழுதயே, உம்புருசனக் கைக்குள்ள போட்டுண்டு உன்ன இந்த விட்ட விட்டு வெறட்டலன்ன என்ன ஏன்னு கேளு! பாம்புக் குட்டிக்குப் பால் வாக்கிற! ஏதோ ஆம்புளக் கழுதயானாலும் பொதி சுமக்கும். இது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் சாதி! கேட்டுக்க!” என்று கத்திவிட்டு ஒருவாய் தண்ணிர் கூடக் குடிக்காமல் கமலியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எங்கேனும் ஒடிப்போய் விடலாமா என்று நினைத்தாள். அவள் அழ அழ, அம்மா கண்ணீரைத் துடைத்தாள். ஆனாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. படுத்தால் துக்கம் வரவில்லை. “அம்மா. என்ன எங்கூருக்கே, எங்னாலும் அனுப்பிச்சிடுங்க. என்னால உங்கக்குக் கஸ்டம்- என்னத் திட்னாத்திட்டட்டும். நா உசந்த சாதில பிறக்கல…”

இப்படிச் சொன்னபோது, அம்மா அவளைக் கட்டிக் கொண்டாள். அவளுக்கும் அழுகை வந்தது. அம்மா அழுவதைக் காண முடியவில்லை. எந்நேரமும் அவள் எங்கும் போய் விடாதபடி பாதுகாத்தாள்.

அன்று நூல் நூற்றாள். அறுந்து அறுந்து போயிற்று. அவர்கள் வீட்டில் கையால் ‘கீ’ கொடுக்கும் ஒரு கிராம போன் இருந்தது. என்றைக்கானும் இரவில் அம்மா அதில் பாட்டு வைப்பார். அதில் காந்தி பாட்டு வரும். ‘நம்பிக்கை கொண்டெல்லோரும் கை ராட்டைச் சுற்றுவோம்’ என்று ஒரு பாட்டு வரும். மதிச்சயத்துல குடியிருக்கிறது; மதுரையில் பாலு விக்கிறது. மோரு விக்கிறது…” இந்தப் பாட்டைக் கேட்டால் கமலியும் அவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ட்ரியோ டேயன்னா என்று ஆடு மேய்க்கும் பாட்டு வரும்… பிறகு, நாடித்துதிப்பேன் நமசிவாயவே…ன்னு ஒரு பாட்டு…

அன்று அவளைச் சந்தோசப் படுத்த அம்மா பாட்டு வைத்தார். ஆனால் அவளுக்குப் பிடிக்கவில்லை. குப்புறப் படுத்துக் கொண்டு விம்மினாள்.

அந்த நாட்களில்தான் சிவன் கோயில் மீட்டிங்கில் பேச இந்தையா வருகிறார் என்று சுந்தரம் வந்து சொன்னார்.

“நான் நினைச்சால் உன்னை ஜயிலில் தள்ளிக் களிதிங்க வைக்க முடியும்”என்று அண்ணன் சொன்னதிலிருந்து தானோ என்னமோ அம்மாவுக்கு ஒரு பயம் வந்திருந்தது.

“சுந்தரம், அவரை நம் வீட்டுக்குக் கூட்டி வாயேன்? எங்கே வந்து தங்கிருக்கார்?… நடராஜ சுந்தரம் வீட்டிலா ?”

“ஆமாம். அவர் சம்சாரமும்கூட வந்திருக்காங்க. அவங்களும் ஜெயிலுக்குப் போனவங்க கள்ளுக்கடை மறியல் செய்து மூணு மாசம் தண்டனை பெற்று வந்திருக்கிறார்…”

அப்போதுதான் அவர்களை, இந்தப் புதிய பாதுகாவலர்களை அவள் பார்த்தாள், அவர்களுடனேயே வந்துவிட்டாள்.

நல்லவர்களை எல்லாம், கடவுள் ஏன் சோதிக்கிறார்?

ஐந்தாறு வருசங்கள் கூட சம்பு அம்மா பிறகு உயிரோடு இருக்கவில்லை. காச நோய் என்று சொன்னார்கள். போர்க்காலம். இவள், அம்மாவின் அம்மா, பாட்டி, சுற்றம் அகதிகள் என்று இந்த வீட்டில்தான் இருந்தாள். காந்தியோடு எல்லாத் தலைவர்களும் அய்யாவும் சிறையில். குண்டு பயம் என்று ஊரே காலி செய்து கொண்டு சனக்கும்பல் எங்கெங்கோ கிராமங்களில் அடைந்திருந்தது.

அவள் அங்கு வரும்போது ராதாம்மா பிறக்கவில்லை.

சம்பு அம்மாவைப் பார்க்க குரோம்பேட்டை ஆசுபத்திரிக்குப் போன போது, ராதாம்மாவுக்கு நாலைந்து வயசிருக்கும். இவள் வயசுக்கு வந்து, எட்டு கசம் கதர் சிற்றாடை உடுத்து, கல்யாணத்துக்கு நின்ற நேரம். “தாயம்மா, சம்பும்மா ஆஸ்பத்திரில படுத்திருக்காங்களாம், உன்னைப் பார்க்கணும்னு சுந்தரத்துக்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கா. இப்படியே குறுக்க ஒரெட்டு நடந்து போகணும், வரியா?” பின் கட்டில் புளி கொட்டை எடுத்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்தாள். அம்மாவும் அவரும் வெளிச் செல்வதைப் பார்த்துவிட்டு, ராதாம்மாவும் “நானும் நானும்” என்று ஓடி வந்தது.

‘நீ பாட்டிட்ட இரு. ஜானு, பல்லாங்குழி ஆடச் சேத்துக்க!” என்று சொல்லிவிட்டு, இரண்டு பேரும் கிளம்பினார்கள். சுந்தரம்… அவர் முடிவழுக்கையாகி, அடையாளமே தெரியாமல் மெலிந்து இருந்தார். அவளைப் பார்த்து அடையாளப் புன்னகை செய்தாரே ஒழிய, பேசவில்லை.

தோப்பும் துரவும் குளமும் குட்டையுமாக இருந்த இடங்கள் கடந்து அந்த ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். காவல் என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. ஒரு குன்றின் மேல் ஏறினார்கள். ஒராளிடம் சுந்தரம் அய்யா, ஒரு சீட்டைக் காட்டினார். சாத்துக்குடியும், பிஸ்கோத்தும் அடங்கிய வலைப்பையை அவள் சுமந்து வந்திருந்தாள். ‘காட்டேஜ்’ என்றார்கள்.

கட்டிலில் படுத்திருந்தது… சம்பு அம்மாவா?

வயிரங்கள் பூரிக்க, நெற்றியில் பொட்டுடன் மஞ்சட் கதர் சேலையில் முதன் முதலாக அவள் பார்த்த அந்த சம்பு அம்மாவின் உருவமா இது?…

“அம்மா…!” என்று அவள் அலறிக் கொண்டு அருகில் போனாள். ஆனால், இந்தம்மா அவளை அருகில் செல்லக் கூடாது என்பது போல் தடுத்தாள்.

கண்கள் இருந்த இடத்தில் இரண்டு வங்குகள் தெரிந்தன. முகம் சப்பி முடிகத்திரிக்கப்பட்டு…

உணர்ச்சி வசப்பட்டு அவள் கண்ணம்மா என்று நீட்டிய கை வெறும் எலும்பாக, நரம்பாக இருந்தன. இருமல் வந்துவிட்டது.

இவள் சட்டென்று தாவிப் பற்றிக் கொண்டாள்; நெஞ்சை நீவிவிட்டாள். சளிதுப்பும் மூடிபோட்ட பெட்டியில் இரத்தத்துடன் விழுந்த கோழை…

‘அம்மா… அம்மா… அந்த தெய்வத்துக்குக் கண் குருடா…?”

‘கண்ணம்மா… என்னைத் தொடாதே, வானாம். சரோஜா… குழந்தை நல்லாருக்காளா ? எத்தனை வயசாச்சு…?”

கிணற்றுக்குள்ளிருந்து பேசும் குரல்.

ஆனால் அவள் விடவில்லை. பேச்சே எழும்பாமல் இவளுக்குத் துயரம் முட்டியது. “சரோ, கண்ணம்மாவுக்கு நல்ல பையனா, உடம்பு உழைக்கும் உழைப்பாளியாக ஒருத்தனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்துடுங்க. கண்ணம்மா, எப்டீருக்கே? படிக்கிறத விட்டுடாதே…”

இவள் எதுவுமே பேசத் தெரியாமல் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள்.

“கண்ணமங்கலத்துல ஒரு நல்லபையன் இருக்கான். அங்க ஸ்கூல் படிப்பு முடிச்சிட்டு எங்க வீட்டோடு தானிருக்கிறான். துரத்து உறவு. அவப்பா அந்தக் காலத்தில் சிலோன் தேயிலைத் தோட்டத்துக்கு வேலை செய்யப்போயி, அங்கேயே செத்திட்டார். அம்மா மட்டும் இருக்கா…”

“கண்ணம்மாக்குப் புடிச்சாக் கட்டிக்கட்டும். அவ சம்மதிக்கணும்..” அம்மா எங்கோ பார்த்துக் கொண்டு இதைச் சொன்னார்.

பிறகு, “கண்ணம்மா, நீ போய்ச் சேர்ந்திருக்கும் இடம் பரிசுத்தமான இடம். நா எதச் சொல்றன்கிறத நீயே… தெரிஞ்சிப்ப. ஆனா, நான்தான் மேலானவன்னு திமிருல இருக்கிறவந்தா முக்காவாசி ஆம்புளயும். அந்த ஆம்புளக்கும் ஒழுக்கம், சத்தியம்தான்னு காந்தி மகான்தான் சொல்லிருக்கார்…

இவள் சம்பு அம்மாவின் கையைப் பற்றி அழுத்தமாகத் தன் உணர்ச்சியைக் கொட்டினாள். கை கதகத வென்றிருந்தது.

“பொண்ணாப்பிறந்தவ அவனுவ என்ன செஞ்சாலும் பொறுக்கணும். இல்லேன்னா… இல்லேன்னா… நீ பொம்புள தாண்டி, பொம்புள தாண்டின்னு…”

“சம்பு. வாணாம், வாணாம்மா, அழக்கூடாது…” என்று அம்மா சாத்துக்குடியை நறுக்கி, அங்கே அலமாரியில் இருந்த கண்ணாடியை எடுத்து அழுத்தி சாறு எடுத்தார். அவளே வாங்கி அதைப் பருகச் செய்தார்.

அலமாரியில் இருந்த அட்டைப் பெட்டியை, ஊசி மருந்தை எடுத்துப் பார்த்தார்.

“அம்மா, நா இங்கியே தங்கி அம்மாக்கு வேண்டியதச் செய்யட்டுமா ?”

“வாணாம், வாணாம்மா, யாருமே இங்க தங்கக் கூடாது. பத்திரமா வீட்டுக்குப் போங்க. ஒட்டுவாரொட்டி சீக்கு போங்கம்மா… நீங்க வந்ததே எனக்கு ரொம்ப ஆறுதல். சுந்தரந்தா அப்பப்ப கவனிச்சுக்கறான். எனக்கென்ன வேணும்…? சுதந்தரத்தத்தான் பாக்கமாட்டேன்?” இதற்குள் மூச்சிரைத்து இருமல் வந்துவிட்டது.

யமவாதனை என்றால் இதுதானா..?

வீட்டுக்கு வந்ததும் பின் பக்கம் நச்சுக் கொல்லி சோப்போட்டுத் தேய்த்து அம்மாவும் அவளும் குளித்தார்கள். துணிகளைத் துவைத்து உலர்த்தும் போது அழுகை அழுகையாக வந்தது.

இப்போதும்கூட அந்தத் துயரம் ஆறாத புண்ணாக மேலுக்கு வருகிறது. சாவு வீட்டுக்குச் சென்று வந்தாற் போல் குளித்தார்கள்.

ஒரு மாசத்துக்குள் சம்பு அம்மா இறந்துவிட்டார்கள். சேதியை இங்கே வந்து சுந்தரம் சொல்லவில்லை. ஒரு மாசமான பிறகுதான் தெரிய வந்தது.

அப்போது, இவளுக்குக் கல்யாணம் செய்ய அம்மா அய்யா, ராதாம்மா எல்லோரும் கண்ணமங்கலம் கூட்டிச் சென்றிருந்தார்கள்.

அத்தியாயம்-14

ஜயந்தி டீச்சர் கூடைக்காக வரவில்லை. கொட்டு வதை எல்லாம் திறந்து மடையாக வெளியாக்கிய பிறகு, ‘கூடை’ என்ற காரணத்தை முத்தாய்ப்பாக வைத்துவிட்டுப் போயிருக்கிறாள். இங்கேயுள்ள முருகன் கடையில் இப்போதெல்லாம் பிளாஸ்டிக் வயர் கிடைப்பதில்லை. பெரிய சாலை நெடுக நடந்து, ஆஸ்பத்திரிப் பக்கம் முளைத்துள்ள ஒரு நெருக்கடி பஜாரில், ஒயர், மற்றும் பல்வேறு கை வேலைகளுக்கான பொருட்கள் இருக்கின்றன. பெரிய சாக்கடை பக்கத்திலேயே செருப்புக்கடை, போட்டோ ஸ்டுடியோ, காய்கறி மண்டி, தேங்காய்க்கடை, கண்களைப் பறிக்கும் மஞ்சள், கேசரி கலர்களில் ஜாங்கிரி லட்டு வகையறாக்கள் தெரியும் மிட்டாய்க்கடை… சாக்கடைக்குப் பக்கத்தில், ஒரு நரிக்குறத்தி இடுப்பு- முதுகு ஏனையில் ஒரு பெண்ணுடன் சரம்சரமான மாலைகளைத் தொங்க விட்டுக் கொண்டு போகிறாள். அந்த வரிசையில்தான் அந்தக் கடை இருந்ததாக நினைவு. உள்ளே சந்தை… காய்கறி வந்திறங்கும் லாரிகள் ஆக்கிரமிக்கும் நெரிசல். இல்லாதவர் வாங்கும் துணிக்கடைகள்… அங்கேயே தையல் மிசினை வைத்து வாணிபம் செய்பவர்கள்.

அவளுக்கு எதற்கு வந்தோம் என்ற உணர்வே அழிந்து விட்டாற்போல் இருக்கிறது. ஒரு பெண், சாலையில் பலரக வயர்கூடைகளை வைத்துக் கொண்டு வாணிபம் செய்கிறாள்.

“ஏம்மா, கூடைக்கு வயர் எங்கே வாங்கினீங்க?” அவள் இவள் வினாவுக்கு விடை அளிப்பவளாக இல்லை. அவளைச் சுற்றி இருக்கும் கூடைகளை வாங்க வந்தவர்களிடம் பேரம் பேசுவதில் குறியாக இருக்கிறாள்.

“என்னம்மா, ஒரேயடியா எண்பது ரூபா சொல்லுற…? அம்பதுன்னுதான் நான் போன மாசம் வாங்கினேன். தங்கச்சி ஊருக்கு எடுத்திட்டுப் போயிட்டா… சொல்லிக்குடு!”

“ஒரே விலை. அம்பது ரூபா பை நானும் குடுத்திருக்கிற. இந்த ஒயர பாத்தியா? இருபத்தஞ்சு வருசம் தாங்கும். அப்பிடிப் போட்ட பையி. பிளாஸ்டிக்பை, கேடு கேட்டது, மூணு மாசத்தில புடி புட்டுக்குது, அது அம்பது அறுபதுன்னு விக்கிறாங்க…”

“சரி, எழுபத்தஞ்ச வச்சிக்க!…”

“ஒரு பைசா குறையாது. தொண்ணுறுன்னா தர கட்டு படியே ஆகும். ரயில் செலவுக்குக்கூட வராத கிராக்கி…”

அந்தப் பெண் மேலும் பார்த்து ஒன்றை எடுக்கிறாள். கைப்பையில் இருந்து ஒரு ஐம்பது ரூபாயும், மூன்று பத்து ரூபாய் நோட்டுகளையும் எடுத்துக் கொடுக்கிறாள். அடுத்தடுத்துப் பை வாங்க வருகின்றனர்.

ஒயர் எங்கே கிடைக்கிறது என்ற வினாவுக்கு விடை தெரியவில்லை. முன்பெல்லாம் கடைகளில் இதே பைகள் மாட்டியிருப்பார்கள். அவர்களிடமே ஒயரும் கிடைக்கும்.

“ஏம்ப்பா, ஒயர். கூடைபின்னுறது இருக்கா?”

“இப்ப யாரும்மா இந்தக் கூடை எடுத்திட்டுப் போறாங்க ? விதவிதமா பிளாஸ்டிக் பை வந்திடிச்சி. அல்லாப் பொம்புளகளும் டுவீலர்ல சர்ருனு வேலைக்குப் போறாங்க ? காய்கறி, துணி மணி எல்லாம் ‘கேரி பேக்’ வந்திடிச்சில்ல?” என்று விளக்கம் கூறுகிறான் கடைக்காரப் பையன்.

தள்ளுபடி விற்பனை! ஆடிக்கழிவு… வாங்க, வாங்க என்று பாத்திரக்கடையில் இருந்து அடுக்கடுக்காக ஆட்டு உரல் ‘கிரைண்டர்’களும் குளிரலமாரிகளும் குவித்திருக்கும் கடைகளில் விற்பனைப் பையன்கள் அழைக்கிறார்கள். தெருவில் தலையணையில் இருந்து, போர்வை வரை போட்டுக் கொண்டு விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும், பொருட்களைக் காட்டவும் பேசவும், இளவயசுப் பெண்கள் தாம் இருக்கிறார்கள்.

இரவு ஒன்பது, பத்து மணி வரையிலும் இவர்கள் வேலை செய்து விட்டு, பதனமாகப் போய்ச் சேருவார்களா? மறுபடி மறுபடி சங்கரியின் முகம் தோன்றுகிறது. வீட்டுக்குள் ஆண் துணை இல்லாத பெண் என்றால், இந்த அளவுக்கு, குடும்பம் இருக்கமாக மக்கள் வசிக்கும் தெருவில் துணிந்து…

சே, நினைக்கப் பொறுக்கவில்லை, வேறு எதுவும் தோன்றவும் இல்லை.

இன்னைக்கு சங்கரி… நாளைக்கு எனக்கோ, என் பெண்ணுக்கோ… என்று நெருப்புக் குரலில் வெந்து வடித்தாளே, பத்து நூறு பிள்ளைகளுக்குக் கல்விப்பணி செய்யும் ஜயந்தி டீச்சர்…

அந்தக் காலத்திலும் இப்படி அரசப் பொரசலாக, தொடர்பு கற்பிப்பது உண்டு. ஆனால், உண்மையோ பொய்யோ, வித்யாலயத்தில், மருதமுத்து தன்மீது மாசுபட்டு விட்டது என்ற சொல்லையே தாங்காமல் ரயில் தண்ட வாளத்தில் தலை கொடுத்தான். ஒராண் பெண் தொடர்பு, உறவு என்பது, கல்யாணம் என்ற புனிதப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் விலை மதிப்பில்லாத பொக்கிசம். அதை இப்படிக் காலில் போட்டு மிதித்து சூறையாடுகிறார்களே?. இதை எல்லாம் கேட்கவா, உயிர் வாழ்கிறாள்?…

“என்ன, ஆச்சிம்மா? எங்கே இந்தப் பக்கம்?…”

சட்டென்று நின்று பார்க்கிறாள். “யாரு…”

பருமனாக சிவப்பாக, சுருளான செம்பட்டை முடியை அழுந்த வாரிய பெரிய கொண்டை… வயிரங்கள்…

“என்ன, பழமானுர்தெரு பங்களா வீட்டு ஆச்சிதானே? புரியலியா என்ன? குஞ்சம்மா பொண்ணு சவுந்தரம்… பாத்து ரொம்ப நாளாச்சி… பாய் மாமா மவுத்தான சேதி கேட்டு அந்தப் பக்கம் வந்தேன். நீங்க வந்திட்டுப் போனதா சொன்னாங்க. நான் தலைய காட்டிட்டு உடனே காரில வந்திட்டேன். இவ எம் பொண்ணு. ஊர்மிளான்னு பேரு. இவ கல்யாணத்துக்குப் பத்திரிக்கை வைக்கிற சாக்குல கூட வந்து பாக்க முடியல. கல்யாணம் திருப்பதில வச்சுக்கிட்டோம். ஜார்ஜூம் அவள் அம்மாவுந்தா வந்தாங்க…”

“அதுசரி, நீ தி.நகர்ல்ல இருந்தே? அங்கதான இருக்க?”

“இல்லிங்க ஆச்சி. இவங்கப்பா எட்டுவருசமா மஸ்கட்ல இருக்காங்க. நரேந்திரன் இப்பதா படிப்ப முடிச்சிட்டு யு.எஸ். போயிருக்கிறா. நா இப்ப நங்க நல்லூர் பக்கம் வந்திட்ட எங்க மாமனாரு பெரிய பையன் எறந்தபிறகு ரொம்பப் படுத்திட்டாரு. பையன், பொண்ணு, எல்லாரும் யு.எஸ். போயிட்டாங்க. எங்க ஓரகத்தியாவும் ஸ்கூல் டீச்சரா இருந்தாங்களா, ரிடயர் ஆகி மகனோட போயிட்டாங்க. பிறகு தான் நாங்க இங்க வந்தோம்… நீங்க அதே பங்களாவுலதா ஒத்தைக்கு இருக்கீங்களா? ராதாம்மா, புருசன், மகன் யாருன்னாலும் வந்து பாக்குறாங்களா?”

“ஒரு நா வருவாங்கன்னு நினச்சிட்டிருக்கிறன்…”

“அப்ப… உங்களுக்கும் வயசாச்சில்ல, மகன் கூட போயிரலியா?”

“ஏம்மா, யாருக்கு வயசானா, யாருக்கு என்ன ? நீயே இப்ப சொல்ற, புருசன், மகன் எல்லோரும் எங்கேயோ. யாருட்ட கேட்டாலும் தாய் நாட்டு மண்ணத் தட்டிட்டு ஒடுறதிலியே இருக்காங்க. இங்க எங்கவந்த சொல்லு…”

“அதா ஆச்சி, ஆடிக்கழிவுன்னு போட்டிருக்கா. தீவாளி வருது. துணி மணி வாங்கலான்னு வந்தேன். இவ புருசனும் சொன்னாப்புல யு.எஸ்.தா போறா. எல்லா ஏற்பாடும் ஆயிட்டது. முதத் தீவாளி. போகலான்னு சொன்னா. இன்னிக்கு இவளுக்கு லீவு. எங்க வீட்ல சனிக்கிழமதா துணி எடுப்போம்…”

“துணி எல்லாம் எடுத்தாச்சா?…”

“இத, காருக்குள்ள இருக்கு. வாங்களே ஆச்சி, அப்படியே நம்ம வீட்ல வந்து நாலுநாள் இருந்திட்டுப் போகலாம்? ஒத்தைக்குத்தானே இருக்கிறீங்க? எங்கூடவே கூட இருக்கலாம்… ஆனா, நீங்க மகன் கூப்பிட்டுக் கூடப் போகல. அது எப்படியோ போகட்டும், இப்ப என் கூட வாங்க ஆச்சி…”

“நீ இப்படி நடுத் தெருவில நின்னு கூப்பிட்டா நா வருவனா?”

“சரி ஆச்சிம்மா, அப்ப வாங்க, வூட்டுக்குக் காரில போகலாம். அங்க வந்து கூப்புடறேன்…” என்று சவுந்தரம் சிரிக்கிறாள்.

“வானாம். நீங்க பத்திரமாப் போயிட்டுவாங்க. இந்த மட்டும் ஆச்சிய நினப்புவச்சிட்டு விசாரிச்சியே. அதுவே சந்தோசம்…”

“எனக்கு சந்தோசம் நீங்க வந்தாதா…” என்று அவள் கையை வலியப்பற்றி இழுத்து கார்க்கதவை டிரைவர் திறக்க, உள்ளே அவளை உட்காரச் சொல்கிறாள். “ஊர்மி, நீ முன்ன உக்காந்துக்க…”

“என்னம்மா, நீ?…”

“ஒண்ணுமில்ல. காரை விடுங்க மயில்சாமி. இப்படியே பழைய மானுர் ரோடு வழி போயி கிராஸ் பண்ணி, வண்டியக் கொண்டுட்டுப் போங்க!”

சொகுசு வண்டி. உள்ளே குளுகுளுவென்றாகிறது… துணிப்பார்சல்களைத் தள்ளி பின்னால் வைக்கிறாள். பெரிய கார்…

இவள் பாட்டி குழந்தைகளை தாத்தா ரங்கூன் சண்டை வருமுன்பே கப்பலில் ஏற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால், அவர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து கைதாகி, தப்பி வந்து குற்றுயிராக, வந்தவர். அவள் இருக்கும் அந்த பங்களாவாசல் அறையில் உடம்பெல்லாம் கொப்புளங்களும் காயங்களுமாகப் படுத்திருந்த நினைவிருக்கிறது. சம்பு அம்மா இறந்த பிறகு சுந்தரம் இங்கே வந்து தொண்டாற்றினான். உடல் தேறி, அவர் டில்லிக்குச் சென்றார். நன்னிலம் பக்கம் சொத்துபத்தெல்லாம் இருந்தது… எப்படியோ அந்தக் கிளை மறுபடியும் சொந்த மண்ணில் தறிக்காமல்.

சட்டென்று வண்டி ஒதுங்கி நிற்கிறது.

“என்னப்பா ?…”

காரோட்டி வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு இறங்குகிறார். கண்ணாடியை இறக்கி, சவுந்தரம் பார்க்கிறாள். “எதோ ஆக்ஸிடன்ட் போல இருக்கு போலீசு ஏகத்துக்கு நிக்கிறாங்க?”

பேசாமல் அவள் வீடு திரும்பியிருப்பாள்.

வயிற்றை சங்கடம் செய்கிறது. “யம்மா, கதவத் தொறந்துவுடு; நா எறங்கிக்கிறேன்.”

“கதவைத் திறந்து கொண்டு அவள் முதலில் இறங்க, இவளும் இறங்குகிறாள். நிறைய வண்டிகள் நிற்கின்றன. சாலையின் போக்குவரத்தே நின்று கிடக்கிறது. இருவழியில், ஒரு வழியிலும் போக்குவரத்தில்லை. டிரைவர் வியூகத்துக்குள் புகுந்துவிட்டு வருகிறார்.

“சவுந்தரம் இதத்தானே, பார்க்குகிட்ட வந்திருக்கிறோம். நான் இப்படியே குறுக்க திரும்பி, பொடி நடையாப் போயிடுவேன். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல போல. நீங்க பண்டிகைத் துணி வாங்கிட்டுப் போறீங்க, பதனமாப் போய்ட்டு வாங்க…”

“ஒரு பொண்ணு அடிபட்டுக் கிடக்கு. பிரியாணி பொட்டலங்க சிதறிக்கிடக்கு. கட்சிக் கொடி போட்ட ஆட்டோ நிக்கிது…”

“சரியான ‘ஈவ்டீசிங்’ கேசுப்பா, இந்தப் பொறுக்கிக, ஆட்டோவில பிரியாணிப் பொட்டலத்த வச்சிட்டு, பார்க்குப் பக்கம் நடந்திட்டிருந்த பொண்ணுகளத் துரத்திட்டு கைபுடிச்சி இழுத்திருக்கானுவ முக்கியமான நபர் போன எடம் தெரியாம நழுவிட்டாகட இருந்த பொறுக்கிக அம்புட்டுக்கிட்டாங்க…”

செவிகளில் விழும் செய்திகள், செவிப்பறையைத் துளைத்து, உணர்வுகளைப் பந்தாடுகின்றன.

இந்த பூமியில் எதற்காக இருக்கிறோம் என்று பலவீனம் ஆட்கொள்கிறது. பட்டப்பகலில் நடுவீதியில் இந்தப் பெண் வேட்டை நடக்கிறது. முன்பெல்லாம் அவள் ஒரு தமிழ் தினசரி வாங்கிப் படித்துக் கொண்டிருந்தாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்சிமாறும் புண்ணியங்கள், மக்களை ஏமாற்றிப் பதவி பிடிக்கும் சாதுரியங்கள், கட்சி பலம் காட்டும் மாநாடுகள், இவர்களிடையே பந்தாடப்படும் வாக்குறுதிகள், என்ற செய்திகள் தவிர ஆரோக்கியமாக, தெம்பு கொடுக்க, நம்பிக்கை கொடுக்க எந்தச் செய்தியும் இல்லை. மாசம் நூறு ரூபாய் மிச்சம் என்று நிறுத்திவிட்டாள். ஒருபழைய ரேடியோ இருந்தது கையடக்க டிரான்ஸிஸ்டர். காலை நேரத்தில் அதில் செய்திகள் கேட்பாள். வெள்ளிக் கிழமைச் சடங்காக காந்தி பஜனை வரும். அதை எடுத்துக் கொண்டு போன பராங்குசம், ஒரு மிகச்சிறிய டிரான் எலிஸ்டர், பாட்டரியில் ஒடுவதைக் கொண்டு வந்து வைத்தான். இப்போது அதில் என்ன கோளாறோ, காதடியில் வைத்துக் கொண்டாலும் கேட்பதில்லை. மாடியிலேயே கொண்டு வைத்துவிட்டாள். அவள் நடமாடும் சூழலே செய்திகளாக இருக்கின்றன. இன்று அவள் சாதாரணமாக, யதேச்சையாக, வெளிக்கிளம்பி வந்திருக்கிறாள். எத்தனை செய்திகள்? அவலங்கள்? நடுவீதியில் வேட்டையாடப்பட்ட பெண் யாரோ?

மண்ணாங்கட்டி மூலமாகக் கட்சியில் பிறந்த நாள், இறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படும் போது, பிரியாணி பொட்டலங்களே விழாச் சின்னங்களாக மணம் வீசும். ரங்கனும் இந்தப் பிரியாணி விழாக்களில் ஆதாயம் பெறுவான் என்பது அவளுக்குத் தெரியும். மட்டன் குருமா – ஏ.ஒன். பீஃப், ஸல்ப் ரெடி என்று ரயில் பாதை யோரம் குடிசைக் கடைகளில் எழுதியிருக்கும். வெட்டித் தோலுரிப்பதும் அங்கேயே நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில், பசுவதைத் தடுப்புச் சட்டமாம்!

வேகுவேகென்ற அந்தக் குடிசைக் கடைகள், இரத்தம் கருகிப் போன சாக்கடைகள், கறி கொத்தும் கட்டைகள் எல்லாம் கடந்து வருகிறாள்.

கோமாதா குலமாதா… பசுக்களைக் கும்பிட்டுப் பூசை செய்ய வேணும் என்று மடத்து ஆசாரிய சுவாமிகள் இப்போதும் சொல்கிறார். பத்திரிகைகளில் அவருடைய வண்ணப்படங்கள்.

பத்திரிகைக் கடைகளில் தொங்குகின்றன. கோமா தாக்கள், குப்பைத் தொட்டியில்தான் வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. சொந்தக்காரன் இவை கறக்கும் வரை காலையிலும், மாலையிலும் தேடி வந்து கொண்டு போய்க் கரந்து கொள்வான்.

“யாருடீ அந்த ஆசாரியன்? எதுக்குக் கொலை பாதகம் பண்றான்?” என்று சம்பு அம்மாவின் ஆங்காரக் குரல் மின்னல் பாய்ந்தாற்போல் ஒரு கணம் உலுக்குகிறது. வண்டிக்காரன் தங்கவேலு சில நாட்களில் தன் மூன்று நான்கு வயசுப் பிள்ளைகளை அழைத்து வருவான்.

“டேய், முருகா ? இங்க வாடா!” என்று அம்மா கூப்பிடுவார்.

“சாப்பிடுறியா?” என்று கேட்பார். எப்போது கேட்டாலும் அழகாக ‘உம்’ என்று தலையசைப்பான். அந்தப் பெரு மாட்டிக்கு எந்தக் குழந்தையைக் கண்டாலும் சோறு பிசைந்து ஊட்டும் தாபம் தோன்றும் போலும்! ஒரு பட்டை வெள்ளிக் கிண்ணத்தில் தயிரூற்றிச் சோறு பிசைந்து கொண்டு வருவாள். அவனை ஊஞ்சற் பலகையில் உட்கார்த்தி வைத்துச் சோறுாட்டுவாள். “கொழம்பு சோறு வேணுமா ?”

அதற்கும் ‘உம்’ என்று தலையசைப்பான். ‘வயிறு என்னை இடிக்கிறது. உங்கம்மா இன்னிக்கு என்ன குழம்பு வச்சாங்க?” என்று கேட்பாள். தங்கவேலு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருப்பான். “மி…மீன்..” என்று வார்த்தை வருமுன் “டேய்” என்பான் தங்கவேலு.

“…இல்ல.மு முருங்கக்காய்க் குளம்பு” என்று பொக்கைப் பல்லைக் காட்டிச் சிரிப்பான். அம்மா அவன் வாயைத் துடைத்துவிட்டு, கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சுவாள்.

மரக்கறி உணவு, அப்படி நாகரிகப் பண்பாட்டின் அடையாளமாக இருந்தது.

ஆனால் அதே அம்மாவின் அண்ணன்மார், அப்போது ஆடும் கோழியும் சாப்பிடுபவர்கள் என்ற உண்மை அம்மாவின் சொற்களில் தெறித்துவிழும். “இங்கே நான் தீட்டாக்கி, குலாசாரம் கெடுக்கிறேனாம், பெண்ணைக் கூட்டிட்டுப் போறான்! இவன் வீட்டில பெரிய துரைக்கெல்லாம் தீர்த்தம் பிரசாதம் கொடுக்கும் பார்ட்டியப் பார்த்துப் பழகட்டும்?” என்று கடு கடுத்தாள். அந்த புரு சன் தாமுவுக்கும் இதெல்லாம் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கடைசியாகச் சொன்ன சொல்…

‘ஆம்புள பொம்புளய, இவதான்னு ஓங்க முடியாம, நீ பொம்புள பொம்புளன்னு… ஒடுக்கிடுவான்’ என்று தானே சொன்னாள்? இத்தனை படிப்புப் படித்து, வேலை செய்து சம்பாதித்து, என்ன உசத்தி வந்திருக்கு? என்ன மதிப்பு வந்திருக்கு?.

அவள் புருசன்… எத்தனையோ வகைகளில் வேறுபட்டான். எல்லோரையும் போல் வெள்ளையும் சள்ளையுமாகப் போட்டுக் கொண்டு மதிப்பாக இருக்க வேணும், வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்ற ஆசைதான். அவன் கிராமத்தில் செய்த அதே வேலையை நகரத்துக்கு வந்தும் செய்கிறான். எட்டாவது தேறியிருக்கிறேன். இந்தப் படிப்புக்கு ஒரு கவுரவ வேலையில்லையே என்று குறை பட்டுக் குடிபழகினான். அது கூடச் சேர்வார் சரியாக இல்லாததனால். ஆனால், அவன், அவளை மறந்து எந்தப் பெண்ணையும் வேறு கண் கொண்டு பார்த்ததில்லை. “என் கண்ணுத்தாயத் தவிர பாக்கிற பொம்புள எல்லாம், தெய்வம் எனக்கு, புள்ளாரு ஏன் கலியாணம் கட்டல? பாக்குற பொம்புள எல்லாம் பெத்த தாயாத் தெரியிறது தாயுன்னு சொன்னார். பொறுக்கிப் பயனுவ…” என்று குடிபோதையிலும் தன்னை வேறு பக்கம் இழுப்பவனை, பெண் சுகம் தேடி, எங்கெங்கோ நுழைபவர்களுடன் மோதிச் சண்டை இழுத்திருக்கிறான்… ஆனால், மகனிடம் அந்த நேர்மையே இல்லை.

இந்த ஒழுக்கச் சூழல் இல்லாமல் இருந்திருந்தால், அவள் புருசனும் ஒரு கால் பிசகி இருப்பானோ ?… அவனுக்கு அவள் இந்தக் குடிலில் மீனும் கறியும் சமைத்ததில்லை. அவள் வளர்ந்ததும் பதம் பெற்றதும் மரக்கறி இல்லங்களிலும் சாத்துவீக மக்களிடமும்தாம். எனவே, அவள் கணவன் வேறு உணவு கொண்டாலும், வெளியே இருந்த உறமுறை வீடுகளில் தான் சாப்பிடுவானாக இருக்கும். அவளை அவன் சமைக்கச் சொன்னதில்லை. கடற்படையில் இருந்த ராதாம்மாவின் புருசன் எல்லாம் சாப்பிடுவார்; குடிப்பதும் உண்டு என்று சொல்லிக் கொள்வார்கள். அதையும் அவள் பையன்தான் சொல்லிக் காட்டினான்.

ஆனால், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்வ தென்பதை அவளால் சீரணம் செய்ய முடியவில்லை.

அத்தியாயம்-15

மகனையும் மருமகளையும் குடித்தனம் வைக்கையில் சம்பந்தி அம்மாளும் பெண்ணைப் பெற்ற அப்பனும் அவளையும் அழைத்துச் சென்றுதான் எழுமூரில் புதிய வீட்டில் குடித்தனம் வைத்தார்கள்.

“எம்பொண்ணு ரஞ்சிதத்துக்கு டவுன் பழக்கம் எதும் தெரியாது. விவசாயக் குடும்பம்மா. உங்க மகன் பெரிய மனிசாளோடு பழகுறவரு… அதுலய இவள உங்க மகளப் போல பாத்து, ஏத்தாப்புல சொல்லிக் குடுங்கம்மா..!” என்று சொல்லி விட்டு மறுநாளிரவே அவர்கள் ஊருக்கு வண்டியேறிவிட்டார்கள். மறுவீடு அழைத்துச் செல்லக்கூட, மருமகப்பிள்ளைக்கு, புதிய அரசியல், வெற்றிப் படப் புகழ் போதையில் மேலும் அதே துறையில் பல வேலைகள். புதிய மொசைக் போட்ட தளம். குளியலறை, கழுவும் பீங்கான், பாத்திரங்கள் கழுவும்இடம், காஸ் அடுப்பு, குக்கர், எல்லாம் பெண்ணுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தார்கள். அவளுக்கே இந்தக் குக்கரை உபயோகிக்கத் தெரியாது. அதிகம் பேர் சாப்பிடுவதற்கு, பானைதான் வைத்து வடிப்பார்கள், அவள் புழங்கிய சமையற் கூடத்தில். அவள் வீட்டிலும் சிறுசிறு பிளாச்சு விறகாகக் கட்டை தொட்டியில் இருந்து வாங்கி வருவாள். சூளையில் வைத்த மண் அடுப்பு, ஒரே கட்டைத் தீயை அடக்கமாகப் பாத்திரத்தில் ஏற்றி சமையலை மிக எளிதாக்கும். சமையற் கூடத்தில், பெரிய இட்டிலிக் கொப்பரை உண்டு. ஆட்டாங்கல்லில்தான் மாவாட்டுவார்கள். அம்மி, கல்திரிகை எல்லாம் புழக்கத்தில் இருந்தன.

“அத்தே, எனக்கு இதவச்சி சமைக்கத் தெரியாது. என்ன செய்ய?” என்றாள் ரஞ்சிதம். “நா எதக்கண்டேன்? இத எப்பிடிக் கொளுத்துறதுன்னு கத்துக்கிட்டதோடு, அதையும் அந்த சமையக்காரப் பயகிட்டக் கேட்டிருக்கலாம் இல்ல?”

“தெரியல அத்தே…”

“போவுது…” என்று ஒரு புதிய அடுக்கைத் தேர்ந்து அதில் ஒரு பாத்திரத்தில் அரிசியும், மேலே பருப்பும் வைத்து, நீரூற்றி மூடி அடுப்பில் ஏற்றச் சொன்னாள். அந்தக் காலத்தில் புனாவில் இருந்து அப்படி ஒர் அடுக்குப் பாத்திரம் வாங்கி வந்திருந்தார் அம்மா. காலையில் நல்லபடியாக இட்டிலி காபி அவளே தயாரித்துப் புதிய மருமகளைக் கொடுக்கச் செய்தாள். மேசையில்தான் பரிமாறல். அப்போ தெல்லாம் சாப்பாட்டு மேசை, அவள் பழகியிருக்கவில்லை. பித்தளை செம்புப் பாத்திரங்களுக்குப் பதிலாக, ‘ஸில்வர்’ என்று சொல்லும் பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தன. அவள் மகனின் முன் விழிக்கவுமில்லை. பேசவுமில்லை. காலையில் கார் வந்தது, அவன் போய் ஏறிக் கொண்டான்.

வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் கழுவி, நீர் பிடித்து வைத்து எல்லா வேலையையும் அவளே செய்தாள்.

“அத்தே, நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க? வேலைக்கு ஒரு ஆள் போட்டுக்கலாமில்ல?” என்றாள் ரஞ்சிதம்.

“வாணாம்மா, நா இருக்கிற வரையிலும் ஆளெல்லாம் வானாம். இதெல்லாம் எனக்குப் பழக்கம்தானே?” என்று மறுத்துவிட்டாள்.

காலையில சென்றவன்தான். மதியம் சாம்பார், பொரியல், எல்லாம் வைத்துச் சமைத்தாள். புதுமணம் என்ற கருக்கு மாறாத வீடு, வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், இனிப்பு வகைகள், எல்லாமே இருந்தன.

“முதல்ல சாப்பிட வரச்சே, ஒரு லட்டுவும் பழமும் வச்சுப் பரிமாறும்மா? உங்க வாழ்க்கை நல்லா, புள்ள குட்டி யோட சந்தோசமா இருக்கணும்மா!” என்றாள். முடிசீவிப் பூச்சூடி அலங்கரித்தாள். சுவாமி அறை என்று ஒரு தனி அறை இருந்தது. லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், முருகன் என்று வெள்ளிப் படங்கள் சுவரில் மாட்டியிருந்தார்கள். இரண்டு அழகிய குத்து விளக்குகள் சுவாமி அறையில் எரிய விட்டிருந்தார்கள். பகல் ஒரு மணிக்கு அவன் சாப்பிட வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். ‘காம்பவுண்டு’ சுவர் தலைமறைவாக உயரம். பெரிய இரட்டைக் கதவு வாசல், கார் வந்து போக வசதியாக இருந்தது. வீடுகட்டி வெள்ளையடித்து ‘பெயின்ட்’ அடித்த மிச்ச சொச்சங்கள், சுற்றிலும் நிறைந்திருந்தன. வசதியாக நல்ல பூச்செடிகளும் காய்கறிகளும் பயிரிடலாம். இந்த இடம் புதிய பகுதி. சற்று எட்ட நடந்தால் பூந்தமல்லிச் சாலை. அக்கம் பக்கம் என்று வீடுகளின் நெருக்கம் இல்லை.

“மணி ஒன்னே காலாயிடிச்சி. கண்ணு, நீ சாப்பிட்டுக்க, முகம் வாடிப் போச்சு…” என்றாள் மருமகளிடம்.

“வாணாம் அத்தை, அவங்க வரட்டும்…” என்றாள். மாறாக, “நீங்க சாப்பிடுங்க அத்தை, காலம நீங்க டிபனும் சாப்புடல. வெறும் கேழ்வரகு கஞ்சிதா குடிச்சீங்க” என்றாள் அவள். இவளுக்கு அடிவயிற்றில் சில்லிடத் தொடங்கியது.

திருமணம் நடந்து, மஞ்சளின் பசுமை மாறவில்லை. மணி மூன்றாயிற்று. “ஆம்புளங்க, போனா ஆயிரம் வேலை இருக்கும்மா; நீ உக்காரு, நான் சோறு வைக்கிறேன்” என்று லட்டுவும் பழமும் வைத்துச் சோறு வைத்தாள். சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்கையில் அழுகை வந்து விட்டது. “இப்படி ஒரு பாவமா?…” செல்லமாக வளர்த்த பெற்றோரை விட்டு வந்து முன்பின் தெரியாதவனிடம் உறவு கொள்வது, பெரிய புரட்சி. அவளுக்கு அப்பனின் ஆதரவைத் தவிர எதுவுமே புரிந்திராத வயசு, பயமும் தெரியாது. வந்து சேர்ந்த இடமோ அன்பைப் பொழிந்தவர்கள். புருசனும் அவள் மீது மதிப்பையும் உயிரையும் வைத்திருந்தான். ஆனால், இவன்…

இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை.

மாடிப்படுக்கையறைக்கே போகாமல் கீழே போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தே சோர்ந்திருந்தது. “எதானும் சாப்பிடம்மா? பட்டினியே படுத்துக்கக் கூடாது…”

இவளுக்கே பேசப்பிடிக்கவில்லை. பகலில் சமைத்தது ஆறியிருந்தது. சூடு செய்து, கொஞ்சம் சாப்பிடச் செய்தாள். இவளும் ரசத்தை ஊற்றிக் கரைத்துக் குடித்துவிட்டு, கீழே ஒரு பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். முதன் முதலாக, சம்பு அம்மா அரவணைப்பில் அந்தக் கூடத்தில் பழைய புடவை மெத்தையில் முடங்கிஉறங்கிய நினைவு வந்தது. குழந்தைப் பருவம் எவ்வளவு தூய்மையானது? இவளும் குழந்தைதான். “எங்க புள்ளக்கி ஒண்ணும் தெரியாதுங்க, நல்லது பொல்லாதது…” என்று அவள் தாய் கூறியது செவிகளில் ஒலிக்கிறது. இவள் பிள்ளை எப்பேர்ப்பட்டவன்? அவன் இந்தியை எதிர்க்கட்டும், அதிரடி அரசியல் பேசட்டும், சினிமா வசனம் எழுதட்டும், வசனம் பேசி நடிக்கட்டும்; குடிக்கட்டும். இவனையே நம்பி கைபிடித்திருக்கும் இந்தக் குழந்தைப் பெண்ணைப் பூப்போல் வைத்துக் கொள்ள வேண்டுமே?

பஞ்சமியைப் புருசன் எப்படி அன்போடு வைத்திருந்தான்? அவளுக்குக் கொடுப்பினை இல்லை. ஆனால், சம்பு அம்மா, புருசன், தாமு ?

இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவர்களிடையே எந்த உறவும் இருந்திருக்கவில்லை என்றே ஊகிக்கிறாள்.

விடியற்காலையில் இவள் கதவு திறந்து குழாய் நீரைப் பிடித்து முன் வாசல் தெளிக்க வருகையில் கார் வந்து நின்றது.

இவள் திகைத்துப்போய் வாளியோடு ஒதுங்கினாள். மேல்வேட்டி விசிற இவன் கார்க் கதவை ஓங்கி அடித்து விட்டு உள்ளே சென்றான். மாடிப்படியில் அவன் ஏறிச் சென்றது தெரிந்ததும் அவள் வாசல் பெருக்கி, கோலமிட்டாள். திரும்பி வந்து சோபாவிலேயே படுத்துத் துங்கிவிட்ட மருமகளை மெள்ள எழுப்பினாள்.

“அம்மா, ரஞ்சிதம், உம்புருசன் வந்திட்டாப்புல போயி காப்பி கீப்பி வச்சிட்டு வரவான்னு கேளு…” என்றாள்.

அவள் திடுக்கிட்டாற்போல் எழுந்தாள். “ஒண்ணுமில்லம்மா, பயந்திட்டியா? போயி முகம் கழுவிக் கிட்டு, காப்பி வச்சித் தாரேன், எடுத்திட்டுப் போ! மணி ஆறாயிடிச்சி…”

முதல் நாளிரவு காய்ச்சிய பால் இருந்தது. புதிய பால் இன்னமும் வந்திருக்கவில்லை. பொடி போட்டு, பில்டரில் இறக்கி, அந்தப் பாலைச் சுடவைத்துக் காபி போட்டாள். புதிய டவரா தம்ளரில் ஊற்றிக் கொடுத்து அனுப்பினாள். பயந்த புறாவைப் போல் போயிற்று.

காபியைக் கொடுத்து விட்டு அவள் வரவேயில்லை. எட்டு, ஒன்பது, பத்துமணியாகிவிட்டது. இவள் அடுப்பை அனைத்துவிட்டு, பின் பக்கம் தாழ்வரையெல்லாம் சுண்ணாம்படித்த தடயங்களைத் தேய்த்துக் கழுவினாள். பால்வாங்கிக் காய்ச்சி வைத்து விட்டுக் குளித்தாள். சேலை துவைத்து உலர்த்தினாள். பழைய குழம்பும் பொரியலும் முதல் நாளிரவே கலந்து கொதிக்க வைத்திருந்தாள். சோற்றில் நீரூற்றி வைத்திருந்தாள். எந்தப் பொருளையும் வீணாக்கிப் பழக்கமில்லை. இரவுக்குள் தீர்த்து விடுவார்கள்.

பத்தரை மணி சுமாருக்கு, கலைந்த தலையும், கலைந்த பொட்டுமாகக் கீழே வந்த பெண்ணின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது இவளுக்குச் சொறேலென்றது.

“ஏம்மா, அழுதியா?…”

‘இல்லேத்தே…’ என்றாலும் பிழியப்பிழிய அழுகை வந்தது.

“அசடு, அழாத ஒரு பொம்புளைக்கு வாழ்க்கைங்கறது இதுதா. போவட்டும்… அழுவாதம்மா!…” இதற்குமேல் எதையும் கேட்பது நாகரிகம் இல்லை.

“சரி, நீ காபி குடி, ராத்திரியே சரியா சாப்புடல. வா, முகத்தைத் துடச்சிக்க. பல்லு விளக்கிட்டு வா!”

அப்போது, மாடியில் குளியலறை இல்லை.

“சரி அத்தே…” என்று போனாள். அதிர்ந்து பேசத் தெரியாத தென்பது முழுசும் உண்மை.

“இன்னைக்கு எப்ப போகப் போறான்? துரங்கி எந்திரிச்சிக் குளிச்சுக் கெளம்பறச்சே, மணி பன்னண்டடிச்சிடும். எல்லாம் தலகீழா இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே, அவள் பழைய சோற்றில் உப்பையும் தயிரையும் சேர்த்துப் பிசைந்து தாளித்தாள்.

“எங்க வீட்டிலும் இப்படித்தான் அத்தை செய்வோம்! எங்கம்மா, இப்படித்தா எதுன்னாலும் கொதிக்க வச்சி, சுண்டவச்சிடுவாங்க. எங்கண்ணெ, அப்பா, சித்தப்பா, அத்தை எல்லாரும் சாப்பிடுவம். ஆனா, உங்க மக…”

“ஆமா, எங்க ஆகாசத்திலேந்து வந்திட்டானோ? எப்ப எந்திரிச்சி வரானோ? என்னமோ?…”

“அத்தே…’என்றவள் நிலத்தைப் பார்த்தாள்.

“ஏம்மா…’

“… ஒண்ணில்ல… நீங்க கறி மீனு ஒண்ணும் சமைக்க மாட்டீங்களா ?”

‘கரண்ட்’ ஓடும் கம்பியைத் தொட்டுவிட்டாள்.

“ஏம்மா? உனக்குத் தெரியுமில்ல? சமைச்சிப்போடு!”

அவள் ஒன்னும் சொல்லவில்லை.

மாடு கொண்டு வந்து பால் கறக்க ஒருவன் வந்தான். ஃபிரிட்ஜ் வந்தது. கறி மீன் மசாலாப் பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்து வேலை செய்ய ஒரு பெண் வந்தாள். சுருட்டை சுருட்டையான முடியும் மூக்கும் முழியாகக்களையாக இருந்தாள்.

இவள் தனக்கு வேண்டிய கஞ்சியோ, குழம்போ வைத்துக் கொண்டு பின்பக்கம் தனியே தோட்டத்தைக் கொத்திக் கொண்டோ தண்ணிர் பாய்ச்சிக் கொண்டோ இருப்பாள்.

மரகதமும் ரஞ்சிதமும் சமையலறையில் பேசிக் கொண்டே, மீன் கழுவுவதோ, மசாலை அரைப்பதோ, வித்தாரமாகச் செய்வார்கள். அவன் எப்போது வந்தாலும் எதுவும் தயாராக இருந்தது. ஃபிரிட்ஜில் குடி வகைகள், குழம்பு, கறி எது வேண்டுமானாலும் இருந்தது. தோட்டத்தில் கீரை போட்டு, நன்றாக வளர்ந்திருந்தது. அப்போதுதான் கடலூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சந்திரி, ஒருநாள் வந்தாள். கல்யாணத்துக்கு ஒருநாள் வந்து விட்டுப் போனாள். தோட்டத்தில் இருந்த அவள் கையைக் கழுவிக் கொண்டு பின்புறமாக வந்தாள்.

“யேய், ஜூஸ்? நீ எங்கே இங்கே? என்னமோ, பின்னணி பாடகியாகி ஒரு கலக்குக் கலக்குவேன்னே, குழம்பு கலக்கிட்டிருக்கிற?”

சந்திரி உயரமாக வளர்ந்திருந்தாள். முடியை தொள தொளவென்று பிடரியில் புரள நுனியில் மட்டும் பின்னிவிட்டிருந்தாள். செவிகளில் வளையங்கள்.

“குழம்புகலக்கினா கொறஞ்சா போயிடும்? எனக்கு சான்ஸ் கிடைச்சிடுத்துன்னு வச்சிக்க!”

“இவங்கள உங்களுக்குத் தெரியுமா சந்திரி அக்கா?”

“தெரியுமாவாவது? இவ மூணு வயசில மூக்கொழுக நின்னிட்டு அழுத போதே, இவ பின்னணி பாடகியா வணும்னு தா அழுதா…”

“ஏம்மா, சந்திரி!… யாரு?…”

“உனக்குத் தெரியாதாம்மா ? காத்தமுத்து மாம மக. இவளுக்கு எப்பம் மூக் கொழுகும். அண்ணெதா இதுக்கு ஜூஸ்னு பேர்வச்சது. சொந்த உறவுமுறைகளே தொடர்பு விட்டுப் போய்விட்டன. இவ நம்ம குருகுல வித்யாலயாவில படிச்சால்ல ?…”

“படிச்சா. பிறகு படிப்ப நிறுத்திட்டு, அவம்மா, வூட்டு வேலைக்கு அனுப்பிச்சிட்டா…”

“இல்லக்கா, கார்ப்பரேசன் ஸ்கூல்ல பிறகு படிச்சேன்… கமலவேணி அம்மா வீட்லதா இருந்தே அவுங்க பாடுற பாட்டெல்லாம் அப்பிடியே பாடுவேன். அண்ணெ எனக்கு நிச்சியமா சான்ஸ் தரதா சொல்லிருக்காங்க, புதுப்படத்துல…”

சந்திரி, அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பு வந்திருந்த சந்தோசத்தில் மிதந்தாள். சாமான்கள் வாங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு பங்களா வீட்டுக்கு வந்து அம்மா, அய்யாவிடம் ஆசி பெற்றாள்.

“சந்திரி, உனக்குப் பிடித்தவர் யாரானாலும், நல்லவராக ஒருத்தரை வாழ்க்கைத் துணையாகக் கொள்” என்று அய்யா வாழ்த்தினார். டெல்லி சென்று அங்கிருந்து விமானத்தில் செல்வதாக இருந்தாள். அய்யாதான் நண்பர்களுக்கு எழுதி எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாக அறிந்தாள்.

“ஏம்மா, மகன் வீடு எப்படி இருக்கு ?”

அம்மா கேட்டார். “எதைச் சொல்ல அம்மா? ஒண்ணும் சரியில்ல. ஆனா, மருமகப் பொண்ணு நல்ல பொண்ணு. கவடில்லாத பொண்ணு. இப்ப மெய்யோ பொய்யோன்னு இருக்கு. அவங்க அம்மா வீட்டுக்கு எழுதிப் போட்டு, அழச்சிட்டுப் போகச் சொல்லுறதான்னு தெரியல…”

“சந்தோசமான சமாசாரம் சொல்ற ! இந்தாங்க, சர்க்கரை வாயில் போட்டுக்குங்க!” என்று அம்மா சர்க்கரை வழங்கினார். ஆனால் இவளுக்கு சர்க்கரை இனிக்கவில்லை.

அத்தியாயம்-16

“எம்புள்ளிய எப்படின்னாலும் காப்பாத்தச் சொல்லுங்க தாயி, அவெ அப்படியெல்லாம் நடக்கிறவனில்ல தாயி! காடுகழனி வெள்ளாம இல்லாம, இங்ஙன பஞ்சம் புழைக்க வந்து, பாடுபடுறம் என்னமோ படம் வரயிவா. கடயில வேலை செய்திட்டிருந்தவனக் கூட்டிட்டுப் போயி, படம் நல்லா வரயிறான்னு, வச்சிட்டாங்க கட்சில சேத்திட்டாங்க. அக்கா தங்கச்சின்னாக்கூட எட்ட இருந்துதா பேசுவா தாயி. அவம் போயி, ரோட்டுல போற பொண்ணப் புடிச்சி இழுத்தான்னு புடிச்சிட்டுப் போயிட்டுது தாயி!”

வீடு துடைத்துக் கொண்டிருக்கும் அவள் திடுக்கிட்டாற்போல் பார்க்கிறாள். அவளுடன் வழுக்கை மண்டையும், குங்குமம் திருநீறுப் பொட்டுமாக ஒரு பெரியவர் நிற்கிறார். எங்கோ பார்த்த நினைவு.

இவள் நிமிரும் போது, அந்தப் பஞ்சைத்தாய், இவள் காலடியில் விழுந்து கண்ணிரால் நனைக்கிறாள்.

“இந்தாம்மா எழுந்திரு…” என்று எழுப்புகிறாள். சட்டென்று அந்தப் பெரியவரின் நினைவு வருகிறது. இவள் பணம் வாங்கச் செல்லும் வங்கியில் இவர் பழக்கம். ராமலிங்கம் என்று பெயர். பென்சன் வாங்கிக் கொண்டு விட்டார். ஒரே பையன் கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு மதம் மாறிப் போனான்.

“…வாங்கையா எங்கே இம்புட்டுத் துரம்? எல்லாம் நல்லாருக்கீங்களா?…”

மடமடவென்று வாளியையும் சுருணையையும் பின் பக்கம் கொண்டு வைத்துக் கைகழுவிக் கொண்டு வருகிறாள்.

“இந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு வழி செய்யணும். உங்களால் தான் முடியும். இந்த அரசியல் கட்சிக்காரங்க என்ன அக்கிரமம் செய்தாலும் கேட்பார் கேள்வி இல்லேன்னு ஆயிடிச்சி. இந்தம்மா காஞ்சிபுரத்திலேந்து அவல் கொண்டு வந்து தெருத் தெருவா விப்ப. இருக்கிறது அங்கதா. வள்ளுவர் குருகுலத்துல ஒம்பது படிச்சிட்டிருந்தப்ப, ஒருநா வாத்தியார் அடிச்சாரு காது சரியா கேக்கலன்னு சொல்றா. என்ன விசயம்னு புரியல. படிப்பு நின்னு போச்சு. ஒரு கடையில, இங்கதா மளிகைக் கடையில வேலைக்கு வச்சா. காது சரியா கேக்கலன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் மந்தமா இருப்பான். ஒருதரத்துக்கு ரெண்டு தரம் சொல்லணும். முதலாளி வீட்டில மாடில, கடைப்பையன்கள் அஞ்சாறு பேர்- தட்டிமாடி அங்கேயே படுத்துப்பாங்க. பின் பக்கம் வெளில வெறகு, மட்டை, அது இது வச்சி பொங்கித்திம்பாங்க. ஒரு நேரம் அப்ப ஒருநா, ஒரு கரியை வச்சிட்டு, பின் பக்க சுவரில, கிணறு, தென்னமரம், சூரியன்னு வரஞ்சிருக்கிறான். மத்தியானம் குளிச்சிட்டு, முதலாளிக்கு வீட்டிலேந்து சோறு கொண்டு போகணும். கடைக்கும் வூட்டுக்கும் சைகிள்ல போனா, பத்து நிமிசம் ஆகும். ரயில் கேட்டு மூடிட்டா, ரொம்ப நேரமாயிரும். இவன் பின்னாடி வெள்ளயடிச்ச சுவரப் பாழு பண்ணிருக்கறத பாத்து, செவிட்டுப்பயல, அவருக்கு சோத்து நேரம் தப்பினா தாங்காது, சக்கர நோயிக்காரரு என்று செமையாக அடித்து விட்டாள். அழுது கொண்டே பையன் முதலாளியிடம் நேரமானதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

இவனுக்குப் படுக்கை, பூட்டிய கதவின் பக்கம் கடையில்தான். இரண்டிரண்டு பேராக இரவு காவல். இவன் காவலிருக்கவில்லை. பஸ் ஏறி ஊருக்குப் போய்விட்டான். அவள் அம்மா திட்டி, அவல சுமந்து வருகையில் இவனைக் கூட்டி வந்து மன்னிப்புக் கேட்க வைத்தாள். “டேய், நீ நல்லா வரையிறனு ஏன் சொல்லல? உனக்கு இனிமே வரையிற வேலதா. உனக்கு வர்ணம் பிருஷ் எல்லாம் வாங்கித் தாரேன்! இந்தக் கடை வாணாம்!” என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அப்போது தேர்தல் வர இருந்தது. அவர் அரசியல் கட்சியின் பிரதான ஆதரவாளர். ஒவ்வொரு தெருவிலும் கட்சிச் சின்னங்கள், தலைவர் உருவம், சுலோகங்கள் எழுதுவது வேலையாயிற்று. பிடித்த வேலை, சம்பளம், மற்றவர் குடித்தாலும், பீடி சிகரெட் புகைத்தாலும் இவன் ஒழுக்கமாக இருந்தான். கட்சியில் இளைஞர் அணித் தலைவனாக இவள் பெயரன் நாகமணிதான் கட்சியை இளைஞர் அனைவருக்கும் உரியதாக ஆக்கினான்.

“அம்மா, இவனப்போல வரையிறவனுக்கெல்லாம் சாராயம், பிரியாணி, இதெல்லாம் தா கொடுப்பாங்களாம். இவெ குடிக்கமாட்டா. இவுங்கப்பெ குடிச்சிக் குடிச்சிப் பாழாயிதா, நா ரெண்டு பொட்டபுள்ளகளயும் ஆத்தாளயும் கூட்டிட்டு இங்கு வந்து சந்தியில நிக்கிற. அந்த கடக்கார சாமி ரொம்ப நல்லவரு, அவுரு இவனுக்கு சம்பளமா குடுத்திடுவாரு சாராயத்த வாங்கி ஊத்தி அடுத்த கட்சிக்காரனுவ இவனப்போல பயங்களக் கூட்டிட்டுப் போவாங்களாம். இவன ஒருக்க ராவுல போட்டு அடிச்சிட்டானுவ மேலே பானர் எழுதிட்டிருந்தானா… எம்புட்ட நல்லா வரயிறா! தலவரு, அண்ணா படம் அச்சா வரஞ்சிருந்தா. அடிச்சிகைய ஒடச்சிட்டாங்க. சாமி, கச்சி வாணாம் அவனுக்கு கட வேலயே போதும்னு அழுத. அவருதான் புத்துாரு கட்டுப் போட கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பணம் குடுத்தாரு. இப்ப ஒண்ணில. பல்லாவரம் திடல்ல பெரி…ய கூட்டம். தோரணம் கட்டி, மைக்கு செட்டு போட்டு அட்டை வச்சி ஏற்பாடு பண்ண கூட்டியிருக்காங்க. அஞ்சுபேரு, ஆட்டோல பிரியாணி பொட்டலம் பாட்டில் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்களாம். நம்மபய்ய உள்ள, குந்திட்டிருந்திருக்கா பச்சை – சிவப்பு வெளக்கு வருமே அங்க சிவப்பு வரப்ப, வண்டியெல்லாம் நிப்பாட்டிட்டா, அப்ப அந்தப் பொண்ணு ஒரமாப் போயிட்டிருந்திச்சா நின்னிச்சா தெரி…ல… மோட்டார் பைக்கில, இளைஞர் அணித்தலவர் நின்னாருங்கறாங்க. சட்டுனு வண்டி கிளம்பறச்சே, அந்தப் பொண்ணக்கையப் புடிச்சி, ஓகோகோன்னு சத்தம் போட்டு இழுத்தாரு, அது வரல. இழுத்திட்டுப் போகுமுன்ன அது கீழ வுழ, பின்னாடி வந்த வண்டி சக்கரத்துல அடிபட்டிச் சின்னு பாத்தவுங்க சொல்றாங்க; என்ன நடந்திச்சோ ஆண்டவனுக்குத்தா வெளிச்சம். ஆட்டோவும் சாஞ்சிடிச்சி. அல்லாரும் ஒடிட்டாங்க. எம்பய்யனும், இன்னொரு பய, அவன் குடிப்பான்னு சொல்லுவா. ரெண்டு பேரையும் போலீசு புடிச்சி கொலக்கேசு போட்டிருக்கு, தாயி!”

அவள் கதறலில் உடலும் உள்ளமும் மட்டும் குலுங்கவில்லை. பூமா தேவியே குலுங்குவது போல் இருக்கிறது. பூமாதேவி குலுங்கிக் குமுறுகிறாள். ‘நா இன்னு என்ன சாட்சி கொடுப்பேன்’னு ஆகாசத்த பாத்து, அன்னிக்கு சீதை, குலுங்கினாளே, அது மனசில தோணுகிறது. இவ சீதையா? அஞ்சு புருசன் இருக்கிறீங்களே, இப்பிடி மானம் உரிக்கிறானேன்னு துரோபதை கதறினாளே, அந்தக் காட்சியா இது? இவள் வயிற்றில் உதித்ததெல்லாம் துச்சாதனன் வாரிசா?…

அவளை இழுத்து அணைத்துக் கொள்கிறாள்.

அந்தக் காட்சி இவளுக்கும் கண்முன் உயிர்க்கிறது. ஆரஞ்சு வண்ண மேலாடை முகம் சாய்ந்துகிடந்தது. இடுப்புக்குக் கீழ். சிதைந்த கோலம்… கால் செருப்பு ஒன்று தள்ளிக் கிடந்தது. அவள் உன்னிக் கொண்டு பார்த்த காட்சி…

அவளுக்குப் புரிகிறது. வார்த்தைக்கு வார்த்தை அல்ல. தெருவில் நடக்கும் பெண் வேட்டை. அந்தக் காலத்து ராஜா ராணிக் கதைகளில், மோசமான ராஜகுமாரன் வருவான். அவன் குதிரையில் வந்தாலே பெண்கள் எல்லோரும் ஒடி ஒளிவார்கள். எவளேனும் தட்டுப்பட்டுவிட்டால், அவள் அந்தப்புரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு… கசக்கப் படுவாள்.

இங்கே அந்தப்புரம் தேவையில்லை…

“அம்மா. நீங்க மனசில வாங்கிட்டீங்களோ என்னவோ. பெத்தவங்க தேவையில்லேன்னு, தீந்து போயிட்ட காலம் இது. நீங்க ரொம்ப வயிராக்கியமா, உங்க மகன், இன்னைக்குப் பெரிய பதவியில இருக்கிறவர் வந்து ரெண்டு மாசத்துக்கு முன்ன கூடக் கூப்பிட்டதாகவும், நீங்க முகம் குடுத்தே பேசலன்னும் ரங்கசாமி சொன்னான்னாலும், இந்தப் பய்ய, அப்புராணி. அப்படிச் செய்யிறவ இல்ல. ஏதோ பிரியாணி சாப்பாடுன்னுற ஆசயிலதா போயிருக்கா. அவன் தண்ணி கிண்ணி கூடப் போடுறவ இல்ல. போர்டு எழுதுற தொழில்னு ஒண்னு நடத்துற பயல் தண்ணிலேயே மிதப்பவன். இவந்தா வேலை செய்யிறவன். கண்ணால பாத்தவங்க, உங்க பேரன் நாகமணிதா அந்தப் பெண்ணத் துரத்திட்டு வந்து கையப்புடிச்சி இழுத்தான்னு சொல்றாங்க. ஆனா அவன் விர்ருனு ஸிக்னல் எது இருந்தான்னன்னு தப்பிச்சிட்டான். பைக் மட்டுந்தா இருந்திருக்கு. எதுவும் புரியல. குற்றம் பண்ணினவங்க தப்பிச்சிடுறாங்க. இது வெறும் ஈவ் டீசிங் மட்டுமில்ல. கொலைன்னு வழக்குப்பதிவு செஞ்சிட்டாங்க. அந்தப் பொண்ணு, கல்யாணமான பொண்ணாம். புருசன்காரன் துபாய்ல பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறான். இது, அம்மாகூடத் தங்கி, சீட்டுக் கம்பெனி நடத்திட்டுருக்குன்னு சொல்றாங்க. நமக்கு அதெல்லாந் தேவையில்ல. நீங்க போயி உங்க மகனப் பாத்து ஒரு நாயத்தைச் சொல்லணும்.”

மலை உச்சியில் நிற்பது போல இருக்கிறது. சறுக்கிக்கீழே விழும் அபாயம் நாகமணின்னா, மரகதம் பெத்த புள்ள தான். ரஞ்சிதத்துக்கு மூத்தது மகள். ரஞ்சிதத்தை மணக்கு முன்பே, பாட்டுசான்ஸ் என்று வந்து வலையில் மாட்டிக் கொண்டு கர்ப்பமான நிலையில்தான் அவள் மீன் கழுவவும், கறிவாங்கி வரவும் மசாலை அறைக்கவும் வருவது போல் வந்து ஊன்றினாள். அவளே தான் வந்து சேர்ந்ததாகத் தெரிந்தது.

முழுகாமல் இருக்கும் மகளை ஆடிமாசத்துக்கு முன்பே வந்து வளையலடுக்கிக் கூட்டிச் செல்கையில் அவள் மகன் வீட்டில்தான் இருந்தாள். வளையல் அடுக்கும் வைபவத்தை இங்கேயே பெரிதாகக் கொண்டாடினார்கள்.

“அத்தே, நீங்க இந்த வீட்டிலிலே இருங்க…” என்று மருமகள் அவள் கையை பற்றிச் சூசகமாகச் சொல்லிவிட்டுக் காரில் சென்று ஏறிக் கொண்டாள்.

கார் அகன்றதும், உறமுறைகள் எல்லாரும் சென்றதும், விறிச்சிட்டுக் கிடந்த வீட்டில் அவளும் மரகதமும் மட்டுமே இருந்தார்கள்.

அந்தப் பெண் தடாலென்று அவள் காலில் விழுந்தாள். “அத்தே, நீங்கதா இப்ப எனக்குத் தெய்வம். இப்ப, ஒரு தாலிக்கவுரு போட்டதால, பணம் இருக்கிறதால, வளையல், நகை, சீலைன்னு விருந்து கொண்டாடுறீங்க. ஆனா, என் வயித்தில சுமக்கிறது உங்க மகன் மூலமான புள்ள. அப்பவே என்னக் கலியாணம் பண்ணிக்கிங்கன்னு கெஞ்சுனேன். ராயப்பேட்டையில கமலவேணி அம்மா வீட்ல இருக்கையிலேயே அடிக்கடி வருவாரு. ஒருநா, ரூமுக்கு வந்து பாடிக் காட்டுன்னு அழச்சிட்டுப் போனாரு. பாடுனே. கங்கைக்கரைத் தோட்டம்னு பாடின.” “ரொம்ப நல்லாப் பாடுற. பாட்டோட எனக்கு ஒன்னியும் ரொம்பப் புடிச்சிருக்கு”ன்னு சொன்னாரு.

கண்களில் நீர், நடந்ததை உணர்த்தியது.

“பிறகு கட்சிக்கூட்டம் நடக்குற எடத்திலல்லாம், பாட்டுப்பாட அவுரே எழுதின பாட்டப்பாடச் சொல்லிக் கூட்டிப் போனாரு. போஸ்டரெல்லாம் போட்டாங்க. ரெண்டு தபா, மருந்து குடிச்சி கருவக் கலச்சிட்டேன். ‘எப்பங்க நம்ம கலியாணம்’பே. எலக்சன் முடியட்டும். நாம ஜெயிச்சதும் முதல் கலியாணம் நம்முதுதான்னு தலமேலடிச்சி சத்தியம் பண்ணிட்டு, இப்படித் துரோகம் பண்ணிட்டாரு. அத்தே!…”

கொதிக்கும் நெஞ்சோடு, அந்தத் தலையைச் சார்த்திக் கொண்டு ஆறுதல் மொழிந்தாள்.

‘நீங்க விட்டுப் போட்டுப் போயிட்டீங்க. அவுங்க, குளிக்கப்போயிருக்கப்ப, என்னக் கூப்பிட்டுக் கன்னத்தில அடிச்சாரு “ஏண்டி? நீ திட்டம் போட்டுட்டு இங்க வந்திருக்கியா? நன்றிகெட்ட நாயே! குடுக்கிற பணத்த வாங்கிட்டு எங்கினாலும் போயிச் சாவு! நீ இங்க வந்து என்ன பயமுறுத்துறியா? வேசி!”ன்னு வெரட்டினாரு.. அவுங்க குளிச்சிட்டு வந்து “ஏ மரகதம் என்னமோ மாதிரி இருக்க? அழுதியா”ன்னாங்க…”

“இல்லங்க ஒட்டட அடிச்சனா, தூசி விழுந்தி டிச்சி…”ன்னு சொல்லிச் சமாளிச்சேன்.

“இப்ப நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது அவுரு எப்படீன்னாலும் ஒருநா வீட்டுக்கு வருவாரு நீங்க அவுர மரீச்சி, அவரு கையால என் கழுத்தில ஒரு மஞ்சக் கவுறு கட்டச் சொல்லணும். என் வயித்தில இருக்கிற புள்ளக்கு அப்பா இவுருன்னு எல்லாரும் அறியணும். நான் வேசியில்லன்னு நீங்கதான் உலகுக்குச் சொல்லணும்…”

ஒரு வாரம் அவன் வீடு திரும்பவில்லை.

ஒர் அதிகாலைப் பொழுதில் வந்து கதவைத் தட்டினான்.

அவளும் மரகதமும் முன் கூடத்தில்தான் படுத்திருந்தார்கள். அவன் மேவேட்டி விசிற மேலே ஏறிப்போனான். காலையில் பத்தரை மணிக்கு அவன் கிழிறங்கி வந்து, குளியலறையில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டான். “காபி கொண்டா, மரகதம்?” என்று சட்டமாக ஆணையிட்டுவிட்டு முன் கூடத்தில் சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்துக் கொண்டிருக்கையில் காபியுடன் இவள் சென்று நின்றாள்.

“ஏ கெளவி! உனக்கென்ன வேலை இங்க? ஏ இங்க வந்து தாவறுக்கிற? ஒரு தரம் சொன்னாப் புரியாது?”

“புரியிதுரா! புரியிது! நான் நீ இங்க சொன்னாலும் நிக்கப் போறதில்ல. போயிட்டே இருக்கிற. அதுக்கு முன்ன ஒரு காரியம் இருக்கு. அது ஆனதும் இந்த நிமிசமே கிளம்பிடுவ…”

“என்ன நீ? வெவகாரம் பண்ணுற? இதபாரு, ரஞ்சிதத்துக்கும் எனக்கும் எடைல புகுந்து எதுனாலும் பண்ண… பெறகு உன்னப் பெத்தவன்னு கூடப் பாக்கமாட்டே?”

“நீ பாக்கமாட்டன்னு தெரியிண்டா எனக்கு. அந்தப் பொண்ணு நல்லபடியா பெத்துப் பொழக்கணும். என் வாரிசு வெளங்கணும்னுதா இருக்கே நீ போயி காபி குடிச்சிட்டு குளிச்சு முழுவி சித்த சுத்தியோட வா… உனக்கு சாமிபூதம்னு ஒண்ணும் நம்பிக்கை இல்லேன்னாலும், அவுங்களுக்கு இருக்கு. நீ அறிஞ்சோ அறியாமலோ, நம்பிக்கை உள்ளவங்ககூட சம்பந்தம் வச்சிட்டே. அதுனால…’

“அதுனால… ?”

“ஒரு நேர்ச்சடா… நீ குளிச்சி முழுவிட்டு வா, அது கும்பிட்டு முடிஞ்சதும், நானே கெளம்பிப் போயிடுவ…”

அவன் காபியை உதட்டில் வைத்துப் பருகிவிட்டுப் போனான். குளியலறையில் சோப்பு மணம் வந்தது. இவள் பூசையறையில் குத்து விளக்குகளை ஏற்றி வைத்தாள். சாமி படங்களுக்குப் பூச்சாத்தினாள். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தாள். அறையின் கதவு மறைவில் நீராடிப் பூச்சூடி, பொட்டிட்டு மங்கலகோலத்துடன் மரகதம் இருந்தாள். அவள் கையில் மஞ்சட் கிழங்குடன் கூடிய புதிய தாலிக் கயிறு இருந்தது.

“உள்ளே போயி, நல்லபடியா வமுசம் தழைக்கணும்னு வேண்டிக்கிட்டுக் கும்பிடு… முருகன் வள்ளி தேவயான கூட இருக்குற படந்தா…”

“நீ… வுடமாட்டே..?” என்று உள்ளே சென்றதும் அவள் அந்தக் குறுகலான வாயிலில் நின்று கொண்டாள்.

“டேய், அந்தத் தாலிய வாங்கி அவ கழுத்துல கட்டு?” என்றாள் உரத்த குரலில்.

குத்துப்பட்ட உணர்வை விழுங்க முடியவில்லை “யே கெளவி, இதெல்லாம் என்ன நாடகம்!”

“நா நாடகம் ஆடலடா! வீணாப் பொண்பாவம் தேடிக்காத! இவவயித்துப் புள்ளதா மொத வாரிசு! சும்மா பேசாம, தாலிய வாங்கிக் கட்டு?”

தாலியைக் கட்டினான்.

“ரகசியமா நீ குடுத்திட்டா, அது அப்பன் பேர் தெரியாம போகும்டா! ஒத்துக்கோ!…”

பேச வழியில்லை. குங்குமத்தைக் கொடுத்து வைக்கச் சொன்னாள் மரகதம். சரேலென்று அவன் வெளியேறு முன், மரகதம் அவள் காலில் விழுந்து பணிந்தாள். கண்ணிருடன் அவளைக் கட்டிக் கொண்டாள். “ஆயிசுபூர நீங்க செய்த இந்த உதவிக்கு, நான் உங்களுக்குச் செருப்பா உழைக்கணும்..” என்றாள்.

ரஞ்சிதம் செல்வத்தில் வளர்ந்த அப்பாவிப் பெண். கவடு சூது தெரியாது. ஆனால் இவள், அப்படியல்ல – நெளிந்து வளைந்து எகிறித் திமிறி, தன்னிடத்தை உறுதி செய்து கொள்ளும் குணம் படைத்தவள். சில நாட்கள் இரவில் வரமாட்டான். இவனுக்கும் தொண்டர் குழாம், மாலை, பாராட்டு என்று வருபவர் போகிறவர். அதிகமானார்கள். சமையலும் சாப்பாடும் வசதிகளும், பெருகுவதற்கு முன் இவள் கழுத்தில் காதில் மூக்கில், கையில் என்று தேடிக் கொண்டாள்.

“அத்தே, எனக்கு இவுங்க இந்த நெக்லேசு வாங்கி வந்தாங்க! நல்லா இருக்கா, பாருங்க!” என்று காட்டுவாள்.

சில நாட்களில், “அத்தே, ஷீட்டிங் இருக்குதாம். கூப்பிடுறாங்க, நானும் ஊட்டிக்குப் போறேன்”னு தெரிவித்துக் காரிலேறிக் கொள்ளும் அளவுக்கு, இவளுடைய முக்கியத்துவம் மழுங்கிவிட்டது. வாசல் பக்கம் ஒரு கொட்டகை போட்டிருந்தார்கள். சின்னு, பழனி என்று இரண்டு பிள்ளைகள் அங்கே பத்திரிகை அலுவலகம் நடத்தினார்கள். ஒருநாள் இவள் கதவைப் பூட்டிச் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டாள்.

“என்ன தாயம்மா? திடீர்னு வந்திட்ட?”

ராதாம்மா வந்திருந்தாள். “எப்ப வந்தீங்கம்மா ? மருமகப்புள்ள வந்திருக்காங்களா?…” என்று கேட்டு, அம்மாவின் காலோடு ஒட்டி நின்ற குட்டிப் பையனைப் பார்த்து, “ராசா… எப்டீருக்கே? தாயம்மா பாட்டிய நினப்பிருக்கா?” என்று கொஞ்சினாள்.

“ஏம்மா, சாமி இல்லன்னு சொன்ன உங்க புள்ள முருக பக்தனாயிட்டான் போல இருக்கு?” என்றார் வந்த விநாயகசாமி, பழைய காலத்துக் கதர்த் தொண்டர். நிறைய கதை கட்டுரை எழுதுவார். புத்தகங்களை மாடியில் கொண்டு வந்து அடுக்குவதும், படிப்பதும் பேசுவதும் வேலை, காந்தி நூற்றாண்டென்று. அதே வீட்டில் வாசலில் ஒவ்வொரு வெள்ளியும் காந்தி பாசறை என்று நடத்தினார்கள் என்பதெல்லாம் தெரியும். விநாயகசாமி மதுரையில் இருந்து வந்திருந்தார். கல்யாணம் காட்சி இல்லாதவர்.

“என்ன சொல்றீங்க மாமா?… இப்ப வாரியார் சுவாமி பிரசங்கம்னா, கூட்டம் கொள்ளல. அன்னைக்குக் கடவுளை நம்புறவன் முட்டாள்னு சொன்னவரே, இப்ப பேச முடியாம ஆயிட்டார் போல இருக்கு…”

“இல்ல ராதாம்மா… இத, இந்தப் பத்திரிகையப் பாருங்க…” அவர் கொடுத்த பத்திரிகைத்தாளை அவளும் பார்த்தாள்.

“என்ன, குருவியாரே இளவழுதிப்புரவலர், இரு மனைவியருடைய கடவுள் தொண்டராய்விட்டாராமே? உண்மையா ?”

“அன்னையாரின் நெருக்கடிக்கு, காதும் காதும் வைத்தாற் போல் தலை குனிந்து விட்டதாகக் கேள்வி. நமக்கெதற்கையா இந்த உள்துறை சமாசாரமெல்லாம்?”

ராதாம்மா சத்தம் போட்டுப் படிக்கிறாள்.

அவள் அங்கே நிற்கப்பிடிக்காமல் பின் பக்கம் சென்றாள்.

“ஆமாம், மாமா, இந்தப் பத்திரிக்கைக் குப்பை எல்லாம் நீங்க வங்குறீங்களா?”

“ராம் ராம்! எனக்கென்ன வேற வேலை இல்லையா, காசை இப்படிச் செலவழிக்க? நம்ம அய்யா பேர் போட்டு இந்த விலாசத்துக்கு இது அனுப்பப் பட்டிருக்கு?”

அய்யா மாடியில் இருந்ததால் அவள் அன்று அவரைப் பார்க்கவில்லை.

“பத்திரிகைகள் சீரழியிது இன்னிக்கு! நா இங்க பட்டணம் வந்த புதுசில, மெளண்ட் ரோட்லயோ டவுன்லயோ எதோ பெரிய கடையில, அப்பல்லாம், பொம்பிளங்க இப்படிப் போக முடியாது, செல்லலாமோ, எதுவோ, நினப்பில்ல, ஒரு பொம்புள பொம்மை, இடுப்பளவுக்கு வச்சி, ‘பாடிசைஸ்’ அளவெடுக்கறாப்புல… எனக்கு சரியாக் கூட நினப்பில்ல. அங்கெல்லாம் அந்நியத்துணி வாங்காதேன்னு சொல்லத்தான் போவோம். அந்த பொம்மயப் பாக்கவே கூச்சமாயிருந்திச்சி. இப்ப நினச்சிப் பாக்குறேன். இந்தப் பத்திரிகை, சினிமா, சுவரொட்டி எல்லாத்திலும், பொம்புளயத் துகிலுரியிற வேலயாத்தானிருக்கு. ஒரு துரோபதயத் துகிலுரிஞ்சான் துச்சாதனன். பாரத யுத்தம் வந்தது. இப்ப, ஒரு பத்திரிகைய, குடும்பத்திரிகையைப் பார்க்க முடியல. எல்லாம் வக்கிரமாயிருக்கு?” என்று அம்மா அலுத்துக் கொண்டார்.

“அம்மா, இதே நான் அங்க மதுரை வாசகர் வட்டத்துல சொன்னேன். பொம்பிளகதா, இந்த மாதிரி விஷயங்களப் பார்த்து எதிர்க்கணும். அது எங்க? நாலுபேர் சேருமுன்ன? பத்துபேர் பிரிக்க வராங்களே?”

“எனக்குக் கூடத் தோணும். இப்ப நம்ம தமிழ்ப் படங்களப் பாக்கிறேன் – பத்திரிகைகளும் படிக்கிறேன். ஆனா, இதிலென்ன தமிழ் கலாசாரம் புதிசா இருக்குன்னு புரியல. கையில் டிரிங்க்ஸ் வச்சிகிட்டு பேசுறதும், ஆணும் பெண்ணும் பார்ட்னர் சேர்ந்து ‘பால்’ டான்ஸ் ஆடினதும் கலாசார மோசம்னு சொன்னாங்க. ஆனா, வெள்ளைக்காரன் போயி, நம்மை நாமே என்ன கலாசாரத்த மீட்டுக் கிட்டிருக்கிறோம்?… நம் தமிழ்ப்படங்களில், வரும் காதலிகள், நாயகிகள், உடம்பைக் காட்டுறதில்தான் எல்லாம் இருக்கு. அதுவும் ஹீரோயின் கனவில் வரும் ‘காதல் காட்சிகள்…ஆகா’ இதான் கலாசாரம்! பாம்பேல, ஒரு மராத்தி சிநேகிதி நம்ம பத்திரிகை கதைகளில் வரும் படங்களப் பார்த்துட்டு, ‘உங்க மெட்ராசில பொண்ணுக ஸாரியே உடுக்கிறதில்லையா’ன்னு கேட்டா. ‘இல்லியே! எனக்குத் தெரிஞ்சி அப்படியில்ல. படம் ஒரு கவர்ச்சிக்காகப் போடுவ’ன்னு சொன்னேன்…” என்று ராதாம்மாவும் அதே கருத்தைச் சொன்னாள். அவள் அன்று திசை தெரியாப் பிரமையில் நின்றாற்போல் உணர்ந்தாள்.

நம்மை ஆள வந்த பரங்கியன், இந்த சனங்களைப் புழுவாகப் போட்டுமிதிக்கும் வகையில் அதிரடியாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில் படிக்காத கிராம வாசியிடமும், ஏழையிடமும், ஒழுக்க கலாசாரம், அதனால் பற்றிய நேர்மை, பிடிவாதம் எல்லாம் இருந்தன. அந்த ஆதாரத்தில்தான் காந்திஜி, இந்த நாட்டு மக்களுக்கு உகந்தது அஹிம்சை வழின்னு செயல்பட்டார். இதெல்லாம், அடியோடு வேரறுக்க படுது இன்னைக்கு. தூலமா இருக்கிற தீவிரவாதம்கூட ஒத்துக்கலாம். ஒர் அரசியல் கட்சி, சினிமான்னு ஒரு நவீனக் கருவியை மக்களை மயங்கவைக்கும் தந்திரங்களில் கவர்ந்து…

“விநாயக மாமா, நீங்க வரவர எல்லாமே பிரசங்கம் கட்டுரைன்னு ஆரம்பிச்சுடுறீங்க. இதுக்கெல்லாம் யாரும் வரமாட்டா. வேற எதானும் யோசனை பண்ணுங்க…

அவர் தலையைத் தடவிக் கொண்டு போனார்.

அப்போதுதான் அம்மா கேட்டார்.

“தாயம்மா ? அப்ப நீதான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தனியா?”

“எனக்கு வேற வழி தெரியலம்மா? அப்பன் தெரியாத புள்ளன்னு வச்சிட்டு அவ சங்கடப்படுவாளே?”

“‘இருதாரத் தடைச்சட்டம்’ன்னாலும், இவங்க தப்பிச்சிடுவாங்க! ஏன்னா, இவங்கதானே எதையும் ஒப்புக் கொள்ளும் வோட்டு மந்தைய உருவாக்கி இருக்காங்க?”

“அதுவும் சரிதான்” என்றாள் அம்மா.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *