கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2024
பார்வையிட்டோர்: 376 
 
 

அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16

அத்தியாயம்-9

காலை பத்தரை பதினோரு மணி இருக்கும். அவள் வீட்டின் வலப்பக்கம் படர்ந்து கிடந்த அவரைக் கொடிக்குக்குச்சிகள் நட்டு ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள். இன்னும் தை பிறக்கவில்லை. இது ஊன்றிய வித்தில் இருந்து வந்த கொடி அல்ல. ஏற்கனவே பந்தலில் அவரைபூக்கத் தொடங்கி இருந்தது. வாசலை ஒட்டி, கம்பி வேலி கட்டி இருக்கிறார்கள். முன்புறம் நேராக வீதிதான். ஆனால் எதிர்ச்சாரி யில் வீடுகள் இல்லை. ஆடுமாடு உள்ளே நுழையாதபடி கம்பி வேலி இருக்கிறது.

இவள் அங்கிருந்தே பார்க்கையில் கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது தெரிந்தது. ‘மண்ணாங்கட்டி’ ஓடி வந்து கம்பிவேலிக்கு அப்பால் நின்று அவளை அழைத்தான்.

கூழையான கூலிக்காரன். பெரிய சாலையில் உள்ள ரேசன் கடையில் மூட்டை சுமப்பவன். அவனுடைய பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது ‘மண்ணாங்கட்டி’ என்ற பெயரில் அவன் சந்தோசமடைந்தது போலவே சிரிப்பான்.

“யம்மா? உம் மக வந்துகிறாரு! அவள் டக்கென்று நிமிர்ந்தாள் “யாரு, யாரப்பா சொல்றீங்க?”

“ஆமாம்மா, தமிழ் புரவலர், இளவழுதி அய்யா… பிள்ள நிலாப் படம் போடு போடுன்னு போடுதல்ல? இவருதானே பாட்டு கதை வசனம் எல்லாம்?… வந்துகீறாரு…!”

அவளுக்குச் சொல்லத் தெரியாத ஒரு குழப்பம். வீட்டுப் பக்கம் போகலாமா, வேண்டாமா என்று நின்றாள். அவளைப் பொறுத்த மட்டும் புருசனால் வந்த புள்ளை குட்டி உறவுகள் இல்லாமலாகிவிட்டன. ஏனெனில், பஞ்சமி இந்தக் கலவரங்கள் நிகழ்ந்த போது மூன்றாவதாகக் கருப்பமாக இருந்தாள். முதல் இரண்டு தரம் கருவுற்று கலைந்து போனதால், மூன்றாவதாக அவள் கருவுற்ற போது, தாய் வீட்டுக்கே வரவில்லை. பாப்புவுக்குப் பெற்றோர் இல்லை. ஒரு அண்ணன் திருச்சியில் பாலக்கரையில் கடை வைத்திருந்தான். அவன் சம்சாரம் பெரியாசுபத்திரியின் உதவியாளராக இருந்தாள். இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் அவன் சின்னம்மாவும் இருந்தார்கள். அங்கே பிரசவத்துக்குப் போனாள்.

எட்டுமாசத்திலேயே நஞ்சுக்கொடி முதலில் வந்து, அவளும் பிழைக்கவில்லை, பிள்ளையும் பிழைக்கவில்லை. தந்தி வந்து, அவள் பதறப்பதறப் போனாள். பயனில்லை. நல்ல மருமகன். அதற்குப் பிறகு அவன் கல்யாணமும் செய்துகொள்ளவில்லை; இங்கு வரவும் இல்லை. குடி, சூது, கெட்ட வழக்கம் எதுவுமே கிடையாது. ராதாம்மா போன போதுகூட வந்தான். திருப்பராய்த்துறை ஆசிரமத்தில் வேலை செய்திட்டிருக்கேன்மா, அப்பப்ப அண்ணன் குழந்தைகளைப் பார்ப்பேன்… முந்தாநாதா, பேப்பருல செய்தி பார்த்தேன்… பொய்யா இருக்கக் கூடாதான்னு நினச்சேனே”ன்னு அழுதான். அப்போதே உடம்பு வத்தி, எதிலும் பிடிப்பில்லாதவனாக இருந்தான். காவேரி புதைமணலில் சிக்கி இறந்ததாக ஒரு கார்டு வந்தது. அப்போது அம்மா இருந்தார். சந்திரி ‘நர்ஸ்’ படிப்பு முடித்துவிட்டு, கொஞ்ச நாட்கள், ஒரு தனியார் மருத்துவமனையில் முந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ வாய்ப்பு வந்ததென்று அமெரிக்கா சென்றாள். எப்போதேனும் ஒரு கடிதம் வரும். அவள் திகைத்து நிற்கையில்.

அம்மாவே பின்புறமாகக் குரல் கொடுத்தாள். “தாயம்மா…?” அவள் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு சென்றாள்.

“மோகன் வந்திருக்கான், கலியாணம். சினிமாப்படக்காரர் பொண்ணாம். சந்தோச சமாசாரம் வா…!”

“அம்மா, நா அவனைப் பார்க்கவே பிரியப்படல…” மனசுக்குள் சொல்லத் தெரியாமல் வேதனை. ஆத்திரம், பொங்க அவளை அசையவிடாமல் தடுத்தன.

“அட, சீ! இதென்ன அசட்டுப் பிடிவாதம்: ஒரு நல்ல காரியம், பெத்தவங்க பெரியவங்களுக்குப் பத்திரிகை வச்சு, ஆசீர்வாதம் வாங்கணும்னு வந்திருக்கிறான், அய்யாவே சந்தோசப்படுறார் வா!’

அவள் போய் கூடத்தில் நின்றாள். அவன் நேராக அவள் காலில் வந்து விழுந்தான். இது போல், அய்யா, அம்மாவுக்கும் மாலைகள் கொடுத்துக் காலில் விழுந்திருப்பதாகத் தெரிந்தது. இவளுக்கு மாலை இல்லை.

“அம்மா, நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும், நீங்க தா மாப்புள வீட்டுக்காரங்க. இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்…” என்றார்.

சிவப்பாக, முன் வழுக்கை மின்ன, ஒரு நாமக்காரப் பெரியவர், கதர்சட்டை அணிந்து வந்திருந்தார். இவளைக் கண்டதும் கைகுவித்தார்.

“தாயம்மா தானே ? நினைப்பிருக்கா ? இந்தாத்துல பர்மாக்காராளுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்து அவாவாளுக்குச் சொந்த ஊருக்குப் போக உதவி செய்த போது… கிணற்றுத் தண்ணி இழுத்து, குஞ்சு குழந்தைகளுக்குத் துணி மணி வாங்கிக் குடுத்து…

“ஓ… தம்பி விஜயராகவனில்ல?” என்றாள் அவள் வியந்து. மனசுக்குள், அதற்குள் எப்படிக்கிழவனாய்ப் போனாய் என்ற கேள்வி முளைத்தது.

“ஆமா உங்கம்மா கைக்குழந்தையை எடுத்திட்டு செயிலுக்குப் போனாங்க. இப்ப எப்படி இருக்காங்க? நீங்க கல்யாணம் கட்டி நல்லாயிருக்கீங்கல்ல?”

“இருக்கேம்மா. காங்கிரஸ் தியாகத்துக்கு, மக்களுக்குன்னு இருந்த காலம் போயிடிச்சம்மா. வருங்கால சந்ததிக்கு கடனைத்தான் வைக்கப் போறோம்னு பெரியவர் ராஜாஜி சொல்றதுதான் பலிச்சிருக்கு. டம்பாச்சாரி திட்டங்கள். காந்திஜி எதெல்லாம் வாணாம்னு சொன்னாரோ, அதெல்லாம் நாட்டுல வந்திட்டது…” என்றார்.

“அய்யா, நீங்க இப்ப ஒதுங்கக் கூடாது. வரணும், பெரியவர் என்னை அதுக்காகவே இன்னிக்கு அனுப்பிச்சார். நாளைக்கு நரசிம்மன் சார் வருவார், உங்களைக் கூட்டிட்டுப் போக. இப்ப ஒதுங்குவது விவேகம்னு படலன்னு, அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன். சுதந்தரத்துக்கு முந்தி இருந்த காங்கிரசைக் கலைச்சிடணும்னு காந்திஜி சொன்னார். ஆனால் யார் கேட்டாங்க? அப்பாக்குப் பிறகு பொண்ணுன்னு ஆட்சி மாறிருக்கு… நீங்க ஒத்துக்கணும்…”

“என்னப்பா, மோகன்தாசு, நீ கல்யாணத்துக்குத்தானே கூப்பிட வந்திருக்கே, எப்ப கல்யாணம் ?”

பெண்ணின் தந்தையாகத் தெரிந்த ஒருகடுக்கன்காரர், அவளைத் திருப்பிப் பார்த்து “வணக்கம்மா… பொன்னம்பலம், எம்பேரு. உங்க மகன், எழுதிய பிள்ளை நிலாம் படம் நாத்தான் எடுத்தேன். இங்கேயே ஜி.டி. ரோட்ல, வெற்றில ஓடுத. முதல் படமே பேரும் புகழும் சம்பாதிச்சிக் குடுத்திருக்கு. அண்ணா தலைமையில் பாராட்டு விழா வச்சிருக்கிறோம். இப்ப அய்யாகிட்ட ஒரு குடும்ப பாஸ் குடுத்திட்டுப் போறேன். அவசியம் வந்து பாக்கணும்…” அவள் குழம்பிப் போனாள். கல்யாணப் பத்திரிகையா, சினிமா பாஸா, அய்யாவைப் பாக்க வந்தது, தேர்தல் விசயமா?

“அய்யா அவசியம் வந்து பார்க்கணும்… தேர்தல் வருது. அது முடிஞ்சதும் தை பிறந்து கலியாணம்னு நினைச்சிட்டிருக்கிறோம். பெரியம்மா, இதான் பொண்ணு ஃபோட்டோ…”

பெரிய தோல்பையைத் திறந்து பெண்ணின் புகைப்படத்தை எடுத்து அவர் அய்யாவிடம் கொடுத்தார். அய்யா, அம்மாவிடம் கொடுக்க, “பொண்ணு, லட்சணமா இருக்கா. இந்தா, பாரு தாயம்மா…” என்று கொடுத்தாள்.

“இதில நான் சொல்ல என்னம்மா இருக்கு? நீங்க சொன்னா சரி…”

“பொண்ணுக்கு என்ன வயசு?…”

“இந்த மாசி வந்தா பதினெட்டு முடியிது. அதெல்லாம் சிக்கல் இல்ல. ஊரில பொம்புளப்புள்ளங்க ஸ்கூல் எட்டு முடியத்தானிருக்கு. அத முடிச்சிட்டா. நல்லா சமைப்பா, மனுசங்க குணம் அறிஞ்சு நடப்பா. நான் சொல்ல வேணாம் நீங்களே தெரிஞ்சிப்பீங்க…” என்றார் அவளைப் பார்த்து.

அம்மா அதற்குள் சமையலறைக்குள் காபி தயாரிக்கச் சென்றாள். அவள் உடனே அம்மாவை விடுவிக்கச் சமையலறைக்குச் சென்றாள்.

“நீ போய்ப் பேசிக்கொண்டிரு தாயம்மா, உறவுகள் விட்டுப் போகக்கூடாது. அரசியல் வேற, இது வேற. போம்மா…” என்று அம்மா வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை. அவளே காபி தயாரித்துக் கொண்டு சென்றாள்.

பழத்தட்டுகளும் பூவிதழ்களும் ஒரு புதிய துவக்கத்துக்குக் கட்டியம் கூறினாற்போல் இருந்தது.

படத்துக்கான இலவச பாஸை அய்யா அம்மாவிடம் கொடுத்தார்.

“ராதா இருந்தால் போய்ப் பார்க்கலாம். அவளுக்குத் தான் மோகன் எழுதியதுன்னா, கொண்டாட்டமாகப் போகலாம்பா…’ என்றார் அம்மா.

‘ஏன், நீயும் தாயம்மாவும் போய்ப் பார்த்துவிட்டு வாங்களேன்?”

“அய்யா, எனக்கொண்ணும் அதைப்பார்க்க வேண்டாம்!” என்றாள் அவள் நெஞ்சடைக்க, சினிமாவுக்கு அய்யா சென்ற நினைவே இல்லை. அம்மாவும் ராதா அம்மாவும் சென்றிருக்கிறார்கள். பத்மினி சிவாஜி நடித்த இராமாயணம் போனார்கள். அவளுக்குத் துவக்க முதலே சினிமாவில் ஈடுபாடு இல்லை. காங்கிரஸ் பொருட்காட்சி நடக்கும். அங்கே சென்றிருக்கிறார்கள். பஞ்சமியும் சந்திரியும் ராதாம்மாவும், மருதமுத்து, எல்லோருடனும் போயிருக்கிறார்கள். அங்கே காதிக்கடையில பராங்குசமும் சுப்பய்யாவும் மாறிமாறி வந்தவர்களிடம் உள்நாட்டுக் கைத்தொழில் பிரசாரம் செய்வார்கள். அய்யா மிகத் தீவிரமாக ஈடுபட்ட காலம். அங்கே நாடகம் நடக்கும். நவாப் இராஜ மாணிக்கத்தினை… ராமதாஸ் நாடகம் பார்த்திருக்கிறாள். எல்லாரும் சிறுபிள்ளைகள். நாடகம் முடிய ஒன்பது மணி ஆகும். கூட்டத்தோடு நடந்தே குருகுலம் வந்துவிடுவார்கள்… அங்கே அவர்கள் இருந்தபோது தான் அவ்வையார் படம் வந்தது. சுந்தராம்பாள் அம்மாள் குருகுல வித்யாலயா நிகழ்ச்சியில் வந்து பாடியிருக்கிறார்கள். வெள்ளைச் சேலைஉடுத்து, வெள்ளை ரவிக்கை போட்டுக் கொண்டு வந்து எல்லோரிடமும் பேசினார்…

அந்த சினிமா பற்றி அப்போது, அவளுக்குத் தவறுதலான கருத்தே விழவில்லை.

தன் மகனைச் சுற்றியே அவள் செவியில் விழுந்த செய்திகள், அங்கு ஒழுக்கம் என்ற வரை முறைகளுக்கு இடமில்லை என்ற கறை அவள் உணர்வில் வெறுப்பூட்டிவிட்டது.

“இந்தாங்க, போஸ்ட் வந்திருக்கு….”

ரங்கன் ஒரு கார்டைக் கொண்டு வந்து பெஞ்சியில் போடுகிறான். ஈரச் சேலையை உலர்த்திக் கொண்டிருப்பவள் திரும்பிப் பார்க்கிறாள். வானம் மூட்டமாக இருக்கிறது.

“எனக்கா, போஸ்டு? எனக்காரு எழுதப் போறாங்க?”

ரங்கன் வெறும் சவடால்தான். படிக்க எழுதப் பவிசில்லை என்பது அவள் அனுமானம். அவளுக்கு சம்பு அம்மா எழுதப் படிக்கக் கற்பித்திருக்கிறாள். இந்தியும் ஆங்கிலமும் கூட, குருகுலக் கூடத்தில் அந்தக் காலத்தில் பிள்ளைகள் பயிலும்போது உடன் இருந்து நனைந்திருக்கிறாள். பேச எழுத வராது. எழுத்துப் புரியும். கறுப்பு மை தடவி, வந்திருக்கும் துக்கக் கடிதம்…

“சென்ற 28ந்தேதி வியாழக்கிழமை, இரவு பத்து மணிக்கு, எங்கள் தந்தையும், சின்னம்புலியூர் மிராசுதாரருமாகிய தெய்வ நாயகனாரின் புதல்வர் தியாகி, தண்டபாணி, அமர பதவியடைந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, ராஜேசுவரி அம்மாள் மனைவி…”

மூன்று மகள்கள் – மருமகன்களின் பெயர்கள், மகன்களின் பெயர்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். இரண்டு மாசம் முன்பு அங்கே வந்த இளைய பெண் மணிமேகலையின் புருசன் பெயரும், நந்தகுமார் என்று பதிவாகி இருக்கிறது. குடும்பப் பெருமை. கடமைகளைக் காற்றில் பறக்க விட்டவர்களை விலக்க முடியாத, ஊர், சமூகக் கட்டுப்பாடுகள், கவுரவங்கள்.

“இந்த ஆளை ஒவ்வொரு நாள் ராத்திரி கழுத்தைப் பிடித்து நெறித்து விட்டு, போலீசில் போயி சரணடைஞ்சிடலாம்னு வருது சின்னக்கா! இந்தப் பொண்ணு, ஆதரவில்லாம வந்திடிச்சே, இதுக்காக நான் உசிரோடிருக்கிறேன்.” என்றழுத குரல் நெஞ்சில் உயிர்க்கிறது. ஒரு வழியாக செத்துத் தொலைந்தான்…

ஒருவேளை, துபாயோ எங்கேயோ போயிருந்த மருமகன் வந்திருப்பானோ?

யார் கண்டார்கள்? ஒருவீடு… பெரிய வீடு… அதற்குப் பங்கு கேட்டு வெட்டுக்குத்துக்குக் கூடத் தயாராவார்கள்!

சட்டென்று, ஒரு நடை ஊருக்குப் போய்ப் பார்த்து விட்டு வரலாமா என்று ஆவல் எழும்புகிறது. இங்கே இவள் எதற்காக, எதைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்?…

அவள் இந்த எல்லையை விட்டுப் போய் வெகுகாலம் ஆய்விட்டது. அம்மா இறந்தபின் அவள் எந்த இடத்துக்கும் நகரவில்லை. அய்யாவும் கூட, சொந்த பந்தம் என்று சென்று பழகிய தொடர்புகள் என்று மதுரை, சின்ன மங்கலம் போய் வந்திருக்கிறார். பொதுக் கூட்டங்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை. நட்பும் உறவும், தோழமையும் விட்டுவிடாமல் தாமரையிலைத் தண்ணிர்போல ஒட்டியும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தார். நிக்கொலஸ், சாயபு, பத்மாவதி அம்மா, எல்லாரும் வருவார்கள். பழைய கனவுகளை அந்தக்கால சந்தோசத்துடன் பேசுவார்கள். காந்தி சிந்தனை நடக்கும்.

நிறையப் புத்தகங்கள் வாங்குவார்; படிப்பார். ஆனால் அவரை அரசியலில் ஈடுபடப் பெரியவர்கள் வற்புறுத்தியும் ஈடுபடவில்லை. அவள் மகன் கல்யாணம் எத்தனை ஆரவாரத்துடன் நடந்தது?

அவன் சார்ந்திருந்த அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டதே? ராதாம்மா விக்ரமுடன் கல்யாணத்துக்கு வந்தாள்.

ராதாம்மா ஒரு கைத்தறிச் சேலை அணிந்து, தாலிக்கொடியும் இரண்டு வளையல்களும் அணிந்து எப்போதும் போல் வந்தாள். அம்மா கதர்ச்சேலை; அவளும் வெள்ளைச் சேலை.

மணமகளின் தந்தைக்குத் தெய்வநம்பிக்கை அதிகமாம். முதல் நாளே குல தெய்வக்கோயிலில் குடும்பத்துடன் சென்று, சடங்கு செய்து திருமணம் முடித்துவிட்டார்களாம். மாலை வரவேற்பு, மிகப் பெரிய திருமணமண்டபத்தில் நடந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், வண்ண விளக்கு ஜோடனைகள், என்று மிக ஆடம்பரமாக இருந்தது. அய்யா, தாமே பெரியவர் இராஜாஜியைப் போய்ப் பார்த்தாலும், புதிய கட்சியை ஏற்றுக் கொண்டு அரசியலில் நுழையவில்லை. விலகியது விலகியதுதான். இவர்களைத் துரக்கி சிம்மாசனத்தில் வைத்த பெரியவரின் கட்சி இருந்த இடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்கள்.

இவர்கள் கல்யாண வரவேற்புக்குச் சென்ற போது, அந்த அரசியல் கட்சித் தலைவராகிய முதல்வரே, அய்யாவை கைபிடித்து வரவேற்றார். போட்டோ பிடித்தார்கள். அம்மா இரண்டு வெண்கலக் குத்து விளக்குகளைப் பரிசாக அளித்தார். பெண்ணைப் பெற்றவள் நல்ல மாதிரியாக இவளிடம் வந்து பேசினாள்.

“அம்மா, எங்க பொண்ணு, கிராமத்துல வளந்தது. நாங்க ரொம்ப ஆசாரம். இங்கே எழும்பூரில் ஒரு வீடு வாங்கியிருக்கு. அதுலதான் ரெண்டு பேரையும் தனிக்குடும்பம் வைக்கிறதா யோசனை. நீங்க வந்து கூட இருந்து, அவளுக்கு நல்லது பொல்லாதது எதுவும் சொல்லிக் குடுக்கணும்…”

ராதாம்மாதான் சூழலைக் கலகலப்பாக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். “சம்பந்திம்மா, இவங்க நல்லது சொல்லிக் குடுப்பாங்க. பொல்லாதது நிச்சயமாச் சொல்லிக் குடுக்க மாட்டாங்க…” என்று சிரித்தாள்.

“ஒரு பேச்சு வழக்குத்தாம்மா சொன்னேன். இது நல்லது, இது சரியில்லன்னு பிரிச்சறியத் தெரியாத பொண்ணும்மா. பொம்புள ஸ்கூல்லதா படிச்சா. இவுரு சினிமா லைன்ல எறங்கினதே தாத்தாக்கு சம்மதமில்ல. விவசாயந்தா பரம்பர பரம்பரையா. கட்சில சேர்ந்ததும், புதுசா இப்படி அகலக்கால் வச்சிருக்காங்க. முதமுதல்ல எடுத்த படம், நூறு நாள் தாண்டிடிச்சின்னதும், தொடர்ந்து இவங்க எலக்சன்ல செயிச்சதும், நல்ல படியா வந்திருக்கு. அந்தக் காலத்துல, எங்க மாமா, நாகபட்டனத்துல நாடகக்காரங்களக் கூப்டு வச்சிட்டு நாடகம் நடத்தி ஏகமாத் தோத்தாரு நாடகக்காரங்க, சினிமாக்காரங்கன்னாலே குடும்பத்துக்கு ஒதவாதுன்னு நினச்சிட்டிருந்த குடும்பம். ஏதோ பெரியவங்கல்லாம் பாத்து நடத்திருக்காங்க. எங்காலத்துல, ஒரு ‘உள் பாடி’ போடுறதுக்கு எங்க மாமியா, அப்படிப் பேசுவாங்க!… காலம் மாறிப்போச்சி…”

“நீங்க ஒண்னும் கவலப்படாதீங்க சம்பந்தி அம்மா, தாயம்மா போய் இருந்து, நல்லாக் கவனிச்சிப்பா…”

அவளுக்குத் துணுக்கென்றிருந்தது.

புதிய உறவு, புதிய தொடர்புகளா? இது சாத்தியப்படுமா? அவள் போய் அந்த வீட்டில்… எப்படி?

கல்யாணம் முடிந்ததும் அவர்கள் வீடு திரும்பி விட்டார்கள். புது வீடு வாங்கி, சம்பிரதாயமாகக் குடும்பம் வைக்க அவள் மகனும், அவள் சம்பந்திகளும் அழைத்துச் செல்ல வந்தார்கள்.

“தாயம்மா, மாட்டேன்னு சொல்லாம போ! நீரடிச்சு நீர் விலகாது. அரசியல் வேற, மனித உறவு வேற. அரசியல்ல அப்பப்ப மாற்றம் வரலாம். வேற வேற வாழ்க்கை முறை வரலாம். மனித உறவுகள், மனித நேயம், அது மாறாமல் இருக்கணும்.”

தன்னுடைய இரண்டு வெள்ளைச்சீலைகளைப் பையில் வைத்துக் கொண்டு அவள் முதன் முதலாக அந்த நிழலை விட்டிறங்கினாள்; மகனுடன் சென்றாள்.

அத்தியாயம்-10

“ஏம்மா! யாரு இறந்து போயிட்டாங்க?… துக்கக் கடிதாசி போல இருக்கு ?”

ரங்கன் பின்புறத்தில் இருந்து ஏணியைத் துக்கிக் கொண்டு வருகிறான்.

“ஊருல, அன்னைக்கு மகளைக் கூட்டிட்டு வந்தாளே. அதொரு ரெண்டு மாசம் இருக்கும். அவபுருசன் செத்திட்டான்.

“அந்தக் காலத்துல, எப்படி இருந்தாங்க ? காசில போயிப் படிச்சான். துப்பாக்கிக் குண்டு போட்டு பணக்கார மிராசுகளை ஒழிக்கணும்னு ஒரு மிராசைச் சுட்டுட்டு, மூட்டையோடு நெல்லையும் அரிசியையும் குடிபடை களுக்குக் குடுப்பேன்னு புதுமுறை கொண்டாந்தான். போலீசு புடிச்சிட்டுப் போயி மரண தண்டனை, ஆயுள் தண்டனைன்னு குறைச்சி, அதையும் மனநிலை சரியில் லன்னு பைத்தியக்கார ஆசுபத்திரிக்குப் பெத்தவங்க சொல்லி மாத்தினாங்க. அவன் அப்படிவே தியாகின்னு செத்திருக்கலாம். அம்பது வருசம், அஞ்சு புள்ளங்களையும் குடுத்து, அவளையும் வதைச்சிட்டு ஒழிஞ்சான். இன்னும் சோறு வடிக்கல… தலையை முழுகறேன். ஒட்டு ஒறவு இல்ல. அவ பாவம் தொலஞ்சிதே!”

கிணற்றடியில் சென்று தண்ணிரைச் சேந்தி அப்படியே தலையோடு ஊற்றிக் கொள்கிறாள். வெயில் நேரத்துக்கு ஊற்ற ஊற்ற இதமாக இருக்கிறது. சேலையைப் பிழிந்து கொண்டு உள்ளே மாற்றுச் சேலை எடுக்க வருகிறாள். கூடை நிறைய நாரத்தங்காய், மணத்தை வீசி என்னைப் பார், பார் என்று அழைக்கிறது.

இதற்கு யார் வித்துப் போட்டார்கள்? யார் நிரூற்றிப் பராமரித்தார்கள்? யார் பலனெடுக்கிறார்கள் ? வேலிக்கு மறுபுறம் மாவில் எரி பூச்சிகள் விழுந்து, பயன் குத்துப்பட்டு, மரம் சோகம் காக்கிறது.

இந்தக் காயில் என்ன பளபளப்பு? சில காய்களில் பொன்னின் மின்னலாய், பருவமடைந்த கன்னியின் பூரிப்பாய் மெருகிட்ட நேர்த்தி. இந்தக் கொல்லையில் இப்படி ஒரு நாரத்தை விளைந்ததாக அவருக்கு நினைவில்லை. முன்பு எப்போதோ எலுமிச்சை காய்த்ததென்று குருகுலம் வீட்டுக்கு வந்ததுண்டு. பெரிய பெரிய சாடிகளில் ஊறுகாய் போடுவார்கள். பிறகு இரண்டொரு இடங்களில் பெரிய பெரிய முட்களுடன் எலுமிச்சையோ, நாரத்தையோ என்று தெரியாமல் செடிகள் முளைத்துப் பெரிதாக வந்து காய்ந்து போயிருக்கின்றன. “இந்தக் கொல்லையில் மாமா காலத்தில் வந்து பட்டுப்போன எலுமிச்சைக்குப் பிறகு அந்த சாதி மரமே வரதில்ல…” என்று அம்மா சொல்லிவிட்டு, நர்சரியில் இருந்து ஒரு சாத்துக்குடிக் கன்று வாங்கி வந்து நட்டார். நட்ட மூன்றாம் வருசமே அது காய்த்தது. உயரவே இல்லை. பரந்து, பின்புறமும் முட்களை நீட்டிக் கொண்டு ஒரு பெரிய இராட்சசி போல் அமர்ந்திருந்தது. வெண்மையாகப் பூக்கள். அது காய்த்தது என்றால், பருவம் கிருவம் என்பதெல்லாம் இல்லாமல் காய்த்துக் குலுங்கிற்று. பறிப்பதுதான் கஷ்டம். அப்போதெல்லாம் இந்த மண்ணாங்கட்டிதான் கூழை உடம்பை வைத்துக் கொண்டு, குச்சியால் கிளைகளை நீக்கிப் பழங்களைப் பறிப்பான்.

யார் வீட்டுக்கு வந்தாலும் சாத்துக்குடி ஜூஸ்தான். “நெல்ல ருசிம்மா!” என்று, பழத்தை உரித்துச் சுவைக்கும் மண்ணாங்கட்டி சந்தோசத்தின் மொத்த உருவமாகத் தெரிவான்.

ராதாம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். விக்ரம் பையனாக அங்கு வந்த போது, குழந்தையின் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சுவான்.

“மாமா, உங்களுக்கு ஏன் மண்ணாங்கட்டின்னு பேரு?” இதைக் கேட்டவுடன் அவன் சந்தோசம் நிரம்பி வழியச்சிரித்தான்.

“கண்ணு, எங்காயிக்கு முதப் பொறந்த நாலு புள்ள செத்துப் போச்சி. நா… அஞ்சாவது. முதப்பொட்டபுள்ள, குலதெய்வத்து பேரு வச்சாங்க, அங்காயின்னு. சத்துப் போச்சி. ரண்டாவது ஆம்புளப்புள்ள, முனியசாமின்னு பேரு வைக்கணும்னிருந்தாங்க. மூனே நாளுல பூடுத்து. மூணாவது, நாலாவது ரண்டும் பொறந்தவுடனே பூடிச்சாம். அப்ப, எங்காயி நினைச்சிசாம். இது மண்ணாங்கட்டியாக் கெடக்கட்டும்னு நினச்சாங்க. பேரே வய்க்கல. நா… மண்ணாங்கட்டியாவே உருண்டிட்டிருக்கிற…”

அந்த சிரிப்பு, வாழ்க்கையில் தூக்குமரத்துக்குப் போய் விட்டு மீண்டும் வாழ வந்த ராமுண்ணியின் சிரிப்பை நினைவூட்டும். ஒவ்வொரு கணமும் வாழ்வை நேசிப்பவர்கள். வாழ்க்கையில் இழப்புகள், நோவுகள், சித்திரவதைகள், கொடுமைகள், குரூரங்கள், அபாயங்கள் எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, எப்போதும் சிரிக்கும், நிறைவைக் காட்டும், வாழவைக்கும் மண்ணுக்கு நன்றி சொல்லும் உழைப்பாள மனிதர்கள்.

அந்தச் சாத்துக்குடி, ராதாம்மா பம்பாயில் நோவாக இருக்கையில் பூவும் பிஞ்சுமாகக் காய்ந்து, பட்டுப் போயிற்று. அது இன்னதென்று விவரிக்க முடியாத பூமியின் சோகமாகத் தோன்றியது. எலுமிச்சங்காய் அளவு பிஞ்சுகளே ஒராயிரம் இருக்கும்போல தோன்றியது. மண்ணாங்கட்டிதான் பறித்துக் கொண்டு மரத்தை வெட்டிச் சுத்தப்படுத்தினான். அப்போது தான் கோவாலு வந்ததும், மலக்குழி சுத்தம் செய்ததும் நடந்தது.

“யம்மா இந்த சாதி – ஐயிருமாருதி ஒசந்த சாதி. சிப்டிக் டாங்கிதா தீட்டாப்பூடிச்சி…” என்றான்.

இப்போது அவன்தான் உள்ளே வருகிறான்.

“வணக்கம் பெரீ…ம்மா…”

“என்னாப்பா, எப்படிருக்கிறீங்க, உங்களப்பாக்குற தேயில்ல?”

“நெல்லாகிறேம்மா. பொண்ணு நர்சு படிச்சிட்டி வீனஸ் ஆஸ்பத்திரில இருக்குது. பைய, இன்ஜினீர் படிக்கிறான். நமக்கு எப்பவும் போலதா வேல. கிழக்கால, ஜோதிகாபுரம் ஃபிளாட் கட்டுறாங்க இல்ல? அங்கதா வாட்சமேனா க்றேன். நைட்டு, பகல்ல இப்படீ எதானும் வேல செய்யறதுதா. காரியகாரரு சொன்னாரு காயெல்லாம் பறிச்சிக்குதே. முன்ன இங்க ஆரஞ்சி இருந்திச்சே? அது காயி… ஆனா இதும் நெல்லாருக்கும் கொழுஞ்சி. அந்த மிலிடரிக்கார ஐயா இருந்தாரே, அப்ப எப்டீருந்திச்சி, ஆடும் தோட்டமுமா… எனக்கு சொம்மா வாடகக்கி வுட்டிருந்தாகூட நெல்லா வச்சிருப்பேன்…”

“ஏன், நீங்க, உங்க தலவரையா மூலமாக் கேக்க வேண்டியதுதானே?”

“அதெப்படி? இவங்க வேற கச்சி. நாம போயி எப்டீப்பேச.? எம் பொஞ்சாதி சொல்லிச்சி, அதெல்லாம் போயி கேக்காத, இங்கியே நமுக்கு சவுரியம்னிடிச்சி. இன்னா? ஒதுங்க எடமில்ல. பொம்பிளங்க, வயசுப் பொண்ணுங்க, ஒரு தீட்டுத் தொவக்கம்னா, கட வீதிக்குப் பின்னால ரயில்வே லயன்பக்கம்தான் போவணும்னு இருந்திச்சி. இப்ப பொது கழிப்பற கட்டிட்டாங்க…”

“பொண்ணுக்குக் கலியாணம் கட்டிட்டீங்களா?”

“இல்லிங்க, பெரீம்மா… உங்கையில சொல்லுறதுக்கென்ன. அதுக்கு நர்சு படிக்க எடம் வாங்க எத்தினி கஸ்டப் பட்டந் தெரிமா..? அப்ளிகேசன் போட்டு, தாசில்தார் சர்ட்டி வேட்டு அது இதுண்ணு அல்லாம் வாங்கிக்கினு போனா, அங்க, ரூவா அம்பதாயிரம் வச்சாதா எடம்னா, ஒரு கஸ்மாலம். தலவர், புரவலரையா கீறாருங்க, அமைச்சரா, இந்த வட்டம்மிச்சூடும் கச்சில நாந்தாகிறே… உனுக்குக்கூட தெரிஞ்சிருக்கும். மின்ன, இங்க தியாகி அய்யா ஒடம்பு முடியாம படுத்துகிறாரு எதுக்க மீட்டிங் போட்டிருந்திச்சி. எம்.ஜி.ஆர். ஆச்சி வந்த பெறகு இது எதர்க்கச்சி. ஆனாலும் தலவர் புரவலரையா, அந்த ஆச்சில அமைச்சரு… பெரீம்மா, நீங்க வந்து சொன்னிங்க, “இந்தாப்பா, அய்யா, தூக்கமில்லாம அவுதிப்படுறாரு மைக்க நிறுத்திடுவீங்களான்னு. பத்து மணிக்கு மின்னயே கூட்டம் முடிச்சிட்டம்…”

“ஆமாமாம். நினப்பிருக்கப்பா. உங்கள மண்ணாங்கட்டின்னு கூப்புட மாட்டாங்க, ஒரு பேரு வச்சாங்க…”

“ஆமாம்மா, கொழந்தவேலுன்னு வச்சாங்க. அத சொல்லியே கூப்டுவாங்க… ஆனா இப்ப நீங்க ஆரும்கூட அப்படிக் கூப்புடறதில்ல. எங்காயி வச்ச மண்ணாங்கட்டிதா நெலச்சிருக்கு” என்று சிரிக்கிறான்.

“சரிங்க கொழந்தவேலு, பொண்ணுக்கு நர்சு படிக்க அம்பதாயிரம் குடுத்தா எடம் வாங்கினிங்க?”

“வுடுவனா? நேர, புரவலர் அய்யா வூட்டுக்குப் போன… போல்சு, துப்பாக்கி, காவலு எல்லாம் மறிச்சாங்க. ‘போயி சொல்லுங்க. நா. ஆதிநா கச்சிக்காரன். அவங்கம்மா இருக்கற ஊருக்காரன். மண்ணாங்கட்டி பாக்கணும்னு வந்துகிறான்னு சொல்லுங்கன்னே. ஒடனே ஆளுவந்திச்சி… உள்ளாற கூப்புடறாருன்னு. “இன்னாயா, எப்டிகிற”ன்னாரு நா சொன்ன. த பாருங்கய்யா, நா தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட சாதி, அங்கபோனா, எம் பொண்ணுக்கு நர்ஸ் படிக்க அப்ளிகேசன் போட்டு, லெட்டர் வந்துகிது. எடுத்திட்டுப் போனா, அம்பதாயிரம் கட்டணும்ங்கிறாங்க. இன்னா நாயம்?ன்ன. அவுரு கையக்காட்டி அமுத்தினாரு ஒடன போன் போட்டு ஆரிட்டயோ பேசினாரு ஒரு லட்டர் டைப் செய்து குடுக்க சொன்னாரு கொண்டாந்து குடுத்தே. சீட்டுக் கெடச்சி, படிச்சி முடிச்சி, இப்ப வீனஸ் ஆசுபத்திரிலதா நர்சாகிது. வாரம் ஒருநா தா ஆஃபு. அப்ப வூட்ட இருக்கும்.”

“பெரிய பெரிய மணிசருங்க, மினிஸ்டருங்க வந்து வைத்தியம் பாத்துக்கிற ஆஸ்பத்திரியாச்சே அதுவா?”

“ஆமாம்மா. புரவலர் அய்யா கூட செக்கப்புக்குப் போவாராம். அவங்க சம்சாரத்துக்குக்கூட மூணு மாசம் மின்ன ஆபரேசன்னு சொல்லிச்சி…”

“அப்ப உங்க பொண்ணு, பத்தாயிரத்துக்கு மேல சம்பாரிக்கும்…” மண்ணாங்கட்டியின் முகத்தில் அந்த சந்தோசத்தின் பூரிப்பில் நிழல் படிகிறது. அவள் துணுக்குற்றுப் பார்க்கிறாள்.

“கவுர்மென்டு ஆசுபத்திரியன்னா சம்பளம் அதிகம் கெடைக்குமா? பிறகு லீவு அது இதுண்ணு குடுக்குமா. இங்கே நாலாயிரந்தா குடுக்கிறாங்க…”

“ஏம்பா, சீட்டு வாங்கினாப்பல, ஆதிதிராவிடர்னு, வேலையும் வாங்க வேண்டியதுதான ?”

“ஆமாம் பெரிம்மா. அது முன்னமே அப்ளிகேசன் போட்டிச்சி. இப்பதா, போன மாசம் வேலைக்கு வந்திச்சி. லட்டர எடுத்திட்டு ஆசுபத்திரிக்குப் போன அமைச்சருட்ல கூட உள்ளாற பூந்துற முடிஞ்சிச்சி. இங்கே போக முடியல. ஒரே காரா வருது. யார் யாரோ கதவத் தொறந்து உடுறாங்க. போறாங்க. நா கெஞ்சுன. ப்யா, தமிழ் செல்வின்னு, நர்சாகீது. எம் பொண்ணு. முக்கியமான லட்டர் குடுக்கணும் பேசணும்னு கெஞ்சுன. பத்துமணிக்கு காலேல போன. வாசல்லியே நின்னுக்கிட்டிருந்தே. அது பன்னண்டுமணிக்கு வராந்தால அந்தக் கடுதாசியையும் எடுத்திட்டு வந்திச்சி. மூஞ்சி, காலு கையெல்லாம் தொப்பி போட்டுட்டு…” என்று சொல்லும் போதே பெருமை பொங்க சிரிப்பு வழிகிறது. “நீ ஏம்பா இங்கெல்லாம் வந்தீங்க? பெரிய ஆபீசருங்க, தலைவர் கள்ளாம் வர எடம், இங்க வந்து ஏன் பேரைக் கெடுக்கிறீங்க? நாவூட்டுக்கு வருவேன்ல! அப்ப பாக்குறது. இப்ப வூட்டுக்குப் போங்க”ன்னு சொல்லிடிச்சி…”

அவன் சிரித்தாலும் அவனுடைய துக்கம் கண்களில் உருகி வழிகிறது. துடைத்துக் கொள்கிறான்.

“ ‘கவுர்மென்ட் வேலை எல்லாம் வாணாம்பா. இங்க சென்டிரல் மினிஸ்டர் எம்.பி. பெரிய பெரிய ஆளுக, நடிகருங்க எல்லாம் வராங்க. கவுர்மெண்ட் ஆசுபத்திரில ஒண்ணுமில்லாத ஏழைங்க வந்து உருண்டிட்டுக் கெடக்கும். சுத்தம் சுகாதாரம் ஒண்ணிருக்காது… அங்க பத்தாயிரம் குடுத்தாலும், பாஞ்சாயிரம் குடுத்தாலும் இதுக்கு சரியாவாது’ன்னிடிச்சி…”

அத்தியாயம்-11

“ஏம்பா, இங்கென்ன கதையளந்திட்டு நிக்கிற ? இந்தக்காயெல்லாம் சாக்குல போட்டு, ஏசண்டு ஆட்ல கொண்டு குடுத்திடு.” ரங்கன் வந்து சொல்றான். எந்த ஏசன்டு, யாரு ஏசென்டு என்று கேட்க முடியவில்லை. எதோ ஒரு நாகரிகம் நாவை அழுத்துகிறது. சிலும்புகள் கையைக் குத்துகின்றன. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. சொர்ணம் வந்து கேட்டா என்று சொல்லலாமா?

அவன் சாக்கைக் கொண்டு போன பிறகு, நான்கு காய்களைச் சமையலறை மேடை மீது வைத்திருப்பதைப் பார்க்கிறாள். பின்னால் இலைக் குப்பைகளை வேலியோரம் தள்ளி விட்டு, துரட்டுக் கோலுடன் ரங்கன் செல்வதைப் பார்க்கிறாள்.

“ஏம்பா, நாலு காய் எதுக்கு வச்சிருக்கே?…”

“உனுக்குத்தா. உப்புப் போட்டு கஞ்சிக்குக் கடிச்சிக்கலாமில்ல?” அவனுடைய பேச்சின் தோரணை மெல்லிய உணர்வுகளில் முட்களாய் குத்துகிறது. வாங்க போங்க மரியாதை எல்லாம் சுத்தமாகப் போய்விட்டன. அந்தக் காயை இனி எடுத்து நறுக்கக்கூட மனம் ஒப்பாது, அற்பப் பொருள் இல்லை இது. அருமையான பொருள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் காசு…

வாயில் கீழ்த்திண்ணையில் நின்று ஈரமுடியை அவிழ்த்து விடுகிறாள். எங்கோ அருகில் ‘போர்’ பூமிதுளைக்கும் ஒசை நாராசமாகச் செவியில் விழுகிறது. கம்பிக்கதவைத் திறந்து கொண்டு தெருவில் நின்று பார்க்கிறாள். எதிர்ப்புறம் ‘பிளாட்’ போட்டிருக்கும் இடத்தில்தான் கிணறு தோண்டுகிறார்கள் போலிருக்கிறது. ஏரி இருந்த இடம்தான். குப்பைகளைக் கொட்டி மூடினார்கள். முள் காடாய் இருந்தது. சுற்றி ஒரு வேலி போட்டுச் சுத்தப் படுத்தினார்கள். ஆஸ்டல் கட்டுவதாகச் சொன்னார்கள். தகரக் கொட்டகை மாதிரி நீண்ட செட்கள் தான் தெரிந்தன. இடிதடியன்கள் போல் இரண்டு மூன்று காப்பிரிப் பையன்கள் தாம் பன மரங்களுடே புகுந்து அந்த செட்டுக்குள் போவார்கள். “பரங்கிமலைப் பக்கம் பெரிய காலேஜிருக்காமே, இன்ஜினிர் காலேஜி, அதில படிக்கிறாங்களாம். ஆனா, அவனுவ படிக்கிறதாத் தெரியல. கஞ்சா விக்கிறானுவ” என்று ரங்கன் சொன்னான். இது போன்ற செய்திகளை அவள் செவிகளில் போடத் தவறமாட்டான்.

இப்போது பறங்கிமலையில் அந்தக் காலேஜே இல்லையாம். சங்கரியின் அண்ணன் மகனை அங்கே சேர்க்கத்தான் வந்து இங்கே குடும்பம் போட்டாள். அப்போதே அது வேறங்கோ போய்விட்டது. அந்தக் காப்பிரிகளும் இல்லை. இப்போது அந்த இடம் கைமாறி, கிணறு தோன்டுகிறார்கள்.

இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி போகிறது. பின்னே ஓர் ஆட்டோ. இரண்டு சக்கர பைக் என்று தெருவில் இந்தப் பகல் நேரத்திலும் சந்தடி எவர் சில்வர் பாத்திரக்காரர், வழுக்கை மண்டை பளபளக்க, சைகிளைத் தள்ளிச் செல்கிறார். பின்னால், ஜயந்தி டீச்சர். பை, குடை எதையும் காணவில்லை. முகம் செவசெவ என்று இருக்கிறது. இவள் ஜுபிலி ஸ்கூலில் வேலை செய்கிறாள். இந்தத் தெரு மூலையில்தான் பழைய ஒட்டுவீட்டை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்… இங்கே தான் வருகிறாள்.

“ஆச்சிம்மா, கெஞ்சம் உள்ள வரீங்களா?”

“வாங்க என்ன விசேசம்’ அவள் வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்லும்போதே ஜயந்தியும் வருகிறாள். “என்னம்மா? இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?”

“இருக்கு. லீவு போட்டேன். சங்கரி இங்க வந்ததாம்மா ?” கேள்வியில் உள்ள பதற்றம் அசாதாரணமாக இருக்கிறது.

“யாரு… உங்க வீட்டில குடியிருந்த சங்கரியா?”

“ஆமாம்மா, பத்து நாளா அவளக் காணல.”

“என்னது? காணலியா?…”

“முத ஞாயித்துக்கிழம மாசாமாசம் நானோ, அவுங்களோ வந்து வாடகை வாங்கிட்டுப் போவோம். அவ இங்க வந்து அஞ்சு வருசமாகப் போவுது – அண்ணன் புள்ள படிச்சி முடிச்சிட்டுப் போயிட்டான். இங்கியே கிரிச் மாதுரி புள்ளங்கள வச்சிட்டு இருந்தா. “மேடம், நா பிழக்கனுமே, இப்டிச் செய்யிறதுக்கு நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிற…”ன்னிச்சி. சரின்னு ஒத்துக்கிட்டேன். பாவம்மா, அது. வாசப்பக்கத்துல உள்ள ரூமுல, காலம எட்டு மணிக்கு ஜெரோம் டாக்டர் வருவாரு ரெண்டு மணி வரையிலும் பாப்பாரு. ஓமியோபதிதான். ஏழை எளிசுங்களுக்கு மருந்துக்கு மட்டும் பத்து ரூபா வாங்குவாரு சாயங்காலம் மெயின்ரோடு வீட்டுல இருப்பாரு. புள்ளங்களக் கொண்டு விடுற எஸ்தர், ஈசுவரி ரெண்டுபேரும் கதவு பூட்டிருக்கிறத பாத்திட்டு டாக்டர்ட்ட கேட்டிருக்காங்க. அவருக்குத் தெரியல. சாதாரணமா அது எங்கும் போகாது. ஞாயிற்றுக் கிழம புள்ளங்க வராது. எப்பவானும், ரயில் கேட் தாண்டி, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகும்… இப்ப பத்து நாளாக் காணலன்னு சொல்றாங்க. இந்தப் பக்கம் துணிக்கடைக்காரர் வீட்டுல தெரியலன்றாங்க…” அவள் சொல்வது வெறும் விவரங்களாக இல்லை.

“ஏம்மா இவ்வளவு பதட்டப்படுற? அண்ணன், இல்ல உறவுகாரங்க, தெரிஞ்சவங்க வீடுகளுக்கு அவசரமா கெளம்பிப் போயிருப்பா… அவளுக்கு… கலியாணம் ஆயி புருசன் வச்சுக்கலியா?…”

“அய்யோ, அது பெரும்பாவம் ஆச்சிம்மா! வயசுக்கு வந்த நேரம் சரியில்லயாம். அதுனால கலியாணம் காட்சின்னு ஆகாமலே அந்தக் கன்னித் தெய்வம் போல நெருப்பா நின்னிட்டிருந்தா…” சொல்லும் போதே ஜயந்திக்குக் கண்களில் குளம் கட்டுகிறது. இப்படியும் ஒரு பாவம் உண்டா என்று நெஞ்சு பதைக்கிறது.

“இவங்கல்லாம் புனாவில இருந்தாங்க. இவருக்கு இன்னொரு அண்ணன் இருக்கிறான். ஒரு தங்கச்சி அமெரிக்காவில் இருக்கிறா. அப்பா நடுவயசுல எறந்துட்டாரு போல. கஷ்டப்பட்டு பையங்களப் படிக்கவச்சி, கலியாணங்கார்த்தி செஞ்சிருக்காங்க. அம்மா கடோசி வருசங்கள்ள, பாரிசவாயு வந்து படுத்திட்டாளாம். இவளக் கலியாணம்னு கழிச்சி யார் வூட்டுக்கானும் அனுப்பிச்சிட்டா, மாமியாருக்கு ஆரு செய்யிறதுன்னு அண்ணிகாரியே வந்த எடமெல்லாம இதச்சொல்லித் தடுத்திட்டான்னு சொல்லுவாங்க. எங்கக்கா புனாவுல இருந்தா. அப்படி அவுக மூலமாத்தான் இந்த வீட்டில வச்சேன். நானும் எல்லாப் பக்கமும் விசாரிச்சிட்டேன். ஆச்சியம்மா, அரச புரசலாச் சொல்லிக்கிறாங்க. குரோம்பேட்டப் பக்கம் பத்து நா மின்ன ரயில்ல அடிபட்டு நசுங்கி ஒரு பொம்புள பொணம் இருந்திச்சாம். பரங்கிமல போலீசு டேசன்ல விசாரிச்சதுல, பெரியாசுபத்திரிக்கு அனுப்பிச்சி, பாடி கிடங்கில வச்சிருந்தாங்க. ஆரும் வரல. எரிச்சிட்டாங்கன்னு தெரியுது. ஆச்சிம்மா… வயிறே துடிக்கிது. வூட்ட சாவிபோட்டுத் தெறந்து, தேடின. அவண்ண அட்ரசுக்கு, டில்லிக்கு ஃபோன் போட, ஒண்ணும் தெரியல. தந்தி ஒண்ணு அனுப்பிருக்கிற. எந்தப் படுபாவி என்ன செய் தானோ, என்னேமா…”

நா ஒட்டிக் கொள்கிறது. உடலிலுள்ள கோடானு கோடி அணுக்களும் குலுங்கினாற் போல் இருக்கிறது. சுவரைப் பிடித்துக் கொண்டு ஒட்டிக் கொள்கிறாள்.

“ஆச்சி, காஞ்சிவரம் ரோட்டுல, அங்க ஒரு அம்பாள் கோயில் ஆசிரமம் வச்சிருக்காங்களாம், வாரீங்களா, போய் வரலாம்..” என்று கேட்டு குரல் ஒலிக்கிறது. அவள் போக வில்லை.

“ஏம்மா, அந்த வாசல் டாக்டர் எப்பிடி வயசான வந்தா…”

“ஐயம்மா, அவுரு ரெம்ப நல்ல மனிசரு. அவருக்கு வயசா-தொண்ணுறாகப் போவுது. செத்துப் போன சம்சாரம் நினைவாத்தான் தரும வைத்தியமே பண்ணுறாரு. அவுருக்குன்னு ஒரு சைகிள் ரிச்சா, அதுலதா வருவாரு போவாரு அவுருதா சொல்லப்போனா, காபந்து.”

“ஆமா, நானும் பாத்திருக்கிற. வெளுப்பா வேட்டி சட்டை போட்டுட்டு மூக்குக் கண்ணாடி போட்டுட்டு வரு வாரு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஏழை எளிசெல்லாம் வந்த பெறகுதா அவுரு உங்க வீட்டு ரூம்புல வச்சிட்டாருன்னு தெரியும்.”

“ஆச்சிம்மா.. எனக்கு, அந்த ஸ்கூல்ல ஒரு தடியன் இருக்கிறான். மோசமான ஆளு. அவன் சங்கரியக் கூப்புட்டுவுட்டு, “ஏம்மா, இந்தப் புள்ளிங்கள வச்சிட்டு லோலுப்படுற. கான்டீன்ல லஞ்ச்டாக்கெட் போடற உத்தேசம் இருக்கு ஒரு லெமன் பாத், இல்லாட்டி விஜிடபிள் தக்காளி பாத், காலம பத்துமணிக்கு வந்தா ஒரு மணியோட வேலை குளோஸ். இப்படி ஆறுமாசமம் மூணு மாசமுமான புள்ளங்க. அழுகைய மாத்தி, மூத்தரம் பீ எடுத்து, நோவு நொடிபாத்து, உனக்கு என்ன கெடக்கிது? இதுல மாசம் ரெண்டாயிரம் வரும். காபி சாப்பாடு கழிஞ்சு போகும்’ன்னானாம்.” டாக்டர்ட்ட சொல்லிச்சாம.

“யாரு, அந்தப் பாவி, தாசனா ?”

“தாசனே வந்து கேப்பனா? அவனுக்கு எடுபிடிகள் இருக்கே? சீ? ஸ்கூலா? அங்கேயும் ரெண்டாயிரம் புள்ளங்க படிக்கிதுங்க. பணமா கறக்கிறான். ஹேமான்னு ஒரு பொண்ணு. அவகிட்ட ஏழப் பொண்ணு தானேன்னு பல்ல இளிச்சிருக்கிறான். அவ மேச்சாதி இல்ல. அதுங்க தா, போலி கவுராதி பாத்திட்டு விட்டுக் கொடுத்துப் பூசி மெழுகும். இவ நேர போலீசுக்குப் போயிட்டா. மாதர் சங்கம்கூட வந்தது. ஆனா, எங்கெங்கோ பணத்தக்கட்டி, வாயக்கரிசி போட்டு எந்தப் பேப்பரிலும் ஒரு சமாசாரமும் வராமப் பாத்துக்கிட்டான். பொம்பிளக, வயித்திலல்ல, நெஞ்சில நெருப்ப வச்சிட்டு வேல பாக்குறோம். என்னமோ படிச்சிட்டா, வேல பாத்துட்டா சொதந்தரம் வந்திரும்னாங்க. ஒரெழவும் இல்ல…”

இவளுக்கு ஒன்றும் பேசத் தெரியவில்லை.

“இப்ப, நமக்கு ஒரு துப்பும் கெடக்கல. இவதா ரயில் பாதையில விழுந்து தற்கொலை பண்ணிட்டாளா, இல்ல, எதானும் நடந்து பாதையில வீசிட்டாங்களா? அடிவயிறு சொறேல் சொறேல்னு இழுக்குது. நானும் ரெண்டு பொம் புள புள்ளங்கள வச்சிருக்கிறேன். ஒண்ணு இத நாலா வருசம் மெக்கானிகல் படிக்கிது. ரெண்டாவது, பிளஸ் ஒண்ணில நிக்கிது. எந்நேரமும் டி.வி. முடிய பாப் பண்ணிட்டு வந்திட்டா நா காலேல ஏழர மணிக்கு வூட்டவிட்டா, பொழு தடஞ்சி வர. சனிக்கிழமை ஞாயித்துக்கிழம கூட லோலுதா. அங்கியும் எல்லாம் பொம்புளபுள்ளங்க. எச்.எம். நல்ல மாதிரி… ஸ்கூல நல்லா கொண்டாறனும், நல்ல பேரு வாங்கனும்ன… எல்லாம் பாவப்பட்ட வீட்டுப் புள்ளங்க. அதுங்களுக்கு ஒரு வழி காட்டுறோம்ங்கற திருப்திதா. இங்க வீட்டுல வந்தா இந்த மனிச, பொம்புள புள்ளயப் போயி சிகரெட் வாங்கிட்டு வரச்சொல்றாரு. அத்தப் புடிச்சித்திட்ன…

“யாரிடமேனும் சொல்லி அழவேணடும் என்று தோன்றும் ஆவேசம். ஆற்றாமை, யாரைக்குறை சொல்ல?…”

“படிக்கிறபுள்ளங்கள இந்த நாசகார டிவியே கெடுக்குது ஆச்சியம்மா? இந்தாளு, வி.ஆர்.எஸ். எதுக்கு வாங்கிட்டாரு?… ரெண்டு வளர்ந்த புள்ளகள வச்சிட்டு, வீட்டிலியே பாட்டில வாங்கி வச்சிட்டுக் குடிக்கிறாரு. இதுக்குதா அவுசிங் போர்டு வீட்டுக்குப் போனம். சீ…” கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

“இப்ப வீட்ல ரணகளம். சினனவ, பேசாம என் ஸ்கூலிலேயே படிக்க வச்சிட்டிருப்பேன். அது ஒழுங்கா வந்திருக்கும். அரசுப் பள்ளிக்கூடம், இவுரு அந்தசுக்கு சரியில்லேன்னு, ஆயிரம் ஆயிரமாப் புடுங்குற ஸ்கூல். அங்கேந்து, ‘மிஸ் எலிகென்ட்’ போட்டிக்கு இந்த இளசுகள அனுப்புறாங்களாம். இவ போவேன்னு நிக்கிறா. மாசம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம அதுக்கு லோஷன், கிரீம், லொட்டு லொசுக்கு. கண்ணத்துறந்திட்டே குழில புடிச்சி ஒரப்பன் தள்ளுறான். நா என்ன செய்யட்டும் ஆச்சிம்மா? வெள்ளம் கரைபுரள வருது. வெறும் கரையும் மண்ணு. குடும்பம்ங்கறது எப்பிடி நிக்கிம்?… இன்னிக்கு இந்த சங்கரி. நாளைக்கு இது எனக்கு, எம்புள்ளங்களுக்கு நேராதுன்னு என்ன நிச்சியம்? முதல்ல இந்தக் குடிக்கடைகளை மூடமாட்டாங்களா? எங்க ஸ்கூல்லேந்து, எட்டுனாப்புல ஒயின்கடை. அதுக்குப் போறவார எடமெல்லம் அம்புக்குறி போட்ட போர்டு. ராச்சசன்கள அழிச்ச, காளி எப்ப அவுதாரம் எடுத்து எல்லாம் நிர்மூலம் ஆக்கப் போறாளோ…!”

ஒருவாறு மூச்சு விட்டுத் தணிகிறாள்.

“ஆச்சி, கூடை எதானும் வச்சிருக்கீங்களா? இருந்தா குடுங்க… பணம் கொண்டாந்திருக்கிறேன்…” இடுப்பில் இருந்த சிறுபையை எடுக்கிறாள்.

“இல்லையேம்மா, நா போட்டு வைக்கிறேன். இப்ப முருகன் கடையில் அந்த நாருஇல்ல. மெயின் பஜார்ரோடுல இருக்குன்னான். நீங்க இப்ப பணம் ஒண்ணும் தரவேண்டாம். நா போட்டு வைக்கறேன்… பதனமாப் போங்கம்மா…”

அத்தியாயம்-12

“பதனம். எது பதனம்? யாருக்கு? எப்படி?…”

ஆயி முகம் தெரியாது அவளுக்கு. கிழமாகச் சவுங்கிப் போன அப்பனின் முகம் நினைவில் நிழலாகத் தெரிகிறது. அவளை இரண்டு தோள்களிலும் கால்கள் விழத்துக்கிக் கொண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப்போவார். பெரி…ய காவிரி. அதன் கரை மேல் இருக்கும். இறங்கினால் பரிசல் துறை. கூடைபோல் பரிசல் இருக்கும். அதில் உட்கார்ந்து ஒருநாள் கூடக் காவிரியில் போனதில்லை. திருவிழா ஆடிமாசத்தில் வரும். படையல் போடும் கும்பலைப் பார்த்துக் கொண்டு நிற்பாள். கூட்டம் கோயிலிலா, ஆத்துக்கரையிலா என்று நினைவுத் தெளிவில்லை. அம்மன் தேர் வரும். அய்யா, ஆட்டுத்தலை, மாவிளக்கு, பழம் எல்லாம் கொண்டு வருவார். இந்த நிழல் படங்களும்கூட மங்கும்படி, அவர் ஒருநாள் செத்துப் போனார். சின்னாயி அவளை அதே காவிரியாத்தின் பக்கம் நிறுத்திவிட்டு, “போடி, உங்க மாமன் வூட்டுக்கு?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இடுப்பில் ஒரு முழ சீலைத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்தாள். கரகரவென்று பரிசல் துறையின் பக்கம் இறங்கி நின்றாள். பரிசலில் இருந்து செவத்த அய்யா மார்கள், கோட்டு, கடுக்கன் போட்டவர்கள், பொம்புளைகள் இறங்கி கரைமேல் இருந்த வண்டியில் போனார்கள். நடந்தும் போனார்கள்.

“சேரிப்புள்ள போலிருக்கே? பொழுது எறங்கிப் போச்சே, ஏம்மா நிக்கிற…?” என்று பரிசல்காரர் கேட்டார்.

“எங்கப்பாரு செத்திட்டாரு. எங்க சின்னாயி, ‘நீ மாமவூட்டுக்குப் போயிடு’ன்னு இங்க கொண்டாந்து வுட்டுப் போயிட்டாங்க…” என்று அழுதாள்.

“யாரு உங்கப்பன்…?”

அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.

“சின்னாயி அடிக்கும், குடுவைக்கும்…” என்று பெரிதாக அழுதாள்.

“அடபாவமே? …” அவர் சுற்றுமுற்றும் பார்த்தபோது, இன்னொராள் வந்தார்.

“அதாம்பா, ராயர் பண்ணையாளு. சித்தாதி. குடிச்சிட்டுக் காவாயில வுழுந்து செத்திட்டான். அவம் பொண்ணு போல இருக்கு இது.” என்ற விவரம் சொன்னதும், பரிசல் காரர். அவளுக்குச் சோறு வாங்கிக் கொடுத்து அவர் குடிசையில் தங்க வைத்துக் கொண்டதும் மறக்கவில்லை.

பிறகு அடுத்த நாள் அவர், காலையில் ஆபீசுக்குக் கச்சேரிக்குச் செல்பவர்கள் செல்கையில், பரிசலில் ஒர் ஒரத்தில் உட்கார்த்தி வைத்தார். முதல் நாள் கோட்டும் கடுக்கனும் தலைப்பாவுமாக வந்த பெரியவர், “ஏம்ப்பா சோலை? உனக்குக் கல்யாணமே ஆவல, இது யாரு பொண்ணு?” என்று கேட்டார். அவர் என்ன சொன்னார் என்பதை அவள் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுடைய கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பெரிய மூங்கில் கம்பை உள்ளே விட்டு, அவர் பரிசலைத் தள்ளிக் கொண்டிருந்தார். பரிசலுக்குள் வெறும் ஒற்றைச் சீலைத் துண்டுடன் கையைக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்று, காவிரியையும் வெள்ளத்தையும், மூங்கில் கம்பினால் தள்ளிச் செல்லும் விந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மூங்கிலை எடுத்து உயர்த்தி மறுபுறம் வைக்கும் போது நீர் சொட்டியது. மேலே பட்டபோது எப்படி உடல் சிலிர்த்தது? இந்தப் பயணத்துக்கு முடிவே வராமல், இவருடன் இந்த ஆற்றின் குறுக்கே போயும் வந்தும்… நீள வேண்டும் என்ற கற்பனையில் இருந்தாள். ‘மறுபடியும் சின்னாயி வீட்டுக்கோ, சின்னாயி போல பொம்புளகள் உள்ள வேறு எந்த வீட்டுக்கோ என்னிய அனுப்பிடாதீங்கையா’ என்று பரிசல்காரரின் கால்களைப் பிடித்துக் கெஞ்ச அவள் உறுதி செய்து கொண்டிருந்தாள். அக்கரை வந்து எல்லோரும் இறங்கிச் சென்றனர். கோட்டுக்காரர்கூட இறங்கி நடந்து போனார்.

“எறங்கு புள்ள, உம் பேரென்ன?”

அவள் இறங்குவதாக இல்லை. பேரும் சொல்லவில்லை. பேரென்று அவளுக்கு என்ன இருந்தது? அப்பன் ‘கண்ணுத்தாய்’ என்று செல்லமாகக் கூப்பிடுவான். ‘உங்காயி எட்டுப் பெத்தா, நீ ஒருத்திதாம்மா எனக்கு அழகாயி போட்ட பிச்ச…’ என்று கள்வாடை வீசும் சுவாசம் முட்ட, அணைத்து உச்சிமோந்து பாசத்தைக் கொட்டுவார்.

சின்னாயியோ ஆயிரம் பேதிக்கும், கழிச்சலுக்கும் கூப்பிட்டுச் சாபம் கொடுப்பாள். இவள் பொழுதுக்கும் மண்ணில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பாள். அப்பன்தான் காலையிலும், பொழுது சாய்ந்த பின்னும் சோறோ கூழோ, எதுவோ கொடுப்பான். அவர் அருமையாக முடிச்சுக்குள் வைத்து வேகவைத்த வள்ளிக்கிழங்கோ, பொட்டுக் கடலையோ கொடுத்தது இப்போதும் கண்களில் நீரை வருவிக்கிறது.

பரிசல் துறையில் நின்றது ‘பெண்’ என்று யாரும் அவளைக் குலைப்பதற்குரிய பொருள் என்று நினைக்கவில்ல. “பொம்புளப்புள்ள அய்யா?” என்று பதனமாகப் பார்க்க, அக்கரையில் வக்கீல் அய்யர் வீட்டில் சேர்த்தார். அவர் காந்தி கட்சி. அவளைப் பின்புறமாகத் தான் பரிசல்காரர் கூட்டிச் சென்றார். மாட்டுக் கொட்டகை, எருக்குழிகள்… வாழை மரங்கள், அவரைப் பந்தல்… இவரும் பின்னாலிருந்து தான் கூப்பிட்டார்.

“ஏம்ப்பா, என்ன விசயம்?…”

மஞ்சட்சீலை உடுத்த சிவப்பாக ஒரு பெண் பிள்ளை. அம்மா… அய்யர் சாதிக்கட்டு. காதுகளில் வயிரத் தோடுகள் மின்னின. மூக்கில் பொட்டுகள் பளபளத்தன. இவர்கள் வீட்டிலா…?

“பரிசக்காரையா, என்னிய இங்கெல்லாம் வுட்டுட்டுப் போகாதீங்க? நா உங்ககூட வாரேன். உங்கக்குக் கஞ்சி காச்சித்தாரேன். ஒங்கக்கு எதுன்னாலும் செய்யிறே…” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டாள்.

“யாரப்பா, குழந்தை, உள்ளே வாயேன்?”

“இருக்கட்டும்மா…” என்று சொல்லிக் கொண்டு கொட்டில் கடந்து கிணற்றுக்கரைப் பக்கம் நின்றார்கள்.

“இது… சேரி… குடிபடைச்சாதிங்க. அப்பன் ஆயி செத்து, அநாதியா வந்து நிக்கிது. பொம்புளப்புள்ள அம்மா, காபகம் வந்திச்சி. ஏதோ கொட்டில்ல சாணி சகதி அள்ளிப்போடும். ஒரு நேரம் ரெண்டு நேரம் சோறுத்துங்க. உங்கக்குப் புண்ணியமாவும்…”

“அஞ்சு வயசுகூட இருக்காது போல… பாவமே?…” என்றவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றினாள். விலாவில் சின்னாயி போட்ட சூடு புண்ணாக இருந்தது. அதில் ஈ வந்து குந்தியது.

“என்னம்மா இது? இது சூட்டுக்காயம் போல… அடாடா… சீக்கோத்திருக்கு?” அவள் கோவென்று பெரிதாக அழுதாள்.

“ரெம்ப பயப்படுதுங்க. பொம்புளப்புள்ள, உங்களுக்குப் புண்ணியமாப் போவுதும்மா, சின்னாயி கொடும, நாளும் தெரிஞ்சவ…”

“நீ கவலப்படாத என் வீட்டுப் பிள்ளையாப் பாத்துப்பேன். எங்க வீட்டுக் கமலி போல பாத்துப்பேன். போயிட்டுவா.” என்று அவனை அனுப்பினாள். இவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். “சீ… அழாத அழக்கூடாது…” என்று அவள் கண்களைத் துடைத்தாள். சோப்புப் போட்டுக் குளிப்பாட்டி னாள், கிணற்றில் நீரிறைத்து ஊற்றி… ஒ! அவர்களுக்குக் கிணறு கிடையாது. மோட்டுவாய்க்கால் கரையில்தான் சட்டி பானைக்கழுவி, துணி அலசி… அப்பன் செத்தபிறகு அவள்தான் எல்லாம் செய்வாள். சின்னாயி காலையில் வயலுக்குப் போனால், மாலையில் அந்த இன்னொரு ஆளுடன் வருவாள். இருவரும் கள் குடிப்பார்கள். சோறு காய்ச்சினால் ஒரு வாய்கூட வராது. கேட்டால் அடிப்பாள். குளிப்பாட்டி, சூட்டுக்காயத்தைப் பஞ்சால் துடைத்து ஏதோ களிம்பு போட்டாள். புண்ணில் படாமல், கால்வரை தொங்கும் கவுன்… பூப்போட்டது. அவளைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில் இன்னோர் அம்மா அங்கு வந்தாள்… “என்ன சம்பு? அப்பா ஒத்துப்பரா?” அம்மா திரும்பிப் பார்த்தாள். “உம்? அவர் செஞ்சது எதையும் நான் ஒத்துக்கல!”

துணி கொடுத்து காயத்துக்கு மருந்து போடுகையில் உள்ளிருந்து சமையல்காரர் போலிருக்கிறது, வந்தார்.

“சம்பும்மா, உங்கப்பா பாத்தா ரகளயாகப் போறதே?”

“ஓய், உம்மக்கேக்கல. இனிமே நீர் சமைக்க வரவேண்டாம். நாங்களே சமைச்சிக்கறோம்! சாப்புடறவா சாப்புடட்டும், இல்லாதவா போகட்டும்!” என்றார் கோபமாக

இவளுடைய கத்தலில், மொட்டைத் தலையில் ஒரு உச்சிக் குடுமியும் சந்தனக்குறுக்கும், விசிறி மட்டையுமாகப் பெரியவராகிய அவள் அப்பா கூடத்தில், நடை ஒரத்தில் வந்துவிட்டார்.

“அடி, சம்பு? நன்னாயிருக்கா? கேக்கறேன், வழிவழியா வேதத்யயனம் பண்ணின குடும்பம்டீ, இது?… ஏ, பற மூதேவி! போடி கொல்லப்பக்கம்? எங்கேந்து இங்க கொண்டு விட்டிருக்கான்? எல்லாம் இந்தத் தாமு குடுக்கிற எடம். போடி…!” விசிறிக் காம்புடன் ஓடி வந்த அவரைப் பார்த்து அம்மா சிரித்தார். அவள் மருண்டு ஒடிப்போக முடியாதபடி தன்னுடன் ஒட்டிக் கொண்டாள்.

“கிட்ட வராதீங்க. தீட்டு ஒட்டிக்கும். அப்பா, நீங்க என்ன பண்றேள், வாசப்பக்கம் ரூம்ல மடியா இருந்துக்குங்கோ. நாங்கதா சமைக்கப் போறோம். சமைச்சு சாப்பாட்டை, மடியா, ராகவனக் கொண்டு குடுக்கச் சொல்லுங்கோ!”

“பிராரப்தம்… ஏண்டி சம்பு இப்படி வதைக்கிற?”

“யாரப்பா உங்கள வதைக்கறா இப்ப?… அதான் தாமு, உங்க மாப்பிள, அவனவிட்டு இந்த வீட்ல இதெல்லாம் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்கோ, நான் இவளையும் கூட்டிண்டு போயிடறேன்…”

உள்ளே கூட்டிச் சென்று, இலை போட்டு, வாழைக்காய்ப் பொரியலும் பருப்புக் குழம்பும் நெல்லுச் சோறுமாகப் பிசைந்து போட்டாள். தேவதைக் கதைகளை யாரும் அவளுக்குச் சொன்னதில்லை. ஆனால் ஒரு தேவதை அவளுக்குத் தாயாக இருந்து, பாதுகாத்தாள். அன்று சாப்பிட்ட உடனே, பழைய சேலை மடிப்பில் அம்மா படுக்க வைத்த தும் துரங்கிப்போனாள். எத்தனையோ நாளைய ஆதரவற்ற, பயம், வயிற்றுப்பசி, எல்லாம் அந்த தேவதைக் கையால் நீங்கிவிட்டன. அந்த வீட்டில் அவள் பல விஷயங்களைப் புரிந்து கொண்டாள். பெரியவருக்குப் பெண்சாதி முதலி லேயே இறந்துவிட்டாள். இரண்டு மகன்கள், இவள் ஒரு மகள். மகன்கள் இருவரும் படித்து, டில்லி பம்பாய் என்று கல்யாணம் கட்டி வேலையில் இருந்தார்கள். கமலி இவருடைய அண்ணன் மகள். இவளை, பத்து வயசுக்குள், வீட்டில் எடுபிடி வேலை செய்ய வந்த தாமுவுக்குக் கட்டிவிட்டார். தாமுவை அவர்தாம் படிக்க வைத்தார். தாமுவுக்கு அக்கா முறையில் ஒரம்மாள் அங்கே அடிக்கடி வந்து அதிகாரம் செய்வாள்.

கமலி, உள்ளுர் பள்ளிக்கூடத்தில் நாலாவது படித்துக் கொண்டிருந்தாள். தாமு, சம்பகாவின் புருசன், வக்கீல். வாசல் பக்கம், கலகலவென்றிருக்கும் நடையில் மாடிப்படி. மாடிக்கு யார் யாரோ கட்சிக்காரர்கள் வருவார்கள். சீனு அய்யர் குமாஸ்தா. வீட்டில் பெரிய வில்வண்டி இருந்தது. கிழவர் வாசல் மேல் திண்ணை, கீழ் திண்ணை, முன்பக்க அறை இத்துடன் நிறுத்திக் கொண்டார். கொல்லைப்புறம் போக வேண்டுமானால்தான் காதில் பூணுரலை மாட்டிக் கொண்டு போவார். அந்த சமயம் அவள் எங்கேனும் மூலையில் ஒண்டிக் கொள்வாள். அம்மாவைப் பார்க்க, கதரணிந்த இளம்பிள்ளைகள் வருவார்கள். நிறைய புத்தகங்கள் கொண்டு வருவார்கள். கமலி இவளை விடப் பெரியவள். அம்மா இவளுக்கும், தமிழ், இங்கிலீசு எல்லாம் கற்றுக் கொடுத்தாள்.

வக்கீலையா, மாடியில் இருந்து இறங்கி, வீட்டைச் சுற்றிச் செல்லும் சந்து வழியாகவே பின் பக்கம் போவார். அவருக்கென்று குளியலறை ஒன்று இருந்தது. மாரிமுத்து என்ற வண்டிக்காரன் அநேகமாக வீட்டோடு இருந்தான். அவன்தான் அவருக்கு வெந்நீர் போட்டு, துணிதுவைத்து, வண்டியோட்டிக் கச்சேரிக்குக் கூட்டிச் சென்று எல்லா வேலைகளும் செய்தான். கமலியும் அவரும், கூடத்தில் ஒரு பக்கம் படுத்துக் கொள்வார்கள். ஊஞ்சல் பலகையில் அம்மா படுப்பார். விசுபலகை ஒன்று உண்டு. அவளுக்கு அப்போது எதுவும் புரிந்து கொள்ள வயசாகவில்லை. அய்யர் வீட்டு நடைமுறைகளைப் பற்றி எதுவும் தெரிந்திராததால், சாப்பாடு, துணி, அன்பு, புழங்க பெரிய இடம் எல்லாம் கிடைத்த எதிர்பாராத சந்தோச மூச்சு முட்டலில் பழகியபின் இவள் புரிந்து கொண்ட செய்திகள்…

கிழவர் ஒரு நாள் தவறாமல் இவளைப் பார்க்க நேர்ந்து விட்டால், பறப்பீடை, தொலைஞ்சு போடி, திமிரு திமிரு… என்று கத்துவார். அவள் பின்புறம் கொட்டிலில் சென்று ஒட்டிக் கொள்கையில் அம்மா உடனே வந்து விடுவார்… “அவ ஒண்னும் பீடையில்ல. இந்த வீட்டுக்கு நல்லது வந்திருக்கு. கண்ணம்மா, நீ பயப்படாதே! அந்தக் கிழம் இப்படி எதை வேணாச் சொல்லட்டும். உன்கிட்ட வராது…” என்று தேற்றுவாள்.

இவள் வந்து தீட்டுப்பட்ட வீட்டில், அவர் சாப்பிடுவதில்லை. அவருக்கு, தலை மொட்டையடித்த, வெள்ளைச் சீலை அம்மா சாப்பாடு கொண்டு வந்து வாசல் அறையிலேயே கொடுப்பார். அந்தக் கூடத்தில் சாமிபடங்கள், பூசை சாமான்கள், விளக்கு எல்லாம் இருந்தன. எல்லாமும் வாசல் அறைக்குப் போய்விட்டன. சீனு அய்யர்தான் கிழவருக்கும் எடுபிடி. கிழம் கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும். ஏழை எளியதுகளின் இரத்தம் உறிஞ்சுவது போல் வட்டி வாங்கும், என்பதெல்லாம் அம்மா அதைத் திட்டும்போது உதிர்ந்த உண்மைகள்.

சுந்தரம் சுந்தரம் என்று ஒருவர் வருவார். அம்மா ராட்டை வைத்து நூல் நூற்பார். அவர் பஞ்சு பட்டை கொண்டு வந்து கொடுப்பார். நூற்ற நூலை சிட்டத்தில் சுற்றுவதை அவள் பார்த்துக் கொண்டே இருப்பாள். அம்மா அவளை எழுதச் சொல்லிவிட்டு, நூற்பார்.

“காந்தி, கடங்காரன், சண்டாளன், இப்படி பரம்பர தர்மங்களை நாசம் பண்ணிட்டானே ?” என் வீட்டில, எனக்குக் கை நனைக்க வழியில்லாம இப்படி அட்டுழியம் பண்றாளே? அம்மா இல்லாத குழந்தைன்னு கண் கலங்காம வச்சிண்டிருந்தேன். பாவி நெருப்பை அள்ளிக் கொட்டுறாளே! ஆசாரிய சுவாமிகள் வராராமா ?”

“ஆமா. பிரும்மதானபுரம் சத்திரத்தில் தங்கறாராம். இந்தத் தெரு வழியா நாளைக்கு வறாராம். பூரணகும்பம் குடுத்து உபசாரம் பண்ணனும்னு எங்கண்ணா சொல்லிண்டிருந்தான். பத்து நாள் தங்குவார் போல. இப்பத்தான் விவஸ்தையே இல்லையே? தலை எடுக்காம, எவளானும் என்னைப்போல இருக்கறவா தெருப் பக்கம் வந்தோ எட்டிப்பாத்தோ தொலைக்கக்கூடாது. அப்படி ஒராத்துல பிகூைடி பண்ணிட்டிருக்கப்ப, ஒரு மூதேவி தெரியாம, அந்தாத்துல வந்துடுத்தாம். பிகூைடி எடுக்காம போயிட்டாராம்…”

“ஏ ருக்மிணி ! இங்க வாடி! ஏற்கெனவே அது ஆடிண்டிருக்கு, நீ கள்ள ஊத்திக் குடுக்கிறியா? வந்து சோத்தப் போட்டுட்டுப் போயச் சேரு ? என்னடி பேச்சு?’ என்று அம்மா கத்தியபோது அவளுக்கே துக்கி வாரிப்போட்டது. பாவம், அந்தம்மா…

“அஞ்சு வயசிலும் பத்து வயசிலும் கல்யாணத்தப்பண்ணி வச்சிட்டு, பொண்ணுகள வதைக்கிறது? யாருடி அந்த ஆசாரியன், எதுக்கு இப்படிக் கொலை பாதகம் பண்றான்?..” என்று அம்மா, சம்பு என்றழைக்கப் பெற்ற தெய்வம், காளி அவதாரம் எடுத்தாற்போல் கத்தினாள்.

“இவனுவ வண்டவாளங்களை எடுத்துவிட்டால், பள்ளுப் பறைன்னு ஒதுக்கி வச்சிருக்கிற குடிசைக் குப்பை மேட்டு நாத்தமும் அழுகலும் பரிசுத்தம்னு தோணும். மரியாதையாப் போய்க்கோ?” அந்தம்மா வெலவெலத்து ஒட்டிக் கொண்டாள், சுவரோடு. அவள் அங்கு இருந்தபோது தான் அந்தக் கூடத்தில் பெரிய காந்தி படம், நேரு படம், சுபாஷ் சந்திரபோஸ் படம், எல்லாம் கொண்டு வந்து மாட்டி னார்கள். அம்மா மஞ்சள் கதர்ப்புடவை உடுத்திக் கொண்டு, அவளையும் கமலியையும் அழைத்துக் கொண்டு, தெருவில் சென்றால், யாரும் பார்க்க மாட்டார்கள். கதவை அடைத்துக் கொண்டு உள்ளே போவார்கள். தெருக் கோடியில் பெருமாள் கோயில் இருந்தது. அம்மா எந்தக் கோயிலுக்குள்ளும் போனதில்லை. ஒருநாள் கதர்சட்டை அணிந்த சுந்தரம், பிச்சமுத்து, தங்கவேலு எல்லாரும் வந்தார்கள்… எல்லாரும், அம்மா, அவள், கமலி தெருவில் மகாத்மா காந்திக்கு ஜே! வந்தே மாதரம், சுபாஷ் சந்திரபோஸுக்கு ஜே…” என்று கத்திக் கொண்டு போனார்கள். மருதமுத்துதான் பெருங்குரலில் கத்துவான். இவர்கள் ஜே சொல்வார்கள். ஆனால் தெருவில் ஒரு குஞ்சு குழந்தைகூட இல்லை. திருச்சிபோகும் ரயில்பாதை. அதைக் கடந்தால் அங்கே தாலுகா கச்சேரி இருந்தது… ஒருகூரை பிராமணாள் காபி கிளப் இருந்தது. இவர்கள் தாலுகா கச்சேரிக்கு முன் கத்தினார்கள். பக்கத்தில் தான் கமலி படித்த பள்ளிக்கூடம். அன்று பள்ளிக் கூடம் இல்லை.

டவாலி போட்ட சேவகன் வந்து விரட்டினான். ஒரு போலீசுக்காரர் வந்தார்.

“எல்லாம் போயிடுங்கம்மா, ஏ. புள்ள முழிய நோண்டிடுவேன்” என்று அவளைப் பார்த்துப் போலீசுக்காரன் சாடையாகப் பயமுறுத்தினான். அவள் அம்மாவின் பக்கம் ஒட்டிக் கொண்டாள். மருதமுத்துவையும் சுந்தரத்தையும் விலங்கு கொண்டு வந்து பூட்டி அழைத்துச் சென்றார்கள். இவர்கள் மறுபடியும் கத்திக் கொண்டே வீடு திரும்பினார்கள். அன்று சாயுங்காலமே கைதானவர்கள் இருவரும் திரும்பி வந்து விட்டார்கள்.

– தொடரும்…

– உத்தரகாண்டம் (சமூக நாவல்), முதற்பதிப்பு: டிசம்பர் 2002, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *