உதிரிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 3,584 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எவன் மண்டை’டா ஒடையணும்?… வாங்கடா!”

எவனும் தன் மண்டை உடைபட விரும்புவதில்லை; மற்றவன் மண்டையை உடைக்கத்தான் அவன் அவனுக்கும் அடங்காப் பசி.

உடல் உறுப்புகளுக்கெல்லாம் தலைமை தாங்கி ஆக உச்சத்தில் இருப்பதாலோ; கண், காது, வாய், மூக்கு எல்லாம் எப்படியோ தவறிப்போய் கழுத்துக்கு மேலே அமைந்துவிட்டதாலோ என்னவோ. “எண்சாண் உடம் புக்குச் சிரசே பிரதானம்” என்று எவரோ பிரமாதப் படுத்திவிட்டுப் போனார்.

ஆனால், தலை இப்போது பல விஷயங்களில் அவ் வளவு முக்கியமாகக் கருதப்படுவதில்லை! அந்தத் தலைக் குள் இருப்பதைக்கொண்டு ஒரு பொம்மையைக்கூடச் செய்ய முடியாது என்றாலும், பலருக்கு வாழ்க்கை ஓடாமலா இருக்கிறது?

அந்தச் சமூக நிலையத்தில் அன்று மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு கலை நிகழ்ச்சி. கூட்டம் எக்கச்சக்கம். அந்தச் சிறிய அரங்கில் பிதுங்கி வழிந்துபோன கூட்டம், அரங்கின் இருபக்கக் கதவோர நடைபாதைகள், முன் வாயில், கூடைப்பந்து விளையாட்டுத் தடம் எல்லாவற் றையும் தாண்டிச் சாலைப் பகுதிவரை நீண்டுவிட்டது!

கலை நிகழ்ச்சிக்கு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வேறு முக்கியமானவர்கள் பலரும் வந்திருந்தனர் .

அந்தப் புகழ்பெற்றவர்களும் இந்தப் புகழ்பெற்றவர் களும் எனக் கலைஞர் குழாம், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி என்று பலர் விமரிசனம்கூடச் செய்தார்கள்.

பாடகர்கள், பண்புத்தொகையில் கூறவேண்டும் என்றால் தங்கள் இன் குரலால் மக்களைக் கவர அபார முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது!

பெரும்பாலும் எல்லாக் கலைஞர்களுமே தங்கள் பெயர்களுக்குமுன், திரைப்பட நடிகர்கள், பின்னணிப் பாடகர் பெயர்களை முன்னொட்டாக ஒட்டி நகலெடுத் துக் கொண்டவர்கள்!

கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே அரங்கின் பின்னிருக்கைகளில் அமர்ந்திருந்த அந்தக் கும்பல் முன் னோடித் திறனாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டது.

கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடக்கும் இடங்களி லெல்லாம், இதுபோன்ற கும்பல்கள் தங்களுக்கே உரித் தான வாசகங்களால் உரைகல்லிட்டு விமர்சிக்கத் தவறுவ தில்லை. நிகழ்ச்சிக்குப் பிரமுகர்களும் மற்ற இனத்தவர் களும் வந்திருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் தேவையின்றிப் பிரமாதமாக அலற்றிக்கொள்வதுமில்லை.

மேடையில் பாடிக்கொண்டிருந்த ஒரு பாடகியின் சொந்த விஷயங்களையெல்லாம் அந்தக் கும்பல் அலசத் தொடங்கியபோது, அவர் சினத்துடன் எழுந்து தலை யிட்டதன் விளைவுதான் அவரைக் கலை நிகழ்ச்சிக்குப் பிறகு, வெளியில் மீண்டும் அவர்களுடன் மோதவைக்கும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டது.

அவர்களை மீண்டும் வெளியில் பார்த்ததும் அவிந்து போன அவர் ஆத்திரம் மறுபடியும் கொழுந்து விட்டது.

அந்த உதிரிகளை நோக்கி அவர் மிகவும் உத்வேகத்துடன் வந்தார். உணர்ச்சி வேகம் அவர் உடலை நில நடுக்க மாக்கிக் கொண்டிருந்தது.

“ஏண்டா வேலையத்த பசங்களா! மரம் மாதிரி ஒடம்பை வளத்து வச்சிக்கிட்டு இப்படிக் காலித்தனமா நடக்கிறீங்களே, உங்களுக்கு வெட்கமா இல்லே? மரம் முத்துனா வைரம்; மனுஷன் முத்துனா புத்திங்கிறது தெரியுமாடா உங்களுக்கு? ஏண்டா உங்களுக்குக் கொஞ்சங் கூடப் புத்தியில்லே? இந்த மாதிரி எடங்கள்’லே இப்படி நடந்துக்கிட்டா மத்த இனத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைப்பாங்க? இப்படி நீங்க செய்யிறது நம்ம இனத்துக்குத்தான் அவமானம்!”

அரங்கத்திற்குள் அடக்கி வைத்திருந்த சினத்தையெல் லாம் அவர் வெளியில் கக்கினார்.

அந்தக் கும்பலில் ஐந்தாறு உதிரிகள் இருந்தனர். பெரும்பாலும் எல்லாருமே நெருப்பைக் குளிப்பாட்டின சிவப்பு! தொடக்க நிலை ஆறிலேயே பாடப்புத்தகங்களை ஆற்றில் விட்டுவிட்ட அரை அவியல்கள். பணம் எப்படி வருகிறதோ தெரியவில்லை. எல்லாருடைய இடுப்பிலும் லீவைகள், ஜொர் டானோக்கள், லோமேன்கள்; அவற்றை இடுப்பில் இழுத்துப் பிடித்து வைத்திருக்க ஆறு அங்குல இடைவார்கள், கன்னாபின்னாவென்று வண்ணங்களால் வாரியிறைக்கப்பட்ட மன உருவக ஓவியங்கள் போன்ற தொளதொளப்புச் சட்டைகள், ஒரு பொத்தானைத் திறந்து தூக்கிவிடப் பெற்ற காலர்கள், முடிதிருத்தும் நிலையப் பக்கமே எட்டிப்பார்க்காத தலைகள்!

சாமிநாதன் பேச்சு அவர்கள் சுயமரியாதையை அதிகம் பாதித்திருக்க வேண்டும்.

அந்தக் கும்பலின் தளபதி, மீ கோரேங் கட்டிய ரப்பர் பட்டையால் உருவாஞ்சுருக்குப்போடப்பட்டு பாதி

முதுகு வரை தொங்கிக்கொண்டிருந்த செம்பட்டைக் குடுமியைப் புறக்கையால் ஒரு தட்டுத் தட்டிவிட்டுச் சாமிநா தனைப் பார்த்து நெஞ்சை நிமிர்த்தினான்.

“ஏய், நீ எங்க பஸால்’லே மாஸோ பண்ணாதே! நீ ஓராங் துவா. நீ எங்ககிட்டே தஹான் பண்ணமாட்டே.ஜாகா பாய் பாய்!”

இடுப்பைத் தாங்கிக் கொண்டிருந்த இடைவாரை இருகைகளாலும் ஏற்றிப் பிடித்துக்கொண்டு, உருவாஞ் சுருக்கு எச்சரிக்கை விடுத்ததும், ஒரு பக்கவெட்டு முதுகுக் குடுமிக்குத் தாளம் போட்டது:

“ஹந்தாம் டியா’ சக்காப் புசார் தூரோன் சக்காப்’டா!

தம் ஐம்பத்து நான்கு வயதுக்கு மதிப்புத் தராமல் நேற்றுப் பிறந்த பயல் ஒருவன் ‘டா’ போட்டுப் பேசியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் உடலெல்லாம் கொதித்தது.

“டேய் அரணைக் குஞ்சுகளா! என்னடா, என்னை அடிக்கப் போறீங்களா? நீங்க எல்லாம் தமிழப் பசங்க தானேடா? என்னடா தூரோன் சக்காப்? நீங்க எல்லாரும் சேர்ந்து வந்தாலும் இந்த இரும்பு ஒடம்பை ஒண்ணும் பண்ணிக்க முடியாதுடா! நிகழ்ச்சிகளைப் பார்க்க வந்தா ஒழுங்கா பார்த்துட்டுப் போகணும் அதை விட்டுட்டுக் காலித்தனமா நடந்துக்கிறதும் பொண்ணுங்களைத் தரக் குறைவா கண்டபடி பேசுறதும் என்னபண்புடா? உங்க மாதிரி பசங்களாலே சின்னப் பொண்ணுங்க வாழ்க்கை கூடக் கெட்டுப் போகுதேடா!…”

அவர் வெறி உச்சத்திற்குப் போய்விட்டது. அவர் எந்த விளைவுக்கும் தயாராகவே இருந்தார்.

அந்த முதுகுக்குடுமியின் மற்றொரு பக்கவெட்டு, தன் தோழர்களை விலக்கிக்கொண்டு முன்னே வந்து சாமிநாத னுக்குச் சவால் விட்டது:

“சூடா’டா. ஜாங்ஙான் பேடே’டா. லூ மாவ் லவான்’கா? கித்தா கசி தம்பாட். மாவ்’கா? பீக்கி’டா!”

அந்த இளந்தமிழன் தமிழைத் தூக்கிப் புதைத்து விட்டு, டா’ மலாயில் சவால்விட்டதைக் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டுக் கலைந்து கொண்டிருந்த கூட்டத்தினருள் சிலர் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்தப் பக்கவெட்டின் சவால் சாமிநாதனைப் பதை பதைக்க வைத்தது. அவர் உறுதி செய்துவிட்டார்.

இருவருள் ஓர் ஆள் சாகவேண்டும். அவன் மண்டையை உடைத்தாலன்றி மனம் அமைதி பெறாது. பக்கத்திலிருந்த நாற்காலியைத் தூக்கி உயர்த்தினார்.

“ஏண்டா, என்னை நீ ‘டா’ன்னா சொன்னே? நீங்க என்னடா கசி தம் பாட்? நான் தர்றேன்’டா! இந்த எடத் துலேயே தர்றேன். இப்ப உங்க எல்லாரோட மண்டை களையும் ஒடைக்கிறேன். வாங்கடா?”

அவர் அப்போதிருந்த நிலையில் எவனாவது அவர் அருகே வந்திருந்தால் துறக்கவுலகிற்கு நுழைவுச் சீட்டு உடனடியாகக் கிடைத்திருக்கும். ஆனால் சமூக நிலைய அதிகாரிகளும் கலை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த சிலரும் சாமிநாதனைக் கட்டுப்படுத்திவிட்டார்கள்.

அன்றிரவு நெடுநேரம் வரை சாமிநாதன் உறங்கவே யில்லை. அந்த உதிரிகளை நினைக்க நினைக்க அவர் உள்ளம் கொதிகலனாகிக் கொண்டிருந்தது. எண்ணங்கள் சிதறித் தெறித்தன.

அந்த உதிரிகள் அவரைக் கொச்சை மலாயில் ‘டா’ போட்டுப் பேசியது அவர் மனத்தைக் குடைந்துகொண்டே இருந்தது.

தங்களுக்கிடையே கொச்சை மலாய் பேசிக்கொள்ளும் தமிழ்ப் பரம்பரை எப்போதோ உருவாகிவிட்டது. இப் போது அது ஊதிப் பருத்து வருகிறது. எந்தப் பிரிவின ரிடையே இந்த நிலை?

கல்வி, பொருளாதாரத் துறைகளில் பின் தங்கிய குடும் பங்களில் இந்தப் போக்கு எப்படியோ வளர்ந்துவிட்டது. இந்தப் பரம்பரையே இப்படியென்றால், இதற்கு வாரிசாக வரப்போகும் நிலை என்ன? இதில் இன்னும் என்ன முன் தோன்றிய கல், பின் தோன்றிய மண், மூத்த குடி? இந்தப் பிரச்சினையை எண்ணிப் பார்ப்பவர் யார்?

மூன்றாண்டுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை. மறக்கக்கூடிய சம்பவமா அது?

அவர் மகள்… அவளுக்கென்ன சாகவேண்டிய வயதா? பதினைந்து வயது. உயர் நிலை மூன்றில் படித்துக்கொண்டிருந்தவள்.

சமூக நிலையத்தில் இழிவாகப் பேசிய அந்த உதிரிகளைப் போன்ற ஒருவனால்தானே அவளுக்கு அந்த நிலை ஏற்பட்டது!

அந்தக் கிராதகன் அவளை எப்படிச் சிக்க வைத்தான்? அந்தச் சிறுமியின் வாழ்க்கையில் குறுக்கிட்டு அவளை அநியாயமாய் அழித்துவிட்டானே!

அவனைக் காணவே கூடாது என்று அவளை வீட்டில் அடைத்து வைக்க வேண்டிய நிலை வந்தபோது அவள் என்ன காரியம் செய்துவிட்டாள். அந்தப் பன்னிரண்டாவது மாடியிலிருந்து குதித்துவிட்டாளே பாவி மகள்…

அன்றிரவு முழுவதும் அந்த நினைவே அவரை அரித்துத் தின்றுகொண்டிருந்தது.

அந்தச் சமூக நிலையச் சம்பவம் நடந்து ஒருவார மாகிவிட்டது. அந்தக் கும்பலைப் பின்னர் அவர் பார்க்கவே இல்லை .

சாமிநாதனுக்கு அன்று இரண்டாம் பகுதி முறை வேலை. இரவு பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. இரண்டு பஸ் எடுத்துவரவேண்டும். பஸ்ஸை விட்டிறங்கி அவர் அடுக்குமாடி வீட்டுக்குச் சற்றுத் தொலைவு நடந்து தான் போகவேண்டும்.

அன்றும் அவர் வழக்கம் போலவே பல அடுக்குமாடி வீடுகளுக்கிடையே நுழைந்து போய்க்கொண்டிருந்தார்.

திடீரென்று பலர் ஓடி வருவதைப்போன்ற ஒலிகள் கேட்டு அவர் திகைத்துப் போனார்.

சமூக நிலையத்தில் அவரை எதிர்த்த அதே கும்பல் அவர் முன்னே வந்து வழிமறித்து நின்றது.

“ஏய்! இத்து ஹரி லூ சக்காப் பாஞ்ஞா லவா’யா?15 இனி ஹரி ஆப்பா லூ போலே பீக்கின்?”

“ஆப்பா லகி17… தவ்ஸா சக்காப் லகி. தரோ டியா!”

சந்தடி குறைந்த அந்த இடத்தில் தெரிந்த மங்கிய ஒளியில், அவர்களுள் ஒரு சிலர் வைத்திருந்த கத்திகள் மின்னின.

அவர் பேச முயன்றார். ஆனால் அந்த இரக்கமற்ற புரூட்டஸ் கும்பல் அவரைப் பேசவிடவில்லை.

அவர் நெஞ்சிலும் கழுத்திலும் கத்திகள் பாய்ந்தன. இரத்த வெள்ளத்தில் அவர் மூழ்கிக்கொண்டிருந்தார். அவர் தள்ளாடிக் கீழே சாயும்வரை அந்தக் கோழைகள் காத்திருக்கவில்லை அந்த உதிரிகள் சிதறிவிட்டன.

அவர் ஈனக்குரலில் முனகினார்.

அட…உருப்படாத… பாவிகளா!…உருப்படாத…பாவி…

– மே, 1993, புதுமைதாசன் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்டு 1993, ஒக்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *