உதவி செய்ய போய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 6,519 
 
 

“பீஹார்” மாநில செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் தொடர் கொள்ளைதான், சட்ட மன்றத்தில் முதலமைச்சர் இதைக்கண்டு பிடிக்க “தனிப்படை” அமைக்கப்படும் என்று அறிவித்த பின்னர்தான் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகள் குறைந்தன.

இதற்கு காரணம் கடந்த இரு மாதத்தில் சாதிக்பூர்,பிஸ்ராம்பூர்,பாகூர்,ஜல்பாகுரி போன்ற நகரங்களில் நடைபெற்ற வங்கிகளின் தொடர்கொள்ளைதான். போலீஸ் இனிமேலும் இதை தொடர அனுமதிக்ககூடாது என்ற முடிவுடன் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வங்கிகளுக்கு காவலை பலப்படுத்தி உள்ளன. முதலமைச்சா¢ன் அறிவிப்பால் இதை எப்படியும் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி நம் தமிழ்நாட்டு ஆங்கில நாளேடுகளில் ஒரு ஓரத்தில் வெளியிடப்பட்டு பின் மறக்கப்பட்டுவிட்டது.

ஊட்டி “புகழ்பெற்ற ஏரி” சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட நேரம் வரிசையாக நின்று படகில் பயணம் செய்ய ஆவலுடன் கூட்டம் காத்திருந்தது. குடும்பமாகவும்,ஜோடி ஜோடியாகவும் தனி தனி படகுகள் பெற்று ஆரவாரத்துடன் ஏரியில் சவாரி செய்தனர், இதை காணும்போது ஏரியின் மட்டத்தில் படகுகள் சறுக்கு விளையாடுவது போல் தோற்றமளித்தன். இவை அனைத்தையும் பார்த்து இரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இரு உள்ளங்கள் நின்று கொண்டிருந்தன. அவர்கள் இந்த இயற்கையின் அழகில் மனம் நிறைந்து காணப்பட்டாலும் அந்தப்பெண் அவன் கையைப்பிடித்துக்கொண்டிருந்ததில் ஒரு வித பீதி தென்பட்டது. இந்த இரு ஜோடிகளின் பா¢தவிப்பை ஒரு ஜோடிக்கண்கள் கவனித்துக்கொண்டுதான் இருந்தன. அந்த கண்களுக்கு உரியவன் இந்த சுற்றுலா பயணிகளை கூட்டி வந்த டூரிஸ்ட் வேன் முதலாளியும் ஓட்டுனருமான பத்ரு பெல்லிதான்.

பத்ரு பெல்லி ஊட்டியில் இருந்து 25 கி.மீ தள்ளி உள்ள கனஹாட்டா என்னும் ஊரைச்சேர்ந்தவன், காலையில் தன்னுடைய டூரிஸ்ட் வேனை எடுத்துக்கொண்டு காலை எட்டு மணிக்குள் ஊட்டி வந்து விடுவான். அதன் பின் அங்கு வரும் டூரிஸ்ட்களை ஏற்றிக்கொண்டு அனைத்து இடங்களுக்கும் கூட்டிச்சென்று மாலையில் ஊட்டி கொண்டு வந்து விட்டு விடுவான்.மொத்தமாக சுற்றுலா பயணிகளிடம் பேசிக்கொள்வதால் பயணிகளுக்கும் அனைத்து இடங்களையும் பார்த்தது போல் இருக்கும் அவர்களுக்கு அலைச்சலும் குறைவாக இருக்கும்.மதியம் ஒரு மணிக்கு மதிய உணவுக்காக ஒரு கடையில் நிறுத்துவான், இதனால் அந்த கடையில் அவனுக்கு தனி கவனிப்பு உண்டு. சாப்பாட்டு செலவும் இவனுக்கு மிச்சம். அப்படியாக காலையில் ஏறியதுதான் இந்த ஜோடி, இவர்கள் காதலர்களா? கணவன் மனைவியா? இவனுக்கு தெரியாது, ஆனால் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் உருவத்தை வைத்து தெரிந்துகொண்டான். அந்த இளைஞனும், யுவதியும் பேசும் பாஷை “இந்தி”யா அல்லது வேறெதுவா என அவனுக்கு தெரியவில்லை, தன்னிடமிருந்த ஓட்டை இங்கிலீஸ் திறமையை வைத்து பேரம் பேசி ஏற்றிக்கொண்டான்.

ஆனால் ஒவ்வோர் இடத்திலும் நிறுத்தி சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டு விட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்துவான். பயணிகள் முகம் முழுக்க சந்தோசத்துடன் இறங்கிச்செல்வதை இரசித்துப்பார்ப்பான்.அப்படி பார்க்கும்போதுதான் இந்த ஜோடி தயங்கி தயங்கிச்செல்வதயும், சுற்றுலாபயணிகளோடு மகிழ்ச்சியை அனுபவிக்காமல் ஓரமாக நின்று கவலையுடன் நிற்பதை பார்த்தான். இவனுக்கு தன்னை அறியாமல் இவர்கள் மேல் அனுதாபம் ஏற்பட்டது. வீட்டை விட்டு ஓடி வந்த ஜோடியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.ஆனால் இதை எப்படி கேட்பது என்பது அவனுக்கு புரியவில்லை ! ஒரே ஆதங்கமாக இருந்தது.

“வாழ்க்கை” என்பது அனுபவிக்கும்போது அனுபவித்துவிடவேண்டும் அதை விட்டு விட்டு இந்த ஜோடி எப்போதும் கவலையுடன் இருப்பது இவனுக்கு பாரமாக இருந்தது.எப்படியும் அவர்களுடன் பேசிவிடுவது என்று முடிவு செய்தான்.

அரசு ரோஸ் கார்டனில் அனைவரையும் சுற்றிப்பார்க்கச்சொல்லி இறக்கிவிட்டு இந்த ஜோடியிடம் இவனாக வலியப்போய் உடைந்த ஆங்கிலத்தில் ஏன் கவலையாக் இருக்கிறீர்கள்? என்று கேட்டான். திடீரென்று இவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்கள் மெதுவாக சுதாரித்துக்கொண்டு என் பெயார் ஷியாம், இவள் பெயர் சியாமளா நாங்கள் இருவரும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்து செய்து கொண்டோம், இப்பொழுது ஊர்ப்பக்கம் போக முடியாது, அதனால் குறைந்தது ஆறு மாதமாவது எங்காவது தங்க முடியுமா என தவித்துக்கொண்டிருக்கிறோம் !

வாடகைக்கு வீடு கிடைத்தாலும் போதும் கவலையுடன் சொன்னான் அந்த இளைஞன், பத்ரு பெல்லி தமிழ்நாட்டை சேர்ந்தவனல்லவா ! கவலைப்படாதீர்கள் எங்கள் ஊரில் வந்து தங்கிக்கொள்ளுங்கள், நான் வீடு பார்த்து தருகிறேன். நான் எங்கள் ஊருக்கு இங்கிருந்து ஏழு மணிக்கு கிளம்புவேன் அப்பொழுது உங்களை கூட்டிச்செல்கிறேன் நீங்கள் கவலைப்படாமல் என்ஜாய் பண்ணுங்கள்,அவர்கள் மிகுந்த நன்றி சொல்லி மகிழ்ச்சியுடன் ரோஸ் கார்டனை சுற்றிப்பார்க்க சென்றனர். பத்ரு ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்யப்போவதை நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டான்.

ஏழு மணிக்கு மேல் இவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு தன் ஊர் வந்தடைந்தான். இரவு மட்டும் என் வீட்டில் தங்குங்கள், காலையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று சொன்னதற்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் தலையசைத்தனர், அவன் அம்மாவிடம் இவர்கள் கதையை சொன்னான், பொதுவாகவே மலை வாழ் கிராம மக்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள், என் அண்ணா வீடு ஒன்று காலியாயிருக்கு, அங்கு கூட்டிடு போ ! வாடகை ஒண்ணும் தரவேண்டாம், ஆறுமாசம் இருந்துவிட்டு போகட்டும்,பெருந்தன்மையுடன் சொல்ல பத்ரு தன் அம்மாவை கட்டிக்கொண்டான்.

காலை அவர்களுக்கு தன் மாமாவின் வீட்டை காண்பித்து அவர்கள் குடும்பம் நடத்த தேவையான் பொருட்களை ஏற்பாடு செய்து விட்டு அதன் பின்னரே ஊட்டி கிளம்பினான். தன் அம்மாவையும் அவ்வப்போது பார்த்து உதவி செய்யும்படி கூறி விட்டு சென்றான். இரவு இவன் வீடு வந்தவுடன் அவர்கள் நன்றி சொல்லிவிட்டு சென்றனர்.

இந்த ஜோடி வந்து ஒரு வாரம் ஆகி விட்டது, கிராமம் ஆகையால் மக்கள் இவர்களை ஆசையாய் வந்து வந்து பார்த்துச்சென்றனர்.

அடுத்து நான்கைந்து வாரத்துக்குள் அந்த ஜோடி ஆண் இளைஞர்களுக்கும் பெண் இளைஞிகளுக்கும் உடற்பயிற்சியும், தற்காப்புக்கலையும்,கற்றுத்தந்ததால் அந்த ஊரில் மிக பிரபலமாகிவிட்டனர்.

கனஹட்டா பஸ் நிறுத்தத்தில் திடீரென்று ஒரு டீ கடை புதிதாக முளைத்தது, டீ பாயிலர் அமைக்கப்பட்டு அழுக்கான ஆண்கள் இருவர் உள்ளே இருந்தனர், இன்று கடை ஆரம்பித்த முதல் நாள் ஆகையால் டீக்கு காசு வாங்க மாட்டோம் என அந்த ஆண்களில் ஒருவன் வெளியே வந்து சொல்ல அந்த கடையில் கூட்டம் வர ஆரம்பித்தது. பக்கத்து டீக்கடைக்காரருக்கு எரிச்சல், யார் இவர்கள்? புதிதாக கடை போட யார் அனுமதி கொடுத்தது?

அதே ஊரில் இருந்த ஊராட்சித்தலைவரிடம் புகார் சொல்ல அவரும் வந்து அவர்களிடம் விசாரித்துவிட்டு பக்கத்து கடைக்காரர்களிடம் கவர்மெண்ட் பர்மிசனோடத்தான் போட்டிருக்கானுங்க,எதுக்கும் வேற வழி உங்களுக்கு பண்றேன் என்று சொல்லிவிட்டு இந்த பிரச்னையிலிருந்து நழுவிக்கொண்டார்.

ஒரு மாதம் ஓடிவிட்டது, பக்கத்து டீக்கடைக்காரர்கள் பயந்தது போல் இவர்கள் வியாபாரம் ஒன்றும் படுத்துவிடவில்லை, புதிதாக முளைத்த டீக்கடைக்காரர்களை பற்றி புகார் அந்த ஊர் மக்களிடம் புகார் வர ஆரம்பித்துவிட்டது. டீ நல்லாயில்லை, கடையில் ஆளே இருப்பதில்லை, ஒரு ஆள் இருந்தால் ஒருத்தன் இருப்பதில்லை, உள்ளூர் கடைக்காரர்களுக்கு மன்சு நிம்மதியாகிவிட்டது.

ஒரு நாள் இரவு பத்து மணி இருக்கும், பத்ரு வீட்டு கதவு தட்டப்பட்டது, ஊட்டியிலிருந்து வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கப்போகலாம் என்றிருந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைதிறக்க அந்த புதிய டீக்கடையில் வேலை செய்யும் ஆள் நின்று கொண்டிருந்தான்,ஒரு நிமிசம் வாங்க சார் என்று வெளியே அழைத்தான், பத்ருவும் வெளியே வந்தான்.

வீட்டுக்கு வெளியே சற்று தூரத்தில் முவர் நின்றுகொண்டிருந்தனர், அவ்ர்கள் ஆறடிக்கு குறையாமல் இருந்தனர், நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேண்டும், அந்த புதிய டீக்கடைக்காரன் பத்ருவின் தோளில் கை போட்டு பேசினான்.அவன் உதவி கேட்டது உத்தரவு போடுவது போல் இருந்தது.பத்ருவுக்கு உள்ளுக்குள் ஜிவ் என்று பயம் வர ஆரம்பித்தது. நீங்க யாரு? அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை, நீங்க வீடு கொடுத்த அந்த வீட்டுக்கு போய் கதவை தட்டனும், அவங்க யாருன்னு கேட்டா உங்க பேரை சொல்லி வெளிய கூப்பிடனும்,குரல் மிரட்டும் தொனியில் இருந்தது, பத்ரு எதுவும் சொல்லாமல் பலியாடுபோல் அவர்கள் சொன்னபடி அந்த ஜோடி தங்கியுள்ள வீட்டுக்கு சென்று கதவை தட்டினான் உள்ளிருந்து யார்? என்று கேட்க இவன் பேரைச்சொல்ல ஐந்து நிமிடம் மெளனம்…பின தட தட வென சத்தம் ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கி குண்டு பறக்கும் சத்தம், அலறி அடித்து ஓடினான் பத்ரு, சிறிது தூரம் ஓடி திரும்பி பார்க்க அந்த வீட்டை சுற்றி பத்து பதினைந்து பேர் துப்பாக்கிகளுடன் குண்டுகள் முழங்கிக்கொண்டிருக்க அப்படியே மயங்கிச்சரிந்தான்.

முகத்தில் தண்ணீர் பட்டவுடன் விழித்துப்பார்த்தபொழுது அவனை சுற்றி அவன் பார்த்த அந்த தடித்த ஆண்கள் நின்ற்கொண்டிருக்க இவன் எழுந்து மலங்க மலங்க விழித்து பார்க்க இவன் கூட்டி வந்த அந்த இளம் ஜோடி கையில் விலங்கிடப்பட்டு ஆனால் கொஞ்சம் கூட பயப்படாமல் நின்று கொண்டிருந்த்து.

இவனை நோக்கி அந்த டீக்கடை ஆள் நீதானே இவர்களை கூட்டி வந்தாய்? ஆம் என் சொல்ல கன்னத்தில் ஓங்கி ஓரு அறை விட்டான், பின் ஊர் மக்களை சுற்றிப்பார்த்து புதுசா யாராவது வந்தா போலீஸ் ஸ்டேசன்லயோ, இல்ல உங்க ஊர்த்தலைவர்கிட்டயோ சொல்ல மாட்டீங்களா? இதுவரை நடந்த அனைத்தையும் திக்பிரமையுடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஊர் மக்கள் டீக்கடைக்காரன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலைகுனிந்தது

மறு நாள் காலை ! தமிழ்நாட்டில் வெளியான தமிழ், ஆங்கில பத்திரிக்கைகளில் வந்த தகவல்களை திரட்டி வாசகர்களுக்கு நேரடியாக தருகிறோம்.!

பீஹாரில் தொடர் கொள்ளையில் சம்பந்தப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவி பிடிபட்டார். அவருடன் அவர் காவலாளியும் பிடிபட்டார், இவர்கள் அங்கு நடந்த வங்கிகளின் தொடர் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள், அங்கிருந்து குழு குழுவாக மற்ற மாநிலங்களுக்கு தலைமறைவாகியுள்ளனர். அந்தக் குழுவின் தலைவி தமிழ்நாட்டுக்கு வந்து பதுங்க நினைத்துள்ளார், அப்பொழுது அப்பாவி இளைஞன் பத்ரு பெல்லி என்பவன் இவர்கள் யாரென்று தெரியாமலே உதவி செய்துள்ளார்,அந்த ஊரிலும் இவர்கள் யாரென தெரியாமலே அங்குள்ள மக்கள் இவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.அவர்கள் மெல்ல தன் கூட்டாளிகளுடன் தொடர்பு கொள்ளவும் ஆயுத பரிமாற்றங்களையும் இங்கிருந்தவாறு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இந்த கூட்டத்தை தேடிக்கொண்டிருந்த பீஹார் போலீசிடம் ஒருவன் அகப்பட அவன் செல்போனுக்கு தமிழ்நாட்டிலிருந்து யாரோ தொடர்பு கொள்ள் முயற்சித்ததாக தெரிய வர அது எங்கிருந்து என்று பார்க்க ஊட்டியை சுற்றியுள்ள இடம் என் தெரிய வர நம் தமிழக போலீஸ் அதன் பின் உஷாராக வலையை விரிக்க கனஹாட்டா என்னும் ஊர் என தெரிய வர அந்த ஊரிலே போலீஸ் தங்கி இவர்களை கண்காணிக்க இரு உளவுத்துறையினர் டீக்கடை என்ற பெயரில் இங்கு முகாமிட்டுள்ளனர். அதன் பின் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க, அந்த கூட்டமும் போலீஸ் தங்களை சிக்க வைக்க முயற்சிக்கிறது என்பதை மோப்பம் பிடித்துவிட்டனர், அன்று இரவு மட்டும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமலிருந்தால் அவர்கள் அன்று இரவு பறந்திருப்பார்கள். நம் தமிழக போலீஸின் துரித நடவடிக்கையை பீஹார் போலீஸ் கமிஷனர் மனம் திறந்து பாராட்டினார்.

எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பார்களே, அது போல இருந்த்து பத்ரு பெல்லிக்கு ! ஆனால் அதன் பின் நிறைய காதலர்கள் அவனை தொடர்பு கொண்டு உதவி கேட்கிறார்கள், அவன் அம்மா முதலில் உனக்கு கால் கட்டு போட்டால்தான் சரியாவாய் என்று பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *