உண்மைக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 5,527 
 
 

புரட்சிக்காரர்கள் ரயில் தண்டவாளங்களைப் பிடுங்கி விடுவார்கள் என்ற பயத்தாலோ என்னவோ அன்று எக்ஸ்பிரஸில் கூட்டமே இல்லை. என் நண்பனும் நானும் ஏறிய வண்டியில் இருவர்தான் இருந்தார்கள்.

வயது சென்ற ஒருவர் பலகையில் ஒரு ஓரமாக ஜன்னலில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். சுமார் இருபது வயதுள்ள பெண் பலகையின் பாக்கி இடத்தில் படுக்கயை விரித்துக்கொண்டு படுத்திருந்தாள்.

வண்டி புறப்படும் வரையில் அவர் ஒன்றுமே பேசவில்லை . நாங்களும் ரயிலுக்கு வந்த நண்பர்களுடன் பேசுவதில் ஈடுபட்டிருந்தோம். வண்டி நகர்ந்ததும், நாங்கள் இடத்தில் வந்து உட்கார்ந்தோம்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் வயது சென்றவர்.

“நாங்கள் கும்பகோணம் போகிறோம்” என்றான் என் நண்பன்.

“நான் மாயவரம் போகிறேன், ஆகையால் பேசிக்கொண்டே போகலாம்!” என்றார் அவர்.

என் நண்பன் என்னைப் பார்த்து ஜாடையாகச் சிரித்தான் ‘இதேதடா கஷ்டம்’ என்ற பாவனையாக, அதை அவர் கவனித்து விட்டார்.

“நான் சலிப்புத் தட்டும் படி பேசி உங்களை உபத்திரவப்படுத்தி விடுவேன் என்றா பயப்படுகிறீர்கள்?”

“இல்லை, இல்லை. உபத்திரவமென்ன? பொழுது போகிறது” என்று நான் மரியாதைக்காகச் சொன்னேன்.

நான் சொன்னதை அவர் நம்பவில்லை. என்றாலும், பேசுவதை நிறுத்தவில்லை. “அது என்ன பத்திரிகை ஸார்? கதைப் பத்திரிகையா வேண்டாம். எல்லாம் காதல் சமாசாரம்தானே?” என்றார்.

“பின் வேறென்ன இருக்கிறது எழுத?” என்றேன் நான்.

“நிறைய இருக்கிறது. உண்மையான விஷயங்கள் இருக்கின்றன. நானும் பார்க்கிறேன், அவற்றைப் பற்றி எழுத ஒருவருக்காவது தைரியம் இல்லை. உங்கள் பத்திரிகையெல்லாம் நான் படிக்கிறேன்.”

“எந்த விஷயங்கள்?”

“உங்கள் காதல் விஷயங்கள்.”

அவர் அப்படிச் சொன்னதும் ஏனோ எங்கள் பார்வைகள் அந்தப் பெண் மேல் சென்றன. அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவரும் எங்கள் பார்வையைக் கவனித்தார்.

“என்னடா காதல் விஷயமாகப் பேசுகிறான் – வயது சென்றவனாக இருக்கிறானே – இந்தப் பெண் யாராக இருக்கக்கூடும் என்று யோசிக்கிறீர்கள் அல்லவா? இவள் என்னுடைய இரண்டாம் தாரம். இவளுக்கு வயது பதினெட்டாகிறது. எனக்கு நாற்பத்தெட்டு. இவள் கொஞ்சம் அழகானவள் என்பதைக் கவனித்திருப்பீர்கள். நான் அவ்வளவு சுந்தர புருஷன் அல்ல என்பதையும் பார்க்கிறீர்கள். என்றாலும், இவள் என்னுடன் சந்தோஷமாகவே இருக்கிறாள் என்று நான் உங்களுக்குச் சொல்லலாம்.

இந்த மனிதன் இப்படிப் பேச ஆரம்பிப்பார் என்று யார் தான் எதிர்பார்க்கக்கூடும்? நாங்கள் இருவரும், கொஞ்சம் கலவாமைடந்தோம். அவர் இவ்வளவு பேசின பிறகு ஏதாவது சொல்லியாக வேண்டுமென்று என் நண்பன் “வயதில் என்ன ஸார் இருக்கிறது?” என்றான்.

“பார்த்தீர்களா , மறுபடியும் நீங்கள், நான் இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசிய பிறகும், உள்ளதை மறைத்துப் பேசுகிறீர்கள். இவள் என்னுடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்பது உங்கள் தீர்மானம். அப்படி இருப்பதாக நான் ஏமாற்றமடைந்து கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா?” என்றார் அவர்.

“அதாவது…”. என்று நான் ஆரம்பித்தேன்.

“அதாவது, இதாவது என்றெல்லாம் மழுப்பப் பார்க்காதீர்கள். நீங்கள் மனது விட்டுப் பேசினாலொழிய நான் விடமாட்டேன்” என்று அவர் குறிக்கிட்டார்.

“ஆம் என்றுதான் வைத்துக்கொள்ளுங்களேன்!” என்று என் நண்பன் சற்று ஆத்திரத்துடன் சொன்னான்.

“வைத்துக்கொள்ள மாட்டேன். ஆம் என்பதுதான் உண்மையல்லவா?”

“ஆமாம்!”

“சபாஷ், இப்பொழுது சரி, இவள் எனக்கு வாழ்க்கைப்பட்ட போது இவளுக்கு வயது – பதினைந்து. எனக்கு ?” என்று குறுக்கு விசாரணை செய்தார்.

“நாற்பத்தைந்து!”

“கலியாணத்திற்கு முன்பே இவளைச் சந்தித்து, ‘இதோ பார், நான் கிழவன் அழகனுமல்ல. என்னைக் கல்யாணம் செய்துகொள்ள உனக்கு இஷ்டமா, நிஜமாகச் சொல், வரதக்ஷணை இல்லாமல் செய்து கொள்கிறேன் என்பதற்காக நீ சம்திக்க வேண்டாம். வரதக்ஷணை கொடுத்து நான் உனக்கு நல்ல பையனாகப் பார்த்துத் தருகிறேன். நன்றாக யோசனை செய்து நாளைக்குச் சொல்லு என்றேன். மறுநாள் கேட்ட பொழுது ‘சம்மதம்’ என்றாள். நீ எதற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறாய்’ என்று கேட்டேன் – அவள் தூங்குகிறாள். ஆகையால் சங்கடப்படாதீர்கள்; தூங்காவிட்டாலும் பாதகமில்லை – ‘எனக்குத் தெரியவில்லை!’ என்றுதான் திருப்பிச் சொன்னான். கல்யாணமாயிற்று. ஊர்வலத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் ‘ஐயோ, பாருட அரிசியும் எள்ளும் கலந்தாற்போல இருக்கு!’ என்றார்கள். அவள் காதிலும் பட்டது. அவளும் புன்னகை செய்தாள் நானும் சிரித்தேன். மறு மாதமே சாந்தி முகூர்த்தம் நடந்தது. பெண்ணை விட்டு விட்டுப் போகிற போது தாயார் ‘உன்னைப் பாழுங் கிணற்றில் தள்ளாமே..’ என்று ஆரம்பித்தாள். அவள் கோபத்துடன் ‘போதும்மா, போ நீபாட்டிற்கு!’ என்றாள், மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. நடுநடுவில் நான், அடியே என்னைக் கட்டிக் கொண்டாய் விட்டது. இனிமேல் என்ன செய்கிறது என்று யோசிக்காதே. என்னுடனிருப்பது உனக்கு பரிபூரணமாக திருப்தியில்லையென்றால் சொல்லு நானே நிறையப் பணம் கொடுத்து வேறு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன். அந்தச் சமயங்களில் தான் அவள் என்னுடன் பேசாமல் முகம் தூக்கிக் கொண்டு இருந்திருக்கிறாள். உம், இதென்ன சொல்லுங்கள், காதலா?”

எங்களைப் பேசவிடல்லை அவர்.

“கல்யாணமாகாமல் நின்ற அவளைக் கல்யாணம் செய்து கொண்டதற்காக அவள் நன்றி பாரட்டி எனக்குப் பணிந்திருக்கிறாள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். பணியும் ஜாதியைச் சேர்ந்தவள் அல்ல இவள். தன் இஷ்டம் போல் தான் எதையும் செய்வாள், தலைபோகிற பிழையானாலும் பயந்து பொய் சொல்ல மாட்டாள். உதாரணங்கள் சொல்லச் சாவகாசமில்லை…. தாம்பரமா? இங்கே கொஞ்சம் கூட்டம் ஏறும். ஆனால் இது முதல் வண்டி, ஜனங்கள் இதில் ஏற பயப்படுவார்கள் – ஆகையால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்ன நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்ன சிரிக்கிறீர்கள்? பேச விடவில்லை என்கிறீர்களா? சரி, பேசுங்கள்! எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது காதலா? அது என்ன? சொல்லுங்கள். நீங்கள் எல்லோரும் மனோதத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களாச்சே வண்டி கிளம்புகிற வரையில் டயம் கொடுக்கிறேன். யோசியுங்கள்!” என்று இந்த விபரீத மனிதர் , கொஞ்சம் தலையணையை விட்டுச் சரிந்து போயிருந்த மனைவியின் தலையைச் சரியாக எடுத்து வைத்தார்.

அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் வரும் சுவாசத்திற்கடையாளமாக ஒரே தினுசான கால அளவில் மார்பு மேலும் கீழுமாக உயர்ந்து விழுந்து கொண்டிருந்தது. இதழ்கள் லேசாக விரிந்திருந்தன. வரிசையான பற்கள் வெற்றிலைக் காவியுடன் தென்பட்டன. முகத்தில் ஒரு தெளிவும், இன்பக் கனவு காண்பது போன்ற பாவமும் தென்பட்டன.

வண்டி புறப்பட்டது.

இன்னுமொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனே என் மனைவிக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஆனால் முட்டாள் என்று எண்ணி விடாதீர்கள். எண்ண மாட்டீர்கள். ஏனென்றால்

எழுதப்படிக்காதவர்கள் பலர் சரித்திரத்தில் பெயர் எடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். எனவே என் மனைவிக்கு நாவலே என்ன என்று தெரியாது. நான் பேசியாகிவிட்டது. இனிமேல் நீங்கள் தான் பேச வேண்டும்.

என்ன சொல்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் சங்கோசமில்லாமல், என்னவெல்லாமோ சொல்லி விட்டார். அவர் மனைவி சம்பந்தப்பட்ட அந்த அந்தரங்கமாமன விஷயத்தில் நாங்கள் எதை எப்படிச் சொல்வது?

வண்டி பிறகு சில ஸ்டேசன்களில் நின்று சிலவற்றில் நிற்காமலும் ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டுவிட்டோம். இருபுறமும் ஸ்டேசன்களும், ஊர்களும், கிராமங்களும், வயல் வெளிகளும், தோப்புக்களும் சினிமாக் காட்சியில் தென்படும் வேகத்துடன் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இந்த முடிவற்ற சூழலில் ஜால வித்தை போல தோன்றித் தோன்றி மறைந்த ஆண் பெண்கள் எல்லாம், எங்கள் கண்களில் கனவுத் தோற்றம் போலத்தான் பட்டன. எனக்குப் பட்டதால் என் நண்பனுக்கும் அதே மாதிரிதான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு பெண்ணை ஆணிடம் ஈடுபடச் செய்வது என்ன? அவனுடைய அழகா அல்லது யௌவனமா அல்லது அந்தஸ்தா அல்லது அவன் அளிக்கும் சுக சௌகரியங்களா? இந்த மனிதர் சொன்ன விஷயங்களை புருஷன் இல்லை. அப்படி அந்தஸ்து உடையவனாகவும் தென்படவில்லை சுகசௌகரியங்கள் மிகவும் அதிகம் அளிக்கும் சக்தியுடையவராகவும் தெரியவில்லை. பின் எதனால் இந்த இளம்பெண் – அழகும் ஆடைகளும் நிறைந்தவள், இவரிடம் திருப்தியுடன் வாழ்ந்தாள்?

“செங்கல்பட்டில் வண்டி நின்றது. காமு தூக்கமா? எழுந்திருக்கிறாயா?”

காமு உடனே எழுந்து உட்கார்ந்தாள். புருஷன் முகத்தைப் பார்த்தாள். எங்களையும் ஒரு தடவை பார்த்தாள்.

“இவர்கள் கும்பகோணம் போகிறார்கள். ஏதாவது கொஞ்சம் பக்ஷணம் எடேன், எல்லோரும் சாப்பிடலாம்.”

உருக்கி வார்த்த விக்கிரகம் உயிர் பெற்று எழுந்திருப்பது போல அவள் எழுந்து, மேலே பலகையில் வைத்திருந்த தூக்குப் பெட்டி ஒன்றை எடுத்துக் கீழே வைத்துக்கொண்டு , சீருடை, முறுக்கு, தேன்குழல் – எல்லாம் ஒரு காகிதத்தில் வைத்துப் புருஷனிடம் கொடுத்துவிட்டுத் தன் இடத்தில் உட்கார்ந்தாள்.

“ஸார், கொஞ்சம் சாப்பிடுங்கோ, நேற்று கோகுலாஷ்டமி அல்லவா, பக்ஷணம் செய்தாள். வழிக்குச் சௌகரியமாக இருக்கிறது” என்று எங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தார்.

“இந்தா நீ கொஞ்சம் எடுத்தக் கொள்!” என்று காகிதத்தை அவளிடம் நீட்டினார்.

அவள் சிரித்துக்கொண்டே “இப்போ வேண்டாம்!” என்று சொல்லி விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அடர்ந்து நீண்டு வளர்ந்திருந்த தலைமயிரை தொங்க விட்டுப் பின்னிக்கொண்டிருந்தாள் – பின்னல் சாட்டை போல் இருந்தது.

“எங்கள் வண்டிக்கு யாருமே வரவில்லை , வண்டி புறப்பட்டது. இந்தா கண்ணில் கரித்துத்தூள் விழும். படுத்துக்கொள்!”

காமு அவர் முகத்தைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டுப் படுத்துக்கொண்டாள்.

“காமு! இளமையின் ஊறும் வனப்பு உனது உடலில் கால் முதல் தலை வரை ஓடி நிற்கிறது. உன் அழகுக்கேற்ற ஒரு ஆசை உன்னிடம் இருக்குமே – அதை என்ன செய்தாய் ? அதை வதைத்து விட்டு இவர்தான் கதி என்று அமைதி பெற்று விட்டாயா? என்றாவது உன்னையறியாமல் உன் அழகும் யெவனமும் மற்றொரு அழகையும் யௌவனத்தையும் கண்டு பொங்கி எழ வில்லையா? இவரிடம் எதைக் கொண்டு நீ எழிலெனக் கொண்டாய்?

யோசித்து யோசித்து நாங்கள் அயர்ந்து போனோம். கண்ணயர்ந்து விட்டோம். தூக்கம்தான், ஆனால் இரு குரல்கள் காதில் பட்டன. எப்படியோ – அது நாம் சகஜமாக அனுபவிக்கும் விஷயம்.

“ஏன் எழுந்து விட்டாய்? தூக்கம் வரவில்லையா?”

“இனிமேல் தூக்கம் வராது. நீங்கள் வேண்டுமானால் செத்தே படுத்துக்கொள்ளுங்களேன்.”

“எனக்கும் வராது. அவா ரெண்டு பேரும் தூங்கரா. அவாளுக்கு ஒரு பெரிய புதிர் போட்டுவிட்டேன்.

“என்ன ?”

“எல்லாம் உன் சமாச்சாரம்தான்!”

“ஐயையோ அவாகிட்டே போய் என்ன சொன்னேன்?”

“நான் கிழவனாக இருந்த போதிலும் நீ என் பேரிலே….

“ஐயையோ அவமானம்!”

“என்ன அவமானம்? கூஜாவை எடு. நீ பக்ஷணம் எடுத்துக் கொள்ளேன்.”

“எடுத்துக்கிறேன். பக்ஷணம் எல்லாம் நன்னாயிருக்கா? அடுத்தாத்து குஞ்சுவுக்குக் கொஞ்சம் கொடுத்தேன்… அப்பா ரயிலுக்கு வந்திருப்பார்.”

“வண்டி வந்திருக்குமோன்னோ?”

“கட்டாயம் வந்திருக்கும்!”

பிறகு எனக்குக் கேட்கவில்லை. அவர்கள் பேசியிருப்பார்கள். என் நண்பன் நல்ல தூக்கத்தில் முணுமுணுத்தான். அவ்வளவுதான் தெரியும்.

வண்டி மாயவரத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். பாலத்தைத் தாண்டிவிட்டது.

“ஸார் நல்ல தூக்கம் போலிருக்கிறது! நாங்கள் இருவரும் கண் விழித்துப் பார்த்தோம்.

அவர்கள் இருவரும் வரும் ஸ்டேசனில் இறங்கத் தயாராக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“மாயாவரமா வருவது?” என்று நான் கேட்டேன்.

“ஆமாம். தூக்கத்தில் நான் கேட்ட கேள்விக்கு ஏதாவது பதில் தென்பட்டதோ?” என்று கேட்டு அவர் சிரித்தார்.

காமு விழித்துக்கொண்டு உட்கார்ந்ததால் நாங்கள் சும்மா இருந்துவிட்டோம்.

சரி, நீங்கள் சொல்ல மாட்டீர்கள் போலிருக்கிறது. நான் சொல்லி விடுகிறேன். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றொருவரிடம் ஈடுபடுவதற்கு காரணம் அந்த நினைப்பே இல்லாமல் இருப்பது தான். கிராமத்தில் போய்ப் பாருங்கள். முருகனும் நாகம்மாளும் காதலா புரிகிறார்கள்? அவர்களுக்குக் காதல் என்ன என்பது தெரியாது. ஆகவே அவர்களிடையேதான் உண்மையான காதல் இருக்கிறது. இன்னும் அதிகமறிந்தவர்களிடையேதான் காதலே கிடையாது. அசடுதான் இருக்கிறது… அட, இந்தப் பிளாட்பாரத்துல நிறுத்துகிறான்? படியேறியாக வேண்டும். சரி, வரட்டுமா? நன்றாக யோசித்துப் பார்த்து கதை எழுதுங்கள். கண்டதை எழுதி ஊரைக் கெடுக்காதீர்கள். உங்களுக்குப் புண்ணியம் உண்டு.

“நாங்கள் எழுதுகிறவர்கள்….”

அவர் என்னைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் எழுதுகிறவர்கள் போல் இருக்கிறது!” என்று சொல்லிவிட்டு வெளியே போய்க்கொண்டே “போர்ட்டர்” என்றார்.

காமு முன்னால் இறங்கி பிளாட்பாரத்தில் நின்றாள்.

காமேசுவரி! உன்னைப் போலப் பெண்கள் இருந்தால் உலகம் இன்பம் தான்…..

ஸ்வப்ன சுந்தரி போல அவள் மெல்ல நடந்து போனாள் புருஷன் பின்.

சற்று நேரத்திற்கெல்லாம் வண்டி மறுபடியும் ஓட ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *