அநேக மாணவ கண்மணிகள் மாணவியரை கண்டமாத்திரத்தில் பரவசமடைந்து தன்னைத்தானே மறந்து, அவர்களை தமது பார்வையாலும், செய்கைகளாலும், வார்த்தைகளாலும் சீண்டுவதுண்டு. அந்த வீண் விளையாட்டுக்கள் சில நேரம் சீரியஸ் ஆகி ஆபத்தில் முடிவதை நாம் அறிந்து இருக்கிறோம்.
இம்மாதிரியான வம்பு சமாசாரங்களில் முக்கியத்துவம் பெறுவது சினிமா டயலாக் மற்றும் பாடல்கள். மாணவியரின் உடை, நடை, பாவனைகளின் மீது விமர்சனங்களும், சந்தர்ப்பம் கிடைத்தால், கிள்ளி விடுவதுமான ரசனைகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாக்கு நுனியில் சிலருக்கு சமய சந்தர்ப்பங்களுக்கு தக்கவாறு பொருத்தமான பாடல்கள் உடனே வரும். இடம், பொருள், ஏவல் என்பார்களே, இதைத் தவறாமல் அவர்கள் தமது கொள்கையில் மறவாமல் கடைபிடிப்பர்.
அதில் புகழ்பெற்றவை :
சைக்கிள் ஓட்டும் ஒரு மாணவியைப் பார்த்து:
“அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரை ஓடிக்காதே…”
தான் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, சாலையில் சென்றுகொண்டிருக்கும் மாணவியரைப் பார்த்து :
“ஓரம்போ ஓரம்போ, ருக்குமணி வண்டி வருது….”
தற்செயலாக யாராவது ஒரு மாணவி அங்கும் இங்கும் பார்த்தால்:
“பட்டுத்து ராணி பார்க்கும் பார்வை… வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்.”
அழகான மாணவி தனியாக செல்லும் பொழுது:
“கண்ணே, கனியே, முத்தே மணியே அருகில் வா…”
…என்று இன்னும் பல பாட்டுக்கள் அந்தந்த சாந்தர்ப்பத்திற்கு தக்க அதை பாடி சரியாக அமைத்து விடுவர்.
மாணவியரும் மாணவருக்கு சளைத்தவரல்ல என்று நிரூபிக்க அவர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் பொழுது வம்புக்கு வரும் மாணவரை வாழ்நாள் முழுக்க ஞாபகத்தில் வைத்துகொள்ளும் அளவிற்கு சரியான பாடம் கற்பிப்பதுண்டு.
இதன் தொடர்ச்சியாக, நான் ஷார்ட்ஹேண்ட் பயின்ற இன்ஸ்டிடியூட்டின் மாணவியர் வரும் பொழுதும், படித்து முடித்து போகும் பொழுதும், மற்ற இன்ஸ்டிடியூட்டின் மன்மத பாவனைக்கொண்ட மாணவர் பலர் ஈவ் டீஸிங் என்னும் பெண்களை கேலி செய்து தொல்லைத் தரும் செய்கைகளில் ஈடு பட்டு வந்தனர்.
அந்த மாணவியருக்கு லீடராக விளங்கிய மூத்த மாணவிதான் “ஒரு கோலமயிலின் குடியிருப்பு” கதையின் இலட்சிய நாயகியான மல்லிகா. மாணவியர், மாணவர்களின் தொல்லை தாங்காமல் தினமும் புகார் செய்து கொண்டிருந்தனர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மல்லிகா, அவர்கள் அழைத்ததின் பேரில் ஒரு நாள் தானும் அவர்களுடன் வெளியே சென்றார். தற்செயலாக அன்று பார்த்து மல்லிகாவை அழைத்துச் சென்ற நான்கு மாணவியரும் மல்லிகா உட்பட வெவ்வேறு விதமான மலர்களை தமது கேசங்களில் சூடியிருந்தனர்.
ரோடு ஒரத்தில் மாணவியரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த மாணவர் நான்கு பேருக்கும் உடனே ஒரு பொருத்தமான பாட்டு கிளம்பியது –
“பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ…
பூவிலே சிறந்த பூ என்ன பூ…?
சினிமாப்படத்தில், குழந்தைகள், ரோஜாப்பூ, தாமரைப்பூ என்று கூற சிறுமியாக நடித்த ஸ்ரீதேவி, சிறந்த பூ ‘அன்பு’ என்று கூறுவதாக கதை.
இதை எதிர்பார்த்துத்தான் குறும்புகார மாணவர்கள் அன்றும் கேலி செய்தனர். மாணவியர் என்ன செய்வதென்று அறியாமல் தமது முகங்களை தொங்க விட்டுக்கொண்டிருக்கையில் அவர்களை நிற்கச் சொல்லிய மல்லிகா, அனைவருடனும் திரும்பி மாணவர்களை நோக்க, மல்லிகா தனது காலிலிருந்து காலணியை கழற்றி கையில் எடுத்துக் காட்டி “செருப்பு” என பதிலளித்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத குறும்புக்கார மாணவர்கள் அனைவரும் இஞ்சி தின்ன குரங்கைப்போல் பல்லை இளித்துக்கொண்டு ஒவ்வொருத்தனாக நடையைக் கட்டினர். அகம் மலர மாணவியர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அன்றிலிருந்து மல்லிகாவை தமது லீடராக அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், நிம்மதியாக வந்து போக வழி பிறந்ததற்கு மல்லிகாவுக்கு நன்றி செலுத்தினர்.
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே….