(இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து வரும் என்று நம்பினர். இந்தக் கருத்தை வேறு எங்கும் காணமுடியாது.
சங்ககாலத் தமிழர்கள் சொல்லிலும், செயலிலும் இந்துக்களாக வாழ்ந்தனர். காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞன் கூறிய அதேகருத்தை குறுந்தொகைப் பாடலிலும் காணலாம்.
சீதாதேவியைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி பழிச்சொல் கூறியவுடன் அவளை ராமன் காட்டிற்கு அனுப்பி விடுகிறான். உடனே சீதை “நான் என் குழந்தையை ஈன்றவுடன் சூரியனை நோக்கி தவம் செய்யப்போகிறேன். அடுத்த ஜென்மத்திலும் உன்னையே கணவனாக அடையவும், அப்போது பிரிவுத் துயரின்றி உன்னோடு வாழவும் பிரார்த்திப்பேன்…” (ரகுவம்சம் 14-66) இதே கருத்தை அம்மூவனார் குறுந்தொகைப் பாடலிலும் காணலாம்.
காதல் என்பது உடல்மீது ஏற்பட்டது மட்டுமே அல்ல. அதனையும் கடந்தது. மனத்தளவில் உயர்ந்து நிற்பது. மனைவியின் உடல் அழகு பற்றி, தலைமுடியெல்லாம் நரைத்த போதும், கணவனின் அன்பு மாறாது என்பதை நற்றிணைப் பாடல் காட்டுகிறது.
கணவனின் இன்பத்தில் மட்டும் பங்கு கொள்ளாது, அவனது துன்பத்திலும் பங்கு கொள்வதே நல்ல மனைவிக்கு அழகு என்பது இந்துக்களின் கருத்து. ராமனைக் காட்டுக்குப் போகும்படி கைகேயி கூறுகிறாள். ராமன் புறப்பட ஆயத்தமாகிறான். சீதை நானும் கூடவருவேன் என்று அடம் பிடிக்கிறாள். கானக வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்கள் பற்றி ராமன் நீண்ட அறிவுரை பகர்கிறான். ஆனாலும் சீதை விடவில்லை. அவனது துன்பத்திலும் பங்குகொள்வேன்… கணவன் இருக்குமிடமே சொர்க்கம் என்கிறாள். இதே கருத்தை கலித்தொகையிலும் காணலாம்.
கணவன் வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும்கூட, செல்வச்செழிப்புடன் வாழ்ந்த மனைவி, தன் பணக்காரப் பிறந்தகத்திற்குச் செல்வதில்லை. சத்யவான் சாவித்ரி கதையில், சத்தியவானுக்கு விரைவில் மரணம் வரப்போகிறது என்பதை அறிந்த சாவித்ரியின் தந்தை அவளிடம் வேறொரு கணவனைத் தேர்ந்தேடுக்கும்படி சொல்கிறார். அதற்கு சாவித்ரி, “அவருக்கு நீண்ட ஆயுளாகட்டும், குறைந்த ஆயுளாகட்டும்; ஒருமுறை ஒருவரை கணவனாகத் தேர்ந்தெடுத்த நான் இனி வேறொருவனை நினையேன் (மஹாபாரதம்) என்கிறாள்.
ராமாயணத்திலும் ஏகபத்தினி விரதனாக ராமன், “இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்..” (கம்பராமாயணம்-சுந்தரகாண்டம்) என்று கூறுகிறான்.
கணவனுடன் வறுமையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு பெண்ணை புலவர் போதனார் சிறப்பாகப் பாடுகிறார். அதில், “கணவனின் குடி வறுமைப்பட்டது ஆயினும், தந்தையின் செல்வத்தை நினையாது நீர்த்த கஞ்சியை ஒருவேளை விட்டு மறுவேளை உண்ணுகிறாள் பெண்…” என்கிறார்.
இதேபோன்ற சம்பவங்களை நள-தமயந்தி; ஹரிச்சந்திரன்-சந்திரமதி கதைகளிலும் காணலாம்.
தாய்வீட்டில் தேனும் பாலும் கலந்து உண்டாள். ஆனால் புகுந்தவீட்டில் வறுமை தலைவிரித்தாடுகிறது. கணவன் வீட்டுத் தோட்டத்தில் இலை தழைகள் விழுந்து அழுகிய நீர்நிலை இருந்தது. அதையும் மான்கள் குடிக்கின்றன. அத்தகைய நீரை மனைவி குடிக்கிறாள். அந்த நிலையிலும் பிறந்தகத்து பாலையும் தேனையும்விட அது இனிக்கிறதாம்.
கல்வி, வணிகம், போர், தூது ஆகியவற்றின் பொருட்டு கணவன் பிரிந்து சென்றால், அவன் திரும்பிவரும் நாட்களை எண்ணி ஏங்கிக் காத்திருந்தனர் பெண்கள். சுவரில் வெற்றிலைச்சாறால் கோடிட்டு நாட்களை எண்ணும் வழக்கத்தை தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. காதலனைப் பிரிந்த காதலி அவன் திரும்பிவரும் நாட்களைக் கணக்கிட பூக்களைப் பயன்படுத்தியதாக மேகதூதத்தில் காளிதாசர் கூறுகிறார்.
சுவரில் கோடிட்டு நாட்களை கணக்கிட்டதாக குறுந்தொகை, அகநானூறு பாடல்களில் முறையே கொற்றன்; மாமூலனார்; எயினந்தை மகன் இளங்கீரனார்; பொருந்தில் இளங்கீரனார் பாடுகின்றனர். ஈருடலாகக் கணவனும், மனைவியும் வாழ்ந்த போதிலும் ஓருயிராகவே கருதினர்.
என்தாயும் உன்தாயும்; என்தந்தையும் உன்தந்தையும் யார்யாரோ உறவு இல்லை. நானும் நீயும் ஒருவரையொருவர் முன்பு அறிந்திலோம். ஆயினும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அதனுடன் கலந்து ஒன்றாவதுபோல, நம்முடைய இரு உள்ளங்களும் கலந்தன என்கிறார்.
இதேகருத்தை, “சொல்லும் அதன் பொருளும் பிரிக்க முடியாததுபோல” என்ற உவமையைக் கையாண்டு விளக்குகிறார் காளிதாசன். ரகுவம்சத்தின் முதல் பாடலில் பார்வதியையும், பரமேஸ்வரனையும் அர்த்தநாரீஸ்வரர் சொரூபத்தில் பார்த்த அவர் ‘சொல்லும் பொருளும்போல’ என்று அவர்களை விவரிக்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வட, தென்மொழி நூல்கள் ஒரே கருத்தைப் பாடுகின்றன. பெண்மையையும் இல்லறத்தையும் போற்றுகின்றன.
இமயம்முதல் குமரிவரை இந்துப்பெண்கள் இறையுணர்வு கொண்டிருந்தனர். சந்திர சூரியரையும் துர்க்கை முதலிய தெய்வங்களையும் பெண்கள் வழிபட்டதை சங்கஇலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பிறை வழிபாடு, துர்க்கை வழிபாடு, வேலன் வெறியாடுதல் ஆகியவற்றை குறுந்தொகையில் காணலாம். மறுமையிலும் ராமனையே கணவனாக அடைய சீதை சூரியனை வழிபடுகிறாள்.
குழந்தைகளைப் பெறுவது குறித்தும் இமயம்முதல் குமரிவரை ஒரே கருத்துள்ளது. மக்கட்பேறு மூலம் கணவன் மனைவி வலுப்படுவதை காளிதாசனின் அமரகாவியம் சாகுந்தலத்திலும்; ராமாயணத்தில் லவ-குசன் கதையிலும் காண்கிறோம். இதே கருத்தை தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் காண்கிறோம். மக்கட்பேறு இருந்தால்தான் சொர்க்கத்தில் நுழையமுடியும் என்ற கருத்தும் வலுவாக இருந்தது.
மனுநீதி, “புத் என்னும் நரகத்திலிருந்து விடுவிப்பதால் பிள்ளைக்கு புத்ரன் என்று பெயர்…” என்கிறது. புத்ர என்பது புறநானூற்றிலேயே புதல்வன் என்று பயன்பட்டுள்ளது.
விருந்தோம்புதல் கடமையை இந்துக்கள் தவிர வேறு எவரும் ஒரு கடமையாக, தர்மமாகக் காட்டவில்லை. ஆரம்பத்திலிருந்தே இதை வலியுறுத்தும் ஒரேமதம் இந்துமதம். ‘அதிதி தேவோ வஹ’ என்று வேதத்தில் துவங்கி, ‘பஞ்ச மஹா யக்ஞ்ம்’ என்று ஸ்ம்ருதிகளில் பரவி ‘விருந்து’ என்று குறள்வரை வந்து இருக்கிறது. ஆரிய-திராவிட இனவேற்றுமை பாராட்டுவோருக்கு சரியான அடி இது.
கணவன்-மனைவி ஆகிய இருவருக்கும் பொதுவான சமுதாய கடமை விருந்தினர்களைப் போற்றுதல். விருந்தோம்பல் கருத்தை ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும், சங்கப்பாடல்களிலும், திருக்குறளிலும் காண்கிறோம். சீதையும், கண்ணகியும் தாங்கள் இல்லாதபோது, தங்களுடைய கணவர்கள் எப்படி விருந்து படைப்பார்கள் என்று வருந்துகின்றனர்.
இவ்வாறு மக்கட்பேறு மூலம் (ஈமக்கடன் செலுத்தும் மகன்மூலம்) சொர்க்கம் விருந்தோம்பல் ஒரு (அதிதி யக்ஞம்) சமுதாயக் கடமை, இறைவழிபாடு மூலம் (தேவ யக்ஞ்ம்) ஆன்ம முன்னேற்றம் அடைதல் ஆகிய கருத்துக்களை வேறுஎந்தப் பண்பாட்டிலும் பெண்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்ததைக் காணமுடியவில்லை. இந்திய இலக்கியங்களில் மட்டுமே இவைகள் பரவிக்கிடக்கின்றன.
இந்திய இலக்கியங்களில் எட்டு வகையான திருமண முறைகள் காணப்படுகின்றன. பழந்தமிழ் நூலான தொல்காப்பியமும் இதைப் பகிர்கிறது. மனுஸ்ம்ருதி சொன்ன எட்டுவகைத் திருமணங்களையும் தொல்காப்பியர் அப்படியே திரும்பச் சொல்கிறார்.
காதல் திருமணத்தையும், பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணத்தையும் இருமொழி நூல்கள் குறிப்பிட்டாலும், காதல் திருமணத்தில் பெற்றோரின் கடும் எதிர்ப்பு இருந்ததையும், ஊரார் பழித்து தூற்றியதையும் சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. இதையும் மீறி காதல் திருமணங்கள் நடந்ததற்கும் பாடற் சான்றுகள் உள்ளன.
காதல் திருமணமாயினும், பெற்றோர் முடித்த திருமணமாயினும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மைதான் வெற்றிக்கு அடிப்படை. ஆணும் பெண்ணும் அறிவு, செல்வம், அழகு, அணுகுமுறை, கணிப்பீடு, விறுப்பு, வெறுப்புகளில் கட்டாயமாக மாறுபடுவர். ஆயினும் கொள்ளுவன் கொண்டு, தள்ளுவன் தள்ளி ஒருவர் குறையை ஒருவர் நிறைவு செய்து பொறுமையைக் கடைப்பிடித்து அனுசரித்து வாழ்ந்தால் திருமணம் வெற்றிகரமாக முடியும் என்பதையும் புரிந்து வைத்திருந்தனர்.
இன்று மேலைநாடுகளில் பெற்றோர் முடிக்கும் திருமணம் அறவே இல்லை. எல்லாமே காதல் திருமணங்கள்தான். ஆயினும் உலகிலேயே பிரிவும் விவாகரத்தும் மேலைநாடுகளில்தான் அதிகம். ஜனத்தொகை விகிதாசாரப்படி இந்தியாவில் மிகமிகக் குறைவு. தற்போது இந்தியாவில் இஸ்லாமியர்கள் ‘தலாக்’ சொல்வதை நிறுத்தும் சட்டம் வந்துவிட்டது.
ஐரோப்பாவில் பிரிட்டனில்தான் விவாகரத்து அதிகம். எலிசபெத் மஹாராணியாரின் குடும்பமே இதற்கு முன்னுதாரணம். மஹாராணியைத் தவிர அத்தனை மகன்கள், சகோதரிகள் திருமணமும் விவாகரத்திலும், பிரிவிலும் முடிந்தன. ஆகவே காதல் திருமணம் சிறந்தது என்கிற வாதம் அடிபட்டுப்போகிறது. ஒருகாலத்தில் அங்கும் திருமண உறவு சிறிது வலுவாகவே இருந்தது. அப்போது நண்பர்கள், பெற்றோர்கள் ஆலோசனையுடன் திருமணங்கள் முடிவு செய்யப்பட்டது. இதை ஆங்கிலக் கதை கவிதைகளில் காணலாம்.
லண்டன் போன்ற பலஇனக் குழுக்கள் வாழும் நகரங்களில் பாலியல் நோய் சிகிச்சைக்கு வரும் பலரில் இந்தியர்கள் மிகமிகக் குறைவு.
இன்று பழக்கத்தில் இருந்துவரும் நூல்களில் மிகப்பழைய நூல் ரிக்வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் 85 ஆவது திருமண மந்திரம். அந்த மந்திரம் மணப்பெண்ணை அதிர்ஷ்டகரமானவள் (சுமங்கலி); மங்கலத்தை அளிப்பவள் (சிவா); கணவனின் அன்பைப் பகிர்ந்து கொள்பவள் (ஜாயா); குழந்தைகள் பெறுபவள் (ஜனி); மஹாராணி இல்லத்தரசி (மஹாராக்ஞி) என்றெல்லாம் வர்ணிக்கிறது.
கணவனுக்கும் மனைவிக்கும் எல்லா வளங்களும் கிடைக்கவேண்டும் என்றும், இருவரும் நீண்ட ஆயுளுடன் ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகளைப் பெறவேண்டும் என்றும் அந்த மந்திரம் வாழ்த்துகிறது.
மணப்பெண்ணுக்கு சில பயனுள்ள அறிவுரைகளையும் வழங்குகிறது. கோபப்படக்கூடாது; எல்லோரிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மாமனார் மாமியார்; மைத்துனர், மைத்தினி ஆகியோரிடையே ராணியாகத் திகழவேண்டும்; இறையுணர்வோடு பிராணிகளுக்கு நலன் விளைவிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறது.
அதிதி, சரஸ்வதி, ராகா, சீனிவாலி, உஷஷ், வாக், அப்சரஸ், பிருத்வி முதலிய பெண் தேவதைகளையும் ரிக்வேதம் பாடுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் தாய் அதிதி. சொல்லுக்கெல்லாம் தேவதை சரஸ்வதி.
இன்றுள்ள ஏனைய மதங்களில் பெண் தெய்வங்களே அரிது. ஆனால் இந்துமதத்தில் பெண்தெய்வங்கள் இருப்பது மட்டுமின்றி, பெரும்பாலான தெய்வங்கள் கணவன்-மனைவியாக ஜோடியாக வழிபடப்படுவது மற்றொரு சிறப்பாகும் இவையெல்லாம் பெண்கள் குடும்ப உறவு ஆகியன பற்றிய அவர்களுடைய கொள்கையை விளக்குவதாக அமைந்துள்ளது.
சிவன்-பார்வதி; விஷ்ணு-லக்ஷ்மி; முருகன்-தேவசேனா என்று அடுக்கிக்கொண்டே போகலாம். குடும்ப உறவுக்கு அவ்வளவு முக்கியத்துவம். சமஸ்கிருதத்தில் கடவுளர் ஜோடிகளின் பெயர்கள் 2700 ஆண்டு பழமையான பாணினியின் அஷ்டாக்யாயியில் உள்ளன. சிவ-ஷிவானி; பவ-பவானி; இந்திரன்-இந்திராணி; வருண-வருனாணி; அக்னி-அக்னாயி… இதேபோல பெண்பால் பெயர்களை ‘இ’ சேர்த்து தமிழர்களும் உண்டாக்கினர். உதாரணம்: குறவன்-குறத்தி; பாப்பான்-பாப்பாத்தி; வண்ணான்-வண்ணாத்தி போன்றவைகள்….