அது ஒரு ரயில் நிலையம்.
அங்கே பயணிகளை நிரப்புவதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் பத்து நிமிடம் நிற்பது வழக்கம்.
ரயில் நின்ற போது
கருப்பு வெள்ளை தாடியும்
கசங்கிய யூனிபார்மும்
வியர்வை பூத்திருந்த முகத்தையும்
அடையாளமாக கொண்ட
ரயில்வே டீ ஊழியர் ஒருவர்
“சமோசா ! டீ!”
“சமோசா ! டீ !”
“சமோசா ! டீ !”
என ரயிலின் சன்னல் கம்பிகளின் மீது தனது ‘டீ கேனை’ தொங்கவிட்டு கூவிக்கொண்டிருந்தார்.
“யோவ்…எனக்கு ஒரு டீ”
என அகண்ட மனிதர் ஒருவர் கேட்டார்
அவர் நிரப்பிதந்த டீ போதாமையால் அகண்ட மனிதர் சிரித்துக்கொண்டே அந்த கப் முழுதும் நிரப்ப சொன்னார்
அவரும் நிரப்பி தந்தார்.உலகையே வென்றதாய்.ஒரு கர்வம் அந்த அகண்ட மனிதரின் கண்களில் மிளிர்ந்தது.
“பயணிகளின் கனிவான கவனித்திற்கு…”
தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் வரை செல்லும் ‘காரைக்கால் எக்ஸ்பிரஸ்’ இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்…
என பெண் குரல் அறிவிக்கிறது.அந்த குரலுக்கு அதிகம் 25 வயதுவரை இருக்கலாம்.
ரயில் பெட்டியில் கவுரமான கூட்டம்.
இரண்டு திருநங்கைகள் ஏறுகின்றனர்…ரயில் பெட்டிக்குள்
ஹெட்செட் மாட்டிக்கொண்டு ரஹ்மான் பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞன் அதிர்ச்சியடைந்து மிகுந்து பதட்டத்தோடு தன் பர்சில் இருந்து ‘ஐந்து ரூபாய்’ நாணயத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்கிறான்.
திருநங்கையிடம் ஐந்து ரூபாய் குடுக்கும்போது அவன் உள்ளங்கை வியர்த்து நனைந்திருந்தது.
அவன் தலையில் கைவைத்து திருநங்கை ஆசிர்வதித்து அடுத்த இருக்கைக்கு நகர்கிறாள்.
அவன் திருநங்கைக்கு பர்சில் சில்லறை எடுத்து போது அறியாமல் தவறவிட்ட இருநூறு ரூபாய் தாளை ஒரு மூதாட்டி எடுத்து அவனிடம் தந்தாள்.
அந்த மூதாட்டி ரயில் முழுதும் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததை இவன் பார்த்திருந்தான்.
அவனிடம் சைகை மொழியில் எனக்கு பசிக்குது டீ வாங்கி குடு என கேட்கிறாள் அந்த ‘ஹெட்செட் இளைஞன்’ தலையை திருப்பிக்கொள்கிறான்.
அந்த மூதாட்டி எந்த சலனமும் இல்லாமல் அடுத்த இருக்கையில் கைக்குழந்தையோடு அமர்ந்திருந்த அம்மா குடுத்த இரண்டு ரூபாயை வாங்கி வைத்துக்கொண்டாள்.
“தயிர்சாதம்! லெமன்சாதம்! புளிசாதம்!”
பொட்டலம் 30 ரூபா தான் சார் வாங்கிக்க
என கூவிக்கொண்டு வந்தவனிடம்
மூதாட்டி அவளின் சுருக்குப்பையை அவிழ்த்து மொத்த சில்லறைகளை திரட்டி “ஏழு ரூபாய்” கொடுத்து
‘சாதம்ம்ம்ம் என்றாள் ஈனஸ்வரத்தில்’.
அவன் சத்தமாக கேட்டான்
‘ என்ன சாதம் வேணும் ? ‘
‘ புளிசாதம் ! ‘
ஏழு ரூபாயை வாங்கிக்கொண்டு இரண்டு புளிசாதப் பொட்டலங்களை அவளிடம் கொடுத்துவிட்டு
“தயிர்சாதம்! லெமன்சாதம்! புளிசாதம்!”
என மீண்டும் கூவி நகர்ந்தான்.