(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிதா சுதன் போட்டவாறு கோவிலுக்குள் நான் நுழைந்தபோது முன் வரிசை இருக்கையில் அங்கொருவர் இங்கொருவராகக் கொஞ்சம் பேர் ஜெபமாலையும் கையுமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். சுற்றிலும் நிற்கின்ற சுரூபங்களின் காலடிகளில் கண்ணீரும் கம்பலையுமாகச் சிலர்!
கட்டாகக் கொளுத்தப்பட்ட மெழுகுதிரிகளின் நெருப்பு வெளிச்சத்தில் கண் மூக்கு எரிய எரிய கன்னங்கள் மின்ன மின்ன, வழிந்தொழுகும் வியர்வையுடன் வழியுயர்த்திக் குத்திட்டு நிற்கும் சிலர்!
சிலுவையில் அறையப்பட்டதுபோல் விரிந்த கைகளுடன் பீடத்தை நோக்கி முழங்கால்களால் நகர்ந்தபடி சிலர்!
மாதாவின் காலடியில் ஒரு கொழுத்த அம்மாள். சேலைக்குள் நெளியும் தடித்த கால்களை சீராக வைத்துக் கொள்ள முடியாமல், கிட்டத்தட்ட விழுந்து கிடப்பதைப்போல்….
எனக்கு பாவமாக இருக்கிறது! பயமாகவும் இருக்கிறது. பக்தியின் வேகத்துடன் மாதாவின் முன் முழங்கால் மண்டியிடப்போய் உடல் ஒத்துழைக்காமையால் கால் பிசகி சரிந்து விழுந்து அப்படியே அமர்ந்து, எழவே முடியாமல் கிடப்பதுபோலவும் தெரிகிறது. மாதாவின் முன்னுள்ள இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன். அந்த அம்மாளின் மேல் ஒரு கண் வைத்தபடி ஏதாவது அவசரம் என்றால் உதவும் எண்ணத்துடன், அம்மாவின் கைகளில் கிண்டி குழந்தை ஏசுவின் நவநாள் செபக் கொத்து.
முன் இருக்கைக் காரர்களின் கைகளில் விரலடையாளத்துன் விரிந்திருக்கும் பைபிள். மத்தேயுவின் வரிகள். 8.24.25:
‘உறங்கிக் கொண்டிருந்த இயேசுவை அணுகிய சீடர்கள் அவரை எழுப்பியபடி கதறினார்கள். ஆண்டவரே காப்பாற்றும் நாங்கள் மடிந்துகொண்டிருக்கின்றோம்….’
அந்தச் சீடர்களைப் போலத் தான் இவர்களும், எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பிரார்த்திக்கக் குழுமி உள்ளனர். பிரச்சினைகள் கூடக் கூடப் பிரார்த்தனைகளும் கூடத்தான் செய்கின்றன.
மடிந்து அலங்கோலமாய் விரிந்து கிடந்த கொழுத்த கால்களில் ஒன்றை வலிப்பு வந்துவிட்டது மாதிரி விசுக் விசுக்கென்று உதறி பிறகு ‘டக்கென ஊன்றி எழுந்து மாதாவின் கன்னத்தில் கொஞ்சி முத்தமிட்டபடி என்னைக் கடந்து நடக்கின்றார்கள் அந்தம்மாள்.
என்னால் நம்ப முடியவில்லை.
கோவிலில் கூடி இருக்கும் இந்தக் கொஞ்சம் பேரும் விசுவாசத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். ஆழமான விசுவாசத்தின் மூலம் ஏசுவுடன். உரையாடிக் கொண்டிருக்கின்றனர். யாராவது ஒருவர் எழுந்து நின்று அருகே அலையடித்துக் கிடக்கும் கடலைப் பார்த்து ‘தூரப்போ’ என்றால் அது போய்விடும்.
அத்தனை விசுவாசம்.
அந்தக் குண்டான அம்மாள் விசுக்கென்று எழுந்து விருவிரென்று நடந்துவிடவில்லை!
ஒருவேளை எழும்ப முடியாமல் தவித்தால் உதவி செய்வோம் என்று தான் அமர்ந்தேன். அந்தம்மாள் எழுந்து நடந்துவிட்ட பிறகுதான் என்னுடைய வெறுமை புரிந்தது.
பின்னழகு, முன்னழகு காட்டவும் களிக்கவும், பார்த்துப் பரவசிக்கவும் என்று எதுவும் அற்ற ஒரு இடை நிலைப்பொழுது கூட்டம் கும்மாளம், குழுமம், குதூகலம், ஆரவாரம் அலங்காரம் என்று அவற்றிற்கான வேளைகள் உண்டு. பொழுதுகள் உண்டு. இப்போது எதுவுமில்லை.
இந்த நேரத்தில் நான் வந்தது இந்தக் கூடியிருக்கும் கொஞ்சப் பேரைப் போல ஏசுவுடன் பேச அல்ல. ஏசுதாசனுடன் பேச, ஏசுதாசன் தான் இந்தத் தேவாலயத்தை ஆண்டு கொண்டிருப்பவர். அதாவது பங்குத் தந்தை. எனது உற்ற நண்பர்.
போலீஸ்காரர்களுடன் தான் நட்புக்கூடாது என்பார்கள் பெரியவர்கள். பகையும் கூடாது தான். இரண்டிலுமே தனித்தனியான ஆபத்துகள் உண்டு.
‘பாதர்’ மார்களிடம் நட்புக் கொள்ளலாம். பகையும் கொள்ளலாம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவார்கள் என்று கூற முடியாவிட்டாலும் நம் கன்னத்தில் அறையக் கை ஓங்க மாட்டார்கள்.
‘என்பதற்கு என்ன உத்தரவாதம்’ என்கின்ற மனதை அடக்கி உள்ளேயே அழுத்திக் கொண்டு எழுந்து பின்பக்கம் நோக்கி நடந்தேன் பங்குக் குருவானவரைக் காண.
இவருடனான எனது நட்பு பாடசாலை நாட்களில் இருந்து தொடர்ந்த நட்பு.
அப்போது ஏசுதாசன் அல்ல. என்னுடைய பெயர் தான் அவருக்கும்.
வகுப்பாசிரியர் பிரண்ட் மார்க் செய்யும்போது எனக்காக அவனும் அவனுக்காக நானும் பிரசண்ட் சொல்லி ஏச்சுப்பட்டிருக்கின்றோம். தோட்டத்துச் செக்ரோலில் சின்னக்கறுப்பைய்யா பெரிய கறுப்பையா என்பது மாதிரி அதன் பிறகு ஆசிரியரும் இரண்டு அடை மொழிகளை எங்கள் பெயர்களுக்கு முன்னால் இணைந்தே கூப்பிடுவார். நல்லவன் – கெட்டவன் என்பதே அடைமொழி. நல்லவன் எனக்கு. கெட்டவன் அவனுக்கு. ஏசுவைப் போலவே இவனும் ஒரு நாள் காணாமல் போய் ஆண்டுகள் பல கடந்து திடீரென ஒரு நாளில் கோவிலுக்குச் சென்றிருந்த என் முன்னால் அங்கியும் தாடியுமாக நின்றான். தவறு@ தவறு@ பெருந்தவறு@ நின்றார்!
முழந்தாளிட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். கண்ணதாசன்@ பாரதிதாசன் என்பது போல் ஏசதாசன் என்பதும் அவருக்கான பெயராகி விட்டது. எங்கள் பங்கில் பணியாற்றியபோது இரண்டு மூன்று தடவைகள் வீட்டுக்கும் வந்திருக்கிறார். மனைவி மக்களுடனும் மகிழ்ந்து பேசி உணவருந்திச் சென்றுள்ளார். பிறகு மாற்றலாகிப் போய்விட்டார். இப்போது இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார் பங்குத் தந்தையாக. இந்த நினைவுகளுடன் அவரிடம் ஒரு உதவி கோரி இங்கு வந்து காத்திருக்கின்றேன்.
தெரிந்தவர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், செல்வாக்காளர்கள் என்று எவரிடமும் உதவி கேட்டுப் பழக்கப்படாதவன் நான். உதவிக்காகப் போகாதவன் நான். ஆனாலும் சூழ்நிலை என்னை அருட்தந்தை ஏசுதாசனிடம் ஒரு உதவிக்காக கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறது.
***
கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். பாதரைப் போல் பள்ளித் தோழன் அல்ல. தொழில் தோழன். ஏறத்தாழ ஒரு முப்பதாண்டு காலம் ஒன்றாகத் தொழில் புரிகின்றோம். ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாகப் பதவி ஏற்று, ஒன்றாக ஊழியமாற்றி, ஒன்றாகப் பழகி, ஒன்றாகப் பதவி உயர்வுகள் பெற்று அவர் ஒரு பகுதிக்கும் நான் ஒரு பகுதிக்குமாக ஒன்றாகப் பொறுப்பாளராகி….
இந்த ஒன்றாக, ஒன்றாக என்னும் நிலை உத்தியோகம், தனித்தனி வாழ்வு, குடும்பம், பிரபஞ்சம் என்று ஒவ்வொரு சின்னச் சின்ன, பெரிய பெரிய விஷயங்களில் எல்லாம் எங்களை இணைத்தே வைத்துள்ளது. நட்பைப் பிணைத்தே வந்துள்ளது. அவருக்குத் தெரியாமல் என்னிடமோ எனக்குத் தெரியாமல் அவரிடமோ ரகசியங்கள் ஏதும் இருந்ததில்லை.
இது எனது அகத்தைப் பொறுத்தே என்பதை கோபாலின் மனைவியின் வருகை ஒரு நாள் எனக்கு நிரூபித்தது.
‘மனைவி வந்திருப்பதாக’ வாயிற்காப்போன் வந்து கோபாலிடம் கூற ‘இப்போது பார்க்க முடியாது என்று சொல்’ என்று அவர் கூச்சலிட ‘என்னைப் பார்க்கலாமா’ என்று அந்தம்மாள் அனுமதிகோர ‘கூட்டிவா’ என்றேன். ஒரு உயர் அதிகாரியான கோபால், தன்னைக் காண வந்த மனைவியை இப்படித் திருப்பி அனுப்ப வாயிற் காப்போனிடம் கூச்சலிட்ட செய்கை எனக்கு மிகவும் அசிங்கமாகப்பட்டது.
வரவேற்பறையில் காத்திருந்தேன்.
மழை பொழியக் காத்திருக்கும் கருமேகக் கூட்டம் போல் அழுகைக்காகத் துடித்துத் தவிக்கும் கண்களுடன் வெறுமையும் விரக்தியுமாக…
எத்தனை அழகான முகம் அவளுடையது! ஒரு தெய்வீக தேஜசுடன்….
ஒளி தெறிக்கும் அந்த ஒற்றைக்கல் மூக்குத்தி, கை நிறைந்து குலுங்கும் தங்க வளையல்கள்… கழுத்தடியின் சட்டைக்குள் மின்னி மின்னிப் பதுங்கிக் கொள்ளும் அந்த பதின்மூன்று சவரன் தாலிக்கொடி.
என்ன இப்படி…. என்றேன்.
ஒரு வருடத்துக்கு மேலாக சம்பளமே தருவதில்லை. பிள்ளைகள் இரண்டும் யாழ்ப்பாணத்தில் படிக்கிறதுகள்…
செலவுக்கான காசை அம்மாவுக்கு நான் மாதமொருதடவை சென்று கொடுத்தே ஆகவேண்டும். நகைகள் தான் கை கொடுக்கின்றன…. அத்தனையும் பேங்கில்.
ஏன் அவர் மிகவும் நல்லவராயிற்றே… நான் மிகவும் குழப்பத்திற்குள்ளானேன்.
அப்படியே இருங்கள் நான் அவரைக் கூட்டி வருகின்றேன் என்று கிளம்பினேன்.
‘வேண்டாம் வேண்டாம்’ என்று தடுத்தவர், நான் உங்களைப் பார்த்துப் பேசியதுகூட அவருக்குத் தெரிய வேண்டாம்…. இரவில் வீட்டை ரணகளமாக்கி விடுவார் என்றார்.
நான் மௌனியானேன்.
அந்தம்மாவே பேசினார்கள்.
‘யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பாம். சம்பளம் அது இது எல்லாம் அங்கேயே போய் விடுகிறது. நானோ யாழ்ப்பாணம். கொழும்பு என்று காடாறு மாதம் நாடாறு மாதம் வாசம் செய்கிறவள்… என் பிழை தான்’ என்று அழத்தொடங்கிவிட்டார். எனக்கு அசௌகரியமாக இருந்தது. நல்ல வேளையாக அங்கு வேறு யாரும் இல்லை. சிங்களத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று’
‘எங்குள்ள பெண்ணாம். எப்படித் தொடர்பு ஏற்பட்டதாம்…. என்று ஏதாவது தெரியுமா?’ என்று நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் வினவினேன்.
‘அப்படி என்றால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா…’ என்று ஆச்சரியத்துடன் என்னை ஏறிட்ட அவர், ‘இங்கே வேலை செய்கிற பெண்தான்…. இதோ இந்தக் கடிதத்தைப் பாருங்கள்’ என்றார்.
ஏறத்தாழ ஒரு வருடத்துக்கு முன் யாழ்ப்பாணத்து விலாசத்துக்கு எழுதப்பட்ட கடிதம் அது. கடிதம் குறிக்கும் அந்தப் பெண் ஒரு சிங்களப் பெண். கிறிஸ்தவ பெண். நண்பர் பொறுப்பாளராக இருக்கும் பகுதியின் சிற்றூழியர். கடிதம் குறிக்கும் சில பகுதிச் சம்பவங்கள் ஏற்கனவே என் காதுகளுக்கும் எட்டியவைதான். நான் தான் நம்பத் தயாரில்லை.
ஆரம்பத்தில் நான் இந்தக் கடிதத்தையும் அதன் கதைகளையும் நம்பவில்லை. யாரோ பொறாமையில் எழுதியதாகவே எண்ணினேன். ஆனால் பிறகு பிறகு தான் சந்தேகம் வரத் தொடங்கியது. கடிதங்களுக்குப் பதில் போடுவது இல்லை. காசு அனுப்புவதில்லை. நீண்ட வார இறுதிகளில் கூட யாழ்ப்பாணம் வருவதில்லை. அதன் பின் கூடுதலாகக் கொழும்பில் தங்கத் தொடங்கினேன்.
வெகு நேரம் கழித்து வீடு வரும்போது கேள்வி எழுப்பினேன். அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தொடங்கினேன். எனது குழந்தைகளினதும் செலவுக்காகப் பணம் கேட்டேன். ஏச்சுக் கிடைத்தது. சண்டை மூண்டது. அடி, உதைகள் கிடைத்தன. இப்போதும் கூட பணம் கேட்டுத்தான் வந்தேன்! நாளைக்குப் பணத்துடன் பிள்ளைகளைப் பார்க்க வருவதாக அம்மாவுக்கு எழுதிவிட்டேன். கட்டாயமாகப் போயே ஆகவேண்டும்…’
‘எவ்வளவு பணம்’ என்று கேட்டேன்.
அவசரமாகக் கைகளை அசைத்தப்படி ‘இல்லை இல்லை’ என்றவர் ‘அவர் தர வேண்டும்…! நான் உங்களைப் பார்த்துப் பேசியது ஒன்றும் அவருக்குத் தெரியவேண்டாம்…. உங்கள் ஆப்த நண்பராயிற்றே. மீட்கப் பாருங்கள்….’ என்று கூறிவிட்டு கண்களைத் துடைத்தபடி போய்விட்டார்.
நண்பரின் மனைவி ‘ஆரம்பத்தில் தான் அதை நம்பவில்லை’ என்றதற்கும் நான் அவற்றை நம்பாததற்குமான காரணங்கள் வேறுபட்டவை. தன் கணவன் மீது ஒரு தமிழ்ப் பெண் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை நண்பரின் மனைவியினுடையது. என்னுடையதோ ‘பெண்கள் மத்தியில் வேலை பார்க்கும் ஆண்கள் மீது@ அல்லது ஆண்கள் மத்தியில் வேலை பார்க்கும் பெண்கள் மீது இது போன்ற அபாண்டங்கள் சுமத்தப்படுவது இயற்கை…
சம்பந்தப்படுத்தப்படும் அந்தப் பெண்ணின் தோற்றம் பற்றிய நினைவு….. என்னுடைய நண்பர் நல்லவர் என்ற நம்பிக்கை எனப் பல படிகள் கொண்டது. ஒரு ஆணைக் கவரும் எந்தவிதமான பெண்ணின் கவர்ச்சியும் இல்லாத பெண் அவள். மெலிந்த உடல், சப்படையான தோற்றம். குச்சி குச்சியான கை கால்கள்…. கோபாலகிருஷ்ணனோ ஆணழகனே தான்! அந்தம்மாவுக்கும் கோபாலுக்கும் சேர்ந்து நிற்கையில் எப்படி இருக்கும்! ஆகவே தான் இந்தக் கதை வெறும் புரளி அல்லது கிண்டல் என்று அப்போது நம்பவில்லை. ஆனால் இப்போது…!
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது.
‘கிளிபோல் பெண்டாட்டி இருந்தாலும், குரங்கு போல் ஒரு வைப்பாட்டியும் வேண்டும் நமது ஆண்களுக்கு’ என்று
நண்பர் கோபாலிடம் பேசினேன். கத்தினேன். உபதேசித்தேன். சண்டை பிடித்தேன். ஒன்றும் நடக்கவில்லை. தலை குனிந்து மௌனதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மனைவியின் பணத்துக்கான தேவை பற்றி குழந்தைகளின் கல்விச் செலவுகள் பற்றிக் கூறினேன்.
விருட்மென எழுந்து போய்விட்டார். இரண்டு நாள் கழித்து மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு மூவாயிரம் ரூபாய் மணி ஓடர் அனுப்பிய ரசீதைக் கொண்டு வந்து காட்டினார்.
‘மாதா மாதம் இப்படி. இதைவிடக் கூடவே பணம் போய்ச் சேரும்’ என்றார்
‘அவள் அங்கேயே இருக்கட்டும். இங்கே வந்து தொந்தரவு செய்யாமல் என்னும் தொனி தெறித்தது.
அந்தப் பெண் இப்போதெல்லாம் வேலைக்கு வருவதில்லை.
நண்பரின் விலாசம் அந்தப் பெண்ணின் விலாசமாக மாறியிருந்தது. அவர் அவளுடன் குடும்பம் நடத்துவது ஒரு திறந்த ரகசியமாகிவிட்டது.
சட்டபடி பதிவுத் திருமணமும் சொந்த பந்தங்களுக்கான ஊரைக் கூட்டி செபஸ்தியார் தேவாலயத்தில் கோயில் கல்யாணமும் நடந்தேறியது. நண்பரின் தமிழ் மனைவி பற்றிய செய்திகள் சூழ்நிலையும் சுகமானதாக இல்லை.
இருக்கிறார்களோ அல்லது அவுஸ்திரேலியா, கனடா என்று போய்விட்டார்களோ தெரியவில்லை.
இந்தப் பெண்ணோ, தான் தாயகப் போகும் அடையாளங்கள் ஊருக்குத் தெரியவருமுன், இவர்தான் என் கணவர் என்னும் அடையாளத்தை சட்டப்படியும், சமயப்படியும் ஊராருக்கு தெரிவித்துக் கொண்டாள். தன்னை விட்டு இந்த மனிதன் ஓடிவிடாதிருக்க சாதுர்யமான அரண்களுடனான வியூகமமைத்துக் கொண்டாள்.
மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.
சேறு கண்ட இடத்தில் மிதித்து தண்ணீர் கண்ட இடத்தில் கழுவிக் கொள்ளும் ஆணாதிக்கக் கூருகளை மிக லாவகமாகக் கடிவாளம் இட்டு ஜாக்கிரதையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
யாழ்ப்பாணத்து உயர்குல இந்துவான கோபால கிருஷ்ணன் கால்வாசிக் கிறிஸ்தவனாகவும் அரைவாசி சிங்களவராகவும் மாறிக் கொண்டிருந்தார். தனிமை அவரை மரணிக்கத் தொடங்கி இருந்தது. காலம் மிக வேகமாகவும் மிகக் குரூரமாகவும் ஓடிக் கொண்டிருந்தது. எண்பத்து மூன்று வந்தது. இலங்கை வெந்து தணிந்தது.
கோபாலைப் போலவே அழகான, ஆகிருதியான ஒரு பெண் குழந்தை இருப்பதை பிறகு அறிந்து கொண்டேன். தகப்பனும் பிள்ளையுமாக வேலைத்தளத்துக்கு வந்திருந்தனர்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவரது தோள்வரை உயர்ந்திருந்தாள் அந்த அழகான மகள். அட்வான்ஸ் லெவல் படிப்பதாகவும், செபஸ்தியார் ஆலயத் திருவிழாவுக்கு நன்கொடை சேகரிக்கக் கிளம்பியுள்ளதாகவும் கூறி டிக்கெட் புத்தகத்தை நீட்டினாள். தேவாலயத்தின் பாடற் குழுத் தலைவியாக இருப்பதாகவும் ஞாயிறு மறை வகுப்பின் ஆசிரியை என்றும் கூறினாள். குடும்பமே கோவிலுடன் நெருக்கமானதாக இருப்பதையிட்டு சந்தோஷப்பட்டேன். ஒற்றைக்கல் மூக்குத்தியுடன் அந்தம்மாவின் முகம் ஓடி வந்து ஓடிவந்து மனதிலாடியது.
இப்போது எப்படி இருப்பார்கள்! எங்கே இருப்பார்கள்! ஆணும் பெண்ணுமான அந்தப் பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது.
குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…!ஒரு நாள் கோபால கிருஷ்ணன் மிகவும் கலவரப்பட்டுப் போய் இருந்தார். எனக்குப் புதினமாக இருந்தது. பூகம்பங்களையே புன்முறுவலுடன் எதிர்பொள்பவராயிற்றே அவர்.
யாரோ பாடசாலை நண்பனுடன் தனியாகப் படம் பார்க்கப் போயிருக்கின்றாள் அவருடைய மகள்.
தாய்க்காரிக்குத் தெரிய வந்து ஒரே சண்டையும் கூச்சலும்…. அம்மாவும் பிள்ளையும் அடித்துக் கொள்ளாத குறையாம்.
நான் கேட்கவில்லை. அவரே கூறினார். ஆறுதல் கூறினேன். பிறகொரு நாள் அந்தப் பெண்ணே என்னைத் தேடி அலுவலகத்துக்கு வந்தாள். ஒன்றுமே நடைபெறாதது போல் மிகவும் சுமுகமாகப் பேசினாள்.
மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்றாள். மாப்பிள்ளை வீட்டாரின் மகிமைகள் பற்றி ஒரு பாட்டம் பாடினாள். தங்கள் கோவில் குருவானவர் மூலமாகவே இத்திருமணத் தொடர்புகள் ஏற்பட்டதாகக் கூறினாள். மாப்பிள்ளையின் நெருங்கிய உறவினர் ஒருவர் குருவானவர் தான் என்றாள்.
கோவில்களுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட குடும்பங்கள் இணைகின்றன. மிக்க மகிழ்ச்சி…. தாமதம் செய்யாமல் முடித்து விடுங்கள்’ என்றேன்.
‘ஒரு சின்ன சிக்கல் எழுந்துள்ளது’
‘என்ன’ என்றேன்.
‘எங்கள் குருவானர் பார்த்துக் கொடுத்த மாப்பிள்ளை… மாப்பிள்ளையின் உறவினர் ஒருவரும் குருவானர்… ஆனால்…’ சற்றே தடுமாறினாள்.
‘என்ன ஆனால்….’
‘பெண்ணின் தந்தை இந்துவாயிற்றே!’
‘அதற்கென்ன செய்யலாம்….’
‘செய்தாக Nவுண்டும்… இந்தச் சம்பந்தம் விட்டுப் போகாமல் இருக்க… செய்தாக வேண்டும்’
நான் பேசாமலிருந்தேன்.அவளே தொடர்ந்தவள்.
‘அவரைக் கிறிஸ்தவராக்க வேண்டும்….’
‘எப்படி….’
‘நீங்களே இப்படி கேட்டால் எப்படி…. அவருக்கு பெப்டிஸம் கொடுக்க வேண்டும்…. எங்களுடன் அடிக்கடி பூஜைக்கெல்லாம் வருவார். ஜெபங்கள் எல்லாம் மனப்பாடமாய் சொல்வார். உங்களுக்குத் தெரிந்த பாதர்மார்கள் நிறையப் பேர் இருப்பார்கள் தானே… யாராவது ஒருவரைப் பிடித்து… எங்கள் பங்குப் பாதர் பெண்ணின் பெற்றோரின் பெப்டிசம் சர்டிபி;கேட்டைத் தான் கேட்கின்றனர்…. என் மகளின் திருமணம் உங்கள் ஆருயிர் நண்பனின் திருளின் திருமணம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
கண்களால், மனதால் கெஞ்சிவிட்டு அவள் போய்விட்டாள்.
அவள் சென்ற பின் கோபால் வந்தார்.
முடிந்தால் உதவும்படிக் கேட்டுக் கொண்டார். தனக்கு ஆட்சேபனை இல்லை என்றார். அவருக்கு ஆட்சேபனை இருக்க முடியாது என்பது எனக்கும் தெரியும்.
அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.
***
நண்பர் கோபாலின் ஞானஸ்நானம் பற்றி தந்தை ஏசுதாசனிடம் பேசினேன்.
‘முடியாது’ என்று மூர்க்கமாக மறுதலித்தார். ஒரு இந்துவை கிறிஸ்தவனாக மதம் மாற்றுவதில் தனக்குச் சம்மதம் இல்லை என்றார். இந்து மதத்தின் பழைமை பற்றியும் அதன் ஆழங்கள் பற்றியும் எனக்கு உபதேசிக்கத் தொடங்கிவிட்டார்.
கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும்!
‘ஏசு இளமைப் பருவத்தில் இந்தியாவில் ரிஷிகளுடன் வாழ்ந்து இந்து தத்துவங்களை நன்கு கற்றறிந்திருக்க வேண்டும். அவருடைய போதனைகளில் இந்தியத் தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன’ என்று ஒரு ஆராய்ச்சி நூலில் எப்போதோ வாசித்தது என் நினைவிலோடுகிறது.
‘பாதர் கேள்விகளே இல்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்களது பிரசங்கங்கதை;தான் இப்போது வேண்டாமே… உங்களுடைய ஆன்மிகத் தத்துவார்த்தங்களை நான் எதிர்க்கவில்லை. விமர்சனம் செய்யவும் முயலவில்லை. யதார்த்தத்தையும் கொஞ்சம் புரிந்து கொள்வோமே பாதர்… இது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பிரச்சினை….! இந்து மதமா கிறிஸ்தவ மதமா என்பதல்ல முக்கியம்…. மனிதம்…!
‘சரி சரி… திரு முழுக்குச் செய்வோம். அவருடைய கிறிஸ்தவ மத அறிவு எப்படி… ஜெபங்கள்’
நீங்களே கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர் இப்போதே அரைவாசிக்கு மேல் கிறிஸ்துவர் தான்…. முழுதாக்க வேண்டியது உங்களுடைய திருமுழுக்கு என்றேன்.
‘என்னிடம் பேச அவரை அழைத்து வாருங்கள்’ என்றார். ‘எப்போது’ என்றேன்.
‘அவசரம் என்றால் நாளை இதே நேரம்… கூட்டி வாருங்கள்…. நான் பேசிய பிறகு நாளைக் குறிப்பிடுவேன்’… என்றார். சிரித்தபடி விடை பெற்றேன்.
– மீன்கள் (சிறுகதைத் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: ஜெயமோகன், முதற் பதிப்பு: டிசம்பர் 2013, நற்றிணை பதிப்பகம், சென்னை.