இரவில் தட்டப்பட்ட கதவு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 10,764 
 
 

இரவு 9:10

இரண்டு பேர் வெகுநேரமாக எதையோ விவாதிப்பதை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கவனித்தார். அது எந்த நேரமும் கைகலப்பாக மாறும்போல இருந்தது. அரை மணி நேரமாகியும் மாறவில்லை. அங்கு இருந்து அவர்கள் கிளம்புவதாகவும் தெரியவில்லை.

கான்ஸ்டபிளை அழைத்து, ”அவனுங்கள இங்க கூட்டிட்டு வா” என்றார். காவலர் சென்று அழைத்ததும் அவர்கள், அங்கு இருந்தே ஷீப்பின் மீது சாய்ந்து நிற்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர்.

காவலருக்கு இரண்டு பக்கங்களும் பாடிகார்டுபோல அந்த இருவரும் நடந்துவந்தனர்.

‘நிகழ்ந்தது; நிகழப்போவது எல்லாமே நிகழ்ந்துகொண்டிருப்பவை தான்’ என விஞ்ஞானி காரல் சேகன் சொன்னார். அதை சமீபத்தில் வெளியான ஒரு சினிமாவிலும் கையாண்டார்கள். நம்மால் ஒரு மணி நேரம் பின்னோக்கிப் பயணிக்க முடிந்தால், அந்த இருவரின் பிரச்னை என்ன என்பதை உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இரவு 8:40

பெரியகுளத்தான் பேசி முடித்தார்.

‘நன்றி… வணக்கம்…’ போன்ற கடைசி விநாடிக்கான தருணம். பார்வையாளர் வரிசையில் இருந்து ஒரு கேள்வி வந்தது.

”இந்த அரங்கத்தில் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம், அதைச் சொல்லுங்க?”

அது வினா அல்ல; வில்லங்கம். பார்வையாளர் வரிசையில் நங்கூரன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபோதே, ஏடாகூடமாக ஏதாவது கேட்டு இங்கே பிரச்னையை ஆரம்பிப்பான் என பெரியகுளத்தானுக்கும் தெரியும்தான். பேச்சை முடிக்கிற நேரத்தில் கோழி அமுக்குவது மாதிரி அமுக்கிவிட்டார். கூட்டம்… 100 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் 60 பேர் இருந்தார்கள். கிட்டத்தட்ட பாதிப் பேர் நங்கூரனையும், பாதிப் பேர் பெரியகுளத்தானையும் கவனிக்க ஆரம்பித்தனர்.

”எந்த வார்த்தைக்கு?”

”ஆரம்பத்துல சொன்னியே… அந்த வார்த்தைக்கு!”

”எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் கிடையாது. எல்லா வார்த்தைகளும் நிறைய அர்த்தங்களைக் கொண்டவை.”

”இப்படிப் பொத்தாம்பொதுவா சொல்லாதே. ‘அம்மா’ன்னா என்ன அர்த்தம்… அப்படித்தானே பேச ஆரம்பிச்சே?” – நங்கூரன் நேரடியாகக் கேட்டார். தொனியிலும் ஒருமை ஆவேசம் கூடியிருந்தது.

பெரியகுளத்தானுக்கும் இப்படி நேரடியாகப் பதில் சொல்வதில் விருப்பம் இருந்தது.

”இப்பவும் சொல்றேன்… ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு தமிழ்நாட்டில் ஓர் அர்த்தம்; கேரளாவில் ஓர் அர்த்தம்; டெல்லியில் ஓர் அர்த்தம்; பாண்டிச்சேரியில் ஓர் அர்த்தம்… இதைப் புரிந்துகொள்வதில் என்ன கஷ்டம் உங்களுக்கு?”

”டெல்லி, பாம்பே, கல்கத்தா கதை எல்லாம் வேணாம். இங்க… இந்த இடத்துல ‘அம்மா’ன்னா என்ன அர்த்தம்?”

”மிஸ்டர் நங்கூரன், இந்த அரங்கமும் தமிழ்நாட்லதான் இருக்கு.”

இப்போது உட்கார்ந்திருந்த நங்கூரன், ஆவேசமாக எழுந்தார். அவருடைய கதர் ஜிப்பா, தோளில் மாட்டியிருந்த ஜோல்னா பை எல்லாமே பார்வையாளருக்குத் தெரிந்தன. பைக்குள் இருந்து ‘க்ளங்’ என்ற கண்ணாடி உரசும் சத்தம். அதற்கான வீச்சம். கறுப்பு ஃபிரேம் போட்ட பெரிய கண்ணாடி போட்டிருந்தார். 40 வயதைக் கடந்தவர் என்பது சட்டென யூகிக்கும் வயது. யோசித்துப்பார்த்தால், அதிகமாகவோ குறைவாகவோ இழுபறி காட்டும். மெலிந்த கறுத்த தேகம்.

”அப்படீன்னா, ஒரு சொல் புவியியல் சார்ந்ததா?” – இந்தக் கேள்வியின் கூடவே அவர் பாக்கெட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தார். அந்தச் சிறிய அரங்கில் எழுத்தாளர்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களும் இருந்தனர். அது ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிதை நூலின் ஆசிரியர் சென்ட் வாசத்தோடு புதிய ஜிப்பா அணிந்து, சுற்றம் சூழ வந்திருந்தார். மல்லிகைப் பூ சூடி, பட்டுப்புடவை அணிந்திருந்த பெண்களும் அவர்களின் கணவன்மார்களும், எண்ணெய் கடாயில் விழுந்த தண்ணீர் திவலைகள்போல கூட்டத்தில் தனித்துத் தெரிந்தனர்.

நட்டநடுக் கல்யாணத்தில் ஒருவர் எழுந்து சண்டைக்கு வந்தது மாதிரியும், தாலி கட்டும் இடத்தில் பீடி பிடிப்பதுபோலவும் நங்கூரனை, அவர்கள் எடுத்த எடுப்பிலேயே விரோதத்துடன் பார்க்க ஆரம்பித்தனர்.

பெரியகுளத்தான் ஒரு நக்கல் சிரிப்புடன், ”புவியியல்… உயிரியல் எல்லாம் இல்லை. ஒரு சொல், கேட்கும் மக்களின் உள்வாங்கும் திறன் சம்பந்தப்பட்டது. விற்பவர், வாங்குபவர் இருவரும் சேர்ந்ததுதான் வர்த்தகம் என்பதுபோல… மொழியும் சொல்பவர், கேட்பவர் சம்பந்தப்பட்டது.”

”அப்ப எதுக்கு ஊர் பேரைச் சொன்னே? ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு அர்த்தம்னு எதுக்குய்யா உளர்னே?”

நங்கூரன் தீர்த்தம் சாப்பிட்டிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட 60 பேருக்கும் தெரிந்துபோனது. வார்த்தை தடிக்க ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில், தான் உட்கார்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை, உத்தேசமாக ஒரு பக்கம் தூக்கி எறிந்தார். ஆனால், அப்படிச் சொல்வது தவறு. அவருடைய வேட்டி அந்த நாற்காலியில் எங்கோ சிக்கிக்கொண்டது. அதை வேகமாக இழுத்ததால், அது அப்படி நகர்ந்து கீழே விழுந்தது. கூட்டம் பயந்ததைப் பார்த்து, தான் வீசி எறிந்ததாக அவரும் ஏற்றுக்கொண்டார்.

வந்திருந்த எழுத்தாளர் அல்லாத பகுதியினருக்கு கிலி அதிகரித்தது. அவர்கள் தரப்பில் வாட்டசாட்டமான ஆள், நங்கூரனைக் கொத்தாக இழுத்து அரங்கத்துக்கு வெளியே தள்ளினார்.

”போய்யா வெளியே… செவுள் பிஞ்சிடும்” என்றும் மிரட்டிவிட்டு நிறுத்தியிருந்தார். இந்த அவமானத்தை நங்கூரன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இழுத்துவந்து வெளியேவிட்டவரின் உடல் பலம் குறித்து அவருக்கு அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. ‘என் பஞ்சாயத்து உன்னிடம் இல்லை’ என்பதாக, வேகமாக அரங்கத்துக்கு வெளியே மரத்தடிக்கு வந்தார்.

”பதில் தெரியாமப் போக மாட்டேன்” என்றபடி சற்றே நகர்ந்து இருட்டான இடத்துக்குப் போனார். பையில் இன்னும் கொஞ்சம் சரக்கு இருந்தது. அதை வாயில் ஊற்றிக்கொண்டு, பீடியைப் பற்றவைத்துக் கொண்டார். அதன் பிறகு நன்றி தெரிவிக்கிற ஒரு சொற்ப நிகழ்வு மட்டும்தான் பாக்கி. ஒரு டூரிஸ்ட்டர் வேனில் அந்தக் கல்யாண கோஷ்டி ஏறிப்போனது. கவிதை நூல், பேனர் இவற்றை எல்லாம் ஒருசிலர் கட்டி எடுத்துக்கொண்டிருந்தனர். பேச வந்திருந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக நண்பர்களின் பைக்குகளில் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி நகர்ந்தனர்.

இன்னும் பெரியகுளத்தான் வெளியே வரவில்லை. நங்கூரன் காத்திருப்பான் என அவருக்குள் அலார கிலி. அரங்க வாசலில் இருந்தபடியே கண்களால் ஓர் அவசரத் தேடல். ”நல்லா பதிலடி கொடுத்தீங்க சார்” என ஒருவர் கைக்குலுக்கியதுகூட அவருக்கு மண்டையில் ஏறவில்லை.

பெரியகுளத்தான் பஸ்ஸில் போகிற ஆசாமி. அது நங்கூரனுக்கும் தெரியும். இன்றைக்குப் பார்த்து யாருடைய பைக்கிலாவது தொற்றிக்கொண்டு போக முடியுமா என தவிப்பாக இருந்தது. கடைசி பைக்கும் கிளம்பிவிட்டது.

பெரியகுளத்தான் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார். நங்கூரன் பின்தொடர்ந்தார். தான் தொடரப்படுவது தெரிந்து, அவரும் தன் காலடிகளுக்கான இடைவெளியை அதிகப்படுத்தி நடையின் வேகத்தையும் கூட்டத் தொடங்கினார். நங்கூரன் சளைக்கவில்லை. நடையை ஓட்டமாக மாற்றியிருந்தார். இந்த வேக வித்தியாசம் சில விநாடிகளியே அவர்களை நெருங்கவைத்தது.

”நில்லுடா” என்றார் நங்கூரன்.

”என்ன இப்ப?” பெரியகுளத்தானுக்கு இரைத்தது.

”பதில் சொல்லிட்டுப் போ… எதுக்கு ஓடுற?”

”உனக்குத் தெரியாதா, ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்குன்னு?”

”அப்படியே போஸ்ட்மார்டனிஸம் பக்கம் போகாதே… நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.’

”நான் அப்பவே சொல்லியாச்சு”- பெரியகுளத்தான் நகர ஆரம்பித்தார். நங்கூரன் பாய்ந்து அவர் சட்டையைப் பிடித்தார்.

இரவு 9:12

போலீஸ் பேட்ரோல் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்த இன்ஸ்பெக்டர், ”என்ன பிரச்னை?” என்றபடி, இருவரையும் விநாடி வித்தியாசத்தில் மாறி மாறிப் பார்த்தார்.

நங்கூரன், ”எ பீஸ் கீப்பிங் ஆபீஸர் லைக் யூ ஒன்லி சால்வ் அவர் ப்ராப்ளம்” என்றபடி, அவருக்கு ஒரு சல்யூட் வைத்தார்.

”என்னன்னு சொல்லுய்யா. குடிச்சிருக்கீங்களா?”

”இவந்தான்…” என ஒதுங்கி நின்றார் பெரியகுளத்தான்.

”நான் சாப்ட்ருக்கேன்… ஏத்துக்கிறேன்” -பவ்யமாக ஏற்றுக்கொண்டார் நங்கூரன்.

”சார் ‘தெரிதா’ என்ன சொல்றாரு… இஸ் அவர் லாங்வேஜ் பிலீவபிள்? நாம பேசற மொழி அவ்வளவு நம்பகமானதா..? ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கா, இல்லையா?” தங்கள் பஞ்சாயத்து என்ன என்பதை விரைந்து விளக்க முடிவுசெய்து, ”பை த பை ஐ ஆம் எ ரைட்டர்… பெரியகுளத்தான்” என்றும் சொன்னார். கூடவே கைகுலுக்க வலது கையை நீட்டினார். இன்ஸ்பெக்டருக்கு தெருச்சண்டைப் பேர்வழிகளுக்குக் கைகொடுத்துப் பழக்கம் இல்லை. அதனால், ”என்ன பிரச்னை?” என்றார் இன்னொரு முறை.

”டிட் யூ அக்ஸப்ட் ஹிம் சார்?” என்றார் நங்கூரன். ஓர் உயர் அதிகாரியிடம் ஆங்கிலத்தில் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்பதில் இருவருக்கும் ஒற்றுமை இருந்தது.

தாடையை ஷேவ் பண்ணிக்கொள்ளலாமா என்பதுபோல தேய்த்துவிட்டபடி, ‘யார்ரா இவனுங்க?’ என யோசித்தார் இன்ஸ்பெக்டர். ”என்னது?” என்றபடி நங்கூரன் பக்கம் திரும்பி நின்று பெரியகுளத்தானை நோக்கினார்.

”சார், ஐ ஆம் நங்கூரன்… இந்த வாரம் ‘மொழியின் ஒளிச்சிற்பம்’னு ‘கதம்பம்’ல கட்டுரை எழுதியிருக்கேன்” சற்று இடைவெளிவிட்டு, ”பார்த்திருப்பீங்க” என ஆமோதிப்பை எதிர்பார்த்தார்.

”கதம்பமா?”

பெரியகுளத்தான் அதைப் பயன்படுத்த முனைந்தார். ”சாருக்கே தெரியாத பத்திரிகையில எழுதிட்டு… அதைப் பெருமையா சொல்லிக்கிறான்.”

”கதம்பம் படிச்சிருக்கீங்களா, இல்லையா?” நங்கூரனுக்கு அது கிரேட் இன்சல்ட்டாக இருந்தது. இன்ஸ்பெக்டர் மட்டும் ‘அதை நான் ரெகுலரா படிப்பேன்’ என ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும் என இருந்தது. இன்ஸ்பெக்டர் அப்படிச் சொல்லவில்லை. இருவரையும் அளப்பதுபோலப் பார்த்தார்.

இருவருக்கும் 40-க்கு மேல் வயது. கறுப்பாகவும் ஒல்லியாகவும் கம்பி மீசை வைத்திருந்தவர் ஆவேசமாக இருந்தார். இன்னொருவர் சற்றே பூசினாற்போல நரை, தாடியுடன் சிவப்பாக இருந்தார்.

”நீங்க எங்க இருந்து வர்றீங்க?” என்றார்.

”சார் நான் தேனாம்பேட்டை… இவன் கே.கே.நகர்ல கிருஷ்ணபாரதி ரூம்ல தங்கியிருந்தான். இப்ப எங்க இருக்கான்னு தெரியலை” என நங்கூரனே பதில் சொன்னார்.

”ஏன் வீட்டுக்குப் போகாம ரோட்ல சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க?”

”சார்… லாங்வேஜுக்கு நம்பகத்தன்மை இல்லைனு சொல்றதுக்கு இவன் யாரு?”

இன்ஸ்பெக்டர் நெற்றியைச் சுருக்கி, இவர்களின் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றார்.

”நம்பகத்தன்மை இல்லைனு எப்படிச் சொல்றீங்க? நம்ம தாய்மொழிய நாம நம்பித்தானே ஆகணும்?” – இன்ஸ்பெக்டருக்கு ஒரு பாயின்ட் கிடைத்துவிட்டது.

”நல்லா கேளுங்க சார்” என்றார் நங்கூரன். ”சொல்லுக்குப் பலம் இல்லையா, சொல்றவனுக்குப் பலம் இல்லையானு கேளுங்க… புரியற மாதிரி இவனுக்குச் சொல்லத் தெரியலைங்கறதுக்காக, மொழிய எப்படி பழி சொல்லலாம்? விடாதீங்க சார்… இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் ஒரு பீடி பிடிக்கலாமா?”

”நோ” என்றார் இன்ஸ்பெக்டர். எடுத்த பீடியை காதுக்கு மேல் செருகிக்கொண்டு, ”ஓகே சார்” என ஒரு சல்யூட் வைத்தார்.

பெரியகுளத்தானுக்கு தன் பக்க நியாயம், செல்வாக்கு இழப்பதாகத் தோன்றியது.

”ஐ வில் ஆஸ்க் எ சிம்பிள் கொஸ்டீன்… மரம்னா என்ன சார்?”

இன்ஸ்பெக்டர் இடுப்பில் இடதுகையை ஊன்றிக்கொண்டார். கண்களால் துழாவி, ”இதுதான் மரம்” என சாலை ஓரத்தில் இருந்த மரத்தைக் காட்டினார். அது ஓங்கி வளர்ந்த ஒரு தூங்குமூஞ்சி மரம்.

”மரம்னா தூங்குமூஞ்சி மரமா சார்… ஏன் வேப்பமரம் இல்லையா, பனைமரம் இல்லையா, தேக்குமரம் இல்லையா… அவ்ளோ ஏன் சார்… இந்த டேபிள்கூட ஒரு மரம்தான்” பக்கத்து டீக்கடையில் இருந்த டேபிளைக் காட்டினார்.

”சரி, அதுக்கு என்ன இப்போ?”

”அதுக்கு என்னா இப்போன்னு விட்டுட முடியுமா? மரம் என்பது கருத்தின் உருவம்னு சொல்றாரு ஏங்கெல்ஸ்… ஒரு வார்த்தை நமக்குள்ள ஒரு உருவத்தை நினைவுபடுத்துது. விறகுக்கட்டையும் மரம்தான்; வீரபாண்டித் தேரும் மரம்தான்…” – பெரியகுளத்தானுக்கு பொங்கிக்கொண்டு வந்தன உதாரணங்கள். இன்ஸ்பெக்டர் தன் அசுவாரஸ்யத்தில் இருந்து ‘அ’வை அகற்றினார். ”அது சரி” என்றார் தன்னையும் அறியாமல்.

”அதெல்லாம் சரியில்ல… சரியே இல்ல” அனுமதி கேட்காமலேயே பீடியைப் பற்றவைத்துக்கொண்டார் நங்கூரன்.

”மொழி உருவாகிறதுக்கு முன்னாடியே சிந்தனை உருவாகிடுச்சு. அப்படிப் பார்த்தா எல்லாமே கருத்துருதான்… நீங்க என்ன சொல்றீங்க சார்? செல்மா லாகர்லேவ் படிச்சிருப்பீங்க. செகாவைவிட செல்மா லாகர்லேவ் பெஸ்ட் ரைட்டர்னு பேசறான் சார். அதான் சார் இவன் மேல எனக்குக் கடுப்பு. நீங்க என்ன சொல்றீங்க..?” – பீடியைக் கீழே போட்டு கரகரவெனத் தேய்த்துவிட்டு, ”செகாவ் வேஸ்ட்டுனு சார் சொல்லட்டும்…” என இன்ஸ்பெக்டரைப் பார்த்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பதில் சொல்ல அவசரப்படவில்லை. இருவரையும் இந்த முறை ஆழமாகப் பார்த்தார்.

பெரியகுளத்தான், ”உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன்…” என்றபடி இன்ஸ்பெக்டரின் காது அருகே தன் வாயைக்கொண்டு சென்றார். இன்ஸ்பெக்டர் சற்றே தள்ளி நிற்கவேண்டியிருந்தது.

”இவன் ஒரு ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்கான். அங்கே ரிசப்ஷன்ல ரெண்டு பெரிய போட்டோ மாட்டி பூமாலை போட்டிருந்தது. ஒண்ணு தொண்டுக் கிழவியோட படம்; இன்னொண்ணு அறியாத வயசுப்பையன் படம். ‘இந்தப் பாட்டிக்கும் பேரனுக்கும் எப்படியும் 60 வயசு வித்தியாசம் இருக்குமா?’னு ரிசப்ஷனிஸ்ட்கிட்ட கேட்டிருக்கான். இவனுக்கு ஏன் அந்த வேலை? அந்த ரிசப்ஷனிஸ்ட் பொறுமையா, ‘சார் உங்களுக்கு என்ன உடம்புக்கு… எந்த டாக்டரைப் பார்க்கணும்?’னு கேட்டிருக்கா. இவன் மென்டல் சார். எத்தனை வயசு வித்தியாசம்னு தெரிஞ்சாத்தான் வைத்தியம் பார்த்துப்பேன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கான். செக்யூரிட்டியைக் கூட்டிக்கிட்டு வந்து குண்டுக்கட்டா வெளிய தூக்கிப் போட்டுட்டாங்க… தேவையா இவனுக்கு?”

ரகசியத்தை ஒட்டுக்கேட்கும் முயற்சியாக நங்கூரனும் நெருங்கிவந்தார்.

”நம்பாதீங்க… இவன் டைவர்ட் பண்றான்.”

”வயசு வித்தியாசத்தைக் கேட்டா என்ன தப்பு… சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே?” இன்ஸ்பெக்டர் ஆர்வமிகுதியில் கேட்டார்.

நங்கூரன் ஏதோ சொல்ல வர, ”இருங்க… இருங்க நான் சொல்றேன். அந்தப் பையனும் அந்தக் கிழவியும் புருஷன் பொண்டாட்டி சார்.

19 வயசுலயே அந்தப் பையன் செத்துப்போயிட்டாரு. பொண்டாட்டி 90 வயசு வரைக்கும் இருந்திருக்கு”-விளக்கினார் பெரியகுளத்தான்.

இன்ஸ்பெக்டர் ”ஓ!” என ரசித்துவிட்டு, சிரித்தார்.

”பேசிக்கிட்டு இருந்த விஷயத்தை எப்படி டைல்யூட் பண்றான் பாருங்க” நங்கூரன், தான் கேலி செய்யப்படும் விதத்தால் காயப்பட்டார்.

”தஸ்தாயேவ்ஸ்கி குப்பையா எழுதறான்னு சொன்னவனும் இருக்கான். ராபின் குக் பிரமாதமா எழுதுறான்னு பீத்திக்கிறவனும் இருக்கான். அதுவா சார் ஸ்கேல்? எல்லாருக்கும் எல்லா எழுத்திலும் ஒரே கருத்து இருக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? நீ கேக்கிற விஷயத்தை டைல்யூட் பண்ணினோமா நாங்க?” -இன்ஸ்பெக்டரிடம் தோழமை பாராட்டும் விதமாக பெரியகுளத்தான் முறையிட்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இப்போது ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

”நீ எங்க போகணும்?” என்றார் நங்கூரனை நோக்கி ஒருமையில்.

”கே.கே நகர்.”

”இந்தப் பக்கம் போயி 37ம் நம்பர் பஸ்ஸைப் பிடி… போ… போ… போய்க்கிட்டே இரு.”

”நீ?”

”அதான் சொன்னனே சார்… தேனாம்பேட்டை.”

”பஸ் நம்பர் தெரியுமா?”

”11 ஏ.”

”சரி. நீ இந்தப் பக்கம் போய் உன் பஸ்ஸைப் பிடி. கடைசி பஸ்ஸை விட்டுட்டு நடுத்தெருவுல நிக்கப்போறீங்க. போயிட்டே இருக்கணும். மறுபடியும் சண்டை போடுறதைப் பார்த்தேன்… லாக்கப்ல கொண்டுபோய் வெச்சுடுவேன்.”

திடீர் என இருவரும் சுதாரித்து மௌனமாக இந்த உடன்பாட்டுக்குக் கட்டுப்பட்டனர். எதிர் எதிர் திசையில் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தனர்.

இரவு 11:02

மனைவி ஊருக்குப் போயிருக்கிற தைரியத்தில், பரந்தாமனை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தார் சுந்தர். ‘நண்பரை வீட்டுக்கு வரச் சொல்வதற்கு என்ன தைரியம் வேண்டிக்கிடக்கிறது?’ என சிலருக்கு சந்தேகம் வரலாம்; பலருக்கு வராது. மனைவி ஊருக்குப் போயிருக்கிற நேரத்தில் சந்தித்துக்கொள்கிற நண்பர்களுக்கு ஒரே ஒரு தேவை மட்டும்தான். அது பாட்டில்.

”இன்னைக்கு செம கிறுக்கன்களப் பார்த்தேம்ப்பா… ரெண்டு பேரு அப்பிடி முட்டிக்கிட்டு நிக்கிறானுங்க. என்னடான்னு கேட்டா போஸ்ட்மார்டனிஸம்கிறான்; பூஸ்ட்மார்டனிஸம்கிறான்… என்னமோ வரப்பு வாய்க்கா தகராறு மாதிரி ஒருத்தனை ஒருத்தன் கம்ப்ளைன்ட் பண்றானுங்க. நமக்கே பைத்தியம் பிடிச்சுரும்போல ஆகிப்போச்சு. இன்னிக்கு ஒரு ஆஃப் அடிச்சாத்தான் சரிப்பட்டுவரும்” – பாட்டிலை எடுத்து வாஞ்சையாகத் தடவிப் பார்த்துக்கொண்டார் பரந்தாமன்.

”அட, உனக்கும் போஸ்ட்மார்டனிஸம்லாம் தெரிஞ்சுபோச்சா?” என ஆச்சர்யப்பட்ட சுந்தரைப் பார்த்து பரந்தாமன் மேலும் ஆச்சர்யமானார்.

”அப்ப உனக்கு அதெல்லாம் தெரியுமாப்பா?”

”தெரியும்… தெரியும்.”

”நிஜமாவா?”

”அதை எழுதுறவனும் கம்மி; அதைப் புரிஞ்சுக்கிறவனும் கம்மி.”

”தமிழ்நாட்ல, அதுல ரெண்டு பேரை நான் பார்த்துட்டேன். என்ன எழவுடா அது?”

”அப்பிடிலாம் சொல்லக் கூடாது. ஒண்ணு சொல்லட்டா? காதல், கல்யாணப் பிரச்னை, சகோதரன் சண்டை, கைவிடப்பட்ட பெத்தவங்கன்னு சொன்ன கதையையே எத்தனை வாட்டி எழுதுறது… எத்தனை வாட்டி படிக்கிறது? அடுத்த கட்டம் போகணும் இல்ல? அதுக்குதான் போஸ்ட்மார்டனிஸம், மேஜிக்கல் ரியலிஸம்… இப்படில்லாம் ட்ரை பண்றாங்க.”

”சரிதான்டா… ஆள வுடு. அவனுங்ககிட்ட இருந்து தப்பிச்சு உங்கிட்ட மாட்டிக்கினேன் பாரு.”

இருவரும் சியர்ஸ் சொன்னார்கள்.

இரவு 1:30

பெரியகுளத்தான் தன் அறையில் ஆசுவாசமாகப் படுத்திருந்தார். செல்மா, செக்காவ் இருவர் எழுதிய நூல்களும் அவரிடம் இருந்தன. ‘மதகுரு’வில் சில பக்கங்களையும் ‘நாய்க்கார சீமாட்டி’யில் சில பக்கங்களையும் புரட்டினார். ‘ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல’ என தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொண்டார். யாரோ அழைத்தது மாதிரி இருந்தது. முதலில் தாம்தான் சற்று உரக்கப் பேசிவிட்டோமோ என நினைத்து இருந்து விட்டார். இந்த முறை நன்றாகவே கேட்டது. யாரோ கதவைத் தட்டி அழைக்கிறார்கள்.

கதவைத் திறந்ததும் பெரியகுளத்தான் பதறிப்போனார். வாசலில் நங்கூரன்.

”கோகுல்நாத் ரூமுக்குத்தான் போனேன். எங்கயோ போயிட்டான். பூட்டிக்கிடக்கு. அதான் இங்க வந்தேன்.”

வரவேற்பதா, வெளியேற்றுவதா என்ற தயக்கத்துக்கு இடையில் நங்கூரன் அந்த எட்டுக்கு எட்டு அறைக்குள் வந்து, கட்டிலின் மீது அமர்ந்துகொண்டார்.

”அந்த இன்ஸ்பெக்டர் சரியான லூஸுப் பயலா இருப்பான்போல. அவன்கிட்ட டயம் வேஸ்ட் பண்ணிட்டோம்” என்ற அவருடைய குரலில் விரக்தி வெளிப்பட்டது.

”நானும் அதைத்தான் நினைச்சேன்” என்றார் பெரியகுளத்தான்.

இன்னும் கொஞ்சம் இரவுதான் மீதம் இருந்தது!

இரவு 1:31

இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கிளம்பும்போது கேட்டார்… ”எனக்கு ஒரே ஒரு டவுட்… உனக்கு எப்படித் தெரியும்?”

”எது?”

”போஸ்ட்மார்டனிஸம்?”

”சாமி உனக்கு ஒரு கும்புடு. எனக்கு ஒண்ணும் தெரியாது. என் மச்சான் ஒருத்தன் இருக்கான். கல்யாணம் பண்ணிக்கல. போஸ்ட்மார் டனிஸம்தான் அவனுக்குப் பொண்டாட்டி. அவங்க அப்பாவும் அம்மாவும் சாவும்போது என் தலையில கட்டிட்டுச் செத்துப்போனாங்க”

”அதான பார்த்தேன். எங்க இருக்கான்?”

”மேல் மாடியில…”

கதவை ஒட்டி மேலே சென்ற படிக்கட்டைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார்.

”நல்லவேளை. நான் கிளம்புறேன்.”

இரவு 1:36

இன்ஸ்பெக்டர் எதற்காகத் தங்களை ஃபாலோ பண்ணிவந்தார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பெரியகுளத்தான் கீழ் போர்ஷனுக்கு இறங்கிவந்து கதவில் கை வைத்தபோது, அவனுடைய மாமா உள் அறையில் ஏசியைப் போட்டுக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

– செப்டம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *