இரண்டு செய்திகள் – ஒரு தொடர்புமில்லை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,117 
 
 

செய்தித்தாளை எப்பொழுதும் வாசிக்கிறவர்களுக்கு இந்த கதை வேறொரு கோணத்தில் முன்பே அறிமுகமாயிருக்க கூடும்.போன வருடமும் இந்த வருடமும் நாளிதழ்களில் வெளிவந்த இரண்டு செய்திகள்,ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் சம்மந்தமற்றவை. ஆனால் இந்த கதை அந்த இரண்டு செய்திகளைப் பற்றியது என்பதால் அந்தச் செய்திகள் இதனுள் சம்மந்த படுகின்றன.அவை இரண்டையும் நாம் தேவைப்படும் பொழுது பார்ப்போம்.

பலூன் காரன் வரிசையாய் சிலிண்டரிலிருந்து காற்றை எடுத்து பலூன்களுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும்,படகு மறைவில் எந்த கோணத்திலிருந்தும் எவர் பார்த்தாலும் தம்மை அடையாளம் கண்டு கொண்டு விடக்கூடாது என்கிற சூட்சுமத்துடன் காதலர்கள் குலாவிக்கொண்டிருக்கும்,வெட்டி வைக்கப்பட்ட தலைகள் போல தர்பூஸ் பழங்களைத் தாண்டிச் செல்பவர்களை வசீகரிப்பதற்கென்றே வைத்திருக்கும் ஷர்பத் கிடைக்கும் என்ற போர்டு உடைய கடைகளை தாண்டி சகல கால்களையும் நறநறக்கும் மணல்வெளியுடைய சென்னை சாந்தோம்.

கடற்கரையில் அமர்ந்து கொண்டிருந்தான் சிவக்குமார். கடந்த சில நாட்களாகவே அவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் விருப்பம் அதீதமாய் அவனை துன்புறுத்திக் கொண்டிருந்தது.கிட்டத்தட்ட நேற்றைக்கு இரவு ஒரு போலீஸ்காரர் மட்டும் வந்திருக்காவிட்டால் அவன் தற்கொலை செய்து கொண்டிருப்பான்.போன வாரம் இதே கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டான்.அன்றைக்கு கூட்டம் வேறு கொஞ்சம் குறைவு.அன்றைக்கு பலத்த யோசனைகளுக்குப் பிறகு கட்லை நோக்கி எழுந்து நடக்கத்தொடங்கிய போது மழை வந்து காரியத்தை கெடுத்துவிட்டது. மழை தானே என ஒதுக்கிவிட முடியாதவண்ணம் மார்ச் மாத அதிசயமாய் கொட்டத் தொடங்கியது மழை.அவன் அந்த மழையை எதிர்பார்க்கவே இல்லை என்பதைத் தவிர இன்னொரு காரணம் மழையை அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும் அவனால் கடலில் கலக்க இயலாமல் போய் விட்டது.

இன்றைக்கு ஓரளவு வெய்யிலடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் கடற்கரைக்கு வந்து விட்டான்.காலையிலேயே வானிலை அறிக்கை யை முன்னெப்பொழுதும் கவனிக்காதவன் சிறப்பு அக்கறையுடன் கேட்டிருந்தான்.இன்றைக்கு சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் லேசான மற்றும் மிதமான காற்று வீசக்கூடும் என்பது தான் சொல்லப்பட்டது. சொன்ன மாதிரி லேசான வெப்பக்காற்று உப்பைத் தடவி சென்றது.

தனது முடிவை அவன் யாருக்கும் தெரிவிக்கவில்லை.யாரும் இந்த முடிவை பொருட்படுத்துமளவுக்கு நெருக்கமாக இல்லை என்பது தான் உண்மையும்.
.
லேசாகச் சிரித்துக் கொண்டான்.அவனை நோக்கி வந்த சிறுவன் தயங்கியபடி “வெள்றிக்கா,தண்ணீ பாக்கெட்டு,சிகரெட்டு எதுனா வேணுமா சார்?” என்றான்

இது என்ன புது வியாபாரம் என்ற படி அவனை பார்த்த சிவக்குமார் “வேறென்னடா வெச்சுறுக்க..?”என கேட்க,அந்த சிறுவன் தன் கையிலிருந்த கேரி பையைத் திறந்து தான் மட்டும் பார்த்தபடி

“கடலை மிட்டாய்,ஹால்ஸ்,பான்பராக்கு,பொகையிலை இருக்கு சார்”

“ஒரு பாக்கட் கிங்க்ஸ் குடுறா”

அவன் வலி கூடிய குரலில் “என் கிட்டே ஒத்தையா வாங்குங்க சார்..வெலை அதிகம்.. ஒண்ணு ஏழு ரூவா”

இப்பொழுது சிவக்குமார் அவனை பார்த்த பொழுது தனக்கு பின்னாலிருந்து வரும் வெளிச்ச மொத்தத்தையும் மறைத்துக் கொண்டு இருட்டான உருவமாய்த் தெரிந்தான் சிறுவன்.அவன் முகம் மொத்தமாக தெரியவேயில்லை.இருந்தாலும் அவனது குரலில் ஏழ்மை ஒலித்தது.

“உனக்காக தான் வாங்குறேன்,குடுறா..”

அதை அடுத்து அவனிடம் செய்கரட் பாக்கெட்டை கையில் தந்து விட்டு 100 ரூ நோட்டை வாங்கிக்கொண்டு சில்லறை மீதியை தந்து விட்டு மகிழ்ச்சியுடன் நடக்க தொடங்கிய அந்த சிறுவனின் நிழல் தன் மீதிருந்து மெல்ல விலகுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் சிவக்குமார்.இதே கடற்கரையில் போன வருடம் நவீனா உடன் வந்திருந்தது நினைவுக்கு வந்தது.நினைக்காதே.அவளை நினைக்காதே.அந்தப் பேயை நினைக்காதே…

நவீனா சிவாவின் கையில் காமிராவைக் கொடுக்கும் பொழுதே மெல்லிய குரலில் அதட்டினாள். “சிவா..என்னை மட்டும் தான் ஸ்னாப் எடுக்கணும்.வேற யாரையும் எடுத்தே உன்னைக் கொன்னுறுவேன்”

சிவா சிரித்த படி “சரி நவி..வேற யாரை எடுக்க போறேன்..?”

முந்தையதை விட மெல்லிய குரலில்”சிவா..என்னை வேற யாரும் ஸ்னாப் எடுக்காம பாத்துக்குறதும் உன் வேலை தான்.”

“சரி.”என்றான்.

நவீனா அவள் உடன் பணி புரியும் நான்கு தோழிகள் இவர்களுக்கெல்லாம் பாதுகாவலன்,ட்ரைவர், அசிஸ்டெண்ட்,மற்றும் இப்பொழுது ப்ரத்யேக ஃபோடோக்ராஃபெர்..இப்படி பல வேடங்களில் நடிப்பதற்காக உடன் வந்திருந்தான் சிவக்குமார்.தோழிகள் கூட இருக்கும் பொழுது கணவனிடம் மொத்தம் பத்து வாக்கியங்கள்.பத்துமே உத்தரவுகள் தான்.அதுவும் அடிக்குரலில் யாருக்குமே கேட்காத குரலில் சொல்லிவிடுவது ஒரு கலை.அந்தக் கலை நவீனாவுக்கு மிகவும் எளிதாய்க் கைவந்தது.

சொந்த மனைவி உடனிருக்க,ஒரு சுற்றுலாத் தளத்தில் மிக விசித்திரமான தனிமை அவனுக்கு வாய்த்தது.வேரு யாருக்குமே வாய்க்குமா எனத் தெரியவில்லை.மற்றவர்களின் கணவன்மார்கள் எல்லாரும் நல்ல வேலைகளில் இருப்பவர்கள்.சிவா நல்ல வாஎலையில் இருந்தவன்.இப்பொழுதைக்கு அவன் வேலை பார்த்த மென்பொருள் நிறுவனம் ஆட்குறைப்பு செய்ததில் ஒரே நாளில் சிறகுகள் பிய்த்தெறியப்பட்டு பறந்து கொண்டிருந்த உயரத்திலிருந்து கீழே வந்தவன்..இல்லை…விழுந்தவன்.

ஆனால் இதுவல்ல காரணம்.அவன் வேலைக்கு சென்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் நாட்களிலும் கூட நவீனா இப்படித்தான்.அவள் அவனுடன் பேசுவதே எதையாவது செய் எனச் சொல்வதற்கும் செய்யாதே எனத் தடுப்பதற்கும் மட்டும் தான்.திருமணமான புதிதில் சர்க்கரை தடவிய தேன் நிலவுக்காலங்களில் கூட அவள் அவனை பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பாள்.

அவள் பேசுவதே வெறும் விஷயங்கள் மட்டும் தான்.ஆரம்பத்தில் இது பிடிக்காமல் கண்டித்த சிவா பிறகு அவளை சகித்துக் கொண்டு வாழப் பழகிக்கொண்டான்.இந்த நேரத்தில் வேலை வேறு போய் விட நவீனாவிற்கு இந்த சூழல் வசதியாய் போய் விட்டது.

எல்லாரும் குளித்து விட்டு வந்தார்கள்.கடலின் அலைகள் தம்மை தழுவியவுடன் எல்லாருமே வயது வித்யாசங்களன்றி குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.அதிலும் வானதி அலுவலகத்தில் நவீனாவின் மேலதிகாரி,சின்ன குழந்தை போல கொண்டாடி மகிழ்ந்ததை அத்தனை நேரம் கவனித்துக் கொண்டே இருந்தான் சிவக்குமார்.ஆமாம்…புகைப்படம் தானே எடுக்க கூடாது.?பார்ப்பதை தவிர்க்க இயலாதல்லவா..?

ஈரத்துணிகள் மெல்ல காயத்துவங்கியிருக்க காரில் அனைவரும் ஏறிக்கொள்ள ஸ்டார்ட் செய்து ஓட்டத்தொடங்கினான் சிவா.

“சிவா சார்…காரை முதல்ல ஒரு ஹோட்டலுக்கு விடுங்க..சூடா காப்பி குடிக்கணும்…”என வானதி சொல்ல,சிவா காரை ஒரு ஹோட்டலுக்கு முன் சென்று நிறுத்தினான்.எல்லோரும் குடித்து முடித்து விட்டுக்கிளம்பும் நேரத்தில் பணம் குடுக்க தானே சென்றாள் நவீனா.அந்த சின்ன இடைவெளியில் “சிவா சார்…உங்களுக்கு நீச்சல் தெரியாதா..?தண்ணின்னா பயமா..?”எனக் கேட்டாள் சுமதி.

“எப்படி தெரியும் உங்களுக்கு?

“நவீனா தான் சொன்னாங்க..”

“அவ சொல்லிட்டாள்ல…அப்ப எனக்கு நீச்சல் தெரியாது.எனக்கு தண்ணின்னா பயம்” என சொல்ல அனைவரும் சிரித்தனர்..அந்த நேரம் திரும்பி வந்த நவீனா “என்ன எல்லாரும் சிரிக்கிறீங்க?”என்று கேட்க, நவீனாவைப் பற்றி தெரியாத சுமதி, “உன் வீட்டுக்காரர் சூப்பர் ஜோக் ஒண்ணு அடிச்சார்…அதான் சிரிக்கிறோம்”

“என்ன ஜோக்கு..”

“அய் அதெப்படி சொல்ல முடியும்..?அந்த ஜோக்கே உன்னை பத்தி தான்”

அப்போதைக்கு அமைதியாக வந்து விட்டாள்.ஆனால் அதற்கு பின் வீட்டில் நுழைந்த கணம் பற்றி எறிந்தாள்.

“என்ன ஜோக்கு,உனக்கு..?என் வாழ்க்கையே ஜோக்கா தானே இருக்கு..அந்த ஜோக்க சொல்ல வேண்டியது தானே..?”சிவா அமைதியாயிருந்தான்.

“உன்னை எவ்வளவு கட்டி போட்டாலும் நீ சும்மா இருக்கியா..?ஒரு நிமிஷம் கூட ஆயிருக்காது நான் போய் பில்ல குடுத்துட்டு வர்ரதுக்கு..அதுக்குள்ள ஈ’நு இளிச்சிறணுமா..?”

சொன்னபடியே டீபாயின் மீதிருந்த கல்யாண புகைப்படத்தை எடுத்து தரையில் போட்டு உடைத்தாள்.

“என்ன சொன்னே சிவா..? எவள பாத்து மயங்குனே…? எவ கிட்டே என்ன சொல்லி அவளுக அப்பிடி சிரிச்சாளுக..?சொல்லப்போறீயா இல்லையா..?”

“நவீனா..உனக்கு புரியாது. நீ என்ன சொன்னாலும் நம்பப் போறதில்ல…விட்று.. நான் எதுமே சொல்லலை..”

“உன் சேட்டை எல்லாம் எனக்கு தெரியாதா..?சிவா..சொல்லு…அந்த சுமதி கிட்டே நாளைக்கு கேட்பேன் அவ சொல்ல தான் போறா…அதுக்கு முன்னாடி நீயா சொல்லிறு…என்ன சொன்னே அவ கிட்டே”

உக்கிரமானான் சிவா.அவனுக்கு இதற்கு மேல் பொறுமை இல்லை.என்ன செய்தால் எதை சொன்னால் நவீனா அமைதியாவாள் என்பது அவனுக்கு சத்தியமாய் தெரியாது.அவன் மிருகமானான்

“சொன்னேண்டி..சுமதி கேட்டா..தண்ணின்னா பயமான்னு., நான் சொன்னேன்… நீ என் கையப் பிடிச்சுக்குறதா இருந்தா கடலுக்கு நடுவில கூட வந்து நிப்பேன் நு.போதுமா?”

“அப்ப்டி சொல்லு..சுமதி கேக்குதா…?”………………..” பொம்பள(தனது ஜாதியை சொல்லி)அலுத்துருச்சி இப்ப “…………………” பொம்பளை (சுமதி ஜாதியை சொல்லி)இனிக்கிதோ..?இரு நாளைக்கு தெரியும்,நான் யாருன்னு… என்றவள் அதன் பின் அன்றைக்கு எதுவும் பேசவில்லை.

அதற்கடுத்த நாலு நாட்கள் அமைதியாய் தான் சென்றன.அன்றைக்கு வெள்ளிக்கிழமை. காலையில் கிளம்பி ஒரு இண்டெர்வியூ என சென்ற சிவா வீடு திரும்பிய போது வீட்டில் நவீனாவைக் காணவில்லை.சரி வருவாள் என டீ வீ யை ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான் சிவகுமார்.

அப்பொழுது அவனது நோகியா மணிச்சத்தம் அழைக்க எடுத்தான்.மறு முனையில் யாரெனத் தெரியவில்லை.

ஒரே விசும்பல் சப்தம்.அழுகை.

“யாருங்க..ஏன் அழுறீங்க..?”

“சார்..நான் சுமதி..நவீனா..நவீனா..”

“நவீனாவுக்கு என்னங்க..?” பதறவே செய்தான் சிவா.

“ஒண்ணுமில்லைங்க.இன்னிக்கு ஆஃபீஸ் ல வந்து சாப்பாட்டு நேரத்துல ஒரே ரகளைங்க..உங்களுக்கும் எனக்கும்
சம்மந்தப்படுத்தி என்னேன்னமோ பேசிட்டாங்க…எனக்கு சாவுறத தவிர வேற வழி தெரியலைங்க..”

“சுமதி..அழாதீங்க.நான் சொல்றத கேளுங்க.அவ ஒரு முட்டாள்.அவளை கணக்கில எடுத்துக்காதீங்க. எனக்காக அவளை மன்னிச்சுருங்க..ப்லீஸ்…சுமதி,எனக்காக,எதையும் மனசுல”

சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே காளி மாதிரி நுழைந்தாள் நவீனா.

ஃபோனைப் பிடுங்கினாள்.

“ஏண்டீ அவுசாரி…”

அதற்கு மேல் நீங்கள் வார்த்தைகளுக்கு பதிலாக மிகச் சப்தமாக வாசிக்கப்படும் பின்னணி இசையை இந்த இடத்தில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.பேசி முடித்து ஃபோனை அவள் வைத்தது பிற நாடுகளுக்கே கேட்டிருக்கும். அதன் பின்னர் நவீனா அவளது தாய் வீட்டுக்கு சென்றாள். வக்கீல் நோட்டீஸ் வந்தது ஒரு மாதம் கழித்து. ஆறு மாதம் கழித்து வழக்கு நடக்க ஆரம்பித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது.

சிவா இப்பொழுதைக்கு தனி மனிதன். ஆரம்பித்த இடத்துக்கே வாழ்க்கை அவனைத் திரும்ப கொணர்ந்து விட்டிருந்தது. இழந்ததை விடவும் நல்ல வேலையொன்றில் அவன் இருக்கிறான். சென்னைக்கு வந்துவிட்டான்.தனி வீடொன்றில் வசதியாய் தான் வசிக்கிறான். எந்த ப்ரச்சினையும் இல்லை தான்.

வெறுமையாயிருந்தது. சிவக்குமார் மெல்ல எழுந்தான். அந்தி சாயும் மைக்ரோ வினாடிகளின் வினோதமான மாலை போல தோற்றமளித்தது வானம்.யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். கடலை கரையை பின் தொடர்ந்து கரையோரமாகவே நடக்கலானான் சிவக்குமார் மெல்ல கையில் புகையும் சிகரட்டை எடுத்து அவ்வப்பொழுது இழுத்த படி.

அவன் நடந்து கொண்டிருப்பதற்கு சரியாய் ஒரு வருடம் முன்பாக இன்னொரு ஃப்ளாஷ்பாக் இந்த கதைக்கு தேவைப்படுகிறது. அது ஒரு வரி கதை தான். தனக்கும் தன்னுடன் வேலை பார்க்கும் நவீனாவின் கணவன் சிவக்குமாருக்கும் எந்த சம்மந்தமுமில்லை என கணவனின் காலைக்கட்டிக்கொண்டு அழுது வீங்கிய கண்களுடன் தூங்கச்சென்றாள் சுமதி.

இதோ அந்த செய்திகள்:

ஃபிப்:20/2010மதுரை: தூங்கிக்கொண்டிருந்த மனைவியைவெட்டிக் கொலை செய்தார், அவளது நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன். மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் வைரவன். இவரது மனைவி சுமதி. இவருக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதென சந்தேகப்பட்ட வைரவன் தனது மனைவியை ஏழு இடங்களில் வெட்டிக் கொன்றவர் போலீசில் சரணடைந்தார்”

மார்ச் 3/2011 சென்னைசிவக்குமார்,வயது 33.சமீபத்தில் விவாகரத்தானவர், மனமுடைந்து கடலில் குதித்து
தற்கொலை செய்து கொண்டார்.

Print Friendly, PDF & Email

1 thought on “இரண்டு செய்திகள் – ஒரு தொடர்புமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *