இரக்கம் வென்றது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,139 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுக வாசஸ்தலமான எனது வீடு நகருக்கு வெளியே சுமார் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. எனது ஜவுளிக் கடையிலிருந்து நான் எப்போதும் எனது சொந்தக்காரில்தான் எங்கும் போவதுவழக்கம். அன்று, “ஒரு நாளுமில்லாத திருநாளாக” நடந்து பார்க்க வேண்டு மென்ற அவா தோன்றிற்று. ஏதாவது ஒன்றில் ஆசை விழுந்தால் அதை அடக்க முடிகிறதா?

“ஆனால், பிரபல ஜவுளிக்கடை முதலாளி கணபதியா பிள்ளையா தமது பருத்த தொந்தியைத் தூக்கிக்கொண்டு நடந்து செல்கிறார்!” என்று நண்பர்கள் பரிகாசம் பண்ணக் கூடாதே என்ற கூச்சம் வேறு தோன்றியதால், மாலை மயங்கி, எங்கும் இருள் பரவியதும் புறப்பட்டேன்.

“எங்கே, வீட்டுக்குத் தானே ?” என்று கேட்டுக் கொண்டு என் கார் டிரைவர் கந்தசாமி காரை எடுத்து வர அவசரமாக ஓடினான். நான் அவனைத் தடுத்து, “கந்தசாமி, நான் இங்கு அருகிலுள்ள ஒரு நண்பர் இல்லத்திற்குச் செல்லவேண்டும். வீட்டில் கேட்டால், இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று சொல்” என்று கூறி விட்டு, விடுவிடென்று நடந்து சென்றேன்.

இது டிரைவர் கந்தசாமிக்கும் வியப்பாகத்தான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவன் என்னைப் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளாக நான் நடந்து சென்றதை அவன் எங்கே கண்டிருக்கிறான்!

2

மெதுவாக நடந்து நடந்து நகரத்தின் மக்கள் நட மாட்டமற்ற பாகத்திற்கு இப்பொழுது வந்துவிட்டேன். இங்கிருந்து என் வீடு இன்னும் மூன்று மைல் தூரம் இருக்கும். ஐந்தாறு நிமிடத்திற்குள் கார் செல்லும் தூரமா இவ்வளவு தொலைவில் இருக்கிறது?” என்று என் மனம் எண்ணிற்று. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு வாசித்த ஒரு கதையின் ஞாப கமும் கூடவே வந்தது. ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் னரே பிறந்த ஓர் எலிக்குஞ்சு சின்னஞ்சிறு அறையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குப் போக பல மணி நேரம் பிடித்ததோடு, “அடே, அப்பா! இந்த அறை எவ்வளவு தூரம்!” என்று பெருமூச்சு விட்டதாம். ஆனால், அதே எலிக்குஞ்சு பெரிய எலியானதும் அத்தூரத்தை ஒரே தாவில் ஓடிப்பார்த்து விட்டு, “அட! இந்த அறை எவ்வளவு சிறியதாகப் போய்விட்டது.” என்று சலித்துக் கொண்டதாம். நான் இப்போது அந்தச் சுண்டெலிக் குஞ்சின் நிலையில்தான் இருந்தேன்.

என் வாழ்நாளிலேயே நான் அதிக தூரம் நடந்து சென்றது இன்றுதான். கால்கள் லேசாக வலிக்கத் தொடங்கின. என்றாலும் நடந்தே வீடு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தில் டிரைஷாவையோ டாக்ஸி யையோ நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

இருந்தாலும் பாதை ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனதுபோல் தோன்றிற்று. இனி அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் போய்விட்டால், எந்த வாகனங்களையும் காணமுடியாது. என் இல்லத்திற்குச் சுமார் அரை மைல் தூரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றால்தான் பஸ் ஏறலாம். அதாவது இப்போது நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் இரண்டரை மைல் தூரம் நடந்தே செல்லவேண்டும்.

அதுதான் போகட்டுமென்றால் இந்த இடைவெளி யில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனியாக கட்டப்பட்டுள்ள இருளடைந்த சிறுசிறு அத்தாப்பு குடிசைகளைத் தவிர வேறு கல் கட்டிடங்களோ அதிலிருந்து பிரகாசிக்கும் மின்சார விளக்குகளின் ஒளியோ காண்பதற்கில்லை. கருப்பு மையை ஊற்றி மெழுகியதுபோல் அந்தச் சாலை காட்சியளித்தது.

ஆயினும், நான் அதையெல்லாம் சட்டை செய்யாது அந்தப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தேன்.

3

இருந்தாற் போலிருந்து வானங் கறுத்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சிறு தூற்றலும், பிறகு பெரு மழையும் வந்துவிட்டது இந்த அனுபவம் எனக்கு முற்றிலும் புதிது. அனுதினமும் என் காரிலேயே பிரயாணம் செய்தவனானபடியால், பாதசாரிகளுக்கு இன்றியமையாததான குடையோ மழைக் கோட்டோ எடுத்து வரவில்லை. சோனை மாரியாகச் சட சட வென்று பெய்த மழையால் நான் தெப்பமாக நனைந்து விட்டேன்.

வாகனம், மனிதர் எதுவும் இல்லாத அந்த வெற்றுப் பாதையில் எங்கே ஒண்டுவது என்பது பெரிய பிரச்சினையாகப் போய்விட்டது. தூரத்தில் தெரியும் இருளடைந்த அத்தாப்பு குடிசைகளுக்குச் செல்ல என் “கௌரவம்” இடங்கொடுக்க வில்லை. அத்துடன் விவரம் தெரியாத ஒரு கலவரமும் என் மனத்தைக் கவ்விக்கொண்டது.

வேறு வழியின்றி ஒரு பெரிய காட்டுமரத்தினடியில் ஒண்டினேன். குளிரால் உடல் வெடவெட வென்று நடுங்க பல் கிட்டிக்கொண்டது. ஆனால், மழையோ கவலையின்றி பெய்து கொண்டிருந்தது. அது இலகுவில் விடுவதாகவும் தெரியவில்லை. இப்போது சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவமொன்று என் மனக்கண் முன் வந்தது.

4

அன்றும் இதே போல்தான் மழை பெய்து கொண்டிருந்தது. என்னிடம் பற்று வரவு செய்யும் ஒரு முதலாளி அப்போது தமது பெரிய காரில் வந்திறங்கினார். சிறிது நேரம் ஊர் விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, தமது கணக்கைப் பார்க்க வேண்டுமென்று கோரினார். அப்போதுதான் கணக்கப் பிள்ளை கோவிந்தசாமி அங்கில்லை யென்பதை உணர்ந்தேன். “சற்றிருங்கள். கணக்கப் பிள்ளை வந்து விடுவார்” என்று கூறுவதற்குள் “இல்லை, எனக்கு வேறு ஜோலி இருக்கிறது. பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று என்று கூறிவிட்டு, காரில் ஏறிப்போய்விட்டார் அவர். இது எனக்குப் பெருத்த அவமானமாகப் பட்டது

கடந்த 18-வருட காலமாக என்னையே தஞ்சமென்று என் கடையில் அடைக்கலம் புகுந்த கோவிந்தசாமி, அவர் போன சிறிது நேரத்திற்குப் பிறகு கொட்டும் மழையில் நனைந்துகொண்டு கடைக்கு ஓட்டமும் நடையுமாக வந்தான். தினசரி வழக்கமாக கடைக்கு வருவதற்கு, அன்று அரை மணி “லேட்”. “மழையினால் தாமதமாகிவிட்டது?” என்று பல்லை இளித்தான்.

அப்போது எனக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! “மழையாம் மழை! என்னடா, சரடு விடுறே? மழையைப் பார்த்தா, உங்க அப்பன் வீட்டு வேலையை யார் செய்றது? உன்னாலே எனக்கு இப்ப பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதே! இப்படிப் பட்ட தூங்குமூஞ்சி எனக்கு வேண்டாம். உடனே போய் விடு. உன் கணக்கைப் பார்த்து வாங்கிக்கொள்..” என்று வார்த்தைகளைக் கொட்டினேன்.

கோவிந்தசாமி கெஞ்சினான்; கூத்தாடினான்; அழுதான்; தொழுதான்; அப்போது பெய்த அடை மழை யைச் சபித்தான். ஆனால், நானோ ஒரு சிறிதும் மசியவில்லை. அவனைக் கடையை விட்டுத் துரத்தியதோடு, என் வீட்டு வாசற்படியையும் மிதிக்கக் கூடாதென்று எச்சரிக்கையும் செய்தேன். என் மனத்தை மாற்ற அவன் எடுத்துக்கொண்ட சகல முயற்சிகளும் பலிக்கவில்லை. கறார் கணபதியா பிள்ளையா இதற்கெல்லாம் விட்டுக்கொடுப்பவர்! அவனும் தனது கடைசி முயற்சி களைச் செய்து பார்த்துவிட்டு நழுவினான்.

ஆகா! அவனும் என்னைப் போல இப்படிப்பட்ட துன்பத்தைத்தானே அன்று அடைந்திருக்க வேண்டும்! ஐயோ! பாவம்!

இவ்வாறு நான் சிந்தனைக் கடலுள் எவ்வளவு நேரம் மூழ்கியிருந்தேனோ, தெரியாது. மழை நின்ற பிறகு தான் என் தற்போதைய நிலைமையை உணர்ந்தேன். யாராவது பார்த்துவிடாமல் இருக்க, மெதுவாக முன்னேறி, என் இல்லத்திற்குப் புழக்கடைப் பக்கமாகச் சென்று, கதவைத் தட்டினேன்.

கதவைத் திறந்த என் வீட்டு வேலைக்காரன் வேலாயுதம், “ஐயோ! சாமி! நீங்களா ? ஏன் இப்படி நனைஞ்சுட்டிங்க?” என்று அங்கலாய்த்தான். நான் ஒன்றும் பேசாது உள்ளே சென்று உடையை மாற்றினேன்.

5

இந்தச் சம்பவம் நிகழ்ந்து நான்கு மாதங்களாயின. அந்த ஒரு நாள் இரவு அனுபவத்தை நான் மறக்க முயன்றேன். அது மட்டுமல்ல. அப்போது என் மனம் சிந்தித்தவைகளை இப்போது எண்ணிப் பார்க்கவே கூசினேன்.

ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அது என்னிடம் கடைச்சிப்பந்தியாக வேலை பார்த்த கோவிந்தசாமியுடையதுதான். தன்னுடைய “தவறுகளை” மன்னித்துத் தன்னைத் திரும்பவும் வேலையில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டிருந்தான்.

இக்கடிதத்தைப் படித்ததும் என் மனத்தில் பெருத்த போராட்டம் நிகழ்ந்தது. ‘அன்று நடந்த அந்த அற்ப சம்பவத்திற்காக மனம் மாறி, பொறுப்பின்றி நடந்து கொண்ட அவனைத் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொள்வதா?’ என்று என் “கௌரவம்” குத்திக் காட்டிற்று. ‘அந்தோ. பாவம்! அவன் என்ன அப்படி பெரிய தவறு செய்துவிட்டான்? இயற்கைத் துன்பங்கள் எல்லாருக்கும் பொதுதானே. அன்று நீ துன்பப்பட வில்லையா?’ என்று பச்சாதாபம் குறுக்கிட்டது. இறுதியில் இரக்கமே வெற்றிகொண்டது. கோவிந்தசாமி வேலையில் அமர்ந்தான்.

– 1952, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *