இயேசுவுக்கு போலிஸ் காவல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 8,489 
 
 

வானத்திற்கும் பூமிக்கும் என்ன சண்டையாம்?

விடிந்த நேரத்திலிருந்து பூமித்தாயை நனைத்துக்கொட்டும் வருணபகவானுக்குத் துணைசெய்ய வாயுபகவானும் இணைந்து விட்டார்.

பெரும்காற்றடித்து,அடைமழைபெய்து லண்டன் தெருக்கள் இயற்கையின் தாண்டவத்தில் அல்லோல கல்லோப்பட்டுக்கொண்டிருந்தது.

நடந்துசெல்வோர் பிடித்திருக்கும் குடையைச் சட்டை செய்யாமல் மழை அவர்களை நனைத்துத் தளளுவதையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தங்கள் விடயங்களைப் பார்க்க விரைந்து கொண்டிருந்தார்கள்.

அதையும் தாண்டிய விதத்தில்,காரிற் செல்பவர்கள், நடந்துகொண்டிருப்பவர்களைத் தங்கள் காரின் வேகத்தில் தெப்பமாக்கிவிட்டுப் பறந்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு இரட்டைத்தட்டு லண்டன் பஸ் நிறைமாதக் கற்பவதிபோல, நிறையப் பயணிகளுடன்,அந்தத் தெருவில் உள்ள தரிப்பில் நின்று கொண்டிருந்தது.

முதியோர்,இளையோர்,பெண்கள்,குழந்தைகள்,கறுப்பர்,வெள்ளையர்,இரண்டும் கலந்த நிறத்தவர்,பல சாதி,சமயங்களைச் சேர்ந்தவர்கள் என்று பல தரப்பட்ட கிழக்கு லண்டன் மக்கள் அந்த பஸ்ஸில் நிறைந்திருந்தார்கள்.

பலர் உட்கார்ந்திருந்தார்கள்.பலர் இருக்க இடமில்லாமல் நின்றுகொண்டிருந்தார்கள்.
ஓவ்வொருவர் மனத்திலும் எத்தனை சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும்?
எத்தனை பிரச்சினைகளைத் தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள்?

கடைசி வரிசையிலிருந்த இருக்கைகளில் இருந்த ஒரு இளம் சோடி,ஆங்கிலேயர்கள்,தங்கள் காதல் மயக்கத்தில் இறுக்கி அணைத்து,ஒருத்தருடன் ஒருத்தர் சரிந்து கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு முன்னிருந்த இருக்கையில்,ஒரு ஆசிய நாட்டைச்சேர்ந்த முஸ்லிம் -பங்களதேசத்தைச சேர்ந்தவர்களாகவிருக்கலாம்,தங்களின் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு குழந்தைகள் தகப்பன்,தாயின் மடிகளில்,கொஞசம் வளர்ந்த,கிட்டத்தட்ட நான்கு வயதுப்பையன்,சேலை கட்டி முக்காடு போட்டிருந்த தனது அம்மாவுக்கு அருகில் ஜன்னலோடு சாய்ந்து நின்றிருந்தான்.

வெளியில் பெய்த மழையால்.உள்ளிருப்போர் விடு;ம் மூச்சு ஆவியாகி,பஸ்வண்டியின் ஜன்னல்களைப் புகார்மாதிரி மூடியிருந்தது.ஜன்னலோரமாக நின்றிருந்த பையன்,தன் இளம் சிறு விரல்களால் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தான். பெரிய முகத்துடன், இரு சிறு கண்களும்,ஒரு பெரிய சிரித்த வாயையுமுடையது அந்தச் சித்திரம்.

அந்தக் குடும்பத்துக்கு முன்னால்,ஒரு பெரிய உருவத்தையுடைய ஆங்கிலேயன்(?),தன் பெரிய வயிற்றைத் தடவியபடி அடிக்கடி உஸ் உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.அஸ்மாக்காரன்போலும்,கழுத்து நரம்பு புடைத்துத் தெரிந்தது.

கொண்டக்டர் இல்லாத பஸ் அது.
ட்ரைவர்,பஸ்ஸில் ஏறியவர்களக்கு டிக்கட் வினியோகம் செய்து கொண்டிருந்தான்.

ட்ரைவருக்குப் பின்னாலிருந்த இருக்கைகளில் ஒரு ஆசிய தம்பதிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் இந்தியர்களாக,முக்கியமாக குஜராத்தியர்களாக இருக்கவேண்டும். இருவரும்,தங்கள்,சுருங்கிய பழுப்பேறிய நெற்றிகளில் குங்குமம் வைத்திருந்தார்கள்.தம்பதிகள், அமைதியான தோற்றமுடையவர்வர்கள். இந்தியக் கணவர் அடிக்கடி தனது கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார்.பின்னர் மனைவியிடம் ஏதோ முணுமுணுத்தார்.;
அந்தப் பக்கத்தில் ஒரு ‘நாராயண்மந்திர் கோயில் இருக்கிறது. அங்கே மதியநேர பஜனைக்குப்போகிறவர்களாக இருக்கலாம்.

முத்தமிட்டுக்கொண்டிருந்த காதலர்களின் பக்கத்தில் வேறு இரண்டு பயணிகள் வந்து உட்கார்ந்தார்கள்.

முதற் பிரயாணி,ஒரு மெல்லிய தோற்றமுடைய வெள்ளைக்காரன்,தோய்ந்து நனைந்த கோழியாய்
நனைந்த உடுப்புகளுடன் வந்துட்கார்ந்தான்.

அவனைத் தொடர்ந்து வந்த ஒரு ஆசிய மாது,மிகக் கவனமாகத் தன்,நீர்த்தளிகள் கொட்டும் குடையை மடித்து அருகில் வைத்துக்கொண்டாள். மிகவும் நாகரீகமாக உடுத்திருந்தாள். பஸ் நிறையத் தொடங்கி விட்டது. இருக்கைகளில் இருப்போரை விடக்கூடப்பேர் பஸ்ஸில் நின்று கொண்டிருக்கிறார்கள் போற்பட்டது.

ஆஸ்மாக்காரன் பொறுமையற்ற முகபாவத்துடன் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டான்.அவன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க முதியவர் இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.மூச்சிழைக்கும் வெள்ளைக்காரன்,தனக்குப் பக்கத்தில் இருமிக்கொண்டிருக்கும் ஆபிரிக்க முதியவரை அருவருப்புடன் பார்த்தான்.

பங்களதேச நாட்டுப் பயணிகளில்,அவர்களின் கைகுழந்தை, சட்டென்று பெரிய உச்சஸ்தாயில் ஓலம் வைக்கத் தொடங்கியது.வெளியே இடியும் மழையும்,உள்ளே,அழுகை,ஆஸ்மா இழுப்பு,இருமல்,இச் இச்சென்ற முத்தத்தின் சப்த ஸவரங்கள்,அத்துடன்,மெல்லமாகவும், கொஞ்சம் சத்தமாகவும் பேசிக்கொள்ளும் பயணிகளின் குரல்கள்.

பஸ் இன்னும் புறப்படவில்லை.

தெப்பமாக நனைந்து வந்த ஒல்லிய வெள்ளைக்காரன்,இப்போது ‘வேர்க்கஸ் யுனைட்’ என்ற பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்குப் பக்கத்திலிருந்த ஆசிய மாது,கொஞ்;ச நேரத்தில் தன் கைப்பையைத் திறந்து ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தாள்.அது சல்மன்ருஷ்டியின் ‘சட்டானிக் வேர்ஸஸ்’என்ற நாவல்.

‘ஏன் இன்னும் பஸ் கிளம்பவில்லை?’ உயர்ந்து வளர்ந்த, நின்று கொண்டிருக்கும் பயணிகளில் ஒருத்தனான ஒரு கறுப்பு இளைஞன் ட்ரைவருக்குக் கேட்கக்கூடிய குரலில் உரத்துக் கேட்டான்.

ட்;ரைவருக்கும், அப்போது பஸ்ஸில் ஏறிய சில பயணிகளுக்கும் ஏதோ தர்க்கம் நடப்பதன் அறிகுறிகள் கேட்டன.
பயணத்துக்குப் பணம் கொடுக்க மாட்டோம் அல்லது பயணத்துக்கேற்ற பணம் கூடிக் குறைந்து விட்டது என்று அவர்கள் தர்க்கம் பண்ணுகிறார்களா?.

ஓரு ஆங்கிலேய மூதாட்டி வந்து உடகார ஒரு இளம் பெண் எழும்பி இடம் கொடுத்தாள். அதைத் தொடர்ந்து,பஸ்சில் நின்று கொண்டிருந்த பயணிகளை விலக்கிக் கொண்டு மூன்று இளம் பெண்கள் நகர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பஸ்சில் இருந்த ஏல்லோருக்கும் காலை வணக்கம் சொல்லிக்கொண்ட பின், உரத்த குரலில்,’அன்புடைய சகோதர சகோதரிகளே உங்களை, உலகத்தின் கர்த்தாவான யேசுவிடம் ஒப்படையுங்கள்’ என்று மூவரும் ஒரேயடியாகச் சொன்னார்கள்.

வந்திருந்த மூன்று பெண்களில் ஒருத்தி. அவளுக்கு மிகவும் ஒடுங்கிய முகமும் கிளியோபாத்திராவின் நீண்டகண்களுமிருந்ததால் அவள் சிலவேளை,ஆபிரிக்காவின் வடகிழக்குப்;பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று காட்டியது. முல்லை மொட்டுக்கள் போன்ற இதழ்களும்,பார்வையில் ஆழமான சிந்தனையுடன் ஒரு சஞ்சலமுமிருப்பதாகத் தெரிந்தது.அவள் தனது மெல்லிய அழகிய இளம் உடலைச்சுற்றி ஒரு தடித்த கம்பளிக் கோர்ட் அணிந்திருந்தாள் கையில் ஒரு பெரிய பைபிள் இருந்தது.

‘எங்களை இரட்சிப்பதற்காகவே இயேசு பிறந்தார்.உங்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்தார்.உங்கள் துன்பங்களை அவரிடம் ஒப்படையுங்கள்,அவர் அவற்றைத்துடைத்து உங்கள் பாவங்களைப் பெருமனதுடன் மன்னிப்பார்’;.

ஆபிரிக்க அழகிய இளம்பெண் பிரசங்கம் செய்யத் தொடங்கினாள்.அங்கிருந்த ஒரு சிலர் அவளின் சொற்பொழிவைச் செவி மடுத்தனர்.

ஓரு சிலர், ஜன்னலுக்கு வெளியில் உலகைப்பார்க்கும் (மழையை) வித்தில் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். ஓருசிலர்,வேடிக்கையான புன்முறுவலுடன் அவர்களை அவதானித்தனர் ஒரு சிலர் வெறுப்படன் அவர்களைப் பார்த்தனர்.

‘ஏய்.பெண்ணே உனது இயேசுவிடம் சொல்லி உனது முட்டாள் வாயை மூடச்சொல்.என்னைக் காப்பாற்ற இந்த பஸ்சுக்கள் யாரும் வரத்தேவையில்லை’. ஆஸ்மாக்கார வெள்ளையன்; மூச்சுவாங்கக் கத்தினான்.
அவனின் இழுப்புச் சத்தத்க்குத்தாளம் போடுவதுபோல் முதிய ஆபிரிக்கக் கிழவர் இருமத் தொடங்கி விட்டார்.

பங்களதேசக்குழந்தை தனது அழுகைக் குரலைஉயர்த்தி நீலாம்பரி வாசித்தது.

முத்துமிட்ட சோடி,பைபிள் பெண்களின் உரத்தகுரல் உபதேசத்தால் கவனம் திருப்பப்பட்டுத் தங்கள் சொர்க்க உலகத்திலிருந்து யதார்த்த உலகுக்கு வந்தார்கள்.

பைபிளுடன் வந்தவர்களில் உயர்ந்தவளாயிருந்தவள் இந்தியப் பெண்ணாக இருக்கவேண்டும்.அவள் முகம் மழையில் குளித்தெழுந்த மல்லிகைப் பூமாதிரி பளிச்சென்றிருந்தது. வண்டிரண்டைக் கண்களாக வளையவிட்ட குறும்பான முகத்தில் இளமை எண்ணங்களைக் கனவுலகுக்கொண்டுபோகும் கவர்ச்சியான இதழ்கள்.

‘நான் ஒரு சீக்கியப்பெண்ணாகப் பிறந்தேன்.இயேசுவின் அருளால் இப்போது உண்மைகளை அறியத் தொடங்கிவிட்டேன்’ அந்த இந்தியக் கவர்ச்சிப் புயல் தன்உருக்கமான குரலில் தென்றலைப் பரவியது.

‘ஏன் உனது தாய் தகப்பன் எது உண்மை எது பொய் என்று சொல்லித்தரவில்லையா’
நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரன் கவர்ச்சிக் கன்னியிடம் கிண்டலாகக் கேட்டான்.

‘அப்படி அபத்தமாகச் சொல்லவெண்டாம். எனது தாயும் இப்போது கிறிஸ்தவப் பெண்ணாக மாறிவிட்டாள்.ஒருநாள் இயேசுபிரான் என் தாயிடம் வந்தாள்…..’ அவள் பேச்சை முடிக்கவில்லை.

பக்கத்தில் நின்ற கலப்பு இனத்தவன் கொல்லெனச் சிரித்தான்.

‘உனது அப்பன் அப்போது எங்கோ போய்விட்டான்.நீங்கள் சீக்கியர்கள்,கையில் உங்கள் வீரத்தைப் பிரதிபலிக்க வாளும் வளையமும் கொண்டு திரிவீர்களே. இயேசு வந்த போது அவற்றைக்காட்டி ஏன் உனது அப்பன் இயேசுவைத் துரத்தவில்லை’

கலப்பு இனத்தவனின் கிண்டலுக்குப் பலியானாள் அந்த சீக்கிய அழகி;.

பைபிளைக் கொண்டு வந்தவர்களில் மூன்றாவது இளம்பெண் ‘சல்மன ருஷ்டி’யின் நாவல் வாசித்துக் கொண்டிருந்த,ஆசிய மாதுவிடம் வந்தாள்.

‘உங்களைப் பார்த்தால் இந்துப் பெண்போலிருக்கிறது பைபிள் இளம் பெண் ‘சல்மன்ருஷ்டி’ புத்தகம் வைத்திருந்த மாதை ஏற இறங்கப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

‘நான் ஒரு இந்துப் பெண் என்று கண்டு படித்ததற்கு உன்னைக் கை தட்டிப் பாராட்டவா?’ அந்த மாது நறுக்கென்று கேட்டாள்.

‘நாங்கள் முட்டாள்களாக ஆக்கப் பட்டிருக்கிறோம். மூளையற்ற அறிவிலிகள்போல், ஆட்டையும் மாட்டையும்.பாம்பையும்,எலும்புக்கூடு போட்ட உருவங்களையம் வணங்கப் பழக்கப்பட்டிருந்தோம்.ஆயிரம் உருவங்களை அர்த்தமின்றி வணங்கி வாழ்க்கையை வீணாக்குவதைவிட, எங்களை உய்ய வைக்கும் ஒரு உயர் சக்தியை,கடவுளின் மகனான இயேசுவை நம்புங்கள்’ அந்தப் பைபிள் பெண் உருக்கமாகக் கேட்டுக்கொண்டாள்.

அந்தநேரம், உயர்ந்து வளர்ந்து. புடலங்காள் மாதிரித் தொங்கி நின்ற கறுப்பு இளைஞனின் ரேடியோவிலிருந்து வந்த பாட்டின் இசை பஸ் முழக்கப் பரவியது. அவன் பாட்டின் தாளத்திற்கேற்ப உடலை யசைத்து நெளிந்து கொண்டிருந்தான். பஸ்சிலிருந்த பலர் அங்கு நடந்து கொண்டிருக்கும் பாட்டிசையையும் பைபிள் போதனையையும் ஒரு நாடகம்போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பஸ் இன்னும் புறப்படவில்லை.

இந்திய வயோதிபத் தம்பதிகள் ஒருத்தரின் முகத்தை ஒருத்தர் சோகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அழுத குழந்தையின் ஆலாபனை தொடர்ந்து கொண்டிருந்தது.

‘நீங்கள் சமயப் பிரசங்கம் வைப்பதற்கு இந்த பஸ்தானா கிடைத்தது, உங்கள் பிசங்கத்தை நிறுத்தி விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால் நான் பஸ்சை எடுக்க மாட்டேன்; பஸ் ட்ரைவர் உரத்த குரலில் உத்தரவு போட்டான்.
‘ஆமாம், உங்கள் பிதற்றல்களைக்கொண்டுபோயத் தெருவிற் கொட்டுங்கள’ ஆங்கிலேய மூதாட்டி. பைபிள் பிரசங்கிகளைத் தன்னுடைய நடுங்கிய குரலில் அதட்டினாள்.

‘உங்கள் கிறிஸ்தவ பாதிரிகள் எங்கள் நாட்டுக்கு பைபிளோடு வந்தபோது பட்டாடை போட்டு வரவேற்றோம். நாங்கள் உய்வதற்கு இயேசுவின் கருணை தேவை யென்று சொல்லி எங்களை ஏமாற்றினார்கள்.இன்று நீங்கள் செய்த பழைய பாவங்களிலிருந்து உய்வதற்கு, இந்த கறுப்புப்பெண்கள் கையில் பைபிளுடன் இந்த பஸ்சில் பிரயாணம் செய்யும் பாவிகளின் பாவங்களைக் களைய இயேசுவின் கருணைக்குப் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்’ நின்று கொண்டிருந்த ,உயர்ந்த கறுப்பு இளைஞன் பாதி வேடிக்கையும் பாதி உண்மையுமான கருத்தைச் சொன்னான்.

அவன் ஒரு காலத்தில்,ஆபிரிக்கா நாட்டில்,மிருகங்களை வலைபோட்டுப் பிடிப்பதுபோல் பிடிக்கபட்டு அமெரிக்காவில் ஐரோப்பிய பிரபுக்களின் தோட்டங்களுக்கு வேலை செய்யக் கொண்டுபோகப் பட்ட ஆபிரிக்க மக்களின்,தலைமுறையின் எட்டாவது பரம்பரை இளைஞனாக இருக்கலாம்.

‘இதெல்லாம் முதலாவது உலக மகா யுத்தத்தால் வந்த வினை’ முதிய ஆங்கிலேயக் கிழவி காலனித்துவ சரித்திரத்தை,மழையில் நனைந்த கொண்டு கிழக்கு லண்டன் தெருவில் நின்று கொண்டிருக்கும் பஸ்சுக்குள் கொண்டு வந்த கறுப்பு இளைஞனில் பாய்ந்தாள்.

வெள்ளையர்களால் நடத்தப் பட்ட முதலாவது உலக யுத்தத்துக்கும் பைபிளுடன் பஸ்சுக்குள் நிற்கும் வெள்ளையர்களல்லாத பெண்களுக்கும் என்ன தொடர்பு என்று கறுத்த இளைஞனுக்குப் புரியவில்லை.
அவன் கிழவியை முறைத்துப் பார்த்தான்.

‘அப்போதுதான் நீங்கள் அமெரிக்காவை விட்டு இந்தப்பக்கம் வர ஆரம்பித்தீர்கள்’ கிழவி அவனின் கேள்வி படந்த முகபாவத்தைக் கவனித்து விட்டு மறுமொழி சொன்னாள்.

‘ஓ..,அதுவா பிரச்சினை,ஆமாம் நீங்கள் வெள்ளைக்காரர்கள் ஒருத்தரை அழித்து உலகத்தை அடிமை கொள்ள நடந்த யுத்தத்திற்கு அமெரிக்கப் போராளிகளாக வந்தோம்,அப்போது போராளிகள் அதன்பின் இரண்டாம் உலக யுத்தத்தில் உடைந்த உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பும்வேலைகளுக்கு வேலையாளர்களாக இங்கு கொண்டுவரப்பட்டோம்’

கறுப்பு இளைஞன் கிழவிக்கச் சரித்திரம் சொல்லிக்கொண்டவந்தான்.

‘இப்போது என்ன வேலை செய்து கிழிக்கிறீர்கள்,இரவு பகலாக காட்டுமிராண்டிப் பாட்டுக்களைப் போட்டுக்கொண்டு பக்கத்து அக்கம் பக்கத்தாருக்குப் பைத்தியத்தை உண்டாக்குகிறீர்கள்’?’
கிழவியின் போர்க்குரலில் உக்கிரம்.

‘உங்களில் பலருக்கு ஏற்கனவே இனவாதப் பைத்தியமிருக்கிறது.இல்லாவிட்டால்,சும்மா இருக்கிற நாடுகளுக்கெல்லாம்போய்க் குண்டுபோட்டு அழிப்பீர்களா?’ கறுப்பு இளைஞனின் வாதத்திற்கு’வேர்க்கஸ் யுனைட’ என்ற பத்திரிகை படித்துக்கொண்டிருந்த ஒல்லி வெள்ளைக்காரன் சிரித்தான்.

யார் சிரி;க்கிறார்கள் என்று பார்க்கத் திரும்பிய பங்காளதேசத்து மனிதனுக்கு,அந்த நாகரீகமான ஆசியமாது வைத்திருந்த ‘சலமான்ருஷ்டியின்’ நாவல் கண்களில்மோதியது.

அதைத் தொடர்ந்து,அந்தத் தந்தையின் முகத்தில் ஒருகோபம,; அழுது கொண்டிருக்கும் குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டிருந்த தன் மனைவியை அதட்டினான்.

‘கடவுளின் குழந்தைகளே அமைதியாக இருங்கள்.நிறத்தையும் மொழியையும்,சமயத்தையும் காரணம் வைத்துக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் பகைத்துக்கொள்ளாதீர்கள்.நீங்கள் எல்லோரும் இயேசுவின் குழந்தைகள்,உங்கள் குறைகளை இயேசுவிடம் சொல்லுங்கள்.அவரின் அன்புக்கு எங்களை ஆட்படுத்திக்கொள்வோம்’

பைபிளை வைத்திருந்த ‘கிளியோபத்திரா'(வட கிழக்கு ஆபிரிக்கப் பெண்) தன் கணிரென்ற குரலில் சொன்னாள்.
‘ சட’ அப் அன்ட் கெட் அவுட்; பஸ் ட்ரைவர் கத்தினான்.

‘ஏய்,பிளடி இடியட்ஸ், கெட் அவுட் எனக்கு ஹொஸ்பிட்டல் அப்போய்மென்டுக்கு நேரமாகிறது’ ஆஸ்த்மாக்காரப் பெருத்த உடல் எழும்பி நின்று உறுமியது.

நோயும் முதுமையுமான இந்தியத் தம்பதிகளில் அந்த மாது அழத் தொடங்கி விட்டாள்.

பஸ் இன்னும் நின்று கொண்டிருந்தது.

வெளியில் மழை,இவர்களில் ஒரு அக்கறையும் காட்டாமல் சோவென பெய்து கொண்டிருந்தது. வாயுபகவான் பஸ்சின் ஜன்னலைத்தட்டி, பஸ்சுக்கள் தொடரும் நாடகத்தைப் பார்க்க முயற்சிக்கப் பார்த்தார்.

‘ நாகரீகம் வேகமாகப் பரவும் இந்த உலகத்தில்,இன்னும் பல மக்கள் மதுவாலும்,மயக்க மருந்துகளாலும்,அறிவைக்கெடுக்கும்,பல தரப்பட்ட ஆபாசக் கலைகளாலும்.மிகவும் அழிவு நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் உய்ய இயேசு என்ற தேவதூதனை நாடுவோம்’ பைபிள் வைத்திருந்த சீக்கியப் பெண்ணின் குரலில் பரிவு.

‘அபின் என்ற போதைப் பொருளை,இந்திய மக்களின் பூமியில் அறுவடைசெய்து,அதைச் சீன மக்களுக்கு விற்பனை செய்து பன்னிரண்டு கோடி சீன மக்களின் வாழ்க்கையை ஆங்கிலேய அதிகாரம்; சீரழித்தபோது உலகத்தை உய்ய வைக்க வந்த இயேசு எந்த உலகத்துக்கு ஹொலிடேய் போயிருந்தார்’ கலப்பு இனத்து இளைஞனின் குரலில் கோபம்.

‘பேராசை பிடித்த மனிதர்களால்,இன்று ஆகாயத்தில் ஓட்டையும்.இயற்கையில் அழிவும்,காற்றில் நச்சும் பரந்து விட்டது.இவற்றையெல்லாம் உணர, இவற்றைத் தடுக்க நீங்கள் இயேசுவை நாடுங்கள் நம்புங்கள்’

ஒருகாலத்தில் இந்துப்பெண்ணாகவிருந்த பெண்,இன்று தன் கையில் பைபிளுடன்,பஸ்சில் பலகாரணங்காகவும் பயணத்தைத் தொடர வந்தவர்களிடம் உருக்கமாக வேண்டினாள்.

‘பழமையான மூட நம்பிக்கைகளால்,சாதி சமயம்.ஏழை,பணக்காரர் என்று மனித குலம் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக்கொள்வதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப்பழகுவோம்.’ பல்லாயிக்கணக்கா பலதரப்பட்ட அறிஞர்கள் சொன்னவார்த்தைகளை அந்தப் பெண் பஸ்சில் உட்கார்ந்திருக்கும் ஒரு சிறு, ‘உலகத்தக்கு’ இயேசுவின் பிரதிநிதியாக அறிவுறித்தினாள்.

‘ஆமாம் இந்த மாதிரியான போதனைகளுடன்தான் கிறிஸ்தவ பாதிரிகள் ஒருகாலத்தில் எங்கள் நாட்டுக்கு வந்து கொள்ளையடித்தார்கள். ஓரு கையில் பைபிளும், அடுத்த கையில் துப்பாக்கியுடனும் வந்து,எங்கள் நாட்டை. மக்களை, செல்வத்தை அழித்தபோது நிறம்,மொழி,சமயம் என்றெல்லாம் பார்த்துத்தானே எங்களை மிருகம் மாதிரி நடத்தினார்கள்’

இதுவரையும் மவுனமாக இருந்த இருமல்க்காரக் கிழவன் முணுமுணுத்தான்.

‘ஆமாம் முதலாளித்துவமும்.ஏகாதிபத்தியமும் உலகத்தைக்கூறுபோடுகிறது. அதற்கு உங்கள் இயேசு என்ன பதில் வைத்திருக்கிறார்’

முதற்தரம் தோய்ந்து நனைந்து வந்திருந்த,’வேர்க்கஸ் யுனைட’; பத்திரிகை வெள்ளைக்காரன் வாய்திறந்தான்.

‘எப்போது இந்த பஸ் கிளம்பும்?’ ஆஸ்த்மாக்காரன் கத்தினான்.

‘அந்தப் பெண்கள் இறங்கும்வரைககும் என்னால் பஸ்சை எடுக்கமுடியாது. இப்படி அவர்கள் வந்து பிரசாரம் செய்யும்போது, எத்தனையோதரம் கடவுள் பற்றிப் பல சண்டைகள் இந்த பஸ்சில் நடந்திருக்கின்றன. அவர்களின் பிரசாரத்தால் இங்கு நடக்கும் தகராறில் யாரும் இன்று காயப்பட்டால் எனது வேலை போகும்’ ட்ரைவர் பிரயாணிகளுக்குச் சொல்லிக்கொண்டு, தனது மோபைலை எடுத்தான்.

அந்த நேரம் பிரசாரத்தின் காரசாரமான தர்க்கவாதத்தில் பஸ் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
பைபிள்க்கார மூன்று பெண்களும் மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு செபம் செய்ய ஆரம்பித்தார்கள்.

பஸ் ட்ரைவர் போலிசுக்குப் போன் பண்ணி விட்டான். பஸ் பிரயாணிகள்,வெளியிலுள்ள மழை,காற்றுக் காரணங்களால் இந்த பஸ்சை விட்டிறங்கவும் தயங்கினார்கள்.

அந்த நேரம் பைபிள்,கிறிஸ்தவம், காலனித்துவம்,என்ற பல விடயங்களும் பெரிய குரலில் தர்க்கிக்கப்பட்டு அதனாற் பொறுமையிழந்து, பஸ்சுக்குள் வந்து எல்லோரையும் குழப்பும் பெண்களில் ஆத்திரம் கொண்ட கலப்பு நிற இளைஞன் சட்டென்று பாய்ந்து பைபிளைப் பறித்தான்.

அதே தருணத்தில், பல போலிஸ் கார்கள் பஸ்ஸை வளைத்தன். சட சட பட பட வென பல தரப்பட்ட போலிசார் பஸ்சுக்கள் ஏறினார்கள். பல போலிஸ் குண்டாந்தடி வைத்திருந்தனர். ஓரு சிலர் துப்பாக்கி வைத்திருந்தனர் ஒன்றிருவர் தங்கள் வாக்கி டோக்கியில் தகவல்களைப் பறிமாறிக்கொண்டிருந்தார்கள்.

திமு திமு என்று ஏறிய போலிஸ் பட்டாளத்தால் பஸ்சில் இருந்த பிரயாணிகள் ஒன்றும் பேசாமல் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டார்கள். அடுத்த கணம், ஆஸத்;மாக்கார வெள்ளைக்காரன், பைபிள் பெண்களைக்காட்டி,’இவர்கள்தான எங்களுக்குப் பிரச்சினை தந்தவர்கள் என்று கத்தினான்.

ஆங்கிலேய மூதாட்டியோ, அந்தக் கறுப்பு இளைஞனைக்காட்டி,’இவன்தான் எல்லோரிடமும் தகராறு செய்தவன்’ என்று காட்டிக்கொடுத்தாள்.

போலிசார் பட படவெனப் பைபிள்ப் பெண்களைப் பயங்கரவாதிகளைச் சுற்றி வளைப்பதுபோல் வளைத்துக் கொண்டார்கள்.

கறப்பு இளைஞன் போலிசாரால் பிடிக்கப் படுவதைக் கண்ட ட்ரைவர்,’அவன் ஒன்றும் செய்யவில்லை,எல்லோரையும்போல தர்க்கம் செய்தான்’ என்று பெரிய குரலில் சொன்னான்.

அவன் சொன்னது, சட்டத்தை அமுல் நடத்தும் போலிசார் காதில் விழுந்ததோ இல்லையோ அப்பாவிக் கறுப்பு இளைஞன் போலிசார் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டான். பைபிள் பெண்கள் ஒவ்வொருத்தரையும் இவ்விரணடு பொலிசார்,இறுக்கித் தூக்கிக்கொண்டார்கள் குழந்தைகளின் கதையில் கொக்குகள் காவிக்கொண்டுபோன ஆமை மாதிரியான காட்சியாக அது அமைந்தது.

பைபிள் பெண்களோ, இப்படியான விளையாட்டுகளை அடிக்கடி சந்தித்ததாலோ என்னவோ, ஒருதுளியும் சலனப் படாமல், ‘அன்பான மக்களே, ஆத்திரப்பட்டு ஒரு முடிவும் எடுக்காமல் கர்த்தரின் கருணையை நாடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு காவப்பட்டார்கள்.

பஸ் அமைதியானது.
வெளியில் காற்று குறையத் தொடங்கியது.
மழை, போலிசாரிடம் அகப்பட்டுக்கொண்ட,பைபிள் பெண்களுக்கும் கறுப்பு இளைஞனுக்கும் அழுவதுபோல் இன்னும் சிணுசிணுத்துக் கொண்டிருந்தது.

பஸ் பெருமூச்சு விட்டுக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தது.

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *