இப்படி எத்தனை காலம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,129 
 
 

ஆசீர்வாதம் கோப்பாயிலிருக்கும் தன் தங்கச்சி வீட்டுக்குப்போய் விட்டுத் திரும்பிப் பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

அப்போது மாலை நாலுமணிக்கு மேலிருக்கும்.

கவசவாகனத் தொடர் வண்டிகள் தற்செயலாக “வீதிவலம் வந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் இடைக்கிடை தலையைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தவாறுசைக்கிளை விரைவாக ஓட்டினான். கல்வியங்காட்டுச் சந்தைக்கருகில் வரும்போது உடலில் வியர்வை கசிந்து மூச்சு இழுக்கத் தொடங்கியது. என்றாலும் வேகத்தைக் குறைக்கவில்லை. முகவியர்வையைச் சேட்டுத்தலைப்பால் துடைத்து விட்டான். அவனுக்கு நாற்பத்தைந்து வயது தாண்டி விட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் வான்களும் கார்களும் மிக விரைவாகச் செல்வதை அவதானித்தான். சைக்கிள்காரர்களும் வேகமாகத்தான் போனார்கள் அவனுடைய பயம்தான் அவர்களுக்கும் என எண்ணினான். அவன் முத்திரைச் சந்தைச் சந்தியில் சங்கிலியன் சிலையருகில் வருகையில் அங்கு சிலர் நெருக்கமாகக் கூடி நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் முகங்களில் சிரிப்பைக் காணவில்லை.

வழமைபோல் அரசியல் பேசுவதுதான முகபாவங்கள் இல்லை.

அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமா என்று தீர்மானிக்கு முன்னர், சைக்கிள் தெருவளைவைக்கடந்து கந்தசாமி கோவில் பக்கமாகத் திரும்பிவிட்டது. சைக்கிளில் பிறேக்கும் குறைவு.

அந்த வீதி நெடுகிலும் வீட்டுப்படலைகளுக்கு முன்னால் அங்குமிங்குமாக நான்கு ஐந்து பேராய்க் கூடிநின்று கதைத்தபடி, சைக்கிளை ஓட்டிக்கொண்டு அவர்கள் முகங்களைக் கூர்ந்து பார்த்தான்.

சகலரது முகங்களிலும் ஆழமானபீதியும் சோகமும் அந்தரிப்பும்.

“ஏதோ விபரீதம் நடந்து முடிஞ்சிருக்கு”

கோயில் ஐயர் வீட்டுக்கு முன்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அருகில் சென்று சைக்கிளில் நின்றவாறு,

“என்ன விஷயம் ஆரையும் சுட்டுப் போட்டாங்களோ?” என்று மெதுவாகக் கேட்டான்.

“சுட்டதோ? காட்டுமிராண்டியள் செய்த கொடுமை தெரியாதோ?” தோளில் துவாயுடன் வேட்டியை மடித்துச் சண்டிக்கட்டுக்கட்டியிருந்த ஒருகிழவர் அவனைத் திரும்பிப் பார்த்துச் சினத்துக்கொண்டார்.

அவன் நெஞ்சு இடித்துக்கொள்ள சைக்கிளைவிட்டு இறங்கி நின்றான்.

“இல்லைப்பாருங்கோ நான் மத்தியானம் கோப்பாய்க்குப் போயிட்டு இப்பத்தான் வாறன்”

அங்கு நின்ற எல்லாருடைய முகங்களையும் அவன் கண்கள் மேய்ந்தன. “நெடுந்தீவிலை இருந்து குறிகாட்டுவானுக்கு வந்த படகிலை இருந்த சனங்கள் எல்லாரையும் வெட்டி, குத்திக்குதறிக் கொண்டு போட்டாங்களாம் மிருகங்கள்” அந்தக் கிழவர் கூற வாய் திறக்கும் போது பக்கத்தில் வெறும் மேலுடன் நின்ற ஒருவர் கூறினார்.

மனக்கொதிப்பு வார்த்தைகளில் பீறிற்று.

“குமுதினி என்ற படகாம்”

“ஓம்! ஓம்! சனம் யாழ்ப்பாணம் வர வந்திருக்கு!” அவர்கள் சொன்னவற்றைக் கேட்ட ஆசீர்வாதம் முகமிருண்டு கைகளில் வியர்வை கசிய “உண்மையாகவோ ” என்று அதிர்ச்சியுற்றான்.

அவனால் நம்பமுடியவில்லை என்றில்லை. அத்தகைய அனர்த்தம் நடக்கக்கூடாதென்ற மனவேக்கை.

“ஆஸ்பத்திரியிலை வந்து குவியிற சடலங்களைப் போய்ப்பாரும், உண்மை தெரியும், சனமெல்லாம் பதகளிப்படுகிறது தெரியவில்லையோ!”

“கிழடுகள், குமருகள், குழந்தைகுட்டிகள், குஞ்சுகுருமன்கள் எல்லாத்தையும் வாள், கத்தி, கோடரிகளாலை கதறக்கதறக் குத்திக்குதறியிருக்கிறான்கள். காட்டுமிராண்டிகள்”

“பச்சிளம் பாலகரின் வயித்திலையெல்லாம் குத்திக் கொன்றிருக்கிறாங்களாம். வெறி பிடிச்ச நாய்கள்!”

“ஆஸ்பத்திரிக்கு வாற சடலங்களைப் பார்க்கேலாதாம் அத்தனை கோரமாம்.” அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிய அவன் கந்தசாமி கோயில் கோபுரத்தை நோக்கியவாறு மௌனமாய்ச் சில நிமிடங்கள் நின்றான்.

“ஆராம் செய்தது?”

அவன் அவர்களிடம் கேட்டான். முகம் இருண்டு போனது.

“வேறை ஆர் இங்கை படகிலை திரியிற பசாசுகள்தான். சிவிலுடையிலை படகில் வந்து இந்தப் படகிலை குதிச்சாங்களாம் அலுக்கோசுகள்!” அந்தக் கிழவரே கூறினார். சொற்களில் வெறிப்பின் கொதிப்பு.

“நல்லூர்க்கந்தா! இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவில்லையா?”

அருகாமையில் வீட்டு வாசற்படியில் குந்திக்கொண்டிருந்த ஒரு பொக்கை வாய்க் கிழவி கோயிலை நோக்கி இரு கைகளையும் விரித்துப் பிரலாபித்தாள்.

“இந்த அறுவான்கள் நாசமாப்போவாங்கள்” –

ஆசீர்வாதம் சிறிது நேரம் தலைகுனிந்து நிலத்தை வெறித்தபடி நின்றான். பின்னர் சைக்கிளை மெல்ல உருட்டி தெருவுக்கு வந்து அதில் ஏறி மிதித்தான். சைக்கிள் தெருக்கிடங்குகளில் விழுந்தேறிப் போய்க் கொண்டிருந்தது. மிக மெதுவாக, “அனுராதபுரத்தில் நடந்ததிற்குப் பழிக்குப் பழியோ!” என்ற விசனம் அவன் மனதை நெருடியது. அவனது தலை சற்றுக் கவிழ்ந்து, கண்கள் வீதியை நோக்கியிருந்தன.

“இந்தக் கொடூரங்கள் எங்கை போய் முடியப்போகுதோ?” மனக்கொதிப்பு, நெஞ்சுக்கனத்து, இருதய இடி வேகம் கூடிற்று. தெருநெடுக இதே மாதிரி பதகளிக்கின்ற மக்கள் கூடிக்கூடி நின்றபடி, அவன் கோவில் வீதியால் வந்து றக்கா வீதிக்குகத் திரும்பி மருதடிப் பிள்ளையார் கோயிலருகில் வந்து அங்கு தெருவோரத்தில் குளத்தை அண்டி நிற்கும் மருதமரங்களுக்குக் கீழ்ப்போய் நின்றான்.

சைக்கிளை விட்டு இறங்கவில்லை.

அவனுடைய வீடு மருதடிப்பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் உள்ளவீதியில் வலது பக்கத்தில் மூன்றாவது, அது வீடில்லை, ஒரு கராச்சை அவன் வீடு போல் சரிப்படுத்திக் குடியிருக்கின்றான். எண்பத்திமூன்று ஜுலை இனக்கலவரத்தில் சகலவற்றையும் பறிகொடுத்து உயிர்தப்பி உடுத்த துணிகளோடு அகதியாய் மனைவி பிள்ளைகளோடு அவன் அங்கு வந்தான்.

அவனுக்கு வீட்டுக்குப் போக மனமில்லாதிருந்தது.

முதலாவது மருதமர அடியில் சைக்கிளைச் சாத்தினான். குளமதகோடு கட்டியிருக்கும் குந்தில் போய் அமர்ந்து மழை நீரால் நிரம்பிய அக்குளத்தை நோக்கியவாறு சிந்தனையில் ஆழ்ந்தான். நிலைமைகள் மோசமாகி வருவதையும் எதிர்கால அனர்த்தங்களையும் போர்வெறியின் அடாவடித்தனங்களையும் எண்ணி எண்ணி அவன் உள்ளம் நிம்மதி குலைந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

இருட்டறையில் கண்விழித்திருக்கும் கைதிபோல் தைரியமிழந்து நீண்ட நேரமாக அங்கிருந்தான்.

மருதமரங்களை மேவி இருள் கவிந்து வந்தது.

ஊரடங்குச்சட்ட நேரம் மனதை உறுக்கிறது.

எந்த நேரமும் கொடுமைகள் நிகழும் போது இச்சட்டத்தை அமுல்படுத்துவதில் அர்த்தமேயில்லையென நினைத்தான். மனைவியும் பிள்ளைகளும் பயப்படுவார்கள் என எழுந்தான். அவர்களுக்கு இந்த அவலச்செய்தி எட்டியிருக்கும், பயந்து நடுங்கிச் சாவார்கள். “நிம்மதியிழந்த வாழ்க்கையாய்போச்சு”

வலது கையால் சைக்கிள்கான்டிலைப் பிடித்து அதை நிமிர்த்தி உருட்டிக் கொண்டு மருதடி வீதியில் இறங்கி மெல்ல நடந்து நிமிர்ந்து பார்த்தான். வீட்டுக் கேற்றடியில் மனைவியும் பிள்ளைகளும் வழியை விழுங்கியவாறு அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பெரிதாகதான் எதுவும் நடக்காதது போல் அவன் சாதாரணமாய் நடந்தான்.

“இவ்வளவு நேரமும் எங்கை போயிருந்தனீங்க? நாங்கள் உங்களை நினைத்து பயந்து கொண்டிருக்கிறம்” என்று மனைவி கேட்க “ஓமப்பா” என்று மூன்று பிள்ளைகளும் சினந்து கொண்டனர்.

அவன் ஒன்றும் பேசவில்லை. கேற்றைக் கடந்து சைக்கிளை முற்றத்துக்கு உருட்டிக் கொண்டு போனான்.

பிள்ளைகள் தாயின் இரு கைகளிலும் தங்கள் கைகளைக் கோர்த்து, தாயை அணைத்தபடி அவனுக்குப் பின்னால் சென்றனர்.

“உங்களுக்கு விஷயம் தெரியாதோ? மனைவியின் கேள்வியில் விஷயத்தைச் சொல்லும் அவதியில் பயப்பதகளிப்பும்.

“என்னது?”

“என்னவோ எங்கைநிண்டு வாறீங்க? நெருந்தீவிலையோ எங்கையோ இருந்து படகிலை வந்த சனங்கள் எல்லாத்தையும் நடுக்கடலிலை வைச்சு கொத்தி வெட்டிக்கொண்டு போட்டாங்களாம்” சொல்லும் போது பயத்தில் அவளது கைகள் ஒன்றையொன்று பிசைந்து கொண்டிருந்தன. முகத்தில் பீதி உலுப்பிய களை இருண்டு கொண்டிருந்தன

“இரண்டு மூன்று வயதுக் குழந்தைகளையும் வயித்திலையாமப்பா குத்திக் கொண்டு போட்டாங்களாம். அதைக்கேட்க எனக்கென்னவோ செய்யுதப்பா” அவனுடைய கடைசி மகள் தீபம், பத்து வயது, தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“அம்மா விளக்கைக் கொழுத்துங்கோ பயமாயிருக்கு” அது மற்ற மகள் விவேகா, பன்னிரெண்டு வயது. இயற்கையிலே பயந்த சுபாவம்.

“அப்பா சிவில் உடையிலை வந்த நீலச்சட்டைப் பிசாசுகளாம் இதைச் செய்தது. சிறிலங்கா நேவியாம்”

முப்பது பேருக்குமேலை செத்துப் போச்சுதுகளாம்” இப்படிக் கூறியது அவனுடைய மூத்த மகன் அமரன், பதினாலு வயது.

“பிரேதங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்காம். அதுகளைப் பார்க்க கேலாதாம். அவ்வளவு அகோரமப்பா” என்று கூறிய விவேக்காவின் குரலில் வெலவெலப்பு.

“என்னவுங்கோ எனக்குப் பயமாயிருக்கு….”.

அவன் மனைவியைத் தொடரவிடாது, “என்னப்பா சும்மா பயமாயிருக்கு , பயமாயிருக்கு எண்டு கொண்டு” என்று கூறி பயவுணர்வை அடக்க நினைத்தான்.

“பின்னை இப்படிப் பயங்கரக் கொடுமை நடக்கேக்கை பயப்படாமல் இருக்க முடியுமே? “அப்ப பயப்புடும்” பயப்பட்டு என்ன வரப்போகுது? நெஞ்சு தான் நோகும்” அவன் சைக்கிளை வீட்டோரத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் சாத்திவிட்டு, விறாந்தையில் கிடந்த ஒரு கதிரையிலை வந்திருந்தான். மூன்று பிள்ளைகளும் தாயைவிட்டு விட்டு அவனைச் சுற்றி தோளில் உரசியபடி வந்து நின்று கொண்டனர். மனைவி இன்னொரு கதிரையை அவனுக்கு நெருக்கமாக இழுத்துவிட்டு அதில் அமர்ந்தாள்.

“என்னவுங்கோ கொழும்பிலை ஈன இரக்கமில்லாம தமிழரைக்கொன்றாங்கள். எங்களையும் கொல்ல வந்தவங்க. நாங்கள் ஏதோ தப்பி இங்கை வந்தம். இங்கையும் இப்படி யெண்டா நாங்க எங்கை தப்பி ஓடுறது?” மனைவி நெஞ்சில் இரு கைக ளையும் வைத்து அழுத்தியவண்ணம் அதிர்ந்து போன உணர்வுகளோடு சொன்னாள்.

“சும்மா விசர் யோசனையை விட்டிட்டுப் பேசாம இரப்பா” அவன் அவளை அதட்டினான். அந்த அச்சமே அவனுக்குள் பூதாகரமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அஞ்சிச்சாவதை அவன் விரும்பவில்லை.

“என்ன விசர்க்கதை என்கிறியள். அப்படி நடக்கக் கனநாள் எடுக்குமோ? உதிலை இருக்கிற நெடுந்தீவுக்கடலிலை நடந்திட்டுது தானே?”

“அவங்களாலே எல்லாரையும் கொல்ல முடியுமே. அப்படி ஒன்றும் நடக்காது. வீணாப் பயந்து சாகாதையும்”

“அம்மா இருட்டிப் போச்சு விளக்கை கொழுத்துங்கோ. பயமாயிருக்கு” தீபா.

“ஓமம்மா, கெதியிலை கொழுத்துங்கோ. றோட்டு லைற்றும் இல்லை” விவேக்கா.

“நடுக்கடலிலை இந்தச் சனங்கள் என்ன பாடுபட்டிருக்கும் என்னப்பா?” அமரன் யோசித்தவாறு இருந்துவிட்டுக் கேட்டான்.

“ஓ! அதுகள் சரியா அந்தரிச்சுத்தான் செத்திருக்கும்!” ஆசீர்வாதம் தன் உணர்வுகளை வெளிக்காட்டாது கூறினான்.

மனைவி மண்ணெண்ணை விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு வந்து காற்றில் அணையாதவாறு விறாந்தை மூலையில் வைத்தாள்.

“தீபாக்குட்டி அப்பாக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டாம்மா!”

“ஐயோ, அப்பா என்னாலை ஏலாது, குசினிக்குப் போகப் பயமாயிருக்கு” அவள் தகப்பனின் தோளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“என்னாலும் ஏலாது, நெஞ்சிடிக்குதப்பா” விவேகா அவனது தொடையிலை நெஞ்சை அழுத்தப் படுத்தாள்.

“என்ன அப்பிடிப் பயம். பயந்தாங்கொள்ளிகள்” குசினிக்குள் போய் ஒரு யொக்கில் தண்ணீர் கொண்டு வந்தான் அமரன்.

“அமரன் தான் சரி, என்ன மண்ணாங்கட்டிப்பயம்”

என்றுகூறிய ஆசீர்வாதம் தண்ணீரை மடக்குமடக்கெனக் குடித்தான்.

நெஞ்சம் குளிர்ந்தது. பெரும் ஆறுதலாய் இருப்பதை உணர்ந்தான்.

“யோசிக்க யோசிக்க எனக்கும் நெஞ்சிடிக்குதப்பா” தகப்பனுக்கும் தாய்க்கும் இடையில் நிலத்தில் குந்தியிருந்த அமரன் கூறினான். அதைக் கேட்டு எழுந்த சிரிப்பு சொண்டுக்குள் வரண்டு போயிற்று ஆசீர்வாதத்திற்கு. அனது மனைவிக்கோ கடும் யோசனை. அவள் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனவெளியில் படகில் வந்தோரின் அவலக் கோலங்கள் “சுற்றிவரப் பாருங்கோ பேய் அமைதி. ஆள் அரவம் இல்லை, ஏதோ அனர்த்தங்கள் நடக்கப்போற மாதிரி இருக்குதெல்லே யேசுவே! ”

அவள் ஆசீர்வாத்தின் வலது கையை இறுகப்பற்றிக் கொண்டு மெதுவாகச் சொன்னாள். இதைக்கேட்ட தீபா தகப்பனின் கழுத்தை இறுகப் பிடித்ததை அவன் உணர்ந்தான்.

“அப்பா கொழும்பிலை தமிழரைக் கொண்டவங்களப்பா இங்கையும் வந்திட்டாங்க?” தீபா அவனது காதுக்குள் பேசினாள்.

தாய்க்கும், மகளுக்கும் என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை.

“என்ன பேசாமல் இருக்கிறீங்க”

“ஊரடங்குச்சட்டந்தானே இப்படித்தான் அமைதியா இருக்கும். அமைதியை நிலைநாட்டத்தானே இச்சட்டம் போட்டிருக்கு”

“ம் உங்கடை கதை, வேலிதானே பயிரை மேயுது” மனைவி கூறினாள்.

“எல்லா இடமும் அது முடியாது, மனங் குளம்பாமல் சும்மா இரும்” அவன் மனைவியைத் தைரியப்படுத்த முனைந்தான். அவனுக்கோ பிள்ளைகளை எண்ணி நெஞ்சேக்கம்.

படாம் – டுட் – டுட் – டுட் ……

“ஐயோ அப்பா! யேசுவே!”

“அம்மா !”

சம்பவ “கடவுளே ஐயோ!”

“யேசுவே எங்களைக் காப்பாற்றும்!” தாயும் பிள்ளைகளும் பதறி அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டு நடுங்கினர்.

“பொறுங்கோ ! சத்தம் போடவேணாம்! அது குரும்பட்டி!” சற்று நேர நிசப்தம். இருட்டில் அவர்கள் கண்கள் பேந்தப் பேந்த மூழ்கின.

“குரும்பட்டியா?”

மனைவி நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்சு விட்டாள்.

“ஓமப்பா கூரைத்தகரத்திலை விழுந்து கோடிப்பக்கம் உருண்டு போனது!” அவர்களைத் தைரியப்படுத்த அவன் வலிந்து சிரித்தான்.

“எனக்கேதோ பயமாயிருக்கப்பா! இந்த நேரத்திலை அந்தப் பசாசுகள் வந்திட்டா? நாங்கள் என்ன செய்வம்? எங்கை ஓடிப்போறது?”

மனைவி நெஞ்சில் இருகைகளையும் கோர்த்து அணைத்துக்கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

“என்னவும் நீர் விளல் யோசனையெல்லாம் யோசிச்சுக்கொண்டு” அவன் மனைவியை அதட்டினான். ஆனால் அவனுக்கும் அதே யோசனை. அதே நெஞ்சிடி. ஆசீர்வாதம் சுவரில் தொங்கிய கலண்டரைப் பார்த்தான். மே பதினைந்து. அவனும் அவளும் வீட்டுக்கு வெளியே இருள்மூடிய வெளியையும் முன்வளவில் உயர்ந்து உம்மாண்டியாய் நிற்கும் பனைமரங்களையும் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தனர். பிள்ளைகள் தமக்குள் யோசித்துக்கொண்டு மௌனமாய் இருந்தனர்.

தெரு வெறிச்சோடிக் கிடந்தது. வேம்பின் கிளைகள் காற்றின் அசைவதால் இலைகளின் சிலிர்ப்பு. வளவுக்குள் இருந்திருந்து பச்சிகளின் கத்தல்கள். பல்லிகளும் இடைக்கிடை சாத்திரம் கூறின.

மனைவி அவனுடைய கையைச் சுரண்டினாள்.

“என்ன?”

“குளத்தடியிலை நாய்களெல்லாம் பலமாக் குலைக்குதுகள்” அவள் உள்ளடக்கிய குரலில் சொன்னாள். அவள் சொல்வாள் என அவன் எதிர்பார்த்தான்.

“டும் – ம் – ம்”

“அந்தா குண்டுச்சத்தமும் கேட்குது. முந்தியும் ஒண்டு கேட்டது”

பிள்ளைகளும் மனைவியும் இன்னும் இன்னும் அவனை நெருங்கி அனைத்துக் கொண்டனர்.

“நாங்கள் மாட்டைக் கண்டாலும் உப்படித்தான்”

“உந்தச் சந்தம் வேறை. அன்னியரைக்கண்டு குலைக்கிறமாதிரி எல்லே கிடக்கு”

“அது உம்மடை பயப்பிராந்தி, நான் கேற்றடிக்குப் போய் பார்த்திட்டு வாறன்”

“ஐயோ அப்பா நீங்க போகவேண்டாம், சுட்டுப் போடுவாங்கள், சனியன்கள்,” மூன்று பிள்ளைகளும் அவனை மேலும் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டன.

“சுக்குச் சுக்குச் சுக்குச் சுக்கு”………..

“கெலிக்கொப்டர் இரையுதப்பா” தகப்பனின் கால்களைப் பிடித்துக்கொண்டு கிடந்த அமரன் தலையைத் தூக்கிச் சொன்னான்.

அவன் சொல்லி முடித்துச் சிறிது நேரத்தில் கெலிக்கொப்டர் பேய் இரைச்சலோடு தென்னை மர உச்சிகளை முட்டுமாப்போல கோட்டையை நோக்கிப் பறந்துபோனது.

“யாழ்ப்பாணத்திலை ஏதோ செய்யப் போறாங்க” மனைவி வெளி இருட்டை உற்றுப் பார்த்துக்கொண்டு கூறினாள்.

“இங்கை அப்படி நடக்க விடமாட்டாங்க பேசாமல் இரும். பசிக்குது சாப்பிடுவம் வாருங்கோ” அவன் மனைவியின் கவனத்தை திசைதிருப்ப எண்ணினான். அவன் எழுந்து குசினிக்குள் போகத் தயாரானான். பிள்ளைகள் அவனது கைகளை பற்றிப் பிடித்துக் கொண்டனர்.

எல்லோரும் குசினிக்குள் புகுந்து குப்பி விளக்கைச் சுற்றி ஒருவரை ஒருவர் ஒட்டியபடி இருந்து சாப்பிட்டனர்.

“இண்டைக்கி அறைக்கை இருந்து செபம் சொல்லுவம்”

சாப்பிட்டு முடிந்து அறைக்குள் சென்று பாயை விரித்து இடைவெளி இல்லாதவாறு நெருங்கி இருந்து கொண்டனர். தகப்பனுக்கும் தாய்க்கும் இடையில் நுழைந்து மூவரும் இருந்தனர்.

ஐந்துபேரும் எதுவும் பேசாமல், சுவரில் தொங்கும் யேசுநாதரின் உருவப் படத்தை ஒரு மனதோடு பயபக்தியாய் ஏறிட்டு நோக்கினர். கைகளை நெஞ்சோடு அணைத்துக் குவித்துக் கொண்டனர்.

அரிக்கன் லாம்பு மூலையில் எரிந்துகொண்டிருந்தது. “யேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்”

“அன்பான யேசுவே! இந்த இராத்திரியில் எங்களைக் கொடிய மரணத்தி லிருந்து காப்பாற்றும்”

“இரக்கமான தேவனே! எங்கள் உயிரைக்காப்பாற்றியருளும்”

தாய் முதலில் சொல்லி மற்றவர்கள் அதைத் திருப்பிச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து ஐம்பத்தி மூன்று மணிச் செபமாலை சொன்னார்கள்.

தாயின் கண்களிலிருந்து கண்ணீர் இரகசியமாய் கசிந்து கொண்டிருந்தது.

கொழும்பில் எண்பத்திமூன்று ஜுலைக் கலவரத்தில் எல்லாம் இழந்த பின்பு பிள்ளைகளின் உயிரைக்காக்க அவனும் அவளும் பட்ட அவலங்கள் மனதை மீண்டும் பாரப்படுத்தின. அவள் பிள்ளைகளுக்குத் தெரியாது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“படுப்பம்”

ஆசீர்வாதம் கொட்டாவிவிட்டுக் கூறினான். பிள்ளைகளும் மனைவியும் நிலைமையை மறந்து நித்திரை கொண்டால் போதும் எனக் கருதி நித்திரைக் கொட்டாவி வந்ததாக நடித்துப் பாயில் சரிந்தான்.

“அப்பா நான் உங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டுதான் படுப்பன்”. தீபா அவனைக் கட்டி அணைத்தக் கொண்டாள்.

“நான் அம்மாவைக் கட்டிப் பிடிப்பன்” விவேகா சொன்னாள், தாயும் பாயில் சரிந்தாள். அவர்களுக்கிடையே அமரன் குறண்டிப் படுத்தான்.

“விளக்கை நூர்ப்பம்”

ஆசீர்வாதம் சொன்னான்.

“வேண்டாம் அதிருக்கட்டும்”

மனைவி கூறப் பிள்ளைகளும் ஓமப்பா என்றனர்.

“அப்ப கண்களை மூடி நித்திரை கொள்ளுங்கோ” அவள் கூறிவிட்டுத் தான் கண்களை மூடிக்கொண்டாள்.

சொற்பநேரம் மௌனம். “தெருவில் ஜீப் இரையிறமாதிரி இருக்குதுங்கோ” மனைவி மெல்லக் கூறினாள்.

“இண்டைக்கி புதிசா இரையிதா, பொடியன்கள் திரியிறவங்கதானே படுமப்பா ”

அவன் சினந்தான்.

அவனை அணைத்துக்கிடந்த தீபாவின் கையில் ஏதோ தட்டுப்பட்டது.

“என்னம்மா கையில் வைச்சிருக்கிறாய்?”

“அது என்ரை பாவப்புள்ளையப்பா”

“அதை ஏன் கையிலை வைச்சிருக்கிறாய். அதை அங்காலை வை”

“இல்லை அப்பா, எங்களை கொண்டுபோட்டாங்களெண்டால் இதை தனியா விட்டுட்டுப் போகக்கூடாதப்பா. அது பாவமப்பா.”

அவன் திடுக்குற்றுப் போனான். கண்கள் கலங்கின.

“நாங்க சாகமாட்டம்மா. வாறவங்களை கொண்டு போடுவன். அந்தா மூலையிலை கோடாலி எடுத்து வைச்சிருக்கிறன். அவங்களை துண்டு துண்டா கொத்திப் போடுவன்”

அவன் மிகமிகத் தைரியத்தோடு சொன்னான்.

“அப்பா” அமரன் அழைத்தான்.

“என்ன”

“நானப்பா கொடுவாக்கத்தி எடுத்து வைச்சிருக்கிறன். சனியன்கள் வந்தா எப்படிச்சரி வெட்டுவன். நாங்கள் சும்மா சாகக்கூடாதப்பா”

ஆசீர்வாதத்தின் நெஞ்சு வீறு கொண்டு பெருமிதம் பெற்றது.

தாயின் கண்களில் கண்ணீர் அவள் நெஞ்சோ பயத்தில் நலுங்கிப் போனது.

ஆசீர்வாதம் அமரனின்கைகளையும் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“எங்களை எந்தச் சனியன்களும் கொல்ல முடியாது படுங்கோ, பயப்படாமல் படுங்கோ .”

ஆசீர்வாதம் வெடிப்புறச் சொன்னான்.

– முரசொலி 1985 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *