இன உணர்வு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 8,541 
 
 

இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல இயந்திரத்தனமாய் குறுக்காக போய் வருவது படு சலிப்பான ஒன்று . வழக்கமாக மார்கழி மாதம் முதலே சிலர் குளிருக்கும், பனிக்கும் பயந்து நடைப் பயிற்சிக்கு தற்காலிகமாக விடுப்பு எடுத்து விடுவர். சிலர் கோவில்களில் தெய்வ சேவைக்கு போய் விடுவார்கள். ஆகக் கூடி இன்று வழக்கமான நடை சினேகிதர்களில் யாரும் இல்லை.

தன்னந்தனியாக மெட்ரோ ரயில் நிலையம் வந்தவனுக்கு எதிரே புதியதாக திறக்கப்பட்டுள்ள தானிய மொத்த அங்காடியைச் சுற்றிப் பார்க்க ஆவலாயிருந்தது. கடைகள் எதுவும் திறக்க வில்லை. ஆனால் முதன்மை வாயில் திறக்கவில்லை. வெளியில் இருந்த காவல்காரர்,

“ சார், கடையெல்லாம் எட்டு மணிக்கப்பாலதான் திறப்பாய்ங்க” என்றார். “அதில்லைங்க சும்மா சுத்திப் பார்க்கலாம்ன்னு பார்த்தேன். எத்தனை கடை, எத்தனை வரிசை எல்லாம் பார்த்து பத்திரிக்கையில் எழுதப் போறேன். அது சம்பந்தமா உங்களுக்கு எதாவது விவரம் தெரியுமா”?

“ஆ, அதெல்லாம் தெரியாது சார். நான் நைட்டு டூட்டி. இப்பொ எட்டு மணிக்கு வேற ஆளு டே டூட்டிக்கு வந்ததும் கிளம்பிடுவேன். ஆபிஸ் ரூம் பத்து மணிக்கு தொறக்கும். அங்க விசாரிச்சிக்குங்க”. சின்னதாக அவருக்கு ஒரு நன்றியை ஆங்கிலத்தில் சொல்லி பதிலுக்கு “சரிதான் சாரை” வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.

தமிழ்நாட்டில் , அதுவும் சென்னையில் நன்றி என்றால் பதிலுக்கு யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் அதையே ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என்றால் அப்படி ஒரு ரெசிப்ரொகேஷன்.

அப்படியே காய்கனி மார்க்கெட் வந்தால் சரியான வாகன நெருக்கம். சில்லறை வியாபாரிகள் அவர்களின் சரக்கை ஊர்திகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். மெல்ல வாகனங்களின் இடையில் புகுந்து புகுந்து “யோவ் பெரிசு வூட்டில் சொல்லிட்டு வன்ட்டியா, பார்த்துப் போ” என்று ஆசிர்வாதங்களை ஏற்றுக்கொண்டு நடைமுடித்து சுலைமானின் டீ கடையில் உட்கார்ந்தேன்.

சிநேகமாக சிரித்த சுலைமான், “சார் என்ன சீக்கிரமே வந்தாச்சு என்றார்”.

“ மூணு மணிக்கே தூக்கம் கலைஞ்சிடுத்து சுலைமான், அதான்”.

நான் பல வருட வாடிக்கையாளன். ஆகவே எப்போது போனாலும் தூள் மாற்றி ஸ்ட்ராங்கா சர்க்கரை தூக்கலா போட்டுத் தருவார். என்னிடம் மட்டுமில்லை கடைக்கு வரும் எல்லாரிடமும் சிரித்து பேசி வாடிக்கையாளராக ஆக்கிக் கொள்ளும் அந்த சாமர்த்தியம் அவருக்கே சொந்தம்.

சாலையில் போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. கடைக்குப் பக்கத்தில் CMBT அதாவது புறநகர் பேருந்து நிலைய நுழைவு வாயில். கடை எப்போதும் படுசுத்தமாக இருக்கும். கரைபடிந்த மேசைகள், ஈ மொய்ப்பது, அழுக்கு கண்ணாடித் தம்ளர், ஒரே எவசில்வர் பேசினில் எல்லா கண்ணாடித் தம்ளர்களையும் கழுவுவது இப்படி எல்லாம் அங்கே கிடையாது. ஒவ்வொரு முறையும் பயன் படுத்திய டம்ளர்களை முதலில் ஓடும் தண்ணீரிலும் அப்புறம் மறுபடி வென்னீரில் கழுவித்தான் அடுத்த முறை பயன்படுத்துவார். அதிகாலையிலேயே கடை திறந்தால் தினமும் சுமாராக இருபது இருபத்தைந்து லிட்டர் பால் ஓடும் என்பார்.

டீ மாஸ்டர் ஆறரை மணிக்குக் கடைக்கு வரும் வரை அவர் தான் மாஸ்டர்.

மாலை பஜ்ஜி, போண்டோ என்று போடுவார். அந்த பஜ்ஜி எண்ணெய் கூட ஒரு தரம் பயன் படுத்தியதை மறுதரம் பயன்படுத்த மாட்டார். எப்படியோ காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை வரை மாடா உழைச்சா எல்லா செலவும் போக மாதம் பத்தாயிரம் ரூபாய் மலப்புரத்தில் உள்ள குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடிகிறது என்று சொல்லுவார்.

கடை அருகே அரசு விரைவுப் பேருந்தொன்று நின்றது.

பேருந்துகள் உள்ளே நுழையும் முன்பே நிறுத்தப்பட, நுழைவாயிலில் மொய்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள். உற்றுக் கேட்க அவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் படு சுவாரசியமாக இருக்கும்.

“இன்னா சார் எங்க போகணும்”?

“சின்மயா நகர் பா”

“ இருநூறு ரூபா கொடு சார்”

“ரொம்ப ஜாஸ்தி பா. ஷேர் ஆட்டோவில் பத்து ரூபாதான்”

“நடந்து போனா அது கூட ஆவாது சார். எம்மாம் லக்கேஜ் இருக்கு பாத்தியா? சரி. எவ்ளோ தருவே”?

“ மீட்டர் போடு மேல பத்து ரூவா தரேன்”

“ தோ டா, சாருக்கு மீட்டர் போடணுமாம்”

பார்ட்டி உசாரான ஆளு என்றால் அடுத்த ஆளை தேடிப் போவார்கள். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் இருநூறு என்பார்கள்.

“ஏன்பா, நூறு ரூபாதான் ஆவும்பா. நூத்தம்பது தரேன்”.

“சரி சார். மேல பத்து ருவா போட்டுக்கொடு. போணியே நீதான் சார்”.

“நூத்தம்பதுதான்”.

“பத்து ரூவா பாக்காதே சார்”.

“இல்லை நூத்தம்பதுதான்”

“அப்பால உங்க இஸ்டம். உக்காரு. சின்மயாநகர் எத்தினியாவது ஸ்டேஜ்”? ஆட்டோ கிளம்பியது.

கொஞ்சம் விடிந்து விட்டது. கடையை நோக்கி ஏழெட்டுப் பேர்கள் வந்தனர்.

அவர்களின் கட்சிக் கரை போட்ட வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சீருடை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கட்சித் தலைவர் படம் எல்லாம் அவர்களை அடையாளப்படுத்தின.

வந்தவர்களில் ஓருவர்,”சேட்டா டீ போடு” என்றதும்

சுலைமான் மனசுக்குள் தலையை எண்ணியபடி டீ போட ஆரம்பித்தார்.

வந்தவர்களில் ஒருவர் “அண்ணே இந்த முறை நமக்குத்தாண்ணே” என்று பேசியதெல்லாம் நமக்கு அனாவசியம். அவர்கள் வெளியில் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி பின் தேனீர் பருக ஆரம்பித்தனர். “ஏம்பா தண்ணி டேஸ்டு கடுப்பா இருக்கு? நல்ல தண்ணி வைக்கக் கூடாதா”? என்றார் கொஞ்சம் பார்க்க தலைவர் மாதிரி இருந்த ஆசாமி. கடையில் எடுபிடி வேலைகளுக்கு சுலைமான் ஒரு சிறுவனை வைத்திருந்தார்.

“என்ன சுலைமான், படிக்கிற வயசு சின்ன பையனை கடையில் வேலைக்கு வைக்கலாமா” என்றேன் ஒரு நாள்.

“ அதுவா சார், அந்த பையன் அப்பா நாலு வருஷத்து முன்னே வேற ஒரு பொண்ணோட ஓடிப் போயிட்டான். அவன் அம்மா எனக்குத் தெரிஞ்சவங்க. அவங்க வயித்துப் பாட்டுக்கு எதாவது உதவி செய்யணும் என்றால் யாராவது தப்பா பேசலாம். அதனாலெ, ஸ்கூல் போற மட்டும் இங்க இருப்பான். டீ மாஸ்டர் வந்ததும் நானும் அவரும் கடையப் பார்த்துப்போம். இவன் பள்ளிக்கூடம் போயிடுவான். சாயங்காலம் ஒரு எட்டு மணிவரை இருப்பான். அவங்களுக்கும் வேலை செய்து சம்பாதித்த எண்ணம் இருக்கும். நான் எதாவது எதிர்பார்ப்பேனோ என்ற பயம் அவங்களுக்கும் இருக்காது. எனக்கும் பெரிசா தர்மம் பண்ணிய எண்ணம் வராது”. என்றார்.

மனசுக்குள் சுலைமான் ஒருபடி உயர்ந்து நின்றார்.

கடையை விட்டு சற்று விலகி அவர்கள் உரையாடியபடி தேநீர் பருகி காலி காகித கப்புகளை கீழே போட்டு விட்டு நடையைக் கட்டவும் தொடங்கினர். கடைக்கு மற்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய பயணிகள் வர ஆரம்பித்திருந்தனர்.

சுலைமான் எடுபிடிக்கு வைத்திருந்த சிறு பையன் அவர்களைத் தொடர்ந்து போய்” சார் காசு தரலை” என்றான். அதில் தலைவர் போலிருந்தவர் நூறு ரூபாய் நோட்டை சட்டை உள்பாக்கெட்டிலிருந்து எடுத்து,” சிங்காரம், நீ போய் கடையில கொடுத்திட்டு லாடஜுக்கு வந்திடு”, என்றவாறு நடக்க ஆரம்பித்தார்.

கடைப் பையனுடன் வந்த தொண்டர் சுலைமானிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, “இந்தா எடுத்துக்க உன்காச. காலங்காத்தால தலைவரை அசிங்கப்படுத்திட்டயே. ஓடியா போயிட்டோம். கடைப்பையன் வந்து கேட்கற அளவுக்கு ஆயிடுச்சி” என்றார்.

சுலைமான்,” கடை திறந்து இப்பத்தான் அரை அவர் ஆவுது. சில்லறை இல்லை. கொஞ்சம் மாத்திக் கொடுங்க”. “யோவ் காசு வேணுமினு பயலை அனுப்பி அசிங்கப்படுத்தத் தெரியிது.சில்லறை மாத்தித் தரத் தெரியலையா? ஜூன் மாசம் கடை இருக்காது”.

சுலைமான் கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரர் பெரிய புள்ளி. நல்ல செல்வாக்கானவர். அந்த ஏரியாவில் அவர் பெரிய தாதா. சுலைமானுக்கு மிகவும் நெருக்கமானவர். இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பையனை அனுப்பி சில்லறை வாங்கி எட்டு டீ க்கு உரிய காசை எடுத்துக் கொண்டு மிச்சம் தந்தார்.

காசை வாங்கி எண்ணியவன்,” என்ன கணக்கு”

“எட்டு டீ. ஒரு சிங்கல் டீ ஏழு ரூபாய் ஆக ஐம்பத்தாறு” சுலைமான்.

“ஏய் நானும் பார்க்கறேன் ரொம்ப ராங்காவே பேசற. வந்தேறி மலையாளத்தானுங்க இப்படி எங்கூரில வந்து சுரண்டி சாப்பிடறீங்கடா. ஐந்து டீ தந்திட்டு எட்டு டீ ன்னு சொல்லி ஏமாத்தி *** தின்னற **** பசங்க”.

“நாங்க தமிழங்கடா, எங்க பூமிடா இது” என்று ஆரம்பிக்கவும்.

“ஏய் எட்டு டீ சாப்பிட்டு விட்டு அஞ்சுன்னு பொய் சொல்லாதே”

“யாருடா பொய் சொன்னது? மரியாதையா காச எண்ணி கொடுத்திடு. எலெக்சன் முடியட்டும் பாரு அப்புறம். எச்சக்கலை நாய்ங்க”

“மூன்று டீ காசு தர முடியாது. டீ குடிச்சதானே” என்றபடி பக்கத்து கடைக்காரர்களை அழைக்க மலையாளத்தான்களை விரட்டணும் என்றபடி வீர வசனம் பேசி பம்மிப் பம்மி காணாமல் போனான்.

குடிச்ச டீ க்கு காசு தர விரும்பாத இன உணர்வுப் போராளியை நினைத்து “சுலைமான் இவனுங்களை எப்படி சமாளிக்கிற” என்றேன்.

“தினமும் எப்படியும் ஒரு ஆளு இப்படி வந்து சேருவான். அதெல்லாம் பார்த்தா தொழில் செய்ய முடியுமா சார். இவனுங்க ஆட்சிக்கு வந்தா அராஜகம் பண்ணுவாங்க அதை நினைச்சாத்தான் பயமாயிருக்கு.

யாரும் சாப்பிட இல்லாட்டா பால் காய லேட்டாகும் என்று தள்ளி விட்டிருப்பேன். நீங்கள் டீ சாப்பிடறத பாத்துட்டதால அப்படி சொல்ல முடியல. சாரி சார் இந்த கலாட்டா எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு வராம போயிடாதீங்க. இந்த அல்லக்கைகள் ஆடற ஆட்டம் தான் சார் தாங்க முடியாதென்றார்”.

இன உணர்வின் மறுபக்கம் திகிலூட்ட வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “இன உணர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *