சிபாரிசு இல்லாம இந்த வேலை கிடைக்காதுன்னு சொல்றேன்னு வச்சுக்கோங்க…உங்களுக்கு சிபாரிசு பண்ண ஆள் இருக்கா?
இருக்கு சார்! என் பெரியப்பா கவுன்சிலரா இருக்கார்! நான் அவர்கிட்ட லெட்டர் கேட்டிருகேன்…
எங்க கம்பெனியில் சிபாரிசை ஏத்துக்க மாட்டோம்னு தெரிஞ்சும், இதை எப்படி தைரியமா எங்கிட்டேயே சொல்றீங்க?
உண்மையை சொல்லிடறது நல்லதுதானே சார்!
சாரி மிஸ்டர் பார்த்திபன்! உங்களுக்கு இந்த வேலை இல்லை
நோ பிராப்ளம் சார்! எனி வே , எதுவா இருந்தாலும் முடிவை உடனடியா சொன்னதுக்கு தேங்க் யூ! – தனது உற்சாகம் சிறிதும் குறையாமல் இன்டர்வியூ அறையில் இருந்து வெளியேறினான் பார்த்திபன்.
இரண்டாவது நாள். அதே கம்பெனியிலிருந்து அவன் பெயருக்கு ஒரு கூரியர் வந்தது. பிரித்துப் படித்தான்.
”எங்கள் நிறுவனத்தின் சாதாரண கிளார்க் வேலைக்கான தேர்வில்தான் நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் தயக்கமின்றி உண்மையைச் சொல்பவர். அறிந்தவர் தெரிந்தவரின் செல்வாக்கைக் கொண்டு எதையும் சாதித்து விடக் கூடியவர், உங்களைப் போன்றவர்தான், எங்கள் முதலாளிக்கு தனிப்பட்ட பி.ஏ. வாக இருக்க பொருத்தமானவர் என்று நாங்கள் கருதுகிறோம். உடனடியாக தாங்கள் பணியில் சேரலாம்” என்றது அந்தக் கடிதம்
– விகடபாரதி (ஜூலை 2014)