இந்திய கலாச்சாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 3,649 
 
 

“…. அது தான் இந்திய கலாச்சாரம்; இந்தியன் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியத்திலும் வெளிப்படும் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை வழி. அதை விளக்கிக் கூற வாய்ப்பளித்த கலிபோனியர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.”

முகுந்தன் கூட்டத்தினருக்குக் கைகூப்பிவிட்டுப் பெருமிதத்துடன் மேடையை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு மணி நேரமாக ‘மெஸ்மரைஸ்’ ஆனது போல நிசப்தத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் எழுப்பிய கரகோஷத்தால் அந்த வெஸ்ட்லேக் ப்ளாஸா அதிர்ந்தது.

“அற்புதம், மிஸ்டர் முகுந்தன்! இந்திய கலாச்சாரத்தை இதைவிடத் தெளிவாக எங்களுக்கு யாரும் விளக்க முடியாது. ஐயாயிரம் வருடங்கள்! மை காட்! வென் ஐ அம் ஷேக்கிங் ஹாண்ட்ஸ் வித் யு நௌ, ஐ ஃபீல் அஸ் இஃப் ஐ வேர் பார்ட் ஆஃப் ஹிஸ்ட்ரி.”

கலிபோர்னிய மாநிலச் சட்டசபை உறுப்பினரான ஜார்ஜ்மாக்லூகன் முகுந்தனின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு அவரை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஆயிரம் கண்கள் ஆர்வமும் பாராட்டும் ததும்ப அவரை நோக்கிக் கொண்டிருந்தன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஜிம் ஃபில்பிராண்டுக்கு கூட்டத்தை அமைதிப்படுத்தி அந்த நான்கு இந்தியக் கலாச்சாரத் தூதர்களுக்கும் பரிசுகள் கொடுத்து நன்றி கூறுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஜோ லேன்ஸ்டன் அவர்களைக் கூட்டத்தினரிடமிருந்து பிரித்து வெளியில் கொண்டுவந்து வண்டியில் ஏற்றிக் கொள்ள சரியாக அரைமணி நேரம் பிடித்தது .

உலக அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நால்வரும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். முகுந்தன்தான் அந்தக் குழுவின் தலைவர்; பிரசித்தி பெற்ற இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் தத்துவப் பேராசிரியர். மோகன பிரசாத் வரலாறு-கலாச்சாரப் பேராசிரியர். வெங்கட் ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியர். சௌதரி ஒரு பத்திரிகையாளர். அமெரிக்கக் குடும்பங்களுடன் தங்கி அவர்களுடன் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யவும், பல அமெரிக்க நிறுவனங்களைப் பார்வையிடவும், அமெரிக்கர்களுடைய வாழ்க்கை முறையை ஆராயவும் அவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள்.

***

“அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பென்ட்ஹவுஸ், பிளேபாய்க்கு மேல் நம்மால் போக முடியவில்லை. சே! வாட் எ டிஸப்பாயின்ட்மென்ட்!” ஸ்காட்சை உறிஞ்சியவாறே அங்கலாய்த்தான் மோகன பிரசாத்.

“திஸ் லாஃப்டி ஸ்டிரெயின் ஈஸ் ரியலி கெட்டிங் ஆன் மை நெர்வ்ஸ்,” முகுந்தன் ஆமோதித்தார். “சே, இது என்ன சிகரெட் இது!” ஆஷ்ட்ரேயில் அழுத்தினார். “இந்த அமெரிக்க சிகரெட்டுகளில் ஒரு இழவும் இல்லை. சௌதரி, எனக்கும் ஒரு வில்ஸ் கொடு.”

சௌதரி ஒரு வில்ஸைப் பற்ற வைத்து அவருக்குக் கொடுத்தான்.

“ஹாய், முகுந்தன்! நீங்கள் எல்லோரும் வந்துவிட்டீர்களா? ஜோ எங்கே?” வெளியிலிருந்து ஜோ லேன்ஸ்டனின் மனைவி மார்தா கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

“ஹலோ, மார்தா! ஜோ எங்களைக் கொண்டு விட்டுவிட்டு வெளியில் போயிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார்,” என்றான் சௌதரி.

முகுந்தன் அவள் மாடிக்குப் போவதை வெறுப்புடன் பார்த்தார்.

“ஆச்சு, கிழம் வந்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில், ‘கலாச்சாரம் சொல், கேட்கிறேன்,” என்று என் பிராணனை வாங்க வந்துவிடும்.”.

மோகன பிரசாத் ஒரு கிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவர் எதிரில் வந்து உட்கார்ந்தான். “நானும் இதுவரை நான்கு வீடுகளில் தங்கிவிட்டேன். ஒரு வீட்டில் கூட இளசாக, சிறுவயதுப் பெண்ணாக யாரும் இல்லை; எல்லாம் கிழங்கள்.”

“கலிபோர்னியா கிழமயமாக இருக்கிறது!” சொல்லிவிட்டுத் தானே ரசித்துச் சிரித்தான் சௌதரி. “சரி, இருப்பதை வைத்துக் கொண்டு ‘எஞ்ஜாய்’ பண்ணுவோம். சேண்டியிடம் சொல்லி ஒருவிதமான வீடியோ கேசட்டுகளுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறேன். மூன்று மணிக்கு வரச்சொல்லி இருக்கிறாள். நீயும் வருகிறாயா?”

“முகுந்தன்?”

“முகுந்தனுக்குத்தான் கிழம் இருக்கிறதே! ஒரு வேளை மாலிபு கிழங்கள் கிளப்பில் அவருக்கு இன்று மாலை லெக்சர் இருக்கிறதே என்னமோ!”

இரண்டுபேரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள். முகுந்தனுக்கும் சிரிப்பு தாளவில்லை.

“ஏய்! எங்கே போனாலும் ஆறரை மணிக்கு இங்கே வந்து விடுங்கள்,” முகுந்தன் கண்டிப்புடன் சொன்னார். “ஏழு மணிக்கு நம் எல்லோருக்கும் பாலர்மோவில் டின்னர்.”

“பாலர்மோவில் என்ன இருக்கிறது? வெயிட்டர்கள் எல்லோரும் ஆண்கள். அந்த ரெஸ்ட்ராண்டை நடத்துபவளோ வாண்டா என்ற கிழவி!”

திரும்பவும் எல்லோரும் சிரித்தார்கள்.

“கவலைப்படாதீர்கள்,” முகுந்தன் மலர்ச்சியுடன் சொன்னார். “நாளை நாம் சன் லூயிஸ் ஒபிஸ்போவில் இருப்போம். அங்கு மெஃபிஸ்டோஃபிலிஸ் இன்னில் டின்னருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்.”

“அதற்கு என்ன?” மோகன பிரசாத் அசட்டையாகக் கேட்டான்.

“அதற்கு என்னவா?” முகுந்தன் மாடிப்படியை ஒரு முறை பார்த்துவிட்டு அவர்கள் காதில் கிசுகிசுத்தார்.

“ரியலி?” சௌதரி ஒரு துள்ளு துள்ளினான்.

மோகன பிரசாத் ‘உய்ய…’ என்று விசில் அடித்தான்.

“அது மட்டுமல்ல, நண்பர்களே,” முகுந்தன் தொடர்ந்தார். அங்கு நம்மைத் தொந்தரவு செய்ய ஜோ லேன்ஸ்டனோ அல்லது வேறு யாரோ நம்முடன் வரப் போவதில்லை.”

முகுந்தனைப் புகழ்ந்து பாடிவிட்டு மோகன பிரசாத்தும் சௌதரியும் கிளம்பினார்கள்.

திடீரென்று மோகன பிரசாத்துக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஆமாம், நம்ப இங்கிலீஷ் வாத்தியார் எங்கேப்பா? நாம் இந்தப் பேச்சு பேசியதற்கு அவன் ஒரு ஐம்பது நிமிட வகுப்பு எடுத்திருப்பானே!”

“மிஸ்டர் டிஸிப்ளின் எங்கேயாவது கிழவர் கிழவிகளுக்கு இந்தியப் பண்பாட்டை வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பான்,” என்றார் முகுந்தன்.

எல்லோரும் திரும்பவும் நகைத்தார்கள்.

***

“ஏம்பா, தம்பி, ‘இன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களே, இது என்ன சத்திரம் மாதிரியா இருக்கிறது?” கட்டிலில் படுத்துக்கொண்டு தொலைக் காட்சியில் சானல்களை மாற்றிக் கொண்டிருந்த முகுந்தன் கேட்டார்.

வெங்கட் பதில் சொல்லாமல் சாந்த மரியா நகரின் காலை நேரத்து சாலைப் போக்குவரத்தை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். முகுந்தன் சொல்வது உண்மைதான்; பிரம்மாண்டமான அந்த சாண்ட்மண் இன் சாந்த மரியா நகரில் உள்ள பெரிய கட்டிடங்களில் ஒன்று.

சாந்த மரியா ஒரு சிறிய நகரம். சாண்ட்மன் இன்னின் நான்காவது மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வெங்கட்டுக்கு, நகருக்கு அப்பால் உள்ள பசுமையான மலைத்தொடர்களும் அவற்றில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த வெண்ணிற எக்கா மலர்களும் கூடத் தெரிந்தன. அந்த மலைத்தொடரைச் சுற்றி லோம்பாக் பள்ளத்தாக்குக்குச் செல்லும் சாலை கருநாகம் போல் வளைந்து சென்றது. அதில் ஊர்ந்து கொண்டிருந்த சிறிய அளவாகத் தெரிந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவன் மனம் முகுந்தனுடன் பேசுவதற்காகத் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தது.

“என்னப்பா, மனதில் கவிதை ஏதாவது ஊற்றெடுத்துக்கொண்டு இருக்கிறதா?”.

அவன் எதுவும் பேசாமல் அவர் எதிரில் வந்து உட்கார்ந்தான்.

“முகுந்தன், நேற்றைய சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. அதைப் பற்றி உங்களுடன் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீங்களும் நானும் இன்று ஒரே அறையில் தங்கியிருக்கிறோம்.”

முகுந்தன் டி.வி.யை நிறுத்திவிட்டுப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். பிறகு பரிவுடன் அவனைப் பார்த்தார். “வெங்கட், நீ எல்லாவற்றுக்கும் ‘ஓவர் ரியாக்ட்’ பண்ணுவதுதான் எனக்குப் புரியவில்லை. வேலையைச் செய்யும்போது கூடவே கொஞ்சம் வேடிக்கையையும் அனுபவிப்பதுதான் என்னுடைய வழக்கம். நம்முடைய குழுவிலும் எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள் – உன் ஒருவனைத் தவிர. மோகன பிரசாத்தைப் பார். வாட் அன் அவுட்கோயிங் சாப்! நீ ஏன் நார்மலாக இருக்கக் கூடாது?”

‘நார்மல்’! வெங்கட்டுக்குச் சிரிப்பு வந்தது. நேற்று நடந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் யாராவது இவர்களை நார்மல் என்று சொல்வார்களா? நேற்று மாலை மெஃபிஸ்டோஃபிலிஸ் இன்னில் சகஜமாக பேசிச் சிரித்துக்கொண்டு அனேகமாக ‘டாப்லஸ்’ ஆக வந்த அந்தப் பணிப்பெண்ணை முகுந்தன் படம் எடுக்க முயன்றதும், அவளைக் குனியச்சொல்லி அவர் படம் எடுக்கும் சமயத்தில் மோகன பிரசாத் அவள் தோள்மேல் கையைப் போட்டதும், சௌதரி அவளை முத்தமிட்டு அனுப்பியதும்… இவையெல்லாம் நார்மலான செய்கைகள் தான்!

சாந்த பார்பராவில் முகுந்தன் செய்த காரியம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அங்கு பால் ஹேன்லியின் வீட்டில் அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். ஹேன்லிக்கு அழகான இருபது வயது மகள் ஒருத்தி இருக்கிறாள். முகுந்தனுக்கு அவளைப் பார்க்கும்போதெல்லாம் தன் சொந்த மகள் ஞாபகம் வந்து விடுகிறதாம்! அவளையும் ‘மகளாகவே’ பாவிக்கத் தொடங்கிவிட்டார். அவளை அணைப்பதும், முத்தம் கொடுப்பதும், அவள் தோள்மேல் கையைப் போட்டுக் கொள்வதுமாக அவர் அன்பு இருந்தது. ஹேன்லி தம்பதிகளுக்கு அவருடைய தந்தையன்பைக் கண்டு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஹேன்லியின் வீட்டுக்கு வெங்கட் வரும் போதெல்லாம் முகுந்தனின் இந்த வெட்கம் கெட்ட செய்கையைக் கண்டு அருவெறுப்பு அடைந்திருக்கிறான். “பைத்தியக்கார ஹேன்லிக்களே! இந்தியாவில் வயது வந்த தன் பெண்ணை எந்தத் தகப்பனும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டு இருப்பதில்லை. நிறைய வீடுகளில் தகப்பனார்கள் அவர்களைத் தொடுவது கூடக் கிடையாது,” என்று சொல்லவேண்டும் என்று அவனக்கு ஆத்திரம் வரும். அதனால் நேரும் அவமானம் கருதி தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான்.

அப்படிப்பட்ட முகுந்தன்தான் அவனை நார்மலாக இருக்கும்படி அறிவுரை கூறுகிறார். அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“நார்மல், இண்டீட்! திஸ் மார்பிட் அப்ஸஷன் வித் ஸெக்ஸ், திஸ்…”

“ஷட் அப்!”

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஆனால் சமாளித்துக் கொண்டு சகஜமான தொனியில் தமிழில் பேச ஆரம்பித்தார்.

“தம்பி, நாங்க என்ன சட்டசபை சமாசாரமா பண்ணினோம்? அவ ‘அந்த மாதிரி’ வந்து நிக்கறா! நாங்களும் கொஞ்சம் தமாஷ் பண்ணினோம். நீயும் எங்களோட சேர்ந்து சிரிச்சுக்கிட்டு இருந்திருந்தியானா இயற்கையா இருந்திருக்கும்.”

“முகுந்தன்! நான் என்ன சொல்கிறேன் என்றால், கலாச்சார வித்தியாசங்களை நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. கலாச்சார யூனிவர்ஸல்கள், கலாச்சார ஆல்டர்னேடிவ்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள். உடை உடுப்பது கலாச்சார யூனிவர்ஸல் என்றால், முகத்தை மறைப்பதும், மார்பை மறைக்காததும் கலாச்சார ஆல்டர்னேடிவ்ஸ். அவள் ஆடை அங்கு இருந்த அமெரிக்கர்கள் யாருக்காவது விகல்பமாக இருந்ததா சொல்லுங்கள். அவர்கள் யாரும் அவளை உற்றுக்கூடப் பார்க்கவில்லை; நாம்தான் கேவலமாக நடந்து கொண்டோம். நம் சிந்தனைதான் நாம் காணும் பொருளுக்கு வண்ணம் அளிக்கிறது. கலாச்சார…”

யாரோ கதவைத் தட்டினார்கள். முகுந்தன் எழுந்திருந்தார்.

“ஒரு நிமிஷம்,” அவன் அவரைத் தடுத்தான். “இன்னும் இரண்டே நாட்கள் அமெரிக்காவில் இருக்கப் போகிறோம். இந்த இரண்டு நாட்களாவது மதிப்புடன் நடந்து கொள்வோம்; எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கட்டும். நடக்காது என்று நீங்கள் உறுதி அளிப்பீர்களா?”

அவன் ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்தான்.

அவர் அவனைப் புன்சிரிப்புடன் பார்த்தார். பிறகு பேசாமல் போய்க் கதவைத் திறந்தார்.

***

லோயோலா மேரிமௌண்ட் பல்கலைக் கழகத்தை தாண்டி லாஸ் ஏஞ்சிலிஸ் நெடுஞ்சாலையில் அந்த வண்டி விரைந்து சென்று கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். வண்டியோட்டிக்கொண்டிருந்த நார்மின் அருகில் அமர்ந்திருந்த முகுந்தன் மட்டும் எப்போதும்போல் தனது உற்சாகம் சற்றும் குறையாமல் இந்தியக் கலாச்சாரத்தை ஒரு பெரிய டோஸாக அவருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நார்ம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். கலாச்சாரம் என்றால் வாழ்க்கை வழி என்று முகுந்தன் சொன்னதை ஒப்புக் கொண்ட அவருக்கு, சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருப்பதுதான் இந்திய கலாச்சாரமா என்ற பெருத்த சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் ‘கலாச்சாரமற்ற’ தான் அசந்தர்ப்பமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது என்று வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனாலும் இப்போது அவர்கள் செய்யப் போகும் காரியம் நாகரீகமானவர்கள் செய்யக் கூடியதுதானா என்ற பொல்லாத சந்தேகம் அவரைத் துளைத்துக் கொண்டிருந்தது.

அவரைப் போலவே இன்னொரு ஆசாமியும் குழப்பத்தில் இருந்தான். ஏற்கெனவே பார்த்த ஹாலிவுட்டுக்குத் திரும்பவும் தாங்கள் ஏன் போகிறோம் என்று புரியாமல் வெங்கட் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஒன்றன்பின் ஒன்றாக ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித் தள்ளிய மோகன பிரசாத்துக்கு இந்த சனியன் பிடிந்த வண்டி இன்னும் எவ்வளவு நேரம் போய்க் கொண்டிருக்கும் என்று தோன்றியது. கலிபோர்னிய மதுவை சற்று அதிகமாகவே அன்று குடித்திருந்த அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த சௌதரி வரப்போகும் அந்தப் புதிய அனுபவத்தைப் பற்றிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தான். அவர்களுடைய அந்த இரவு நிகழ்ச்சிக்குக் காரணமே அவன்தான்.

பகல் உணவுக்குப் பின் அவன் முகுந்தனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தான்.

“முகுந்தன், பச்சையாகச் சொல்கிறேன், நான் அமெரிக்கா வந்ததற்குக் காரணம் என்ன தெரியுமா? அமெரிக்கப் பெண்களை முழு நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான்.”

“என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? நானும் ஒரு ஜாலி டிரிப்பாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஒரு ‘ப்யூரிடான்’ சனியனை தலையில் கட்டிக் கொண்டு வந்திருக்கிறோமே!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்கு ஊருக்குத் திரும்புகிறோம். இன்று மாலையாவது கொஞ்சம் ஜாலியாக இருப்போம்.”

முகுந்தன் அவனுக்கு ஒரு யோசனை சொன்னார். பிறகு இருவரும் நார்மிடம் வந்தார்கள்.

சௌதரி ஸ்ட்ரிப் டீஸ் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் நார்ம் திகைத்துப் போய்விட்டார்.

“ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அமெரிக்க வாழ்க்கையின் அந்தப் பகுதியையும் சௌதரி ஆராயவேண்டும் என்று ஆசைப்படுகிறான். நான் சம்மதம் கொடுத்துவிட்டேன்.” தன்னுடைய பேராசிரியர் பாணியில் மதிப்பு மிகுந்ததாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார் முகுந்தன்.

“உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால் எனக்கு ஒன்றும் இல்லை,” தயக்கத்துடன் சொன்னார் நார்ம். “நான் இதுவரை அந்த இடங்களுக்குப் போனதில்லை. இருங்கள், ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்.”

பிறகு வெங்கட்டை அழைத்துப் போவதா வேண்டாமா என்ற விவாதம் அவர்களுக்குள் எழுந்தது. அவனுக்குத் தெரியாமல் சென்றால்தான் அதிகப் பிரச்னை வரும் என்று தோன்றவே, அவனையும் அழைத்துச் செல்வது என்று முடிவு செய்தார்கள்.

***

“எனக்கு ஒரு கோக் மட்டும்.”

“சர்ர்…” என்ற ஓசையுடன் ஒரு கோக் டப்பா திறக்கப்பட்டது. பணிப்பெண் அதை வெங்கட்டின் முன்பு வைத்தாள்.

அவன் அதைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான். அவன் எதிரில் வட்டவடிவமாக அலங்காரம் செய்த தொட்டி போன்ற ஒரு மேடை. மேடைக்கு மட்டும் விளக்குகள்.

அந்தப் பெண் முழு உடையில் மேடைமேல் ஏறினாள். பிறகு நிதானமாகத் தன் உடைகளை ஒவ்வொன்றாகக் களைந்தாள். உடைகளை ஒன்று விடாமல் களைந்தபின், மேடையின் நடுவில் வந்து நின்றாள். பிறகு முழங்கும் இசைக்கு ஏற்ப ஆட ஆரம்பித்தாள்.

அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். பல வட்ட மேடைகள்; அவற்றில் நிர்வாணமாக நடனமாடும் பெண்கள்; சுற்றிலும் அவர்களைப் பிரதிபலிக்கும் பெரிய பெரிய கண்ணாடிகள்.

இசை நின்றது. அவன் மேடையைப் பார்த்தான். அந்தப்பெண் நிதானமாக உடை அணிந்து கொண்டிருந்தாள். பிற்கு மேடையைச் சுற்றியிருந்த டாலர் நோட்டுக்களைப் பொறுக்கிக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள்.

இப்போது வேறொரு பெண் மேடை ஏறினாள். மீண்டும் இசை முழங்க ஆரம்பித்தது. முகுந்தன் தன் பையிலிருந்து பர்ஸை வெளியில் எடுத்தார். டாலர் நோட்டு ஒன்றை எடுத்துத் தன் முன்னால் வைத்தார். ஆடிக் கொண்டே அந்தப்பெண் இப்போது முகுந்தனின் எதிரில் உட்கார்ந்தாள், பிறகு…

வெங்கட் தன் இடத்திலிருந்து எழுந்தான்.

“மன்னிக்க வேண்டும், நார்ம். நான் உங்களுக்காக வெளியில் காத்துக் கொண்டு இருப்பேன்.”.

அவர் அவனை நிமிர்ந்து பார்த்தார். “ஐ விஷ் ஐ குட் கம் வித் யு. ஆனால் நம் நண்பர்கள்…”

“வேண்டாம், வேண்டாம். அவசியமில்லை. நான் வெளியில் காத்துக்கொண்டிருப்பேன்.”

வெளியில் வந்து கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். எட்டு மணி பதினைந்து நிமிடம். அவர்கள் இன்னும் சில மணிநேரங்களுக்கு வெளியில் வர மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆரவாரம் அதிகம் இல்லாத பேவர்லி ஹில்ஸின் அந்தப் பகுதியில் எந்த விதச் சிந்தனையும் இல்லாமல் அவன் நிதானமாக நடந்து சென்றான்.

நடந்து, நடந்து, நடந்து கால் வலித்த பிறகு ஓர் இடத்தில் நின்றான். பிறகு திரும்ப வந்த வழியே நடக்கத் தொடங்கினான். ‘ஸ்டார் ஸ்டிரிப்’ என்ற அந்தப் பழைய இடம் வந்தவுடன் கடிகாரத்தைப் பார்த்தான். பத்து மணி முப்பது நிமிடங்கள்.

கால் வலித்தது. உடம்பு மிகவும் அயர்வாக இருந்தது. ஒரு காஃபி சாப்பிட வேண்டும் போல இருந்தது. எதிரில் இருந்த டூ பார்ஸ் ரெஸ்ட்ராண்டுக்குள் நுழைந்தான்.

காஃபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். அவனுக்கு இரண்டாவது மேஜையில் தனியாக உட்கார்ந்து கொண்டு சித்தனையில் ஆழ்ந்து இருந்த மனிதர் சாட்சாத் நார்ம்தான்.

“நார்ம்!” என்று அழைக்கப் போனவன், “ஹாய், நார்ம்!” என்ற மற்றொரு குரல் எழுவதைக் கேட்டு நிமிர்த்து பார்த்தான். வெள்ளை உடையில் வயதான ஒரு பெண் நார்மை நோக்கிக் கையை அசைத்த வண்ணம் வந்து கொண்டிருந்தாள். நார்முக்கு அருகில் அவள் வந்து உட்கார்ந்ததும் அந்த மேஜையின் மங்கலான வெளிச்சத்தில் அவளைப் பார்த்தான். மார்தா அல்லவா அவள்? மார்தாவேதான்! வேறு யாருக்கு அவ்வளவு பெரிய குரல்?

“நார்ம், இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? இந்தச் சமயத்தில் உங்களது இந்திய நண்பர்களுடன் இருக்கவேண்டியவரல்லவா நீங்கள்?”

“அவர்களுடன்தான் வந்திருக்கிறேன்.” நார்மின் குரல் அவனுக்கு சோகமாக ஒலித்தது.

“எங்கே அவர்கள்?” மார்தா சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“எதிரில் ஸ்டார் ஸ்டிரிப்பில் இருக்கிறார்கள்.”

“ஸ்டார் ஸ்ட்ரிப்… மை காட்! அங்கே என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்?” வழக்கத்தைவிட அதிகமாகவே ஒலித்தது அவள் குரல். பக்கத்து மேஜையில் இருந்தவர்கள் ஒரு விநாடி அவர்களை உற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார்கள்.

“அங்கே செல்பவர்கள் எல்லோரும் என்ன செய்வார்களோ அதைத்தான். உள்ளே சென்று மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. வெளியில் வர அவர்களுக்கு மனது வரவில்லை.”

திகைப்பில் வாயடைத்துப் போய் அவள் அவரைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு “இட் பீட்ஸ் மை அன்டர்ஸ்டான்டிங்,” என்று மெதுவான குரலில் சொல்லிவிட்டு கைகளை மேஜைமேல் தூக்கிப் போட்டுக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

“எனக்கு மட்டும் புரிகிறதாக்கும்!” அவர் புன்சிரிப்புடன் அவளை நோக்கினார். “மார்தா, ஐயாயிரம் வருட கலாச்சாரத்தின் தூதர்கள் அம்மணமாக அமெரிக்கப் பெண்களைப் பார்த்து ரசித்துக் கொண்ருப்பதில் கலாச்சார சம்பந்தம் என்ன இருக்கக் கூடும் என்பதுதானே உங்கள் சந்தேகம்? கலாச்சாரம் அற்றவர்களாகிய நமக்கு அதெல்லாம் புரியாது. புரியாத விஷயங்களில் நுழைந்தால் குழப்பம் தான் மிஞ்சும். முகுந்தனின் அகராதியில் சொல்ல வேண்டுமானால், இந்தியப் பழமொழி ஒன்று என்ன சொல்கின்றது என்றால்…”

“வேண்டாம், வேண்டாம்,” அவசரமாக அவரை இடைமறித்தாள் மார்தா. “எனக்கும் தெரியும் அது. முகுந்தன் எங்கள் வீட்டில் மட்டும் தங்கவில்லையா என்ன?”.

‘கலாச்சாரமற்ற’ அந்த இருவரும் ஒருவரை ஒருவர் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பிறகு கலகல வென்று நகைத்தார்கள்.

– கணையாழி, ஆகஸ்ட் 1990

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *