இது சகஜம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 982 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் காலத்தில் பிரயாணம் செய்வதென்றால் என்ன என்பதை ஒவ்வொரு நிமிஷமும் உணர்ந்து கொண்டுதான் அமர்ந்திருந்தான் சொக்கலிங்கம். முதலில் டிக்கட் எடுக்கும் இடத்தில் நெருக்கடி…ரயில் ஏறும் பொழுது ஏற்படும் பலத்த நெருக்கடி…ஏறினால் உட்கார, ஏன் நிற்கக்கூட இடமில்லாமல் திணறும் நெருக்கடி எவ்வளவோ நேரம் இரண்டு காலிலும் ஒரு காலிலும் நின்று தவம் செய்ததன் பயனாக இடம் கிடைத்தால், யோகாசனப் பயிற்சிகளை நினைவுறுத்துவது போல் அமர வேண்டிய் நெருக்கடி; பின் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கும்பல் ஏறியும் இறங்கியும் உண்டாக்கி அவஸ்தைகளை அதிகரிக்கச் செய்யும் நெருக்கடி. அப்பப்பா, ஒரு ராஜ்யத்தைப் பிடித்து நிர்வாகம் செய்யக் கிளப்பும் ராஜீய்வாதியைச் சூழும் நெருக்கடிகளுக்குச் சளைத்ததாயில்லை மூன்றாம் வகுப்பு பிரயாணியின் திண்டாட்டம்.

சாதாரண காலத்திலேயே அந்த ஜங்ஷனில் ரயில் வந்து நின்றால் ஒரே அமளி குமளி தான். வண்டிக்குள் இருப்பவர்கள், பாவம், மோதகத்திற்குள் திணிக்கப்படும் சர்க்கரை மசியல் போல் திணற வேண்டியிருக்கும். அதிக வண்டிகள் ஓடாத இக்காலத்தில் சொல்லவா வேண்டும்! ஜன்னல் வழியாக ஆட்களையும் உள்ளே திணிப்பார்கள், வெளியே நிற்பவர்கள். வண்டியிலிருப்பவர்கள் கத்திக் கொண்டே இடம் கொடுக்க வேண்டியது தான்!

இதைக் கவனித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கத்தை யாரோ தொட்டு நிற்பது போல் தோன்றவே அவன் கவனம் கலைந்து திரும்பினான், திகைத்துப் போனான்! அவனோடு அப்படி நெருங்கி நின்றது ஓர் யுவதி.

அவள் உடலின் நடுக்கத்தை – முகத்தில் நெளியும் கலவரத்தை – கண்களில் சுட்ரிட்ட மிரட்சியைத் தான் அவன் முதலில் கண்டான். அவள் வேடருக்குப் பய்ந்தோடிவந்து ஒதுங்கி நிற்கும் மான் போல் நிற்கிறாள் என்று அவன் எண்ணினான். சொக்கலிங்கம் வேட்டையையோ, அடிபட்டு ஓடி வரும் மானையோ பார்த்ததில்லை தான். என்றாலும், அவள் நின்ற நிலைக்கு அவ்வித கவிதா உவமையைத்தான் அவன் உள்ளம் எதிரொலித்தது அவ்வேளையிலே.

அதற்குமேல் அவளை ஆராய்த் தூண்டியது மனம். அழகி என்ற பதத்தின் அர்த்தம் அவள் என்று சொல்ல முடியா தென்றலும், அழகின் ரேகைகள் அவள் முகத்தில், கண்களில், உடலில் அங்கங்கு மின்னின அவளுக்கு-அதிகமாகப் போனால் பதினேழு பதினெட்டு வயதிருக்கும். படிக்கும் மாணவி எனத் தோன்றியது. எனினும், நவயுவதிகளின் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாயில்லை அவள் பண்பு. மொத்தத்தில் அவள் கனகாம்பரமோ! காட்டுப் பிச்சியோ! அல்ல, பாட்டிகளின் நாகரிகமும் நவயுவதிகளின் நாகரிகமும் சங்கமமான ஒரு சிருஷ்டி அவள்.

அவள் சொக்கலிங்கத்தின் அருகில் நினமுள. அப்படி நிற்கும் பொழுது அவள் தேகம் அவன் தேகத்தின் மீது பட்டிருப்பதைக் கூட அவள் உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. அந்த வழியாக ஜன அலைகள் மோதியும் முட்டியும் புரளும் போது, அவள் அவனை ஒட்டி ஒட்டி நெருங்கினாள். அவளுக்கிருந்த கலவர உணர்ச்சிக் கொதிப்பிலே நாணம் பஸ்மீகரமாகி விட்ட்தோ என்னவோ! சொக்கலிங்கம் விலகலாம் எனத் தவித்தாலும் விலக இடம் இல்லை. அவள் கீழே இறங்க விரும்புகிறாளா, அல்லது…?

அவன் அறிய விரும்பிய்து வேறொருவர் உதிர்த்த கேள்வியில் தொனித்தது. அவள் ‘இறங்கலே, உட்காரத்தான் போறேன்’ என்றாள்.

‘பின்னே உட்காருங்களேன்’ என்றார் விசாரித்தவர். அவள் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டாள். அவளது மிரண்ட் பார்வையோ எதிரே உள்ள பெஞ்சையும் தாண்டி, பின்னால் உருவிச் செல்ல முயன்றுகொண்டிருந்தது. அவள் துக்கத்தை விழுங்க முயல்வதுபோல் தவித்தாள். அவளது அமைதியின் மையைக் கண்ட ஒருவர் ‘என்னம்மா?’ என்று பரிவுடன் வினவினார்.

‘அந்தப் பக்கம் நான் இருந்த இடத்திலே என் பெட்டி, கிடக்கு அதை எடுக்கணும் அங்கே அஞ்சாறு பட்டாளத்துக்காரங்க எனக்கு பயமாருக்கு!’ என்றாள் அவள். அவள் குரலிலே தொனித்த பாவம்! அப்படிச் சொல்லி விட்டு அவள் இந்தப் புறம் திரும்பும் போது, சொக்கலிங்கம் அப்படித் திரும்பினான். அவன் பார்வையில் பட்ட அவள் நோக்கு நேர் நில்லாமல் குவிந்து விட்டது.

‘நீங்க எந்த ஊருக்கு போகணும்?’ என்று கேள்வி எழுந்தது, ‘எதிர் பெஞ்சிலிருந்த சொக்கலிங்கத்தின் நண்பனிடமிருந்து.

அவள் ‘சங்கரன் கோவிலுக்கு’ என்று சொன்னாள்.

‘அப்படின்னா விருதுநகர் ஜங்ஷனில் நின்றதுமே எடுத்துக் கொள்ளலாம்…மிஸ்ட்ர் சொக்கலிங்கம்! சாமான்கள் எடுத்துக் கொடுத்து விடும்’ என்றான் நண்பன்.

‘என்ன சாமான்கள்?’ என்று இதுவரை மௌனமாயிருந்த சொக்கலிங்கம் கேட்டான். அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே ‘பெட்டியும் பையும்’ என்றாள். சுருண்டு நெளி பாய்ந்த அவள் கூந்தலையும் மின்னும் விழிகளையும், சிறிது தடித்த உதடு களையும், நீல நரம்புகள் ஓடிய அவள் கழுத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சொக்கலிங்கம் ‘ஊம்’ கொட்டி வைத்தான். அதனால் பயம் தெளிந்தவள்போல் விளங்கினாள் அவள். சொக்கலிங்கம் ஜன்னலுக்கு வெளியே கண்களை ஓட்டினான்.

அவன் திரும்பிய போது அவள் அருகிலிருந்த ஒருவர் கையில் இருந்த பத்திரிகையை இழுத்து எடுத்து, வாசிக்கப் புறப்பட்டாள். அவள் துணிவு அவனுக்கு ஆச்சர்யமளிக்க வில்லை. நவயுகத்தில் அது சகஜந்தானே!

‘நீங்கள் காலேஜில் வாசிக்கிறீர்களோ?’ என்று கேட்டான் நண்பன்.

‘இல்லை. டிரெயினிங் படிக்கிறேன். சங்கரன் கோவில் தான் சொந்த ஊர். அங்கு போகிறேன்’ அவள் கேட்ட கேள்விக்கு அதிகமாகவே எழுதும் பண்பு பெற்றுவிட்ட பள்ளி மாணவி போல விளக்கினாள்.

மீண்டும் அவளுக்குப் பயம் எழுந்தது போலும்; எதிரே கலவரமாகக் கவனித்தாள். சொக்கலிங்கம் அவள் செயல்களைக் கவனிப்பதை அவள் உணர்ந்ததாகத் தோன்றியதும் திரும்பி ‘எனக்குப் பயமாருக்கு, அந்தப் பக்கத்திலே…அப்பப்பா…என் சாமான்கள்’ என்றாள் நடுங்கும் குரலில்.

சிறிது நேரத்துக்கு முந்திய அவளது துணிவைக் கண்டு வியக்காத சொக்கலிங்கம், அவள் பெண் இயல்பை நினைத்து இரங்கினான். அவளது தவிப்பைக் குறைக்க சாமான்களை எடுத்துக் கொடுக்க வேண்டும். அவளுக்கு அடுத்து இருந்தவரை அப்படி அந்தப் பக்கம் போய் ‘சாமான்களை எடுத்துக் கொடுங்களேன்’ என்றான்.

அவர் எழுந்து பெஞ்சு ஓரத்தில் போய் நின்று அந்தப் பக்கம் பார்த்தார். அங்கு கூடியிருந்த கும்பலைக் கவனித்தார். நமக்கேன் வம்பு என எண்ணினாரோ என்னவோ, சும்மா நின்று விட்டார்!

அந்த யுவதி நெடுமூச்செறிந்து சொக்கலிங்கத்தைப் பார்த்தாள்; ‘எடுக்கலாம்…கொஞ்சம் பொறுத்திருங்கள்’ என்றான் அவன்.

ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அந்த யுவதி எழுந்து நின்று திரும்பிய போது அவளுக்குத் தெரிந்த யாரோ பின்புற ஸீட்டில் இருப்பது தெரிந்தது. அந்த ஆளுடன் பேசும் சாக்கிலே, அவள் பெஞ்சில் முட்டுமண்டியிட்டு நின்றாள். அப்பொழுது அவள் ஆடை அருகிலிருந்த சொக்கலிங்கம் மேல் பட்டது. அவள் மெலிந்த விரல்கள் அவனது சட்டையை ஸ்பர்சிக்கத் துடித்து வந்தன. அவன் சிறிது நகர்ந்தான். அவளும் நெருங்கி வந்தாள்…அந்த யுவதியின் இத்துணிவை எண்ணி வியப்புறாமல் இருக்க முடியவில்லை அவனால்!

வண்டி நகர்ந்தது. அவளும் அவன் பக்கத்தில் மீண்டும் அமர்ந்தாள், அவளது கண்கள் புரளும் கயல் மீன்கள் போல அவன் புறம் தாவிப் பின் ஓடிக்கொண்டிருந்தன. சில சமய்ம் திரும்பி நேராக நோக்குவாள்.

‘உங்கள் சொந்த ஊர் சங்கரன் கோவில் தானா?’ என்று விசாரித்தான் நண்பன்.

ஆமாம் என்று தலையாட்டி விட்டு அவனை நோக்கினாள் அவள்.

அவளது பெட்டியையும், பையையும் எடுத்துக் கொடுக்கலாம் என்ற நினைப்புடன் சொக்கலிங்கம் கேட்டான். ‘உங்கள் பெட்டி அடுத்த வரிசையில் இருக்கிறதா? அதற்கும் அந்தப் பக்கமா?’ என்று.

‘அடுத்த பெஞ்சிலேதான் பெஞ்சுக்கு அடியிலே’ என்பது பதில்.

அவன் எழுந்து கதவருகே சென்றான். அடுத்த வரிசை பெஞ்சுகளிலும், இடைவெளியிலுமாக ஒரே கும்பலாய் உட்கார்ந்திருந்தனர் பலர், சிலர் பாடிக் கொண்டும், ‘விஸில்’ ஊதிக் கொண்டும் கூத்தடித்தனர். ஒருவன் ஒரு பிச்சைக்காரப் பெண்ணை இழுத்துக் கேலிகள் பேசி விளையாடிக் கொண்டிருந்தான். அவர்களை எப்படிக் கேட்பது என்று சிறிது தயங்கினான் அவன். பின் துணிந்து விட்டான்!

‘இந்த அம்மாவின் பெட்டி அந்த பெஞ்சின் கீழே இருக்கிறது, அதை எடுத்துக் கொடுங்கள்’ என்று கேட்டான். அவ் யுவதியும் எழுந்து நின்றாள். அவள் முகத்திற்காகவோ, அல்லது அவனது வேண்டுதலுக்காகவோதான், அவர்கள் அன்பாக ஒரு பெட்டியை எடுத்து நீட்ட, அவன் வாங்கி இதுதானா? என்ற கேள்வியுடன் அவளிட்டம் கொடுத்தான். அவள் ‘ஆமா’ என்று சொல்லி அதைப் பெற்றுக் கொண்டாள். பின் ‘ஒரு மூட்டை இருக்கிறது அதையும் எடுத்து விடுங்கள்’ என்றாள்.

ஆரம்ப முதலிலே சொக்கலிங்கத்தை சந்தேகக் கண்களோடு கவனித்த பிரயாணிகள் இப்பொழுது முறைத்து நோக்கினர். அவன் அதை சட்டை பண்ணாமல் ‘பெஞ்சின் கீழேயா?’ என்றான்.

‘ஊ…ம்’ என்று தலையசைத்தாள் அவள். அந்தத் தொனி அலையையும், அவளது கழுத் தசைைைதயும், கண்களின் பாய்ச்சலையும் ரசிக்காமலிருக்க முடியுமா அவனால்!

‘இன்னு மொரு மூட்டை இருக்கிறதாம் அதையும் கொஞ்சம்….’ என்று வேண்டினான் அவன். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அவளையும் அவனையும் எடை போட்டனர்! ஒருவன் என்னவோ முணங்கினான். அதற்குள் ‘எடுத்துக்கொடு’ என்று, மூட்டையை இழுத்தான். அது சொக்கலிங்கம் கைக்கு வந்து, பின் அவளிடம் சென்றது.

தான் உதவி செய்ததாக எண்ணி திரும்பிய அவன் பார்வை ஆவல் மிதக்கும் கண்களுடன் நின்ற அவள் முகத்தில் பதிந்தது. அங்கு நன்றி சிறு மகிழ்வாக மலர்ந்திருந்தாலும், கவலை தலையாட்டாம லில்லை. ‘இன்னும் சில…’ என்று மென்று விழுங்கினாள் அம் மங்கை!

சொக்கலிங்கத்திற்கு தர்ம சங்கடமாகி விட்டது. என்ன செய்வது? புரிய் வந்த திருப்பணியைப் பூரணமாகச் செய்யாமல் போகலாமா? ‘சரி, வேறு என்ன இருக்கிறது?’ என்று கேட்டான்.

‘அந்தப் பக்கத்தில் இருப்பதை எல்லாம் எடுத்துத் தந்து விடுங்கள்’ என்றாள் அவள். அப்படி எடுத்ததில் ஒரு பெரிய மூட்டை, இரண்டு சிறு துணி மூட்டைகள், ஒரு சட்டி, படுக்கை என்று சேர்ந்து இந்த வட்டாரம் முழுவதையும் அடைத்து விட்டன. இந்தப் பக்கம் இருந்தவர்கள் அவனிடம் சண்டைக்கு வந்தார்கள்; இப்படி இடத்தை அடைத்தால்? ‘அடுத்த ஸ்டேஷனில் நாங்கள் இறங்க வேண்டுமே…வழியை விட்டுத் தள்ளிவை ஐயா’ என்று எரிந்து விழுந்தனர். பரோபகாரத்திற்காக அவன் அச்சுடு சொற்களைத் தாங்கிக்கொள்ள வேண்டிய தாயிற்று!

ஆனால், மற்றவர்கள் அவனது பரோபகார உணர்ச்சிப் பெருக்கைக் கண்டார்கள்! ஏனெனில், அவன் உதவிக்குப் பாத்திரமானது பெண்ணினம் ஆயிற்றே! அவன் இதய்த்தில் நல்லெண்ணம் இருப்பினும், அவர்கள் பார்வையிலே சந்தேகம் தானே மின்னியது.

‘காலம் சார் காலம்! பச்சையும் நீலமுமாய் அழகு செய்து வந்து விட்டால் பயல்கள் சொக்கிப் போகிறார்கள்’ என்று விழி ள் பேசின! ‘பாரேன் அவளுக்கு அவன் விழுந்து விழுந்து உதவி செய்வதை!…அவள் தான் எவ்வளவு சிரித்து, பார்த்துப் பேசி மயக்குகிறாள்’ என்று ‘பெரிய மனுஷி’கள் கொட்டாவி விட்டனர்’ வலையென வீசிப் பரந்து வந்த பார்வையில் சிக்கியது இலையே.

அவன் உட்கார வில்லை. அவள் தன் அருகில் உட்காரலாமே என விழியால் பணித்தாள். விலகி இடம் செய்தாள். ‘உட்காருங்களேன்’ என்றார் அடுத்திருந்தவர். ‘விருதுநகரில் இறங்க வேண்டியது தானே’ என்று சொல்லி நின்றான் அவன்.

அன்பும் நன்றியும் கலந்த பார்வையை அவள் அடிக்கடி அவன் மேல் விட்டெறிந்தாள். அதை வெட்டி விடும், ‘சில சமயம் அவன் நோக்கும். என்றாலும், அவர்கள் பேச வில்லை. ஆயினும், சுற்றியிருந்தோர் தம் விஷநோக்கை மாற்ற வில்லை. அது சகஐந்தானே, காரணம் அவன் ஆண்-அவள் பெண்!

விருதுநகர் ஜங்ஷன் வந்தது. வண்டி பாற்றுவதற்காக சொக்கலிங்கமும் நண்பனும் அங்கு இறங்க வேண்டிய்து தான். அப்படி இறங்கும் போது அவன் பார்வை அவள் பக்கம் பாய்ந்தது. அவளிடம் ‘போய் வருகிறேன்’ என்று சொல்ல வேண்டும் என அவன் மனம் துடித்தது. அவனையே கவனித்த அவளும் ஏதோ சொல்ல விரும்பினாள் என்பதைத் துடித்த உதடுகள் காட்டின. ஆனால், பேச்சு பிறக்கவில்லை.

சொக்கலிங்கமும் நண்பனும் இறங்கி நடந்தனர். அவன் திரும்பிப் பார்த்த போது அவளும் கவனித்துக்கொண்டு தானிருந்தாள். ‘அவள் பெயர் என்ன வென்று கூடக் கேட்கவில்லையே! விலாசம் கூடத் தெரியாதே’ என மனப்பூர்வமாக வருந்தினான். அதே நேரத்தில் அவளும் அப்படி நினைத்தால் அதுவும் சகஜந்தானே!

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *