இதுவும் ஒரு கதை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 30, 2013
பார்வையிட்டோர்: 13,776 
 
 

இப்போ…..நேரம் ஆறு மணி.எனக்குப் பதட்டம் கூடிக்கிட்டே இருக்கு. வியர்வை வேற,மின் விசிறியை அழுத்தி விட்டேன். இப்ப கொஞ்சம் பரவாயில்ல. ஒரு பேப்பரையும்,பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன். “எப்படி ஆரம்பிக்கிறது…….?” மனம் சிந்திச்சிக்கிட்டே இருக்கு. ஆனா வருதில்ல. எப்படியோ இன்டக்கி ஒரு முடிவு எடுத்தாயிற்று.எழுதியே ஆகனும். இன்டக்கி ஸ்கூல்ல நடந்தத கொஞ்சம் நினைச்சுப்பார்க்கிறேன். சே……அத்தனை பிள்ளைகளுக்குள்ளயும் எவ்வளவு அவமானம். அவ….வேற இருந்தா, அந்த மனிசன் எப்படி அவமானப் படுத்திட்டாரு. மனம் அதையே சுற்றிச்சுற்றி வந்தது. ‘சிறுகதை எழுதுவது எப்படி’.அந்தப் பாடத்தை படிக்கும் போதே நெனச்சன். இப்படி எதாவது வரும் என்று.சிறுகதை என்றால் என்ன,எப்படி எழுதனும். எல்லாம் சொல்லித் தந்தாயிற்று. கடைசியில் ‘நாளைக்கு வரும் போது எல்லாரும் எழுதிட்டு வாங்க’ என்று முஸம்மில் சேரின் கண்டிப்பான கட்டளை.

இன்றைக்கு நான் மட்டுமா, என்னோட சேர்த்து நஜாத்,ஜம்சித்,றிபான் நாலு பேர் எழுதல. பக்கத்துல எல்லாம் வகுப்பல பாடம் நடந்திட்டிருக்கு. ஐந்தாம் பாடவேளை.பெல் அடிச்சவுடனேயே முஸம்மில் சேர் வந்துட்டாரு.

“கத எழுதினவங்க கொப்பிய கொண்டு வந்து அடுக்குங்க”

அப்பதான் எனக்கு நினைவு வந்திச்சு, ‘அட…….இன்டக்கி கத எழுதிட்டு வர சொன்னாருல்ல….சேர்”

முஸம்மில் சேர் கண்டிப்பான ஆசிரியர். அடிக்கமாட்டார் என்றாலும் நல்லா அவமானப் படுத்துவார். அதுவே போதும்,பொம்பள பிள்ளகள் இருக்கிற வகுப்புல, என்கிற எண்ணம் வச்சிருக்கார் என்று நெனக்கிறன்.

ஆன்றைக்கு முழுக்க திட்டோ திட்டென்று திட்டி தீர்த்துடுவார். கோப்பியெல்லாம் எல்லாரும் அடுக்கிட்டாங்க. பொம்பள பிள்ளைகள் வேற,ஆம்பள பிள்ளைகள் வேறயாத்தான் அடுக்கனும். அது தான் அவரோட கட்டளை. முதல் பொம்பள பிள்ளைகள்ற கொப்பிய எண்ணிப் பாக்குறார்,எனக்கு வியர்த்துக் கொட்டுது. “ஐய்யோ…வெளிய எங்கயாவது போவமா?” “யாராவது கூப்பிட்டு வர மாட்டங்களா….?”

பொம்பள பிள்ளகள்ற கொப்பியெல்லாம் இருக்கு போல,இப்ப எங்கட கொப்பி.

“நாலு பேர் கொப்பி வெக்கல யாரந்த நாலு பேரும் எழும்புங்க….”

யாரும் எழும்பல.சேர் இன்னொரு தரம் அழுத்திச் சொல்லிட்டார்.இதுக்கு மேல இருக்க முடியாது நான் எழும்புறன்.மற்ற மூணு பேரும் என்னோட சேர்ந்து கொண்டார்கள். சேர் கேட்கிறார்,

“என்ன எழுதலயா………?”

நான் ஒன்டும் பேசல.இனி சொல்லத் தேவையில்ல,சேர் ஏசவேதான் வந்தது போல ஏசிக்கிட்டே இருக்கார்.

என்னால முடியல. முற்ற மூணுபேருடைய முகத்த பார்க்குறன். நஜாத் சிரிக்கிறான்,எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. றிபானும்; சிரிக்கிறான். ஜம்சித் மட்டும் கவலப்படுற மாதிரி உணர்ந்தேன். அப்படியே பொம்பளப்பக்கம் திரும்பினேன். அவள் என்னையே பார்த்துட்டிருந்தாள். சிரிக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டேன். சேர் ஏசிக்கிட்டே இருக்கிறார். புpள்ளைகள் எல்லாம் என்னையே பார்த்து சிரிக்கிற மாதிரி ஒரு எண்ணம்.

சேர் போய் விட்டார். ஆனா,எனக்குள்ள இருக்கிற அவமானம் போகல. என்னால யாருட்டயும் பேச முடியல. அப்படியே இருக்கிறன். அவள்தான் வந்தாள் சுமையாவுடன்.

“என்ன அஸ்லம் சரியான ஏச்சுப்போல……?” என்னை சுமையா சீண்டினாள் கூடவே அவளும் சேர்ந்து கொண்டாள்.

“பாவம்……………தலை குனிய வச்சுட்டாங்க…” என்னால எதுவும் பேச முடியல.

ஆத நினைக்கும் போது ரொம்ப சங்கடமா இருக்கு. சுய நினைவுக்கு வந்தவனாக பேனையை கையில் எடுக்கிறேன். றிபான் வந்தான். அவனாகவே கூப்பிட்டான் வெளியே போக. அவனோட நான் போய்ட்டா கத எழுதுறது யாரு? போக விரும்ப இல்ல. சேர் போனவுடன் அவன் சொன்னான்,

“யாருமே எழுதாதிங்கடா நாளைக்கு என்ன நடக்குதென்டு பார்ப்பம்……”

ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது. வர ஏலாது என்டு சொன்னால் ஏன் என்று கேட்பான். மெல்ல மூடி வெச்சிட்டு அவன் கூட போறன். நான் எதுவுமே பேசல, அவனே கேட்டான்.

“கத எழுதிட்டியாடா…?” நான் அதை எதிர்பார்க்கவில்லை.

“இ….ல்….ல…. ஏன்?” நான் தடுமாறினேன். அவனே சொன்னான்.

“பேப்பர்ல அருமையான சிறுகதைடா மச்சான்…….. அப்படியே கொப்பி அடிச்சிட்டேன்….”

நான் இன்னும் மௌனமாக. எப்படியோ அவன அனுப்பிட்டு வீட்டுக்கு வந்தன். நேரம் இப்ப ஒன்பது மணி……இனித்தான் நான் எழுதனும்.

கத படிக்கிற ஆர்வம் நிறையவே இருக்கு ஆனா அத எழுதனும்னு எப்பவுமே நான் நினைச்சதில்ல. வாசித்த சிறுகதைகளெல்லாம் நினைவுல வந்துட்டே இருந்திச்சு. ‘யாழ்ப்பாண யுத்தம் பற்றி எழுதலாமா?’ ‘..சே….அந்த கதைகளிலே இருக்கிற உயிரோட்டம் சரியா வந்து சேராது’.எனக்கு நானே பதிலளித்துக் கொண்டேன். அடுத்தடுத்து ‘மலையகச் சிறுகதைகள்’, ‘கிராமத்துச் சிறுகதைகள்’ என்று எல்லாத்தயுமே யோசிச்சு,எனக்கு நானே பதிலளித்து மேசைக்கு வந்தன்.

“முதல் தடவையிலேயே சிறுகத எழுத வர்ரது சாத்தியமா…?” பரவாயில்ல எழுதுவோம்;.

எழுதுறன்…… “ஐய்யோ கதய எப்படி கொண்டு போறது?” ஒரு வழியா எழுதியாச்சு, இப்போ முடிவு, சிறுகதைக்கே ஏற்ற முடிவு. எழுதியே ஆகணும் நேரத்தப் பார்க்குறன், ஒரு மணி…!

“அட…… இவ்வளவு நேரமாவா…எழுதிட்டிருந்தோம்…….”

மனதுக்குள்ளே ஏதோ ஒரு பயம், பழைய பேய்க்கதையெல்லாம் ஞாபகத்துக்கு வருது. இப்பதான் நான் யோசிக்கிறன், ‘இந்த கிழவிகள் எல்லாம் எப்படி கத சொல்றாங்க? உண்மையா நடந்தத சொல்றாங்களா… இல்ல கட்டுக்கதயா…?’ எப்படியோ மத்தவங்க நம்புற மாதிரி, ஏத்துக்கொள்ளுற மாதிரி, சலிப்பே தெரியாம சொல்றாங்களே….. உண்மையிலேயே அது ஒரு கலைதான். எல்லாருக்கும் வராது, நான் எழுதுறன்….. ஒரு வேளை அந்த நுட்பம் எனக்கும் வந்துட்டா…?

ஒரு மகிழ்ச்சிப்பிரவாகம்.

ஒரு மாதிரியாக எனது பணியை நான் முடித்தாயிற்று. எழுதி முடிச்சிட்டேன், பெரிய பாரம் இறங்கினாப்போல. தலைப்பு ஒன்று வச்சிடனும்.யோசிக்கிறேன் “இதுவும் ஒரு கதை” இதுவே நல்லாயிருக்கு…. நிம்மதியோட கட்டில்ல விழுறன், கனவில் வரப்போகும் அவள்ட நெனப்போட……………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *