ஆன்மீகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 7,584 
 

“அண்ணே! ‘ஆன்மீகம்’னா என்ன?”

“தம்பி! ‘ஆன்மீகம்’னா வைப்ரேஷன், அதிர்வுகள்!”

“புரியவில்லை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“நம்மை ஏதாவது ஒரு விஷயம் ஈர்க்கும்போது நம் உடலளவிலும், மனதளவிலும் சில அதிர்வுகள் ஏற்படும்!”

“அதுமாதிரி நான் உணர்ந்ததில்லையே?”

“கண்டிப்பாக எப்போதாவது உணர்ந்திருப்பாய். உனக்கு தெரிந்திருக்காது. அதீத மகிழ்ச்சியும், அதீத சோகமும் கூட இதுபோன்ற அதிர்வுகளை உன்னில் ஏற்படுத்தும்!”

“சரி ஆன்மீக அதிர்வுகளை எப்படி உணர்வது?”

“உனக்குள் தான் கடவுள் இருக்கிறார். உனக்கே திருப்தியான அளவில் நீ ஏதாவது பணியை செய்துமுடித்தால் அந்த அதிர்வுகள் ஏற்படலாம்!”

“என் திறமையையும், புத்திக்கூர்மையையும் கொண்டு எனக்கான பணிகளை செய்கிறேன். இதில் கடவுள் எங்கு வருகிறார்?”

“அந்த பணி செய்ய உன்னை தூண்டும் நெம்புகோல் தான் கடவுள். சில பேருக்கு தியானம் செய்யும்போது அதிர்வுகள் வரலாம், சில பேருக்கு கோயிலில் வழிபடும்போது அதிர்வுகள் ஏற்படலாம். அதிர்வு ஏற்பட்டாலோ அல்லது ஏற்படாவிட்டாலோ அதற்கெல்லாம் என்ன காரணம் என்றெல்லாம் ஆராய்ந்து சொல்லமுடியாது!”

“எனக்கு தியானம் செய்யத் தெரியாது. நான் கோயிலுக்கு வந்தால் எனக்குள் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?”

“யார் கண்டது? ஒருவேளை ஏற்படலாம். இப்போது அம்மன் கோயிலுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். என்னுடன் வருகிறாயா? உன்னால் உனக்குள் இருக்கும் ஆன்மீகத்தை அங்கே உணரமுடிகிறதா என்று சோதனை செய்து பார்ப்போம்”

“சரி”

கோயிலில் நல்ல கூட்டம். ஆண், பெண்ணுக்கு தனித்தனி வரிசை. நிரூபிக்கப்படாத ஒரு சக்தியை கண்டு வணங்க இவ்வளவு பேர் வருகிறார்களா என்று அவனுக்கு ஆச்சரியம். தீபராதனை காட்டும்போது அம்மனின் கம்பீரமான எழிலில் அண்ணன் நெக்குறுகிப் போனார். அவரை அறியாமலேயே அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. அம்மனை வழிபட்டு குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டு கோயில் பிரகாரத்தை சுற்றி வருகிறார்கள்.

“கோயிலுக்கு வருவதே மன அமைதிக்காகவும், எதிர்காலம் குறித்த நம் கவலையை நம்மை வழிநடத்தும் சக்தியிடம் ஒப்படைப்பதற்காகவும் தான். கோயிலுக்கு வந்தவன் அயர்ச்சியோடு திரும்பக் கூடாது. கோயில் பிரகாரத்தில் சற்று ஓய்வெடுத்து உடலுக்கும், மனதுக்கும் எந்த பாரமுமில்லாமல் நிம்மதியாக திரும்ப வேண்டும் என்பது ஐதீகம். ஓரத்தில் அமரலமா?”

கொடிமரம் தாண்டி விசாலமாக இருந்த மண்டபத்தில் இருவரும் அமர்ந்தார்கள்.

“சிலிர்ப்போ, அதிர்வோ உனக்குள் வந்ததா?”

“ஆம்!”

ஆவலோடு, “இதுதான் ஆன்மீகம். முகத்தைப் பார்த்து உனக்கு சிலிர்ப்பு வந்ததா, இல்லை அம்மனின் அலங்காரத்தைப் பார்த்து உனக்கு அதிர்வு வந்ததா?”

“பாதங்களை பார்த்து வந்தது”

“பாதங்களைப் பார்த்தா? ம்… ஒவ்வொருவருக்கும் ஒரு மனம். எல்லா மனமும் ஒரே மாதிரி இயங்குவதில்லை”

“மருதாணியிட்டு சிவந்த பாதங்கள், அப்பாதங்களில் வீற்றிருப்பதால் சற்றே நாணம் கொண்டு தானும் சிவந்துப் போன வெள்ளிக் கொலுசுகள்! கண்டதுமே உடலும், உள்ளமும் பூகம்பம் வந்தது போல அதிர்ந்தது”

“என்ன சொல்கிறாய்? அம்மன் சிலைக்கு மருதாணியிட்டு சிவந்த பாதங்களா?”

“நீங்கள் அம்மன் சிலையை சொல்கிறீர்களா? நான் எனக்கு எதிரில் இருந்த பச்சைத்தாவணி அணிந்த அம்மனை சொல்கிறேன்”

“தம்பி! உனக்குள் அதிர்வை ஏற்படுத்தியிருப்பது ‘ஆன்மீகம்’ அல்ல, ‘ஆண்மீகம்’. சுட்டுப் போட்டாலும் உனக்கு ‘ஆன்மீகம்’ வரவே வராது என்று உறுதியாக நம்புகிறேன்!”

– மே 2009

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *