ஆனைச்சாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 4,878 
 
 

மிகப்பெரிய அற்புதமொன்று நிகழப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வழக்கம் போலத்தான் விடிந்தது இன்றைய காலைப் பொழுது.

மணி கடையில் இலக்கின்றி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த பேச்சை,அச்சா,ஆன ஆன என்று கலைத்த மலையாளச் சிறுவன்,யானையின் அசைவுகளை பரவசத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.கிட்டிப்புள்,கோலி,பம்பரம்,திருடன் போலீஸ் எல்லவாற்றையும் இழந்து திசைமாறித் தொலைந்து போன குழந்தைகளிடம் யானை இன்னமும் தன் அபிமானத்தை இழக்காதது ஆச்சர்யந்தான்.

யானையின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஜோடியை, அய்யோ என்ன கலர் பாரு என்று வேடிக்கை பார்க்க சிறு கூட்டம் கூடியது.

துதிக்கையில் வைக்கப்பட்ட காசுடன்,மொட்டைத் தலையில் துதிக்கையை வைத்து பர்ர்ர் என உமிழ்ந்து ஆசிர்வாதம் செய்து, அப்படியே மேலே சுழற்றி பாகனிடம் காசைத் தந்தது.

திருஆவினன்குடி கோவிலுக்கு அருகில் சன்னதி ரோடுடன் ஜவஹர் தெருவிலிருந்து வரும் வழி சந்திக்கும் Tயின் மையத்தில், வழக்கமாக மூன்று யானைகளுள் ஒன்று நிற்கும்.வயிறு ஒருபுறமாக வீங்கியது போல உப்பி,வெளிறிய செம்மண் நிறத்தில் பார்க்கவே பரிதாபமாக இருக்கும் ஒன்று, தரையில் புரளும் நீண்ட துதிக்கையை தீயணைக்கும் வண்டியில் இருக்கும் ஹோஸ்பைப்பைப் போல மடித்து சுருட்டி டப்டப்பென்ற சத்தத்துடன் தரையில் மோதியபடி இருக்கும் மற்றொன்று. பின்னங்கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி தலையை லேசாக மேலே தூக்கி இடம் வலதாய் சலிப்பின்றி அசைத்தபடி இப்போது நிற்கும் யானை மூன்றாவது.

யானையைப் பிடிக்கும் போது, குழிக்குள் விழுந்த யானையிடம் அங்குசத்தில் சத்தியம் வாங்கிக் கொண்டு தூக்கி விடுவார்களென்றும்,சத்தியத்திற்கு கட்டுப்பட்டுத்தான் யாரையும் தாக்குவதில்லையென்றும்,நிதானமிழக்கயில் அங்குசத்தால் குத்தி சத்தியத்தை நினைவுபடுத்துவர்களென்றும் தாத்தா சொல்வதை பரவசத்துடன் கேட்டிருக்கிறேன்.

ஆனால் உண்மையில் பிடிபட்ட யானையை சங்கிலியில் மாட்டி சக்கையடி அடித்து பழக்குவார்களென்றும் அங்குசத்தை காது நுனியில் மாட்டி இழுக்கும் போது மென்மையான அந்த இடத்தில் ஏற்படும் வலியில்தான் கட்டளைக்கு பணிகிறது என்றும் பின்னாட்களில் மணி சொன்னான்.

யானையிடம் அருகில் போவதற்கு பயந்து கதறிக் கொண்டிருந்த சிறுவனை வலுக்கட்டாயமாக ஆசிர்வாதம் வாங்க இழுத்துப் போனார்கள்.அந்த சத்தத்திற்குப் பயற்தோ,யானைக்குப் பயந்தோ வண்டியில் பூட்டியிருந்த குதிரை மிரண்டு தடுமாறி விலகிச் சென்றது.
தேக்கந் தோட்டத்தில் இவ்வளவு பக்கத்தில் யானையைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்றான் மணி.

உண்மைதான்.பனிரெண்டு கிலோமீட்டர்கள் தள்ளி கொடைக்கானல் மலைச்சாலை ஆரம்பிக்கும் இடத்தில் தேக்குமரங்கள் அடர்ந்த காட்டில் இதே யானை இருந்தால் இவ்வளவு தைரியமாக நிற்க முடியுமா?

படீர் படீர் என்று கால்களில் பாகன் அடிக்க,கண்களைச் சுருக்க குழந்தையாய் யானை பின்வாங்கியது.

இருக்கும் இடத்தில்ன்னு எப்பவோ எழுதின கவிதை நினைவுக்கு வந்தது.

அடர்ந்த வனமெங்கும் பிளிறல் எதிரொலிக்க
செடிகள் அழித்து நீர் தேடிச் செல்லும் யானை,
அங்குச விசிறலில் கண்கள் சுருக்கி
வலியில் துடித்து கையேந்தும்
சாலையோரம்.

எஸ் பாஸ் அடியாள்தான் இந்த யானையும் என்றேன்.

அடியாளா?

சினிமால வில்லனோட அடியாள் நல்ல டெல்லி எருமை மாதிரி இருப்பான்.அவன் நெனச்சா வில்லன தூசு மாதிரி ஊதிட முடியும். ஆனா வில்லன் எது சொன்னாலும் எஸ் பாஸ்ன்னு பணிவா நடக்கறான் இல்லையா.

பேசிக் கொண்டிருக்கும் போதே பளிச்சென்று கண்கள் கூசும்படி ஒரு மின்னல் வெட்டு. காதைப் பிளக்கும்படி இடியோசை. சில வினாடிகள் கழித்து கண்களைத் திறந்ததும் யானைதான் முதலில் கண்களில் பட்டது. குழப்பத்தில் இருந்த நான் சற்றும் எதிர்பாராவிதமாக யானை,சிவா,இங்கே வா என்றது.

என்ன மணி என்று திரும்பிய என் உடலெங்கும் சுண்டிவிட்டது போல் நரம்புகள் அதிரும்படி மணி உட்பட எல்லோருமே உறைந்திருந்தார்கள்.கோபுரத்தின் அருகில் பறந்து கொண்டிருந்த சாம்பல் நிறப் புறா,காற்றில் சிற்பம் போல் உறைந்திருந்த அதிசய அழகை எப்படி வர்ணிப்பது,

யானை மறுபடி அழைக்க,இறங்கி அசைவற்ற வண்டிக்காரரை, பூக்காரப் பெண்ணை, சைக்கிள் சிறுவனை கடந்து வசியம் செய்யப்பட்டவனைப் போல் அருகில் சென்றேன்.

காய்ந்து வெடித்த களிமண் போன்ற சொரசொரப்பான துதிக்கையின் கோடுகளை, குறும்பு மின்னும் சிறிய கண்களை, அசையும் தூண் போன்ற கால்களை, காய்ந்த பெரிய மர இலையை நினைவூட்டும் காதுகளை, உள்ளங்கை அகல நகங்களை பயமும் ஆச்சர்யமும் கலவையாக மோத பார்த்துக் கொண்டிருந்தேன். உலகமே ஸ்தம்பித்திருந்த காட்சி நிஜமா இல்லை கனவொன்றில் விழித்திருக்கிறேனா என்ற எண்ணம் தோன்றியது.

கனவல்ல நிஜந்தான்.

காலையில் விழித்ததும் குரலில் ஒரு தடிப்பு இருக்குமே அது போன்ற கனத்த குரலில் நிதானமாக பேசியது.

நீங்க பேசினத கேட்டேன்.அடியாள்ன்னு சொன்னது நல்லா இருந்தது.ஆனா….

சில வினாடிகள் இடம் வலமாக தலையை அசைக்காமல் நிறுத்தி,பிள்ளையாரின் வடிவமாக என்னை நினைத்து தரும் காணிக்கையை பிச்சை என்கிறாயே

அதன் கண்கள் சுருங்கி தொங்கிய உதடு துடித்தது.

காட்டில் இஷ்டத்துக்கு வாழ்ந்த எனக்கு ஆரம்பத்தில் இந்த வாழ்க்கை வெறுப்பாகத்தான் இருந்தது.

கண்கள் மின்ன நான் கேட்கிறேனா என்று கூட கவனிக்காமல் ஆழமான குரலில் பேசிக் கொண்டிருந்தது.ஆரம்ப கட்ட பிரமிப்பு எல்லாம் உதிர்ந்து,யானை பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போ என் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கு.எனக்குன்னு உறவுகள் இருக்கு. நான் வந்த பிறகு பிறந்த உஷாக்குட்டி ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா, பெரிய பொண்ணு ஜானகிக்கு என் மேல எவ்வளவு பிரியம் தெரியுமா, அவ புகுந்த வீடு போகும் போது என் துதிக்கையை கட்டிட்டு அழுதப்ப என் கண்ணெல்லாம் நெறஞ்சு போச்சு. இப்பவும் வீட்டுக்கு வந்தா முதல்ல என்னத் தேடி வந்து பேசிட்டுத்தான் வீட்டுக்குள்ளயே போவா.என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் அந்தக் குடும்பத்தோட பிணைஙசிருக்கு.

திரும்பி, உறைந்திருந்த பாகனை அன்புடன் துதிக்கையால் மெதுவாக தடவியது.

அழுகின பழத்தை எடுக்காதேன்னு அதட்டினார்.ஏதோ ஞாபகத்துல மறுபடி எடுக்கப் போனேன். அதுக்காகத்தான் அடிச்சார்.தவறு செய்த பிள்ளைய கண்டிக்கறதில்லையா?

குறுக்கிட்டு இது துன்பப்படறதுல இன்பம் அடையற மனப்பான்மை.விலங்கை ஆபரணமுன்னு தன்னைத்தானே ஏமாத்திக்கற அடிமைத்தனம் என்றேன்.

ஆபரணமா,விலங்காங்கறது அவங்கவங்க மனதைப் பொறுத்த விஷயம்.

காட்டில் வாழ்வது உன்னோட இயல்பு.உன்னை நாட்டுக்கு கொண்டு வந்து பணம் சம்பாதிக்கிற மனிதனோட செயலை நீயே நியாயப்படுத்தலாமா?

என்னோட இயல்பு எதுன்னு தீர்மானிக்க நீ யார்? உனக்கும் ஆதி காடுதானே.நீ என்ன குகையிலா வாழற?

இப்ப என்ன சொல்ற? எல்லா யானைகளும் நாட்டுக்குள்ள வந்து தெருவில நிற்கனும்ங்கறயா?
நான் என்னைப் பத்தி பேசிட்டிருக்கேன் ,நீ ஏன் அதை பொதுவில வைக்கிற?
உன்னை அடியாள்ன்னு சொன்னது தப்பு.உண்மையில் நீ குடிச்சிட்டு வந்து மிதிக்கற புருஷன கொண்டாடற டிபிக்கல் தமிழ்ப் பெண்
இங்க பாரு.என் வாழ்க்கைய வாழ எனக்கு உரிமை இருக்கு இல்லையா?இந்த வாழ்க்கை எனக்கு பிடிச்சிருக்கு நான் வாழறேன்.அவ்வளவுதான்.

நீ என்ன சொன்னாலும் என்னை கன்வின்ஸ் பண்ண முடியாது.

யாராலும் எல்லோரையும் கன்வின்ஸ் பண்ண முடியாது.எனக்கு அது வேலையும் இல்ல. மத்தவங்களுக்கபயன்படற மாதிரி இப்படி ஒரு வாழ்க்கை வாழறது எனக்கு சந்தோஷமா இருங்ககு.போன வருஷம் என் நண்பன் இறந்தப்ப எவ்வளவு மரியாதையோட கோவிலுக்கு பக்கத்திலேயே அடக்கம் பண்ணினாங்க. என்னுடைய எத்தனையோ நண்பர்கள் எல்லாம் காட்டில் அனாதை பிணமா அழுகி கிடக்கறத பாத்து வேதனைப்பட்டிருக்கேன். நரிகளும்,கழுகுகளும் தின்னாம என்னையும் கௌரவமா அடக்கம் பண்ணுவாங்க இல்லையா.அது போதாதா?

குரல் தழுதழுக்க கண்களில் நீர் வழியும் யானையைப் பார்த்தவுடன் வார்த்தைகள் வற்றிப் போன நிலையில் மிகுந்த ஆதுரத்துடன் துதிக்கையைத் தடவினேன்.என்னை இழுத்து உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டது.

சற்று நேரம் நிலவிய அமைதியை ஆழமாய் முச்சையிழுத்து தொண்டையைச் செருமி கலைத்தது.

உன் கூட பேசினது சந்தோஷமா இருக்கு.சந்தர்ப்பம் வாய்த்தால் இன்னொரு முறை பேசுவோம்.போய் வா

ஏதேதோ உணர்வுகளின் பிரவாகத்தில் திணறியபடி கடைக்குள் வந்ததும் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்ப,புறா படபடவென சிறகடித்தபடி கோபுரத்தின் பொம்மையில் அமர்ந்து சிறகுகளை கோத ஆரம்பித்தது.

மணி,என்ன ஆச்சு?என்றான்.

நான் யானையைப் பார்த்தேன்.

சொல்லாதே என்று தலையசைத்தது.

சொன்னால் மட்டும் நம்பவா போகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *