கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2013
பார்வையிட்டோர்: 9,935 
 

Счастье : ஆனந்தம்
மூலம் : மிக்ஹில் பெட்ரோவிச் ஆர்த்சிபஷேவ்
தமிழில் : மா. புகழேந்தி

ஷாஷா, ஒரு விலை மகள், ஒரு காலத்தில் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அவளது முகம் இப்போது பொலிவிழந்து கன்னம் ஒட்டி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவளது வாழ்க்கை, வாழ்க்கை என்று சொல்லிகொள்ளும் அனைத்தையும் இழந்திருந்தது.அது ஒரு கொடுமையான பிழைப்பாகவே இருந்தது.

கொடுமையான நாள். பகல் தனது வெம்மையையும் வெளிச்சத்தையும் மெல்ல மெல்ல இழந்து, நம்பிக்கையற்ற இரவில் கரைந்தது, இரவோ முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது. பட்டினியும் குளிரும் அவளது வனப்பான மார்பையும் வாளிப்பான உடலையும் மெலியச் செய்து எலும்பும் தோலுமாக, நாய் கூடக் கவ்வாத உடலாக மாற்றியிருந்தது.

தொட்டால் ஒட்டிக்கொள்ளும் இருட்டு நேரங்களில் பெரிய வீதி முதல் வெட்ட வெளி வரை எல்லா இடங்களிலும் அவள் தன்னுடைய அழகை அசிங்கமான, அழுக்கான, கேவலமான, மோசமான எல்லோருக்கும் விற்றிருக்கிறாள்.

இப்போது அவள், நகரத்துக்கு வெளியே, ரயில்வே பணிமனைக்கும் அப்பால், கொட்டும் பனியால் மூடப்பட்ட மேடு பள்ளங்களை எல்லாம், தாண்டி நிலவொளியில் நின்று கொண்டிருந்தாள். அங்கு அமைதியாக இருந்தது. தூரத்தில் தொடராக விளக்குகள் மெலிதாகத் தெரிந்தன. கரு நீல நிற வானத்துக்குக் கீழே தந்திக் கம்பங்கள், பனியால் மூடப்பட்டதால் நிலவொளியில் மின்னிக் கொண்டு, நின்று கொண்டிருந்தன. காற்று குளிராகவும் வறண்டும் வீசியது. பொறுத்துக் கொள்ளவே முடியாதவாறு குளிர், துணி மூடாத உடல் பகுதிகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. தோல் வெடித்து ரத்தம் வருவது போல் இருந்தது. அவளது முகத்தருகே மூச்சுக் காற்றில் மூடு பனி உருகி நீராவி யாகிக் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

ஷாஷா ஐந்து நாட்களாக வருமானம் இன்றி இருந்தால், தனது அறையில் இருந்த பார்ப்பதற்கு சற்றே சுமாராக இருந்த ஓர் ஆடையை உடுத்திக் கொண்டு இப்போது ஆள் பிடிக்கக் கிளம்பி இருந்தாள்.

தனியாக நின்று கொண்டிருந்தாள். அது அன்னியமாக இருந்தது, சாலை நிலவொளியில் பாலைவனம் போல ஆளரவம் இன்றி வெறிச்சோடிக்கிடந்தது.

அவளது கால்கள் பனியால் மரத்துக் கொண்டிருந்தது. கால்கள் வலிக்கத்தொடங்கின.

இரக்கமற்ற வறுமையும் தனிமையும் அவளை வாய்விட்டுக் கதறத் தூண்டின. அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. யாரும் அவளது கண்ணீரைக் காண வில்லை. நிலா நீல வானத்தில் தலைக்கு மேலே தூய்மையாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

யாரும் வரவில்லை, கைவிடப்பட்ட நிலையில் விவரிக்க முடியாத துயரத்தில், உலகமே கேட்க, பெரும் ஓலமிட்டுக் கதற வேண்டும் என்று துடித்தாள், கடுமையான குளிரில் அவளால் அமைதியாக, பற்களை இறுக்கிக் கடித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

சாகவேண்டும், சாக மட்டுமே வேண்டும் – அமைதியாகத் தொழுதாள்.

மங்கலான வெளிச்சத்தில், தூரத்தில் கருப்பு ஆண் உருவம் ஒன்று வருவது தெரிந்தது. அருகில் வந்தான், அவனது வருகையால் காலடியில் பனி நொறுங்குவது தெளிவாகக் கேட்டது. அவன் அருகில் இருக்கும் தொழிற்சாலையில் பணிபுரிபவன் என்று யூகித்தாள். சாலையின் ஓரத்தில் நின்று கொண்டாள், உணர்ச்சியற்றுப் போன தன் கைகளை ஆடைகளுக்குள் மறைத்துக் கொண்டு தோள்களை குலுக்கிக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

அவளது உதடுகள் மரத்துப் போய் இருந்தது, அவள் பேச முடியாதோ என்று அச்சப்பட்டாள்.

“சார் ” , அவள் கிசு கிசுத்த குரலில் கூப்பிட்டாள். வழிப்போக்கன் திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடக்க ஆரம்பித்தான், அவனின் முன்னும் பின்னும் ஓட்டமும் நடையுமாக கூடவே சென்றாள் ,”சார்…வாங்க…இதுல என்ன இருக்கு…வாங்க போலாம்….நீங்க நான் ராத்திரி நேரம் வேற என்ன வேணும், வாங்க….”. வழிப்போக்கன் அவளைப் பொருட் படுத்தவில்லை, இருகியமுகத்துடன், உணர்ச்சியே இல்லாமல், சென்று கொண்டிருந்தான்.

ஷாஷா மீண்டும் அவனைப் பின்தொடர்ந்தாள். தோள்களைக் குலுக்கியபடி முனகிக் கொண்டு கிறங்க வைக்கும் குரலில் பேசினாள்,” பாக்கமாட்டீங்களா..வாங்க போலாம், பக்கத்திலேயே இடம் இருக்கு…”.

நிலவு உயரே மிதந்து கொண்டிருந்தது. அவளின் குரல் அன்னியமாக இருந்தது. “சரி தான் வாங்க….”, ஷாஷா அவசரமாக நடந்து கொண்டு அவனை விடாது அழைத்துக் கொண்டிருந்தாள். “உங்களுக்கு வேண்டாம்னா பரவாயில்லை… வேறு ஏதாவது செஞ்சுக்கங்க….. இருபது கொபெக்குகள் மட்டும் கொடுங்க…”. அமைதியாக வழிப்போக்கன் நடந்தான், தன் முன்னே எதுவும் இல்லாதது போல, எதையும் அவன் பார்க்காததைப் போல, கேட்காததைப் போல. ஷாஷாவின் குரல் உடைந்தது, அழுகை வந்தது, கண்களில் நீர் வழிந்தது…திடீரென ,கடைசி முயற்சியாக அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது…”சார் இந்தக் குளிருல உங்க முன்னாடி, துணியில்லாமல் நிர்வாணமா, அஞ்சு நிமிஷம் நிக்கிறேன். எனக்கு நீங்க அஞ்சு கொபெக்குகள் கொடுத்தாப் போதும்….”

வழிப்போக்கன் சட்டென நின்றான். அவனது கண்கள் ஒளிர்ந்தன. சிறிதாகச் சிரித்தான், விகாரமாக இருந்தது. அவன் முன் போய் நின்றாள்.

குளிரில் நடுங்கியபடி கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள்.
— நீ விரும்பினால் ஐந்து ரூபிள்களே தருவேன் , வழிப்போக்கன் சொன்னான்.
ஷாஷா குளிரில் நடுங்கியபடி நம்பமுடியாமல் அமைதியாகப் பார்த்தாள்.
— இதப் பார் துணியை அவிழ்த்துப் போட்டு நில்லு. உன்னைப் பத்துத் தடவை அடிக்கப் போறேன். விழுகிற ஒவ்வொரு அடிக்கும் ஐம்பது கொபெக்குகள் கொடுப்பேன். உனக்கு வேணுமா?

சொல்லிவிட்டுச் சிரித்தான். தடுமாறியபடி இருமினான்.

— குளிருது…ஷாஷா சொன்னாள், ஆச்சரியம், அச்சம், பட்டினியால் தூண்டப்பட்ட பேராசை,அவநம்பிக்கை அனைத்தும் அவளைச் சூழ்ந்து கொண்டது, காய்ச்சல் கண்டவள் போல் உணர்ந்தாள்.

—உனக்கு என்னன்னு தெரியாது… அஞ்சுக்கு… அந்தக் குளிர விடு….
—வலிக்கிற அளவுக்கு நீ அடிப்பாயா… ஷாஷா முணுமுணுத்தாள் .. இன்னும் அவளால் முடிவு செய்ய முடியவில்லை.
— ஆமாம் வலிக்கும். நீ துடிப்பாய்…அஞ்சு ரூபிள் வேணும்னா அப்படித்தான்… வழிப்போக்கன் நடையைக் கட்டினான், காலடியில் பனிகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

ஷாஷா உள்ளே நடுங்கினாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு —அஞ்சு கொபெக்குகள் கொடுங்க… என்றாள்.

வழிப்போக்கன் கண்டு கொள்ளாமல் நடந்தான். ஷாஷா அவன் கையைப் பற்ற நினைத்தாள். அவன் வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டான். கோபத்தில் எட்டு வைத்தான். ஷாஷா பின் தொடர்ந்தாள். கெஞ்சினாள். அழுதாள்.
வழிப்போக்கன் நின்றான். திரும்பினான். அவன் முகம் பிரகாசமானது.

—சரி அவன் கிசுகிசுத்த குரலில் சொன்னான்.
ஷாஷா குழப்பமுடன் நின்றாள், முட்டாள்தனமாக இருந்தது அவள் சிரிப்பு, பிறகு தயக்கத்துடன் உடைகளைக் களைய ஆரம்பித்தால். குளிரில் உறைய ஆரம்பித்தாள். அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் முகம் உணர்ச்சியற்று விகாரமாகத் தெரிந்தது.
—அப்படித்தான் … அப்புறம் பார் உனக்கு காசு… அவன் கரகரத்த குரலில் சொன்னான்.

கடுமையான குளிர் அவளது வெற்றுடம்பை நாலாபுறமும் ஊடுருவியது. தோலை முற்றாகக் கிழித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. மூச்சுவிட சிரமப் பட்டாள்.
—சீக்கிரம் அடி.. ஷாஷா முணுமுணுத்துக் கொண்டே அவனுக்குத் தன் பின் புறத்தைக் காட்டினாள்.

அவள் பிறந்த மேனியாக நின்று கொண்டிருந்தாள். அது முழுதும் வித்தியாசமாக இருந்தது. இரவில், நிலவொளியில் உறைந்து கொண்டு, பனிக்கு நடுவே பிறந்த மேனியாக.

—சரி, கொடூரமான குரலில் சொன்னான், —பார், நேரா நில்லு . அஞ்சு ரூபிள்கள் நீ போடற சத்தத்துக்கு ஒண்ணுமே இல்லை.
—சரி அடி , மெதுவாக முணுமுணுத்தாள். பனியால் வெடித்துக் கொண்டிருக்கும் உதடுகளைக் கடித்தாள். தசைகளைச் சுருக்கிக் கொண்டாள்.

வழிப்போக்கன் நின்றான். திடீரென ஒரு பிரம்பை எடுத்தான். தனது அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி ஓங்கி அவளது பின் புறத்தில் அடித்தான். அவளது பின் புறம் சுருங்கியது. வலி அவளது உடல் முழுக்கப் பரவி மூளை வரை சென்றது. அவளுக்கு அந்த வயல், நிலா, வழிப்போக்கன், வானம், மொத்த உலகம் எல்லாம் சேர்ந்து ஒன்றாகத் தெரிந்தது.
வலியால் அலறினாள். ஷாஷா சில அடிகள் முன்னே ஓடினாள். அடி விழுந்த இடத்தை இரண்டு கைகளினாலும் பற்றினாள்.

— கைகளைக் கொண்டு மூடாதே. அவளைத் துரத்திக் கொண்டு பின்னால் சென்றான்.

ஷாஷா அழுந்தத் துடைத்தவாறே கைகளை எடுத்தாள். இரண்டாவது அடி உடனடியாக விழுந்தது. தாங்கிக் கொள்ள முடியாத வலியைத் தந்தது. பரிதாபமாகக் கத்தியபடி குப்புற விழுந்தாள்.

அடுத்தடுத்து அடிகள் அவளது வெற்றுடம்பின் மீது விழுந்தது. அடியின் வேகத்தில் அவள் பனியில் புதைந்தாள். ஏறக்குறைய மயக்கம் அடைந்தாள். ஷாஷா கடும் பனியில் ஊர்ந்தாள்.

—ஒன்பது அவன் கரகரத்த குரலில் எண்ணினான், மின்னல் தாக்கியது போல அடுத்த அடி அவளின் மேல் விழுந்தது. பாம்பு போல சுருண்டு கொண்டாள். வயிற்றின் மேல் அந்த அடி விழுந்தது. அடிபட்ட இடங்கள் கந்திக் கொண்டு வந்தன. அவளது இடுப்பு எலும்புப் பகுதி நிலா வெளிச்சத்தில் காயத்தைக் காட்டியது. எல்லா இடமும் அடிபட்டிருந்தது. பேதைப் பெண் இப்போது தனது மார்பைக் காட்டினாள்.

—பத்து அவன் வெறி கொண்டு அடுத்த அடியைக் கொடுத்தான். அவள் நினைவிழந்தாள். உடனடியாக நினைவு திரும்பியது.

—சரி எந்திரி நாயே …அவன் கரகரத்த குரலில் சொன்னான்.
—அப்புறம் பணத்தை வாங்கிட்டுப் போ.
நிலா உயரே சுடராக ஒளி விட்டுக் கொண்டிருந்தது. பனியும் அமைதியான வயல் வெளியும்.

ஷாஷா தடுமாறியபடி கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்தாள். வெள்ளை உடம்பில் பாம்பு ஊர்வது போல அடிபட்ட இடங்கள் நீலம் பூத்துத் தெரிந்தது. அவளுக்கு இப்பொழுது குளிர் தெரியவில்லை. ஆயாசமாக உணர்ந்தாள். தலை சுற்றியது, வலி உடல் முழுக்க பரவி இருந்தது. உடல் எரிச்சல் எடுக்கத் தொடங்கியது. நனைந்து விட்ட உடலை துணியால் துடைத்து விட்டுக் கொண்டாள். அவள் உடுத்திக் கொண்டாள். அவன் அவளது கைகளில் எதையோ திணித்து விட்டுப் போனான். அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். அதற்குள் அவன் எட்டு வைத்து மூடு பனிக்குள் ரொம்ப தூரம் சென்று விட்டான். அவனது உருவம் கருப்பாகத் தூரத்தில் மறைந்து கொண்டிருந்தது. அவள் கைகளைப்பிரித்து என்ன கொடுத்து விட்டுப் போனான் என்று பார்த்தாள்.

தனது அழுக்கான கைகளுக்குள் பொன்னிறத்தில் மின்னும் ஐந்து ரூபிள்களைப் பார்த்தாள்.

—அஞ்சு ரூபிள்கள். ஷாஷா நினைத்துப் பார்த்தாள். திடீரென ஓர் உற்சாக வெள்ளம் அவளுள்ளே பெருக்கெடுத்தது. ஆனந்தத்தில் குதித்தாள். கெட்டியாகப் பணத்தைக் கைகளில் பற்றிக்கொண்டு நடுங்கும் கால்களுடன் நகரத்தை நோக்கி ஓடினாள். அவளது ஆடை எதிலோ மாட்டிக் கொண்டு கிழிந்தது. அதையெல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. மகிழ்ச்சியால் பாடிக்கொண்டு ஓடினாள். உணவு, கதகதப்பு, ஓய்வு, அப்புறம் வோட்கா.

இந்த நினைப்பு அவளுக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தது. அவனைப் பற்றியோ அவன் கொடுத்த அடிகளைப் பற்றியோ அவள் நினைக்கவில்லை.
—நல்லதுதான் மோசமில்லை –அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவன் மீது வெறுப்போ கோபமோ இப்போது அவளுக்கு இல்லை.

ஆனந்தம் அவளைத் தொற்றிக் கொண்டது. சிறிய வீதிகளில் இரவு நேரத் தேநீர்க் கடைகளின் விளக்கு வெளிச்சத்தில் உற்சாகமாக நடைபோட்டாள்.

– பெப்ரவரி 12, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *