ஆண்களின் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 8,673 
 
 

“எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள்.

அவள் — கமலினி. கலைத்துறைக்காக வைத்துக்கொண்ட பெயர். பெற்றோர் வைத்த பெயர் கோமளம் என்று எங்கோ, எப்போதோ, படித்த நினைவு.

“உங்களுடைய எழுத்தை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன், ஆன்ட்டி! பெண்கள் தைரியமாக இருக்கவேண்டிய அவசியத்தைப்பற்றி உங்களைமாதிரி யார் எழுத முடியும்!’ என்று ஏதோ இலக்கிய விழாவில், தானே வந்து பாராட்டினாள்.

பெருமையுடன், அந்தப் பெண்மேல் பச்சாதாபமும் உண்டாயிற்று. தெரிந்தவர்கள் பலரும் கேட்டிருக்கக் கூடும், `காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல், சினிமா, டிராமான்னு ஏன் அலையறே?’ என்று.

பள்ளி நாட்களிலேயே அவள் புகழ் பெற்றிருந்தது அக்கம்பக்கத்தினர் வெறும் வாயை மெல்லக் கிடைத்த அவல்.

கோலாலம்பூரின் பெருமிதச் சின்னமான இரட்டைக் கோபுரம் கண்ணுக்கு அருகே தெரியும் புறம்போக்கு நிலத்தில், சுவர்கள் மரப்பலகையாலும், தரை மட்டும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வீட்டில் வளர்ந்தவள் கமலினி.

குடித்தே தன் சொற்ப சம்பாத்தியத்தையும் அழித்துவிடும் தொழிலாளிக்கு ஆறில் ஒரு குழந்தையாகப் பிறந்தவள் இப்படி நாடு முழுவதும் அறிந்தவளாகிவிட்டாளே என்று பிறர் வயிற்றெரிச்சல் பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.
`டி.வியில ஆடுது, பாடுது! இதுக்கெல்லாம் என்ன குடுத்திச்சோ!’ என்று தமக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.

எனக்கு அவர்கள் யாரும் அறிமுகம் இல்லைதான். ஆனாலும், எனக்கு உலகம் தெரியும்.

`பெண்களே பெண்களுக்கு ஏன் எதிரி ஆகிறார்கள், தெரியுமா? அவர்கள் தம் முழு அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் இருப்பதால்தான்!’ அமெரிக்காவில் பெண்களுக்கென பிரத்தியேகமான ஸ்மித் கல்லூரியில் எனக்குக் கற்பிக்கப்பட்ட முதல் பாடம்.

பிறரது ஏச்சுப்பேச்சுக்கு பயந்துவிடாது, தான் எடுத்த முடிவில் நிலையாக நின்ற இந்த சின்னப் பெண்ணைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை தமிழ்ப் பெண்களுக்கு இந்த தைரியம் வரும்!

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவளைப் பார்த்து வருகிறேன், திரையில். இன்றும் பதினெட்டு வயதுப் பெண்ணாகத்தான் இருந்தாள். எனக்கோ இன்னும் நாற்பது வயதுகூட ஆகவில்லை. என்னை `ஆன்ட்டி’ என்று உரிமையுடன் அழைக்கிறாள்! என் அபரிமிதமான சாப்பாட்டு ஆசையும், ஓயாது படித்து, உடற்பயிற்சியை அலட்சியம் செய்வதும் காரணமோ? அவளிடம் ஒரு சிறிய கோபம் எழுந்தது.

ஒருவேளை, மலேசிய வழக்கப்படி, தன்னைவிட நான்கே வயது பெரியவர்களாக, அது கடைக்காரரோ, டாக்ஸி டிரைவரோ ஆனாலும், `அங்கிள்,’ `ஆன்ட்டி’ என்று அதிமரியாதையுடன் அழைத்துப் பழகியதால் இருக்கலாம் என்று என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன்.

நான் இப்படி குண்டாகப் போயிருப்பது இந்த ஆண்களால்தான் என்று ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களையும் மனதுக்குள் வைதேன்.

பின்னே என்னவாம்? பழைய ஓவியங்களையும், கோயில் சிற்பங்களையும் பாருங்கள்! எத்தனை பெண்கள் இப்படி உருண்டு திரண்டு இருக்கிறார்கள், இல்லை, இருந்திருப்பார்கள்? எல்லாம் இந்த ஆண் ஓவியர்கள், சிலை வடிப்பவர்கள் செய்த திரிசமன். அவர்களுடைய கனவுலகில் இருக்கும் பெண்களை நனவாக்கிக்கொள்ளும் அற்பர்கள்!

தாம் ஏதோ விதத்தில் மட்டமானவர்கள் என்று பல பெண்கள் சுருங்கிப்போவது இந்தமாதிரி ஆண்களால்தான்! அதனால்தான் நான் வேண்டுமென்றே உடலழகை அலட்சியம் செய்தேன்.

`இக்கல்லூரியில் உங்களது எல்லையை விரிவாக்கப் போகிறோம். உலகெங்கும் இருக்கும் பெண்களின் நிலையை நீங்கள் உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு! நம் கல்லூரியில் படித்த நான்ஸி ரீகன் அமெரிக்காவின் முதல் பெண்மணியானார் என்பதை மறவாதீர்கள்!’ எங்களது போதனைகள் அந்த ரீதியில் அமைந்ததால், நான் குதிரைச் சவாரி, உயிர்காக்கும் ரப்பர் உபகரணங்கள் எதுவுமின்றி ஆழ்கடலில் நீச்சல் எல்லாம் பழகினேன்.

`என்னால் இவ்வளவெல்லாம் செய்ய முடிகிறதே!’ என்ற வியப்பு எழுந்தபோதே, ஆண்களின்பால் விதைக்கப்பட்ட கசப்பு அதிகரித்தது. தாம் இரண்டாந்தார மக்கள்தாம் என்று பெண்களை எவ்வளவு காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள்!

அப்படி எண்ணாத ஒருவர் என்னை மணக்க விரும்பியபோது, அதிக யோசனை செய்யாது அவரை மணந்தேன்.

ஆனால், ஆண்களின் மொத்தப் பிரதிநிதி என்று அவரைப் பாவித்து, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நான் அவரைத் தாக்குவேன் என்று நாங்கள் இருவருமே அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

நான் வெளிநாட்டில் தங்கிப் படித்த அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டேன், எழுத்து மூலமாக. என் பெண்ணியக் கருத்துகளை இளம்பெண்கள் ஆர்வமாகப் படித்தார்கள். (வயதான பெண்மணிகளைத் திருத்த அவர்களைப் படைத்த இறைவனால்கூட முடியாது).

“ஒரு பெண் கொஞ்சம் முன்னுக்கு வந்தாலே அவளைப்பத்தி இல்லாததையும், பொல்லாததையும் பேசறவங்களைப்பத்தி என்ன நினைக்கறீங்க, ஆன்ட்டி?” கமலினி கேட்டபோது, புன்னகைத்தேன்.

“இந்த ஒலகம் இருக்கே, அது நாம்ப வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். எப்படியும்தான் பேசப்போறாங்க! நாம்ப புகழோட வாழ்ந்து, மத்தவங்களுக்கு பேச ஒரு வாய்ப்பு குடுப்போமே!” கல்லூரியில் எனக்குக் கொடுக்கப்பட்ட உபகாரச் சம்பளம் வீண்போகவில்லை என்ற பெருமிதம் ஏற்பட்டது.

ஓசையெழாமல் அவள் கைதட்டினாள். “நல்லவேளை, நீங்க வர்றது தெரிஞ்சு இன்னிக்கு ஒங்களைப் பாக்க வந்தேன்! என் மனசில இருந்த குழப்பமெல்லாம் போயிடுச்சு!”

என்ன குழப்பம் என்று நான் கேட்கவில்லை.

தானே தெரிந்தது, சில மாதங்களுக்குள். எல்லா தமிழ் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளிலும் முதல் பக்கத்திலேயே போட்டிருந்தார்கள், `நம்ப கமலினி கோலிவுட்டில் நடிக்கப் போகிறார்!’ என்று. உள்ளே அந்தப் பெண்ணின் முழுப்பக்க பேட்டி, புகைப்படத்துடன்.

அவளுடைய போட்டோ ஆண்களின் மனத்தைக் கவரவென்றே எடுக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றியது. கணுக்கால் தெரிய, இடுப்பை அகலமாகக் காட்டும் பாவாடை. கண்ணைக் குத்துவதுபோன்ற, இயற்கைக்குப் புறம்பான அளவில் இருந்த மார்பகங்களை மேலும் எடுத்துக் காட்டவென்றே உடலைப் பிடிக்கத் தைக்கப்பட்ட மேல்சட்டை.

முன்பு சுமாராக இருந்த அவள் முகத்தில் நிறைய வித்தியாசம். முன்னாள் உலக அழகியின் சாயலைக் காப்பி அடித்தமாதிரி வெகு அழகாக மாறியிருந்தாள்.

ஓ! முகத்தின் பல பாகங்களிலும், மார்பகத்திலும் தாராளமாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறாள்! லேசாகச் சிரிப்பு வந்தது.

அன்று மத்தியானம் நான் தனியாக அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சின்னத்திரையில் கமலினி வந்தாள். ஆங்கில உச்சரிப்புடன் தமிழில் ஏதோ பேசினாள். உற்சாகமாக அவரைக் கூவி அழைத்தேன்.

“இது இந்த ஊர் பொண்ணு! இப்போ..,” நான் தொடர்வதற்குள், அவர் தன் கையாலேயே என்னைத் தடுத்தார்.

“இதுக்கா அவ்வளவு அவசரமா என்னைக் கூப்பிட்டே? யார் எப்படிப் போனா நமக்கென்ன?” அபூர்வமாகத்தான் அவர் குரலை உயர்த்துவார். “நாம்ப மத்தவங்களைப்பத்தி வம்படிச்சா, அப்புறம் நம்மைப்பத்தி மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு பயந்துக்கிட்டே காலந்தள்ளணும்!”

நாலடி நடந்தவர், என்னைத் திரும்பிப் பார்த்தார். “இவ்வளவு படிச்சும், நீ இப்படி பாமரத்தனமா பேசறது ஆச்சரியமா இருக்கு!”

எனக்கு அவமானமாக இருந்தது. பட்டென்று டி.வியை நிறுத்தினேன். அன்று பூராவும் ஏதேதோ வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டேன். சோயா பீன்ஸை வெந்நீரில் ஊறவைத்து அரைத்து, வடிகட்டிய பாலைக் கொதிக்க வைத்தேன்.

`எனக்கு ஓய்வே கிடையாதா!’ என்று கெஞ்சுவதுபோல் தோள் வலிக்க, அதைப் பிடித்துவிட்டுக் கொண்டேன். அதை அவர் பார்த்திருக்க வேண்டாம்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன். எதுக்கு ஓயாம வேலை செய்யறே? இப்போ உயிரைக் குடுத்து இதைப் பண்ணணுமா? கடையில நாலு பாக்கெட் வாங்கினாப் போச்சு!”

அவரது கரிசனம் ஏற்கெனவே கொந்தளித்துக்கொண்டிருந்த என்னை மேலும் உசுப்பியது. “ஒங்களை யாரும் கேக்கல. எல்லாம் எனக்குத் தெரியும்!” என்று சீறினேன்.

`இப்போது நான் என்ன செய்தேன்!’ என்பதுபோல் ஒரு புதிரான பார்வை பார்த்துவிட்டு, அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

`நான் ஏன் இப்படி இருக்கிறேன்!’ என்ற வருத்தம் எழுந்தது.

நீர்க்க இருக்காமல், நிஜமான சர்க்கரை போட்டு, நாமே வீட்டில் சோயா பால் பண்ணினால் உடம்புக்கு நல்லது என்று நான் செய்ததை அவர் பாராட்டவில்லையே என்ற வருத்தமா?

சிறிது யோசித்தபின், உண்மைக் காரணம் அதுவல்ல என்று புரிந்தது. நான் அந்த நடிகையைப்பற்றிப் பேசியதை அவர் ரசித்துக் கேட்கவில்லை என்ற கோபம் எனக்கு.
என் கோபம் தணியும்வரை அவர் என் கண்ணிலேயே படமாட்டார் என்பது தெரிந்ததுதான். கம்ப்யூட்டர் அறையிலேயே இரவில் வெகு நேரம் உலக சமாசாரங்கள், அதனுடன் செஸ் விளையாட்டு. அப்புறம் அங்கேயே படுக்கை என்று பொழுதைக் கழிப்பார்.

நானே அவ்வளவு சோயா பாலையும் குடித்துத் தொலைத்தேன்.

`ஆணும் பெண்ணும் சமம்’ என்று போதித்தார்களே எங்கள் கல்லூரியில், அடிப்படையிலேயே அவர்களிடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு! அவர்கள்தான் சொன்னால், என் புத்தி எங்கே போயிற்று? அறிவாளி என்று பெயர்தான்!

என்னால் தூங்க முடியவில்லை. எண்ணமெல்லாம் அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்தது. கமலினியின் நடையுடை பாவனைகள் எல்லாமே ஆண்களை மனதில் வைத்துத்தான் என்று தோன்றியது.

`பிறர் முன்னுக்கு வரவிடாமல் செய்கிறார்கள்!’ என்று பெண்களின்மேல் குற்றம் சாட்டியவள், `அவர்கள் என்ன சொல்வது!’ என்ற மிதப்புடன், ஒரேயடியாக ஆண்கள் பக்கம் சாய்ந்துவிட்டாளே என்ற வருத்தமா?

அவள் இப்படி ஆக, நானும் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டேனோ, பெண்களைப் பழித்ததால்?

`இது ஆண்களின் உலகம்!’ என் பேராசிரியரே சொல்வதுபோல் காதருகே கேட்டது.
எனக்குக் கோபம் வந்தது. உடனே படபடப்பு உண்டாயிற்று.

`நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும்!’ ஒவ்வொரு முறையும் டாக்டர் என்னிடம் கெஞ்சுதலாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

முதல்முறை நான் இதனை என் கணவரிடம் தெரிவித்தபோது, அவர் மெல்லச் சிரித்தபடி, “உன்னைமாதிரி அறிவுஜீவிகளுக்கு மூளையை விரிவு படுத்தத்தான் நேரம் சரியாக இருக்கிறது!” என்று குரல் அதிராது சொன்னாலும், மறுநாளே ஆயிரம் ரிங்கிட்டுக்குமேல் கொடுத்து, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஒரு சாதனம் வாங்கிவந்தார்.

`நீ குண்டு!’ என்று சொல்லாமல் சொல்கிறார்!

`உங்கள் ஒட்டடைக்குச்சி உடம்பிற்கு இது எவ்வளவோ தேவலாம்!’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே அப்பால் சென்றேன். எதுவும் பேசப் பிடிக்கவில்லை. பணத்தைப் பாழ் செய்து வாங்கிய பொருள் தூசு படிந்து கிடக்கும்போது அவரே புரிந்துகொள்ளட்டும்!

வழக்கம்போல் எங்கள் கோபம் ஓரிரண்டு நாட்களே நீடித்தது.

`எவ்வளவு வயதானாலும், என்ன இப்படி சின்னக் குழந்தைபோல நடந்து கொள்கிறேன்!’

அறிவு வளர்ந்த அளவுக்கு உணர்ச்சிகள் வளரவில்லையோ? நினைக்கும்போதே அயர்ச்சி வந்தது.

இந்த லட்சணத்தில், பிறருக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இருக்கிறதா!
நத்தைபோல் என்னுள்ளேயே சுருங்கிக்கொண்டு, ஓயாமல் படித்தேன்.

அந்த தினசரியின் முதல் பக்கத்தில் கமலினியின் போட்டோ!

அடக்க முடியாத ஆர்வத்துடன் பார்த்தேன்.

தலைப்பே அதிரவைத்தது. `விபசாரக் கேஸில் மாட்டிய நடிகை!’ மேற்கொண்டு படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பேப்பரை வீசியெறிந்தேன்.

`ஒரு ஆணுக்கு மனைவியாக, அடங்கி வாழ்வதில் என்ன சிறப்பு?’ என்றவள், தெரிந்தே பல ஆண்களுக்குக் கைப்பாவையாக ஆகியிருக்கிறாள்!

`பாவம்! அந்த ஏழைப்பெண் எப்படித்தான் குறுகிய காலத்தில் நிறைய பணமும் புகழும் சம்பாதிப்பது!’ என்று அறிவு வாதாடினாலும், கசப்பான ஓர் உண்மை புலப்பட்டது.

இது ஆண்களின் உலகம்தான். சில அப்பாவிகளை எதிர்ப்பதால் மட்டும் அதை மாற்றிவிட முடியாது.

உடற்பயிற்சி செய்யும் கருவியைத் தூசி தட்டினேன். போகாத ஊருக்கு உயிரை விட்டுக்கொண்டு, அந்த சைக்கிளின் பெடலை அமுக்கினேன்.

பார்த்தும் பாராததுபோல அப்பால் நகர்ந்தார் என் கணவர்.

(தமிழ் நேசன், 7-3-2004)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *