ஆட்டுக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,692 
 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“காதா கதுவறையா காதுவெள்ளை
செம்மறையா கொக்கு நிறத்தானே
குருநாட்டுப்பித்னே ஐயர் கோவிப்பார்
அலகு திறவாதே நசீ”

மாரியம்மன் கோவில் பூசாரியார் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்து நாய்க்கு கூறும் இந்த மந்திரத்தை கோயில் கணக்குப்பிள்ளையின் காதில் குசுகுசுத்தார். கோயில் தலைவர் அருகில் வருவதைக் கண்டதும் மரியாதை செலுத்தும் வகையில் பூசாரியை விட்டு சற்றுத் தள்ளி நின்றார் கணக்குப்பிள்ளை.

“நாளைக்கு கன்னிமார் தெரிவு செய்யும் சடங்கு, இன்றைக்கு அம்மனுக்கு சாத்தி அழகுபார்க்கும் அடுக்கிலதான் நாளைக்கு வேலைக்குச் சனங்களை வரவைக்கிற அளவிற்கு இன்று தெய்வம் ஆடுபவர் வாக்குத் திறந்து கட்டுச் சொல்லவேணும்” என்றார் தலைவர் பூசாரியார் அவரைப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்று சிரித்தார்.

அன்றைய உபயகாரர் கொண்டு வந்த பொருட்களையெல்லாம் பனையோலைப்பாயில் பரப்பிவைத்து வகைப்படுத்தத் தொடங்கினார் பூசாரியார். தலைவர், கணக்குப்பிள்ளை , ஆட்டுக்காரர், பூசாரியின் உதவியாளர் ஆகிய எல்லோரும் பூசாரியாருக்கு உதவி செய்தனர்.

தாய்க்கும்பம், பரிவாரக்கும்பம், விளையாட்டுக்கும்பம், அடுக்குச்சாத்தும் பட்டுச்சேலைகள், அபிசேகப் பொருட்கள், பூசைக்குரிய திரவியங்கள், நைய்வேத்தியங்கள் என வகைப்படுத்திக்கொண்டு போனார்கள்.

இடையில் வாயில் குதப்பிய வெற்றிலையில் புகையிலைச்சாறு உறைக்காததனால் வெளியில் சென்று ஒரு முறை துப்பிவிட்டு வந்தமர்ந்தார் பூசாரியார்.

பட்டுத் துணிக்கட்டினை எடுத்த பூசாரியார் அவற்றைப் பக்குவமாகப் பிரித்தார். அதில் சிவப்பு பட்டொன்றில் கரப்பான் பூச்சியினால் அரிக்கப்பட்ட இடம் இரண்டு ரூபாய் நாணயக்குற்றியின் அளவில் வட்டவடிவமான துவாரமாக இருந்து. அதை உயர்த்திப்பிடித்தபோது பூசாரியின் கண்ணும் தலைவரின் கண்ணும் அந்த துவாரத்தின் வழியாகச் சந்தித்து:க்கொண்டன.

தூரத்தில் அன்றைய பூசைக்கான பிரதான பட்டு எடுக்கப்போவதற்காக மேளகாரர் தனது மேளத்திற்குரிய பட்டிகளை இறுக்கிக் கொண்டிருந்தார். நாதஸ்வரக்காரர் தனது சுருதியை பரீட்சித்துப் பார்க்கிறார்.

மாரியம்மன் உற்சவம் ஊருக்கெல்லாம் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கை உண்டு, இறுதிநாளில் குளிர்த்தி பாடி தீர்த்தம் ஆடி நீராகாரம் உண்டு மக்கள் கலைந்து செல்வது வழக்கம்.

பூசையில் கலந்து கொள்பவர்களும் அச்சடங்குகளை நடத்துபவர்களும் பிழைவிட்டால், மாரி ஊருக்கெல்லாம் முத்தெறிவாள் என்னும் ஐதிகமும் கிராமங்களில் உள்ளது.

– பட்டு அரிக்கப்பட்டு இருந்ததை தலைவரும், பூசாரியும், கணக்குப்பிள்ளையும் மட்டும் கண்டிருந்தால் சமாளித்திருப்பார்கள். தெய்வம் ஆடுபவரும் கண்டதனால்தான் புதிய பட்டு உடனடியாகக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் எற்பட்டது.

பூசாரி தலைவரையும், தலைவர் கணக்குப்பிள்ளையையும் பார்த்தனர். அன்று வெள்ளிக்கிழமை கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. முப்பது கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றால்தான் இரண்டு மணித்தியாலத்திற்கு பின்னாவது பட்டினைக் கொண்டுவர முடியும், மேளகாரர்கள் பிரதான பட்டெடுத்துவர ஆயத்தமாகிவிட்டனர். “நான் பூசைக்கு முன் பட்டோடு வருகிறேன்” எனக் கூறிக் கொண்டு கணக்குப்பிள்ளை எழுந்து சென்றார்.

கணக்குப்பிள்ளை நிச்சயமாக வரமாட்டார் என்று தலைவருக்குத் தெரியும், பெரிய பட்டு மேளதாளத்துடன் வந்து விட்டது. அபிசேகம் முடிந்து பெரிய பட்டும் சாத்தப்பட்டு விட்டது.

தெய்வம் ஆடுபவர் தலையில் தண்ணீர் வார்ப்பதற்கு முன் தலைவர் அவரை அழைத்தார், ஆட்டுக்காரர் அக்கறையோடு தலைவருக்கு மரியாதை செலுத்தி அமைதியாக நின்றார். *கணக்காளர் வரநேரம் போகும் போல கிடக்கு, சனத்த மினக்கெடுத்த இயலாது, அம்மனுக்கு அபிசேகம் முடிந்தவுடன் பூசையை உடனடியாக வைக்க வேண்டும்.

அம்மனுக்கு செலவளிச்சா என்ன? உனக்கு தந்தா என்ன நீதானே அம்மனுக்கு ஆடப்போறா, நல்லாச் சொல்லாட்டி, நாளைக்கு சனம் வராட்டிக் கரச்சலாப் போகும். உனக்கு கனக்கச் சொல்லத் தேவையில்லை. இந்தாபிடி, நூறு ரூபாய். பட்டுத்துண்டு அந்த விலதான்” என்று சொல்லி சுருட்டப்பட்டிருந்த நோட்டினை யாருக்கும் தெரியாமல் ஆட்டுக்காரனிடம் கொடுத்துவிட்டார்.

உடுக்கு அடிக்கிற சத்தம் கேட்டு நிம்மதி அடைந்த கணக்குப்பிள்ளையார் கோயிலுக்கு நாலு வீடு தள்ளி அவருடைய பெரியம் மாவின் வீட்டில் சாய்மனையில் படுத்தபடி காலாட்டிக்கொண்டிருந்தார்.

பூசாரியார் சொல்லிக் கொடுத்த அந்த மந்திரத்தை முணுமுணுத்துப் பார்த்தார் கணக்குப்பிள்ளை, முழுவதும் ஞாபகத்திற்கு வரும் முன், பெரியம்மா, வீட்டின் பின்புறமாக அலறுவதும் நாய் குரைப்பதும் கேட்டது.

ஓடிச் சென்றார் கணக்கர். அதற்குள் விரும்பிய படி பெரியம்மாவிற்கு நாய் கடித்துவிட்டது. நாயினுடைய வாயில் இருந்து பெரியம்மாவின் கையை இழுத்து எடுத்தார். நாய் ஒரு பக்கம், கணக்கர் ஒரு பக்கம், பெரியம்மா நடுவினில் இழுத்த காட்சி சகிக்க இயலாது, ஆத்திரத்திலும், அந்தரத்திலும் மந்திரத்தைச் சொல்லிப்பார்த்தார் கணக்கர்.

காதா கதுவறையா காதுவெள்ளை
செம்மறையா கொக்கு நிறத்தானே
…. அலகு திறவாதே…..

என உரத்துச் சொல்லாமல் மௌனமாகக் கூறிப்பார்த்தார். அதற்குள் நன்றாகச் சப்பிவிட்ட திருப்தியில் ஓடாமல் கணக்கருக்கும் இலக்குப் பார்ப்பது போல் நின்றது. அந்தநாய்.

5 பெரியம்மாவைக் தூக்கிக்கொண்டு வீதிக்கு ஓடினார். கணக்கர். கோயிலுக்கு வந்திருந்த ஓட்டோவில் வைத்தியசாலைக்கு அவர்கள் விரைந்தனர்.

அன்று நூறு ரூபாய் கிடைத்த சந்தோசத்தில் தெய்வம் நன்றாகத் தலை சுற்றி ஆடியது. அம்மன் சந்தோசமாக எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டது. அது மலையேறியவுடன் காவல் காரன் வெளிப்பட்டான்.

ஊர்காவல் பண்ணவேண்டும் என்று தெய்வம் கூறியதும் காத்திருந்த இளைஞர்கள் சந்தோசத்துடன் வீதிக்கு வந்தனர். வேம்பம் பத்திரத்தை உருவி எறிந்து ஹா.. ஹ.. எனக்கூறி கூய்… என நீண்ட கீர்ச்சிட்ட ஓசை எழுப்பி தெய்வம் பாய்ந்து பாய்ந்து வீதியில் வேகமாக ஆடிச்சென்றது.

தெய்வத்தின் முன்னால் சென்ற இளைஞர்கள் எதிரே வந்த ஓட்டோவை ஓரமாக நிறுத்தச் சொன்னபோது அதனுள் இருந்த கணக்குப்பிள்ளையை அவர்கள் கண்டு ஆத்திரப்பட்டு என்ன நடந்தது என்று கவலையுடன் கேட்டனர்.

“அதெல்லாம் விபரமாகப் பிறகு சொல்றன். ஊர் காவல் முடிந்து வாருங்கள்”. என எல்லோரையும் அவர் அமைதிப்படுத்தினார்.

அவரை இரத்தம் தோய்ந்தபடி கண்ட ஆட்டுக்காரர் “இரத்தவாடை வீசுது நரபலி கேட்குது சாமி” எனப்பாய்ந்து: வந்தார். அவர் கணக்கருக்குக் கட்டுச் சொல்வதற்கு முன்,

“குரு நாட்டுப் பித்தனே ஐயர் கோவிப்பார் அலகு திறவாதே நசீ” என உரத்துக் கத்தினார் கணக்குப்பிள்ளை . தெய்வம் ஆடுபவர் “ஹா..ஹா..” என இரைந்துவிட்டு ஓடிச் சென்றார். சனங்கள் யாவரும் கடந்து சென்ற பின் பெரியம்மாவின் வீடு நோக்கி ஓட்டோ சென்றது.

ஊர்காவல் முடிந்து வாழிபாடி முடிந்தவுடன், ஓட்டோ சாரதியின் மூலம் செய்தி கேட்ட பின்பு தான் கோயிலடியில் அமைதி நிலவியது. பெரியம்மாவின் வீட்டார் சடங்குகள் முடிந்த பின் வீட்டுக்கு வந்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தநாள் நித்திரை விட்டெழுந்த பெரியம்மாவிற்கும் கணக்குப்பிள்ளைக்கும் உண்மை தெரிய வந்த பின்னர்தான் நிம்மதி அடைந்தனர்.

பெரியம்மா, பெரியப்பாவிற்கு காலையில் குளிப்பதற்காக தண்ணீர் சுட வைப்பதற்காக அடி மட்டை உரிமட்டை ஆகியன எடுத்துவர வீட்டின் பின்னால் போய் வழக்கமான இடத்தில் கைவைத்த போதுதான் நாய் கடிக்கத் தொடங்கியது.

தங்களுடைய நாய் அதே இடத்தில் குட்டிபோட்டுப் படுத்திருந்தது பெரியம்மாவிற்குத் தெரியும் அதுவும் பெரியம்மாவை மட்டும்தான் கிட்ட வர அனுமதித்திருந்தது.

பெரியம்மாவின் பக்கத்து வீட்டிலும் ஒரு நாய் குட்டி போட்டு இருந்தது. அந்த வீட்டார் எதிர் காலத்தில் நாய்கள் தொல்லையைத் தவிர்ப்பதற்காகக் தாயிடம் இருந்த குட்டிகளை பிரித்துவிட்டனர்.

அந்த நாய் அந்தரத்தில் குட்டிகளைத் தேடித் தேடி பால் வேதனையோடு அலைந்து திரிந்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் பெரியம்மா, பெரியப்பாவோடு கோயிலுக்குப் போகும் அவர்களுடைய நாய் உடுக்குச் சத்தம் கேட்டதும் வெளியில் வந்திருக்கின்றது. குட்டிகளின் தொல்லையில் இருந்து சற்று ஓய்வெடுக்க விரும்பி வீதியில் உலாத்தியபடி கோயில் புதினங்களுக்கு காது கொடுத்துக் கொண்டிருந்திருக்கின்றது.

அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு நாய் இரவல் குட்டிகள் என தெரிந்திருந்தும் பெரியம்மா வீட்டு நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்திருக்கின்றது. அந்த வேளையில்தான் பெரியம்மா அடுத்த வீட்டு நாயினைச் சந்தித்திருக்கின்றார்.

விசர்நாய் இல்லை என்பதால் மட்டும் ஓரளவு திருப்தி என்றாலும் நீண்டநாள் ஓய்வில் இருந்தால் மட்டுமே பெரியம்மா நல்லா வருவார். கன்னிமார் பூசையும் முடிந்துவிட்டது. அடுத்தநாள் காலை கும்பம் சொரிதலுடன் ஆண்டுச் சடங்கு முடியவுள்ளது.

எல்லோருமே அவசர அவசரமாக இயங்கினர் கணக்குப்பிள்ளை நேர்த்திக்கடன்களை கணக்கு வைத்துப் பாரம் எடுத்துக்கொண்டிருந்தார். ஊரெல்லாம் கூடி பள்ளயப் பூசைக்கான நைய்வேத்தியங்களை தயாரித்துக்கொண்டிருந்தனர்.

கணக்குப்பிள்ளையின் காதுக்குள் தெய்வம் ஆடுபவர் குசு குசுத்தார் – நேற்றைய உங்க மந்திரத்தில கட்டுப்பட்டு ஓடிப்போகல்ல. இன்டைக்குக் கதைப்பம் எண்டுதான் இருந்த நான், உங்கட தலையத்தான் இங்க காணல்ல, இரவு உரிச்சுக் கொண்டந்த ஆட்டுக்கிடாவிலே எங்கட பங்கு பத்திரமா இருக்குமென்று நம்புறன்” என்றார்.

பூசாரியார் கணக்குப்பிள்ளைப் பார்த்து கள்ளச்சிரிப்பொன்று சிரித்தார். மெலிந்த பெரியம்மா இரத்தத்தில் தோய்ந்து இருந்தது, தன்னுடைய வேட்டி சால்வையெல்லாம் இரத்தம் தோய்ந்திருந்தது, ஆகியவற்றைப் பார்க்க காவல்காரனுக்கு ஆடியவனுக்கு ஆட்டுக்கிடா உரிச்ச காட்சி தெரிந்திருக்குப் போல” என்று கணக்குப்பிள்ளை நினைத்தார்.

பெரியம்மாவிற்கு நாய்க்கடி வேதனை, பக்கத்துவீட்டு நாய்க்கு பால் வேதனை, கணக்குப்பிள்ளைக்கு தலைவேதனை, நேத்திக்கடன் கணக்கெல்லாம் முடித்துவிட்டு அன்றிரவு பதினொரு மணியளவில் தெய்வமாடுபவர்களைப் பார்ப்பதற்கு கணக்கர் போனர். ஆட்டுக்காரன் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.

விடிந்தால் ஒழிவுச்சடங்கு முடிந்துவிடும். தெய்வமாடுபவரைத் திருப்திப்படுத்தாவிட்டால் காலையில் சடங்கு தொடங்காது போய்விடலாம். எதற்கும் முதலில் அவனுடைய விடயத்தைப் பார்த்து விட்டு பிற்பகலில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லலாம் என நினைத்த கணக்கர் ஆட்டிறைச்சிக்கான வழியை ஆராய்ந்து கொண்டிருந்தார். கணக்கர் சற்று அயர்ந்த போது கனாக்கண்டார். கனவிலே தான் கட்டியிருந்த ஆட்டுக் கடாவிற்கு தலைவர் குழை போட்டுக்கொண்டிருந்தார்.

நேர்த்திக் கடனுக்கு வந்த ஆட்டுக் கடா ஒன்று அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. என்று கணக்குப் பிள்ளையின் கணக்குப் பதிவுகள் ஒரு வாரத்தின் பின்னர் கோயில் நிருவாக சபைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *