கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2024
பார்வையிட்டோர்: 2,296 
 
 

(1967ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொறி ஒன்று | பொறி இரண்டு | பொறி மூன்று

ரசனைக்கு விருந்து 

ஒரே ரகப் பொருள்களைத் தொகுத்து மகிழும் ரசிக உள்ளம் பல ரகங்களையும் ஒன்று கூட்டி ஆனந்தம் அடையவும் அவாவுகிறது. அதன் தூண்டுதலால் கிடைக்கும் விளைவுகளில் விசேஷக் கவர்ச்சியும், தனிச் சுவையும், அலாதி மணமும் அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. 

பல ரக மலர்களைக் கொண்ட கதம்பம் தனிச் சிறப்பு உடையதுதானே? கலவைச் சந்தனத்தில் விசேஷ மணம் இல்லை என்று சொல்ல முடியுமா? அவியலிலும், கூட்டாஞ்சோற்றிலும், ‘மிக்ஸ்ச’ரிலும் தனிச் சுவை இருப்பதனால்தானே நாவும் மனமும் அவற்றை மீண்டும் மீண்டும் நாடுகின்றன? 

ரசிக உள்ளத்தின் இத்தகைய தூண்டுதல் தான் தொடர்கதையிலும் கதம்ப உத்தியைக் கையாளும் ஆசையை வளர்த்திருக்க வேண்டும். ஒரு சில முறைகள் வெற்றி கண்ட பிறகு, அதுவே விசேஷ மரபு ஆக வந்தாலும் வந்துவிடலாம்! 

நண்பர் ‘பூவை’ அவர்களின் முயற்சியால் உருவாகும் ‘ஆடும் தீபத்தில், முதல் சுடர் ஏற்றும் பொறுப்பை அன்பர் ‘வாசவன்’ அவர்கள் சிறப்பாகச் செய்துவிட்டார். சுடர் சுடரைக் கொளுத்துகிறது. தீபம் தீப வரிசைக்கு ஒளிதருகிறது. தீப வரிசையில் ஒரே ரக விளக்குகள் இருப்பதைவிட வர்ண மாறுபாடுகள் இருந்தால், அழகாக இருக் கும் என்று ஆசைப்படும் ரசிக உள்ளம் வர்ணத் தாள்களைச் சுற்றி வைத்து மகிழ்கிறது. 

‘ஆடும் தீபம்’ வளர வளர அவ்வித வர்ண விஸ்தாரங்களைப் பெறுவதும் சாத்தியமே. விதம் விதமான மனோபாவமும், வெவ்வேறு ரக நடையும் கொண்டவர்கள் அமைக்கும் கோலம் எதிர்பாராத புதுமைகளை ஏற்கலாமன்றோ? எது எவ்வாறாயினும், கெட்டுப் போகாத கன்னியாக மாங்குடியை விட்டு வெளியேற திரு.வாசவன் வழிகாட்டிய அல்லியை நல்லவளாகப் பட்டணம் கொண்டு வந்து சேர்த்து விட்டேன். இனி அவள் என்ன ஆவாள் என்பதை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர் பார்க்க வேண்டியவன் ஆகிவிட்டேன். அவள் கதியை நண்பர் ‘பூவை’ தான் அறிவாரா? 

வல்லிக்கண்ணன் 

பொறி இரண்டு

பட்டணம் வந்த நாட்டுப் புறா! 

அல்லியின் உடல் நடுங்கியது.பயம் என்பதை அறியாமல் வளர்ந்தவள் அவள். ஆனால் இப்பொழுது அவள் பயத்தால் விதிர் விதிர்த்தாள். 

“எந்த ராத்திரியிலும் எங்கு வேண்டுமானாலும் போவேன். பயம் என்னடி, பயம்? நான் யாருக்காக அல்லது எதுக்காகப் பயப்படவேண்டும்?” என்று கேட்கும் துணிச்சல் அவளுக்கிருந்தது. அது முன்பு. அவளுடைய சிநேகிதி செந்தாமரையிடம்தான் அல்லி அப்படிக் கேட்டாள். “முன்னிரவிலும், அதிகாலையிலும் குளத்துப் பக்கமெல்லாம் போகிறாயா? தனியாகப் போய்வர உனக்குப் பயம் இல்லையா?” என்று தோழி கேட்டபோதுதான் அல்லி அவ்வாறு பேசினாள். 

”அர்த்த ராத்திரியில் சுடுகாட்டுக்கு வேண்டுமானாலும் போய் வருவேன், பேய் பிசாசைக் கண்டால்கூட நான் பயப்பட மாட்டேன்!” என்றும் அவள் சொன்னாள். 

அதே அல்லி ஊரை எண்ணிப் பயப்பட நேர்ந்தது. அவளைப் பொறுத்தவரை, சுடுகாட்டைவிட மாங்குடி மோசமாகிவிட்டது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவளும், அவள் வாழ்ந்து பெரியவளாக ஊக்கமும் நம்பிக்கையும் அளித்த பெரியவரும் அந்நியராகி விட்டார்கள். அவளுக்கு இனி அவர்கள் செத்தவர்களே! அதனால் அவள் தன் தனிமையை, அபலைத் தன்மையை, அனாதை நிலையை மிக அதிகமாக உணர்ந்தாள். அன்பு வறண்டுவிட்ட அந்த ஊர் திடீரென்று நம்பிக்கையையும் வறள வடித்து விட்டது. அச்சத்தை விதைத்தது. யாரும் அறியாதபடி இரவோடு இரவாகத் தப்பிவிடலாம் என்று துணிந்து வெளியேறினாள். 

அவள் எண்ணம் எவ்வளவு தவறானது! இருட்டிலே பூனையும் ஆந்தையும் விழித்திருந்து அனைத்தையும் கவனிக்க முடிவது போல, இரண்டு பேர் அவள் செயல்களைக் கவனித்திருக்கிறார்களே; அவளறியாமல் அவளைத் தொடர்ந்து வந்து பிடித்தும் விட்டார்களே! 

அல்லியின் உடல் பயத்தால் மீண்டும் குலுங்கியது. அவள் பாம்புக்கும் கொடிய விலங்குக்கும் பயப்பட மாட்டாள். பேய் பிசாசுக்கும் பயப்படமாட்டாள்தான். ஆனால் இப்போது மனிதரைக் கண்டு பயப்பட்டாள். 

மனிதர்களா அவர்கள்? வெறிபிடித்த மிருகங்கள்!…இல்லை. அவற்றிலும் கேவலமானவர்கள்! 

பெண் இனத்தை வசீகரிக்க-மோகம் எழுப்ப – ஆண் மிருகங்கள் சண்டையிடக்கூடும். இவர்களோ? துணையற்ற – அவர்களிடம் அன்பு காட்டும் மனமற்ற பேதைப் பெண்ணின் இளம் உடலை ருசிக்கும் உரிமைக்காக ஒருவரை ஒருவர் முறைத்தார்கள். எரித்து விடுவது போல் வெறித்துப் பார்த்தார்கள். உறுமினார்கள். 

ஒளித்திருநாளாம்! எங்கெங்கும் விளக்குகளாம்! ஊராரின் மனசிலே ஒளி இல்லையே! மனிதரின் உள்ளத்தில் இருள் தானே மண்டிக்கிடக்கிறது! தன்னந் தனியளாகிவிட்ட ஒற்றைப் பெண் பயப்படாமல் என்ன செய்ய இயலும்? 

“டேய்… இன்னாசி!”

“அவள் கையை விடுடா, கழுதை” 

”சீ நாயே! இந்தா, இதை வாங்கிக்கொள்!” 

மிருகங்களாக மாறிக் கொண்டிருந்தவர்கள் பேச்சு நிலை கடந்து, செயல்நிலையை அடைந்தார்கள். சாத்தையா எட்டி உதைத்தான். இன்னாசி காறித் துப்பினான். 

அல்லி திண்டாடித் தவித்தாள். 

”ஓ. இவ்வளவுக்கு ஆயிட்டுதா?” என்று சாத்தையா சொல்லை எறிந்தான் முதலில். முஷ்டியை வீசினான் தொடர்ந்து. 

இன்னாசியின் முகம் பூரிமாவு அல்ல, குத்துகிற குத்தை யெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொள்ள, அவன் மூக்கு, நசுங்கியது. வேதனை தந்தது. இடது கண் ‘கிண்’ணென்று வலித்தது. வெளிப்படையாகப்பட்ட அந்தக் குத்து அவன் உள்ளத்திலும் பலமாகப்பட்டு ஆங்காரத்தை எழுப்பியது. 

“சிங்கப்பூர் காசு உனக்குத் திமிர் ஏற்றிவிட்டதோ? ஓகோ, என்னிடம் வாலாட்டாதே தம்பி ஒட்ட நறுக்கிவிடுவேன்!” என்று சொல்லி, பதில் குத்து விட்டான் இன்னாசி. 

அழகியை முன் நிறுத்தி அசுரர்கள்தான் போராடுவர் என்பதில்லை. மனிதர்களும் அசுரர்களாக முடியும் என்று அவர்கள் நிரூபிக்கலானார்கள். 

இன்னாசியையும் சாத்தையாவையும் சுந்த, உப சுந்தராக்கிவிட்டு, திலோத்தமை மாதிரி வேடிக்கை பார்த்து மகிழும் மனம் அல்லிக்கு இல்லை. அவள் தப்பி ஓடுவதற்கு வாய்ப்புக்கிட்டாதா என்று காத்து நின்றாள். 

தன்மானமும் தணியாத வெறியும் அவ்விரு வாலிபர்களைத் தனித்தவர்களாக்கின. அவளை அவர்கள் பிடியிலிருந்து விலக்கி ஒதுக்கின. 

இன்னாசி இன்னாசியாக இல்லை. வஞ்சிக்கப்பட்ட பசிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் புலியாகிச் சுழன்றான். சாத்தையா வெறும் சாத்தையாவாக இல்லை. அவமதிக்கப்பட்ட ‘தான்’ என்னும் அகந்தையும் பணக் கொழுப்பும் அவனைப் பழிதீர்க்கும் ரத்தவெறியனாக மாற்றின. யார் கொலைக் கருவியை முதலில் எடுத்தது; யார் முதலில் குத்தியது என்று யாருக்கும் தெரியாது. அல்லிக்குக்கூடத் தெரியாது. அனைத்துக்கும் மௌன சாட்சியாக நின்ற அம்புலிக்கும் தெரியாது. அவ்வேளையில் தான் அது கருமேகத்துள் சிக்கித்திணற நேரிட்டிருந்தது. பிறகு வெண் முகத்தை அதுவெளியே நீட்டி நோக்கியபோது. இன்னாசியின் கத்தி சாத்தையாவின் விலாவில் குத்தியிருந்தது. சாத்தையாவின் வேல்கம்பு இன்னாசியின் வயிற்றில் புகுந்து நின்றது. இருவரும் ஒரே ரகம் என்பதைப் பொங்கிப் பிரவகித்த ரத்தம் செம்மையாய் எடுத்துக் காட்டியது. 

அவளை மறந்து, சூழ்நிலை மறந்து, ஒருவரை வீழ்த்திவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு இயங்கிய அவ்வெறியர்களின் நிலை என்னவாகும் என்று ஆராயும் ஆசை அல்லிக்குக் கிடையாது. தான் தப்பிவிட வேண்டும் என்று தவித்த அவள் மெதுவாக நகர்ந்தாள். மெல்ல மெல்ல, பின்னாடியே நடந்தாள். அனைத்தையும் அம்பலப்படுத்தும் பால் நிலவில் கார்மேகம் கருமை கலக்கி இருளைக் கொட்டிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத் திக் கொண்டாள். அவள் போக வேண்டிய வழியில் திரும்பி வேகமாக நடந்தாள். வெறித்தனம் அவள் எதிரிகளுக்கு வேலி கட்டிவிட்டது. அம்புலி அடிக்கடி இருள் மூடிப் போர்த்தி, அவளுக்குத் துணை செய்தது. சிறிது தூரம் சென்றதும், அல்லி ஓடத்துவங்கினாள். பையும் பணமும் அவளிடம் பத்திரமாக இருந்தன. அவ்வேளையிலும், அவள் தன் அதிர்ஷ்டத்தை எண்ணிச் சிறிது மகிழ்வு கொள்ளத் தவறவில்லை. 

அவளுக்குப் பின்னால் மாங்குடியின் மக்கள் கொளுத்திய சொக்கப்பனையின் ஒளிவீச்சு வானவெளியில் செஞ்சாயம் தடவியது. செம்புள்ளிகளும் கிருமிகளும் போல் கொள்ளித் துகள்கள் மிதந்து நெளிந்து, மேலே எவ்வின. அந்த அற்புத காட்சியைக் காணக் கண் இல்லை அவளுக்கு.இன்னாசியும் சாத்தையாவும் சண்டை போடுகிறார்களா,நிறுத்தி விட்டார்களாஎன்று கவனிக்க மனமுமில்லை. 

‘அவர்கள் தப்பித்துக்கொண்டு வராதிருக்கவேண்டுமே, கடவுளே’ என்ற பிரார்த்தனை இருந்தது அவள் உள்ளத்தில். மேடு பள்ளம் பாராமல், கல்மண் கவனியாமல், ஓடுவதற்குப் பலம் இருந்தது அவள் கால்களில். 

பாதை நீண்டது. இரண்டு மைல் நீளம் கடந்த வண்டிப் பாதை அவளுக்கு முடிவற்றது போல்தோன்றியது. ஓடி யும் ஓட முடியாத போது நடந்தும் -ஆனால், நிற்காமல் திரும்பிப்பார்க்காமல் – அவள் அதன் முடிவைக்காண முயன்றாள். 

இயற்கை தூங்குவதே இல்லை. அமைதி நிறைந்ததாக சொல்லப்படுகிற இரவின் சாமத்திலே கூடத் தூங்குவதில்லை. இப்பொழுது கண்ணுக்குப் புலனாகாத வண்டுகளின் இரைச்சல் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கோ ஒருமரத்தில் ஏதோ ஒரு பறவை, கண மயக்கத்தில் கீழே விழுந்தெழுந்து பின் சமாளித்துக் கொண்டது போல், இறக்கைகளைப் படபடவென அடித்தது.ஆந்தை அலறியது. 

அல்லி அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. பயத்தால் துடித்த அவள் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஏக்கமாய் வளர்ந்து, அவள் இயக்கத்துக்கு வேகம் அளித்தது. “பட்டணத்துக்குப் போகும் ரயில் கிடைக்குமோ கிடைக்காதோ? இப்ப மணி என்ன இருக்குமென்றே தெரியவில்லை. தெய்வமே ரயில் இன்னும் வந்திருக்கக் கூடாது!” என்று நினைத்தாள்; ஆசைப்பட்டாள். 

அல்லி ஏமாறவில்லை. ரயில் நிலையம் தூங்கி வழிந்து கொண்டுதான் இருந்தது. அல்லி அங்கேபோய் சேர்ந்த போது, ராத்திரி வண்டியைப் பிடிப்பதற்காக முன்பே ஆஜராகியிருந்தவர்களில் பலர் நீட்டி நிமிர்ந்தும், கால் கைகளை முடக்கியும், உட்கார்ந்த படியே மூட்டை முடிச் சுக்கள் மீது சாய்ந்தும் விதம் விதமான நிலைகளைச் சித்தரித்து விளங்கினர். அநேகர் கண்ணாம் பூச்சி விளையாடும் தூக்கத்தை விரட்ட வெற்றிலை சுவைத்தும் பீடி, சிகரெட் புகைத்தும், வம்பளந்தும் பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள். 

அல்லி ஒதுக்கமான ஓர் இடத்தில் இருளைப் போர்வையாகக் கொண்டு மறைந்திருந்தாள். இன்னாசியோ, சாத்தையாவோ, அல்லது மாங்குடியார் எவருமோ தன்னைத் தேடிவந்து விடக்கூடாதே என்ற அச்சம், கறையான் மாதிரி அவள் உள்ளத்தை அரித்தது. 

ஓடும் காலப்பூச்சி நிமிஷம் நிமிஷமாக அரித்து, மணியாய் கனத்து, மெதுவாக நகர்ந்து முன்னேறியது. ஸ்டேஷனில் விழிப்பு ஏற்பட ஆரம்பித்தது. விளக்குகள் ஒளி பெற்றன. மணி ஒலித்தது. மக்கள் எழுந்தனர்; பரபரப் புற்றனர். டிக்கட்டில் தேதி பொறிக்கும் இயந்திரம் ‘டொக்-டொக்’ என்று உறுமியது கூட இரவின் குரலில் கனமாய், கோரமாய் ஒலித்தது. ஒருவராய். இருவராய், பின் பலராய் முண்டிஅடித்து டிக்கட் வாங்க எல்லோரும் அவசரப்பட்டார்கள். 

அல்லியும் ‘பட்டணத்துக்கு’ ஒரு டிக்கட் வாங்கினாள். அதைப் பத்திரப்படுத்திக்கொண்டு பிளாட்பாரத்தை அடைந்தாள் – இருள் தேடிக்காத்திருப்பதற்காகத்தான். 

இருளரக்கனின் பயங்கரப் பெருமூச்சுப்போல தூரத்தில் லேசாகக்கேட்க ஆரம்பித்தது. முன்னேறி வந்துகொண்டிருந்த வண்டித் தொடரின் இரும்பு ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் கனமேற்று, வலுப்பெற்று பெரும் சிரிப்பாய். வேக இரைச்சலாய் வளர்ந்தது. தூரத்தை விழுங்கிவிட்டு, இன்னும் எவ்வளவோ தூரத்தை விழுங்க வேண்டிய துடிப்புடன்வந்த ரெயில் வண்டி சிரம பரிகாரமாகச் சற்றே நின்றது அந்தச் சிறு நிலையத்தில். 

சிலர் இறங்கினார்கள். இறங்கியவர்களைவிட அதிகமான பேர்கள் ஏறினார்கள், உள்ளே புகுந்து விட்டால் எப்படியும் இடம் பிடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு. நம்பிக்கைதானே மனிதர்கள் வாழ்ந்து அவதிப்படுவதற்குத் தெம்புதரும் ஜீவ சக்தியாகத் திகழ்கிறது! 

அல்லியும் ஒரு பெட்டிக்குள் ஏறிவிட்டாள். ஆழ்ந்த பெரு ஆழ்ந்தபெரு மூச்சுவிட்டு அசைய ஆரம்பித்த வண்டித்தொடர் நெடு மூச்சு விட்டபடி, காலத்தைக்கொல்லமுயன்று தூரத்தை மென்று துப்பிக்கொண்டு முன்னே, முன்னே ஓடியது. அல்லி இழந்த தைரியம் எங்கிருந்தோ, எப்படியோ வந்து அவள் உள்ளத்தில் புகுந்துவிட்டது. 

“ஒரு மாதிரியாகத்தப்பியாச்சு. இனிமேல் பயமில்லை!” என்று மூச்சுவிட்டாள் அவள். அவள் கண்கள் ரயில்  
வண்டியின் மங்கலான விளக்கொளியில் குறிப்பற்றுச் சுழலும் குருட்டு வண்டுகளாயின. அங்கு எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இருந்தார்கள். ஆனால் அவளுக்குத் தெரிந்தவர் ஒருவருமே இல்லை. இனம் தெரியாத முகங்களுக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்ற அவளுக்கு அதுவே ஒரு பலமாக இருந்தது. எண்ணத் தொடங்கினால் அதுவே பலவீனமாகவும் தோன்றியது. மனிதக் காட்டிலே திக்குத் தெரியாமல் திண்டாடும் இளம் மானாய் மிரளமிரள விழித்தாள் அவள். அந்த வண்டியில் மட்டும் தான் அவள் நிலை அப்படி என்பதில்லையே! ஊரிலும் உலகத்திலும் அல்லியின் அந்தஸ்து அதுதானே? தன்னையே – தனது தனித் தன்மையை – ஊருக்கு உணர்த்த முயன்று, தனக்கென இட மின்றி, தனக்குரிய இடம்தான் எதுவெனப் புரியாது தன்னந் தனியாகிவிட்ட அபலைதானே அவள். 

இறந்த கால வாழ்வுபற்றி இனி எண்ணுவதில்லை என்று தீர்மானித்தாள் அல்லி – கற்பலகையில் தவறாகவோ, சரியாகவோ போட்டிருந்த கணக்கை, எச்சிலைத் துப்பியோ அல்லது ஈரத்துணி தடவியோ அழித்துவிட்டுப் புதுக் கணக்குப்போட ஆசைப்படும் சிறுமிபோல. ஆனால் எதிர்காலம் அவளுக்காக என்ன வைத்துக்கொண்டு, எப்படிக் காத்திருந்தது என்பதை உணரத் துணைபுரியும் சிறு ஒளிக்கோடுகூட அவளது சித்த வெளியிலே மின் வெட்டவில்லை. 

நிகழ்காலம் ரெயில் தொடரின் வேகத்துக்கேற்ப ஓடிக் கொண்டிருந்தது. ரயில் வண்டியோ. கடமையைச் செய்; பலனைக் கருதாதே’ என்று உபதேசித்த கீதா சிரியனின் உண்மையான சீடன் போல் இயங்கியது.

வேறொரு சமயமாக இருந்தால், அல்லி,சாளரத்தின் வழியாக வெளியே பார்த்து அனைத்தையும் கவனித்திருப்பாள். பாதை நெடுகிலும் அலங்கோலமாய் நிற்கும் ரயில்வேக் கற்றாழை மீது ஒளியும் நிழலும் சித்தரித்த காட்சிகளையும் வெள்ளி நிலவில் குளிக்கும் இன்பத்தில் சொக்கிய சூழ்நிலையையும் வேடிக்கை பார்த்திருப்பாள். இப்போது அவளுக்கு அதிலெல்லாம் நாட்டம் இல்லை. ரயில் நின்றதையோ, கிளம்பியதையோ. ஸ்டேஷன்கள் வந்ததையோ, போனதையோ அவள் கவனிக்கவில்லை. 

இருப்பினும், மாயவரம், அவளுக்கும் – மற்றவர்களுக்கும் – எல்லோருக்கும் உணர்வு புகுத்தியவாறு வந்தது. இறங்கவேண்டியவர்கள் பரபரப்போடு எழுந்தார்கள். அவர்களைவிட அதிகமான பரபரப்புடன் ஏற வேண்டியவர்கள் எதிரிட்டார்கள். எப்படியோ ஏற வேண்டியவர்கள் ஏறியும், இறங்கவேண்டியவர்கள் இறங்கியும் ஆன பிறகுகூட வண்டி அசைவற்று நின்றது. எல்லோருக்கும் பொறுமை இருக்குமானால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காகவும், அமைதியாகவும், அழகாகவும் நிறைவுறும் என்பதை மனிதர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு ரயில்வே ஜங்ஷன்களே அருமையான உ உதாரணங்களாக அமையும். 

அத்தகைய பிரத்தியட்சப் பிரமாணங்களில் ஒன்றாகப் பணியாற்றிவிட்ட திருப்தியோடு விளங்கிய மாயவரத்தையும் பின்னுக்கு நிறுத்திவிட்டு முன்னேறியது சென்னை செல்லும் வண்டித்தொடர். அல்லி இருந்த பெட்டியில் பழைய முகங்கள் சில இருந்தன. புது முகங்கள் நிறையவே தென்பட்டன. 

விசாலப் பார்வையாய் சுழன்ற அவள் கண்களை, உறுத்தும் நோக்கினால் தொட்டன வேறு இரண்டு விழிகள். அப்பார்வையின் கூர்மை தாங்காத அல்லியின் கருவிழிகள் இமைத்திரை போர்த்தின. பின் சற்றே அதை நீக்கி அவனை ஆராய முயன்றன. 

அவளைப் பார்த்துவிட்டுத் தன் கண்களை விலக்கிய இளைஞனின் தோற்றமே அவனை ஒரு போக்கிரி என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தது. சிலிர்த்து நின்ற தலை முடியும், அரும்பு மீசையும், கனத்த புருவங்களுக்கு அடியில் சுழல் நெருப்புத் துண்டுகளாய் ஜொலித்த கண்களும், அவை வீசிய அலட்சிய நோக்கும், உதடுகளில் மின்னிய கோணல் சிரிப்பும் அவன் தொழிலுக்கு ஏற்ற படைகளாகவே விளங்கின; யாரும் தனக்கு நிகரில்லை என்று எண்ணும் அகங்காரத்தோடு, அந்தப்பெட்டியை – ஏன், ரயில்வேயையே விலைக்கு வாங்கிவிட்டவனைப் போன்ற ஒரு தோரணையோடு அவன் காணப்பட்டான். சக பிரயாணிகளின் சௌகரிய அசௌகரியங்களைப் பற்றிக் கவலை எதுவுமில்லாமல், அவர்கள் அனுமதியும் ஆமோதிப்பும் பெற வேண்டும் என்கிற அறிவிப்பை சட்டை செய்யாமல், அவன் பீடி புகைத்தபடி பெஞ்சு மீது வீற்றிருந்தான். 

‘மெய் வருத்தம் பாரார், யசி நோக்கார், கண்துஞ்சார்’ இனத்தைச் சேர்ந்த- கருமமே கண்ணான டிக்கட் பரிசோதகர் ஒருவர் அந்த நேரத்திலும் வந்து சேர்ந்தார். தூங்கியவர்கள் அருகே பலகையில் ‘டக் டக்’ என்று பென்சிலால் தட்டி தூக்கத்தை ஓட்டினார்.’டிக்கட், டிக்கட் ப்ளீஸ்’ என்று கேட்டும் விழித்திருப்போரிடம் பேசாமலே விரல்களை நீட்டியும், டிக்கட்டுகளை வாங்கி விளக்கொளியில் பார்த்து விட்டு, புரட்டி, பின்பக்கத்தில் பென்சிலால் கோணல் கோடுகள் கிறுக்கிக் கொடுத்தார். ஒவ்வொருவரும் அவசரமாகவோ. சாவதானமாகவோ அவரவர் டிக்கட்டைக் காட்டி, கிறுக்கல் பெற்றுத் திருப்தி அடைந்தார்கள். 

அலட்சிய பாவத்தோடு இருந்தவன் அசையாமலே காணப்பட்டான். பரிசோதகரின் விரல் அசைவைக் காணாதவன் போலிருந்தான். ‘டிக்கட்’ என்ற ஒலியைக் கேளாதவன் போல் பாவித்த அவனை நெருங்கி நின்று, ‘டிக்கட்டை எடய்யா!’ என்று சற்று அதட்டலாகக் கேட்டார், அப்படிக் கேட்கும் உரிமை உடையவர். அவனோ அவரை எடை போடுவது போல் பார்த்தானே தவிர, எதுவும் பேசவில்லை. 

“ஏய், எந்த ஊருக்குப் போகிறே? டிக்கட் எங்கே?” அதிகாரக் குரல் கனமேற்று ஒலித்தது. 

”இல்லை!” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன். 

”ஏன் இல்லை? எங்கே போறதுக்காக வண்டி ஏறினே?”

“ஏனில்லை என்றால் எடுக்கவில்லை; அவ்வளவுதான்!” என்று நாடகத் தோரணையில் பேசினான் அவன். 

“ஏண்டா எடுக்கல்லே? இது என்ன உங்க அப்பன்வீட்டு ரயிலா?”

“யாரு அப்பன் வீட்டு ரயிலுமில்லை!” என்று முனகினான் அவன். 

“வீண் கதை எதற்கு? நீ எங்கே போகணும்?”

“மதராஸ்…”

பரிசோதகர் கணக்குப் பார்த்து ஒரு தொகையைக் குறிப்பிட்டார். ‘உம்; பணத்தை எடு!’ என்று கட்டளையிட்டார். 

“என்னிடம் பணமிருந்தால் நான் டிக்கட்டே எடுத்திருப்பேனே? உங்களிடம் தெண்டம் அழணுமிங்கிற ஆசையா என்ன, மடியிலே பணம் வைத்துக் கொண்டு சும்மா வர!” என் று கெண்டையாகப் பேசி, ‘வில்லன்’ சிரிப்பு சிரித்தான் அவன். 

“வக்கத்த பயலுக்கு வாயைப் பாரேன்!” என்று அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்தார் பரிசோதகர்.

“துரைகளுக்கு ஸீட் வேறே! ஜம்னு உட்கார்ந்து விட்டார்………சீ, எழுந்திரு!” என்று சொல்லி அவன் கழுத்திலே கைவைத்தார். 

“என்மேலே கை போடாதே, ஸார்!” என்ற முறைப்பு அவனிடமிருந்து பிறந்தது. 

அவனை அடிக்க மீண்டும் கை ஓங்கினார் பரிசோதகர். அவர் எதிர்பாராத காரியம் ஒன்று நிகழ்ந்தது. அவன் எதிர்பார்த்திராதது அது. யாருமே எதிர்பார்க்க முடியாததுங்கூட. 

“அவரை அடிக்க வேண்டாம். உங்களுக்குப் பணம் தானே வேண்டும்?” என்ற குரல் கணீரென ஒலித்தது. பரிசோதகரின் பார்வையை இழுத்தது. 

வியப்புடன் திரும்பிய அவர் திகைப்படைந்தார். போக்கிரியையும் பரிசோதகரையும் 

கவனித்தபடி இருந்து கவனம் கலையப்பெற்ற பிரயாணிகளும் திகைத்தார்கள். போக்கிரிகூட திகைத்துத்தான் நின்றான். 

பிறர் திகைப்பையோ, வேறெதையுமோ கவனிக்காமல், “இந்தாங்க!” என்றுபணத்தை நீட்டினாள் அல்லி. அவர் அவளை அதிசயமாகப் பார்த்தார்.”ஏன் யோசிக்கிறீங்க? இதோ வாங்கிக்கொள்ளுங்கள்”, என்று அல்லி மீண்டும் சொன்னாள். 

அவர் பணத்தைப் பெற்று, ரசீது எழுதிக் கிழித்துக் கொடுத்து விட்டு நகர்ந்தார். அவனையும் அவளையும் ஒரு தினுசாகப் பார்த்து விட்டுத்தான் நகர்ந்தார். பிறகு மறுபெட்டிக்குத் தாவி மறைந்தார். 

பிரயாணிகள் பலரும் பலவிதமாகப் பேசலானார்கள்: 

‘அவனுக்கு வேண்டியவளாகத்தான் இருப்பாள்’; ‘அப்படித்தோணலே!’; ‘எவளாக இருந்தாலும்,பெயரெடுத்த வளாகத்தான் இருக்கவேணும். இல்லையென்றால் இவ்வளவு துணிவாக நடப்பாளா?; இவளுக்கு ஏனோ இவ்வளவு அக்கறை?’ 

ஒருவன் தனது பாரதி ஞானத்தை அம்பலப்படுத்திக் கொண்டான். 

“காதலொருவனைக் கைபிடித்தே; அவன் 
காரியம் யாவினும கைகொடுத்து, 
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!” 

என்று அலறினான் அவ்விளைஞன். 

‘அவளுக்கு வெட்கம் எதுவும் இல்லைபோலிருக்கு!’ என்று ஒரு பெரிய அம்மாள் அபிப்பிராயப்பட்டாள். 

‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்!’ என்றான் பாட்டைக் கதறியவன். 

தனது தனித்துவத்தினால் மாங்குடியில் விபரீதமான கருத்துக்களை விதைத்துப் பயிரிட்டு விட்டு ஓடிவந்த அல்லி, அதே பண்பினால் விதம் விதமான பேச்சுக்களை ஓடும் ரயிலிலே விளையச் செய்தாள். அவள் ஏன் அப்படிச் செய்தாள்? எண்ணமிட்டுச் செயல் புரியவில்லை அவள். அந்த நேரத்திய உணர்வு எதுவோ உந்தி விட்ட செயலாகத்தான் இருக்கமுடியும் அது. ஏன் அவள் அவ்விதம் செயலாற்றினாள் என்பதை அவளாலேயே விளக்க முடிந்திருக்காது. மனித உணர்ச்சியை இழந்து விடாத ஈர இதயம் இருந்தது அவளுக்கு. சமூகக் கொடுமைகளும், வாழ்க்கை வெயிலும், அனுபவ நெருப்புத் துண்டுகளும் அவ்வுணர்ச்சியை இன்னும் வறளடித்து விடவில்லை. மனித இயல்புடன் நடந்து கொண்ட அவள் செயலை மற்றவர்கள் தவருக மதித்தால் அதற்கு அவளா பொறுப்பு? 

“ரொம்ப நன்றி!” என்ற சொல் அவளருகே தெறித்தது. அவள் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நின்றான். புன்னகையோடு. 

“நீ செய்த உதவி சரியான காலத்தில் செய்த பெரிய உதவி!” என்றான். 

“இது என்ன பிரமாத உதவி?” என்று முனங்கினாள் அவள். 

“என் பெயர் அருணாசலம், நான் மதராஸ் போகிறேன். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் என்னிடம் பணமும் இல்லை. ஆகவே டிக்கட் எடுக்கவில்லை”. தனது செயலுக்கு விளக்கம் கொடுப்பவன் போலவும், தன்னை அறிமுகம் செய்து கொள்வது போலவும் பேசினான் அவன். 

“நீ எங்கே போகிறாய்……?”

“பட்டணத்துக்குத்தான்!”

“அங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்?”

“யாருமேயில்லை. எனக்கு எங்குமே யாருமில்லை!” என்றாள் அல்லி. 

“பின்னே அங்கு ஏன் போகிறாய்!”

“பிழைப்புத் தேடித்தான்..!”

“உனக்குப் பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா?”

அருணாசலம் இப்படிக் கேட்டதும் அல்லிக்குச் சிறு கோபம் வந்தது. “ஒரு பெண்ணுக்குத் தெரிய வேண்டிய வீட்டு வேலைகள் எல்லாம் எனக்குத் தெரியும்!” என்று வெடுக்கெனச் சொன்னாள் அவள். 

அவன் உதடுகளைச் சுளித்தான். ‘பிரயோசனமில்லை!’ என்பது போல் தலையை ஆட்டினான். “பட்டணத்திலே சுகமான பிழைப்பு கிடைப்பதற்கு ஆட்டமும் பாட்டும் தான் உதவி புரியும். வாயடியும் கையடியும் ஆணுக்குத் துணை நிற்கும்!” என்று அவன் சொன்னான். 

இதற்குள், அல்லிக்கு எதிர்ப்பெஞ்சில் அவன் இடம் பிடித்து உட்கார்ந்துவிட்டான். அவளுக்கு அவனைப் பிடித்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவன் மீது அவளுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அவளுடைய விருப்பு வெறுப்புகளை – பொதுவாக எவருடைய விருப்பு வெறுப்புகளையும் – பற்றி அக்கறை கொள்ளாது ரயில் வண்டி ஓடிக்கொண்டேயிருந்தது. 

பிரயாணிகளில் முக்கால் வாசிப்பேர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அநேகர் உட்கார்ந் படியே சாமி ஆடி விழுவதும் எழுவதுமாக இருந்தார்கள். விழித் திருந்தவர்கள் ஒரு சிலரே. 

அல்லியும் அருணாசலமும் தூங்கவில்லை. தங்களைப் பற்றியும், பொதுவாக வாழ்க்கையின். வஞ்சனைகள், உலகத்தின் பொல்லாத குணம், ஏமாந்தவர்கள்- ஏமாற்றுகிறவர்கள் பற்றியும் பேசினார்கள். எந்த ஊரிலும் ஒரு பெண் – அதிலும், அல்லியைப் போன்ற வசீகரமுடைய இளம் பெண் – தனிமையாக வாழ்வது ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதுபோல்தான் என்று அவன் அறிவித்தான. துணை இல்லாமல் தான் வாழ முயல்வது அபாயகரமானது என்றே அவள் உள்ளுணர்வும் கூறியது. ‘அதற்காக வழியோடு போன எவனையோ நம்பி விடுவதா?’ என்று அவளது மனக் குறளி ஐயவினா போட்டது. “நம்புவோம். நம்பினார் கெடுவதில்லை” என்றது அவள் அறிவு. 

ரயில் எழும்பூர் வந்து சேர்ந்தபோது அல்லியும் அருணாசலமும் வெவ்வேறு பெஞ்சுகளில் இருக்கவில்லை. பக்கத்தில் பக்கத்திலே காணப்பட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக இறங்கி, ஒன்றாகச் சேர்ந்தே நடந்தார்கள். 

ரெயில் எழுப்பூர் வந்து சேர்ந்ததும் அல்லிக்கு பிரமிப்பு அளித்தன. வெளியே வந்ததும், பெரிய ரஸ்தாவும், நாகரிக வாகனங்களும், பரபரப்பும், அவசரமயமான இயக்கமும் அவளைத் திகைப்புறுத்தின. தான் மட்டும் தனியளாய் வந்திருந்தால் திக்குமுக்காடித் தவிக்க நேரிட்டிருக்கும், நல்ல வேளையாக ஒரு துணை கிடைத்ததே என மகிழ்ந்தாள் அவள் அவளாகவே அவன் கையைப்பற்றிக் கொண்டாள். அவனோடு நெருங்கி நடந்தாள். 

“அருணாசலம், இந்த வண்டியிலேதான் வாரீயா?” என்று ஒருவன் கேள்வி எழுப்பவும், அவன் நின்றான். அவளும் நின்றாள். “இது யாரு?” என்று கேட்பதுபோல் அல்லி மீது பார்வை எறிந்தான். 

“என் அக்கா மகள்!” என்று கூசாது சொன்னான் அருணாசலம். 

அப்பொழுது தன் முகத்தில் படர்ந்த நாணச் சிவப்பை மறைப்பதற்காக அல்லி தன் முகத்தை மிகவும் தாழ்த்தி நின்றாள். 

“வாத்தியார் இந்த வண்டியில் வருவதாக எழுதியிருந்தார். அதுதான் நான்….”என ஆரம்பித்த மற்றவன், “அடேடே, அவங்க எல்லோருமே அதோ வந்து விட்டாங்களே!’ என்று கூறி முன் நகர்ந்தான் 

ஒரு கோஷ்டி ஸ்டேஷன் படிக்கட்டுகளை விட்டு இறங்கி நின்று சுற்றுமுற்றும் பார்த்தது. அதில் மிடுக்கான தோற்றமுடைய ஆண்களும், அலங்காரவல்லிகள் நான்கு பேரும் காணப்பட்டனர். அவர்களின் ‘வாத்தியார்’ ஆடம்பரமாகத்தான் தோன்றினார். 

“அவர்தான் நடன ஆசிரியர் ராஜநாயகம். அவருடைய நடன கோஷ்டிதான் இது. நம்மோடு பேசியவன் அவரது சீடர்களில் ஒருவன். கோபிநாதன். இவனும் ஆடுவான்.” என்று அருணாசலம் அல்லிக்கு அறிவித்தான். ”வா, நாமும் வாத்தியாருக்கு ஒரு கும்பிடு போட்டு வைக்கலாம்”. என்று சொல்லி, அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்றான் ”வணக்கம்” என்றான். 

புன்னகை பூத்தபடி, அவனைப் பார்த்தார் ராஜநாயகம். 

அவர் கண்கள் அல்லி மீது மேய்ந்தன. “உனக்குக் கல்யாணம் ஆகப் போவது பற்றி நமக்கு நீ சொல்லவே இல்லையே?” என்று கேட்டார். பெருங் கனைப்பைச் சிரிப்பு என வினியோகித்தார். 

‘’எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அண்ணா. இது என் அக்கா மகள் அல்லி” என்றான் அருணாசலம். அவள் முகம் மாதுளம் பூவாய் மீண்டும் சிவந்தது. அவள் மனம் அரித்தது. உள்ளத்தில் தெளிவற்ற கலவரம் சிறிது படர்ந்தது. 

“எல்லோரும் வண்டியிலே ஏறுங்க.” என்றார் வாத்தியார். அவரது பட்டாளம், அங்கு நின்ற ‘வேன்’ ஒன்றில் ஏறி இடம் பிடித்தது. “நீயும் ஏறப்பா அருணாசலம். அல்லியும் ஏறலாமே!” என்றார் அவர். 

அவர்களும் ஏறிக்கொண்டார்கள். வண்டி பறந்தது. அல்லிக்கு எல்லாமே புதுசாகவும், புதிராகவும் இருந்தன. குழப்பமும் கலக்கமும் எழுந்தன.’பட்டணம்’ ‘பட்டணம்’ என்று பெரிதாகக் கேள்விப்பட்டிருந்தாளே தவிர, அது இவ்வளவு பெரிதாக, பரபரப்பு மிக்கதாய், ஜன நெருக்கம் பெருத்ததாய், வேகமும் வேஷமும் நிறைந்ததாய் இருக்கும் என்று அவள் எண்ணியதேயில்லை. எண்ணியிருக்கவும் அவளால் முடியாது. 

அருணாசலம் அவளைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினான். அவளும் சிறுமி பொம்மைக்கடையைப்பார்த்து ரசிப்பது போல் எல்லாக் காட்சிகளையும் கண்டு களித்தாள். இவ்வளவு பெரிய பட்டணத்தில் எப்படி வாழ்வது, என்ன செய்து பிழைப்பது என்ற பிரச்னை ஏக்கமாய் கவலையாய் எழுந்து அவளை அச்சுறுத்தியது. தங்குவதற்கு நல்ல இடமும், சௌகரியமான வேலையும் கிடைப்பது வரை அவள் வேலை நடனக் கோஷ்டியின் ‘கலைக்கூட’த்திலேயே தங்கியிருக்கலாம் என்று வாத்தியார் அனுமதித்து விட்டார். 

“உங்களுக்கும் நடனம் ஆடத் தெரியுமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அல்லி – அருணாசலத்திடம், தனிமையில் தான். 

”ஊகுங்!” எனத் தலையசைத்தான் அவன். 

“பின்னே?”

“நான் வாத்தியாருக்கு ரொம்பவும் வேண்டியவன்”, என்றான் அவன். 

அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவளால் ‘ரொம்பவும் வேண்டியவன்’ என்றால் என்ன அர்த்தம்? அதுவும் அவளுக்குப் புரியவில்லை. ஆயினும் அவனிடம் அவள் விளக்கம் கோரவில்லை. 

“வந்து இரண்டு தினங்கள் தானே ஆகின்றன. புரிந்து கொள்ளாமலா போகப் போகிறோம்” என்று எண்ணினாள் அல்லி. ‘இந்தப் பெரிய இடத்தில் பலரோடு வாழ் வாய்ப்பு ஏற்பட்டதும் நல்லதுதான். திடீரென்று சந்தித்த ஒருவனோடு தனி இடத்தில் தங்க வேண்டும் என்றாள் தயக்கமாகவும் பயமாகவும்தான் இருக்கிறது’ என்று அவள் மனம் குறுகுறுத்தது. 

அப்பொழுது பிற்பகல். வெயிலின் கொடுமை பலரையும் கிறக்கிய நேரம். அல்லி ஓர் அறையில் தனியாகத்தான் இருந்தாள், அவள் மனம் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டேயிருந்தது. 

அப்பொழுது அறைக்கு வெளியே யாரோவந்து நின்றது போல் தோன்றியது. அருணாசலமாக இருக்கும் என எண்ணினாள் அல்லி. “யாரது? உள்ளே வரலாமே?” என்றாள். 

அழைப்பை ஏற்று உள்ளே வந்தது அருணாசலம் அல்ல; ‘வாத்தியார்’ ராஜநாயகம்! 

அவர் முகமெல்லாம் சிரிப்புப்பூத்துக் கிடந்தது. இதழ்கள் சிரித்தன. வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் பளிச்சிட்டன. கண்கள் சிரித்தன. 

படுக்கையில் சாய்ந்து கிடந்த அல்லி பதறி எழுந்தாள். ஆடையைச் சரிப்படுத்திக்கொண்டு ஒடுங்கி நின்றாள். 

‘வாத்தியார்’ அறைக்கதவைச் சாத்திவிட்டு அவளைப் பார்த்தார். சிரித்தார். ” என்ன அல்லி, எப்படி இருக்கிறே?” என்று கேட்டபடி முன்னே நகர்ந்தார்.

– தொடரும்…

– ஆடும் தீபம் (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1967, செல்வி பதிப்பகம், காரைக்குடி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *