நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத்தில் இருந்து புலி உறுமுவது போன்று தற்காலிகமாகக் காணாம்புற்களில் வேய்ந்த குடிசையில் இருந்து குறட்டை ஒலி. தூக்கம் காணாத முத்து அருளானந்தப்பிள்ளை, தனக்கு அருகில் புளித்த கள்ளின் போதையில்கிடக்கும் ஸ்மித்தைப் பார்த்தார். வெள்ளைக்காரனை அதட்ட முடியாத இயலாமையைத் தனக்குள் கடிந்துகொண்டே குடிசையில் இருந்து வெளியே வந்தார். ராமநாத சமஸ்தானத்துக் காவலர்கள் குடிசையின் முன் கணந்து எரியும் தீக்குலையைச் சுற்றி நின்றிருந்தனர். திவான் முத்து அருள்பிள்ளையைக் கண்டதும் தங்கள் வசம் இருந்த குழல் துப்பாக்கிகளை நெஞ்சோடு சாய்த்து விறைப்பாக நிற்கத் துவங்கினர். அவர் தன் கைகளைத் தீக்குலை அருகில் நீட்டிய பின் பணியாளரைப் பார்த்தார். அவன் புகையிலை மணமிக்க ஒரு சுருட்டை அவரின் கையில் வைத்தான். தீக்குலையில் இருந்து எரியும் ஒரு சுள்ளியை எடுத்து சுருட்டைப்பற்ற வைத்தபோது சுருட்டின் புகை அடர் பனியின் காரணமாக வேகமாகக் கரையாது நகர்ந்தது. ராமநாத சமஸ்தானம் எதிர்கொண்டு வரும் வறட்சியில் இருந்து அதனைக் காக்க திவான் இந்தத் தூக்கமின்மையையும் குளிரையும் பொறுத்துக்கொள்ளும் மனநிலையிலே இருந்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் ஸ்மித் நில அளவை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவன். அவனுடன் 12 பேர்கள் அந்தக் குடிலில் இருந்தார்கள். விரைவில் கிழக்கு நோக்கிக் கடலில் விழும் நதியைச் சமஸ்தானத்தை நோக்கித் திருப்புவதே அவர்களின் நில அளவையின் நோக்கம். இருள் வெளியில் இருந்து சில்வண்டுகளின் இரைச்சலுக்கு நடுவே வந்த அந்த ஒலி காற்றின் இரைச்சல் என்றே முத்து அருள்பிள்ளை கருதினார். பின் அந்த ஒலியின் அளவு அதிகரிக்கவே சுருட்டைத் தனது வாயில் இருந்து எடுத்து மற்றவர்களை உற்றுக்கேட்கச் சொன்னார். முத்து அருள்பிள்ளையின் கண்களில் அச்சம் குடிகொண்டு இருந்தது. காவலர்கள் அந்த ஒலி வந்த திசையைப் பார்த்தனர். சில்வண்டுகளின் ரீங்காரம் மட்டுப்படவே அவர்களுக்கு வெகு அருகில் தெளிவாகக் கேட்ட அந்த ஒலி ஒரு பெண்ணின் அழுகை.
காடு நடுங்க அந்த ஒலியின் ஏற்றம் அதிகரித்துப் பின் குறைந்தது. காவலர்கள் தங்களின் நடுங்கும் விரல்களில் துப்பாக்கிகளை இறுகப் பிடித்துக்கொண்டார்கள். குளிர்க்காற்று உய் என்று வீசியடித்தது. முத்து அருள்பிள்ளையின் கரங்களில் சுருட்டு நெருப்பு நடுங்கியது. தூரத்தில் அடர் நீல நிறத்தில் இருள் சூழ்ந்த வானம் இருந்தது. ஸ்மித்துடன் வந்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிச் சிப்பாய்களும் புளித்த கள்ளின் மயக்கத்தில் கிடந்தார்கள். அவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சிப்பாய் முத்து அருள்பிள்ளையின் உத்தரவுக்காக அவர் முகத்தைப் பார்த்தான். அவர் வேண்டாம் என்று தலையசைத்து, கேப்டன் ஸ்மித்தை எழுப்ப சைகை செய்தார். காவலன் சில நிமிடம் உலுக்கிய பின்பு ஸ்மித் எழுந்து குடிசைக்கு வெளியே வந்தான். போதை தெளியா நிலையில் தன் கனவில் நிகழ்வது போன்று அவன் கருதினான். ஒரு காவலன் கேப்டனிடம் தண்ணீர் குடுவையைக் கொடுத்தான். ஸ்மித் தன் முகத்தில் தண்ணீரை ஊற்றி அழுத்தித் தேய்த்துக்கொண்டபோது, அவன் குளிரை உணர்ந்தான். சில நிமிடங்களுக்குப் பின் அவன் காற்றில் இடைவிடாது வரும் அந்தப் பெண்ணின் அழுகையைக் கேட்டான். அருகில் பழங்குடிகளின் கிராமங்கள் எதுவும் இல்லை என அவனுக்கு நன்கு தெரியும். திவான் முகத்திலும் சமஸ்தானக் காவலர்களின் கண்களிலும் அவன் அச்சத்தின் நிழலைக் கண்டான். குடிசைக்குள் சென்றவன், முழுதாகப் போதை தெளியாத நிலையிலும் தன் வளைந்த தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்துகொண்டு, அந்தப் பெண்ணின் அழுகை வந்த திசையினை நோக்கி நடக்க முயன்றான். நடுங்கும் விரல்களால் முத்து அருள்பிள்ளை அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தார். அவன் அவரை உதறிவிட்டு, ஈரம் பாய்ந்த நிலத்தின் இருள்வெளியில் நடக்கத் துவங்கினான். காவலர்கள் இருவர் தீப்பந்தங்களை ஒரு கையிலும் மறு கையில் இரு குழல் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு ‘துரை’ என்று சத்தமிட்டபடியே அவன் பின்னே சென்றார்கள். அவர்களை அமைதியாக வர சைகை செய்தான் ஸ்மித். அவர்களின் பார்வையில் இருந்து தீக்குலையின் வெளிச்சம் மறைந்து போகும் வரை நடந்தார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு எட்டுவைத்த நடைக்கும் பின் அந்த அழுகையின் ஒலி நெருங்கிவரத் துவங்கியிருந்தது. அவர்கள் மேட்டுப் பகுதிக்கு வந்திருந்தனர். கீழே சரிந்த பகுதியில் அந்தச் சத்தம் வந்துகொண்டு இருந்தது. ஸ்மித் கீழே இறங்கினான். அது ஒரு சதுப்பு நிலம் போல சேறு நிறைந்த நீரோடை. அவன் பின்னே வந்த காவலர்களின் கால்கள் முட்டி வரை சேற்றில் புதைந்திருந்தன. அவர்கள் தங்கள் கால்களை இழுக்கப் போராடினர். ஸ்மித் ஒரு பாறையின் மீது நின்றிருந்தான். தாவிக் குதிக்கும் தூரத்தில் மற்றொரு பாறை இருந்தது. சேற்றில் சிக்கிய காவலன் ‘துரை’ என்றான். அவனின் கையில் இருந்த தீப்பந்தத்தைக் கேட்டான் ஸ்மித். காவலன் அதனைத் தரும்போது அவன் முகத்தைப் பார்த்தான், அவன் கண்கள் சிவந்திருந்தன. நெடிய அவனை இரக்கமற்ற நாய் என்று மனதுக்குள் திட்டினான் காவலன். தீப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டு அவன் பாறைகளில் தாவி நீரோடையின் அப்பால் சென்று மேட்டுப் பகுதியில் ஏறினான். காவலர்கள் அவனைப் பார்த்து ‘துரை சார் நில்லுங்க!’ என்று கத்தினர், தங்களின் கால்களை அசைக்க முடியாதபடி. ஸ்மித்தின் முன் மீண்டும் சரிந்த வெளி தென்பட்டது. அவன் அருகில் அந்தப் பெண்ணின் ஒலியைக் கேட்டான். சரிவில் அவன் சில நிமிடம் நடந்தான். இருபுறமும் புதர்ச் செடிகள் சூழ்ந்திருந்தன. காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. அவன் குளிரை உணர்ந்தான். பூச்சிகளின் இரைச்சலையும் தாண்டி விண் பூத்திருந்த வானத்துக்குக் கீழிருந்து வந்த அந்த அழுகை, தேம்பிப் பெருமூச்சுவிட்டுப் பின் தொடர்ந்தது. அவனின் முன்னே ஒரு மொட்டைப் பாறை வெளி தென்பட்டது. அதன் வெகு அருகில் அந்த அழுகையைக் கேட்டான். அவனின் தாடை வரை நீண்டு இருந்த கிருதாவில் இருந்து வியர்வையை உணர்ந்தான். அவன் கையிலிருந்த தீப்பந்தம் நடுங்கியது. தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தபோது, ஆடைகள் அற்று முதுகைக் காட்டி அமர்ந்திருந்தாள் ஒருத்தி.
தீப்பந்தத்தின் செம்மஞ்சள் வெளிச்சம் அவளின் முதுகில்பட்டு சுடர்ந்தது. ஸ்மித்தின் நாக்கு வறண்டு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. அவன் தன் இதயத்தின் அருகில் கையை வைத்துக்கொண்டு, அவளின் அருகில் நெருங்காது சற்றுத் தள்ளி அவள் முன் போய் தீப்பந்தத்தை உயர்த்திப் பார்த்தான். அடுத்த கணம், அவன் மண்டியிட்டு அவள் முன் அமர்ந்தான். தீப்பந்தத்தை பாறை இடுக்கில் நிற்க இறக்கினான். அவன் தன் தலையில் இருந்து தொப்பியைக் கழட்டி, தனது படபடக்கும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவனின் உதடுகள் நடுங்கின. அவளைச் சுற்றி ஆயிரக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் வட்டமடித்து ஒளித் திவலைகளால் ஒளியூட்டின. அலைபடிந்த கருத்த மயிரைத் தனது தலையில் இருந்து உடல் முழுவதும் வழியவிட்டிருந்ததால், அவளின் மெல்லிய உடல் எங்கும் மூன்றாம்படி ரோமங்கள் சூழ்ந்திருந்தன. கூர்மையற்ற மூக்கும், பருத்த உதடுகளும், எவராலும் மறக்க முடியாத அகண்ட விழிகளுடனும் இருந்த ஆதி கறுப்பினப் பெண் அவள். அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவளின் செழுமைமிக்க மதர்த்த மார்களை நனைத்திருந்தது. அவளைச் சுற்றி வியர்வையும் பூவின் நறுமணமும் இணைந்த வாசனை சூழ்ந்திருந்தது. ஸ்மித்தின் சிவந்த கண்களில் இருந்து நீர் பெருகியது. அவன் நெற்றி பாறையில்பட அவள் முன் வளைந்து சரிந்தான். அவள் அழுவதை நிறுத்தியிருந்தாள். வெகுநேர அழுகையின் உணர்வான அவளின் மூச்சிரைப்பு கேட்டுக்கொண்டே இருந்தது.
வெகு நேரத்துக்குப் பின் சமஸ்தானக் காவலர்கள் இருவரும் நீரோடையின் சதுப்புச் சேற்றில் இருந்து தங்களின் கால்களை வெளியே எடுத்துக்கொண்டு நீரோடைக்கு மேல் இருந்த மேட்டுப் பகுதி வரை வந்து ‘துரை… துரை’ என்று மிரட்சியுடன் சத்தமிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களின் நடுங்கும் கரங்களில் துப்பாக்கியைச் சுடுவதற்கு ஆயத்தமாகவே வைத்திருந்தனர். இருண்ட புதர் வெளிக்கு அப்பாலிருந்து ஸ்மித் வெளிப்பட்டான். நடையில் தளர்ச்சி இருந்தது. அவன் மிகவும் களைப்புற்றுக் காணப்பட்டான். அவன் தான் கையோடு கொண்டுசென்ற தீப்பந்தத்தை விட்டுவிட்டு வந்திருந்தான். ஸ்மித்தைக் கண்டதும் காவலர்கள் இருவரும் நிம்மதி அடைந்தனர். ஸ்மித் இருவரின் தோள்களிலும் சாய்ந்துகொண்டான். காவலர்கள் தங்களின் துப்பாக்கிகளை ஸ்மித் வந்த திசையினை நோக்கிச் சுட உயர்த்தினர். ஸ்மித் அவர்களைக் குடிசையினை நோக்கி நடக்க சைகை காட்டினான். அவர்கள் குடிசைக்கு அருகில் சென்ற போது, உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் அனைவருடனுடனும் முத்து அருள்பிள்ளை ஸ்மித்தைத் தேடி வந்துகொண்டு இருந்தார். அனைவரும் ஸ்மித்தைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்களை விலக்கி அவன் குடிசையின் முன் போய் எரியும் தீக்குலை முன் அமர்ந்தான். முத்து அருள்பிள்ளை நடந்ததை அறியப் பதறினார். ஸ்மித் எதுவும் பேசவில்லை.
சமஸ்தானக் காவலர்கள் இருவரும் தாங்கள் நீரோடையின் சதுப்புச் சேற்றில் மாட்டிக்கொண்டதைப் பயந்து சொல்லி முடித்தார்கள். அப்போது, காற்றினூடே மீண்டும் பெண்ணின் அழுகைச் சத்தம் திரும்பவும் கேட்கத் துவங்கியது. ஸ்மித் தனக்குக் கள் வேண்டும் என்று மட்டுமே பேசினான். துணி வேடுகட்டிய சிறிய பானையில் இருந்து ஒரு மண் சொப்பில் ஊற்றிக் கொடுத்தார்கள். நெடிமிக்க புளித்த கள்ளினை ஒரே மிடறில் அவன் குடித்து முடித்து, மண் சொப்பைத் தூர எறிந்தான். அது மண்ணில் விழுந்து உடைந்து நொறுங்கியது. பின் விம்மி விம்மி அழத் துவங்கினான். விடியும் வரை அவன் அங்கேயே உட்கார்ந்து அந்த அழுகையைக் கேட்டுக்கொண்டே இருந்தான்.
விடிந்த சமயம், தூக்கம் இன்றி அனைவரின் கண்களும் சிவந்திருந்தன. ஸ்மித், முத்து அருள்பிள்ளையிடம் சமஸ்தானத்து அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்றான். முத்து அருள்பிள்ளை, நில அளவை செய்துவிட்டுப் போகலாம் என்று சொல்லியபோது, ஸ்மித் அதனை மறுத்து அனைவரையும் கிளம்பச் சொன்னான். ராமநாதபுர சமஸ்தானத்துக்குத் தண்ணீர் கொண்டுவரும் முதல் முயற்சி தடைபடுவதை முத்து அருள்பிள்ளை வேதனையுடன் உள்வாங்கியபடியே சமஸ்தானத்தை நோக்கித் தன் குழுவினருடன் கிளம்பினார். ஆங்கிலேயனுக்குத் தன்னால் கட்டளையிட முடியாது என்பதை உணர்ந்து அமைதியடைந்தார். மூன்று நாள் பயணத்துக்குப் பின் குழுவினர் ராமநாதபுரம் வந்து சேர்ந்தனர்.
முத்து அருள்பிள்ளை, தங்களின் முயற்சி தோல்வி அடைந்ததை மன்னன் கிழவன் சேதுபதியிடம் விவரித்து முடித்திருந்தார். சமஸ்தானத்து மாந்திரீகவாதிகளை அடுத்த நாள் தர்பார் மண்டபத்தில் மன்னனும் ஸ்மித்தும் இருந்த சமயம் சந்தித்தார். ஸ்மித் வெகு நேரம் மௌனமாக இருந்தான். மந்திரீகவாதிகளில் ஒருவன் அந்த அழுகை ஒலி யட்சணியுடையதாக இருக்கலாம் என்றான். மற்றொருவன் மோகினியாக இருக்கும் என்றான். அவர்களின் கைகளில் வேப்பிலைக் கொத்துக்கள் இருந்தன. அவற்றை அவர்கள் ஸ்மித்தை நோக்கி நீட்டினர். ஸ்மித் திடீரென தன் உடையில் இருந்த கூரிய வாளை உருவி மாந்திரீகர்கள் முன் நீட்டினான். மாந்திரீகர்கள் நடுங்கி வேப்பிலையைக் கீழேவிட்டனர். மன்னன் திகைத்துப் போய் நின்றான்.
ஸ்மித்தின் கண்கள் சிவந்திருந்த நிலையில் கத்தினான், ”நான் வனத்தில் பார்த்தது பேயல்ல… பெண்!” அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.
”காடு அதிர அழும் ஓர் இளம் பெண்ணின் அழுகையை நிறுத்த முடிந்ததா மாந்திரீகர்களே உங்களால்…. ஓடிவிடுங்கள், இல்லாவிடில் வெட்டிச் சாய்த்துவிடுவேன்” என வாளை ஓங்கினான். மன்னனின் இசைவின்றியே மாந்திரீகர்கள் அங்கிருந்து ஓடித் தப்பினர். ஸ்மித் மன்னனின் அருகில் வந்து, ”நீங்களும் நாங்களும் மன்னர்களாக வாழ வேண்டி, நாம் உருவாக்கிய விதவைகளைப்பற்றி ஏதேனும் கணக்கு உள்ளதா உங்களிடம்?” என்றான், அமைதியாக கிழவன் சேதுபதியின் கண்களை உற்று நோக்கியபடியே.
மன்னன் சற்று அதிர்ச்சி அடைந்தான். கணக்குப் பார்த்தால் மன்னனாக வாழ முடியுமா? என்று எண்ணலானான். பின் தன் உதட்டை அழுத்தமாகப் பிதுக்கி இல்லை என்பதுபோலத் தலை அசைத்தார்.
”நான் அன்று வனத்தில் ஓர் இளம் பெண்ணைப் பார்த்தேன். பல நூற்றாண்டுகளாக அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். காணாமல் போன அவள் கணவனைக் கேட்டு அழுகிறாள். நீயும் உன் மூதாதையரும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அவள் கணவனை எரித்தீர்களா? அல்லது புதைத்தீர்களா? எரித்திருந்தால் சாம்பலைக் கொடுத்துவிடுங்கள். புதைத்திருந்தால் எலும்புகளையாவது கொடுங்கள். அவள் அழுகை ஓயட்டும்.”
ஸ்மித் தனது கூரிய வாளினைத் தரையில் உடனடியாக வீசி எறிந்தான். அவன் கண்கள் கலங்கிஇருந்தன. அவன் அதனை ஒரு நொடி உற்று நோக்கினான். நூற்றுக்கணக்கான ரத்தச் சூட்டினை உணர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் அந்த வாளை எடுக்காமலேயே அங்கிருந்து வேகமாக விலகினான். கீழே விழுந்த ஸ்மித்தின் வாளில் இருந்து சிறு அதிர்வுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன.
ஸ்மித் போன்ற ஒரு கிறித்துவனுக்கு வெள்ளைக்காரப் பாதிரிகளைக் கொண்டுதான் குணப்படுத்த முடியும் என மன்னன் நம்பினான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான். அதன் பின் மூன்று நாட்களுக்குப் பிறகும்கூட மன்னன் ஸ்மித்தைக் காணவில்லை. மூன்றாம் நாள் வெள்ளைக்காரச் சிப்பாய் ஒருவன், ஸ்மித்தின் கடிதத்துடன் வந்திருந்தான்.
மன்னன் மூலமாக, சென்னப்பட்டணக் கோட்டையில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனி கவர்னருக்கு எழுதப்பட்ட கடிதம் அது. ஸ்மித் தனது சொந்த வேலையின் காரணமாக கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் பதவியைத் துறந்து, இங்கிலாந்து திரும்புவதாகவும், மன்னன் உதவியுடன் கடிதத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்திடம் சேர்க்கவும் கேட்டிருந்தான். ஆங்கிலச் சிப்பாய் ஸ்மித், ராமேஸ்வரத்தில் இருந்து யாழ்ப்பாணம் வழியாக இங்கிலாந்து செல்லும் கிறித்துவ மிசினரிக் கப்பலில் தன் பயணத்தைத் துவங்கிவிட்டதை உறுதிசெய்தான்.
ஸ்மித் என்ற நில அளவையாளன் இங்கிலாந்தின் குடியேற்றக் காலனி நாடுகளில் தன் நில அளவைக் கணக்கீடுகளால் வருவாய்த் துறைக்கு உதவினான். கூடவே, அவன் தன் மிசினரிப் பணியிலும் ஈடுபட்டான். நியூசிலாந்து உள்ளிட்ட பல பிரிட்டிஷ் குடியேற்றப் பகுதியில் அவன் பணிபுரிந்தான். அவன் நினைவுகள் கிறித்துவ மிசினரிகளால் புத்தகமாக வெளியிடப்பட்டது. லண்டன் அருங்காட்சியக நூலகத்தில் ‘நினைவுக் குறிப்புகள்’ பகுதியில் தடித்த மாட்டுத் தோலால் பைண்டிங் செய்யப்பட்ட அந்த நில அளவையாளனின் புத்தகம் அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெகு அரிதாகவே சில ஆய்வாளர்கள் அதனை வாசித்தனர். தென்னிந்தியாபற்றிய நீண்ட குறிப்பு ஒன்று அதில் உள்ளது.
1778-ம் ஆண்டு கோடை மாதத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கிலாந்துக்கு மிசினரிக் கப்பல் கிளம்பிய ஒரு சில நாட்களில், இந்து மகா சமுத்திரத்தின் கடல் நீரோட்டத்தில் கப்பலில் கட்டப்பட்ட மரங்கள் ஏறி இறங்கும் ஓசையினிடையே இரவில் அந்தக் குறிப்பை அவன் எழுதியுள்ளான்.
‘தென்னிந்தியாவின் தென் பகுதியான ராமநாதபுரச் சமஸ்தானத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பம் பள்ளத்தாக்கு அருகே நில அளவை பணி செய்து முடிந்த பின், மாலையில் ஆலங்கட்டி மழை பொழிந்த குளிர்ந்த இரவில் நன்கு புளித்த கள்ளைக் குடித்து உறங்கும்போது, ஒரு பெண்ணின் அச்சம் தரும் அழுகுரலைக் கேட்டு விழிக்க வேண்டி வந்தது. அப்போது நடு இரவு. அந்த அழுகுரலைத் தொடர்ந்து சென்றபோது அவளைக் கண்டேன். நிலநடுக்கோட்டு வகை பெரிய இனத்தின் ஒஷனியக் கிளையைச் சார்ந்த ஆதி கறுப்பின வகைப் பெண் அவள். நிர்வாணமான அவளைச் சுற்றி ஒளித் தூவல்களும் வியர்வை கலந்த ஈர்க்கும் நறுமணமும் சூழ்ந்திருந்தது. அவளின் அகண்ட கண்கள் என் வாழ்வில் எப்போதும் மறக்க இயலாதது. அவளின் ஒளிமிக்க வசீகரச் சக்தியின் முன் நெடுஞ்சாண் கிடையாகச் சரணடைந்து வணங்கினேன். பின் தைரியமாக அவளின் கண்ணீரைத் துடைக்க முயன்றேன். அவள் எனக்கு தன் கதையைச் சொன்னாள்.
அவள் தன் கணவனுடன் நாடற்றுப் போய், வெகுதூரம் மலைகளையும் காடுகளையும் கடந்து மதிரை நகர் வந்திருந்தாள். காலையில் நம்பிக்கைகளைக் கூறிச் சென்ற அவளின் கணவனை மாலை வரை காணாது அவள் கலக்கமுற்றாள். வழியில் போவோர்களை எல்லாம் தன் கணவனுக்காக உற்று நோக்கிக்கொண்டு இருந்தாள். இருளத் துவங்கிய சமயம் இரண்டு வழிப்போக்கர்கள், அரண்மனைத் தெரு அருகில் வேற்று நாட்டு ஒற்றன் என்றோ அரச துரோகி என்றே சந்தேகித்து, நகரின் தென் பகுதிக்கு அவனை இழுத்துச் சென்றதையும், அவன் ‘தான் நிரபராதி’ எனக் கூக்குரல் இட்டதையும் பேசியபடி அவளைக் கடந்தனர்.
அச்சமுற்ற அவள் நடுங்கும் கண்களுடன் அவர்களை வழிமறித்து இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின் உருவ அமைப்பைக் கேட்டு, பின் மதிரையின் தென் பகுதிக்கு வழி கேட்டு ஓடினாள். அவளின் உடலில் வியர்வை ஊற்றாகப் பொங்கியது. பலமுறை இடறி விழுந்து புழுதியில் புரண்டு ஓடினாள். அவளின் கண்ணீர் அவளின் மார்களை நனைத்திருந்தது. நகரின் தென் பகுதியில் ஒரு சுடுகாட்டைக் கண்டாள். சுடு காட்டின் நுழைவாயிலுக்குப் பின் பூமியில் புதைக்கப்பட்டு இருந்த இரண்டு கருங்கற்களைக் கண்டாள். அதில் மனித ரத்தம் வழிந்திருந்தது. அரசனின் மரண தண்டனையை நிறைவேற்ற தலை சாய்க்க வேண்டிய வெட்டுக்கல் அது. அதன் கீழே ரத்தச் சேற்றுடன் சுருள் வடிவிலான மயிர்களும் கத்தரிக்கப்பட்டு கிடந்தன. கழுத்தை வெட்டும்போது அறுபடும் முடிகள் அவை. ரத்தத்தைத் தொட்டுப் பார்த்தாள். அவளின் அகண்ட கண்களில் பார்வை தடுமாறியது. மயிர்க் கற்றையை எடுத்துப் பார்த்தாள். தனது கைகளை முகத்தில் அடித்துக்கொண்டு எழுந்தாள். முகமெங்கும் ரத்தப் பூச்சு ஆகிஇருந்தது. அருகில் எரிந்துகொண்டு இருந்த பெரும் சிதைத் தீயைக் கண்டாள். அரண்மனைக் காவலர்கள் கைகளில் வளரிகள் மற்றும் வேல் கம்புகளைப் பிடித்திருந்தனர். இரண்டு வெட்டியான்கள் சிதையை எரியூட்டிக்கொண்டு இருந்தனர். அவள் கண்களை விரித்து எரியும் சிதையை நோக்கி ஓடி வந்தாள். சிதையில் தீப்பாய வரும் கைம்பெண் என்று கருதி, அமைதியாக நின்றனர். ஆனால், சடங்கு செய்யும் அந்தணர்கள் இன்றி அவள் தனித்து வருவதைக்கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.
அவள் எரியும் சிதை நெருப்பு விறகுகளைக் கைகளால் உருவி, எரியும் உடலின் அடையாளம் காண முயன்றாள். காவலர்களும் வெட்டியான்களும் அவளைத் தடுத்து சிதை நெருப்பைக் காக்க முயன்றனர். ஒரு காவலன் தன் வேல் கம்பினைக் கிடமாகப் பிடித்து அதில் அவளை நெட்டிக் கீழே தள்ளினான். அவள் எழுந்து எரியும் சிதையில் இருந்து இரண்டு கைகளிலும் இரு எரியும் விறகுகளை எடுத்துக்கொண்டு காவலர்களைத் தாக்கினாள். அவர்கள் பின் வாங்கி நின்றனர். அவளோ கீச்சிடும் சத்தத்துடன் அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினாள்.
ஓடும்போது எரியும் விறகுகள் இரண்டையும் இருபுறமும் நீட்டியபடியே சென்றாள். தெருவில் செல்பவர்கள் கணவனின் சிதை நெருப்பின் வெப்பம் தாளாது தப்பிக்க நினைக்கும் பெண் என முடிவு செய்து, அவளைச் சிதையில் பிடித்துத் தள்ள, அவளைப் பிடிக்க வந்தனர். அவள் எல்லோரையும் தாக்கினாள். அனைவரும் உயிர் பிழைக்க ஓடினர். அவள் ஓடும் வழியெங்கும் கையில் இருந்த விறகுகளின் தீ நாக்குகள் குடியிருப்புகளை ருசி பார்த்தன. அவளின் பின்னே மனித அலறல் ஒலி அதிகரித்தது. அவள் மேலும் வெறிகொண்டு ஓடினாள். நகரங்களைக் கடந்து, மலைகளில் ஏறி வனத்துக்குள் ஓடினாள். எரிமலையைப்போல அவள் உடல் சூடானது. அவளின் ஆடைகள் எரிந்து சாம்பலானது. நீண்ட நாள் பெய்த மழையில் அவள் நனைந்து தன் வெப்பத்தைக் குறைத்துக்கொண்டாள். ஆனால், அவளின் அழுகை தொடர்கிறது. கானுயிர்களின் சத்தம் அடங்கிய நடுநிசிகளில் அவளின் அழுகையை உணர முடிகிறது. அவள் என்னிடம் அன்று காணாமல் போன அவள் கணவனைக் கேட்டாள்.
எங்கே அவள் கணவன்? தென் இந்தியாவில் இருந்து விலகுகிறேன். அவளின் அழுகுரலை உலகின் எங்கு சென்றபோதும் நான் கேட்கிறேன். யுகம் யுகமாக அவள் அழுகை தொடர்கிறது.
எங்கே அவள் கணவன்?’